Skip to content
Home » புதுவையின் கதை #2 – அரிக்கமேடு: புதைந்து போன சங்ககால வணிக நகரம்!

புதுவையின் கதை #2 – அரிக்கமேடு: புதைந்து போன சங்ககால வணிக நகரம்!

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. கிறிஸ்தவப் பாதிரியார் பிஞ்ஞோ தெ பெயோன் தங்களுக்கான மடம் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தேர்வு செய்த இடம் அரியாங்குப்பம். ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தின் அருகில் உள்ள ஒரு மண்மேடு. திட்டு. அதன் தற்காலப் பெயர் அரிக்கமேடு. இந்த மடத்தின் கட்டுமானத்தின்போது ஏற்கெனவே அங்கு சிதைவில் இருந்த கட்டட இடிபாடுகளின் செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன. இந்தக் கட்டடமும் காலப்போக்கில் (1783-ல்) சிதைந்துபோனது.

இதற்கிடையில் பிரெஞ்சு வானவியல் ஆய்வாளர் லெழாந்தீய், 1769-ல் தனது ஆய்வுக்காக அரிக்கமேடு திட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது இந்த மேட்டுப் பகுதியில் மண்ணுக்கு அடியில் செங்கற் சுவர்கள் தட்டுப்படுவதைக் கண்டறிந்தார். அகஸ்டஸ் சீசரின் உருவம் கொண்ட நாணயம் ஒன்றும் உள்ளூர் மக்களின் மூலம் இவருக்குக் கிடைத்தது. இவை தொடர்பான லெழாந்தீயின் குறிப்பு பரவலாகக் கவனம் பெறவில்லை.

இதற்குச் சரியாக 168 ஆண்டுகள் இடைவெளியில், 1937-ல் இங்கு வந்தவர் பேராசிரியர் ழுவோ துய்ப்ராயல். பிரெஞ்சுக்காரரான இவர், தென்னிந்தியா, குறிப்பாகத் தமிழக வரலாற்றில் மிகவும் ஈடுபாடு உடையவர். அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்.

சிதைந்து போயிருந்த கிறித்தவ சபைக் கட்டடத்தைப் பார்ப்பதற்காக துப்ராயல் அடிக்கடி அரிக்கமேடு வந்து சென்றார். அப்போது ஒவ்வொரு முறையும் அங்கிருந்த சிறுவர்கள் பலவித மணிகள், காசுகளை இவரிடம் காண்பித்தனர். இவை தொன்மையானவை என்பதை அறிந்த ழுவோ துய்ப்ராயல், அவற்றைச் சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டார். இந்த இடத்தின் தொன்மை குறித்துப் புதுவை ஆளுநருக்கும் அவர் தெரிவித்தார்.

அகழாய்வுகள்

அரசாங்கத்தின் உரிய அனுமதியைப் பெற்ற துப்ராயல், சென்னை அருங்காட்சியக அதிகாரி அயினப்பள்ளி ஐயப்பன், புதுச்சேரி பொதுப்பணித்துறைத் தலைவர் ரேமண்ட் கர்லா குழுவினருடன் அரிக்கமேடு பகுதியில் அகழாய்வில் ஈடுபட்டார். 1941-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆறு நாட்கள் இந்த அகழாய்வு நடந்தது. இதன் தொடர்ச்சியாக அருங்காட்சியக அதிகாரி அயினப்பள்ளி ஐயப்பன் வெளியிட்ட ‘தென்னிந்தியாவின் தக்ஷசீலம்’ எனும் கட்டுரை பரவலான கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து, 1941 செப்டம்பரில் பெஷோ, ரேமண்ட் கர்லா ஆகியோரின் தலைமையிலான குழு புதுவை அரசாங்கத்தின் சார்பில் அரிக்கமேடு பகுதியில் அகழாய்வினை மேற்கொண்டது.

இதற்கிடையில் இந்தியத் தொல்லியல் துறையின் டைரக்டர் ஜெனரலான மார்டிமர் வீலர், 1944-ல் புதுச்சேரி வந்திருந்தார். அங்கு நகர நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அரட்டைன் பானை ஓடுகள் உள்ளிட்ட அரிக்கமேடு அகழாய்வுப் பொருட்கள் சில அவரது கவனத்தைக் கவர்ந்தன. அரிக்கமேட்டில் ‘ஏதோ’ புதைந்திருப்பதை அவர் உணர்ந்தார். உடனடியாகக் களத்திலும் இறங்கினார்.

ஏ.கோஷ், கிருஷ்ண தேவா, எஸ்.சி.சந்திரா, எஸ்.ஆர்.தாஸ், டி.பி.குகா, பி.பி.லால், பி.கே.தாப்பர், இவர்களுடன் சென்னைப் பல்கலைக் கழகத் தொல்லியல் மாணவர்கள் 25 பேர்கள் எனத் தொல்லியல் பட்டாளத்துடன் அரிக்கமேடு பகுதியில் களமிறங்கினார் மார்டிமர் வீலர். 1945-ம் ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன் என மூன்று மாதங்கள் தொடர்ந்தன அரிக்கமேடு அகழாய்வு.

இந்த அகழாய்வு இந்தியாவிலேயே முதன்முறையாக அறிவியல் முறைப்படி நடத்தப்பட்ட அகழாய்வு எனக் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பொருட்களும், கண்டடைந்த தரவுகளும் ஒட்டுமொத்த உலகின் பார்வையையும் அரிக்கமேட்டின் மீது திருப்பியது. ஏ.கோஷ், கிருஷ்ண தேவா ஆகியோரின் பங்களிப்புடன் 1946-ல் மார்டிமர் வீலர் வெளியிட்ட ‘ARIKKAMEDU: AN INDO – ROMAN TRADING- STATION ON THE EAST COAST OF INDIA’ எனும் நூல் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். ரோமானிய வணிகத் தலமாக அரிக்கமேடு எவ்வாறு விளங்கியது உள்ளிட்ட தகவல்களை, ஏராளமான புகைப்படங்களுடன் விரிவாகப் பதிவு செய்துள்ளது இந்நூல்.

வீலரின் அகழாய்வினைத் தொடர்ந்து, இந்தோ சீனத் தொல்லியல் துறையைச் சேர்ந்த ஹென்றி மார்ஷல், பிரான்ஸ் அகழாய்வு ஆணையத்தைச் சேர்ந்த ழேன் மேரி கசால், இவரது மனைவி ழெனோவிவ் கசால், இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த பி.கே.தாப்பர் குழுவினர் 1946 அக்டோபரில் தங்களது அகழாய்வினை அரிக்கமேடு பகுதியில் நடத்தினர். 1950 வரை நடந்த இந்த அகழாய்வின்போது புதுவையின் சுத்துக்கேணி, முத்திரையர் பாளையம் ஆகிய பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்பிறகு சற்றே ஓய்வெடுத்தது அரிக்கமேடு. இந்த ஓய்வுக்குப் பின்னர் 1989-ல் இப்பகுதியில் மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. பென்சில்வேனியா பல்கலைக் கழகப் பேராசிரியர் விமலா பெக்லி, எகிப்திய ஆய்வுகளில் அனுபவம் வாய்ந்த தெலாவேர் பல்கலைக் கழக பேராசிரியர் ஸ்டீவன் சைட்போதம், சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கே.வி.இராமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் 1989-ல் தங்கள் அகழ்வுப் பணிகளைத் தொடங்கினர். இது, 1992 வரை நீடித்தது. அரிக்கமேடு வரலாற்றில் புது வெளிச்சத்தைப் பாய்ச்சியது விமலா பெக்லி தலைமையிலான இந்த அகழாய்வு.

அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்றவை

1945 முதல் 1982 வரையில் அரிக்கமேட்டில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் தத்தன், ஆதன் உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்ற தமிழி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடுகள், மனித உருவங்களும் குறியீடுகளும் கூடிய பானை ஓடுகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், ஆம்போரா ஒயின் ஜாடிகள் (சில நேரங்களில் இவை ஆலிவ் எண்ணெய், கருவாட்டுக் குழம்பு சேகரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன), களிமண் கூஜா, 200க்கும் மேற்பட்ட மணி வகைகள், இவற்றைத் துளையிடப் பயன்படுத்தப்பட்ட கருவி, சாணைக் கல், சுடுமண் பொம்மைகள், பல்வேறு நிலைகளில் உள்ள மணிகள், சங்கு வளையல்கள், காதணிகள், தேக்கு மரத்தாலான சீப்பு, சாயம் தோய்க்கப் பயன்படுத்தப்பட்ட தொட்டிகள், நீண்ட சுடுமண் குழாய்கள், செங்கற்களால் ஆன நீண்ட சுவர்கள், முதுமக்கள் தாழிகள், உறைக் கிணறுகள், சோழர்காலச் செப்புக்காசு உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

வீலர் ஆய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் உருவப் பொம்மைகள் – பெண் உருவங்கள் குறிப்பிடத்தகுந்தன. கையில் பழக்கூடைகளுடன் ஒயிலாக நிற்கும் இந்தப் பெண்கள் கொசுவம் வைத்த புடவைகள் கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.‌ இவை கி.பி.முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

குறிப்பாக, இங்கு கண்டெடுக்கப்பட்ட சுமார் இருநூறு ஆம்போரா மது ஜாடிகள், ரோம் நாட்டைச் சேர்ந்தவை. அரிக்கமேடு பகுதியில் ரோமானிய வர்த்தகத்தின் தீவிரத்தை நமக்குச் சொல்பவை. அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் புதுவை, சென்னை, புதுடெல்லி, ஹனாய் (வியட்நாம்), பாரீஸ் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை அல்லாமல் உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளைச் சேர்ந்த தனிநபர்களின் கைகளில் சிக்கிய தொல்பொருட்கள் இன்னும் ஏராளம்! ஏராளம்!

அகழாய்வுகளின் முடிவுகள்

கிரேக்கப் பயணி தாலமியும், கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த செங்கடற் பயணம் எனும் பயண நூல் போன்றவை குறிப்பிடும் பொதுகா என்பது இன்றைய அரிக்கமேடு ஆகும். இது தீவிர வணிகத் தலமாக இயங்கிய காலம் கி.மு.3 முதல் கி.பி.2 வரை. கிழக்குக் கடற்கரையில் குறிப்பிடத்தக்க ரோமானிய வணிகத் தலமாக இருந்திருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட அளவிற்குப் பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதியும் செய்யப்பட்டிருக்கிறது. மஸ்லின் போன்ற துணிகளுக்கு இங்கு சாயம் ஏற்றப்பட்டிருக்கிறது. உருக்கு மணிகள் செய்யும் தொழில்நுட்பமும் இங்கு கையாளப்பட்டுள்ளது. நீண்ட சுவர்கள், சுடுமண் குழாய்கள் நகர நாகரித்தைக் காட்டுகின்றன.

என்ன ஆனது அரிக்கமேட்டிற்கு?

மரக்காணம் – பூம்புகார் துறைமுகங்களுக்கு இடைப்பட்ட நகரம், கடல்வழி வணிகத்தில் சிறந்திருந்த, சோழ மண்டலக் கடற்கரையில் குறிப்பிடத்தக்க துறைமுகம் அரிக்கமேடு. சுமார் ஐநூறு ஆண்டுகாலம் மிகவும் பரபரப்புடன் இயங்கி வந்தது இந்த வர்த்தக நகரம். மரக் கலன்கள் ஓயாமல் வந்து சென்றன. உள்நாட்டு, வெளிநாட்டு வணிகர்கள் பெருமளவில் குவிந்து இருந்தனர். ஏற்றுமதி இறக்குமதி சிறப்பாகவே நடந்து வந்தன. சிந்துவெளி நாகரிகத்துடன் ஒப்பிடத்தக்க நகர நாகரிகம். இப்படியான அரிக்கமேடு ஒருகட்டத்தில் பேரமைதி கொண்டது. மண்ணோடு மண்ணானது. இயற்கைச் சீற்றமா? செயற்கைச் சூறையாடலா? என்ன ஆனது அரிக்கமேட்டிற்கு? ஆய்வுக் களத்தில் விவாதம் தொடர்கிறது!

பிரம்ம ரிஷியாகக் காட்சி தரும் புத்தர்

புதுவையில் இருந்து நான்கு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அரியாங்குப்பம். இங்கிருக்கும் சுடுகாட்டினைக் கடந்து செல்கிறது குறுகிய சாலை. அரிக்கமேடு வீதி என்கிறது வழிகாட்டிப் பலகை. இந்த வழியாகத்தான் அரிக்மேட்டிற்குப் போக வேண்டும்.

செல்லும் வழியில் காக்காயந்தோப்பு. பெரும்பாலும் இக்கிராமத்திற்கு உட்பட்ட பகுதியாக இருக்கிறது அரிக்கமேடு. இந்தக் காக்காயந்தோப்பில் ஒரு சுவாரஸ்யம். சிறிய கோயில். பிரம்ம ரிஷி கோயில் என்று அழைக்கப்படுகிறது. உள்ளே, ஆளுயரத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறார், பிரம்ம ரிஷி. நெற்றி, கைகளில் பளிச்சென்று திருநீற்றுப் பட்டைகள், கழுத்தில் ருத்ராட்சம் அணி செய்கின்றன. எதிரே சிறிய அளவிலான சிவலிங்கம். ஆனால் இவர், புத்தர் ஆவார்.

இந்தச் சிற்பத்தின் காலம் கி.பி.10-11-ம் நூற்றாண்டு ஆகலாம். இப்பகுதியில் பௌத்தம் செல்வாக்குடன் இருந்தபோது புத்தரும் செல்வாக்குடன் திகழ்ந்தார். பௌத்தம் தன் இருப்பை இழந்தபோது புத்தர், பிரம்ம ரிஷியாக மாற்றம் பெற்றார். இந்த அருகர் சிலையை வைத்து இந்த இடம் அருகன்மேடு என்று அழைக்கப்பட்டதாகவும் பின்னர் இது அரிக்கமேடாக மருவியதாகவும் சொல்லுவர். ஆற்றின் தொடர் ஓட்டம், அரிப்பினால் எஞ்சி நிற்கும் மேடு, அரிக்கமேடு என ஆனதாகவும் சொல்கின்றனர்.

தற்போதைய அரிக்கமேடு

காக்காயந்தோப்பு ஒட்டிய பெரும் நிலப்பரப்பு. மாமரங்கள் நிறைந்த தோப்பு. ஏறக்குறைய 34 ஏக்கர். மத்திய அரசின் தொல்லியல் துறையால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை கி.மீ.ருக்குக் கம்பி வேலி போட்டிருக்கிறார்கள். சாலை மார்க்கமாக நிறையப் பேர் வருகிறார்கள். தலைமை ஆசிரியர் இல.இரவீந்திரன், அரிக்கமேடு வரலாற்று ஆசிரியர் சு.வேல்முருகன், வரலாற்று ஆர்வலர்கள் நாகராஜன், சித்தார்த்தன் ஆகியோர் அடங்கிய குழுவினருடன் 2025 மார்ச் இரண்டாவது வாரத்தில் நாமும் சென்றோம். மேட்டினையொட்டி அரியாங்குப்பத்து ஆறு. புதுவை மரீனாவில் இருந்து நீர்வழித் தடத்தில் மோட்டார் படகுகள் மூலமாகவும் சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்படுகின்றனர். தலை ஒன்றுக்கு ரூ.500 வசூலிக்கப்படுகிறது. இது, ரொம்பவும் அதிகம்தான்.

அரிக்கமேடு பகுதியில் சங்ககாலப் பொருட்கள் எதுவும் இப்போது கிடைப்பதில்லை. ஏறக்குறைய அனைத்துமே அடியோடு சுரண்டப்பட்டு விட்டன. இந்தச் சுரண்டலின் பேர்பகுதி சொந்தக்காரர்கள் உள்ளூர்வாசிகளே!

இங்கு வருபவர்களுக்குக் காட்சி தருவது, கட்டுரையின் தொடக்கத்தில் நாம் குறிப்பிட்ட 18-ம் நூற்றாண்டின் மிச்ச சொச்சமாக நின்றிருக்கும் கிறித்தவ சபையினரின் செங்கற் கட்டடம்தான். இதையேதான் அரிக்கமேடு எச்சமாகக் கருதிச் செல்கின்றனர் இங்கு வரும் பெரும்பாலோர்.

மரங்கள் அடர்ந்த அந்தத் தோப்பில் நடந்து போகும்போது தங்கள் கால்களுக்குக் கீழே புதைந்து காட்சி தருகின்றதே அந்தச் சங்ககால எச்சங்கள், செங்கற்கள், சுவர்களின் பாகங்கள் இவற்றை எத்தனை பேர் குனிந்து பார்த்திருப்பார்கள்? செங்கற்களைத் தொட்டு உணர்ந்து இருப்பார்கள்?

அரிக்கமேட்டின் தொன்மையை விவரிக்கும், தற்போது இங்கு நின்றிருக்கும் கட்டடம் குறித்துத் தகவலைச் சொல்லும் அறிவிப்புப் பலகை ஏதும் இங்கில்லை என்பது நிகழ்கால வரலாற்றுச் சோகம்!

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *