இந்திய இலக்கியங்களில் ‘சதி’ (உடன்கட்டை ஏறுதல்) மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. இது ஆச்சரியப்படவேண்டிய விஷயமே இல்லை. தன் கணவரான சிவபெருமானுக்குத் தந்தை தட்சனின் மூலம் இழைக்கப்பட்ட அவமானங்களைக் கண்டு தன் உயிரைப் பார்வதி தேவி மாய்த்துக் கொண்டாள். இதுதான் அனைத்துச் சதிகளுக்குமான முன்மாதிரி.
பழங்காலத் தமிழ் இலக்கியமொன்றில் இடம்பெற்றிருக்கும் காட்சி இது: உடன்கட்டை ஏற முன்வரும் பெண்ணை பிராமணர்கள் தடுக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண்ணோ, ‘என் பதி (கணவர்) இறந்துவிட்டார்; சுடுகாட்டில் கரிய கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்குத் தாங்க முடியாததாக இருக்கலாம்; எனக்கு, பெரிய தோள்களையுடைய என் கணவர் இறந்ததால், அந்த ஈமத் தீயிலுள்ள பிணப்படுக்கையும் அரும்புகளே இல்லாமல், மலர்ந்த தாமரைகளை மட்டுமே உடைய நீர் செறிந்த பெரிய குளமும் ஒரே தன்மையது’ என்கிறாள்.
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
இன்னொரு பெண் தன் கணவருடைய சிதையைத் தானும் படுத்துக்கொள்ளும்படிப் பெரிதாக அமைக்கச் சொல்கிறாள். அவருடன் வாழ்க்கையில் பல கொடும் பாலைகளைக் கடந்து வந்திருக்கிறேன். இந்தக் கொடும் மரணப் பாதையிலும் அவருடன் செல்லவிரும்புகிறேன் என்று சொல்கிறாள். பின்னாளில் ஹர்ஷருடைய தந்தை இறந்ததையடுத்து தாய் சொல்கிறார்:
நான் மகத்தான குலத்தின் (வம்சத்தின்) மரியாதைக்குரிய பெண்; மாபெரும் வீரனின் மனைவி. சிங்கம் போல் நூறு போர்களில் கர்ஜித்து வென்றவரின் மனைவி. சதியைக் கண்டு அஞ்சும் கோழையல்ல நான்.
ஆன்மிகத்திலும் கவித்துவத்திலும் மிக உன்னதமான கபீர்தாஸர் கூட, சுய கர்வத்தை முழுமையாகக் கைவிட்டுவிட்டு இறைவனிடம் முழுமையாகச் சரணடைவது தொடர்பாகப் பேசும்போதெல்லாம் ‘கணவர் இறந்ததும் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் பதிவிரதைகளின் சதியுடனே பெருமையுடன் ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். இந்திய இலக்கிய மரபில் ஆண் பெண் காதல் எல்லாமே ஒருவித ஆன்மிக அனுபவமாகவே சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மகத்தானது ராதை – கிருஷ்ண பிரேமம்.
அக்பரின் காலத்தில் முஹம்மத் ரிஸா நூயி என்ற கவிஞர் ஒரு ஹிந்துப்பெண் திருமணமான நாளிலேயே கணவர் இறந்துவிட, தன் விருப்பத்துடன் உடன்கட்டை ஏறியதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இந்துக்களை ‘உருவ வழிபாட்டாளர்கள்’ என்று குறிப்பிடும் அந்த இஸ்லாமியக் கவிஞருக்கு இந்தச் சம்பவம் ஹிந்து மத ஒடுக்குமுறையாகவோ தார்மிக வீழ்ச்சியாகவோ தோன்றவில்லை. கணவன் உயிர் பிரிந்த பின், மனைவி அவர் மீது காட்டும் அபாரமான பேரன்பாகவே பார்த்து வியந்திருக்கிறார். ஹிந்து ஆண்களின் ஆணாதிக்கக் கொடுமையாக அதைப் பார்க்கவில்லை. பெண்களின் மகத்தான அன்பாகப் பார்த்திருக்கிறார்.
உடன் கட்டை ஏறுவதென்பது வெறும் சுய நலமே (ஆண்களின்); ஆணாதிக்கமே இந்தச் சமூக நடைமுறையில் இருப்பதாக, தன்னால் புரிந்துகொள்ளமுடியாத ஓர் உணர்வு குறித்துச் சொல்லும் நவீன விமர்சகரின் பார்வையில் இருந்து அது எவ்வளவு மாறுபட்டதாக இருக்கிறது பாருங்கள்.
அந்த ஹிந்துப் பெண்ணுக்கு அனைத்து உதவிகளும் செய்து தருவதாகச் சொன்ன பின்னரும் இறந்த கணவருடன் சேர்த்து எரிக்கப்படவேண்டும் என்றே விரும்பியிருக்கிறார். முதலில் அக்பரிடம் இந்த விஷயத்தைச் சொன்னபோது அந்தப் பெண்ணை அழைத்துவரச் சொல்லி செல்வமும் பாதுகாப்பும் தருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவளோ அவர் சொன்னதைக் கேட்கவில்லை. பிராமணர்கள் உடன்கட்டை ஏறவேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. உனக்கு என்ன வேண்டும் கேள்; தருகிறோம் என்று சொன்னபோது, ‘கணவரை எரிக்கும் நெருப்பு என்னையும் எரிக்கட்டும்’ என்று அந்த ஒன்றை மட்டுமே கேட்டுக் கொண்டாள்.
இறுதியில் அக்பர் வேறு வழியில்லாமல், அந்தப் பெண் உடன்கட்டை ஏறச் சம்மதித்தார். ஆனால், அவருடைய மகன் தானியாலை உடன் அனுப்பி உடன்கட்டையில் ஏறுவதில் இருந்து இறுதித் தறுவாயிலும் மனதை மாற்றும்படிக் கேட்டுக்கொண்டார். அந்தப் பெண்ணோ உடன் கட்டை ஏறி, தீ தன்னை எரிக்கும்போதும் துளியும் பதறாமல், கலங்காமல், ‘என் மீது கோபம் கொள்ளாதே… என் மீது கோபம் கொள்ளாதே… என் மீது கோபம் கொள்ளாதே’ என்று சொல்லியபடியே உயிர் துறந்தாள். அதைப் பார்த்த அந்த இஸ்லாமியக் கவிஞர் வியந்து பாடினார்:
காதல் தீயில் கனன்று எரியும் இதயங்களே
இந்தக் கற்பின் கனலியிடம் இருந்து
அன்பின் தீரத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்
யா அல்லா…
இந்தக் காதலின் வழியை எனக்குக் காட்டிக் கொடு…
இந்தக் கன்னிப் பெண்ணின் ஸ்நேகத்தின் தீயை
என் இதயத்தில் பற்றிப் படரச் செய்.
இப்படி வேண்டிக் கொள்பவர் அந்தப் பெண்ணுக்கும் சேர்த்துப் பிரார்த்தனை செய்கிறார்:
யா அல்லா…
பர்தாவினால் மூடப்படாத அந்தக் கன்னிப் பெண்ணை மகிமைப்படுத்துவீராக;
இந்தப் பெண்ணின் கற்பு சொர்க்கத்து தேவதையின் கற்பைவிட அதி தூய்மையானது.
அவளுடைய தலைவனின் முதல் அன்பு முத்தத்தை அவளுக்குக் கிடைக்க வையுங்கள்:
அவளுடைய உயிர்த் தியாகத்தைக் கருணையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.
நவீன கால உடன்கட்டை ஏறல்கள் பற்றி அதைப் பார்த்த ஆங்கிலேயர்கள் எழுதிவைத்திருக்கிறார்கள். 1825-ல் பரோடாவில் நடந்த உடன்கட்டை ஏறுதல் பற்றி ஆர். ஹார்ட்லி கென்னடி, ‘மனதை மாற்றிக்கொள்ளும்படி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பெண் உடன்கட்டை ஏறுவதிலிருந்து இறுதிவரை பின்வாங்கவே இல்லை.
சர் ஃப்ரெட்ரிக் ஹாலிடே எழுதியிருப்பது எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியமானது. இங்கும் ஒரு விதவை, மற்றவர்கள் எவ்வளவு சொல்லியும் தன் மனதை மாற்றிக்கொள்ளவில்லை.
‘அந்தப் பெண் இறுதியாகக் கைவிளக்கைக் கொடுக்கும்படிக் கேட்டார். அதை வாங்கிக் கொண்டு தன் விரலை அதன் சுடரில் காட்டி அது முழுவதுமாக எரிவதுவரை அப்படியே நின்றார். ஒரு மயிலிறகு – எழுதுகோல் மெழுகுவர்த்தியில் காட்டினால் எரிந்து கருகுவதுபோல் விரல் எரிந்து கருகியது. ஆனால், கைவிரல் எரிந்து கருகும் வரையும் எந்தவொரு வலியோ பயமோ இன்றி அந்தப் பெண் உறுதியாக நின்றார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மூன்று நூற்றாண்டுக்கு முன்பாக அக்பர் வேறு வழியின்றிச் சம்மதம் கொடுக்க நேர்ந்ததுபோலவே சர் எஃப் ஹாலிடேயும் அந்தப் பெண்ணின் விருப்பத்துக்கு விட்டுக் கொடுக்கவேண்டிவந்தது.
இந்தியாவில் சில இடங்களில், சில பகுதிகளில் அல்லாமல் பர்தா பொது வழக்காக இருந்ததில்லை என்று சொல்வதுண்டு. பெளத்தர்கள், மராட்டியர்கள் அல்லது இதிகாசங்களில் மட்டுமே இருந்திருந்தது என்றும் சொல்கிறார்கள். சில வரலாற்று அல்லது புராணப் பெண்கள் அல்லாமல் வேறு யாரும் இப்படி முகத்தை மூடிக் கொள்ளும்படியாகச் சிறைப்படுத்தப்படவில்லை என்கிறார்கள். ஆனால் வேறுவகையான உள் ஒடுங்கல்கள் அரண்மனைச் சுவர்களுக்குள் இருந்திருக்கின்றன.
பல வருடங்கள் ராமரும் சீதையும் லக்ஷ்மணனும் கானகத்தில் அருகருகே வசித்திருக்கிறார்கள். இருந்தும் சீதையின் முகத்தை லக்ஷ்மணன் நிமிர்ந்து பார்த்ததே இல்லை. ‘அண்ணனின் மனைவி சீதையின் கால்களுக்கு மேலாக நிமிர்ந்து அவர் பார்த்ததே இல்லை’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பரிச்சயம் இல்லாத பெண்ணைப் பற்றிக் குறிப்பிடும்போது ஹிந்துக்கள் அந்தப் பெண்ணுக்கு என்ன வயது இருந்தாலும் ‘அம்மா’ என்று குறிப்பிடுவதுதான் வழக்கம். இந்தக் கண்ணுக்குப் புலனாகாத சுவர்கள் எல்லாம் பர்தாவுக்குள் அடைப்பதற்குச் சற்றும் குறையாதவையே. இதன் ஒரு விளைவு என்னவென்றால் இந்திய நகரங்களின் இரவுத் தெருக்கள் எல்லாம் ஐரோப்பியத் தெருக்களைவிடப் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக ஆகிவிட்டிருக்கிறது. இந்தியாவுக்கு வந்துசென்ற பல ஐரோப்பியப் பெண்கள் இதை அழுத்தந் திருத்தமாகச் சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.
கீழைத்தேயப் பெண்கள் எல்லாம் அடிமைகளைப் போன்றவர்கள். அவர்களுக்குச் சுதந்தர உணர்வு கொடுத்து மேலெழச் செய்ததெல்லாம் மேற்கத்தியர்களே என்று மேற்கத்தியர்கள் சொல்லிக் கொள்வதுண்டு.
‘சுதந்தரமென்பதை சுய கர்வத்தோடு நாங்கள் இணைத்துப் பார்ப்பதில்லை. கீழைத்தேயப் பெண் யாராக இருக்கிறாரோ அதற்கு எங்கள் கீழைத்தேய சமுதாய, மத கலாச்சாரங்கள் பெண்களைப் பெண்மை உணர்வுடன் மிளிரச் செய்திருப்பதே காரணம். இலக்கியங்களில் கலைகளில் பெண்கள் எவ்வளவு பொக்கிஷமாகப் போற்றப்பட்டிருந்தாலும் அப்படியான பெண்களை ஆணாதிக்கச் சமுதாயமே உருவாக்கியதாக மேற்கத்திய விமர்சகர்கள் குறை சொன்னாலும் அந்தப் பெருமையை நாங்கள் எடுத்துக்கொள்ளப்போவதில்லை’ என்பதே நமது பதிலாக இருக்கும்.
கீழைத்தேயப் பெண்கள், அவர்களின் உள்ளார்ந்த இயல்புகளின் அடிப்படையில் பார்த்தால் வேறு நாட்டுப் பெண்களைவிட உயர்ந்தவர்கள் என்று நாம் சொல்வதில்லை. அவள் அவர்களைவிடப் பழமையானவள், தூய்மையானவள், விசேஷமானவள்; ஆனால் உலகு தழுவியவள்; உலகம் முழுவதும் இருப்பவளைப் போன்றவளே. தொழில்மய சமூகப் பெண் தான் இந்த வழக்கத்தில் இருந்து விலகிச் செல்கிறாள். கற்பும் கண்ணியமும் இனம் சார்ந்தவை அல்ல; உயரிய லட்சியங்களையும் கொள்கைகளையும் சார்ந்தவை. வாழ்க்கை குறித்த குறிப்பிட்ட பார்வையினால் உருவானவை.
சாவித்ரி, பத்மாவதி, சீதா, ராதா, உமா, லீலாவதி, தாரா போன்ற நம் தெய்வீகக் காவிய நாயகிகள் எல்லாம் தேசம் முழுவதிலும் இருப்பவர்களால் போற்றப்படுகிறார்கள். ஏனென்றால் இங்குப் பெண்மை என்பது தாய்மை. உலகம் முழுவதிலுமே இப்படியாக பெண்கள் போற்றப்பட்டிருக்கிறார்கள். கிரேக்க இளவரசி அல்செஸ்டிஸைவிடவும் அர்ப்பண உனர்வுமிகுந்தவர்கள் யார் இருக்கமுடியும்? இத்தாலிய பொறுமையின் சிகரமான க்ரிசெல்டாவைவிட பொறுமையானவர்கள் யார் இருக்கமுடியும்? டெய்ர்ட்ரேயைவிடவும் அன்பானவர்கள் யார் இருக்கமுடியும்? ஃப்ரெஞ்சு வீரப் பெண்மணி ஜோன் ஆஃப் ஆர்க்கைவிடவும் வீரம் நிறைந்தவர்கள் யார் இருக்கமுடியும்? ஜெர்மானிய ப்ரையன்ஹில்டைவிடவும் சாகசம் மிகுந்தவர்கள் யார் இருக்கமுடியும்?
டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது, பல பெண்கள் தமது கணவர் காப்பாற்றப்படாமல் தாங்கள் காப்பாற்றப்படுவதை விரும்பியிருக்கவில்லை. வலுக்கட்டாயப்படுத்தியே இழுத்துச் சென்று காப்பாற்ற வேண்டியிருந்தது. வீரமும் காதலும் எல்லா தேசங்களிலும் எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியாகவே இருந்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல; பழங்காலங்களில் மட்டுமல்ல; ஒருவகையில் மரணத்தைவிடவும் வலிமையானதாக எல்லா இடங்களிலும் அது இருந்துவந்திருக்கிறது.
இந்தியா முன்வைக்கும் லட்சியவாதப் பெண்மை என்பது ஏதோவொரு இனத்துக்கு அல்லது காலகட்டத்துக்கு மட்டுமே சொந்தமானது அல்ல; எங்கெல்லாம் பெண்கள் சுதந்தரமாக தமது உள்ளார்ந்த தன்மைகளுடன் வெளிப்பட அனுமதிக்கப்படுகிறார்களோ; எங்கெல்லாம் மதம், வீரம், கலை, கலாச்சாரம் இவையெல்லாம் தேவையான பாதுகாப்பை வழங்கியிருக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் அப்படியாகவே வெளிப்பட்டிருக்கிறார்கள். நவீன உலகில் சுய சிந்தனையுடன் திட சித்தத்துடன் ஒரு பெண் விரும்பும் சுதந்தர உணர்வுகூட பாதுகாப்பு உணர்வின் உள் முகமாகத் திரும்பிய உணர்வு மட்டுமே. எவ்வளவுக்கு எவ்வளவு சுதந்தரமாக ஆகிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர், அடிமைகள் என்று சொன்னவர்களிடம் நாம் போற்றும் குணங்களையே இவர்களும் வெளிப்படுத்துவார்கள். எதுவானாலும் அது பெண்களை அவர்களிடமிருந்து பாதுகாக்கும் தேவையைவிட ஆண்களுக்கு நிம்மதியையே தரும். நட்புணர்வு இல்லாதவர்களின் சர்வாதிகாரம் என்பது சிறையுமல்ல; விடுதலையுமல்ல.
’என் மீது கோபம் கொள்ளாதே’ என்ற இந்திய சதி மாதாவின் கூக்குரல், யாருக்கும் யாருடைய வாழ்வின் மீதும் எந்தவொரு உரிமையும் கிடையாது; இது எல்லாம் என் சொந்த விஷயம் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. அது நிச்சயம் அபயக் குரல் அல்ல; அவள் இதில் விதியிடமோ யாரிடமோ இருந்து எதையும் யாசிக்கவில்லை. அது தனித்தன்மை வாய்ந்த குரல். மரணத்தையும் தாண்டி தமது அன்புக்குரியவர்களை நேசித்த பெண்கள் அனைவராலும் அது உச்சரிக்கப்பட்டிருக்கிறது.
கான்குபர் காட்டிய அன்பையும் பாதுகாப்பையும் டேய்ர்ட்ரே ’வேண்டாம்’ என்று மறுதலித்தார். ’நிலமோ, உணவோ, பூவுலக வாழ்க்கையோ எதுவுமே எனக்கு வேண்டாம். தங்கமோ வெள்ளியோ குதிரைகளோ எதுவும் வேண்டாம். உஸ்நாச்சின் மகன்கள் கிடத்தப்பட்டிருக்கும் கல்லறைக்கு என்னைப் போகவிடுங்கள்’ என்று மட்டுமே அவள் கேட்டாள். ஆருயிரே… உயிர் நண்பனே… அன்பே… இந்த உலகில் இருக்கும் அனைத்து ஆண்களிலும் என் விருப்பத்துக்குரியவர் நீங்களே… இந்த உலகில் உள்ளவர் அனைவரும் திருமணமானவரும் ஆகாதவரும் என்னைப் பார்த்துப் பொறாமைப்பட்டிருக்கிறார்கள்; நீங்கள் இறந்த பின் இந்த உலகில் நான் உயிர் வாழமாட்டேன். என்று துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ஐயர்லாந்து வீரன் கு-சுலைனைப் பார்த்து எம்மர் சொன்னாள்.
அயர்லாந்து பெண்கள் சுதந்திரமானவர்கள்; இருந்தும் நாம் பொதுவாகப் பழங்காலத்து ஜெர்மானியப் பெண்களையே சுதந்தரம் மற்றும் சாகசப் பெண்மையின் பிரதிநிதிகளாகச் சொல்வது வழக்கம். ஷீல்ட்-மேய்டன் – விக்டரி வாஃப்டர் கவச வீராங்கனை, சிலருக்கு வெற்றியையும் பிறருக்கு அழிவையும் கொண்டுவருபவர் என்றெல்லாம் புகழப்படும் பிரையன்ஹில்ட் தமது விருப்பங்களுக்கு மாறாக ஆண்களால் வற்புறுத்தப்பட்டவளாகவோ கோழையாகப் பணிந்து நடந்தவளாகவோ யாரும் சொல்வதில்லை. சிகர்ட் கொல்லப்பட்டபோது அவள் உடன் கட்டை ஏறியிருக்கிறாள். கன்னாரின் வேண்டுகோள்கள் எல்லாம் கன்ச்சுபாரின் கோரிக்கைகளை டேய்டர் நிராகரித்ததுபோல நிராகரிக்கப்பட்டன. தனது கைகளை அவளுடைய கைகளைச் சுற்றி மாலையாகப் போட்டுக்கொண்டு அவர், ’உயிர் துறக்கவேண்டாம்’ என்றும் ’தனது செல்வங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு வாழ்ந்து கொள்’ என்றும் மன்றாடினார். அங்கிருந்த அனைவரும் அதுபோலவே அவளை உடன் கட்டை ஏறவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால், யார் சொன்னதையும் அவள் கேட்கவில்லை. அவள் சுயமாக எடுக்கும் தீர்மானத்தில் தலையிட வேறு யாருக்கும் உரிமையும் அதிகாரமும் பங்கும் இல்லை என்று தீர்க்கமாகச் சொன்னாள். சிகர்டை மணந்துகொண்டிருந்த இன்னொரு வீரப் பெண்மணி உடன்கட்டை ஏறவில்லை. ஆனால், அவனுக்குத் துரோகம் இழைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டதும் கதறி அழுதாள்:
இப்போது நான் பெருங்காற்று சுழற்றியடிக்கும்
கானகத்துச் சிற்றிலைபோல் ஆகிவிட்டேன்
வெற்றியுடன் வருவேன் என்று அவர் சொன்னது பொய்த்துவிட்டதே
மனதில் பணிவும் வெட்கமும் கொண்டவளின் முகம் பொலிவுடன் திகழும். எல்லா அழகுகளையும் அலங்காரங்களையும்விட நாணமே பெண்ணுக்கு மிகப் பெரிய அணிகலன். பணிவு, இதம் இவை பற்றி மெர்லின் சொல்லும்போது ‘மிகவும் இனிமையானவள், வெட்கப்பட்டதுபோல் தன் தலையை நளினமாகக் குனிந்துகொண்டாள்’ என்று வர்ணிக்கிறார். இந்த வர்ணனை மத்தியகாலச் சாகசக் கதைகள் அனைத்திலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த நாணம் என்பது ஆண்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. இருந்தும் அந்தப் பெண்களைக் காப்பதுதான் வீரனுக்கு அழகு என்று மத்திய கால சாகசங்கள் அனைத்தும் அதைச் சுற்றியே சுழல்கின்றன. ’முதலில் இறைவனை மதித்துப் போற்றவேண்டும்; அடுத்ததாக, பெண்களைக் காக்கப் போரிடவேண்டும்’ என்று சர் தாமஸ் மலோரி எழுதியிருக்கிறார்.
உமாதேவியைப் போல் சீதாதேவியைப் போல் கன்னி மேரி ஒரு லட்சிய பெண்மையின் திரு உருவமே.
எமக்குள் நிறைந்திருக்கும் இந்தப் பெண்மையின் நறுமணத்துக்கு
விண்ணும் மண்ணுமே போதாது.
சமகால சாந்திதாஸ், வித்யாபதியின் கவிதைகளிலும் சிற்பக் கலைகளிலும் பெண்களை லட்சியத் திரு உருவமாகச் சித்திரிப்பதையும் ராதையைப் போன்றவர்களின் பிரேமம் புகழ்ந்து பேசப்படுவதையும் பார்க்கமுடிகிறது.
பெண்களின் நிலை தொடர்பாக மதம் சார்ந்த படைப்புகள், சாகசக் கதைகள் ஆகியவற்றையெல்லாம்விட மிக முக்கியமான ஆவணங்களாக நாட்டுப்புறப்பாடல்களும் அவற்றின் வரிகளும் திகழ்கின்றன. இவை வெகுளித்தனமானவை; மாறும் சூழல்களால் எந்த மாற்றத்துக்கும் ஆளாகாமல் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை. நாட்டுப்புறப் பாடல்களில் இடம் பெறும் பெண்கள் வலிமையானவர்களாக அறிவார்ந்தவர்களாக இருக்கிறார்கள். உலக அனுபவ அறிவு மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். எந்த வகையிலும் பொருளாதாரரீதியாக ஆண்களைச் சார்ந்து இருப்பவர்களாகவோ ஒட்டுண்ணியாகவோ இல்லை. உலகின் எந்தத் தேசத்து நாட்டுப்புறக் கதைகளை எடுத்துக்கொண்டுபார்த்தாலும் பெண்களே தமது காதலைத் துணிந்து வெளிப்படுத்துபவர்களாக இருப்பதைப் பார்க்க முடியும்; ஆண்கள் அல்ல. நாணம் மிகுந்தவர்கள் எனினும் அது அனுமதிக்கும் எல்லைக்குள் ஆணிடம் சென்று தமது காதலை ஏற்கும்படிக் கேட்பவர்களாகவே பெண்கள் இருக்கிறார்கள். ஆணுக்கு, காதலனுக்காக முழுவதையும் தியாகம் செய்யத் தயாராகவும் இருக்கிறார்கள். தொழில்மய உலகம் இந்த நிலைமையைத் தலைகீழாக்கிவிட்டிருக்கிறது. அது ஆண்களைக் காதலுக்கு இறைஞ்சுபவராகவும் பெண்களுக்குச் சேவகராகவும் ஆக்கியிருக்கிறது. இது முற்றிலும் இயல்புக்கு மாறானது. தொழில்மய உலகின் பிற வக்கிரங்களைப் போலவேதான் இதுவும் இருக்கிறது.
நாட்டுப்புறப் பெண்கள் அதிருப்தியில் வேதனையில் முனகிக் கொண்டிருப்பதில்லை. சைல்ட் வாட்டர்ஸ் (லார்ட் ஜான்) பின்னால் நடந்து சென்ற ஃபெயர் ஹெலன் தொழுவத்தில் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கிறாள். அங்கு அவள் பாடுகிறாள்:
ஆராரோ ஆரிரரோ
என் அன்புக் குழந்தையே
உன் தந்தை ஓர் அரசனாக இருந்திருந்தால்
உன் தாய் உன்னைப் பட்டு மெத்தையில் ஈன்றெடுத்திருப்பேன்.
வங்காளத்து மாலன்சமாலாவின் கணவர் இரண்டாம் திருமணம் செய்துகொண்டு இவளைக் கைவிட்டுவிடுகிறார். மறந்தும் போய்விட்டார். அவள் சொல்கிறாள், நான் இப்போது இறந்தாலும் ஒரு பறவையாகவோ பூச்சியாகவோ அல்லது வேறெதுவாகவோ ஆவேன்… அதைப் பற்றியெல்லாம் நான் கலங்கவில்லை. என் அன்புக் கணவன் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறான் அது போதும் எனக்கு.
தொழில்மய உலகில் ஒரு பெண் அதிருப்தியுடன் இருக்கிறாளென்றால் அதைவிட ஆண் எவற்றையெல்லாம் இழந்து நிற்கிறான் என்பதை விவரிக்கவே முடியாது. ஏனென்றால் இயல்பாகவே ஒரு பெண்தான் காதலில் முன்கை எடுப்பவள்; வாழ்க்கையை உருவாக்குபவள் அவளே.
என்னுடனான பந்தமே வாழ்க்கையை நீளச் செய்கிறது
நான் காமமுறும் போதே உன்னை இளமையடையச் செய்கிறேன்.
ஒரு பெண்ணுக்கு, ஆண்கள் ‘அதிகம் வேண்டும்’ என்று கேட்பது ஒரு பெரிய பிரச்னையே இல்லை. பெரு வள்ளல் அவளுக்கு அவன் மிகச் சொற்பத்தையே பெற்றுக் கொள்ளமுடியும் என்பதுதான் வேதனையைத் தரும்.
என் அன்புக் காதலனின் வருகைக்காக
நீண்ட காலமாகக் காத்திருக்கிறேன்
சில நேரங்களில் என் மனம் கலக்கமுறுகிறது
அசெளகரியமாக உணர்கிறேன்
நானே என் அன்பைத் தேடிச் சென்று
என் மனதில் இருப்பதைச் சொல்லிவிடலாமென நினைக்கிறேன்
ஆனால், நான் அப்படிச் சென்று என் காதலனிடம் சொன்னால்
அவன் என் அன்பை மறுதலித்துவிடுவான்
நான் என் அன்பைத் துணிந்து வெளிப்படுத்தினால்
என்னை அவன் மீண்டும் காதலிக்கவே மாட்டான்.
ஒரு பெண் ஆணுக்குச் சேவை செய்யவே விரும்புகிறாள். அவனுடைய சேவையை அல்ல.
புயலும் குளிரும் நிறைந்த இந்தப் பருவத்தில்
சூறைக் காற்று வேகமாக வீசுகிறது
என் அன்பே, இந்த நிலையிலும்
நான் உனக்காகச் சேவை செய்யக் காத்திருக்கிறேன்.
கீழைத்தேயப் பெண்மணி உண்மையில் கீழைத்தேயப் பெண்மணி அல்ல. அவள் பெண் உலகின் பிரதிநிதி. அவள் தன்னியல்பான ஒரு பெண். நவீனப் பெண்களுக்கு இதை ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டால் தப்பித்தலுக்கான புதிய வழியைக் கண்டடைந்துகொள்ளவேண்டும். அன்பில் இருந்து அல்ல; தொழில்மய உலகில் இருந்து தப்பிச் செல்லும் வழியைக் கண்டுகொள்ளவேண்டும். உலகம் முழுவதும் ஒன்றுகூடி இந்தத் தேடலை முன்னெடுக்கமுடியாதா?
(தொடரும்)
___________
Ananda Coomaraswamy எழுதிய “The Dance of Shiva: Fourteen Essays” நூலின் தமிழாக்கம்.