Skip to content
Home » சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #1 – உறைந்த கணங்கள் இரண்டு

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #1 – உறைந்த கணங்கள் இரண்டு

‘All my life’ என்று அந்த உதடுகள் உச்சரித்த கணத்தில், கம்பீரத்திலும் ஆணித்தரமாகவும் எப்போதும் ஒலிக்கின்ற அந்தக் குரல் தடுமாறி நின்றது; கலங்கியது; கரகரப்பானது. சில கணங்கள்; சில கணங்கள்கூட இல்லை, பல கணங்கள். அவர் கண்கள் கலங்கியதையும், குரல் தழுதழுத்ததையும் சுற்றியிருந்தவர்கள் பெரு வியப்புடன் பார்த்தார்கள்.

ஆகஸ்ட் 9, 1965.

தனது தேசத்தின் மக்களுக்காகத் தலைவர் என்ற முறையில் அவர் ஆற்றிய முதல் உரை அது. ஆனால் அது, தேச மக்களுக்குத் தான் விரும்பாத ஒன்று நடந்துவிட்டதையும், அந்தத் தேசத்தையும் மக்களையும் எவ்வாறு இனிமேல் வழிநடத்துவது என்ற ஆழ்ந்த சிந்தனையையும், அந்தக் கணத்தின் வலியையும், ஏமாற்றப்பட்ட அல்லது எதிர்பாராதது நடந்துவிட்ட சோகத்தையும், தன் தோளில் சுமந்திருக்கின்ற பொறுப்பின் பாரம், எதிர்காலம் பற்றிய பதற்றத்தையும் வெளிப்படுத்தியது. இவை அனைத்தும் இணைந்த கணம், அந்தக் கணம்தான் அவரை வாழ்க்கையில் முதன்முதலில் உடைய வைத்திருக்க வேண்டும்.

சுற்றிலும் ஒலியொளிப்பதிவுக் கருவிகள் இயங்கிக் கொண்டிருக்கும் ‘விர்ர்’ என்ற ஒலியைத் தவிர சில கணங்களுக்கு வேறு ஒலிகளேயில்லாத அமைதி. கலங்கிய கண்களை ஒரு துடைப்புத் துணியை வைத்துத் துடைத்துக்கொண்டு மேலும் பேச முற்பட்டார். இன்னும் வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. சொற்களில் தடுமாற்றம். In all my adult life என்று மூன்று நான்கு முறை அந்தச் சொற்களைக் கூறினார்; தனது வலிமையான நம்பிக்கை பொய்த்துப் போனதன் வலி அது. நடந்ததை நம்பவே இயலாததன் மறுதலிப்பில் தலை இரு மருங்கிலும் அசைந்தது.

இரண்டு மூன்று பத்திகளில் இதனைப் பற்றி நாம் இங்கே விவரித்தாலும், அதிகப்படியாகச் சுமார் பதினைந்து நொடிகள்தான் இந்த அல்லாட்டத்தி்ன் காலம்.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பவும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். தன் நாடு ஒரு மாநிலமாக அண்டை நாட்டுடன் இணைந்திருக்கப் போகிறது; அருகருகே இருந்து நாம் வளரப் போகிறோம்; சிறக்கப் போகிறோம் என்ற நம்பிக்கை சிதைந்ததன் வலி அது. எல்லாம் சில கணங்கள்தான். குரலில் எப்போதும் துலங்கும் உறுதியும் தீர்மானமும் கம்பீரமாகத் திரும்பின. சொல்லப் போனால் அவர் ஊடகங்களின் முன்னிலையில் உடைந்த முதலும் கடைசியுமான கணம் அது. பின்னர் 70 ஆண்டுகளுக்குத் தொடரப் போகும் அந்த நாட்டின் வளர்ச்சியின் பேருரு, அந்தக் குரலில் திரும்பவும் மீண்டு விட்ட உறுதிக்குள் வந்து உட்கார்ந்து கொண்டது. அந்த உறுதி 2013-ம் ஆண்டு மார்ச் 14-ம் நாள் வரை அந்த மனிதனுக்குள் பிரம்மாண்டமாய் வளர்ந்து நின்ற உறுதியின் பேருரு. அந்தப் பேருரு சாதித்த செயல்களை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்தால் எந்த ஒரு மனிதருக்கும் மூச்சடைத்துப் போகும்.

பன்றிகள் மேயும், மீன்பிடிக்கும் தொழில் மட்டுமே நடந்து கொண்டிருந்த, 250 சதுர மைல்களுக்குள் அடங்கியிருந்த ஒரு சின்னஞ்சிறு நிலப்பரப்பான சிங்கப்பூர் என்ற நகர நாட்டை, ஐம்பதே ஆண்டுகளுக்குள் தென்கிழக்காசியாவின் உயர் வளர்ச்சி நிறைந்த நாடாக மாற்றிக் காட்டிய ஒரு சாதனை நாயகனுக்குள் இருந்த பேருரு அது.

அந்த மனிதரின் பெயர் லீ க்வான் யூ. அவரது முறைகள் முன்னெப்போதும் கேள்விப்பட்டிருக்காதவை. இந்தச் சாதனையைத் தனி ஒரு மனிதராக, தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகர்கள்போலச் செய்து காட்டி விட்டார் என்று சொல்லவருவது இந்தத் தொடரின் நோக்கமல்ல. தினப்படித் திட்டமாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமும் தனது திட்டங்களைச் சீராய்ந்து, கவனித்து, செயல்படுத்தி, மாற்றங்கள் தேவைப்பட்ட இடத்தில் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, தோற்றுவிட்ட இடங்களை மனதில் இருத்திக் கொண்டு, தோல்விகளை ஏற்றுக் கொண்டு மேற்சென்று, ஆனால் எப்போதும் தனது குறிக்கோளில் எந்த இடத்திலும் வழுவாது மேற்கண்ட ஒரு தவவாழ்வுபோல ஒரு நாட்டின் தலைமைத்துவத்தைத் தமது கடமையாகச் செய்தார். இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை இந்தத் தொடர் கட்டுரை நெடுகிலும் நாம் உணர்ந்து அறிந்துகொள்ளப் போகிறோம்.

நவீன சிங்கப்பூரின் கட்டுமானத்தில் லீ க்வான் யூவின் பங்கு பெரும்பங்கு. எனவே இந்தக் கதை நவீன சிங்கப்பூரின் கதையாக இருக்கின்ற அதே நேரத்தில், புள்ளிகளை இணைத்தால் லீ க்வான் யூவின் கதையாகவும் தோன்றக் கூடும். ஏனெனில் இரண்டையும் முற்றும் முதலாகப் பிரித்துப் பார்த்துவிட இயலாது என்பதுதான் இரண்டுக்குள்ளும் இருக்கும் அந்தச் சிறப்புத் தொடர்பு. அந்தத் தொடர்பு ஏற்பட்டதும் காலம் தீர்மானித்த செயல்தான். இல்லாவிடில் லண்டன் மாநகருக்குச் சென்று பாரிஸ்டர் என்ற வழக்குரைஞர் படிப்பைத் தங்கப்பதக்கத்துடன் முடித்த ஓர் இளைஞனுக்குள், நாடு, சமூகம் தொடர்பான மாபெரும் கனவுகள் முளைவிட்டிருக்காது.

நமது குடும்பம், நமது வசதி, நமது சம்பாத்தியம் என்று அந்த இளைஞன் மாபெரும் பொது மக்கள் கூட்டத்தின் ஒரு சாதாரணப் பணக்காரத் துளியாகக் கரைந்து மறைந்திருக்கக் கூடும். ஆனால் காலம் அந்த மனிதனுக்கு வேறு நோக்கங்களை வைத்திருந்தது. தென்கிழக்காசியாவின் ஒரு மாபெரும் மனிதனாக, தலைவனாக அந்த இளைஞனை நிலைநிறுத்திவிடும் நியதி காலத்துக்கு இருந்தது. அதற்கேற்ற சிந்தனைத் துளிகள் அந்த இளைஞனுக்குள் விளைந்தன. அவை வளர்ந்து உறுதி பெறத் தொடங்குவதற்குள்ளாகவே பல சவால்களைச் சந்திக்க நேர்ந்தது. ஆகஸ்ட் 9, 1965-ல்

நேர்ந்த பிரிவினை அறிவிப்பு, அந்தச் சிந்தனைத் துளிகளுக்கு நேர்ந்த மாபெரும் சவாலாக, அப்போது தோன்றியது. ஆனால் அந்தச் சிந்தனையின் உறுதி பேருருவாக வளர்ந்த அந்தக் கணத்தில், அந்த இளைஞனுக்கு இந்தப் பிரிவினையைப் போன்ற பல மடங்கு பிரமாண்டமான பல சவால்களைப் பிற்காலத்தில் பார்க்கப் போகிறோம் என்பதோ, அவற்றைக் காற்றை ஊதித் தள்ளுவதுபோலத் தனது உறுதியின் பேருரு ஊதித் தள்ளப் போகிறது என்பதோ உறுதியாகத் தெரிந்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக இருந்தது.

அது, அந்த உறுதியின் பேருரு பின்னெப்போதும், எதிலும் பின்வாங்கப் போவதில்லை என்பது!

நவீன சிங்கப்பூரின் வரலாற்றின் உறை கணங்களில் ஒன்று, கலங்கி நின்ற அந்தக் கணத்திலிருந்து லீ க்வான் யூ மீண்டெழுந்த அந்த உறுதிப் பேருரு வெளிப்பட்ட கணம்!

0

18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, 19-ம் நூற்றாண்டு, 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைப் பிரிட்டனும் நெதர்லாந்தும் (டச்சு) காலனியாகப் பிடித்து வைத்திருந்தன என்பது வரலாறு. தொடக்கத்தில் தமது வியாபாரத்துக்காகத்தான் இந்த நாடுகளின் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் ஆசியப் பகுதிகளுக்குள் நுழைந்தன. அவ்வாறு நுழைந்தவர்களுக்கு ஒரு மாபெரும் நிலப்பகுதியாக மாட்டியது இன்றைய இந்தியா, அன்றைக்கு இருந்த பல நாடுகளின் (56 தேசங்களின்) கூட்டமைப்பு. வசமாக அவர்கள் இன்றைய கொல்கத்தாவில் 18-ம் நூற்றாண்டில் காலூன்றினார்கள்.

கிழக்கிந்தியக் கம்பெனி, தனது இந்திய, சீன, தென் கிழக்காசியப் பகுதிகளின் வியாபார நோக்கங்களுக்காக பினாங்குப் பிரதேசத்தை இன்றைய மலேசியாவின் கெடா பகுதியின் சுல்தானாக இருந்த கெடா சுல்தானிடமிருந்து 1786-ல் வாங்கியது. கூடவே சுமத்ரா பகுதிகளையும் பிடித்தது. போலவே டச்சுக்காரர்களும் தென்கிழக்காசிய, இந்தியப் பிரதேசங்களில் தத்தமக்கு அகப்பட்ட பிரதேசங்களை விலை கொடுத்தோ, ஆக்கிரமித்தோ, நயந்தோ கைப்பற்றித் தனது வியாபாரக் கேந்திரங்களை ஆங்காங்கே முக்கியமான இடங்களில் நிறுவினர். அவ்வாறுதான் அவர்கள் மலாக்கா பிரதேசத்தை வாங்கியதும். பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனிக்கு மலாக்கவின் மேலும் ஒரு கண் இருந்தது. இந்தோனேசியா, சுமத்ரா பகுதியைவிட மலேசிய மலாக்கா பகுதியின் கேந்திர முக்கியத்துவம் கண்ணிலடித்தது. ஆனால் முதலில் அப்பகுதியில் காலூன்ற வேண்டும், என்ன செய்யலாம்?

கொல்கத்தாவில் இருந்த தலைமையகத்திலிருந்து ஒரு மனிதரைத் தேர்ந்தெடுத்து வட்டாரத்தைச் சுற்றி அலசிப் பார்த்து வரும்படி அனுப்பியது கிழக்கிந்திய கம்பெனி. கம்பெனி தேர்ந்தெடுத்த நபர் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் (Sir Stamford Raffles). 1781-ல் சமைக்கா தீவுகளின் துறைமுகத்தில் பிரித்தானியக் கப்பற்படை வீரருக்கு மகனாகப் பிறந்த ராஃபில்ஸ் இந்தச் சம்பவங்கள் நடந்த 1800களின் முற்பகுதியில் கம்பெனியின் ஆளுநர் பதவியில் இருந்தார். 1819-ம் ஆண்டு பிப்ரவரி வாக்கில் மலாக்கா நீரிணைப் பகுதியில் சுற்றி வந்த ராஃபில்ஸ், சிங்கப்பூர் பகுதியைக் கண்டு பிடித்து அந்தப் பிரதேசம் எவர் பொறுப்பில் இருக்கிறது என்று விசாரித்தார். அன்றைய யோகர் (Johar) சுல்தானாகிய உசைன் சா’வின் ஆளுமைக்குள் இருந்த சிங்கப்பூர் பகுதியை வருடத்திற்கு ஐயாயிரம் வெள்ளி குத்தகைப் பணத்துக்கு கம்பெனிக்காக வாங்கினார். அந்த ஆண்டு 1819.

மலாக்கா நீரிணைப் பகுதியில் சிறு பகுதியான சிங்கப்பூரில் காலூன்றியாகிவிட்டது; பினாங்கு இன்னொரு மூலையில் இருக்கிறது; எனவே மலாக்காவையும் கைக்கொள்ள இதுவே நேரம். டச்சுக்காரர்களிடம் பேசிப் பார்த்தார்கள் பிரித்தானியர். ‘மலாக்காதானே, எங்களுக்கு வேறொரு பகுதியை அப்பிரதேசத்தில் தந்தால் அது பற்றி யோசிக்கிறோம்’ என்றது அம்மாஞ்சி டச்சு. இந்தா பிடி என்று, கம்பெனி 1824-ல் சூட்டோடு சூடாக இரண்டு ஒப்பத்தங்களைச் செய்தது. ஒன்று இந்தோனேசிய சுமத்ரா பகுதிகளை டச்சுக்காரர்களிடம் தள்ளிவிட்டு, மலாக்காவைப் பண்டமாற்றில் வாங்கியது. இன்னொன்று, குத்தகை ஒப்பந்தத்தில் இருந்த சிங்கப்பூரை முற்றுமுழுதாக கைப்பற்றியது. யோகர் சுல்தானிடம் மேலும் பணத்தை அளித்து 1824-ல் முழுதாகச் சிங்கப்பூரை வாங்கினார்கள்.

இப்போது வட்டம் முழுமையடைந்து விட்டது. வட்டாரத்தின் ஒரு முனையான பினாங்கு, கிட்டத்தட்ட மத்தியப் பகுதியான மலாக்கா, இன்னொரு முனையான சிங்கப்பூர்! மலாக்கா நீரிணையில் பிரித்தானியாவின் விரிந்த குடியேற்றப் பகுதி இவ்வாறு திறமாக உருவானது.

இதற்கெல்லாம் தொடக்கப் புள்ளியை மறந்துவிடக்கூடாது. சிங்கப்பூர்!

ராஃபில்ஸ் எவ்வாறு சிங்கப்பூரின் கேந்திர முக்கியத்துவத்தை ஏறத்தாழ இருநூறாண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்தார் என்பது அத்தனை வியப்பானது. பிரித்தானியக் கேந்திரக் குடியேற்றமாக மாறிய சிங்கப்பூர் அதன் பிறகு ஏற்றம், ஏற்றத்தின் மீதான ஏற்றம் என்றுதான் வரலாற்றில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தனது 45 வயதில் எதிர்பாராமல் இறந்துபோன ராஃபில்ஸின் சாதனையாக, வரலாற்றின் சருகுகளிலிருந்து சிங்கப்பூரை நவீனத்துக்குள் தள்ளிவிட்ட இந்தக் கொள்முதலை எளிதில் கருதலாம்.

அந்த 1819-ம் ஆண்டின் பிப்ரவரி 6-ம் நாள்தான் சிங்கப்பூரின் இன்னொரு வரலாற்றுக் கணம்![2]

0

இந்த இரண்டு உறைந்த கணங்களிலிருந்து கிளைத்துப் புறப்படுகிறது சிங்கப்பூர். அது வரலாற்றின் நிழலிருந்து நவீனத்துக்குள் நுழைந்ததும், பின்னர் நவீன சிங்கப்பூரின் வரலாறாகப் பரிமளித்ததும் அவ்வாறுதான். அந்த மலர்வைச் சிறிது சிறிதாக நாமும் அறிவோம்.

(தொடரும்)

__________

(1) இந்த யூட்யூப் இணைப்பில் வாசகர்கள் அந்த உறைந்த கணத்தை மீளுருவாக்கிப் பார்க்கலாம். https://youtu.be/UET6V4YnAwc?feature=shared&t=55

(2) சிங்கை நூலக வாரியத்தின் Straits Settlements பற்றிய ஆதாரக் குறிப்புகளில் இருந்து. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=b0d91ecc-3de3-4e79-a132-b2d0d886bb98

பகிர:
முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டியில் பிறந்தவர்; தகுதியால் பட்டயக் கணக்கரான இவர் மென்பொருள் புலத்தில் நிதித்துறை ஆலோசகராக சிங்கப்பூரில் பணி செய்கிறார். தமிழ்மொழி, இலக்கியம், எழுத்து இவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இவர், இணையம் மற்றும் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது இரு நூல்கள் வெளி வந்துள்ளன. தொடர்புக்கு asnarivu@gmail.com.View Author posts

1 thought on “சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #1 – உறைந்த கணங்கள் இரண்டு”

  1. சிங்கப்பூர் தொடர் முதல் அத்தியாயமே மிகச் சிறப்பாக இருக்கிறது! அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என காத்திருக்கிறோம்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *