அப்போது வாகூர்: இப்போது பாகூர்…
புதுவையின் சங்ககாலத் தடயங்களைத் தாங்கி நிற்கும் அரிக்கமேட்டினைப் பார்க்கும்போது பல்லவர் காலமும், அதன் வரலாற்றைச் சொல்லும் பாகூரும் நம் நினைவுக்கு வந்துசென்றன. ஆம். மிகவும் பேசவேண்டிய இடம்தான் பாகூர். தாலுகா என்பதைத் தமிழில் வட்டம் என்கிறோம். பிரெஞ்சு மொழியில் கொம்யூன் (COMMUNE) என வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதுவை மாநிலத்தின் குறிப்பிடத்தக்க வட்டங்களுள் ஒன்றாக இருக்கிறது பாகூர் கொம்யூன். தமிழ்நாட்டின் கடலூரை ஒட்டியிருக்கும் பகுதியிது. ‘கடலூர் நகராட்சியின் வடக்கு எல்லையும், பாகூர் நகராட்சியின் தெற்கு எல்லையும் ஒன்றோடொன்று முட்டிக்கொள்கின்றன’ என்பார் ‘கெடிலக்கரை நாகரிகம்’ நூலாசிரியர் சுந்தர சண்முகனார்.
பாகூர் ஏரி
புதுவையின் நெற்களஞ்சியமாகத் திகழ்கிறது பாகூர். இதற்கு ஆதாரமாக இருப்பது இவ்வூர் ஏரி. புதுவை மாநிலத்தில் பெரும்பரப்பு கொண்ட முதல் ஏரி, ஊசுட்டேரி. அதற்கு அடுத்த பெரிய ஏரி, பாகூர் ஏரி. இதன் கொள்ளளவு 194 மில்லியன் கனஅடி. இதன் மூலம் 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூரில் கட்டப்பட்டுள்ள அணையிலிருந்து பங்காரு கால்வாய் மூலமாகப் பாகூர் ஏரிக்குத் தண்ணீர் வருகிறது.
அரங்கனுர் – பாகூருக்கு 3கி.மீ.க்கு முன்னதாக இருக்கும் கிராமம். பாகூர் ஏரியின் எல்லை இதுவரை நீண்டிருக்கிறது. இதோ கண்முன்னே பரந்து விரிந்து காட்சியளிக்கிறது பாகூர் ஏரி. சற்றுக் கீழே இறங்கிப் பார்த்தேன். வானில் திடீரென வட்டமடித்த பறவை ஒன்று, தனது அபாயக் குரலை எழுப்பியது. அந்நியர் வந்துவிட்டார் எனச் சக நண்பர்களுக்கு அது எச்சரிக்கிறது. அந்த நேரத்தில் அதையும் மீறி என் நினைவுகளில் வந்துசென்றது, பல்லவப் பேரரசன் நிருபதுங்கவர்மனும், அவனது பாகூர் செப்பேடுகளும்!
பாகூர் செப்பேடுகள்
1879-ம் ஆண்டு. பாகூர் கிராமத்திற்குள் மண்ணைத் தோண்டும்போதுதான் இந்தச் செப்பேடுகள் வெளியே வந்தன. இவற்றைக் கண்டறிந்தவராக, பிரெஞ்சுக்காரர் ஜுன்ஸ் தெலாபோன் குறிப்பிடப்படுகிறார் .தமிழ், சமஸ்கிருத வாசகங்களுடன் கூடியது இந்தச் செப்பேடுகள். இவை கண்டெடுக்கப்பட்டபோதே அந்தப் பகுதியைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர், இதிலுள்ள வாசகங்களைப் பிரதியெடுத்துப் பதிவு செய்திருக்கிறார். இதன் சமஸ்கிருதப் பகுதிகளை வரலாற்று ஆசிரியர் கோபிநாதராவ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருக்கிறார்.
பாகூர் செப்பேடுகள் நிருபதுங்க வர்மனுடைய ஆட்சியின் எட்டாம் ஆண்டில் (கி.பி.858) வெளியிடப்பட்டன. அக்காலத்தில் பாகூர் பகுதியில் வேதங்களைக் கற்றுத்தரும், வித்தியாஸ்தானம் (கல்வி நிறுவனம்-வேதக்கல்லூரி) இயங்கி வந்திருக்கிறது. இதில் 14 வகையான கலைகளும் 18 வகையான வித்தைகளும் கற்றுத்தரப்பட்டன. நிருபதுங்கனின் காலத்துக்கு முன்னரே சிறப்பாக இயங்கிவந்த இக்கல்லூரிக்கு, அவன் காலத்தில் சேட்டுப்பாக்கம், வளங்காட்டங்கடுவனூர், இறைப்புணைச்சேரி ஆகிய மூன்று ஊர்களும் பழைய அறமும் பிரம்மதேயமும் நீக்கி, வித்யா போகமாக அளிக்கப்பட்ட தகவலைச் சொல்கிறது பாகூர் செப்பேடுகள். கல்வி என்ற ஆழமான ஆறு நான்கு திசைகளிலும் இருந்தும் வித்வான்கள் கூட்டங்களால் சலசலப்புப் பெற்று, அந்தக் கிராமம் முழுவதும் பரவி நிலையாகத் தங்கியிருந்தது எனப் புகழாரம் சூட்டுகிறது இந்தச் செப்பேடுகள்.
‘பாகூர்ப் பட்டயத்தை நோக்க அங்கிருந்த கல்லூரி, பல்லவர் காலத்தில், தென் பல்லவ நாட்டிற்கு அமைந்த பெருங்கல்லூரியாக இருந்திருத்தல் வேண்டும்’ என்கிறார் ‘பல்லவர் வரலாறு’ நூலாசிரியர் மா.இராசமாணிக்கனார்.
பாகூர் செப்பேடுகளைப் பார்க்க வேண்டுமென்றால் நாம் பாரிசுக்குத்தான் போக வேண்டும். ஆம். கண்டெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே பாரிசுக்குப் பறந்துவிட்டன இந்தச் செப்பேடுகள். அங்குள்ள தேசிய நூலகத்தில் பாகூர் செப்பேடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தொண்டை மண்டலப் பகுதியில் பல்லவராட்சியின் முடிவினைத் தொடர்ந்து, சோழராட்சி ஏற்படுவதற்கு முன்பாக, இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் எனப்படும் கன்னரதேவன் ஆட்சி நடந்தது. இப்பகுதியில் இம்மன்னனது செல்வாக்கு கி.பி.960 முதல் 966 வரை இருந்ததற்கான ஆதாரமாக இருப்பதுதான் பாகூர் திருமூலநாதர் கோயிலில் இருக்கும் கல்வெட்டுகள்.
திருமூலநாதர் கோயில்
சோழர்காலக் கோயில் கட்டடக் கலைக்குச் சான்றான இந்தக் கோயில் பாகூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மத்திய அரசின் தொல்லியல்துறை பராமரிப்பில் இருக்கிறது. பாகூர் பகுதியில் விளையும் நெல்லினைச் சேமித்து வைக்கும் தானியக் கிடங்காகவும் கோயிலின் ஒருபகுதி அண்மைக்காலம் வரை பயன்பட்டு வந்திருக்கிறது.
திருமூலநாதர் கோயில் முகப்பினைப் பார்த்தால், கூரை, கேரளப் பாணியை நினைவூட்டுகிறது. உள்ளே தரைப்பகுதியிலிருந்து உயரமாக நிற்கிறது கோயில். திருச்சுற்றில் உள்ள தெய்வங்களுக்கு மேலே ஏறிச்சென்று பூஜை செய்வதற்கு இரும்புப் படிக்கட்டுகள் அமைத்திருக்கிறார்கள்.
அடிப்பகுதியில் நிறையச் சிற்பங்கள். இந்தச் சிற்பங்கள்தான் அந்தக் கோயிலைத் தாங்கி நிற்பதான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலும் நடனமாதர்கள் அழகூட்டுகின்றனர். ஓரிடத்தில் மூவர் முதலிகள் நிற்கின்றனர். குரங்கு ஒன்று தன் குட்டிக்குப் பேன் பார்க்கும் சிற்பம் இங்கு வரும் பலரையும் கவர்ந்து வருகிறது. கோயிலில் ஏராளமான கல்வெட்டுகள். கன்னரதேவன், இரண்டாம் ஆதித்தன், இராஜராஜன், முதல், இரண்டாம் இராஜேந்திரன், விக்கிரம சோழன், முதல், இரண்டாம் குலோத்துங்கன், விஜயநகரர் உள்ளிட்டோரின் காலங்களைச் சேர்ந்தவை. அக்காலச் சமூகச் சூழலை நமக்கு விளக்குபவை. இதில் இரண்டு, மூன்று கல்வெட்டுகளின் தகவல்களை மட்டும் இப்போது நாம் பார்க்கலாம்.
கட்டிலேறுதல்
திருமூலநாதர் கோயிலில் இருக்கும் முதலாம் இராஜராஜனின் 22-ம் ஆட்சியாண்டு (கி.பி.961) கல்வெட்டு, கட்டிலேறுதல் எனும் வாசகத்தை முன்மொழிகிறது. இப்பகுதி மன்றாடிகள் ‘கட்டிலேறப் போகும்போது’ ஓராடு கொடுப்பது. புறநாட்டில் இருந்து (வேறு நாடுகளில் இருந்து) இங்கு வந்து கட்டிலேறுபவர்கள், இப்பகுதி மன்றாடிகளிடம் ஓராடு கொடுப்பது. அப்படித் தராவிட்டால் அவர்களிடமிருந்து இரண்டு ஆடுகளைப் பிடித்துக்கொள்ளலாம் என்றும், மன்றாடிகள் உறுதிகொடுத்தார்களாம். அதென்ன கட்டிலேறுதல்? மணவிழா சடங்கு குறித்துதான் இவ்விதமான வார்த்தைகளில் சொல்கிறது, இக்கல்வெட்டு.
நீரிலும் வெயிலில் நிற்கவைத்துத் தண்டணை
பயனடி எனும் ஊரைச் சேர்ந்த நம்பி கேசவனின் மகன் சோமாசிப் பெருமானான சூர்யதேவன், ஆதுர வாசுதேவனின் மகன் திருக்கதவன் என்பவருக்கு திந்துரவூரைச் சேர்ந்த சோணியன் என்பவர் தர வேண்டிய பொன்னுக்குப் புணையாக (ஜாமீன்) இருக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் பொன்னைத் திருப்பித்தர வேண்டிய சோணியன் உரிய காலத்தில் தரவில்லை. இதனால் அவனுக்குச் சொந்தமான நிலம், மனைகளை விற்று கடனை அடைக்கும்படி ஊர் மகாசபைக்கு மன்னன் ஆணையிடுகிறான். ஆனால் அவர்களும் இதில் கவனம் செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து, ஊருக்கு வந்த படைத்தலைவர் கொங்கு வேளார் என்பவர், மகாசபையாரைத் தண்ணீரில் மூழ்க வைத்தும், வெயிலில் நிற்க வைத்தும் தண்டித்துள்ளார். இதன் பிறகே சோணியனின் காணி, மனைகளைக் கோயில்களுக்கு விற்று அந்தப் பணத்தைக் கொண்டு கடனை அடைத்தனர் ஊர் மகாசபையினர். இது நடந்தது முதலாம் இராஜராஜனின் 15-ம் ஆட்சியாண்டில், கி.பி.1001-ல் என்பது குறிப்பிடத்தக்கது.
வரி கொடுக்காமல் வெளியேறிய பிராமணர்கள்
இவ்வூரை ஆயிரம் பிராமணர்களுக்குப் பங்கெழுதிக் கொடுத்து அரசன் ஆணையிடுகிறான். இந்த உத்தரவை கையில் வாங்கிய பிராமணர் பலரும், வரிச்சுமை உள்ளிட்ட ஏதோ காரணங்களினால் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் பயிர் செய்யாமல் ஊரைவிட்டு வெளியேறுகின்றனர். இதனைத் தொடர்ந்து முதலாம் இராஜேந்திரனின் 32-ம் ஆட்சியாண்டில், விருச்சிகம். பஞ்சமி. ரேவதி. புதன் கிழமை. கிபி. 9.11.1044 அன்று பின்வரும் ஆணை பிறப்பிக்கப்பட்டது
‘வெளியேறிய பிராமணர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் மீண்டும் குடிபுகுந்து தங்கள் நிலங்களில் பயிரிட வேண்டும். இப்படிச்செய்ய மறுப்பவர்கள் அரசாணையை மறுத்தவர்கள் ஆவர். இந்த ஆணைக்குப் பிறகும் நிலங்களில் பயிரிடாமல் போனால் அந்த நிலங்கள், உரியவர்களின் மனைகள் வேறு யாருக்கேனும் கொடுக்கப்படும். இதை எதிர்ப்பவர்கள் அரசனது திரு ஆணையை மறுத்தவர்களாவர்.’
ஏரியில் தூர்வார தீண்டாதோருக்கு மறுப்பு
முதலாம் இராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு. தனுசு பூர்வ பக்ஷம் பிரதிபாத பூராடம் வெள்ளிக்கிழமை கி.பி.1.12.1027 அன்று இவ்வூர் பெருங்குறி மக்கள் (மகாசபையார்) கப்பூர் உடையார் நீலன் வெண்காடனார் எனும் அதிகாரி முன்பு கூடினர். பயிர் செய்வோர் தரவேண்டிய ஏரி ஆயம் (வரி) குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், ஏரியைத் தூர்வாருவதற்கு 10 வயதுக்கு மேற்பட்டவர்களையும் 80 வயதுக்கு உட்பட்டவர்களையும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திய பெருங்குறிமக்கள், இப்பணியில் ‘தீண்டாதாரொழிய நீக்கி’ அதாவது தீண்டாதவர் தவிர்த்து மற்றவர்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும் முடிவு செய்திருக்கின்றனர். இவ்வகையில் தீண்டாமை அடிப்படையில் மக்களைத் தீண்டாதார் என வழங்கும் சொல்லாட்சி முதன்முதலாக முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டில் காணப்படுவதாகத் தெரிவிக்கிறது, ‘புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள்’ எனும் நூல்.
வங்காரி சிங்காரி கதை
பாகூரின் வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டாடும் வகையில் புதுச்சேரி பாரம்பரிய விழா, கடந்த 2017 பிப்ரவரியில் திருமூலநாதர் கோயிலில் நடந்தது. அப்போது பங்காரி, சிங்காரி ஆகியோரின் புகழ்பெற்ற வாழ்க்கை குறித்தான நடன நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
யார் இந்த பங்காரி, சிங்காரி? இவர்கள் இருவரும் பாகூரில் வசித்துவந்த நடன சகோதரிகள். இவர்கள் தேவதாசிகள் என்று சொல்லும் வரலாற்று நூல்களும் உண்டு. ஒருமுறை பாகூரில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். இதில், சிங்காரி புதிய ஏரி ஒன்றினை வெட்டினார். இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் பெரும் பணியை மேற்கொண்டு முடித்தவர் அவரது சகோதரி பங்காரி. பேச்சு வழக்கில் வங்காரி என்று அழைக்கப்படுபவர். இவர்களின் இந்தச் செயல்களின் காரணமாகவே, இருவரது சிலைகளையும் ஏரியில் வைத்து வழிபடுகின்றனர் பொதுமக்கள். இது, மக்கள் மத்தியில் ஆழப்பதிந்துள்ள கதை. இதன் வெளிப்பாடுதான் தொடரும் வழிபாடும், நடன நாடக அரங்கேற்றமும்.
ஜேஷ்டா எனப்படும் தவ்வை
உண்மையில் இவர்கள் நடன மங்கையரா? தேவதாசிகளா? ஏரிக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? இவை அத்தனைக்கு ஒரே பதில்தான், இல்லை என்பதுதான் அது. வடமொழியில் ஜேஷ்டா என்றும், தமிழ் இலக்கியங்களில் தவ்வை, மூத்தோள் என்றும் வழங்கப்படுவது மூத்தேவி சிற்பங்களாகும். இந்த வழிபாடு தமிழ்நிலத்தின் தொன்மைவாய்ந்த தாய்த்தெய்வ வழிபாடுகளுள் ஒன்றாகும்.
பாகூர் ஏரிநீர் வழிந்தோடும் கலுங்கு, அரங்கனூர் கிராம எல்லையில் அமைந்துள்ளது. இந்தக் கலுங்குக் கட்டுமானப் பணியானது, 1825-ல் தொடங்கி 1844-ல் முடிக்கப்பட்டுள்ளது. அப்போது, பிரெஞ்சு ஆட்சியில் பதிக்கப்பட்ட நினைவுக்கற்கள் இப்போதும் நமக்கு இங்குக் காட்சி தருகின்றன. இந்தக் கட்டுமானப் பணிகளின் போதுதான் அருகில் எங்கோ இருந்து இந்தச் சிற்பங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. ஏரி நீர்வழிந்தோடும் படிகளில் இந்த இரண்டு சிற்பங்களும் பதிக்கப்பட்டுள்ளன.
இப்போதும் இவை நடன மங்கைகளான வங்காரி, சிங்காரி எனப் பூஜிக்கப்படுகின்றன. குறிப்பாக, ஏரி நிரம்பி நீர் வெளியேறும் காலங்களில் இந்தச் சிற்பங்களுக்கு விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தென்பெண்ணையில் இருந்து பாகூர் ஏரிக்குத் தண்ணீரை எடுத்துவரும் கால்வாய், பங்காரு கால்வாய். இந்தப் பெயரும்கூட பிரெஞ்சுக்காரர் ஒருவரது பெயர் எனும் தகவலை 23.3.1961 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் பேசிய விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி பதிவுசெய்திருக்கிறார். சென்னையில் கூவம் ஆற்றிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாயின் பெயரும் பங்காரு கால்வாய் எனும் தகவலும் இந்த இடத்தில் ஒப்புநோக்கத்தக்கது. வரலாற்றைவிடப் புனைவுகள்தான் பாகூர் ஏரியில் ஆழப் புதைந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது!
2025 மார்ச் மாத இறுதியில் பாகூர் சென்றிருந்தபோது அங்கிருக்கும் எல்லைப் பிடாரியம்மன் கோயிலுக்கும் சென்றேன். உள்ளேயே வக்கிரகாளிக்கு எனச் சிற்றாலயம் இருந்தது. உற்றுப்பார்க்கும் போதுதான் தெரிந்தது, அது ஜேஷ்டா எனப்படும் மூத்ததேவியாகும். வக்கிரகாளியாக வணங்கப்படுகிறாள். இந்தச் சிற்பத்தின் காலம், கி.பி.9-10ம் நூற்றாண்டு ஆகலாம். ஆம். பல்லவப் பேரரசின் முடிவும், சோழ சாம்ராஜ்யத்தின் தொடக்கமும் இதுவேயாகும்.
பாகூரான வாகூர்
பல்லவச் செப்பேடுகளிலும் சோழர் கல்வெட்டுகளிலும் இவ்வூர் வாகூர் என்றே அழைக்கப்பட்டுள்ளது. முதலாம் இராஜேந்திரன் காலத்தில் (கி.பி.1017) இவ்வூருக்கு ஸ்ரீஅழகிய சோழச்சதுர்வேதி மங்கலம் எனும் பெயர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும் (கி.பி.1141) கூட இந்தப் பெயர் இருந்துள்ளது. ஆனாலும் 16-ம் நூற்றாண்டு கல்வெட்டில் மீண்டும் வாகூர் என்றே குறிப்பிடப்படுகின்றன. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வாகூர், பாகூர் ஆக மாற்றம் பெற்றுள்ளது. பள்ளிக்கூடத்தின் பெயர்ப்பலகை ஒன்றில் பார்த்தேன், பாகூர் பேட் என எழுதி இருந்தது.
பாகூர் புலவர் குப்புசாமி
நீர்வளம், நிலவளம் மட்டுமல்ல வரலாற்று வளமும்மிக்க பாகூர் குறித்துப் பேசும்போது, இம்மண்ணின் மைந்தர், புலவர் குப்புசாமி குறித்தும் பேசாமல் இருக்க முடியாது. சிறந்த வரலாற்று அறிஞர். புதுவை, தென்னார்க்காடு பகுதிகளில் இவர் நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார். பாகூர் வரலாறு உள்ளிட்ட ஏராளமான நூல்களின் ஆசிரியர். புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள் தொகுக்கப்பட்டதில் பாகூர் புலவர் குப்புசாமியின் பங்களிப்பு மிகவும் அதிகம்.
(தொடரும்)