கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலத்தையே சங்கக் காலம் என்கிறோம். அக்காலத்தைய மக்களின் மரபு, அறநெறி, பண்பு, மாண்பு, போர், வீரம், காதல், வாழ்க்கை முறை முதலிய அனைத்தையும் சங்கப் பாடல்கள் மூலம் அறியப் பெறலாம்.
உன் சீரிளமைத் திறம் வியந்து வாழ்த்துகிறோம் எனத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் வியந்து வாழ்த்துவதுபோல் தேனினும் இனிய சுவையுடன் என்றும் இளமையாய்த் திகழ்கின்றது சங்க இலக்கியம்.
அத்தகைய சிறப்புமிக்கச் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கும் முற்போக்குச் சிந்தனைகள் குறித்துச் சிந்தித்தபோது என்னுள் எழுந்த முதல் கேள்வி முற்போக்கு என்ற சொல் எப்பொழுது தோன்றியிருக்கும் என்பதுதான்.
எதனால் இக்கேள்வி என்னுள் எழுந்தது?
கம்பராமாயணத்தின் பால காண்டத்தில் நாட்டுப் படலத்தில் கோசல நாட்டின் செல்வச் சிறப்பைக் கூறும்போது, ‘சேவல்கள் குப்பையைக் கிளறும்போது அக்குப்பைமேட்டில் வெளிப்பட்டு ஒளிர்கின்ற மாணிக்க மணிகளைப் பார்த்து, மின்மினிப் பூச்சி எனத் தவறாக எண்ணி, அவற்றை ஒளி தருவதற்காகக் குருவிகள் தம் கூட்டிற்குக் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன’ என்று உரைத்திருப்பார் கம்பர்.
தம்மிடம் அளவுக்கு மீறி மிகுதியாய் இருக்கும் பொருள்களை மக்கள் கீழே கிடந்தாலும் எடுக்க மாட்டார்கள். அவ்வாறு மக்கள் எடுக்காமல் விட்டதினால்தானே குருவிகள் மாணிக்கங்களை மின்மினிப் பூச்சிகள் என்று எண்ணித் தங்களது கூட்டிற்கு எடுத்துச் சென்றிருக்கின்றன?
மாணிக்க மணிகளைக் குப்பைமேட்டில் கண்டும் காணாது செல்லும் அளவிற்கு மக்கள் அனைவரும் செல்வந்தர்களாய் செல்வச் செழிப்புடன் அந்நாட்டில் வாழ்ந்ததாகக் கூறுகிறார் கம்பர். அப்படியான செல்வச் செழிப்பு மிக்க நாட்டின் அகராதியிலும் பயன்பாட்டிலும் வறுமையைக் குறிப்பிடும் சொற்களே இருந்திருக்காது என்றும் கூறலாம்.
அவ்விதமே முற்போக்கு என்ற சொல்லும் சங்கக் காலத்தில் இல்லாமல் இருந்திருக்கும் என்கின்ற எண்ணத்தினால் உண்டான கேள்விதான் முற்போக்கு என்ற சொல்லின் பிறப்பைக் குறித்து என்னைத் தேட வைத்தது.
எவ்வாறு புரட்சி என்ற சொல் பதினைந்தாம் நூற்றாண்டில் காலத்தின் தேவைக்காக உருவானதோ அவ்வாறே முற்போக்கு என்ற சொல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலத்தின் கட்டாயத்தால் உருவானது. சமூக நீதி, சுயமரியாதை மற்றும் பெண் உரிமைக்கு முக்கியத்துவம் அளித்து மூடநம்பிக்கைகளை எதிர்த்து அனைவரையும் சமமாக நடத்தும் நீதியான சமுதாயத்தை உருவாக்கும் தேவை பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவானபோது முற்போக்கு என்ற சொல்லும் உருவாகியிருக்கிறது.
‘சமுதாயத்தில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படும்போது முந்தைய சமுதாயத்தில் முற்போக்காக இருந்த கருத்துகள், மதிப்புகள் முதலியவை பிந்தைய சமுதாயத்தில் பிற்போக்கானவையாக, அதாவது அக்காலத்திற்கு ஒவ்வாதையாக மாறிப்போய் விடும். பிந்தைய சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்திச் செய்யப் புதிய முற்போக்கான கருத்துகள் தேவைப்படும். இவ்வாறு உருவாகும் முற்போக்குக் கருத்துகளும் அந்தச் சமுதாய அமைப்பில் அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படும்போது பிற்போக்கானவையாகி விடும். எனவே, முற்போக்கான கருத்து என்பது காலத்துக்குக் காலம் மாறுபடும்’ என்கிறார் தொ.மு.சி.ரகுநாதன். 1990இல் ‘அரை நூற்றாண்டு வரலாறு’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையில், சமுதாய நிலைமைக்கும், வரலாற்றுப் போக்குக்கும், மனித சிந்தனையின் வளர்ச்சிக்கும் ஏற்பவே முற்போக்குக் கருத்து அல்லது பிற்போக்குக் கருத்து என்பதற்குப் பொருள் கொள்ள வேண்டும் என்கிறார்.
இக்கூற்றுடன் சங்கக்காலத்தை ஆராயும்போது, அக்காலத்திற்குரிய சமுதாயச் சூழலுக்கேற்ற முற்போக்குச் சிந்தனையுடனும் கொள்கையுடனும்தான் மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் எனத் தெரிகின்றது.
அப்படியாக, சங்க காலத்தின் சமுதாய நிலைமைக்கும் வரலாற்றுப் போக்குக்கும் ஏற்ப சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் முற்போக்கான சிந்தனைகள் குறித்தும், அவை இக்காலத்துக்கும் எவ்வாறு பொருந்தியிருக்கின்றன என்பதைக் குறித்தும் இத்தொடரில் நாம் தொடர்ந்து காணப்போகிறோம்.
மேலே கம்பராமாயணம் வாயிலாக நான் விளக்கியிருந்த கோசல நாட்டின் செல்வச் செழிப்பை, ‘சூட்டுடைத் துணை தூநிற வாரணம்’ எனத் தொடங்கும் பாடலின் மூலம் உரைத்திருப்பார் கம்பர். இப்பாடலின் முதல் வரியினில் இடம் பெற்றிருக்கும் வாரணம் என்ற சொல்லுக்குப் பொருள் தெரிகிறதா?
‘வாரணமாயிரம் சூழ வலம்செய்து’ என்கின்ற கோதைப் பாடல் மூலமாகவும், திரைப்படத்தின் தலைப்பாய் இச்சொல் அமைந்ததின் மூலமாகவும் பெரும்பாலானோருக்கு வாரணம் என்றால் யானை என்று தெரிந்திருக்கும்.
ஆனால் வாரணம் என்ற சொல்லுக்கு, வேறு சில பொருள்களும் இருப்பதை இப்பாடலின் மூலம் அறியப் பெறுகிறோம். யானையைக் குறிக்கும் வாரணம் என்ற சொல் இங்கே சேவலைக் குறிக்கும் சொல்லாய்ப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
சூட்டுடைத் துணை தூ நிற வாரணம்
தாள்-துணைக் குடைய, தகை சால் மணி
மேட்டு இமைப்பன; ‘மின்மினி ஆம்’ எனக்
கூட்டின் உய்க்கும், குரீஇயின் குழாம்அரோ
பொருள்:
சூட்டு உடை – உச்சிக் கொண்டை உடையதும்
துணை – துணையானதுமான;
தூநிற வாரணம் – தூய நிறத்தையுடைய சேவல்கள்;
தாள் துணைக்குடைய – தம் கால்களால் குப்பைகளைக் குடைவதால்;
தகை சால் மணி – தகுதி மிக்க மாணிக்கங்கள்;
மேட்டு இமைப்பன – அந்தக் குப்பை மேடுகளில் ஒளிரும்;
குரீஇயின் குழாம் – குருவிக்கூட்டம்;
‘மின்மினி ஆம்’ என – அந்த மணிகளை மின்மினிப்பூச்சிகள் என்று நினைத்து;
கூட்டின் உய்க்கும் – தம் கூடுகளில் கொண்டு போய் வைக்கும்.
நமது தமிழ் அகராதியில் வாரணம் என்ற சொல்லுக்கு சங்கு, யானை, பன்றி, தடை, மறைப்பு, கவசம், சட்டை, காப்பு, கேடகம், உன்மத்தம், தோழி, உறையூர், கடல், காசி நகரம், மரவகை, நீங்குகை எனப் பல பொருள்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
வரும் நாள்களில் சங்கப் பாடல்களின் வாயிலாகப் பல புதிய தமிழ்ச்சொற்களை அறிந்துகொள்வதோடு இல்லாமல் அன்றைய சமுதாய நிலைமையில் இடம்பெற்றிருந்த முற்போக்கான சிந்தனைகளைக் குறித்தும் பார்க்கலாம்.
(தொடரும்)

