Skip to content
Home » சிவ தாண்டவம் #1 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 1

சிவ தாண்டவம் #1 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 1

சிவ தாண்டவம்

ஒவ்வொரு மனித இனமும் உலக நாகரிகத்துக்குத் தனது சுய வெளிப்பாடு மற்றும் சுய தரிசனத்தின் மூலம் ஏதேனும் முக்கியமான பங்களிப்பை ஆற்றியிருக்கும். தனது பிரச்னைகளுக்குத் தானாகத் தீர்வுகளைக் கண்டடைந்ததன் மூலம் ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு பண்பு நலன் உருவாகியிருக்கும். அதுவும் தனது துர் பாக்கியங்கள் மூலம் பெற்ற அனுபவங்களும் கூட உலகுக்கு அந்த இனம் அளிக்கும் கொடையாகவே இருக்கும். அந்த வகையில் நம் இந்தியாவின் கொடை என்பது அதன் இந்தியத் தன்மையே. தனது ஸ்வபாவத்துக்குப் பதிலாக பல நாடுகளில் இருந்து பெற்றவற்றைக் கலந்துகட்டி எதையேனும் முன்வைக்க முயன்றால் அதுவே மிகப் பெரிய அவமானமாக ஆகும். ஏனென்றால் அப்படி முடிவெடுத்தால் அது வெறுங்கையுடன்தான் உலகின் முன் வந்து நிற்க வேண்டியிருக்கும்.

உலகுக்கு இந்தியாவின் இப்படியான மகத்துவமான பங்களிப்பு என்ன என்று பார்ப்பதற்கு முன்பாக எந்தவொரு மனித இனத்துக்கும் அதற்கென்றே உரிய, முழுவதும் தனித்தன்மை வாய்ந்த அம்சம் எதுவும் இருக்கமுடியாது என்பதைப் புரிந்துகொண்டாகவேண்டும். ஓர் இனத்தின் தனித்தன்மை என்பது நாமாகத் தேர்ந்தெடுப்பதாகவும் அழுத்தம் தருவதாகவும் இருக்குமே அல்லாமல், அந்த இனத்துக்கு மட்டுமே இருக்கும் விசேஷ மனித குணமாகவெல்லாம் இருக்காது. உலகம் என்பதை நாடுகளை அங்கத்தினராகக் கொண்ட ஒரு குடும்பம் என்று எடுத்துக்கொண்டாலே, அதில் இந்தியாவின் இடம் என்பதை நன்கு புரிந்துகொள்ளமுடியும். புதிய நாடுகள் / இனங்கள் சந்தித்திருக்காத பல பிரச்னைகளை இந்தியா தீர்த்துவைத்திருக்கிறது; அவை பெற்றிருக்காத பல அனுபவங்களை அது பெற்றிருக்கிறது.

உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் உள்ளொளியே இந்திய அனுபவங்களின் ஆன்மாவாகவும் சாராம்சமாகவும் திகழ்கிறது. உலகம் முழுவதுமான இந்த ஒருமையை அங்கீகரித்து ஏற்பதுதான் மிகவும் உன்னதமான விஷயம். அதுவே விடுதலை. இதுதான் இந்திய சிந்தனையின் உள்ளார்ந்த மற்றும் பிரிக்க முடியாத நம்பிக்கை. உலகுக்கு இந்தியா அளிக்கும் கொடைகள் எல்லாமே அதன் தத்துவ மரபில் இருந்தே முளைத்து வருகின்றன. இந்தத் தத்துவம் பிற நாட்டினருக்குத் தெரியாத ஒன்றல்ல. இயேசு, பிளேக், லாவோ சீ, ரூமி எனப் பலரும் சொன்ன நற்செய்திகள்தான். எனினும் வேறு எந்த நாட்டிலும் இனத்திலும் இந்தத் தத்துவமானது சமூகவியல் மற்றும் கல்வியின் அடிப்படையாக ஆக்கப்பட்டிருக்கவில்லை. அது இந்தியாவில் மட்டுமே நடந்திருக்கும் அதிசயம்.

ஒவ்வொரு மனித இனமும் தன்னுடைய பிரச்னைகளைத் தமக்கு உரிய வழியில், நேரத்தில் தீர்த்துக் கொண்டாக வேண்டும். இந்தியாவுக்கென்றே இருந்த தனியான பிரச்னைகளுக்கான பழங்கால இந்தியாவின் தீர்வுகள் எல்லாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையே என்றாலும் இன்றைய நவீனக் காலச்சூழலுக்கு அவற்றை அப்படியே நேரடியாகப் பயன்படுத்த முடியும் என்று நான் சொல்லமாட்டேன். வாழ்க்கையின் அடிப்படை அர்த்தம், நோக்கம் ஆகியவற்றைப் பிற நாட்டினரைவிட மிகத் தெளிவாக அழுத்தமாக நம் முன்னோர் புரிந்துகொண்டிருக்கிறார்கள்; வாழ்வின் இலக்கை அடையும் நோக்கில் பிறரைவிட மிகத் தெளிவாகத் திட்டமிட்டு ஒரு சமூக அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்று நிச்சயம் சொல்வேன்.

இந்தச் சமூக அமைப்பானது ஏதோ ஒரு சமூகப் பிரிவுக்குச் சாதகமானதாக உருவாக்கப்படவில்லை. ஒவ்வொரு பிரிவின் திறமைக்கு ஏற்பவும் ஒவ்வொன்றின் தேவைகளுக்கு ஏற்பவும் உருவாக்கப்பட்டது. இந்த இலக்கில் ரிஷிகள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். இன்றைய நலிவடைந்த நிலையில் இருக்கும் இந்தியச் சமூகத்தைப் பார்த்துவிட்டு ஏதோ பிராமணச் சமூகத்தின் லட்சியங்களை மட்டுமே இந்தியச் சமூகம் முன்னெடுத்திருப்பதாகச் சொல்லக்கூடாது.

இந்து சமூகத்தின் குறைகளுடன் சேர்த்துப் பார்த்தாலுமே இன்று இருக்கும் இந்து சமூகமானது உலகில் பெருமளவில் பின்பற்றப்படும் எந்தவொரு சமூக அமைப்பைவிடவும் மிகவும் உன்னதமானது; அதிலும் இன்று ‘நவீன நாகரிகம்’ என்று சொல்லப்படுவதைவிடப் பலப் பல மடங்கு உயர்வானது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். பெரும்பாலான ஐரோப்பியர்களும் ஆங்கிலக் கல்வி பெற்ற இந்தியர்களும் இந்தப் பார்வையைத் தொடர்ந்து தக்கவைப்பது சிரமம் என்று சொல்கிறார்கள். எனினும் இந்தியக் கலாசாரத்தின் மிகவும் வெளிப்படையாகத் தெரியக்கூடியதும் தனிச் சிறப்பு வாய்ந்ததுமாகவும் இருப்பது என்னவென்றால், அது தொடர்ந்து வாழ்வின் அர்த்தமும் நோக்கமும் என்ன என்பதை இடைவிடாது தேடியவண்ணம் இருக்கிறது; அப்படியான இலக்கை மையமாகக் கொண்ட, அப்படியான இலக்கை அடைவதற்கான நல்லிணக்கமான சமூகம் ஒன்றை உருவாக்க விரும்புகிறது; நவீன உலகில் இந்தப் பார்வைக்கு மிக முக்கியமான இடம் இருக்கத்தான் செய்கிறது.

தேவ நகரம் ஒன்றை அதாவது கடவுள்கள் வாழும் தேவலோகத்தை அடையவேண்டும்; மண்ணில் உருவாக்கவேண்டும் என்பதுதான் பிராமணச் சிந்தனை. அப்படியான ஓர் உலகத்தைப் புதிதாக உருவாக்க மனித இனம் தொடர்ந்து முயற்சி செய்தவண்ணம் இருக்கிறது. அந்த உலகை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள், வேறுபடலாம். ஆனால் அந்த உலகுக்கான வரையறைகளை இந்தியாவிடமிருந்தே நாம் கற்றுக்கொள்ளமுடியும். சனாதன தர்மத்தின் அஸ்திவாரங்களைக் கொண்டே அந்தத் தேவலோகத்தை உருவாக்க முடியும்.

தத்துவங்களின் மதிப்பு என்ன என்ற விஷயத்தில் சராசரி நவீன ஐரோப்பியரின் சிந்தனையில் இருந்து இந்தியருடைய சிந்தனை வேறுபடுகிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தத்துவப் படிப்பு என்பது அதனளவிலேயே போதுமானதாகப் பார்க்கப்படுகிறது. சாதாரண மனிதர்களுக்கு அதனால் பெரிய பலன் எதுவும் இல்லை என்றும் கருதப்படுகிறது. மாறாக, இந்தியாவில் தத்துவப் படிப்பு என்பது வெறும் மூளை சார்ந்த பயிற்சியாகப் பார்க்கப்படவில்லை. சத்தியத்தை நம் கண்களில் இருந்து மறைக்கும் அவித்யையில் இருந்து (அறியாமையில் இருந்து) விடுதலை பெறவேண்டும்; ஆழ்ந்த தர்ம நம்பிக்கையுடன், மோக்ஷத்தை அடைவதை இலக்காகக் கொள்ளவேண்டும். இதுவே நம்முடைய தத்துவப் படிப்பின் நோக்கம்.

வாழ்க்கைப் பயணத்துக்கு வழிகாட்டும் வரைபடமாகவே தத்துவம் நம்மால் பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே வாழ்வின் அர்த்தமும் இலக்கை அடைவதற்கான வழிமுறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் சம்பந்தமானது என்பதால், இந்தியர்கள் அனைவருமே தத்துவக் கல்வியை ஆர்வத்துடன் கற்றிருக்கிறார்கள்.

இந்தப் பிராமணியப் பார்வைக்கும் நவீன அரசியல் பார்வைக்கும் இடையில் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது. அரசியலில் லட்சியவாதம் சாத்தியமே இல்லை என்று நவீன அரசியல்வாதிகள் கருதுகிறார்கள். அதோடு, சமூகப் பிரச்னைகள் உருவாகும்போது அவற்றைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். இதுபோலவேதான் நவீன மருத்துவமும் நோயை வரும் முன் காக்கும் வழிமுறைகளை விட்டுவிட்டு, வந்தபின் தீர்க்கும் வழிமுறைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகிறது. அதாவது சமூகத்தில் நடக்கும் அசாதாரண நிகழ்வுகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள அரசியல்வாதிகள் முயற்சிகள் எடுக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் காரணமாக இருக்கும் சமூகச் சூழலை மாற்றியமைக்க எதுவும் செய்வதில்லை.

மதம் மற்றும் தத்துவங்களில் இருக்கும் போதனைகள் உண்மையாக இருக்கலாம்; அல்லாமலும் இருக்கலாம். எப்படியானாலும் களத்தில் செயல்படும் சீர்திருத்தவாதிக்கு அவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றே மேற்கத்திய சமூகவியலாளர்கள் சொல்கிறார்கள். நேர்மாறாக, வாழ்வின் நோக்கம் மற்றும் அர்த்தத்தை ஆராயாத சிந்தனைகளையெல்லாம் பிராமணர்கள் நடைமுறைச் சாத்தியமற்றவையாக, பயனற்றவையாகவே கருதுகிறார்கள்.

நாம் தத்துவத்தைப் பார்க்கும் கோணத்தில் இருந்து ஐரோப்பியர்கள் பார்க்கும் விதத்தில் இருக்கும் இந்த வித்தியாசத்தை நம்மால் எளிதில் புரிந்துகொள்ளமுடியும்தான். ஐரோப்பியர்களுடைய வாழ்க்கையின் நெருக்கடிகள், அதை மீற அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் எல்லாம் எதையும் ஆழ்ந்து சிந்திக்கப் போதிய நேரத்தைத் தருவதில்லை. உலகியலில் பற்றற்றவர்களாகவும் பந்த பாசங்களில் இருந்து விலகியவர்களாகவும் இருப்பவர்களால்தான் தத்துவங்களைப் புரிந்துகொள்ளமுடியும். ஐரோப்பியர்களுடைய அரசியல் ஆதிக்கம் எவ்வளவு உயர்வாக இருந்தபோதிலும் இந்த விட்டு விலகிய சுதந்தர நிலைக்கு அவர்கள் இன்னும் வந்துசேரவில்லை.

எங்கெல்லாம் நவீனத் தொழில்மயமாக்கம் வெற்றிகரமாக நடந்துவருகின்றனவோ அங்கெல்லாம் பிராமணர், க்ஷத்ரியர், சூத்ரர் ஆகிய மூவர்ணத்தினருமே வைஸ்யர்களால் சுரண்டப்படுகிறார்கள். இப்படியாக வணிக நோக்கே அனைத்தையும் தீர்மானிக்கும் பகுதிகளில் அடிப்படைத் தேவைகளுக்காகத் தொடர்ச்சியான பதற்றம் நீடித்தபடியே இருக்கும். தொழில்மய உலகில் சிக்கிய ஒருவர் தனக்கும் தன் குடும்பத்துக்கும் நாளைய உணவைத் தேடியே தொடர்ந்து சிந்தித்தபடி இருக்கவேண்டியிருக்கும். வெறுமனே வாழ்வது தொடர்பான எண்ணங்களே முன்னுரிமை பெற்று நிற்கும். ஆன்ம சக்தியைப் பெறுவது தொடர்பான எண்ணங்கள் பின்னுக்குப் போய்விடும்.

தேசத்தின் அவைகளில் அனைவரையும் சமமாகப் பாவித்து ஒவ்வொரு குடிமகனுடைய குரலுக்கும் இடம் தரவேண்டும் என்ற கருதுகோளானது, இயல்பாகவே சிந்தனைத் திறமை கொண்டவர்களுடைய குரலை மங்கிப் போகச் செய்துவிடுகிறது. எந்தவொரு தெளிவான சிந்தனையும் அதற்கான ஓய்வும் வசதியும் இல்லாதவர்களுடையவர்களின் குரலினால் அவை மூழ்கடிக்கப்பட்டும் போகின்றன. இதனால் அனைத்து வர்க்கங்களுமே சில தனி நபர் / தனி அமைப்பின் எல்லையற்ற சுரண்டலுக்கு ஆளாகும் நிலை உருவாகிவிடுகிறது. ஏனென்றால் தத்துவார்த்த அடிப்படைகள் இல்லாத அரசியல் சக்திகள் எல்லாம் வெறும் சந்தர்ப்பவாத சக்திகளாகத்தான் ஆகிவிடுகின்றன. இன்றைய ஐரோப்பாவின் முன்னால் இருக்கும் கேள்வி, தனக்கான அரசியல் சக்தியை அடையாளம் கண்டுகொண்டு அதற்குக் கீழ்ப்படிய எப்படிக் கற்றுக்கொள்ளப்போகிறது?

இந்தப் பிரச்னைக்குத்தான் இந்தியா தனக்கேயான ஒரு தீர்வை வெகு காலத்துக்கு முன்பே கண்டடைந்துவிட்டது. இந்திய தத்துவ மரபானது பிராமணர்கள், க்ஷத்ரியர்கள் என்ற இரண்டு மேட்டுக்குடிகளை உருவாக்கியிருக்கிறது. இந்தியச் சமூகங்களின் முன்னோக்கிய நகர்வுகளின் மூலம் க்ஷத்ரிய வகுப்பு உருவாகி வந்திருக்கிறது. முதலாவது வகுப்பு தெளிவான வரையறை, விரிவான விதிகள், முறையான ஒழுங்கமைவு, மதம் சார் பிரதிநிதித்துவம், சடங்கு சம்பிரதாயங்களின் செயலாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

நேர்த்தியான வலுவான நிறுவனமயமாக்கம் மட்டுமல்லாமல், தமது சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் வலிமையையும் பெற்றதாகப் பிராமணக் குலம் இருந்தது. தனி நபர்கள் என்னதான் தவறுகள் செய்திருந்தாலும் பிராமண குலம் என்பது பிற ஹிந்துக்களினால் மதிப்பு மரியாதையுடனே பார்க்கப்பட்டது. இன்றுமே மிக உயர்வாகவும் பாசத்துடனுமே பார்க்கப்படுகிறது. பிராமணர்களின் செல்வாக்கு பல அடுக்குகள் கொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாகக் கல்வி, கற்பித்தல், துறவு நிலை ஆகிய அவர்களுடைய தர்மமே இதற்கெல்லாம் முக்கியமான காரணம்.

பௌத்தம் பற்றி நான் விரிவாகப் பேச விரும்பவில்லை. ஓர் அடைப்புக் குறிக்குள் இடுவதுபோல் சுருக்கிப் பேசவே விரும்புகிறேன். ஏனென்றால் பௌத்தர்கள் ஒருபோதும் மக்கள் சமூகத்தை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டதில்லை. ஞானம் பெற்றவர்கள் வாழ்க்கையின் இருண்ட, லௌகிக விஷயங்களை விட்டுவிட்டு ஒளி மிகுந்த துறவு வாழ்க்கையை முன்னெடுக்கவேண்டும் என்பதே அவர்களுடைய தத்துவம். பௌத்தம் முன்வைக்கும் தீர்வானது, தனி நபர்களை உலகியல் நெருப்பில் எரிந்து அழிவதில் இருந்து காப்பாற்றக்கூடியதுதானே ஒழிய, மறுமையில் நரகத்தில் எரிவதில் இருந்து காப்பாற்றக்கூடியது அல்ல. ஒரு நபருடைய ஆசைத் தீயில் இருந்து அவரைக் காப்பதுதான் அதன் நோக்கம்.

பிறப்பு-இறப்பு தளைகளில் இருந்து விடுபடுவது மிக உயரிய லட்சியம் மட்டுமே அல்ல; அதுதான் வாழ்வின் ஒரே முழுமையான இலக்கு என்று அது கருதுகிறது. இந்த இலக்கை அடைவதற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர் எவரோ அவரே ஞானவான். பிறருக்கு இந்த ஞானத்தை வழங்க எவர் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கிறாரோ அவரே பெருங்கருணை மிகுந்தவர்.

எனினும் இந்தியச் சாம்ராஜ்ஜியங்களின் செயல்பாட்டில் பௌத்தம் மிக அழுத்தமான, நீண்டு நிலைத்திருக்கும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது. பிராமணத் தத்துவ ஞானிகள் அரசர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டியதுபோலவே பௌத்தத் துறவிகளும் ராஜ குருவாக இருந்து வழிகாட்டியிருக்கிறார்கள். மைத்ரேய (நட்பு) பாவமானது தனி மனிதப் பண்பில் செலுத்திய தாக்கத்தின் மூலமாகச் சமூகவியலிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

எது இந்தியருடையது… எது பௌத்தருடையது என்று பிரித்துப் பார்ப்பது மிகவும் சிரமம். எனினும் மாமன்னர் அசோகர் எனும் ஓர் அரசர் மேல் பௌத்தம் எந்த அளவுக்கு மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது என்பதை வைத்து பௌத்தப் போதனைகள் ஒருவருடைய நடத்தை மற்றும் கொள்கைகளை எப்படிப் பாதிக்கும் என்பதை நன்கு புரிந்துகொள்ளமுடியும். ‘கீழைத்தேய நாடுகளில் பழங்காலம் தொட்டே சாம்ராஜ்ஜியங்கள் எல்லாம் அன்பும் ஆதரவும் கொண்ட கொள்கையின் அடிப்படையில் அமைந்திருந்தன; குடிமக்களின் நலன் மற்றும் மகிழ்ச்சியில் அக்கறை கொண்டிருந்தன’ என்ற, உலகம் ஏற்கத் தயங்கும் உண்மையை அவருடைய புகழ் பெற்ற கல்வெட்டுகள் எடுத்துக்காட்டுகின்றன. ‘உண்மையான வெற்றி’ என்பது பற்றி மிக முக்கியமான கல்வெட்டு விவரிக்கிறது.

பௌத்தத் தர்மத்தை ஏற்பதற்கு முன்பாக அசோகர், அருகில் இருந்த கலிங்க ராஜ்ஜியத்தைப் போரில் வென்று தன் ராஜ்ஜியத்துடன் இணைத்துக்கொண்டிருந்தார். ஆனால், இப்போது மன்னர் என்ன நினைக்கிறாரென்றால்,  ‘கலிங்கத்தைப் போரில் வென்றது குறித்து வருந்துகிறார். ஏனென்றால் வெட்டு, குத்து, மரணம், சிறைப்பிடித்தவர்களை இழுத்துச் செல்லுதல் எனப் பலவற்றின் மூலமே இதுவரை வெல்லப்படாத இந்த ராஜ்ஜியம் வெல்லப்பட்டிருக்கிறது. இது மிகுந்த வேதனையையும் குற்ற உணர்ச்சியையும் தேவனாம்ப்ரியரின் (மன்னரின்) மனதில் உருவாக்கிவிட்டிருக்கிறது. தேவனாம்ப்ரியர், உலகில் வாழும் உயிர்கள் எல்லாம் பாதுகாப்பு, சுய ஒழுக்கம், மன அமைதி, மகிழ்ச்சி கொண்டதாக வாழவேண்டும் என்று விரும்புகிறார். என் மகன்கள், பேரன்கள் எல்லாம் புதிய ராஜ்ஜியங்களை வெல்வதைத் தமது கடமையாக, இலக்காகக் கொள்ளக்கூடாது. எப்போதேனும் ஆயுதங்களை எடுத்துப் போரிட வேண்டிய நிலை வந்தால், பொறுமையாகவும் இதமாகவும் நடந்துகொள்ளவேண்டும். உண்மையான வெற்றி என்பது அன்பினால் பெறப்படும் வெற்றியே. அதுவே இந்த உலகுக்கும் மறு உலகுக்கும் நன்மை தரும்’.

இன்னொரு கல்வெட்டில் இருப்பவை: ‘தேவனாம்ப்ரிய ப்ரியதசி துறவிகள், இல்லறத்தார் என அனைத்துச் சமூக மக்களையும் மதித்துப் போற்றுகிறார்’. வேறொரு கல்வெட்டில் மருத்துவமனைகள் அமைப்பது, ‘ஒருவருக்குப் பெரிய குடும்பம் இருக்கிறதா… பேரிடரில் சிக்கியிருக்கிறாரா, முதியவரா என்பதையெல்லாம்’ கவனித்துச் சிகிச்சையில் முன்னுரிமை கொடுக்க அதிகாரிகளை நியமிப்பது எனச் செயல்பட்டிருக்கிறார் என்பது தெரியவருகிறது. ‘தனது உணவுக்கென்று எந்தவொரு விலங்கையும் கொல்லக்கூடாது’ என்று உத்தரவிட்டிருக்கிறார். ‘பெரு வழிச்சாலையின் இரு மருங்கிலும் நிழலும், கனியும் தரும் மரங்களை நடும்படி’ உத்தரவிட்டார். கடுமையாக உழைக்கும்படி அனைவரையும் ஊக்கப்படுத்தினார். பௌத்தப் போதனைகள் சொல்லக்கூடிய ‘அனைத்துக் குடிமக்களும் என் குழந்தைகள் போன்றவர்களே’ என்பதை அடிக்கடி மேற்கோள்காட்டுகிறார்.

இந்தியாவில் இருக்கும் பௌத்த நூல்கள் மட்டுமல்ல; சிலோனில் இருந்து கிடைத்திருக்கும் பௌத்த நூல்களுமே மன்னர்களைப் பற்றி இப்படியே குறிப்பிட்டிருக்கின்றன. ஆனால், இப்படியான பௌத்தப் போதனைகள் ஒரு மன்னரை நல்லெண்ண ஆதிக்கத்தை வெளிப்படுத்த வைத்திருக்கும் நிலையில் அவருக்கு அடுத்ததாக வரும் மன்னர் அவற்றையெல்லாம் மீறி அழிவு வேலைகளில் ஈடுபட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

எனக்குத் தெரிந்தவரையில் பௌத்தம் எந்தவொரு அரசியல் சாசனத்தையோ சமூக ஒழுங்குக்கான விதிகளையோ வரையறை செய்யவே இல்லை. அதே நேரம் பிராமணர்கள் இதே விஷயங்களைப் பல வழிகளில் முயற்சி செய்து மிகப் பெரிய அளவுக்கு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். சமூகப் பிரச்னைகளுக்குத் தமது மதம் சார்ந்த தத்துவங்களைப் பயன்படுத்தித் தீர்வுகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நாம் இப்போது அது பற்றித்தான் விரிவாகப் பார்க்கப்போகிறோம்.

வாழ்க்கையின் ஒட்டு மொத்தப் பிரச்னைகளுக்கான க்ஷத்ரிய – பிராமணத் தீர்வானது ஆரம்பக் கால உபநிடதங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. சங்கராச்சார்யரைப் பொறுத்தவரையில் அதுவே முழுமையான அத்வைதம்; ராமானுஜாச்சார்யரைப் பொறுத்தவரையில் விசிஷ்டாத்வைதம். ஒருமை அல்லது உயிர்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து நிற்கும் இந்த நிலையின் மீதான பேரார்வத்தினால் பிராமண லட்சியவாதிகள் அந்த உயரிய மதிப்பீட்டின் அடிப்படையில் சமூக ஒழுங்கை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.

இராமாயண, மகாபாரதக் காவியங்களில் வேத பொற்காலத்தில் இருந்தது போன்ற சமூக அமைப்பைச் சித்திரித்தனர். காவிய நாயகர்களின் மூலம் தமது தத்துவத்தைச் சொல்லவைத்தது மட்டுமல்ல; அவற்றை நடைமுறையில் வாழ்ந்து காட்டவும் வைத்தனர். அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பீஷ்மரின் மூலம் இது மிக விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. பின் வரும் தலைமுறைகள் அனைத்துக்கும் வழிகாட்டும் வகையில் இந்தக் காவிய நாயகர்கள் எல்லோருமே ஒவ்வொரு பண்புகளின், குண நலன்களின் லட்சிய உருவங்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் இந்தியக் கல்வி முறையானது கதாநாயக வழிபாட்டின் மூலமாகவே முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

உலகின் மகத்தான சமூகவியல் ஆவணங்களான மனுவின் தர்ம சாஸ்திரத்திலும் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்திலும் சட்ட விதிகளின் அடிப்படையிலான லட்சியச் சமுதாயம் ஒன்றின் சித்திரம் தீட்டப்பட்டுள்ளது. இவற்றின் மூலமும் வேறு பல வழிகளின் மூலமும் உலகில் வேறு எங்குமே இருந்திராத வகையில் மத தத்துவங்களைப் பொது மக்களின் கலாச்சார வாழ்வு மற்றும் ராஜ்ஜிய அரசியல் அம்சங்களின் மிக முக்கியமான அறிவார்ந்த அடிப்படையாக ஆக்கிவிட்டிருக்கின்றனர்.

சரி… அப்படியானால், வாழ்க்கை குறித்த பிராமணியப் பார்வை என்பது என்ன? இந்தக் கேள்விக்கு விடை சொல்ல வேண்டுமென்றல், அத்யாத்ம வித்யா – சுயத்தை அறிந்துகொள்ளும் ஞானம் – ஆத்ம விஞ்ஞானம் பற்றிச் சொல்லவேண்டியிருக்கும். இந்திய மதம் மற்றும் தத்துவத்தின் அடிப்படை அதுவே. ஒரே மூலம்… ஒரே சாராம்சம்… ஒரே இலக்கு; அந்த ஒருமையை உணர்ந்து அதனுடன் ஐக்கியமாவதே உயரிய நன்மை, பரமானந்தம், முக்தி, விடுதலை என்று இந்திய மெய்ஞானம் சொல்கிறது என்பதை முன்பே பார்த்தோம். இதுவே ஹிந்து சிந்தனையாளர்களின் அழிவற்ற வாழ்க்கை. காலக் கணக்கில் அல்ல; அண்டத்தில் பிண்டம்; பிண்டத்தில் அண்டம்; ஆத்மாவில் அனைத்தும் அடக்கம். ஆத்மா அனைத்திலும் அடக்கம். அந்த வகையில் அழிவற்ற வாழ்க்கை.

கபீர் சொல்கிறார்: ‘எல்லாவற்றுக்கும் மேலாக இந்த உலகில் அழிவற்ற வாழ்க்கையை வாழும் ஆசையை நான் என் மனதில் வைத்துப் போற்றிவருகிறேன்’. இது ஒட்டு மொத்த இந்தியர்களின் குரலும் கூட. இம்மை மறுமை என்ற இந்த இரண்டையும் பிரித்துப் பார்க்கமுடியாத ஒருமை நிலையே இந்தியக் கலாச்சாரத்தின் அஸ்திவாரமாக அமைந்திருக்கிறது. அதுவே இந்தியச் சமூகத்தின் சமூக லட்சியங்களின் தன்மையை முழுமையாகத் தீர்மானிக்கின்றது.

அப்படியானால், ஒரு பிராமணரால் வாழ்க்கையின் வேற்றுமையை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? பெரும்பாலான மனிதர்கள் சுய நலமாகவே செயல்படுவார்கள் என்பதை அவர்கள் எப்படி விளக்குவார்கள்? தீமைகளை அவர்கள் எப்படிக் கையாள்வார்கள்? நிர்குண வித்யா என்ற சனாதன தர்மத்தை அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் சகுண வித்யாவை அதாவது காலத்தினால் அழியும் ஒன்றை என்ன செய்வது?

மதம் சார் சமூகவியலின் மிக முக்கியமான அம்சம் இது. பழங்கால லட்சியவாதிகள் (முதியவர்களே லட்சியவாதிகளாக இருக்கிறார்கள். இளைய தலைமுறை குறுகிய நலன்களையே கணக்கில் கொள்கிறது) தமது இளைமைக் காலத்தை நினைவுகூரமுடியும். ஆன்மிகப் பக்குவ நிலைக்குத் தம் வாழ்க்கையில் இடம் கொடுக்கவும் அதுதொடர்பான விஷயங்களைச் செய்யவும் முடியும். இந்த விஷயத்தில் இந்த இடத்தில் தோற்பது என்பது வழிபாட்டு மையங்களுக்கும் அன்றாடச் செயல்பாடுகளுக்கும் இடையில் பிளவை உருவாக்குவதாக ஆகும். புனிதமானவற்றுக்கும் அல்லாதவற்றுக்கும் இடையில் பிழையான புரிதலை, வேறுபாட்டை உருவாக்குவதாக ஆக்கிவிடும். இந்த விஷயத்தில் வெற்றி பெறுதல் என்றால் அன்றாட வாழ்க்கையை மேலுலக ஒளியில் பிரகாசிக்கச் செய்வதுதான்.

ஒரு மனிதருடைய அல்லது மனிதர்களுடைய வாழ்க்கையை ஒரு வளைகோடாக எடுத்துக்கொள்வோம். ஒரு தனி மனிதருடைய வாழும் விருப்பத்துக்கும் வாழ்க்கை அனுபவங்களுக்கும் இடையிலான வளை கோடு. இந்த வளைகோட்டில் வெளிப்புற அலகுகள்: பரிணாமம், வாழ்க்கைப் பாதை – ப்ரவ்ரித்தி மார்க்கம் என்பது சுய சிந்தனை – தன் முனைப்பு மூலம் உருவாகிறது. இந்த வளைகோட்டில் உள் முக நகர்வு என்பது உள்ளிழுக்கப்படுதல், திரும்பிச் செல்லுதல் – நிவ்ரித்தி மார்க்கம் – இது ஆத்ம ஞானத்தின் அதிகரிப்பைக் குறிக்கிறது.

வெளிப்புறப்பாதையில் மனிதர்களின் மதம் என்பது (வாழும்) காலத்தின் மதம். உள்முகமாகத் திரும்பிச் செல்பவர்களின் மதம் என்பது அழிவற்ற மதம். வாழ்க்கை என்பதை ஒரு முழுமை என்று எடுத்துக்கொண்டால், தொடக்கத்தில் இருந்து ஆத்ம ஞானத்தை அடைவதே அதன் முக்கிய இலக்காக இருக்கவேண்டும். நாம் மறந்துவிட்டுச் செயல்படுகிறோம். பெரும்பாலான மனிதர்கள் விஷயத்தில் மனிதர்களின் ஆத்மாவானது இணக்கம் – பிணக்கம், மன விலக்கம் – சரணடைதல் என உள்முக மற்றும் வெளிமுகச் சிந்தனைகளினால் இருபக்கமாக இழுக்கப்படும் நிலையில் இருப்பதைப் பார்க்கமுடியும்.

பிராமணர்கள் தத்துவார்த்த ரீதியில் ‘நன்மை’, ‘தீமை’ என்ற பதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். ஞானம், அறியாமை (வித்யா, அவித்யா) ஆகியவை பற்றியும் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் பற்றியும் பேச விரும்புகிறார்கள். ஞானம் பெருகப் பெருக ஒரு மனிதர் தன்னியல்பாக எந்தவொரு கடமை உணர்வு சார்ந்தெல்லாம் இல்லாமல் திரும்பிச் செல்ல விரும்புவார். அவருடைய பண்பும் செயல்பாடுகளும் சாத்விகமாக இருக்கும். ஆனால் அறியாமையில் இருப்பவர்களின் சுய மைய சிந்தனை (தன் முனைப்பு) என்பது ஒரு பாவம் என்று தண்டிக்கவேண்டாம். ஏனென்றால், சுய (ஆன்ம) முனைப்பு இல்லையென்றால் ஆத்ம ஞானம் அடைதல் சாத்தியமில்லையே.

இளமையின் புலன் இன்ப வேட்கையை மறுப்பது இதற்கான தீர்வு அல்ல; அடக்கப்படும் ஆசைகள் பெரும் நோயாக மாறி நம்மைப் பீடிக்கும் என்பதை நாம் அடக்குந்தோறும் புரிந்துகொள்ள நேரும். இதனால்தான் பிராமணர்கள் தமக்கு விதித்துக்கொண்ட புலனடக்க விதிமுறைகளைக் கைவிடாமலேயே, லட்சியச் சமுதாயத்தில் புலன் இன்பங்களை நுகர விரும்புபவர்களுக்கு அவை கிடைக்க வழி செய்யவேண்டும் என்று விதி வகுத்தார்கள். புலன் இன்பங்களில் இருந்து மேலெழவேண்டுமென்றால், வெறும் உடல் இன்பத்தை நுகரும் வாழ்க்கையில் இருந்து மேலெழ வேண்டுமென்றால் அந்த இன்பங்களை முதலில் முழுமையாக அனுபவித்துவிட்டிருக்கவேண்டும் என்று பிராமணர்கள் சொன்னது அதனால்தானோ என்னவோ.

(தொடரும்)

___________
Ananda Coomaraswamy எழுதிய “The Dance of Shiva: Fourteen Essays” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *