Skip to content
Home » பன்னீர்ப்பூக்கள் #21 – தாத்தா

பன்னீர்ப்பூக்கள் #21 – தாத்தா

கோட்டிப்புள்

மட்டையும் பந்தும் கிடைக்காத நேரங்களில் நாங்கள் ஆடும் விடுமுறை விளையாட்டு கோட்டிப்புள். தரையில் கிடக்கும் புள்ளை நெம்பி யாருடைய கைக்கும் எட்டாத உயரத்தில் விர்ரென்று வானத்தை நோக்கிப் பறக்கவைக்கும்போதும் லாவகமாகத் தட்டி எழுப்பி கோட்டியால் அடித்து பறக்கவைக்கும்போதும் நாமும் அத்தோடு இணைந்து பறப்பதுபோல இருக்கும். பரவசமூட்டும் அந்த உணர்வுக்கு ஈடு இணையே இல்லை.

நாங்கள் மொத்தம் எட்டுப் பேர் இருந்தோம். நான், சுப்பிரமணி, பரசுராமன், குமாரசாமி, கஜேந்திரன், சந்திரசேகர், சுந்தரம், நெடுஞ்செழியன். விடுமுறை நாளில் நானும் சுப்பிரமணியும்தான் ஒவ்வொரு வீடாகச் சென்று எல்லோரையும் திரட்டி ஸ்டேஷன் திடலுக்கு அழைத்துச் செல்வோம்.

எட்டுப் பேரும் வந்துவிட்டால் அணிக்கு நான்கு பேர் என்னும் கணக்கில் இரு அணிகளாகப் பிரிந்து விளையாடத் தொடங்கிவிடுவோம். ஏதாவது ஒரு காரணத்தால் ஓரிருவர் வராவிட்டால் அணி பிரிப்பதில் சிக்கல் ஏற்படும். ஆட்களின் எண்ணிக்கை இரட்டைப்படையில் அமைந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஒவ்வொரு அணியையும் சமவலிமை கொண்டதாக அமைத்துவிடலாம். ஒற்றைப்படையில் இருந்தால்தான் பிரச்சினை வரும். அப்போது இரு அணிகளையும் சமவலிமை கொண்டதாகக் கட்டமைக்கும் பொருட்டு யாராவது ஒருவர் இரு அணிகளிலும் விளையாட வேண்டும். அந்த இடத்துக்கு நான், நீ என்று பெரிய போட்டியே நடக்கும்.

ஓர் அணி முன்வைக்கும் ஆளை அடுத்த அணி ஆட்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவன் அதற்குமுன் நிகழ்த்திய எல்லாச் சாதனைகளையும் தொகுத்து அந்தப் பெயரை நிராகரிப்பதிலேயே குறியாய் இருப்பார்கள். கடைசியில் என் பெயரைச் சொன்னதும் இரு தரப்பினரும் அமைதியாக ஏற்றுக்கொள்வார்கள். நான் சாதாரண ஆட்டக்காரன் என்பதுதான் முக்கியமான காரணம். எந்தச் சாதனையும் எனக்கு இல்லை. நான் எந்தத் திசையில் புள்ளை அடித்தாலும் அது அந்தத் திசையில் நின்றுகொண்டிருக்கும் யாரோ ஒருவனுடைய கையில் புறாவைப்போல அழகாகத் தஞ்சமடைந்துவிடும்.

நாங்கள் விளையாடும் இடத்தை ஒட்டி பெரிய பெரிய இலுப்பை மரங்கள் இருக்கும். மரங்களைச் சுற்றி உதிர்ந்து உலர்ந்த பூக்கள் மங்கி நிறம் மாறி தரையெங்கும் பரவியிருக்கும். அதைச் சுற்றி எப்போதும் கமகமவென்று ஒரு மணம் வீசியபடி இருக்கும்.

இலுப்பை மரத்தைத் தொடர்ந்து மரங்களின் வரிசை தொடங்கிவிடும். இலவ மரம், ஒதிய மரம், நாவல் மரம், அரச மரம், நுணா மரம், ஆலமரம், கல்யாணமுருங்கை மரம். அப்புறம் வைக்கோல்போர் மாதிரி பெரிய பெரிய புதர்கள், செடிகள். அதற்குப் பிறகு பச்சைப்பசேலென புல்வெளி. கரும்புவயல். நெல்வயல். தொலைவில் ஐயனார் கோவில்.

நாங்கள் விளையாடுவதற்கு வரும் முன்பே ராமையா தாத்தா ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்து இலுப்பை மரத்தடியில் உட்கார்ந்திருப்பார். அவர் தனக்குப் பக்கத்திலேயே எப்போதும் ஒரு சொரட்டுக்கோலை வைத்திருப்பார். அந்தச் சொரட்டுக்கோல்தான் ஒதிய மரத்தில் அல்லது கல்யாண முருங்கை மரத்தில் உயரத்திலிருக்கும் கொழுந்தான இலைகளடர்ந்த கிளையைப் பற்றி இழுத்து விழவைக்க அவருக்கு உதவும் ஆயுதம். ஆடுகள் அந்த இலைகளைத்தான் கடித்துத் தின்னும். மரத்தடியில் அமர்ந்தபடி தாத்தா அதை வேடிக்கை பார்த்தபடி வெற்றிலை பாக்கு போடுவார். அவருடைய மற்றொரு பார்வை எங்கள் விளையாட்டின்மீது பதிந்திருக்கும்.

யாராவது ஒருவன் அடிக்கும் புள் பறந்து சென்று ஆடுகளுக்கு அருகில் விழுந்துவிடும். உடனே ஒன்றிரண்டு ஆடுகள் மிரண்டு சில அடி தூரம் ஓடி நிற்கும். அதைப் பார்த்ததும் தாத்தா பதற்றமாகிவிடுவார். புள்ளை எடுக்கப் போகிறவனிடம் ‘அந்தப் பக்கமா அடிச்சி ஆடுங்கடான்னா, எதுக்குடா இந்தப் பக்கமாவே அடிக்கிறீங்க. ஆடுங்க மெரள்றது தெரியலையா?’ என்று சலித்துக்கொள்வார். சில சமயங்களில் அவரே புள்ளை எடுத்து எங்களை நோக்கி வீசிவிடுவார். நல்ல தாத்தா. விளையாட்டு சார்ந்து எங்களுக்குள் எழும் எல்லாப் பஞ்சாயத்துகளையும் அவர்தான் தீர்த்துவைப்பார்.

தாத்தா ஒவ்வொரு ஆட்டுக்கும் ஒரு பெயர் சூட்டியிருந்தார். அவற்றை அந்தப் பெயரைச் சொல்லித்தான் அழைத்தார். ஒவ்வொரு பெயரும் விசித்திரமாக இருக்கும். கருத்தம்மா, சிவப்பி, வெள்ளச்சி என்று சில ஆடுகளுக்கு நிறம் சார்ந்த பெயர்கள். தாண்டவராயன், எலும்புச்சிப்பாய், குள்ளன் என்று சில ஆடுகளுக்கு உருவம் சார்ந்த பெயர்கள். சுறுசுறுப்பாக துள்ளித்துள்ளி ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு ஆட்டுக்கு எம்.ஜி.ஆர். என்றும் மெதுவாக நடக்கும் ஆட்டுக்கு அன்னக்கிளி என்றும் பெயர் வைத்திருந்தார். ஒரு கால் சற்றே ஊனமான ஒரு குட்டி ஆட்டுக்கு தாத்தா வித்தியாசமாக சின்னப்பொண்ணு என்று வைத்திருந்தார். அவர் அந்தக் குட்டியை மடியில் வைத்துக்கொண்டு தலையை வருடியபடி கொஞ்சுவதைப் பார்த்தால், உண்மையிலேயே யாரோ ஒரு குழந்தையைக் கொஞ்சுவதுபோலத்தான் இருக்கும்.

ஒருநாள் தாத்தா அந்த ஆட்டுக்குட்டியை மார்போடு அணைத்தபடி ஓர் இலைக்கொத்தை ஊட்டிக்கொண்டிருந்தார். சுப்பிரமணி அதைப் பார்த்துவிட்டு ‘தாத்தாவை பார்க்கும்போது காலண்டர்ல போட்ட ஏசுநாதர் படம் மாதிரி இருக்குது, இல்ல?’ என்றான். அவன் சொன்னது தாத்தாவின் காதில் விழுந்துவிட்டது. ஆனால் என்ன சொல்கிறான் என்பது புரியவில்லை. உடனே என்னைப் பார்த்து ‘என்னடா சொல்றான் அவன்?’ என்று கேட்டார். ‘ஒன்னுமில்ல தாத்தா, உங்கள பார்த்தா சாமி மாதிரி இருக்குதாம்’ என்று விளக்கம் கொடுத்தேன். ‘சாமியா? சாமிக்கும் மனுஷனுக்கும் வித்தியாசம் தெரியலையா ஒனக்கு? சரியான பொடிப்பையன்தான் நீ’ என்று தலைப்பாகையால் முகத்தைத் துடைத்துக்கொண்டே சொன்னார் தாத்தா.

ஒருநாள் கோட்டிப்புள் ஆடிமுடித்துவிட்டு தாத்தாவைச் சுற்றி உட்கார்ந்திருந்தோம். தாத்தா எங்களுக்கு ஒரு கதை சொன்னார். ஒரு ராஜா கதை.

ஒரு ஊரில் ஒரு ராஜா ஒரு கிளியை வளர்த்துவந்தார். அது எல்லா இடங்களிலும் சுதந்திரமாகச் சுற்றும். பொழுது சாய்ந்ததும் அரண்மனைக்குத் திரும்பி கூண்டுக்குள் சென்றுவிடும். ஒருநாள் அது வெளியே பறந்து திரிந்தபோது காட்டிலிருந்து பறந்துவந்த இன்னொரு கிளியோடு நெருங்கிப் பழகியது. ஏதோ ஆசையில் அந்தக் கிளியோடு சேர்ந்து காட்டுக்குப் போய்விட்டது.

இரண்டு நாளுக்குப் பிறகுதான் கிளிக்கு ராஜாவின் நினைவு வந்தது. உடனே பறந்துவந்து அரண்மனையை அடைந்தது. கிளியைக் காணாமல் வாட்டம் கொண்டிருந்த ராஜாவை அமைதிப்படுத்தியது. ராஜாவிடம் உனக்கு ஒரு பரிசு கொண்டுவந்திருக்கிறேன் என்று கிளி சொன்னது. ராஜா என்ன பரிசு என்று கேட்டான். கிளி ஒரு மாங்கொட்டையை அவன் முன்னால் வைத்தது. அவன் அதைப் பார்த்து முகம் சுளித்தான். அரசே, இந்தக் கொட்டையை சாதாரணமாக நினைக்காதே என்றது கிளி. இந்தக் கொட்டை செடியாகி, மரமாகி, பழுக்கத் தொடங்கிய பிறகு, இதனுடைய பழத்தை உண்ணுகிறவர்கள் இளமையான தோற்றத்துக்குத் திரும்பிவிடுவார்கள். அந்தப் பழத்துக்கு இளமையை அளிக்கும் சக்தி இருக்கிறது என்று சொன்னது.

ராஜா நடுவயதைக் கடக்கும் நிலையில் இருந்தான். மீண்டும் இளமை வாழ்க்கையை வாழ நினைத்த ராஜா அந்தக் கொட்டையை தன் தோட்டத்திலேயே வைத்து கண்ணும் கருத்துமாகப் பார்த்துவந்தான். மண்ணில் புதைக்கப்பட்ட மாங்கொட்டை சில ஆண்டுகளிலேயே மரமாக மாறி நின்றது. பூத்து, காய்த்து, பழுக்கவும் தொடங்கியது. பழத்தின் மணம் தோட்டமெங்கும் வீசியது.

ஒருநாள் ஒரு பழம் காம்பிலிருந்து விடுபட்டு கீழே விழுந்து கிடந்தது. அந்தப் பக்கமாக ஊர்ந்துவந்த ஒரு பாம்பு அதை ஏதோ ஒரு மனிதமுகம் என நினைத்துக் கொத்தியது. அப்போது அதன் நஞ்சு பழத்தில் கலந்துவிட்டது. அச்சமயத்தில் தற்செயலாக வானத்தில் பறந்துவந்த ஒரு கழுகு பாம்பைக் கொத்திக்கொண்டு பறந்துவிட்டது. நடந்தது எதையும் அறியாத வேலைக்காரன் தரையில் விழுந்துகிடக்கும் பழத்தைப் பார்த்ததும் அதை எடுத்துச் சென்று ராஜாவிடம் கொடுத்தான்.

கிளி சொன்னதெல்லாம் உண்மையாக இருக்குமா என்பதை ராஜா சோதித்துப் பார்க்க நினைத்தான். அதனால் அரண்மனையில் காவல் காக்கும் ஒரு நாய்க்கு அந்தப் பழத்தை வெட்டி ஒரு துண்டு கொடுத்தான். அந்த நாய் அந்தத் துண்டைச் சாப்பிட்ட மறுகணமே அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டது. நன்றி கெட்ட கிளி தன்னைக் கொல்ல சதி செய்ததாக நினைத்து கோபம் கொண்டு கிளியைக் கொன்றான் ராஜா.

அந்த மாமரம் ஒருவராலும் சீண்டப்படாமல் அப்படியே நீண்ட காலம் நின்றது. பராமரிப்பு இல்லாமல் போனாலும் அது ஒவ்வொரு பருவத்திலும் பூத்தது. காய்த்தது. பழுத்தது.

ஒருநாள் இரவு அடுத்த ஊரிலிருந்து கணவனிடம் கோபித்துக்கொண்ட பெண்ணொருத்தி அந்தத் தோட்டத்தின் பக்கம் வந்தாள். அந்த மாமரத்தின் கிளையில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாள். அப்போதுதான் அவள் ஒரு கிளையில் தொங்கும் மாம்பழங்களைப் பார்த்தாள். ஆசையில் ஒரு பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள். அந்தக் கணமே தன் நடுவயதுக்கோலம் மறைந்து இளமையை அடைந்ததை உணர்ந்தாள். அச்செய்தியை அவள் ஊர் முழுதும் உடனே பரப்பிவிட்டாள். அவளே பல பழங்களைப் பறித்துச் சென்று பலருக்கு தின்னக் கொடுத்துவிட்டாள்.

விடிந்ததும் செய்தியைத் தெரிந்துகொண்ட ராஜா ஒரு பழத்தைக் கொண்டு வரச் செய்து அரண்மனைக்குள்ளேயே நாலு பேருக்குக் கொடுத்து பரிசோதனை செய்து பார்த்தான். பழம் சாப்பிட்ட எல்லோருக்குமே இளமை திரும்பிவிட்டது. உடனே ராஜாவும் ஒரு பழத்தைச் சாப்பிட்டான். ராணியையும் சாப்பிட வைத்தான். அரண்மனையில் இருக்கும் எல்லோரையும் சாப்பிடவைத்தான். எல்லோரும் இளம்பருவத்துக்குத் திரும்பிவிட்டதைக் கண்டு ராஜாவுக்கு மகிழ்ச்சி பிறந்தது. அதே நேரத்தில் அவசரப்பட்டு கிளியைக் கொன்றுவிட்டோமே என குற்ற உணர்ச்சியும் இருந்தது. காலம் முழுதும் அந்தக் குற்ற உணர்ச்சி அவனைத் தொடர்ந்து வந்தது.

கதையைச் சொல்லி முடித்ததும் தாத்தா எங்களிடம் ‘கதையிலேர்ந்து என்னடா தெரிஞ்சிகிட்டீங்க?’ என்று கேட்டார். நெடுஞ்செழியன் ஏதோ சொல்வதற்காக கைவிரலை உயர்த்தியபடி எழுந்தான். அந்த நேரத்தில் தொப்பென்ற சத்தத்தோடு இலுப்பை மரத்திலிருந்து உருண்டை வடிவத்திலான ஒரு காய் தாத்தாவுக்கு அருகில் விழுந்து ஓடியது. அந்தச் சத்தத்தால் ஒருகணம் எல்லோருமே அஞ்சிவிட்டோம். தாத்தா புன்னகைத்தபடி அந்த இலுப்பங்காயை எடுத்து, அதில் ஒட்டியிருந்த மண்ணை ஊதி அப்புறப்படுத்தினார். அதைப் பார்த்த குமாரசாமி ‘தாத்தா, இப்பவே சாப்பிடாதீங்க. பழுக்க வச்சி கிளி குடுத்த பழமா நினைச்சி சாப்புடுங்க. எங்கள மாதிரியே நீங்களும் சின்ன பையனா மாறிடலாம்’ என்றான். உடனே தாத்தா புன்னகைத்தபடி அந்த இலுப்பங்காயை அவன் மீது வீசினார்.

‘பழத்துல மட்டுதான் இனிப்பு இருக்குதுன்னு நெனச்சிக்காதடா. பூவுல கூட இனிப்பு இருக்குது’ என்றார் தாத்தா. ‘பூவுலியா?’ என்று முகத்தைச் சுளித்தான் குமாரசாமி. ‘இரு. இரு. உனக்குக் காட்டறேன்’ என்றபடி சொரட்டுக்கோலோடு தாத்தா எழுந்தார்.

ஒருகணம் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது புரியாமல் நாங்கள் எல்லோரும் அவரையே பார்த்தோம். அவர் சொரட்டுக்கோலை உயர்த்தி இலுப்பை மரத்தில் வெள்ளைவெளேரென பூக்கள் பூத்திருந்த ஒரு கிளையில் சொரட்டுக்கோலின் நுனியைச் சிக்கவைத்து அசைத்தார். உடனே மழைத்துளிகளைப்போல பூக்கள் உதிர்ந்தன. குனிந்து ஒரு பூவை எடுத்த தாத்தா அதன் விளிம்பை நாக்கிலிட்டு சுவைத்தார். தித்திப்பான பொருளைத் தின்றதுபோல அவருடைய முகம் மலர்ந்தது.

‘என்ன தாத்தா, அந்த அளவுக்கு இனிக்குதா என்ன?’ என்று சந்தேகத்தோடு கேட்டேன் நான். உண்மையிலேயே அது இனிக்கிறதா, அல்லது அவர் எங்களை ஏமாற்றுவதற்காக நடிக்கிறாரா என்று புரியவில்லை.

‘இந்தா, வேணும்னா நீயே நாக்குல வச்சி இனிக்குதா இல்லையான்னு பாரு’ என்றபடி பூக்களை எடுத்து எங்களிடம் நீட்டினார். நாங்கள் உடனே ஆளுக்கு ஒரு பூவை எடுத்து தாத்தாவைப்போலவே நாக்கில் வைத்து சுவைத்தோம். சர்க்கரை கலந்த தண்ணீர் நாக்கில் பட்டதுபோல இருந்தது.

மீண்டும் மீண்டும் பூவை எடுத்துச் சுவைத்தேன். சர்க்கரைச்சுவை கொஞ்சம் கொஞ்சமாக பெருகிக்கொண்டே சென்றது. ‘நெஜமாவே சர்க்கரை மாதிரியே இருக்குது தாத்தா’ என்றேன்.

கஜேந்திரன் எஞ்சியிருந்த பூக்களை எடுத்துச் சென்று ஆடுகள் முன்னால் வைத்தான். ஆடுகள் நிமிர்ந்து தாத்தா பக்கம் பார்த்ததே தவிர, ஒரு ஆடுகூட இலுப்பைப்பூவின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.

திடலுக்கு நாங்கள் விளையாடச் செல்லும்போதெல்லாம் ராமையா தாத்தாவிடம் கதை கேட்பது வழக்கமாகிவிட்டது. ‘தாத்தா, ஒரு கதை சொல்லுங்க தாத்தா’ என்று கேட்டால் போதும். உடனே அவர் ‘ஒரு ஊருல….’ என்று தொடங்கிவிடுவார். திருடன் கதை, யானை கதை, புலியும் எலியும் கதை, வாழைப்பழக் கதை, கிணற்றில் தண்ணீர் நிரம்பிய கதை என ஏராளமான கதைகள். நூலகத்தில் நான் படித்த புத்தகத்தில் கூட அந்த மாதிரியான கதைகளைப் படித்ததில்லை. அவ்வளவு கதைகள் அவருக்குத் தெரிந்திருந்தன.

எந்த மரத்திலிருந்து எதை எடுத்து எப்படிச் சாப்பிடுவது என்பதைக் கூட தாத்தா வழியாகவே நாங்கள் தெரிந்துகொண்டோம். ஒருநாள் ஏரிக்கரையோரத்தில் எள்ளுச்செடியின் அமைப்பில் செங்குத்தாக அடர்த்தியாக வளர்ந்திருந்த செடிகள் பக்கமாக அழைத்துச் சென்றார். கடுகு அளவுக்கு வெள்ளைவெளேரென செடியின் நடுவில் பூக்கள் பூத்திருந்தன. அந்தப் பூ நிறைந்த தண்டு சற்றே தடித்திருந்தது. அந்தத் தண்டைப் பிடித்து இழுத்தார் தாத்தா. அந்தத் தண்டோடு சேர்ந்து ஈரமண் படிந்த ஒரு கிழங்கு இருந்தது. தண்ணீரில் கழுவிவிட்டு அதை இரண்டாகப் பிளந்தார் தாத்தா. உள்ளே இருந்த கிழங்குப்பகுதியை நாக்கால் சுவைத்தார். அவரைத் தொடர்ந்து அதேபோல நாங்களும் சுவைத்தோம். முதலில் கெட்டியான நெய் மாதிரி இருந்தது. பிறகு நாக்கில் வைத்து சப்பியதும் வெண்டைக்காயைப்போல கொழகொழவென்று ருசித்தது. ‘இதுக்கு என்ன பேரு தாத்தா?’ என்று கேட்டேன். ‘பேருலாம் தெரியாது. ஆனா சின்ன வயசிலேர்ந்து சாப்ட்டுட்டுதான் இருக்கேன்’ என்றார் தாத்தா.

தாத்தாவைப் பார்ப்பதற்கு முன்பு கோட்டிப்புள் ஆடி முடித்ததும் நாங்கள் தேடித்தேடிச் சாப்பிட்டது கொடுக்காப்புளி மட்டுமே. மரங்களின் வரிசையில் அவையும் இருந்தன. முதலில் கீழே விழுந்து கிடக்கும் கொடுக்காப்புளி சுருளை தேடியெடுத்துச் சாப்பிடுவோம். பிறகு கல்லால் அடித்து கீழே விழுவதை எடுத்துச் சாப்பிடுவோம். எங்களில் யாருக்குமே குறி பார்த்து அடிக்கத் தெரியாது. பத்து கற்களை எறிந்தால், ஒரு கல் மட்டுமே கொடுக்காப்புளியின் மீது படும்.

தாத்தாவோடு சேர்ந்துகொண்ட பிறகு கல் எறியும் வேலைக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. தாத்தா தன்னுடைய சொரட்டுக்கோலை எடுத்துக்கொண்டு எங்களுக்குப் பின்னால் வருவார். நாங்கள் சுட்டிக் காட்டும் மரத்தடியில் நின்று சொரட்டுக்கோலை உயர்த்தி நன்றாகப் பழுத்துக் கனிந்த கொடுக்காப்புளியை வீழ்த்துவார். எல்லாவற்றையும் சேகரித்து எடுத்துக்கொண்டு இலுப்பைமரத்தடிக்கு திரும்பி வருவோம். சுத்தமான இடம் பார்த்து கொடுக்காப்புளிகளைக் குவித்துவிட்டு, அதைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்துகொள்வோம். தாத்தா ‘ஒரு ஊருல…’ என்று ஏதாவது ஒரு கதையைத் தொடங்குவார். நாங்கள் அந்தக் கதைக்கு உம் கொட்டிக்கொண்டே கொடுக்காப்புளியை உரித்து உரித்துச் சாப்பிடுவோம்.

ஒருநாள் நாங்கள் விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் தாத்தா எங்களை நோக்கி கைதட்டி அழைத்தபடி வேகமாக வந்தார். பரசுராமன் நெம்பிய புள்ளை எடுப்பதற்காக நான் ஓடுவதற்காகத் திரும்பிய சமயத்தில் அவரைப் பார்த்துவிட்டு நின்றுவிட்டேன். அவர் முகத்தில் பதற்றம் தெரிந்தது. நானும் வேகமாக அவரை நோக்கி அடியெடுத்து வைத்தேன். அவர் என்னைப் பார்த்ததும் அவசரமாக ‘எம்.ஜி.ஆர். இந்தப் பக்கம் வந்திச்சா? பார்த்தியா?’ என்று கேட்டார்.

ஒருகணம் எதுவும் புரியாமல் குழப்பத்துடன் அவர் முகத்தைப் பார்த்தேன். சற்றே தாமதமாகத்தான் அவர் ஆட்டைப்பற்றிக் கேட்கிறார் என்று புரிந்தது. ‘என்னாச்சி தாத்தா எம்.ஜி.ஆருக்கு? இந்தப் பக்கம் வரலையே?’ என்றேன்.

‘இங்கதான் அங்க இங்கன்னு துள்ளிகிட்டிருந்தான். ஏதோ ஒரு யோசனையில நான் சரியா கவனிக்கலை. திடீர்னு ஆளயே காணோம்.’

தாத்தாவின் கண்களில் ஒருவித அச்சம் படிவதைப் பார்க்க துயரமாக இருந்தது. ‘கவலைப்படாதீங்க தாத்தா. இங்கதான் எங்கனா இருக்கும். கண்டுபிடிச்சிடலாம். தைரியமா இருங்க’ என்றேன். தாத்தாவுடன் நான் பேசுவதைப் பார்த்துவிட்டு நண்பர்கள் நெருங்கி வந்தார்கள்.

‘எம்.ஜி.ஆர். எங்கியோ போயிடுச்சாம்டா.’

தாத்தாவின் பதற்றம் எனக்கும் தொத்திக்கொண்டது.

‘நீங்க நாலு பேரும் இங்கயே இருந்து ஆடுங்கள பார்த்துக்குங்கடா. நாங்க நாலு பேரும் தாத்தா கூட போய் ஆளுக்கு ஒரு பக்கம் தேடிப் பார்க்கறோம்’ என்று முன்னால் நடந்தேன்.

தாத்தா எங்கள் பின்னாலேயே வந்தார். அவர் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே புரியக்கூடிய செல்லமான ஓசையை நாக்கைத் தட்டி எழுப்பினார். அவர் கண்கள் நான்கு பக்கங்களிலும் அலைபாய்ந்தபடி இருந்தன. பாதையை அவர் பார்க்கவே இல்லை. கால் போன போக்கில் நடந்தார். குழப்பமான மனநிலையில் எங்காவது மேடு பள்ளத்தில் தடுக்கி விழுந்தால் என்ன செய்வது என்று அச்சமாக இருந்தது. நாங்களும் எங்களுக்குத் தெரிந்த வகையில் ம்மே ம்மே என்று ஆட்டுக்குட்டி மாதிரி கனைத்துக்கொண்டே நடந்தோம்.

வழியில் குளத்தைப் பார்த்ததும் தாத்தாவுக்கு ஒரு பயம் வந்துவிட்டது. அவராகவே குளத்தை நோக்கி வேகவேகமாக நடந்தார். இரண்டு பெண்கள் துணிதுவைத்துக்கொண்டிருந்தனர். ‘ஏம்மா, ஆட்டுக்குட்டி ஏதாச்சிம் இந்தப் பக்கம் வந்ததா?’ என்று அவர்களைக் கேட்டார் தாத்தா.

‘இல்ல தாத்தா, காலையிலேர்ந்து நாங்க இங்கதான் இருக்கறோம். இந்தப் பக்கமா எதுவும் வரலை.’

‘குட்டி ஆடும்மா.. கறுப்பா துருதுருன்னு ஓடிட்டே இருக்கும்.’

‘பார்க்கலை தாத்தா.’

தாத்தா திரும்பி அங்கங்கே இருந்த புதர்களுக்குள் சென்று திரும்பினார். மண்ணை வெட்டி எடுத்துச் சென்றதால் உருவான பள்ளங்களிலும் எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்பினார்.

வெகுதொலைவு நடந்து ஐயனார் கோவிலுக்கு அருகில் வந்துவிட்டோம். வெட்டவெளியில் ஒரு மரத்தின் உயரத்துக்கு மதுரை வீரன் சிலை இருந்தது. அவருக்குப் பக்கத்தில் ஒரு ஆள் உயரத்துக்கு பெரிய குதிரையின் சிலையும் இருந்தது. நேர்த்திக்கடனுக்காக கொண்டுவந்து அங்கேயே ஓரமாக நிறுத்திவைத்துவிட்டுச் சென்ற சின்னச்சின்ன நிறமிழந்து சிதிலமடைந்த மண்குதிரைகள் இருந்தன. அதைத் தாண்டி இரண்டு ஆள் உயரத்துக்கு புதர்கள் மண்டியிருந்தன. நாங்கள் அந்த மண்குதிரைகளைச் சுற்றிச்சுற்றி வந்தோம். ஆடு போல கனைத்து குரலெழுப்பியபடி தாத்தாவும் சுற்றிச்சுற்றி வந்தார்.

எங்கோ ஓரிடத்தில் புதருக்குள்ளிருந்து பதில்குரல் வந்ததுபோல இருந்தது. அதைக் கேட்டு ஒருகணம் அமைதியாக அப்படியே நாங்கள் நின்றுவிட்டோம். தாத்தாவும் நின்றுவிட்டார். நின்ற நிலையிலேயே அவர் மீண்டும் கவனத்தோடு கனைத்துக் குரலெழுப்பிவிட்டு நிறுத்தினார். சில கணங்களுக்குப் பிறகு புதருக்குள்ளிருந்து அதே போன்ற கனைப்பொலி வந்தது.

அதைக் கேட்டதும் தாத்தாவின் முகம் சற்றே மலர்ந்தது. ‘இங்க இருக்குது’ என்பதற்கு அடையாளமாக அந்தப் பக்கமாக விரலைக் காட்டி சைகை செய்தார் தாத்தா. பிறகு அந்தத் திசையை நோக்கி மெல்ல மெல்ல கனைத்தபடியே புதரை விலக்கிக்கொண்டு உள்ளே சென்றார். நாங்கள் வெளியேயே நின்றுவிட்டோம். எங்கெங்கும் முட்செடிகள். கூர்மையாக நீட்டிக்கொண்டிருந்த முட்கள் உடல்மீது பட்டு கீறின.

சில கணங்களுக்குப் பிறகு தாத்தா எம்.ஜி.ஆரை மார்போடு தழுவியபடி சிரித்துக்கொண்டே புதரைவிட்டு வெளியே வந்தார். அவர் ஆட்டுக்குட்டியோடு வெளியே வந்ததைப் பார்த்ததும் எங்களால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. ஓவென்று கூச்சலிட்டபடியே தாத்தாவை நோக்கி ஓடினோம். அவரிடமிருந்து எம்.ஜி.ஆரை நாங்கள் வாங்கி தலைமேல் வைத்துக்கொண்டு கூத்தாடினோம். ஆனந்தத்தில் ஒவ்வொருவரும் ஆடு மாதிரி கனைத்துக்கொண்டே குதித்தோம்.

எங்கள் ஆரவாரத்தைப் பார்த்து எம்.ஜி.ஆர். கலவரத்தோடு பரிதாபமாக தாத்தாவைப் பார்த்து கனைத்தது. ‘இந்தா தாத்தா, நீங்கதான் இதுக்கு வேணுமாம்’ என்று ஆட்டை அவரிடமே கொடுத்தோம். தாத்தா மார்போடு அந்த ஆட்டை அணைத்துக்கொண்டார். தாத்தாவின் முகத்தில் நிம்மதியைப் பார்த்த பிறகுதான் நாங்களும் நிம்மதியாக மூச்சுவிட்டோம். சிரித்துப் பேசிக்கொண்டே எல்லோரும் திடலை நோக்கித் திரும்பி வந்தோம்.

அன்று முழுக்க கண்ணில் தென்பட்ட எல்லோரிடமும் ஆட்டுக்குட்டி தொலைந்துபோய் கண்டுபிடித்த கதையை பரவசத்தோடு சொல்லிச்சொல்லி மகிழ்ச்சியில் திளைத்தோம். பள்ளிக்கூடத்திலும் தாத்தாவோடு சேர்ந்து நாங்கள் ஆட்டுக்குட்டியைக் கண்டுபிடித்த கதையை நாங்களே சொல்லிச்சொல்லி பரப்பினோம்.

அடுத்த வாரம் விளையாடச் சென்றபோது எல்லா ஆடுகளின் கழுத்திலும் ஒரு மணி தொங்கியது. ஆடு திரும்பும்போதும் நடக்கும்போதும் துள்ளித்துள்ளி ஓடும்போதும் கழுத்திலிருக்கும் மணியிலிருந்து ஓசை எழுந்தது. பார்ப்பதற்கு அது புதுமையாக இருந்தது.

‘என்ன தாத்தா இது? ஆட்டுக்கு மணி கட்டியிருக்கீங்க?’

‘போன வாரம் நம்ம எம்.ஜி.ஆர். பண்ண வேலையை வீட்டுல ஆயாகிட்ட சொன்னேன். அவுங்கதான் இந்த மணியை வாங்கியாந்து கட்டி உட்டாங்க. இனிமே அது எந்தப் பக்கம் நடக்குது, எந்தப் பக்கம் ஓடுது, எங்க திரும்புது எல்லாத்தயும் இந்தச் சத்தத்தை வச்சே நாம தெரிஞ்சிக்கலாம்.’

தாத்தா எப்போதும் மடியிலேயே வைத்திருக்கும் சின்னப்பொண்ணு ஆட்டின் கழுத்தில்கூட ஒரு மணி தொங்கியது.

‘இதுதான் எங்கயும் போறதில்லையே? அப்புறம் ஏன் இதுங் கழுத்தில கூட மணி தொங்குது.’

‘எல்லாத்துக்கும் கட்டும்போது இதுக்கு மட்டும் கட்டாம உடமுடியுமா? பார்த்து பார்த்து ஏக்கமாயிருமில்ல? அது வாயில்லாத ஜீவன்தான? நம்மகிட்ட சொல்லுமா என்ன? நாமளா புரிஞ்சிக்க வேண்டிதுதான்.’

அப்படியே உரையாடல் மனம் போன போக்கில் போய்க்கொண்டிருந்த போது ‘ஆட்டுக்கும் மாட்டுக்கும் மணி கட்டறமாதிரி பசங்களுக்கும் கட்டிவிட்டா நல்லா இருக்குமில்ல? அதுக்கப்புறம் ஊருல யாரும் தொலைய மாட்டாங்க. அப்படியே தொலைஞ்சாலும் சுலபமா கண்டுபிடிச்சிடலாம்’ என்று ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்பைச் சொல்வதுபோல உற்சாகத்தோடு சொன்னான் சுந்தரம்.

அவன் திட்டத்தைக் கேட்டதும் எல்லோருடைய முகத்திலும் ஒரு குறுநகை படர்ந்தது. அவன் அப்பாவியாகப் பேசுகிறானா, வேண்டுமென்றே பேசுகிறானா என்பது எப்போதும் ஒரு பெரிய புதிர்.

‘ஐயோ, இவனை பேசவிட்டா பூனைக்கும் எலிக்கும் கூட மணி கட்டணும்னு சொல்வான் தாத்தா’ என்றான் சுப்பிரமணி.

‘நீதான் வாய்க்குள்ளயே மணி வச்சிருக்கியே, உனக்கு எதுக்குடா தனியா ஒரு மணி?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டான் கஜேந்திரன்.

எல்லோரும் சுந்தரத்தைப் பார்த்து கிண்டலாக ஏதேதோ சொல்லத் தொடங்கினார்கள். சுந்தரமும் சலிக்காமல் எல்லோருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தான். தாத்தா எல்லாவற்றையும் ஒரு புன்னகையோடு பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். கடைசியாக ‘வாய்ப்பேச்சு பேச முடியாத உயிருங்களுக்குத்தான் மணி தேவைப்படும். மனுசங்களுக்கு அதனுடைய அவசியமில்லை. வாயிலயே இருக்குது வழி’ என்று சொல்லி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்

ஒருமுறை எங்கள் ஊருக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்தது. மடத்தார் தோப்பில் ஒரு பெரிய கூடாரம் போட்டு அந்த சர்க்கஸை நடத்தினார்கள். எங்கள் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலேயே மடத்தார் தோப்பு இருந்ததால் அந்த சர்க்கஸ்க்காக வந்து இறங்கிய கூண்டுகளுக்குள் பலவித விலங்குகளை தொலைவிலிருந்தே ஒவ்வொரு நாளும் வேடிக்கை பார்த்து மகிழ்ந்தோம். அந்த சர்க்கஸை விளம்பரப்படுத்துவதற்கு எல்லா இடங்களிலும் ஏராளமான வண்ணச்சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.

எல்லாச் சுவரொட்டிகளிலும் பனியனும் நிக்கரும் அணிந்த பெண்களும் ஆண்களும் ஏதோ ஒரு கம்பத்தைப் பிடித்தபடி, ஏதோ ஒரு கொடியைப் பற்றித் தொங்கியபடி ஊஞ்சலாடுவதுபோல படங்கள் இருந்தன. அந்தப் படங்களைப் பார்த்ததும் எனக்கு அந்த மாதிரி தொங்கவேண்டும் என்று ஆசை பிறந்துவிட்டது.

எட்டுகிற உயரத்தில் எந்தக் கிளையைப் பார்த்தாலும், உடனே எட்டி அந்தக் கிளையைப் பிடித்து முன்னும் பின்னும் ஆடத் தொடங்கினேன். அது ஊஞ்சலில் ஆடுவதுபோலவே இருக்கும். ஒருநாள் நான் வீட்டுக்கூரையில் இறவாணத்தைப் பிடித்துத் தொங்கியதை அம்மா பார்த்துவிட்டார்.

‘என்னடா ஆட்டம் இது? எறவாணத்தை விடுடா முதல்ல’ என்று கேட்டபடி என்னை நோக்கி எழுந்துவந்தார். மறுகணமே இறவாணத்தின் மீதிருந்த பிடியை விட்டுவிட்டு இறங்கினேன். ‘ஊஞ்சல் ஆடிட்டிருந்தேன்மா’ என்று பதில் சொன்னேன். அதைக் கேட்டு அம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது. கையிலிருந்த முறத்தாலேயே என் முதுகில் அடித்தார்.

எத்தனைமுறை அடிவாங்கினாலும் என்னால் அந்த ஊஞ்சல் விளையாட்டை மறக்கமுடியவில்லை. எட்டிப் பிடித்துக்கொள்ள எந்தப் பிடிமானமும் இல்லாத நிலையில்கூட, கையை உயர்த்தி எதையாவது பற்றிக்கொள்வதுபோல நானாகவே நினைத்துக்கொள்வேன். பிறகு முன்னும் பின்னும் ஊஞ்சலாடுவதுபோல மனத்துக்குள் கற்பனை செய்து கொள்வேன். மகிழ்ச்சியாக இருக்கும்.

கோட்டிப்புள் ஆடும் திடலில் திரும்பிய பக்கங்களிலெல்லாம் மரங்களைப் பார்த்ததும் தாழ்வான மரக்கிளையைப் பற்றிக்கொண்டு ஊஞ்சலாடினேன். ஆகாயத்தில் பறப்பதுபோல நினைத்துக்கொண்டேன். அந்த எண்ணமே இன்பமாக இருந்தது.

என்னைப் பார்த்ததும் ஆர்வத்தோடு ஓடிவந்து எனக்குப் பக்கத்திலேயே கிளையைப் பற்றிக்கொண்டு சுந்தரம் தொங்கி ஊஞ்சலாடத் தொடங்கினான். அவனையடுத்து ஒவ்வொருவராக ஒவ்வொரு கிளையில் தொங்கி சுதந்திரமாக ஊஞ்சலாடத் தொடங்கினர்.

‘என்னடா ஆச்சி இன்னைக்கு? ஆளாளுக்கு வெளவால் மாதிரி தொங்கிட்டிருக்கீங்க?’ என்று கேட்டார் தாத்தா.

‘இது வெளவால் ஆட்டமில்லை தாத்தா, ஊஞ்சல் விளையாட்டு’ என்று பதில் சொன்னான் சுந்தரம்.

‘ஓ. இதுக்கு பேரு ஊஞ்சலா?’ என்று சிரித்துக்கொண்டே ஆடுகளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு எங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார் தாத்தா.

ஒவ்வொரு நாளும் கண்ணில் படுகிற மரங்களிலெல்லாம் கிளைகளைப் பிடித்துத் தொங்கி ஊஞ்சலாடுவதுதான் எங்களுக்குப் பெரிய பொழுதுபோக்காக இருந்தது. எங்கள் பள்ளிக்கூடத்தில் அதற்குத் தோதாக பல மரங்கள் இருந்தன. எல்லாமே இளைய மரங்கள் என்பதால், அவற்றின் கிளைகள் மிகவும் தாழ்வாகவும் நாங்கள் ஒரே தாவலில் எட்டிப் பிடிக்கக்கூடியதாகவும் இருந்தன.

சில சமயங்களில் ஒன்று, இரண்டு என ஐம்பது வரை எண்ணி முடிக்கும் வரைக்கும் ஊஞ்சலாடும் சக்தி உள்ளவர் யார், நூறு வரை எண்ணி முடிக்கும் வரைக்கும் ஊஞ்சலாடும் சக்தி உள்ளவர் யார் என்று எங்களுக்குள்ளேயே போட்டி வைத்துக்கொண்டு தொங்கினோம். என்னால் ஐம்பதுக்கு மேல் பிடித்திருக்கமுடியவில்லை. தோள் வலித்தது. சுப்பிரமணி எண்பது வரை தாக்குப் பிடித்தான். நெடுஞ்செழியனும் மனோகரனும் எழுபத்தைந்து வரை தாக்குப் பிடித்தார்கள். எங்கள் கூட்டத்திலேயே உயரம் குறைந்தவன் குமாரசாமி. ஆனால் அவன் எண்பது வரைக்கும் தாக்குப் பிடித்தான். கஜேந்திரன் மட்டுமே ஒரே ஒரு முறை நூறு வரைக்கும் தாக்குப் பிடித்தான்.

அடுத்த வாரம் கோட்டிப்புள் ஆடுவதற்கு திடலுக்குச் சென்றிருந்தபோது வழக்கம்போல சின்னப்பொண்ணுவை மடியில் வைத்தபடி இலுப்பை மரத்தடியில் தாத்தா உட்கார்ந்திருந்தார். எதிரில் ஆடுகள் தழையை மென்றுகொண்டிருந்தன.

எம்.ஜி.ஆரைக் கண்டுபிடித்துக் கொடுத்ததிலிருந்து அந்த ஆடு எங்களோடு நெருங்கிப் பழகத் தொடங்கியது. நாங்கள் சத்தம் கொடுத்தால் அதுவும் பதில் சத்தம் கொடுத்தபடி அருகில் வந்து நின்றது. தடவிக் கொடுப்பதற்குத் தோதாக தலையைக் குனிந்து காட்டியது. அதனால் கோட்டிப்புள்ளைத் தொடங்குவதற்கு முன்பாக ஒருமுறை எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கொஞ்சிவிட்டுச் செல்வது வழக்கமாகிவிட்டது.

‘என்ன எம்.ஜி.ஆர்? எப்படி இருக்க?’ என்றபடி குனிந்து அதன் நெற்றிமேட்டைத் தொட்டு வருடிக் கொடுத்தேன். அப்போதுதான் நான் தாத்தாவுக்கு அருகில் சொரட்டுக்கோலோடு ஒரு தாம்புக்கயிற்றுச் சுருணையைப் பார்த்தேன். ‘எதுக்கு தாத்தா கயிறு? ஊட்டுக்குப் போவும்போது எதயாச்சிம் கட்டி எடுத்தும் போவணுமா?’ என்று தாத்தாவிடம் கேட்டேன்.

‘நான் என்னத்தடா கட்டி எடுத்தும் போவப்போறேன்? உங்களுக்காகத்தான் எடுத்து வந்தேன்’ என்றார் தாத்தா.

‘எங்களுக்கா?’ என்று புருவத்தை உயர்த்தியபடி ஆச்சரியத்தோடு கேட்டேன்.

‘ஆமாம்டா. எவ்ளோ நேரம்தான்டா நீங்க கை நோக்காட்ட தாங்கிகினு மரத்துல தொங்கி ஊஞ்சலாடுவீங்க? சரி, எல்லாரும் வசதியா ஆடறமாதிரி ஒரு ஊஞ்சல் கட்டலாமேன்னு எடுத்தாந்தேன்’

‘ஐ, ஊஞ்சலா?’ என்று நான் குதித்தேன். அந்தக் கணமே ஊஞ்சலில் ஏறிப் பறப்பதுபோல இருந்தது. நான் போட்ட சத்தத்தைக் கேட்டு எல்லோரும் தாத்தாவை நோக்கி ஓடி வந்தார்கள். ‘என்னடா? என்னடா?’ என்றார்கள். ‘தாத்தா நமக்காக ஊஞ்சல் கட்டறதுக்காக கயிறு எடுத்தாந்திருக்காருடா’ என்று அங்கிருந்த கயிற்றை அவர்களுக்குக் காட்டினேன்.

தாத்தா எழுந்து அந்தச் சுருணையைப் பிரித்தார். ரொம்ப நீளமான தாம்புக்கயிறு. ‘ஒனக்கு மரம் ஏறத் தெரியுமாடா?’ என்று என்னிடம் கேட்டார் தாத்தா. நான் ‘தெரியாது’ என்றபடி உதட்டைப் பிதுக்கிக் காட்டினேன். அதற்குள் மனோகரன் ‘எனக்குத் தெரியும் தாத்தா’ என்று தானாகவே முன்வந்தான்.

ஒருமுறை அண்ணாந்து பார்த்து ஊஞ்சலுக்குப் பொருத்தமான கிளையைத் தேடி முடிவு செய்தார் தாத்தா. பிறகு அந்தக் குறிப்பிட்ட மரத்தில் ஏறி அவர் சுட்டிக் காட்டிய கிளை வழியாக வருமாறு மனோகரனிடம் சொன்னார்.

கண்மூடி கண்ணைத் திறப்பதற்குள் மனோகரன் அந்தக் கிளையில் உட்கார்ந்திருந்தான். கயிற்றின் ஒரு முனையை சுந்தரத்திடம் கொடுத்து மனோகரனை நோக்கி வீசச் சொன்னான். முதல் வீச்சிலேயே கயிற்றுநுனி மனோகரனின் கையில் தஞ்சமடைந்தது. அதை வாங்கி மறுபக்கமாக இழுத்து விடச் சொன்னார் தாத்தா. மற்றொரு நுனியையும் அதேபோல வாங்கி மறுபுறமாக இழுத்துவிடச் சொன்னார். இரு நுனிகளும் கீழே வந்த நிலையில், அவற்றை இணைத்து நாலைந்து முடிச்சுகளைப் போட்டார் தாத்தா. இரண்டு மூன்று முறை நன்றாக அழுத்தி இழுத்துப் பார்த்து பரிசோதனை செய்து பார்த்தார். பிறகு மனோகரனைப் பார்த்து ‘எறங்கி வாடா, போதும்’ என்று சொன்னார் தாத்தா.

‘யாருடா முதல்ல உக்காரப் போறீங்க?’ என்று பொதுவாகக் கேட்டார் தாத்தா. ‘இவன உக்கார வைங்க தாத்தா’ ‘இவனை உக்கார வைங்க தாத்தா’ என்று ஒவ்வொருவரும் இன்னொருவரைக் காட்டினர். ‘இப்படி சொன்னா வேலைக்கு ஆவாது’ என்று தாத்தா சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்து அதட்டலோடு ‘டேய், நீ உட்காருடா’ என்றார். நான் உடனே கயிற்றுக்கு அருகில் நின்று எம்பினேன். கயிற்றின் அடிப்பாகம் வரைக்கும் என்னால் எம்ப முடியவில்லை. என் முயற்சிகள் தோல்வியடைவதைப் பார்த்த நண்பர்கள் சட்டென ஒருகணம் என்னைத் தூக்கி அந்தக் கயிற்றின் மீது உட்காரவைத்தனர். பிறகு நானே நகர்ந்து நகர்ந்து சரிப்படுத்திக்கொண்டேன். தாத்தா என் முதுகுப்பக்கமாக நின்று ஊஞ்சல் கயிற்றைப் பற்றி ஒரு பக்கமாக இழுத்துச் சென்றார். சில கணங்களுக்குப் பிறகு கயிற்றை அப்படியே விட்டுவிட்டு பின்னால் ஒதுங்கிச் சென்றுவிட்டார்.

அக்கணமே எனக்கு காற்றில் மிதப்பதுபோல இருந்தது. கயிறு அழகாக முன்னும் பின்னுமாக சென்றுசென்று மீண்டது. மரங்கள் நகர்வதுபோன்ற காட்சிகள் விசித்திரமாக இருந்தன. ஊஞ்சல் தானாக அசைவதை முதன்முதலாக உணர்ந்தேன். வானத்தைத் தொடப் போவதுபோல பறந்தபடி முன்னோக்கிச் செல்வதும், தொடாமலேயே பின்வாங்கி வருவதுமான அந்தப் பயணம் இனிமையாக இருந்தது. ஒருகணம் பறவையாக மாறிவிட்டதுபோல களிப்பில் திளைத்தேன். என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. எல்லாக் காட்சிகளும் மாறிவிட்டன.

‘போதுமா போதுமா’ என்று தாத்தா கேட்ட குரல் எங்கோ என எனக்குக் கேட்டது. உற்சாகத்தில் நான் ‘இன்னும் வேணும்’ என்று நான் மீண்டும் மீண்டும் கூவினேன். முதலில் காதில் கேட்காததுபோல இருந்த தாத்தா பிறகு மெதுவாக கயிற்றைப் பிடித்து வேகத்தைக் குறைத்தார். கொஞ்சம் கொஞ்சமாக விசை குறைந்து ஊஞ்சல் நின்றது. நான் கீழே குதிப்பதற்காகவே காத்திருந்ததுபோல சுப்பிரமணி எம்பி கயிற்றின் மீது உட்கார்ந்துவிட்டான். தாத்தா பின்பக்கமாக ஒரு புள்ளி வரைக்கும் ஊஞ்சலை இழுத்துச் சென்று பிறகு அசையவிட்டார்.

அன்றைய பொழுது நாங்கள் கோட்டிப்புள் ஆடவே இல்லை. ஊஞ்சலிலேயே மாறிமாறி விளையாடினோம். தாத்தா ஆடுகளுக்கு அருகில் சென்றுவிட்டதால், நாங்களே ஒருவருக்கொருவர் தள்ளிக் கொண்டோம். நேரம் போனதே தெரியவில்லை. ‘சரி சரி. போதும். போய் சாப்புடற வேலையைப் பாருங்க’ என்று தாத்தாவே சொன்ன பிறகுதான் எங்கள் ஆட்டம் நின்றது.

கயிற்றின் முடிச்சுகளையெல்லாம் மெல்ல மெல்ல விடுவிக்கத் தொடங்கினார் தாத்தா. அதைப் பார்த்ததும் மனத்தில் ஒருவித சோகம் கவிந்தது. ‘ஊஞ்சல் ஏன் தாத்தா அவுக்கறீங்க?’ என்று கேட்டேன்.

‘அவுக்காம என்ன செய்யறது? கயித்த அப்படியே விட்டுட்டு போயிடமுடியுமா? யாராச்சிம் பிரிச்சி எடுத்தும் போயிட்ட்டா, நமக்குத்தானடா நஷ்டம்?’ என்றார் தாத்தா.

‘அடுத்த வாரம் ஆடணும்னா..?’

‘அடுத்த வாரமும் கயித்த கொண்டுவந்து கட்டி ஆடவேண்டிதுதான்.’

‘ஒவ்வொரு வாரமும் கொண்டு வரீங்களா?’

‘ம்.’

தாத்தாவின் நோக்கத்தை நான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிந்துகொண்டேன். பிறகு அவர் செய்வதுதான் சரி என்று தோன்றத் தொடங்கிவிட்டது.

முழு கயிற்றையும் கிளையிலிருந்து விடுவித்து ஒரே சுருணையாகச் சுருட்டி பக்கத்தில் வைத்துக்கொண்டார் தாத்தா.

கோட்டிப்புள் போலவே ஊஞ்சலும் எங்களுடைய விடுமுறை ஆர்வங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

ஒருநாள் கோட்டிப்புள்ளும் ஆடிமுடித்து, ஊஞ்சலும் ஆடிமுடித்து, தாத்தாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கதை கேட்க ஆரம்பித்தோம். தாத்தா எப்போதும்போல தன் மடியில் சின்னப்பொண்ணுவை வைத்துக்கொண்டு அதன் உச்சந்தலையில் வருடிக் கொடுத்தபடி உற்சாகத்துடன் எங்களுக்கு ஒரு ராஜா ராணி கதையைச் சொன்னார்.

சின்ன கதை. ஆனால் அதைச் சொல்லி முடித்த பிறகு, அந்தக் கதையை முன்வைத்து ஒன்று மாற்றி ஒன்றென ஏராளமான கேள்விகளைக் கேட்டார் தாத்தா. நாங்கள் எல்லாவற்றுக்கும் பொறுமையாகப் பதில் சொன்னோம்.

கேள்விகளும் பதில்களுமாக மாறிமாறி உரையாடல் நீண்டு முடிவடையப் போன சமயத்தில் தாத்தாவைப் பார்த்து ‘தாத்தா, எங்கள மாதிரி சின்ன பையனா இருந்த சமயத்துல என்ன விளையாட்டு விளையாடினீங்க?’ என்று திடீரென குறும்பாக ஓர் உரையாடலைத் தொடங்கினான் குமாரசாமி.

‘அந்தக் காலத்துல நான் ஆடாத ஆட்டமா, ஓடாத ஓட்டமா? அதுல நூத்துல ஒரு பங்கு கூட நீ ஆடியிருக்க மாட்ட.’

வாய்க்குள் ரொம்ப நேரமாக அதக்கிவைத்திருந்த வெற்றிலைபாக்குச் சக்கையைத் துப்பிவிட்டு தாத்தா புன்னகையோடு சொன்னார். அவருடைய உதடுகளில் சிவப்புக்கறை படிந்திருந்தது.

‘அப்படி என்ன ஆட்டம் ஆடுவீங்க? ஒன்னொன்னா சொல்லுங்க பார்ப்போம்’ என்று வேண்டுமென்றே குமாரசாமி தூண்டிவிட்டான்.

தாத்தாவுக்கு உற்சாகம் வந்துவிட்டது. உடனே ‘மரம் ஏறுவோம். உச்சிக்கிளை வரைக்கும் போய் தொட்டுட்டு திரும்புவோம். குளம், ஏரி, குட்டை எது கண்டாலும் குளிச்சி எழுந்தாதான் எங்களுக்கு நிம்மதியா இருக்கும். இந்தக் கரையிலேர்ந்து அந்தக் கரைவரைக்கும் போட்டி போட்டுகிட்டு நீச்சலடிப்போம். காக்காநீச்சல், உள்நீச்சல், வெளிநீச்சல் எல்லாமே எங்களுக்கு அத்துபடி. அப்புறம் சடுகுடு. பச்சைக்குதிரை, பம்பரம், கண்ணாமூச்சி, ஊஞ்சல், கறங்குன்னு ஒரு ஆயிரம் விளையாட்டு இருக்கும்’ என்று அடுக்கிமுடித்தார்.

‘கறங்குன்னு ஒரு விளையாட்டா? என்னமோ கொரங்கு, செரங்குன்னு சொல்றமாதிரி இருக்குது. புரியலையே. அது என்ன விளையாட்டு?’

‘பனை ஓலையை நல்லா சீவி நாலு துணுக்கா நறுக்கி காத்தாடி மாதிரி மடிச்சி முள்ளுல குத்தி எடுத்துகிட்டு நல்லா காத்தடிக்கிற பக்கமா ஓடினா, ஓலைத்துணுக்கு எல்லாம் விசிறி மாதிரியே சுத்தும். ஓலைய சுத்த வச்சிகினே நாள்பூரா ஓடிகினே இருப்போம். அதுதான் கறங்கு.’

‘தாத்தா, அந்த ஆட்டத்துக்கு பேரு ஓலைக்காத்தாடி.’

‘ஓலைக்காத்தாடியோ, சேலைக்காத்தாடியோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது. எங்க காலத்துல நாங்க அதை கறங்குன்னுதான் சொல்லுவோம்.’

நாங்களும் கறங்கு கறங்கு என்று நாலைந்து தரம் மனசுக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டோம். நாக்குக்குப் பழகிய பிறகு அந்தப் பெயரும் நன்றாக இருப்பதாகத் தோன்றியது.

‘ஆட்டமெல்லாம் சரி தாத்தா, படிக்கலையா?’

‘படிப்பா? எங்க காலத்துல அதெல்லாம் கெடையாது.’

‘அப்ப, நாள்முழுக்க ஆட்டம்தானா? கொண்டாட்டமா இருந்திருப்பீங்க. நீங்கள்லாம் கொடுத்து வச்சவங்க தாத்தா. எங்களுக்கு படிக்கறதுலயே பாதி நேரம் போவுது’ என்று பெருமூச்சோடு சொன்னான் கஜேந்திரன்.

‘நாள் முழுக்க ஆட்டமா? அப்ப சோத்துக்கு என்ன செய்யறது? விளையாடற நேரத்துல விளையாட்டு. வேலை செய்யற நேரத்துல வேலை. எப்பவுமே நம்ம பொழப்பு அப்படித்தான் ஓடுது.’

‘வேலையா? என்ன வேலை?’

‘மாடு மேய்க்கிற வேலைதான்.’

‘வீட்டுல அவ்ளோ மாடு வச்சிருந்தீங்களா?’

‘எங்க மாடு கெடையாது. ஊருல இருக்கிறவங்களுடைய மாடு. ஒவ்வொரு ஊடா போய் மாடுங்கள ஓட்டிகிட்டு வந்து ஏரிக்கரையில மேய வச்சிட்டு, சாயங்காலமானதும் மறுபடியும் ஓட்டிகிட்டு போய் அந்தந்த வீட்டுல விடணும். அதுக்கு சில பேரு சோறு போடுவாங்க. சில பேரு பணம் கொடுப்பாங்க.’

‘விளையாடுவோம்னு சொன்னீங்களே? அது எப்ப?’

‘மாடுங்க ஒருபக்கம் மேஞ்சிகிட்டிருக்கும். அதே சமயத்துல இன்னொரு பக்கம் நாம கூட்டம் கூடி ஆடிக்கவேண்டிதுதான்.’

தாத்தா மீண்டும் தன் விளையாட்டுப் பட்டியலை முன்வைத்துப் பேசத் தொடங்கிவிட்டார். அவருடைய உற்சாகம் தடுக்கமுடியாதபடி இருந்தது. ஒவ்வொரு விளையாட்டும் ஒரு கதைபோல இருந்தது. ஒவ்வொன்றும் புது அனுபவமாக இருந்ததால் அதைக் கேட்பதில் எங்களுக்கும் உற்சாகமாக இருந்தது.

தாத்தாவின் கதைகள் முடிவதற்காகக் காத்திருந்தமாதிரி பரசுராமன் ‘உங்க அப்பா என்ன வேலை செஞ்சாரு தாத்தா?’ என்று கேட்டு பேச்சின் திசையை மாற்றிவிட்டான்.

‘வேலையா? அவரும் என்ன மாதிரி மாடு மேய்ச்சிட்டுதான் இருந்தாரு. கொஞ்சம் எலும்பு மருத்துவம்லாம் தெரியும். கைகால உடைச்சிகிட்டு வரவங்களுக்கு கட்டு போட்டு சரிப்படுத்துவாரு.’

‘அவுங்கப்பா?’

‘அவரும் மாடு மேச்சவருதான்.’

முதலில் எங்கள் கேள்விகளுக்கு தாத்தா கேலியாகப் பதில் சொல்கிறாரோ என்று தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் படிந்திருந்த உற்சாகமும் புன்னகையும் அவர் உண்மையைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கவைத்தது.

‘பழைய தலைமுறையை பத்திய பேச்சு வேணாம், விட்டுடுங்க. உங்க புள்ளைய எந்த வேலைக்கு அனுப்பினீங்க?’

‘அவனும் மாடு மேய்க்கத்தான் போனான்.’

‘அவரு காலத்துல பள்ளிக்கூடம் வந்துட்டுது, இல்லையா? அப்புறம் ஏன் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலை?’

‘நானா அனுப்பமாட்டேன்னு சொன்னேன். அவனுக்கு படிப்பு ஏறலை. புஸ்தகம் பை சிலேட்டு எல்லாம் வாங்கிக்கொடுத்து பள்ளிக்கூடத்துக்குப் போடான்னு அனுப்பி வச்சேன். அவன், எல்லாத்தயும் வாய்க்கால்ல தூக்கி போட்டுட்டு மாட்டுக்கு பின்னால வந்து நின்னான். நான் என்ன செய்யமுடியும்? மாடு மேய்க்கறதுதான் அவன் தலையெழுத்துனு சொன்னா, என்னால மாத்திட முடியுமா என்ன?’

ஒரு கணம் அமைதியாக எங்கோ வெறித்த பார்வையுடன் நின்றார் தாத்தா. பிறகு ‘படிக்க போயிருந்தா, ஒழுங்கா உயிரோடு இருந்திருப்பான். பாழா போன மாடு மேய்க்கிற தொழிலுக்கு வந்து உயிரையே கொடுத்துட்டான்’ என்றார்.

எனக்கு எதுவும் புரியவில்லை. ஒரு தொடர்ச்சி இல்லாமல் அவர் பேச்சு தாவித்தாவிச் செல்வதுபோல இருந்தது. ‘என்னாச்சி தாத்தா?’ என்று பொறுமையாகக் கேட்டேன்.

‘மாடு மேய்க்கிற சமயத்துல, ஏதோ ஒரு மாடு மேய்ச்சல் ருசியில ரொம்ப தூரம் நடந்துபோய் புதருக்குள்ள போயிடுச்சி. அத புடிச்சி இழுத்து வரதுக்காக அவனும் புதருக்குள்ள போயிட்டான். போன இடத்துல ஏதோ ஒரு விஷப்பாம்பு கடிச்சி, அங்கயே செத்துட்டான்.’

‘ஐயையோ.’

‘யாரும் அதை கவனிக்கலை. ரொம்ப நேரம் கழிச்சதுக்கப்புறம்தான் அவன் அங்க இல்லைங்கற விஷயமே அங்க இருந்த கூட்டாளிங்களுக்குப் புரிஞ்சது. அதுக்கப்புறம்தான் தேட ஆரம்பிச்சாங்க. பொதருல ஆள கண்டுபுடிச்சி வெளிய இழுத்தாந்து போடறதுக்குள்ள உயிரு அடங்கிட்டுது.’

தாத்தாவின் குரலில் சட்டென வாட்டம் படிந்துவிட்டது. ஒருகணம் கஜேந்திரன் முகத்தையே உற்றுப் பார்த்தபடி இருந்தார். பிறகு அவராகவே தொடங்கி ‘என்னமோ வந்த வேலை முடிஞ்சிட்டுதுன்னு சொல்றமாதிரி வேகவேகமா போய் சேந்துட்டான். அவன் சாவும்போது ஆறேழு வயசுல ஒரு புள்ள இருந்திச்சி. உன்னை மாதிரியே அவனுக்கும் சுருட்டை முடி. கைகால் எல்லாம் கரணைகரணையா இருக்கும்’ என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டார்.

‘அந்த அண்ணன என்ன செஞ்சீங்க?’

‘சின்ன புள்ளயை வச்சிகினு நாங்க என்ன செய்யமுடியும்? என் பெரிய பொண்ண கடலூருல கட்டிக் குடுத்திருந்தோம். ஏதோ கடவுள் காட்டின வழி. நான் வளர்க்கறேன் இவனைனு சொல்லி கையோடு அழச்சிகினு போயிடுச்சி.’

‘ஏன்? அவனுக்கு அம்மா இல்லையா?’

‘அந்தக் கொடுமைய என்னன்னு சொல்றது? புருஷன்காரன் பாம்பு கடிச்சி செத்துட்டான்ங்கற விசனத்துல ஏரில உழுந்து உயிர உட்டுட்டுது. எல்லாம் எங்க தலையெழுத்து.’

அதைக் கேட்பதற்கே எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நல்ல வேளையாக பரசுராமன் அந்த மெளனத்தைக் கலைத்து ‘கடலூருக்கு போய் என்ன செஞ்சாரு?’ என்று கேள்வி கேட்டான்.

‘அவன பள்ளிக்கூடத்துல சேத்து அவன அவுங்கதான் படிக்க வச்சாங்க.’

அப்போதுதான் அவர் முகத்தில் மீண்டும் ஒளி பரவத் தொடங்கியது. ‘எல்லாமே என் பொண்ணு ஏற்பாடு. பள்ளிக்கூடத்துல படிச்சி முடிச்சிட்டு காலேஜ்ல படிச்சான். இப்ப வாத்தியாரு வேலைக்குன்னு தனியா ஒரு படிப்பு படிச்சி முடிச்சிட்டான். எப்பனா வளவனூருக்கு வந்து எங்கள பார்த்துட்டு போவான். சீக்கிரம் வேலை கெடைச்சிடும்னு சொன்னான். அவன் வாத்தியாராயிட்டான்னா, அவன் போற ஊருக்கு நாங்களும் வந்து கூட இருக்கணுமாம். ஒவ்வொரு தரமும் அதை சொல்லிட்டு போவான்.’

வெகுவிரைவில் ஊரைவிட்டுச் சென்றுவிடும் திட்டத்துடன் அவர் இருக்கிறார் என்பதை அறிய வருத்தமாக இருந்தது. ‘நெஜமாவே இந்த ஊரைவிட்டே போயிடுவீங்களா தாத்தா?’ என்று நெருங்கிச் சென்று கேட்டான் குமாரசாமி.

‘சின்ன புள்ள ஆசைப்பட்டு கூப்பிடும்போது வரமுடியாதுன்னு எப்படி சொல்லமுடியும்? சரி சரின்னு சொன்னாதான அவன் மனசுக்கும் ஒரு நிம்மதியா இருக்கும்.’

தாத்தா பதில் சொல்லி முடிப்பதற்கு முன்பே ‘இந்த ஊருலயே இருந்துடுங்க தாத்தா. இது ரொம்ப நல்ல ஊரு’ என்றான் குமாரசாமி.

தாத்தா அதைக் கேட்டு புன்னகைத்தார். பிறகு ‘நானும் இந்த ஊருலதானடா பொறந்தேன். எனக்கும் இதுதான் புடிச்ச ஊரு’ என்று சொல்லிவிட்டு தலையாட்டினார். தொடர்ந்து ‘ஆசையோடு வான்னு கூப்பிடற புள்ளைகிட்ட வரமுடியாதுன்னு எப்படி சொல்லமுடியும்? நீயே சொல்லு. கூப்ட்ட மொறைக்கு அங்க போய் பத்து நாள் இருப்பேன். அப்புற இங்க வந்து பத்து நாள் இருப்பேன். அப்படியே மாறி மாறி இருந்து காலத்த கழிக்கவேண்டிதுதான். வாழவேண்டிய காலமெல்லாம் முடிஞ்சிபோச்சி. இனிமேல நான் எங்க இருந்தா என்ன?’

பேசிக்கொண்டே தாத்தா வெற்றிலைபாக்கு பையைப் பிரித்து ஒரு வெற்றிலையை எடுத்து காம்பையும் நரம்பையும் கிள்ளிப் போட்டுவிட்டு மடிப்பு போக மடியில் வைத்து நீவினார். பிறகு பாக்குத் துணுக்குகளை அடுக்கி மடித்து வாய்க்குள் வைத்துக்கொண்டார்.

அவருடைய ஒவ்வொரு செய்கையையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த குமாரசாமி ‘மாடுங்க எல்லாம் போனபிறகுதான் இந்த ஆடுங்கள பார்த்துக்க ஆரம்பிச்சீங்களா?’ என்று மீண்டும் பழைய கதையின் பக்கமாக தாத்தாவின் கவனத்தைத் திருப்பினான்.

‘ஆமாம்’ என்று தலையை அசைத்தார் தாத்தா. ‘பையன் போன பிறகு எல்லாத்தயும் நிறுத்திட்டோம். மாடு விவகாரமே வேணாம்னு விட்டாச்சி. யாரு ஊட்டுக்கும் போறதில்லை. ஒவ்வொரு ஊட்டுலயும் படி வாங்கறதயும் நிறுத்தியாச்சி. ஆனா எத்தனை நாள்தான் ஊட்டுலயே உக்காந்திருக்கமுடியும். இருக்க இருக்க, செத்துப் போனவன் நெனப்புதான் அதிகமாகறமாதிரி இருந்திச்சி. ஏதாவது வேலைன்னு ஒன்னு செஞ்சாதான் மனசுக்கு தெம்பா இருக்கும்னு புரிஞ்சிகிட்டேன். அதுக்கப்புறம்தான் ஒருநாளு ரெண்டு ஆட்டுக்குட்டி வாங்கியாந்து வளத்தேன். இப்படி தோப்புப் பக்கமா எல்லாக் குட்டிங்களயும் செத்த நேரம் பெராக்கா ஓட்டி வந்துட்டு போவேன். அப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கும். அதுக்கப்புறம் இன்னும் ரெண்டு குட்டி வாங்கனன். அதுங்க வளர்ந்து பெரிசாகி, குட்டி போட்டுதுங்க. நாலு எட்டாச்சி. எட்டு பத்தாச்சி. ஆனா, எனக்கு நானே ஒரு கட்டுப்பாடு வச்சிகிட்டேன். ஆடுங்க நல்லா பெரிசாயிடுச்சின்னா நானே யாராவது கேக்கறவங்களுக்கு வித்துடுவேன். எத்தனை போனாலும் வந்தாலும் எப்பவுமே ஏழெட்டு குட்டிங்க மட்டும் இருக்கணும். அதுதான் என் கணக்கு. நம்ம சக்திக்கு அதுங்கள மட்டும்தான் மேய்க்கமுடியும்.’

ஒவ்வொரு வாரமும் கோட்டிப்புள் ஆடி முடித்ததும் தாத்தா சொல்லும் கதைகளை ஆர்வத்துடன் கேட்பதும் அவர் கட்டிவிடும் ஊஞ்சலில் ஆடுவதும் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடும் ஒவ்வொரு முறையும் ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்தை நோக்கி யாரோ கைதொட்டு அழைத்துச் செல்வதுபோல இருக்கும். மனமும் உடம்பும் அப்போது புல்லரிக்கும்.

ஒருநாள் தன் பேரனுக்கு சிதம்பரத்துக்கு அருகில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தார் தாத்தா. பத்து நாட்களுக்குள் வீடு பார்த்த பிறகு வளவனூருக்கு வந்து அழைத்துச்செல்வான் என்றும் சொன்னார். அதைக் கேட்டதும் மகிழ்ச்சியடைவதா, துயரமடைவதா என்று முதலில் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களை மீறி புன்னகையோடு துயரத்தைத்தான் அவரிடம் வெளிப்படுத்தினோம்.

‘ஆடுங்கள என்ன செய்யப் போறீங்க தாத்தா?’

‘ஓட்டேரிப்பாளையத்துலேர்ந்து ஒரு ஏபாரி வந்து பார்த்துட்டு போயிருக்காரு. அவரு ஒரு தொகையை குடுத்துட்டு எல்லாக் குட்டிங்களயும் எடுத்துக்கறதா சொல்லியிருக்காரு.’

‘சின்னப்பொண்ணு?’

தாத்தாவின் கண்கள் ஒருகணம் அதிர்ந்தன. ‘த்ச்’ என்றபடி பெருமூச்சுவிட்டார். ‘அத மட்டும் தனியா வச்சிகிட்டு நான் என்ன செய்யறது? அதையும் குடுத்துட வேண்டிதுதான்’ என்றார்.

சொல்லிக்கொண்டே ஊஞ்சலிலிருந்து பிரித்த கயிற்றைச் சுருட்டி அந்தச் சுருணையை என்னிடம் ‘இனிமே நீயே வச்சிக்கோ’ என்று நீட்டினார். உடனே நான் பின்வாங்கினேன். ‘எதுக்கு தாத்தா?’ என்றேன். ‘சொல்றத கேளுடா, வச்சிக்கோ’ என்று அழுத்திச் சொன்னார் தாத்தா. அதற்குப் பிறகுதான் தயக்கத்துடன் நான் அதை வாங்கிக்கொண்டேன்.

‘ஆடுங்க. ஓடுங்க. அதயெல்லாம் வேணாம்னு சொல்லலை. ஆனா நல்லா படிங்கடா. படிச்சி நல்ல வேலைக்குப் போங்க. அப்பதான் இந்த காலத்துல பொழைக்கமுடியும்.’

தாத்தா பொதுவாக சொன்னபடி சின்னப்பொண்ணுவின் தலையை வருடுவதுபோல எங்களுடைய ஒவ்வொருவருடைய தலையையும் தொட்டு வருடிவிட்டுச் சென்றார். சின்னப்பொண்ணுவை அவர் மார்போடு அணைத்துக்கொண்டிருந்தார். கருத்தம்மா, சிவப்பி, வெள்ளச்சி, தாண்டவராயன், எலும்புச்சிப்பாய், குள்ளன், எம்.ஜி.ஆர். எல்லாமே அவருக்குப் பின்னால் நடந்து சென்றன. நாங்கள் தாத்தாவுக்கு கையசைத்து விடைகொடுத்தோம்.

0

பகிர:
பாவண்ணன்

பாவண்ணன்

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். இயல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, சிறந்த நாவலுக்கான இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *