Skip to content
Home » சிவ தாண்டவம் #3 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 3

சிவ தாண்டவம் #3 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 3

The Dance of Shiva

ஆசியாவின் வீழ்ச்சி ஒருவகையில் உள்ளார்ந்த சிந்தனைகளினால் துரிதப்பட்டு வருகிறது. ஏனென்றால் இன்றைய நிலையில் கூட்டுறவில் இருந்து போட்டி மனப்பான்மை நோக்கி நகர்வதுதான் முன்னேற்றம் என்று சொல்லப்படுகிறது. இதனால் அரசியல் அதிகாரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. தொழில்மயவாதிகளின் அழிவு சார்ந்த சுரண்டலின் விளைவாகவும் இது நடந்தேறுகிறது. புதிய யுகத்தின் அவ தூதர்களாக அழைக்கப்படத்தகுந்த ஐரோப்பியச் சிந்தனையாளர்கள்கூட, ஐரோப்பாவில் மட்டுமே நடந்துவரும் முன்னேற்றங்கள் தொடர்பாகத் திருப்தி அடையக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆனால் ஒன்றை மட்டும் அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். நவீன உலகம் என்பது, தகவல் தொடர்புகள் மிகவும் மெதுவாக நடைபெற்றுவந்த பழைய உலகம் போன்றது அல்ல. இன்று இந்தியாவில் அல்லது ஜப்பானில் செய்யப்படும் ஒன்று, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆன்மிக, பொருளாதார விளைவுகளை உடனேயே ஏற்படுத்துவதாக இருக்கிறது. கிழக்கு கிழக்குதான்; மேற்கு மேற்குதான் (இரண்டும் சேராது; மாறாது) என்று சொல்பவர்கள் எல்லாம் மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளும் நெருப்புக் கோழி போன்றவர்களே.

‘இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் பற்றிய கட்டுரை’ என்பதிலும் ‘தோற்றங்கள்’ என்ற கட்டுரையிலும் திரு லோவ்ஸ் டிக்கின்சன் இரண்டும் சேர முடியாது என்கிற கருத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார். இது துரதிர்ஷ்டவசமானது. ‘இந்தியாவின் மதம் என்பது நிரந்தரமான, சனாதன மதம்; ஐரோப்பாவின் மதம் என்பது (நவீன) காலத்தின் மதம்; எனவே இரண்டாவதையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்’ என்று அவர் சொல்கிறார். ப்ரவ்ரித்தி தர்மம், நிவிர்த்தி தர்மம் என்பதன் மிக அருமையான விளக்கம் இதுதான். திரு டிக்கின்சனின் கூற்றின்படி, நம் இந்தியாவானது அசந்தர்ப்பமான வைராக்கியத்தினால் பாதிக்கப்பட்டுவருகிறது. ஐரோப்பாவோ அதீத நுகர்வு மற்றும் செயல்பாடுகளினால் பாதிக்கப்படுகிறது. இரு தரப்புமே தாமாகச் சரி செய்துகொள்ள முடிந்த தவறுகளையே செய்கின்றன.

ஆனால் இப்படியான பார்வையானது கோட்பாட்டளவில்தான் சரி. எந்தவொரு தேசமும் இனமும் இந்த இரண்டு மதங்களில் ஒன்றை மட்டுமே தனித்து முழுமையாகப் பின்பற்றியதாகச் சொல்லவே முடியாது. மனித நாகரிகம் என்பது இரண்டு பார்வைகளின் முறையான அனுசரணையினால் உருவானதுதான்.

இந்தியாவில் இந்த அனுசரணையும் சம நிலையும் மிகவும் வெளிப்படையாக அடையப்பட்டிருப்பதால், திரு டிக்கின்சன் குறிப்பிடும் உலகளாவிய சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை அவரைவிட இந்தியாவைப் பற்றி அறிந்தவர்கள் நன்கு தெரிந்துகொண்டிருப்பார்கள்.

உலகம் கிறிஸ்தவத்துடன் ஓர் ஒத்திசைவுக்கு வந்து சேர இந்தியா வழிவகுக்கும். ஆன்மிக உலகின் எதிர்பார்ப்புகளையும் லௌகிக உலகின் எதிர்பார்ப்புகளையும் சரிவரப் புரிந்துகொண்டு, மனித குலத்தின் தார்மிக வளர்ச்சி என்பது இனம், ஜாதி, மதம், வர்க்கம், தேசம் என எந்தவொரு வேறுபாடும் பார்க்கப்படாமல் அனைவரும் சகோதரர்களாகப் பார்க்கப்படும் நிலையை உருவாக்கும் (சர் ஜர்ஜ் பேர்ட்வுட், பக் 355).

‘அரசு தலையிடாக் கொள்கை’ என்று மேற்குலகம் சொல்வதன் மீது இந்தியா தணியாத மோகம் கொண்டிருக்கும்வரையில் உயர்ந்ததொரு சமூக ஒழுங்கை நிறுவுவது மிகவும் சிரமமே.

அந்தவகையில் ஆசியாவின் அதிவேக வீழ்ச்சியானது எதிர்கால மனிதக் குலத்துக்கும் மேற்குலக சமூக லட்சியவாதத்துக்கும் மிகப் பெரிய கேட்டையே விளைவிக்கும். இதற்கான தடயங்கள் ஏற்கெனவே நன்கு புலப்படத் தொடங்கிவிட்டன. ஆசியா குறித்த அறியாமை அல்லது வெறுப்பு காரணமாக ஐரோப்பிய ஆக்கப்பூர்வச் சிந்தனைப் போக்குகள் கீழைத்தேயத் தத்துவவாதிகளுடனான கூட்டுறவை நாடாமல் இருக்கின்றன. தொழில்மயமாதலைத் தனியே ஐரோப்பாவால் எதிர்த்து நிற்க முடியாத ஒரு நிலை விரைவில் வரும். ஏனென்றால், இந்த எதிரி ஆசியாவில் கால் ஊன்றிவிட்டிருப்பான்.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்கக் குடியேற்றப் பகுதிகள் எல்லாம் மலிவான ஆசிய உடல் உழைப்பாளர்களின் ஊடுருவலைத் தடை செய்யும் சட்டங்கள் மூலமாக மட்டுமே தம்மைப் பாதுகாத்துக் கொண்டுவிடமுடியாது. இது ஒரு தற்காலிக ஏற்பாடாக மட்டுமே இருக்கும். அதில் இருக்கும் அநீதி ஒருபக்கம் இருக்கட்டும். இது பின்னாளில் நன்மையைவிடப் பெரும் தீமையையே கொண்டுவரும்.

ஆசியாவில் தமது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைக்கவேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் நினைக்கும் அல்லது நினைக்க விரும்பும்வரையில், ‘உலக நாடுகள் ஒவ்வொன்றும் தத்தமது வாழ்க்கையை வாழவேண்டும்; தமக்கான அரசமைப்பைத் தானே கொண்டிருக்கவேண்டும்’ என்ற தேசிய அரசு தொடர்பான ஐரோப்பிய சிந்தனையானது சாத்தியமாகாமலே போகும். சுய ராஜ்ஜியம் என்ற இறையாண்மைக்குத்தானே நேச நாட்டுப் படைகள் ஜெர்மனிக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.

பொதுவான நலன் சார்ந்து கிழக்கும் மேற்கும் பிரக்ஞை பூர்வமான கூட்டுறவு முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும்; யாரையும் யாரும் அடக்க நினைக்காமல் இதைச் செய்யவேண்டும். ஏனென்றால் ஐரோப்பாவுக்கு ஆதரவாக இல்லாவிட்டால் ஆசியா அதற்கு எதிராகவே இருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பொருளாதாரரீதியிலான அல்லது ராணுவம் சார்ந்த மோதல் லட்சியவாத ஐரோப்பாவுக்கும் லௌகிகக் கணக்குகள் மிகுந்த ஆசியாவுக்கும் இடையில் மிக மோசமாக உருவாகிவிடும்.

விஷயத்தை வேறொரு கோணத்தில் பார்த்தால், ஆசியச் சிந்தனைகளுக்கு ஐரோப்பா பட்டிருக்கும் நன்றிக்கடன் நம் ஒருவருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. ஏனென்றால் ஆசியாவின் திறமைகள் இன்னும் முழுமையாக அறியப்படவும் இல்லை. இதன் மறுபக்கம், நவீனக் காலங்களில் ஆசியாவுக்கு ஐரோப்பா மிக மிக அதிகத் தீமைகளை விளைவித்திருக்கிறது. உதாரணமாக, இந்தியாவில் பார்த்த புதிய சமூக அமைப்பை ஆங்கிலேயரால் புரிந்துகொள்ளமுடியவில்லை என்பதால் அவர்களை அறியாமலேயே இந்தியச் சமூகத்தில் ஒரு பெரிய குழப்பத்தை உருவாக்கிவிட்டார்கள். கூட்டுறவு சார்ந்த ஒரு சமூக அமைப்பை நவீன அரசியல் கோட்பாட்டின் சட்டகத்துக்குள்ளான பிரிவுகளாகப் பொருத்தப் பார்த்துவிட்டார்கள்.

ஐரோப்பாவுடனான தொடர்பு ஏற்பட்டிருக்காவிட்டால் ஆசியாவில் நாகரிகம் வந்திருக்காது என்று நான் சொல்லவில்லை. நேர்மாறாகத்தான் சொல்கிறேன். அதேநேரம் தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்திலிருந்து வெறும் ஒப்பந்த அடிப்படையிலான சமூகமாக ஆசிய சமூகம் வீழ்ந்ததற்கு மறைமுகக் காரணமாக இருப்பவர்கள், நிச்சயம் கடன்பட்டிருக்கிறார்கள்.

ஆசியாவின் ‘தூய காற்று’ என்பது கடந்த காலத்தின் கனவு அல்ல. அதில் லட்சியவாதம் இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக மிக மோசமான கல்வி கொடுக்கப்பட்ட பின்னரும் நவீன இந்தியாவில் லட்சியவாதிகள் இருக்கிறார்கள். நாம் அனைவருமே முன்னேற்றம் என்ற மாயையினால் ஏமாற்றப்பட்டு விடவில்லை. மனித வாழ்க்கை என்பது பௌதிகப் பொருள்கள், வசதிகள், இவற்றை அடைவதற்கான ஜூர வேகப் பதற்றமும் போட்டியிலும் வீணடிக்கப்படவேண்டிய ஒன்றல்ல; மன ஒழுக்கம், ஆன்மிகம் என மனிதருக்குள் உறைந்திருக்கும் சக்திகளை வளர்த்தெடுப்பதே என்பதை நம்முடைய சில ஐரோப்பியர்களைப் போலவே அனைவரும் ஒரு நாள் உணர்ந்துகொண்டாகவேண்டும்.

ஆசியாவுக்கு ஐரோப்பா பட்டிருக்கும் கடனானது நவீன ஆசியாவுடனான கூட்டுறவின் மூலம்தான் அடைக்கப்படமுடியும். ஐரோப்பா முன்னெடுக்கும் அனைத்துச் சாகச முயற்சிகளிலும் இந்தக் கூட்டுறவு இருந்தாகவேண்டும். நிச்சயம் ஐரோப்பாவுக்கு அதில் மிகப் பெரிய நன்மையே கிடைக்கும். கிழக்கை நாகரிகமயப்படுத்துவதுதான் மேற்கின் லட்சியம் என்ற பழைய சிந்தனையை மேற்குலகம் முழுமையாகக் கைவிட்டாகவேண்டும். ஏகாதிபத்தியத்தின் இன, நிற மேட்டிமைவாதமானது ஏற்கெனவே ஓரங்கட்டப்பட்டு வருகிறது. உலகின் பொதுவான நாகரிகம் மலர பொதுவான பிரச்னைகள் இனம் காணப்பட்டுத் தீர்வுக்கு அனைவரும் இணைந்து செயல்பட்டாகவேண்டும்.

உலக நாகரிகத்தின் நன்மைக்கு இந்தியாவின் கொடை என்ன என்ற கேள்விக்கு, இந்தியப் பக்கம் இருந்து சொல்வதென்றால், இந்தியாவின் மதங்கள், தத்துவங்கள் மற்றும் அந்த அரூபமான கோட்பாடுகளை நடைமுறை வாழ்க்கையில் தொடர்ந்து இடம்பெறச் செய்தது ஆகியவையே என்றுதான் சொல்லவேண்டும்.

(தொடரும்)

___________
Ananda Coomaraswamy எழுதிய “The Dance of Shiva: Fourteen Essays” நூலின்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *