முழுக்க எரிந்து கிடக்கும் தன் வீட்டுக்கு முன்பாக அமைதியாக நின்றுகொண்டிருந்தார் 35 வயது முருகன். தனது 400 சதுர அடி வீட்டைப் பறிகொடுத்துவிட்ட பிறகும் கோபமில்லை, துயரமில்லை. உண்மையில் எந்தச் சலனமுமில்லை அவரிடம். நடந்து முடிந்த ஊழித் தாண்டவத்தில் நத்தம் காலனியில் மட்டும் 268 வீடுகள் பகுதியளவிலோ முழுமையாகவோ அழிந்து போயிருந்தன. முருகனுடைய வீடும் அதிலொன்று. நவம்பர் 7 தர்மபுரி தலித் மக்களின் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு தினமாக மாறிவிட்டது.
வீடு மட்டுமல்ல, தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் முருகன் இழந்திருந்தார். மோட்டார் பைக், பள்ளிக்கூடம் செல்லும் இரு மகள்களின் மிதிவண்டிகள், சமையல் பாத்திரங்கள் அனைத்தும் அழிந்துபோயிருந்தன. முருகனின் மனைவி பெருமிதத்தோடு கண்ணாடி அலமாரியில் காட்சிப்படுத்தியிருந்த சீனப் பீங்கான்களும் அவற்றுள் அடங்கும். மளிகைச் சாமான்கள், அரிசி மூட்டை அனைத்தும் எரிக்கப்பட்டிருந்தன. சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருந்த குடும்பப் புகைப்படங்கள்கூடத் தப்பவில்லை. ‘நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த அனைத்தும் சாம்பலாகிவிட்டன. இப்போது என்னிடம் எதுவுமே இல்லை’ என்கிறார் முருகன்.
நாயக்கன் கோட்டையிலுள்ள நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி மூன்றும் போர்க்களங்களாகக் காட்சியளித்தன. கறுத்த புகை வான் நோக்கி உயர்ந்துகொண்டிருந்தது. ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அனைத்தையும் இழந்து, அடுத்து என்ன செய்வதென்னும் அதிர்ச்சியோடு வீதிகளில் குழுமியிருந்தார்கள். வீடுகள் கரிக்கட்டைகளாக உதிர்ந்து கிடந்தன. மரப்பொருள்களும் பாத்திரங்களும் எங்கும் இறைந்து கிடந்தன. சாலை முழுக்க விதவிதமான காகிதங்கள். கிட்டத்தட்ட 200 பேர் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை இழந்திருந்தனர். ஐம்பது பேருடைய குடும்ப அட்டைகள் தொலைந்துவிட்டன. ஓட்டுநர் உரிமம், வீட்டுப் பத்திரம், நிலப் பத்திரம், எரிவாயு இணைப்பு ஆவணம், காப்பீட்டு ஆவணம் என்று தொடங்கி பலவிதமான பதிவுகள் அழிந்துவிட்டன.
‘தெளிவாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இது. எட்டு கிலோ மீட்டருக்குள் அடங்கியிருக்கும் மூன்று பகுதிகளையும் மூன்று குழுக்கள் தாக்கியிருக்கின்றன. கனமாகச் சொத்துகளைச் சூறையாடியிருக்கிறார்கள்’ என்கிறார் அண்ணா நகரைச் சேர்ந்த ஆர். கோபால். இந்தக் கலவரத்தை நடத்தி முடிப்பதற்குக் கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஆகியிருக்கிறது. நின்று நிதானமாகச் சூறையாடியிருக்கிறார்கள். பார்த்துப் பார்த்துக் கொளுத்தியிருக்கிறார்கள். இக்கலவரத்தில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட அறிக்கையொன்றை வெளியிட்டது. அதன்படி இழப்பின் மதிப்பு தோராயமாக 6.95 கோடி இருக்கலாம் என்கிறார் மாவட்ட ஆட்சியர் ஆர். லில்லி. தமிழ்நாட்டில் இதற்கு முன்பு எந்தவொரு தலித் குடியிருப்பும் இத்தனைப் பெரிய இழப்பை எதிர்கொண்டதில்லை.
‘இது தனிப்பட்ட விவகாரம்; இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினை என்றுதான் நினைத்தோம். இப்படியொரு சாதிய வடிவம் எடுக்கும் என்றோ நாங்கள் அதற்கு இரையாவோம் என்றோ நினைத்துக்கூடப் பார்த்ததில்லை’ என்கிறார் இளவரசனின் அண்டை வீட்டுக்காரரான மல்லிகா. அவருடைய வீட்டிலிருந்த விலை மதிப்புமிக்க பொருள்கள், மிதிவண்டிகள், கணவரின் லேப்டாப் அனைத்தையும் கொள்ளையடித்துவிட்டு இறுதியில் வீட்டுக்குத் தீ வைத்திருக்கிறார்கள்.
0
இளவரசனின் செய்கையால் கொதித்தெழுந்த வன்னியர்கள் தலித்துகளைப் பழிவாங்குவதற்காக நிகழ்த்திய கலவரம் என்று சொல்லி முடித்துக்கொண்டால் பிரச்சினையின் முழுப் பரிமாணத்தை நம்மால் புரிந்துகொள்ளமுடியாமல் போய்விடும். நொடியில் மூண்டெழுந்துவிட்ட சினம்தான் கலவரமாக வெடித்தது என்று கூறப்பட்டாலும் உடைமைகள் சூறையாடப்பட்ட விதத்தையும் குடியிருப்புகள் அழிக்கப்பட்ட விதத்தையும் பார்க்கும்போது இவை கவனமாகத் திட்டமிடப்பட்ட செயல்கள் என்பது தெரிந்துவிடுகிறது. மிகத் துல்லியமாக முன்னெடுக்கப்பட்ட ஒரு வன்முறைச் செயல் என்றே இக்கலவரத்தை மதிப்பிடவேண்டியிருக்கும் என்கிறார் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா. கலவரம் வெடித்த மூன்று இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்ததன் தொடர்ச்சியாக அவர் வந்தடைந்திருக்கும் முடிவு இது.
சாதியம் வெளிப்படையாகப் புலப்படுகிறது என்றால் பொருளாதாரக் காரணிகள் சற்றே உள்ளொடுங்கிச் செயல்பட்டிருக்கின்றன. சாதிய அடுக்கில் வன்னியர்கள் மேல் நிலையிலும் தலித்துகள் கீழ் நிலையிலும் வைக்கப்பட்டிருந்தாலும் பொருளாதாரப் பின்னணியில் இந்த வரிசை நடைமுறையில் நிலவவில்லை என்பதையே கள யதார்த்தம் நமக்கு உணர்த்துகிறது.
விவசாயப் பணிகளில் வன்னியர்கள் செழுமையாக இருந்த காலம் ஒன்றுண்டு. செல்வத்தோடு சேர்ந்து செல்வாக்கும் அவர்களிடம் இருந்தது. ஒரு கட்டத்தில் மழை பொய்த்து, விளைச்சல் குறைந்து, செழுமையும் குறையத் தொடங்கியது. மற்றொரு பக்கம் தலித்துகள் ‘அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட’ இடத்தில் அடங்கியும் ஒடுங்கியும் இருப்பதை விட்டுவிட்டு மேலேழும்பி வரத் தொடங்கியது வன்னியர்களுக்குக் கடும் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. நாம் தேய்ந்துகொண்டே போகும்போது இவர்கள் மட்டும் எப்படி மேலே, மேலே உயர்ந்துகொண்டிருக்கிறார்கள்? நம் வாழ்வாதாரம் சுருங்கும்போது இவர்களுடையது மட்டும் எப்படி விரிந்துகொண்டு போகிறது? ஒரு காலத்தில் பண்ணையடிமைகளாகவும் கூலிகளாகவும் இருந்தவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது இவ்வளவு பணம்? நம்மிடம் இல்லையே எனும் வருத்தத்தைவிட அவர்களிடம் இருக்கிறதே என்னும் எரிச்சல் நாள்பட, நாள்பட வளர்ந்துகொண்டே போனது.
கண்முன்னால் தலித்துகளின் வாழ்வாதாரம் கிடுகிடுவென்று உயர்ந்து நின்றதை வன்னியர்களால் ஏற்கமுடியவில்லை. ஏற்கவிடாமல் தடுத்தது அவர்களுடைய சாதிப் பெருமிதம்தான். நீங்களெல்லாம் ஏதுமற்றவர்களாக இருக்கவேண்டியவர்கள். மற்றவர்களின் கையை எதிர்பார்த்து வாழ விதிக்கப்பட்டவர்கள். அந்த விதி தலைகீழாகத் திரும்பியிருப்பது சமூகத்தின் ஒழுங்கைக் குலைப்பதாக இருக்கிறது. உங்களுக்கு எதற்கு மாடி வீடு? எதற்கு இரு சக்கர வாகனம்? வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை என்று மற்றவர்களைப் போல் எப்படி இயல்பாக வாழமுடிகிறது உங்களால்? உங்களுக்கு எதற்கு பெரிய எல்ஈடீ டிவி? எதற்கு ஜெனரேட்டர்? வீட்டுக்கு வீடு ஏசி போட்டுக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்துவிட்டதா உங்கள் வருமானம்? காரும் கம்ப்யூட்டருமாக நீங்கள் சொகுசு வாழ்க்கை நடத்துவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்துகிடக்கவேண்டுமா நாங்கள்?
வருமானம், வேலை வாய்ப்பு, சேமிப்பு, முதலீடு, பெரிய வீடு என்று தலித்துகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து சென்றுகொண்டே இருப்பதை வன்னியர்களால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை, பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை. பொறாமை காட்டுத்தீ போல் பற்றியெறிய ஆரம்பித்தது. தலித்துகளின் வளர்ச்சி வரம்பு மீறலாகவும் ஒழுங்கீனமாகவும் அவர்கள் கண்களுக்குத் தெரிந்திருக்கிறது.
தலித்துகளின் மீதான வன்முறைக்கென்று ஒரு தனித்த வரலாறு இங்கே இருக்கிறது. திருச்செந்தூரிலுள்ள நடுநாலுமூலைக்கிணறு (1992), கொடியங்குளம் (1995), திண்டுக்கல்லிலுள்ள குண்டுபட்டி (1998), தூத்துக்குடியிலுள்ள சங்கரலிங்கபுரம் (2001) ஆகிய பகுதிகளிலும் இதேபோன்ற கலவரங்கள்தான் நடந்துள்ளன. அங்கும் இதே பொறாமையும் இயலாமையும் கோபமும் சேர்ந்துதான் வன்முறைத் தீயை வளர்த்துவிட்டன. தாங்கள் செய்யாத தவறுக்காக அங்கும் தலித்துகள் இதேபோல்தான் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதேபோல்தான் சூறையாடல் நடைபெற்றது. தலித்துகளின் வாழ்க்கைத் தரம் எங்களுடையதைக் காட்டிலும் உயர்வதை அனுமதிக்கமாட்டோம். எங்களிடமில்லாத வசதிகளை அவர்கள் அனுபவிப்பதைச் சகித்துக்கொள்ளமாட்டோம். இந்த மனோபாவம்தான் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் நெருப்பைப் பற்ற வைத்திருக்கிறது.
நாயக்கன் கோட்டை போலவே கொடியங்குளத்திலும் தலித்துகள் மேலான நிலையில் வாழ்ந்துவந்தனர். மேற்கு ஆசியாவில் கிடைத்த வேலை வாய்ப்புகளை ஆண்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு, கை நிறையச் சம்பாதித்தனர். அந்த வருமானத்தைக் கொண்டு வசதியாகத் தங்கள் வாழ்நிலையை அவர்கள் திருத்தியமைத்துக்கொண்டனர். வீட்டுக்குத் தேவையான உபகரணங்களைத் தருவிப்பது அவர்களுக்குச் சுலபமாகிப்போனது. வசதியான நடுத்தர வாழ்க்கையை அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தினார்கள். இந்தப் பளபளப்பான மாற்றம் மற்றவர்களின் கண்ணைப் பறித்திருக்கிறது. பொறுக்கவியலாமல் தாக்கியிருக்கிறார்கள். மற்றபடி, நாயக்கன் கோட்டைக்கும் நாம் மேலே பார்த்த மற்ற இடங்களுக்கும் ஓர் அடிப்படை வேற்றுமை இருக்கிறது. நாயக்கன் கோட்டையில் சமூகத்தில் ஒரு பிரிவினர் வன்முறையைக் கையிலெடுத்தனர் என்றால் பிற இடங்களில் சட்டத்தைப் பாதுகாக்கவேண்டியவர்களே குற்றச்செயல்களில் ஈடுபட்டனர். இறுதியில், பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு அரசு இழப்பீடு அளிக்க வேண்டியிருந்தது.
தலித்துகள்மீதான வன்முறைச் செயல்கள் பொதுவாக, கொலை, பாலியல் பலாத்காரம், சொத்துகளை அழித்தல் ஆகிய வடிவங்களில் நடைபெறுவது வழக்கம். நாயக்கன் கோட்டையில் அழிப்பு வேலை மட்டும் நடந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் எளிய குற்றம்போல் தோன்றினாலும் அதுவும் கொடுமையான குற்றம்தான். உடைமைகளை அழிப்பதன்மூலம் முன்னேறி வந்துகொண்டிருக்கும் ஒரு குழுவை அச்சுறுத்தித் தடுத்து நிறுத்தமுடியும். அவர்களுடைய தன்னம்பிக்கையைக் குலைக்கமுடியும். பொருளாதார விடுதலைக்கான பாதையை அடைக்கமுடியும். தலித்துகள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதைத் தடுக்கமுடியும். அவர்கள் கனவுகளை முறிக்கமுடியும்.
கடந்த பத்தாண்டுகளில் நாயக்கன் கோட்டையிலுள்ள தலித் மக்கள் நிலவுடைமையாளர்களாகவும் மாறியிருப்பதைக் காணலாம். இன்று, நத்தம் காலனியில் 22 தலித் குடும்பங்கள் அரை ஏக்கரிலிருந்து 1 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளனர். கொண்டம்பட்டியில் 20 குடும்பங்கள் 22 ஏக்கர் நிலத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. அண்ணா நகரில் கிட்டத்தட்ட 80 சதவிகித நிலம் வன்னியர்களிடம் இருக்கிறது. அங்கும் மூன்று தலித்துகள் நில உரிமையாளர்களாக இருக்கின்றனர். கிட்டத்தட்ட எல்லாத் தலித்துகளும் வீட்டு மனை பட்டா வைத்திருக்கின்றனர். இவை வெறுமனே பொருளாதார மாற்றங்கள் மட்டுமல்ல, சமூக அரசியல் மாற்றங்களும்தான். இதற்கெல்லாம் சேர்த்து தலித்துகள் விலை கொடுக்கவேண்டியிருந்தது.
(தொடரும்)
தலித்துகளின் வாழ்க்கைத் தரம் எங்களுடையதைக் காட்டிலும் உயர்வதை அனுமதிக்கமாட்டோம்.
எத்தகைய மனநிலை இது?
மனிதம் மரணித்துவிட்டது.