சிவபெருமானுக்கும் உமாதேவிக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது: மகாதேவர், பெண்களின் கடமைகள் என்ன என்று உமையிடம் கேட்கிறார். உமையைப் பற்றி அறிமுக வார்த்தைகளாகச் சிலவற்றைச் சொல்கிறார். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தெய்வங்களுக்கே கிடைத்தற்கரிய ஞானத்தைப் பெற்றிருப்பவராக உமாதேவியைப் புகழ்கிறார். மேற்கத்திய இலக்கிய உலகில் இதற்கு இணையான வரிகள் எங்குமே இல்லை என்று நிச்சயமாகச் சொல்லலாம். சிவபெருமான் சொல்கிறார்:
‘சுயம் மற்றும் சுயம் கடந்த அனைத்தையும் அறிந்தவளே; செய்பவை அனைத்திலும் சிறந்து விளங்குபவளே; புலனடக்கம் மிகுந்தவளே; அனைத்து உயிர்களையும் சம பாவத்துடன் கவனித்துக் கொள்பவளே; நான், எனது என்ற கர்வம் அற்றவளே; எனக்கு இணையான சக்தியும் வலிமையும் கொண்டவளே; நல் ஒழுக்கத்தைத் தீவிரமாகப் பின்பற்றுபவளே; கற்பின் கனலியே; இமயத்தின் மகளே… நேர்த்தியான புருவங்கள் கொண்டவளே; சுருள் கூந்தல் கொண்டவளே பெண்களின் கடமைகள் என்னென்ன என்று முழுமையாகச் சொல்வாயாக.’
விண்ணுலக ராணியாக இருந்தபோதிலும் மண்ணுலகிலும் கால் ஊன்றி நிற்கும் தேவி சொல்கிறாள்:
‘பிரபோ… திருமணப் பந்தங்களின் அடிப்படையில் பெண்களின் கடமைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன; தர்ம காரியங்கள் அனைத்தையும் செய்யும் நோக்கில் அக்னி பகவானின் முன்னிலையில் கணவரின் கரங்களைப் பற்றுகிறாள். பெண் அழகாகவும் இதமாகவும் நடந்துகொள்ளவேண்டும். கணவரையே கண் கண்ட தெய்வமாக மதிக்கவேண்டும். இன்ப துன்பங்கள் யாவிலும் உறு துணையாக நிற்கவேண்டும். ஆரோக்கியமாக இருக்கும்போதும் நோயுற்றிருக்கும் போதும் அவருக்குச் சேவை செய்யவேண்டும். முறையற்ற செயல்களையும் தனக்கு அழிவைத் தரும் செயல்களையும் செய்யச் சொன்னாலும் எதிர்ப் பேச்சு பேசாமல் பணிவுடன் செய்யவேண்டும். அதிகாலையில் எழுந்திருக்கவேண்டும். தெய்வங்களை வணங்கவேண்டும். இல்லத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். இல்லத்தில் விளக்கேற்றி வைக்கவேண்டும். கணவருக்கும் விருந்தினருக்கும் பணியாளர்களுக்கும் திருப்தியான உணவிட்ட பின்னரே ஒரு பெண் உணவு உண்ணவேண்டும். தன்னுடைய தாய் தந்தையிடமும் கணவரின் தாய் தந்தையிடமும் அர்ப்பண உணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். கணவர் மீதான பக்தியே ஒரு பெண்ணின் பெருமை. அதுவே அவளுக்கான நிரந்தரச் சொர்க்கம் மகேஸ்வரரே…’
மேலும் அவர் மனித உணர்வுடன் சொல்கிறார்:
‘உங்களுக்குத் திருப்திகரமாக நடந்துகொள்வதே சொர்க்கத்தையும்விட எனக்குப் பெரிதும் விருப்பத்துக்குரியது பெருமானே.’
‘கற்பூர மஞ்சரி’ நூலில் ராஜ சேகரர் சொல்கிறார், ‘கணவனுக்கு மகிழ்ச்சியைத் தருபவளே உண்மையான மனைவி’ என்று.
மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டிருப்பது:
‘ஒழுக்கத்தில் பிறழ்பவனாகவோ இன்பங்களை வேறிடங்களில் தேடுபவனாகவோ நற் குணங்கள் கொண்டிருக்காமலோ இருந்தாலும் ஒரு கணவனை நற்குணவதியாக இருந்து நிதமும் தொழவேண்டும். கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பெண் அந்த ஒரு குணத்தினாலேயே சொர்க்கம் சென்று சேர்வாள்.
குழந்தைகள் பெறுதல், அக்கறையுடன் வளர்த்தல், கணவனின் அன்றாடப் பணிவிடைகள் இவற்றுக்கெல்லாம் பெண்களே மூலாதாரம்.
தன் எண்ணங்கள், பேச்சு, செய்கை இவற்றைக் கட்டுப்படுத்துபவள், தன் பதிக்குத் தன் கடமைகளை மீறாதவள்; இந்த உலகிலும் இறந்த பின் சொர்க்கத்திலும் அவருடன் வசிப்பவள் எவளோ அவளே நல்லொழுக்கம் மிகுந்த பதிவிரதை.’
இதுபோல் ஏராளமான மேற்கோள்களை இந்திய இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டமுடியும்.
பெண்கள் இந்தக் கடமைகளைச் செய்துவந்ததால் அதற்குண்டான மரியாதை அவர்களுக்குக் கிடைத்தது. சமூகத்தின் மீது அதற்கு இணையான செல்வாக்கை அவர்கள் செலுத்தினார்கள். இளமையும் அழகும் கொண்டவர்கள் மட்டுமோ செல்வச் செழிப்பில் உள்ளவர்கள் மட்டுமோ இந்த மரியாதையும் செல்வாக்கும் இருந்திருக்கவில்லை. தாயாகவும் பாட்டியாகவும் அல்லது விதவைகள், பெண் துறவிகள் என இருந்த அனைத்துப் பெண்களுக்குமே இந்த முக்கியத்துவம் இருந்திருக்கிறது.
மனு சொல்கிறார்: ‘ஒரு குருவுக்குப் பத்து ஆசிரியர்களுக்குச் சமமானவர்; ஒரு தந்தை நூறு குருக்களுக்குச் சமமானவர். ஒரு தாயோ ஆயிரம் தந்தைகளுக்குத் தரும் மரியாதைக்கு உரியவர்; 100 ஆசிரியர்கள் செய்யும் செயலுக்கு நிகரானது ஒரு தாயின் செயல்.’
கைகேயி சொன்னதைக் கேட்டு காட்டுக்கு ராமர் சென்றார். ஏனென்றால், தந்தைக்குத் தரும் அதே மரியாதையை தாய்க்கும் ஒரு மகன் கொடுக்கவேண்டும். தமது குழந்தைகள், வீட்டுப் பொறுப்புகள் ஆகியவற்றின் மீதுமட்டுமல்ல; வளர்ந்த பெரியவர்களுக்குமே இந்திய தாய்மார்களின் சொல்லே வேதம். என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவில் இருப்பவர்களில் ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள் மட்டுமே தமது தாய் தந்தையருக்கு மதிப்புக் கொடுப்பதில்லை.
மதாலசா மற்றும் அவருடைய மகள் விக்ராந்தாவின் கதை இந்திய தாய் எப்படி ஓர் ஆசிரியராகவும் (குருவாகவும்) இருக்கிறார் என்பதற்கான மிகவும் பொருத்தமான கதை. மார்க்கண்டேய புராணம் என்ன சொல்கிறதென்றால், விக்ராந்தா நோய்வாய்ப்பட்டிருந்தபோது தினமும் அத்யாத்ம வித்யா – ஆத்ம ஞானம் பற்றி தாயும் யோகினியுமான மதாலசா கற்றுத் தந்தார். அவன் உடல் பலம் தேறியதோடு ஆன்ம பலமும் பெற்றான்.
மதாலசா சொன்னவை:
‘என் மகனே… பெயரும் வடிவமும் இல்லாதவன் நீ; இந்தப் பெயர் எல்லாம் மாயையே. ஐம்புலன்களால் ஆன இந்த உடல் அல்ல நீ; ஏன் அழுகிறாய்? அரசனின் மகனான நீ அழலாமா? இந்த உடலில் வேறொன்று வசிக்கிறது. ‘இதுவே நான்’ என்று இந்தச் சதைப் பிண்டத்தை நினைக்காதே. என்னே ஒரு அவமானம், உடம்பையே நான் என்று ஒருவர் மயங்கி நிற்பது.’
சமீப காலங்களில் கூட, இந்திய வாழ்க்கைக்கும் சிந்தனைக்கும் தொடர்பில்லாத ஆங்கிலக் கல்வி பெற்ற ஆண்கள் இருக்கும் குடும்பங்களில்கூட இந்திய சிந்தனை மரபும் உணர்வுகளும் குடும்ப பெண்களின் மூலமே அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றித் தரப்படுகிறது. ஏனென்றால், அன்றாடக் குடும்பக் கடமைகள், மரபான விழுமியங்கள் எல்லாம் வாழ்வின் தத்துவத்தை வடிவமைப்பவையாக இருக்கின்றன. நாட்டுப் புறக் கதைகள், தாலாட்டுப் பாடல்கள், வெகுஜனப் பாடல்கள், ஒவ்வொரு இந்திய வீடுகளின் வேதமாகத் திகழும் புராணங்கள், இதிகாசங்கள் இவையெல்லாம் பெண்களையே சார்ந்திருக்கின்றன. இந்தியப் பெண்கள் தமது உணர்ச்சிமயமான நிலை, அறியாமை இவற்றையும்தாண்டி இந்தியாவின் ஆன்மிகக் கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பவர்களாக இருந்துவந்திருக்கிறார்கள். அதுவே கல்வி பெற்றவர்களின் செய்நேர்த்தி மற்றும் தகவலறிவு ஆகியவற்றைவிட மிகுந்த மதிப்புக்கு உரியது.
தாந்திர தரிசனம் ‘பெண் – உலகின் தாய்’ என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்தது. உலகின் அனைத்து அம்சங்களிலும் பெண்களின் பங்களிப்பே மிகவும் அதிகமானது. அதுவே அதிக அளவுக்குப் போற்றப்படவேண்டியது என்று சொல்கிறது. இங்கு ஒரு பெண் ஆன்மிக குருவாக இருக்கலாம்; ஒரு மகனுக்குத் தாயின் மூலம் கிடைக்கும் கல்வியே எல்லாவற்றையும்விட உயர்வானது. இது உலக அளவில் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற சந்தேகம் ஒருவருக்கு வரலாம். பெண்கள் ஆண்களைவிட உலக வாழ்வுக்கு நெருக்கமானவர்கள் என்று ஸ்விட்சர்லாந்து மருத்துவ மேதை பராசெல்சஸ் குறிப்பிட்டிருக்கிறார்தான். ஆனால் அது பெரும்பாலும் தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்த பார்வை மட்டுமே. ஆனால், மதாலசா போன்ற பெண்களுக்கு எல்லாமே சாத்தியமே.
‘நாங்கள் ஒரு பெண் என்பது எங்களை எப்படி முடக்குகிறது?’ என்று பெளத்தப் பிக்குணி கேட்ட கேள்வி இந்தியாவில் ஒருபோதும் மறுக்கப்பட்டிருக்கவில்லை. எந்தவொரு தனியான பெண்மணியும் துறவி நிலையை அடைவதையோ கல்வி பெறுவதையோ இந்திய மரபில் மறுத்திருக்கவே இல்லை. 19-ம் நூற்றாண்டு மேற்கத்திய கல்வி மையங்களைப் பார்த்தே மதக் கல்வி மற்றும் விஞ்ஞானக் கல்விகள் இந்தியாவில் பெண்களுக்கு மறுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் குடும்ப நிர்வாகம் மற்றும் திருமணம் ஆகியவற்றில் ஆணும் பெண்ணும் ஒரேமாதிரி மதிக்கப்பட்டனரா? விதிவிலக்காகவே விதி விலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே ஆன்மிகத் தளத்தில் ஒளவை, மீரா பாய் அல்லது பெளத்தப் பிக்குணிகள், விஞ்ஞானத்தில் லீலாவதி, போர்க்கலையில் சந்தா பீபி, ராணி ஜான்ஸி ராணி போன்ற ஒரு சிலரே சமூக அளவில் வெற்றிகரமாகத் திகழ்ந்திருக்கிறார்கள். விஞ்ஞானம் அல்லது ஏதேனும் ஒரு துறையில் உயர் கல்வி பெறுதல், மத, ஆன்மிக வழியில் ஈடுபடுதல், ஏதேனும் ஒரு கலையில் தீவிரமாக ஈடுபடுதல் ஆகிய சுதந்தரங்கள் எல்லாம் ஒன்று சன்னியாசினிகள், இறை அடியார், விதவை அல்லது ராஜ சபைக் கலைஞர் போன்றவர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கின்றன.
பெரும்பாலான இந்தியப் பெண்கள், இயல்பாகவே திருமணம், தாய்மை ஆகியவற்றையே விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். மதம் சார்ந்த ஆழ் மனத் தேடல் கொண்டவர்கள், வாழ்க்கையின் மையப்புள்ளியான கணவன் இறந்துபோனவர்கள், சிறு வயதில் இருந்தே ஏதேனும் ஒரு கலையில் நல்ல பயிற்சி பெற்றவர்கள் ஆகியோர் சமூக சேவை, இசை போன்ற பல்வேறு துறைகளில் மிகப் பெருமளவில் காலம் காலமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தத் துறைகளில் ஈடுபட்டபடியே குடும்ப நிர்வாகம், மனைவி, தாய்மைக் கடமைகளைச் செய்தல் என இரண்டும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்றுதான் ஹிந்து சமூக நெறியாளர்கள் கருதியிருக்கிறார்கள். மனித வாழ்க்கை என்பது பலதரப்பட்ட துறைகளில் ஈடுபடமுடிந்த அளவுக்கு அதிகக் கால அவகாசம் கொண்டதல்ல என்றும் அவர்கள் கருதினர்.
ஹிந்து தர்மம் எந்தவொரு ஆதிக்க மன நிலையையும் ஆதரிக்கவில்லை. ஆன்மிக விடுதலையையே அது முக்கிய இலக்காகச் சொல்லியிருக்கிறது. அக வாழ்வு தொடர்பான விழிப்பு உணர்வு கொண்டவர்கள் புற உலகில் காணப்படும் விஷயங்களுக்குத் தமது வாழ்க்கை சார்ந்தோ மாறக்கூடிய ஆளுமைகள் சார்ந்தோ அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஹிந்து சமூக வாழ்க்கையின் இறுதி இலக்கு ‘ஆண்கள் தமது சுயத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் தாண்டிய பரந்து விரிந்த, ஆழமான ஒன்றுடன் இணைத்துக்கொள்ளவேண்டும்’ என்பதுதான். வெற்றி தோல்விகள் பற்றிய சிந்தனை இல்லாமல் கடமைகளைச் செய்துமுடிக்கவேண்டும். நான், எனது என்ற குறுகிய சிறைக்குள் சிக்கிக் கொள்ளாமல் அனைத்துக்கும் ஆதாரமானதும் ஆதி அந்தம் இல்லாததுமான ஒன்றை அதன் மாறும் வடிவங்களில் இருந்து பிரித்து அறிந்துகொள்ளவேண்டும். இதுவே லட்சியம்.
சுயத்தை அழித்தல் என்பது சத்தியத்தேடலுடன் பின்னிப் பிணைந்தது. ஹிந்து கலாச்சாரத்தின் தனித்தன்மை வாய்ந்த பெருமைக்குரிய மதிப்பீடு அது. இதிகாச ஆசிரியர்களின் பெயர்கள் எல்லாம் ஒருவகையில் நிழல் பெயர்களே. பிற்காலங்களில் எழுதியவர்கள் தமது பெயர்களை மறைத்துக் கொண்டு புராண அல்லது மகத்தான செய்யுள் ஆசிரியர்களின் பெயரில் தமது படைப்புகளை வெளியிட்டுவந்திருக்கின்றனர். தமது படைப்புகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற விரும்பினர். அவர்கள் தாம் ’உருவாக்கிய’ படைப்பு என்று சொல்வதில்லை. தாம் ’கேள்விப்பட்ட’ தம் மூலமாக வெளிப்பட்ட என்றே தமது படைப்புகளைப் பற்றிக் கூறுவார்கள். அதுபோலவே எந்தவொரு கோவிலில் இடம்பெறும் சிற்பங்கள், ஓவியங்கள் இவற்றைச் செய்த எந்த ஒரு ஹிந்து சிற்பியின் பெயரும் ஓவியரின் பெயரும் நமக்குத் தெரியவே செய்யாது.
ஒட்டுமொத்த சமஸ்கிருத இலக்கியத்தை எடுத்துக் கொண்டுபார்த்தால், ஒற்றை சுய சரிதையைக்கூடப் பார்க்கவே முடியாது. ஆண்களே தம்மை விளம்பரப்படுத்திக்கொள்ள விரும்பியிருக்காத நிலையில் ஒரு பெண்மட்டும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பியிருப்பாரா என்ன?
ஹிந்து வாழ்வியலின் ஆதாரமான அம்சம் தர்மம். ஒருவர் தன்னுடைய ஸ்வ தர்மத்தைச் செய்வதில்தான் உச்சபட்ச மன நிறைவு இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒருவர் தனது ஆழ் மனதின் அழைப்புக்கு ஏற்ப அர்ப்பண உணர்வுடன் செயல்படுவதில்தான் உன்னதம் இருக்கிறது. இந்திய சமூகம் தெளிவாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒன்று. இன்னொரு மனிதரின் கடமைகளைச் செய்வது தவறு என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது ஆண், பெண் என மிகத் தெளிவான உடலியல் மாறுபாடுகள் நிலவும் நிலையில் ஆண், பெண் இருவரின் வேலைகளை மாற்றிச் செய்தால் எவ்வளவு பெரிய குழப்பம் ஏற்படும். மனுவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘தாயாவதற்கே பெண்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். தந்தையாவதற்கே ஆண்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள்’. மேலும் அவர் தெளிவாகச் சொல்கிறார்: ‘எனவே வேதங்களில் வரையறுக்கப்பட்டிருக்கும் சடங்கு சம்பிரதாயங்களை கணவன் தன் மனைவியுடன் சேர்ந்தே செய்யவேண்டும்’.
ஜஹாங்கீர் தான் எழுதிய நினைவுக் குறிப்புகளில், ‘இந்தியப் பெண்கள் ஆணில் சரி பாதியானவர்கள்; மதக் கடமைகள் அனைத்திலும் ஆணுக்குத் துணையாக இருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரேம சாகரா என்ற நூல் ‘மனைவி இல்லாமல் செய்யும் யாகத்துக்குப் பலன் கிடையாது’ என்று சொல்கிறது.
திருமணம் தொடர்பான ஆசியக் கோட்பாடென்பது, ஐரோப்பியப் பெண்கள் பொருளாதாரரீதியாகக் கணவனை உறிஞ்சும் ஒட்டுண்ணியாக ஆவதற்கு முந்தைய மத்திய காலங்களில் மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தது. இன்றும் ரோமானிய அல்லது கிரேக்க கிறிஸ்தவ சமூகத்தில் நிலைமை அதிகம் மாறியிருக்கவில்லை. ஆனால் தொழில்மய, ஜனநாயகக் கருத்துகளினால் உந்தப்பட்ட ஐரோப்பிய அமெரிக்க தேசங்களின் மனதுக்கு அதைப் புரிந்துகொள்ள முடிந்திருக்கவில்லை. அது கடமைகளைவிட உரிமைகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறது. பொறுப்புகளைவிட சுய விருப்பங்களையே பெரிதாக நினைக்கிறது. பொறுப்புகளில் இருந்து தப்பி ஓடுவதையே விடுதலை என்று கருதுகிறது.
அப்படியாகத்தான் மேற்கத்திய சீர்திருத்தவாதிகள், கீழைத்தேய பெண்களின் மனங்களில் இல்லாத அதிருப்தியைத் தேடிக் கண்டுபிடித்து முன்வைத்திருக்கிறார்கள். சுய நலமும் கர்வமும் மிகுந்த சிந்தனை என்பது சுய ஆன்ம உணர்தலுக்கான பாதையல்ல என்தை மறந்து செயல்பட்டிருக்கிறார்கள். தொழில்மய மனம் அடிப்படையில் உணர்ச்சிமயமானது. எனவே அன்பையும் திருமணப் பந்தத்தையும் சரியாகப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆசிய சிந்தனையானது தத்துவார்த்தமும், மதச் சார்பும் கொண்டதோடு மிகவும் நடைமுறை சார்ந்ததும் கூட.
இன்றைய மேற்கத்தியக் கோட்பாடானது திருமணம் என்பதை முழுக்கவும் காதல்மயமானதாகவும் தனிப்பட்ட நபர்களின் முழு சுதந்தர விருப்பமாகவும் கருதுகிறது. அப்படியாக தற்செயலாக ‘காதலில் விழுவதை’ மட்டுமே திருமண பந்தத்தின் ஆதார அம்சமாக முன்வைக்கிறது. காதல் முறிந்துபோகிறவர்கள் அல்லது காதலில் விழாதவர்கள் திருமணம் செய்துகொள்ளத் தேவையில்லை என்பதுபோல் சொல்லப்படுகிறது. காதல் உணர்வு தீர்ந்துவிட்டால் திருமணம் செய்திருந்தாலும் விவாக ரத்து செய்துவிடவேண்டும் என்று இருந்தால்தான் இப்படியான சுய நலம் மிகுந்த தனி நபர் விருப்பம் என்பது தர்க்கரீதியாகச் சரி என்று ஆகும்.
உண்மையான காதலின் வெளிப்பாடுதான் காமம்; வெறும் உடல் சுகத்துக்காக ஒரு பந்தத்தை உருவாக்கிக் கொள்வது அல்லது அந்தரங்க உறவைத் தொடர்ந்து நீடிக்கச் செய்வது, வெறுமனே ஒப்புக்காகச் செய்வது என்பதெல்லாம் ஒழுக்கக்கேடானது என்று சொல்வது உயரிய, மத ஒழுக்கம் சார்ந்த பார்வையே. அந்த உயரிய விழுமியமானது தனிநபர்களும் குழுக்களும் முன்வைக்கும் கருத்துகளையும் விலக்கிவைக்கிறது. லட்சிய தனிநபர் வாதம் என்பது அந்த நிலையை முடிந்த அளவுக்கு எட்டுவதாக இருக்கும்.
மேற்குலகின் திருமணப் பந்தம் தனி நபர்களின் சுதந்தரத் தேர்வின் அடிப்படையில் இருப்பதால் அது ஆன்மிக மற்றும் உடல் சார்ந்த லெளகிக ஆசைகளின் நிலையான இணைப்பு ஒன்றை முன்வைப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவேண்டாம். மாறாகப் பெரும்பாலான நேரங்களில் தம்பதிகளை அவர்களிடையே ‘காதல் இல்லாத நிலையிலும்’ அது வலிந்து பிணைத்தே வைத்திருக்கிறது. காதல்தான் இந்தத் திருமண பந்தத்துக்கு அடிப்படையான அம்சம் என்று அவர்கள் சொன்னபோதிலும் பழக்கம், விவேகம், அல்லது குழந்தைகள் பிறந்திருக்கலாம்; கடமை உணர்வு போன்றவற்றால் வேண்டா வெறுப்புடன் திருமண பந்தத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
(தொடரும்)
___________
Ananda Coomaraswamy எழுதிய “The Dance of Shiva: Fourteen Essays” நூலின் தமிழாக்கம்.