மதகடிப்பட்டு
இராஜராஜ சோழன் கட்டியது
கருவறையில் ஆவுடையார் இல்லாமல் பானம் மட்டுமே காணப்படுகிறது. இறைவன் திருக்குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள ஆண்டு விவரம் அறிய இயலாத துண்டு கல்வெட்டு ஒன்று, அரிய தகவலைச் சொல்கிறது. ‘உடையார் ஸ்ரீராஜராஜ சோழதேவர் எடுப்பித்தருளின திருக்கற்றளித் திருக்குண்டாங்குழி மஹாதேவர்க்கு’ எனும் வாக்கியத்தின் மூலம் இக்கோயிலை எடுப்பித்தது சோழப்பேரரசன் இராஜராஜ சோழன் எனத்தெரிய வந்துள்ளது. தஞ்சைப் பெரியகோயிலை எடுப்பிப்பதற்கு முன்பாகவே மதகடிப்பட்டில் இக்கோயிலை மாமன்னர் எடுத்திருக்கிறார். இக்கல்வெட்டு, தமிழகக் கலை வரலாற்றுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
கோயிலின் திருச்சுற்றில் சிற்பங்கள் ஏதும் இல்லை. இங்கிருந்த பிரம்மா, துர்க்கை, விநாயகர் சிற்பங்கள் புதுவை அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. உருளை வடிவக் கோயில் விமானம், மேல்பாடி அரிஞ்சிகை ஈஸ்வரம், விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் இராமநாத ஈஸ்வரர் கோயில் ஆகியவற்றை நினைவூட்டுகின்றன. க்ரீவ கோஷ்டத்தில் பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, முருகன் ஆகியோர் காட்சிதருகின்றனர்.
மதகடிப்பட்டு திருக்குண்டாங்குழி மகாதேவர் கோயிலிலுள்ள வடமொழிக் கல்வெட்டுகளைச் சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், முதலாம் இராஜராஜன் தொடக்கக் காலத்தில் தன் காசுகளைப்போலவே கல்வெட்டுகளிலும் வடமொழியைப் பயன்படுத்தியிருக்கிறார் என்கின்றனர். இங்குள்ள கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, கிரந்தக் கல்வெட்டு ஒன்று, முதலாம் இராஜராஜன் குண்டாங்குழி கிராமத்தில் சிவனுக்காக கோயில் ஒன்றைக் கட்டியதாகவும், இக்கோயில் திருபுவனமாதேவி பெயரில் அமைந்த அக்கிரகாரத்துக்கு அருகில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.
அதிகக் கல்வெட்டுக்கள்:
இக்கோயிலில் 83 கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. புதுவை மாநிலத்தில் அதிகக் கல்வெட்டுக்கள் கொண்ட கோயில் பட்டியலில் இக்கோயில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. திருக்குண்டாங்குழியுடைய மகாதேவர்க்கு விக்கிரம சோழன் காலத்தில் (கி.பி.1026) பொய்யாமொழி எனும் பெயரில் நந்தவனம் அமைக்கப்பட்டிருக்கிறது. முதலாம் இராஜாதிராஜன் கல்வெட்டொன்று (கி.பி.1046) இத்தலத்து இறைவனுக்குத் தயிரமுது (தயிர்சாதம்) படையலிடப்பட்டது குறித்துச்சொல்கிறது. இக்கோயிலில் இருக்கும் சப்தமாதர்களுக்குத் திருவமுது படைத்திட பிராமணப் பெண்கள் சிலர் 45 பொற்காசுகளை (கி.பி.1075) கொடுத்திருக்கின்றனர். முதலாம் குலோத்துங்கச் சோழனின் ‘பூமேரிவையும்’ எனும் அரிய மெய்க்கீர்த்தி இடம்பெற்றுள்ள கல்வெட்டு இக்கோயிலில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாடல் கல்வெட்டு
சோழராட்சியில் இப்பகுதியின் அதிகாரியாக இருந்த எயில்நாட்டுக் கிளிநல்லூர் கிழவன் நல்லாறன் அங்கண்ணனான கங்கைகொண்டசோழ விழுப்பரையன் என்பவர், திருக்குண்டாங்குழியுடையார் கோயிலின் திருமஞ்சனம் உள்ளிட்ட திருப்பணிகளுக்கு நன்கொடை அளித்தார். அவரது செயலைப் பாராட்டிய ஊர்ச்சபையார், ‘ஆராருந் தாரத்தால் நம்மந்திரி அங்கண்ணன் அளவில் புகழ் கிளிசையர் கோனாகநன் பொன்னிநாட்டுக் காராளர் குலதிலகம் கங்கைகொண்ட சோழ விழுப்பரைய னெழிற்கோன் மலர்க்கு மலைந்த நாயகனே’ எனப் பாடலாகவே பாடி கல்லில் பொறித்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அகத்தியர்
அம்மன் கோயில் வடக்குச்சுவரில் உள்ள 12-ம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று, இக்கோயிலில் வெள்ளித் திருமேனி எழுந்தருளுவித்த செய்தியைச் சொல்கிறது. ஆனால் இப்படியான வெள்ளித் திருமேனி எதுவும் இப்போது இங்கில்லை. முகமண்டபத்தில் உள்ள மற்றொரு கல்வெட்டில் சண்டேஸ்வரர், குண்டேஸ்வரர், அகத்தியர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்னர்.
வானவன்மாதேவி
அம்மன் கோயில் கிழக்கு சுவரில் உள்ள 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இன்னொரு கல்வெட்டு, வானவன்மாதேவி நல்லூர் எனும் பெயரில் புதிய ஊரினை உண்டாக்கி அங்கு மக்களைக் குடியேற்றம்செய்த நிகழ்வைக் குறிப்பிடுகிறது. வானவன்மாதேவி என்ற பெயர் இரண்டாம் பராந்தகன், முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் ஆகியோரின் மனைவியின் பெயராகும். இந்தக் கல்வெட்டின் குறிப்பிடப்படும் வானவன்மாதேவி எந்தச்சோழ அரசனின் மனைவியின் பெயர் என்று அறியக்கூடவில்லை என்கிறது, ‘புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுக்கள்’ நூல்.
துண்டு கல்வெட்டுக்கள்:
இராஜராஜன், இராஜேந்திரன், முதலாம் இராஜாதிராஜன், இரண்டாம் இராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் உள்ளிட்டோர் காலத்துத் துண்டு கல்வெட்டுகள் இக்கோயிலில் நிறைய இருக்கின்றன. பல கல்வெட்டுக்களில் மன்னர்களின் புகழ்பாடும் மெய்க்கீர்த்தி மட்டுமே இருப்பதால் – முழுமை அடையாததால், அவை சொல்லவரும் தகவல்கள் என்ன என்பதை அறிய முடியாதவர்களாக நாம் இருக்கிறோம்!
இங்கு மத்திய அரசின் தொல்லியல்துறை வைத்துள்ள அறிவிப்புப் பலகையில், திருக்குண்டாங்குழி மகாதேவர் என்பதை, ‘திருக்குந்தன்குடி: மகாதேவர்’ எனப் பிழைபட எழுதி வைத்திருக்கின்றனர். யாராவதுச் சொல்லி திருத்தினால் நலம்.
திருவாண்டார்கோயில்
இத்தலத்து இறைவன், வடுகீஸ்வரர்- வடுகநாதர்- வடுகூர் நாதர் – பஞ்சநதீஸ்வரர். முதலாம் பராந்தகனது ஆட்சிக் காலத்தில் (கி.பி.947) தனது பட்டத்து அரசியின் பெயரை திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் எனச் சூட்டியிருந்ததை இக்கோயிலில் உள்ள கல்வெட்டின் மூலம் நாம் அறிகிறோம். கோயில் விமானம் தஞ்சைப் பெரியகோயிலை ஒத்திருப்பாகச் சொல்லப்படுகிறது.
திருச்சுற்றில் உள்ள பிச்சாடனார், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, இலிங்கோத்பவர், துர்க்கை, ரிஷபாந்திக மூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்கள் சோழச் சிற்பிகளின் கலைத்திறன்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவை. இவையல்லாமல், திருப்பணிகளின்போது கண்டெடுக்கப்பட்ட சப்தமாதர், ஜேஷ்டாதேவி உள்ளிட்டோரின் சிற்பங்கள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அப்போது பூமிக்கு அடியில் இருந்து சிவகாமியம்மை, சிவன் ஆகியோரது செப்புத் திருமேனிகளும் கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டு ஆகும்.
இங்கிருக்கும் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாளுவ நரசிங்க மகாராஜனின் தெலுங்குக் கல்வெட்டு, இத்தலத்து இறைவனை ‘திருஆண்டார்’ என்று அழைக்கிறது. சோழர் காலங்களில் திருவறை ஆண்டார் என இறைவனைக் குறிப்பிடும் வழக்கம் இருந்தது. இதுவே பிற்காலத்தில் திருஆண்டார் எனச் சுருங்கியது போலும். திருஆண்டார் கோயில் என்பது ஊரின் பெயராகவும் மாறி, திருவாண்டார்கோயில் எனவும் இப்போது வழங்கப்படுகிறது.
திருவாண்டார்கோயிலிலுள்ள கி.பி.987-ம் ஆண்டு கல்வெட்டொன்று, இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனையும் சோழ மன்னன் உத்தமசோழனையும் ஒருசேர குறிப்பிடுகிறது. இது எப்படி? மூன்றாம் கிருஷ்ணனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி.965) இக்கோயிலுக்கு பாரத்வாஜி சாத்தன் நிலக்ரீவன் என்பவர் 90 ஆடுகள் கொடை அளித்திருக்கிறார். இந்தத் தகவல் உத்தமசோழன் காலத்தில், அதாவது 17 ஆண்டுகள் கழித்துதான் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், திருவாண்டார் கோயில் கோயிலில் இருந்த வெள்ளித் தளிகை, வெள்ளி முண்டம், பொற்பூக்கள், பட்டங்கள், கூத்தப்பெருமானின் கண்டநாண், பண்டாரத் திலிருந்த பொன் ஆகியவை சபா விநியோகத்திற்காக அழித்திருக்கின்றனர் (உருக்கிப் பயன்படுத்தியிருக்கின்றனர்). பின்னர் இதற்குப் பதிலாக ஊரில் இருந்த நிலத்தை விற்றுக்கொடுத்து இருக்கின்றனர். இதுநடந்தது கன்னரதேவனின் 28-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.967). ஆனால் இந்தத் தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டது, முதலாம் இராஜராஜனின் 6-வது ஆட்சியாண்டில் (கி.பி.990). ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்குப் பிறகு!
சிக்கலுடையான் பெருஞ்சாதன் நக்கன் கணிச்சனான இருமுடிச்சோழ மூவேந்த வேளாண் என்பவர், திருப்பதியம் பாடுவார்க்கு ஆடை முதலியன தரவும், நந்தவனத்தில் நீரிறைக்கும் குடிகள் இருவருக்கு ஆடை முதலியன அளிக்கவும், மடைவிடுவான் ஒருவனுக்கு நெல் அளிக்கவும், கோயிலில் அடியார்க்கு திருவமுது அளிக்கவும், சாலை அடுவானுக்கு நெல் அளிக்கவும் ஏற்பாடு செய்ததைத் தெரிவிக்கிறது இங்கிருக்கும் முதலாம் இராஜராஜனின் 12-ம் ஆட்சியாண்டு (கி.பி.997) கல்வெட்டு. இதில் குறிப்பிடப்படும் முட்டியன் வள்ளப்பாக்கம் என்பது விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் ஊராக இருக்கலாமா?
இக்கோயிலில் கி.பி.10,11,12 நூற்றாண்டுகளைச் சேர்ந்த துண்டு கல்வெட்டுக்கள் பல இருக்கின்றன. இவை சொல்லவரும் தகவல்களும் நமக்கு முழுமையாகத் தெரியவில்லை.
‘வடுகூரில் ஆடும் அடிகளே’ எனத் திருஞான சம்பந்தர் பாடியிருப்பது திருவாண்டார் கோயிலைத்தான் என்றும், இல்லையில்லை, கடலூர் மாவட்டத்திலுள்ள திருக்கண்டீச்சுவரம் கோயிலைத்தான் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. சம்பந்த பெருமான்தான் தெளிவுபடுத்த வேண்டும்!
திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம்
நாம் முந்தைய பதிவில் பார்த்த திருபுவனை, தற்போது பேசிக்கொண்டிருக்கும் மதகடிப்பட்டு, திருவாண்டார் கோயில் ஆகிய மூன்று ஊர்களும் விஷ்ணு கோயிலொன்றினை மையமாகக் கொண்ட ஒரு பேரூராக அமைந்திருந்தன. இதன் பழைய பெயர் திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம். இப்போது ஓர் ஊருக்கான பெயராகச் சுருங்கி, அவ்வூரும் ‘திருபுவனை’ எனச்சுருக்கமாக அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது மூன்று ஊர்களும் தனித்தனி ஊர்களாக இருக்கின்றன. இவ்வூர்களிலுள்ள மூன்று கோயில்களும் தேசியச் சின்னங்களாக, இந்திய அரசின் தொல்லியல் களஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்றன.
சாராயக்கடை அருகே நந்தி
தஞ்சைப் பெருவுடையார் கோயில் மூலவருக்கான கற்கள், விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் இருந்து கொண்டுசெல்லப்பட்டன. அதேபோல நந்தியும் இங்கிருந்தே கொண்டு செல்லப்பட இருந்தார். பணிகள் முற்றுப்பெறவில்லை. ஆனாலும், திருவக்கரையில் இருந்து நந்தி புறப்பட்டுவிட்டார். பம்பை ஆற்றைக் கடந்து சன்னியாசிக்குப்பம் வந்தபோது வண்டி சாய்ந்து, கீழே விழுந்த நந்தி சேதமடைந்தது. அந்த நிலையிலேயே அதேயிடத்தில் அவர் கைவிடப்பட்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகக்கூட தஞ்சைப் பெரியகோயிலில் இருந்து வந்த சிவாச்சாரியார்கள், வேதமந்திரங்கள் முழங்க இந்நந்திக்கு வழிபாடு செய்துவிட்டுச் சென்றனர்.
புதுவை மாநிலம், திருபுவனைக்கு அருகிலுள்ள சன்னியாசிக்குப்பம் கிராமத்தில் சாராயக் கடைக்கு அருகாமையில்தான் அமர்ந்துள்ளார் இந்த நந்தீஸ்வரர்.
எழுத்தாளர் பாலகுமாரன் தனது ‘உடையார்’ நாவலில் இந்த நந்திக்கு முப்பது பக்கங்களை ஒதுக்கியிருக்கிறார். இந்த அத்தியாயத்துக்கான தலைப்பு ‘கவிழ்ந்த காணிக்கை.’ அதன் இறுதிச் சுருக்கம் வருமாறு:
‘அந்த நந்தி வெயிலிலும் மழையிலும் காற்றிலும் பனியிலும் இன்றுவரை அப்படியே மல்லாந்து கிடக்கிறது. தமிழ்நாட்டுச் சிற்பக்கலைஞர்களின் பெருமையைச் சொல்லிக் கொண்டு இருக்கிறது. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் நடந்த போட்டியைக் கதை கதையாய்ப் பரப்பிக் கொண்டிருக்கிறது. அந்த நந்தியை இத்தனை வருடங்களுக்குப் பிறகும் யாரும் நிமிர்த்தவில்லை. ஒட்டிவைக்கவில்லை. வெறுமே ஒரு ஊரின் ஓரத்தில் ஒரு சாராயக்கடை அருகே காவல் தெய்வமாய் நின்றிருக்கிறது. ஜனங்கள் அதன் முகத்திற்கு மஞ்சள் தடவி நெற்றியில் பெரிய திலகமிட்டு எங்கள் காவல் தெய்வம் என்று கும்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஜுரம் வந்தால் போக்கும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். உடல்நலனைக் காக்கும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.
சத்தியத்தைச் சுமந்த எதுவும் நீண்டநாள் இருக்கும். எவரையும் காவல் காக்கும். அந்த நந்தி ஒரு சத்திய சொரூபம். தன்னை உலகுக்கு அர்ப்பணித்துகொண்ட ஒருமனிதரின் கைவண்ணம். ஆசை இருந்தால் இப்போதும்கூட திருவக்கரையில் இருந்து பாண்டிச்சேரி போகும் வழியில் தமிழ்நாடு – பாண்டிச்சேரி எல்லையில் அந்த நந்தி புரண்டு கிடப்பதைப் பார்க்கலாம். சோழச் சிற்பிகளான ஆதிச்ச பெருந்தச்சனுக்கும் சோம தேவனுக்கும் நன்றி சொல்லிவிட்டு நீங்கள் அதைச் சுற்றி வரலாம்.’
எனக்குள்ளும் ஆசை ஏற்பட்டது. 2020 மார்ச் மாதத்தில் தஞ்சைப் பெரியகோயிலுக்குக் குடமுழுக்கு விழா நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னதாக நண்பர்களுடன் நானும் சன்னியாசிக்குப்பம் சென்றிருந்தேன். சாராயக் கடை ஓரத்தில் அமர்ந்திருக்கும் நந்தியைத் தரிசித்தேன். முழுமை பெறாதவராகவும் சேதமடைந்தவராகவும் இருக்கிறார். ஆனாலும் பிரம்மாண்டமாக, ஆளுயரத்துக்கும்மேல். அண்ணாந்துதான் பார்க்க வேண்டும்!
நந்தியை நாம் நெருங்கியபோது அருகே அமர்ந்திருந்து முதியவள் ‘செருப்பை கழட்டிட்டு கிட்டப் போங்க’ எனச் சத்தம் போட்டாள். ஆம். எழுத்தாளர் பாலகுமாரன் குறிப்பிடுவதுபோல, இவர் இப்போதும் இங்குக் காவல் தெய்வம்தான்!
(தொடரும்)