Skip to content
Home » சரித்திரம் படைத்த சாமானியர்கள் #2 – ஜாதவ் பயேங்க்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #2 – ஜாதவ் பயேங்க்

2008ஆம் ஆண்டு, அசாம் மாநிலத்தின் மஜீலி தீவு. ஓர் அறுவடை நாளில் யானைகளின் இடம்பெயர்வைக் கண்காணிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் குழு ஒன்று, 115 யானைகள் அடங்கிய யானைக் கூட்டத்தைப் பின்தொடர்ந்து சென்றது. இந்தியாவின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றான பிரம்மபுத்திரா நதியின் மையத்தில் அமைந்துள்ள மஜீலி தீவில், 550 ஹெக்டேர், அதாவது சுமார் 1360 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த காட்டுக்குள் யானைகள் புகுந்தன.

யானைகளைப் பின்தொடர்ந்து வந்தவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம். ஏனென்றால் சில வருடங்களுக்கு முன் அந்த வனப்பகுதி வெறும் மணல்மேடாக மட்டுமே இருந்தது. இன்று அரசாங்கத்தின் பதிவேட்டிலேயே பதிவாகாத இவ்வளவு பெரிய காடாக உருவாகியுள்ளதைக் கண்டு அதிகாரிகள் வியந்தனர்.

அந்தக் காட்டை ஆய்வு செய்வதற்காகச் சுற்றுச்சூழல் ஆர்வலரும் புகைப்படக் கலைஞருமான ஜிட்டு கலிட்டா சென்றார். அகன்று விரிந்த வனாந்தரத்தையும், ஓங்கி உயர்ந்த மரங்களையும், அங்கு வந்த பறவைகளையும் கண்டு மெய் சிலிர்த்து நின்றார் ஜிட்டு கலிட்டா.

அப்போது ஜிட்டு கலிட்டாவை வேட்டையாட வந்தவர் என்று நினைத்த அந்த மனிதர், அவரைத் தாக்க வந்தார். தான் யார் என்று தெரிவித்த பின்னரே அவர் அமைதி ஆனார். தாக்க வந்த மனிதனை யார் என்ற விசாரித்தபோதுதான் ஜிட்டுவிற்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அந்த மனிதன்தான் அந்தக் காட்டை உருவாக்கியவர். ஆம், அந்தக் காடு ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்டது.

‘இந்தியாவின் வன மனிதன்’ என்று டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களால் அழைக்கப்பட்ட அந்தத் தனி மனிதனின் பெயர் ஜாதவ் பயேங்க் (Jadav Payeng).

0

அக்டோபர் 31, 1959இல் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட் என்னும் கிராமத்தில், மிஸ்ஸிங் என்ற பழங்குடியினத்தில் பிறந்த ஜாதவ் பயேங்கின் வாழ்க்கைப் பயணம், 1979இல் ஏற்பட்ட ஒரு பெரு வெள்ளத்தில் தொடங்கியது. அந்த ஆண்டு பெய்த பெருமழையால் பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம் அங்குள்ள நிலத்தை அரித்து தரிசான மணல் மேட்டை உருவாக்கியது. ஒரு காலத்தில் காடுகள் நிறைந்த நிலப்பரப்பாக இருந்த அந்தப் பகுதி அடிக்கடி ஏற்படும் மண் அரிப்பினால் தரிசு நிலமாக மாறி இருந்தது. அதன்பின் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக எண்ணற்ற பாம்புகளும் பிற விலங்குகளும் இறப்பதைக் கண்ட ஜாதவ், மிகவும் மனம் வருந்தினார். இதற்கான காரணத்தை ஆராய்ந்த ஜாதவ், மண் அரிப்பும், வறட்சியினால் ஏற்படும் கடும் வெயிலே இதற்குக் காரணம் என்பதைத் தெரிந்துகொண்டார். இதற்கு ஒரே தீர்வு மரங்களை நடுவதுதான் என்று முடிவு செய்து, இழந்த காட்டை மீட்டெடுக்கத் தீர்மானித்தார்.

1980ஆம் ஆண்டு வனத்துறையினர் கோகிலாமுக் பகுதியில் சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவு உள்ள மணல் திட்டில் ‘சமூகக் காடு வளர்ப்பு’ எனும் திட்டத்தின் கீழ் உள்ளூர் மக்களை இணைத்து மரக்கன்றுகளை நடும் திட்டத்தைத் தொடங்கினர். அதில் ஜாதவ் பயேங்க் தன்னை இணைத்துக் கொண்டார். இந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. அரசாங்கமும் உள்ளூர் மக்களும் அந்த இடத்தையே மறந்துவிட்டனர். ஆனால் ஜாதவ் பயேங்க் பின்வாங்கவில்லை. அங்கேயே தங்கி மரக்கன்றுகளை நடும் வேலையைத் தொடங்கினார்.

ஒருநாள், இது குறித்து ஜாதவ் அவரது பழங்குடி இன மூத்த தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ‘மனிதனின் பேராசைதான் இந்த அழிவுக்குக் காரணம். மனிதன் தன் தேவைக்காக இயற்கையின் சமன்பாட்டைக் குலைக்கிறான். பாவம் அவனுக்குப் புரியவில்லை; இதனால் அழியப் போவது மனிதனும்தான் என்று. இதைச் சரி செய்ய வேண்டுமென்றால் இறைவன் நம்மிடம் கொடுத்ததை மீட்டெடுத்து உருவாக்கு என்று கூறி அவர்களே 25 மூங்கில் மரக்கன்றுகளையும் அவரிடம் கொடுத்து நடச் சொன்னார்கள்.

உடனே அந்தத் தரிசு நிலத்தில் 2 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழம் உள்ள ஒரு குழியைத் தோண்டி அதில் சிறிது மாட்டுச் சானத்தை இட்டு மூங்கில் மரக்கன்றுகளை நட்டார். அந்த மூங்கில் மரங்கள்தான் பின்பு அவ்வளவு பெரிய காடாக உருவாகியது. பிற மரங்களையும் அந்த நிலத்தில் நட்டார். ஆனால் மூங்கில் மரங்களைப்போல் அந்த மரங்கள் வளரவில்லை. காரணம், மூங்கில் மரங்கள் வெப்பமண்டலப் பிரதேசங்களுக்கு ஏற்றது. குறைந்த வளமுள்ள மண்ணிலும் வளரக்கூடியது. ஆனால் பிற மரங்கள் அப்படி இல்லை. அப்போதுதான் ஜாதவ் ஓர் இயற்கை விஞ்ஞானியாக மாறினார்.

எண்ணற்ற சிவப்பு எறும்புகளை அந்த மணல் திட்டில் விட்டார். சிவப்பு எறும்புகள் சிறிய உயிரினங்களாக இருந்தாலும் மண்ணின் தரத்தை உயர்த்துவதில் மிகப் பெரிய பங்காற்றுகின்றன. எறும்புகள் மண்ணுக்குள் துளைகள் போடுவதால் மண்ணில் காற்று நுழைவது எளிதாகிறது. இது வேரின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எறும்புகள் சேமித்து வைக்கும் இலைகள் பூச்சிகள் போன்றவை அழுகி மண்ணுக்கு உரமாக மாறுகிறது. எறும்புகள் இருக்கும் இடங்களில் நுண்ணுயிர்கள் அதிகரிக்கும் இது மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவ்வாறு சில ஆண்டுகளில் அந்த மண் பண்பட்டு தாவரங்களும் பிற உயிர்களும் வாழ்வதற்கேற்ற காடாக உருவாகியது.

சில ஆண்டுகள் கழித்து யானைகள் அந்தக் காட்டை நோக்கி வரத் தொடங்கியது ஜாதவை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. காரணம் ஊருக்குள் வந்த யானைகள் தங்கள் பயிரை அழித்து விட்டதாக ஊர் மக்கள் மிகப்பெரிய கலவரத்தை உண்டு பண்ணி காட்டை அழிக்க முற்பட்டனர். சொல்லப்போனால் ஜாதவின் நிலமும் பயிரும்கூட யானைகளால் சேதப்பட்டது. ஆனால் அவர் அதற்காக வருந்தவில்லை. மாறாக, தான் உருவாக்கிய காடு யானைகளை ஈர்த்ததை எண்ணி மகிழ்ச்சிதான் அடைந்தார். மரத்தை வெட்ட வந்தவர்களை நோக்கி மரத்தை வெட்டுவதற்கு முன்பு என்னை வெட்டுங்கள் என்று ஜாதவ் பயேங்க் போராடினார். பின் அரசாங்கத்தின் தலையீட்டாலும், சேதமான பயிர்களுக்கு அரசாங்கம் வழங்கிய இழப்பீட்டாலும் அந்தப் பிரச்னை கைவிடப்பட்டது. அதன்பின் ஜாதவ் பயேங்கின் 30 ஆண்டுகாலத் தொடர் உழைப்பால் இப்போது அந்த இடம் மிகப்பெரிய காடாக உருவாகியுள்ளது.

இப்போது அந்தக் காட்டில் சந்தனம், தேக்கு, கருங்காலி போன்ற மரங்களும், மூங்கில் காடுகளும், யானை, புலி, மான், முயல் போன்ற விலங்குகளும், பறவைகளும் உள்ளன. அழியும் நிலையிலிருந்த வல்லூறுகளுக்கும் இந்தக் காடு சரணாலயமாகவுள்ளது. இந்தக் காட்டை ஊர் மக்கள் ‘மொலாய் காடுகள்’ என்று அழைக்கிறார்கள். மொலாய் என்பது ஜாதவ் பயேங்கின் செல்லப் பெயர்.

தனிமரம் தோப்பாகாது என்பது பழமொழி. ஆனால் இங்கு ஒரு தனி மனிதன் ஒரு காட்டையே உருவாக்கி இருக்கிறார். உலகிலேயே தனி மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் காடு இதுதான். நியூயார்க்கில் புகழ்பெற்ற சென்ட்ரல் பார்க்கைவிட இந்தக் காடு பெரியது. அதுவரை வெளியுலகத்திற்குத் தெரியாத ஜாதவ் பயேங்கும், அவரது காடும், ஜிட்டு கலிட்டா எடுத்த ஆவணப்படத்திற்குப் பின்பு வெளி உலகத்திற்குத் தெரியவந்தது. ஏப்ரல் 22, 2012 டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், உலகப் பூமி தினத்தை முன்னிட்டு ‘தி மொலாய் ஃபாரஸ்ட்’ என்ற அந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதன்பின் ஜாதவ் பயேங்கின் வாழ்க்கையை மையப்படுத்தி 2013ஆம் ஆண்டு ‘ஃபாரஸ்டிங் லைஃப்’ எனும் ஆவணப்படத்தை ஆர்த்தி ஸ்ரீ வத்சவா என்பவர் இயக்கி வெளியிட்டார். பின்பு கனடா நாட்டைச் சேர்ந்த வில்லியம் டக்லெஸ் மெக்மாஸ்டரராஸ்  என்பவர், ‘ஃபாரஸ்ட் மேன்’ எனும் ஆவணப்படத்தை வெளியிட்டார். இது 2014ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்றது.

12க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற ஜாதவ் பயேங்கிற்கு, 2015ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவின் பிரிஸ்டோல் பள்ளியின் பாடத்திட்டத்தில் இவரது வாழ்க்கை வரலாறு பாடமாக இணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளத்தில், மஜீலி தீவைச் சேர்ப்பதற்காக ஜாதவ் பயேங்க் பலமுறை முயற்சி செய்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

மஜீலி தீவைக் காப்பதற்குப் பல்வேறு யோசனைகளைப் பல்வேறு அமைப்புகளிடம் முன் வைத்தார். ஆனால் எதுவும் அங்கீகரிக்கப்படவில்லை. மஜீலி தீவில் தென்னந்தோப்பு அமைத்தால் மண் அரிப்பைத் தடுக்கமுடியும். அதே சமயம், லாபகரமான தொழிலாகவும் இருக்கும் என்று தொடர்ந்து வேளாண் அமைச்சகத்தை வலியுறுத்தி வரும் ஜாதவ், பள்ளிகளில் சுற்றுச்சூழலியலைக் கட்டாயப் பாடமாக்கவும் வற்புறுத்தி வருகிறார்.

இப்போதும் ஜாதவ் அந்தத் தீவில் ஒரு சிறு குடிசையில் தன் குடும்பத்தோடும், தன் கால்நடைகளோடும் வசித்து வருகிறார். தினமும் காலை அலுவலகத்திற்குச் செல்வதுபோல் உணவைக் கட்டிக் கொண்டு காடுகளைப் பாதுகாப்பதற்கும் பராமரிக்கவும் சென்றுகொண்டிருக்கிறார். தனக்குச் சொந்தமான சுமார் 50 பசு மாடுகளும், எருமை மாடுகளும் அந்தக் காட்டிலேயே மேய்கின்றன. அவரது மனைவி பினிதா அவற்றிலிருந்து பால் உற்பத்தி செய்து அதில் கலப்படம் செய்யாமல் அருகில் உள்ள ஜோர்ஹட் கிராமத்திற்கு விற்றுவருகிறார்.

ஜாதவ் பயேங்க் சொல்கிறார், ‘இந்தக் காட்டிற்கு முதல் மற்றும் முழு எதிரி மனிதன்தான். இங்கு காடு வந்தால் வனவிலங்குகள் வரும். அது நமக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று எண்ணிய ஊர் மக்கள், பலமுறை இந்தக் காட்டை அழிக்க முயற்சித்தனர். ஆனால் இந்த மஜீலி தீவும் ஜோர்ஹட் கிராமமும் முழுவதும் காடாக மாறும் வரை என் முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.’

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *