‘நேர் பாண்டி… நேர் பாண்டி’ விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் குரல்கள். அந்தப் பேருந்து நேராகப் பாண்டிக்கு மட்டும்தான் போகுமாம். வழியில் நிற்காதாம். ஆனால் வழிநெடுக நின்று செல்லும் என்பது வேறு விஷயம். விழுப்புரத்துக்கு அருகாமையில் இருக்கும் ஒரு கிராமத்தின் சிறப்புப் பெயர்: ‘சின்ன பாண்டி’. கள்ளுக்குப் பேர்போன கிராமம் இது.
பாண்டிச்சேரி. இதன் சுருக்கம் பாண்டி. ஆனால் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது புதுச்சேரி. நாம் சுருக்கமாகப் ‘புதுவை’ என்று அழைக்கலாம்.
புதுவை – உலக வரைபடத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருக்கும் துண்டு நிலம். சுற்றுலா வாசிகளால் பெரிதும் விரும்பப்படும் சொர்க்க பூமி!
ஏறக்குறைய 300 ஆண்டுகள் பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் இருந்தது புதுவை. பிரிட்டிஷ் இந்தியா விடுதலை அடைந்தபோதும் பிரெஞ்சுத் தேசத்துக் கொடி பறந்து கொண்டிருந்தது புதுவை மண்ணில். அந்த பிரெஞ்சிந்தியாவின் மிச்ச சொச்சங்களை, இன்றும் புழக்கத்தில் உள்ள ‘மிசே’ போன்ற பிரெஞ்சு வார்த்தைகளாலும், எஞ்சி நிற்கும் சில தெருக்களின் பெயர்களாலும் நாம் உணரலாம், பார்க்கலாம்!
1761 ஆங்கிலேயர் முற்றுகையின்போது முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டது புதுவை. ஆனாலும் பீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழுந்து நின்றது.
புதுவை என்றதுமே நம் கண்முன் வந்து நிற்பது அதன் கடற்கரை. சென்னை, மெரீனாவைப்போல் கால்கடுக்க நீண்ட தூரம் நடக்கத் தேவையில்லை, நம் கால்களை நனைக்க. இதோ, நம் கைக்கெட்டும் தூரத்திலேயே அலைகள் தவழ்ந்து விளையாடுகின்றன. வடக்கில் இருந்து தெற்காக, தெற்கில் இருந்து வடக்காக, கடற்கரையில் காலாற நாம் நடக்கலாம்!
அரைக்கால் டவுசர், மெல்லிய சட்டையுடன் செக்கச் சிவந்த ஆண்கள் பெண்கள் நடந்தோ சைக்கிளிலோ நம்மைக் கடந்து போகிறார்கள், பாரீஸ் நகருக்குள் நாம் நுழைகிறோம்!
ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பின் மூலம் சலனப்படங்களாக நம் கண்முன் விரிகிறது, புதுவையின் பழமை.
புதுவை, அழகிய நகரம். அழகான தெருக்கள். ஒழுங்கமைக்கப்பட்ட வீடுகள். அகன்று விரிந்து காட்சியளிக்கும் கால்வாய்களும் அழகுதான்.
இந்த அழகும் அமைதியும்தான் புரட்சியாளர் அரவிந்தகோஷை, மகான் அரவிந்தராக்கியது. சரியான நேரத்தில் பாரதிக்கு அடைக்கலம் அளித்தது. கனகசுப்புரத்தினத்தை பாரதிதாசனாக்கியது. வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தது. சங்கரதாஸ் சுவாமிகளைத் தனது மடியில் அணைத்துக்கொண்டது.
நான்கைந்து தெருக்கள் சேர்ந்ததுதான் ஒரு சட்டமன்றத் தொகுதி. முழங்கையையும் தாண்டி நீண்டிருக்கும் தொள தொள சட்டையுடன் காட்சிக்கு எளியவராக புதுவை முதல்வர். தமிழ்நாடு போன்று பந்தா எதுவும் இல்லை. முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் – அனைவரையும் எளிதில் சந்திக்கலாம்.
புதியப் புதியக் கட்சிகள் தோன்றுவதும் மறைவதும், ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் பல கோஷ்டிகளாகப் பிரிந்து வெளிப்படையாக குஸ்தி சண்டை போடுவதும் புதுவை அரசியலில் சகஜம்.
தடுக்கி விழுந்தால் கள்ளுக் கட்டைகள், சாராயக் கடைகள். ஒயின் ஷாப்புகளுக்கும் இங்குப் பஞ்சமில்லை. மதுவிலக்கு எனும் பேச்சுக்கு, ஒரு சொட்டுக்குக்கூட இங்கு இடமில்லை.
சென்னைப் பூக்கடையில் (உலகத்திலேயே மாபெரும் அழுக்குப் பேருந்து நிலையம்) கடற்கரைச் சாலைப்பேருந்தைப் பிடியுங்கள். இன்றைய டிக்கெட் அநேகமாக 42 ரூபாய்கள். சரியாக மூன்று மூன்றரை மணி நேரத்தில் நீங்கள் புதுச்சேரிக்கு வந்து இறங்கலாம். வந்தவுடன், நோ் நேராக, கோணல் இல்லாமல் கோடு போட்டது போலக் கடற்கரைக்குப் போகும் தெருக்களைப் பார்த்து ஸ்தம்பித்துப் போவீர்கள்.
இது பிரெஞ்சுக்காரர்கள் உபயம். நகர அமைப்பில் பிரெஞ்சு அரசாங்கம் ரொம்பக் கறார். அலுவலர்கள் கோடு போட்டு, நிலம் அளந்து கொடுத்தால் அதற்குப் பிறகு யாரும் அதை மீற முடியாது.
தெருவின் பக்கவாட்டு முடிவிடம், அதன் பிறகு நடைபாதை, அப்புறம் வீட்டுச் சுவர் என்ற ஒழுங்கை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ‘பிளசன்ட் டே விவகாரம்’ எல்லாம் எங்களிடம் இல்லை.
அப்புறம் சுத்தம். இதைப் பிரஞ்சுக்காரர்களிடம் நாங்கள் கற்றுக்கொண்டோம். புதுச்சேரியில் குப்பை, அழுக்கே இல்லையா என்கிறீர்களா… இருக்கிறது.
உங்களைப்போல (சென்னையில் பெரும்பாலான இடங்கள்) அழுக்குக்குள்ளேயே நாங்கள் வசிக்கவில்லை. அழுக்குக்குப் பக்கத்தில் வசிக்கிறோம்.
அப்புறம், ரொம்ப சகாய விலையில் கிடைக்கும் மதுபான வஸ்துக்கள். ஒரு காலத்தில் தமிழ்நாடு உலர்ந்து கிடந்தபோது, புதுச்சேரிக்கு வந்து ‘தாகசாந்தி’ செய்து கொண்டது. தி.மு.கழக அரசு மதுவிலக்கை ரத்து செய்தபின், நீங்கள் சொந்த வீட்டுக் குடிமக்கள் ஆனீர்கள். ரொம்பச் சீப்பாக, கலப்பில்லாத மதுவகைகள் இன்றும் புதுச்சேரியில் கிடைக்கிறது.
ஒரு ரிக்ஷாகாரரை அழைக்கலாம் என்று யோசிக்கிறீர்கள். அதற்குள் அவரே, உங்களை முற்றுகை இடுவாா். ‘வாங்க மிசே’ என்பாா். முசியே (அல்லது மிஸ்டர்) என்கிற பிரஞ்ச் வார்த்தையின் மரூஉ அது. ‘பீரோவுக்குப் போவனுமா?’ என்பார். பீரோ என்றால் அலுவலகம். ‘ஒப்பித்தாலுக்குப் போவனுமா’ என்பார். ஒப்பித்தல் என்பது ஆஸ்பத்திரி.
மக்கள் சாதாரணமாக ஒருவரையொருவர், போன்மூா், போன்சுவா என்றெல்லாம் வாழ்த்திக் கொள்வார்கள். போன்மூா் – நல்ல காலை. போன் சுவா – நல்ல மாலை.
உங்கள் தமிழ் தமிழோங்கிலம் ஆனதுபோல, எங்கள் தமிழ், தமிழ்பிரஞ்ச். கடந்த சில பத்தாண்டுகளில் இது குறைந்து வருகிறது.
வேலை நிமித்தமாகவோ, வேறு காரணமாகவோ, புதுச்சேரியில் சில மாதங்கள் தங்க நேர்கிற வெளியூர்க்காரர்கள், திரும்பித் தங்கள் தாய்த் தேசத்துக்குப் போவது இல்லை. இங்கேயே தங்கி விடுவார்கள். காரணம் ‘ஊர் சுத்தமாக இருக்கிறது. மனுஷர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். கிராமாந்தர அமைதியும், நகரத்து சௌகரியங்களும் கிடைக்கின்றன. மருத்துவ வசதி, தண்ணீர் வசதி ஆகியவை பிரமாதம்…’ – இப்படியாகத் தன் சொந்த மண் புதுவை குறித்து சிலாகித்துச் சொல்லுவார், எழுத்தாளர் பிரபஞ்சன்.
புதுவையைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று அவ்வப்போது குரல்கள் எழுந்ததுண்டு. ஆனால் இதில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்பதை அடுத்தடுத்த தேர்தல்களில் வெளிப்படுத்தினர் புதுவை மக்கள்.
புதுவை, பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல். அதன் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்’ என்பது ஜவாஹர்லால் நேருவின் விருப்பம். அந்தத் தனித்தன்மை பல்வேறு வகைகளிலும் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றே சொல்லலாம்.
புதுவை நகருக்குள் மட்டுமல்ல: திருபுவனை, திருக்காஞ்சி, மகதகடிப்பட்டு, பாகூர், வில்லியனூர்… எனச் சுற்றுப் பகுதிகள் அனைத்திலும் சொல்லவும் கேட்கவும் ஏராளமான கதைகள் அடங்கியிருக்கின்றன.
விழுப்புரத்தில் இருந்து புதுவைக்குப் பேருந்தில் உட்கார்ந்து பயணிக்க, புதிய பேருந்து நிலையம் போக வேண்டும். ‘நேர் பாண்டி…’ ‘நேர் பாண்டி…’ – குரல்கள் நம்மை மொய்க்கின்றன. ஜன்னலோர இருக்கை கிடைத்தாயிற்று. இதோ, பக்கத்தில் ஒரு இருக்கை காலியாகத்தான் இருக்கிறது. ‘வாங்க. உட்காருங்க. பேசிகிட்டே போகலாம், புதுவையின் கதையை!’
(தொடரும்)