இந்தப் புத்தகம் எப்படி உருவானது என்பதைச் சொல்வதற்கு முன்னால் ஒரு பத்திரிகையாளனாக நான் உருவான பின்னணியைச் சுருக்கமாகவேனும் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இதழியல் துறையில் இயங்கி வருகிறேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, 1979ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸில் விளையாட்டுத் துறை நிருபனாக என் பயணத்தைத் தொடங்கினேன். அங்கிருந்து கலை, திரைப்படம் என்று நகர்ந்து, சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல் நிகழ்வுகளையும் திராவிட நிலத்தின் வரலாற்றை மாற்றியெழுதிய சமூக நிகழ்வுகளையும் உன்னிப்பாகக் கவனித்து, பதிவு செய்யத் தொடங்கினேன்.
எக்ஸ்பிரஸில் பத்தாண்டுகள் பல ஜாம்பவான்களோடு பழகுவதற்கும் இணைந்து பணியாற்றுவதற்கும் வாய்ப்புக் கிடைத்தது. மவுண்ட் ரோட்டிலும் மூர் மார்க்கெட்டிலும் பழைய, அரிய நூல்களை வேட்டையாடுவதற்காக என்.எஸ். ராமசுவாமி சுற்றும்போது நானும் அவருடன் எப்போதேனும் இணைந்துகொள்வதுண்டு. ரெஸிடெண்ட் எடிட்டராக இருந்த சையத் நக்வி, விளையாட்டுத் துறை ஆசிரியர் சி.எஸ்.ஏ. சுவாமி (ஓட்டப்பயணத்தில் நிபுணர். ஹிட்லரின் ஜெர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் மராத்தானில் கலந்துகொண்டவர்), ராஜன் பாலா (என் மொழியைக் கூர்மையாக்கியவர். பிரபலங்களில் உலகை எனக்கு அறிமுகப்படுத்தியவர்) போன்றவர்களோடு பழகிய நினைவுகள் மறக்கமுடியாதவை.
அதன்பின், தி இந்துவில் சீனியர் ரிபோர்ட்டராக 1993ஆம் ஆண்டு இணைந்தேன். அப்போது முதல்வராக இருந்தவர் ஜெ. ஜெயலலிதா. துறைமுக நகரையும் உள்பகுதிகளையும் தொழில்மயமாக்கும் முயற்சிகளுக்கு செய்தித்தாள் நிர்வாகத்தின் ஒத்துழைப்பை அவர் நாடியிருந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில் முதல் ‘ஸ்டாஃப் கரஸ்பான்டண்டாக’ என்னை அங்கே நியமித்தார்கள். மதுரையில் நியமிக்கப்போவதாக எனக்கு வாக்குறுதி அளித்திருந்த நிலையில் ஒப்பீட்டளவில் சிறிய இடமான தூத்துக்குடிக்குச் செல்லுமாறு என்னைக் கேட்டுக்கொண்டதில எனக்கு வருத்தம்தான். என்றாலும், வேறு வழியின்றி குடும்பத்தோடு தூத்துக்குடிக்குக் குடிபெயர்ந்தேன்.
என் வாழ்வையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் இடமாக தூத்துக்குடி அமையும் என்று நான் அப்போது நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நான் அங்கே தங்கியிருந்த நான்காண்டுகள் மிகப் பெரும் திறப்புகளை எனக்கு ஏற்படுத்தின. என் சமூக, அரசியல் பார்வையை அகலமாகிக்கொள்ளும் களமாக தூத்துக்குடி அமைந்தது. சுற்றுச்சூழல், கடல் சூழலியல், மீனவர் வாழ்வியல், உப்பளத் தொழில் சார்ந்த பிரச்சினைகள், மாசுபடுத்தும் ஆலைகள், சாதி மோதல்கள், வகுப்புவாத சண்டைகள், கலவரங்கள், வன்முறை, மரணம், அழிவு அனைத்தையும் காணமுடிந்தது; அனைத்திலிருந்தும் கற்றுக்கொள்ளமுடிந்தது. சாதி எவ்வளவு நுணுக்கமாக இயங்குகிறது, அதன் வேர் எவ்வளவு ஆழத்தில் படிந்திருக்கிறது, அதன் கிளை எங்கெல்லாம் நீண்டு பரவியிருக்கிறது என்பதை நேரடியாகவே கண்டேன். ஏடுகளில் கிடைக்காத வெளிச்சத்தைக் களத்தில் மட்டுமே தரிசிக்கமுடியும் என்னும் உண்மையை நான் ஆத்மார்த்தமாக உணர்ந்துகொண்டது அங்கேதான்.
பொருளாதாரத்திலும் சமூகத்திலும் நியோலிபரல் கொள்கை அதிரடி மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்த காலம் அது. அனைத்துத் துறைகளிலும், கிட்டத்தட்ட அனைவருடைய வாழ்க்கைமுறைகளிலும் பலவிதமான அடிப்படையான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. இந்தப் பின்னணியில் நான் எழுதிய செய்திக்கட்டுரைகள் பூகம்பங்களாக மாறின.
கொடியங்குளத்தில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறலை வெளியில் கொண்டுவந்தேன். தூத்துக்குடியில் தலித் மக்கள் திரண்டெழுந்து போராடுவதற்கு இந்நிகழ்வு தூண்டுகோலாக அமைந்தது. நடுநாலுமூலைக்கிணறு தலித் வன்முறைகளை முதலில் வெளியுலகுக்குச் சொன்ன பத்திரிகையாளன் நான்தான். தென் தமிழ்நாட்டில் பத்தாண்டுகாலம் நீடித்த சாதி மோதல்களில் நானூறுக்கும் அதிகமானவர்கள் இறந்துபோயினர், கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் அழிக்கப்பட்டன. இக்கொடுமைகளைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்தேன்.
சட்ட விரோத மணல் கொள்ளையை 1996ம் ஆண்டு முதன் முதலில் அம்பலப்படுத்தியவன் எனும் பெருமிதம் எனக்கு இருக்கிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் இன்றும் கொள்ளை தொடர்வது உண்மையிலேயே வேதனைக்குரியது. மணல் கொள்ளை போக, மன்னார் வளைகுடாவில் சூழலியல் எப்படியெல்லாம் பாதிப்படைகிறது என்பதைச் சிரத்தையோடு பதிவு செய்தேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து 1994 முதல் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதினேன். சமூக விரோதிகளிடமிருந்து மிரட்டல்கள் குவிந்தபோது மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன்.
அங்கும் நான் வரித்துக்கொண்டது அதே பணியைத்தான். தலித் மக்கள்மீதான வன்முறை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி ஆராய்ந்தேன். ரிசர்வ் தொகுதிகளான பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி கிராமங்களில் பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் போட்டியிட தலித்துகளால் வேட்பு மனுகூடத் தாக்கல் செய்ய இயலாத நிலை நீடிப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தேன். அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தனது உரையில் இப்பிரச்சினையைக் குறிப்பிட்டார். மேலவளவு கிராமத்தில் தலித் ஊராட்சித் தலைவரும் மேலும் ஐந்து தலித்துகளும் கொல்லப்பட்டது குறித்து பல கட்டுரைகளை எழுதினேன். இப்பணிகளுக்காக சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு விருது (CECEI) கிடைத்தது.
2003இல் சேலத்துக்கு இடம்பெயர்ந்தபோது அங்கும் இதே போன்ற வெளிச்சத்துக்கு வராத நிகழ்வுகளையே பின்தொடர்ந்தேன். கோயில்களில் தலித்துகள் நுழைய அனுமதி இல்லாத நிலை, தீண்டாமைச் சுவர்கள், பள்ளி சத்துணவுக் கூடங்களில் தலித் பெண்கள் மீதான பாகுபாடு, தலித் பெண் உள்ளாட்சித் தலைவர்களின் இடர்கள், சேலம் மாவட்டத்திலும் சுற்றுவட்டார கிராமங்களிலும் நீடித்த இரட்டைக் குவளை முறை என்று பலவற்றைக் குறித்து எழுதினேன். நாமக்கல்லில் எய்ட்ஸ் நேயால் மரணடைந்த லாரி ஓட்டுநர்களின் மனைவிகள் பட்ட துயரங்களை அதிகாரிகளோ மருத்துவத் துறையோ கண்டுகொள்ளாமல் போனதைக் கவனப்படுத்தினேன். அதன் விளைவாக எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச மருத்துவ உதவியை மத்திய அரசு அறிவித்தது.
தி இந்துவில் 24 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஃபிரண்ட்லைன் இதழில் இணைந்தேன். நிதானமாகப் பணியாற்றவும் நீண்ட கட்டுரைகளை எழுதவும் இங்கே வாய்ப்புக் கிடைத்தது. சமூகப் பொறுப்போடு, நடுநிலையோடு, துணிச்சலாகப் பல செய்திக் கட்டுரைகளை எழுதினேன். கிரானைட், மணல் என்று இயற்கை வளங்கள் கொள்ளை போவது குறித்து நான் எழுதிய முகப்புக் கட்டுரைக்கு பால கைலாசம் நினைவு விருது அளிக்கப்பட்டது. ஜஸ்டிஸ் சிவராஜ் பட்டீல் விருது கிடைத்தது.
அதன்பின் ஆணவப் படுகொலைகள்மீது என் கவனம் குவிந்தது. விரிவாக, நிறைய பயணங்கள் மேற்கொண்டேன். நேரடி ஆய்வுகள் மூலம் ஆணவப் படுகொலைகள் குறித்த தனித்துவமான பார்வையொன்று கிடைத்தது. கண்ணுக்குப் புலப்படாத வகையில் சாதி எந்த அளவுக்கு நுணுக்கமாகத் தமிழ் மண்ணில் பரவியிருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன். சமூகத்தோடு, குறிப்பாக அரசியல் அமைப்புகளோடு சாதி கொண்டிருந்த சிக்கலான உறவைப் புரிந்துகொள்ளமுடிந்தது. சாதியைக் கேட்பாட்டு ரீதியில் அணுகுவதற்கும் கள யதார்த்தத்தைக் கொண்டு அணுகுவதற்கும் இடையிலான வேறுபாட்டையும் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. இந்த அனுபவங்களின் அடிப்படையில் என் எழுத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டேன்.
பெற்றோரை தங்கள் குழந்தைகளைக் கொல்லும் அளவுக்குச் சாதி வெறி ஒரு நோய் போல் மனிதர்களைப் பீடித்திருந்தது என் இதயத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. குறுகிய காலம்தான் என்றாலும் இளவரசனோடு நெருக்கமாக என்னால் பழகமுடிந்தது. சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து தி.நகரில் இருந்த ஒரு விடுதிக்கு என் காரில் அவரை அழைத்துச்சென்றேன். தன் மரணத்துக்கு முந்தைய நாள் அந்த விடுதியில்தான் இளவரசன் தங்கியிருந்தார். மனைவி அவரைவிட்டுப் பிரிந்து சென்றதும் அன்றுதான். இது உளவியல் ரீதியாக என்னைப் பாதித்தது. நினைக்கும்போதெல்லாம் இப்போதும் அந்த வலியை என்னால் உணரமுடிகிறது. தனது மனைவியோடு மெரினா கடற்கரையில் எடுத்த மொபைல் படத்தை என்னோடுதான் இளவரசன் பகிர்ந்துகொண்டிருந்தார். அதை பிரண்ட்லைனில் வெளியிட்டதைத் தொடர்ந்து அப்படம் வைரலாக எங்கும் பரவியது.
ஆணவப் படுகொலைகளை நெருக்கமாக ஆராயத் தொடங்கியது அதன்பிறகுதான். உடுமலைப்பேட்டை சங்கரின் படுகொலையைத் தொடர்ந்து அவர் மனைவி கவுசல்யா மனம் திறந்து என்னோடு பகிர்ந்துகொண்ட நினைவுகள் ஆணவப்படுகொலை பற்றிய வேறொரு பரிமாணத்தை எனக்கு அளித்தது. அதேபோல் திருச்செங்கோடு கோகுல்ராஜ் கொலையை விரிவாகப் பதிவு செய்தேன். அவர் தாயின் அலறல் சத்தம் இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
0
ஆணவப் படுகொலைகள் குறித்து நான் எழுதிய செய்திக் கட்டுரைகளும் கள ஆய்வுகளும் இந்நூலில் திரட்டப்பட்டுள்ளன. என் எழுத்துகளின் திரட்சி மட்டுமல்ல, என் அனுபவங்களின் திரட்சி என்றும் இதனை அழைக்கமுடியும். தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆணவப் படுகொலைகளை நடுநிலையோடும் நுணுக்கமாகவும் இதில் பதிவு செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
ஃபிரண்ட்லைனில் எனது கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவருவதற்கு காரணமாக இருந்த ஆசிரியர் ஆர். விஜயசங்கருக்கு மிக்க நன்றி. அவருடைய ஆதரவு இன்றி இக்கட்டுரைகள் வெளிவந்திருக்க வாய்ப்பில்லை.
எனது கட்டுரைகளைச் சீராகவும் சரளமாகவும் மொழிபெயர்த்திருக்கும் நிவேதிதா லூயிஸுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தனது கள ஆய்வுகளுக்கும் புத்தகப் பணிகளுக்கும் நடுவில் நேரம் எடுத்து எனக்காக இதனை அவர் செய்திருக்கிறார். அவருடைய மொழியாக்கப் பிரதியைச் செழுமைப்படுத்தி, உணர்வுபூர்வமான நடையில் அதனை உருமாற்றி அமைத்தவர் நண்பர் மருதன். அவருக்கு என் நன்றியும் அன்பும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், களச் செயற்பாட்டாளர்கள், அவர்களுடைய நிறுவனத்தினர் என்று பலர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். ஆணவப்படுகொலையின் உளவியலைப் புரிந்துகொள்ள உதவிய இவர்கள் அனைவரையும் நினைவுகூர்வதும் அவர்களுக்கு நன்றி கூறுவதும் என் கடமை.
எந்த இடத்திலும் உண்மையை மறைக்கவோ, எந்த நோக்கத்துக்காகவும் உண்மையைத் திருத்தியமைக்கவோ நான் முயலவில்லை. அதேபோல் மிகையான சித்திரிப்புகளையும் இதில் ஒருவர் காணமுடியாது. ஒரு பத்திரிகையாளனாக உள்ளதை உள்ளபடி பதிவு செய்திருக்கிறேன். சாதியமைப்பு குறித்த சமூகத்தின் புரிதலை அதிகப்படுத்த இந்நூல் ஏதேனும் ஒரு வகையில், சிறிய அளவில் உதவுமானால் என் பணி நிறைவுற்றதாகக் கருதுவேன். இப்போது என் வயது 66. என் பத்திரிகைப் பணியைத் தொடங்கியபோது இருந்த அதே உத்வேகத்தோடு, அப்போது ஏற்றுக்கொண்ட விழுமியங்களை அதே போல் உயர்த்திப் பிடித்தபடி என் பயணத்தைத் தொடர்கிறேன். கல்வி கரையில கற்பவர் நாள் சில.
இளங்கோவன் ராஜசேகரன்
சென்னை
I came to know Mr. Ilangovan Rajasekaran when I translated the article penned by him on Tuthukudi Firing, later the Kalachuvadu published it verbatim. I felel sorry for not being able to fulfill his request of authoring a book on Honour Killing based on his articles (an article I translated, couldn’t get published). I found highest standard of professional ethics in his articles without any bias. A nice human. Wish him good luck
Good effort
தோழர் வணக்கம் உங்களுடைய கட்டுரை மக்களுக்கு மிகப்பெரும் விழிப்புணர்வை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை உங்களுடைய முயற்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி கே கந்தசாமி பழனி நகர மன்ற துணைத் தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழனி நகர செயலாளர்