விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கான நிதியைத் திரட்டுவதற்காக 1922 செப்டெம்பர் 19 அன்று தன் பயணத்தைத் தொடங்கிய ரவீந்திரருடன், எல்மிர்ஸ்ட், கவ்ர் கோபால் கோஷ் ஆகியோரும் சென்றனர். பம்பாயில் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் விருந்தினராக தங்கிய அவர், பின்பு பேராசிரியர் சில்வெயின் லெவியுடன் சேர்ந்து, பூனாவிலிருந்த புகழ்பெற்ற அறிஞர் ஆர்.ஜி. பண்டார்கரைச் சந்தித்துப் பேசினார். அன்று மாலை பண்டார்கர் ஆய்வு நிலையத்திற்குச் சென்று வந்தார். செப்டெம்பர் 24 அன்று கிர்லோஸ்கர் தியேட்டரில் இந்திய மறுமலர்ச்சி குறித்து அவர் ஆற்றிய உரையில் அப்போது நிலவி வந்த கல்விமுறையைக் கடுமையாகக் கண்டித்தார்.
அங்கிருந்து பெங்களூருக்குப் புறப்படுகையில் அவருடன் அமெரிக்க சமூக செயல்பாட்டாளரான க்ரெட்சன் க்ரீன் இணைந்து கொண்டார். பின்பு மைசூர் பல்கலைக்கழகத்தில் அவர் உரை நிகழ்த்தினார்.
செப்டெம்பர் 29இல் மதராஸ் வந்தடைந்த அவர், புகழ்பெற்ற வழக்கறிஞரான டி.என். ராமஸ்வாமியின் விருந்தினராகத் தங்கி, தியோசாஃபிகல் சொசைட்டியில் வசித்துவந்த அன்னி பெசண்ட்டைச் சந்தித்துப் பேசினார்.
அன்று மாலை கோகலே ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய வரலாறு- ஒரு பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார். மறுநாள் மதராஸில் அப்போது இயங்கி வந்த ரவீந்திரநாத் கிளப்பிற்கு வருகை தந்து, நகரத்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்துப் பேசினார். அன்று மாலை மீண்டும் கோகலே ஹாலில் கல்வியின் இலக்குகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அக்டோபர் 2 அன்று கோவையில் உள்ள வெரைட்டி ஹாலில் இந்திய வரலாறு- ஒரு பார்வை என்ற தலைப்பில் அவர் ஏற்கனவே ஆற்றியிருந்த உரையைக் கூடியிருந்த மக்களிடையே படித்தார். மறுநாள் கிழக்கிந்திய பல்கலைக்கழகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அக்டோபர் 5 முதல் 8 வரை மங்களூர் நகரில் இருந்த பல்வேறு கல்வி நிலையங்களைப் பார்வையிட்டு ஓய்வெடுத்த அவர், மீண்டும் மதராஸ் திரும்பி வந்து அன்னி பெசண்ட்டுடன் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கான இதழைக் கொண்டுவருவது குறித்து விவாதித்தார்.
அக்டோபர் 9 அன்று இலங்கைக்குக் கப்பலில் புறப்பட்ட அவரோடு தீனபந்து ஆண்ட்ரூஸும் அவரது செயலாளராகப் பயணத்தை மேற்கொண்டார். ரவீந்திரரின் மகன் ரதீந்திரநாத்தும் அவரது மனைவி பிரதிமா தேவியும் இந்த இலங்கைப் பயணத்தில் பின்னர் அவரோடு இணைந்து கொண்டனர். இந்தப் பயணத்தின்போது அவர் எழுதிய கடிதங்களில், ஊர் ஊராகப் பிச்சையெடுக்கும் ஒரு பரதேசியாகவே தன்னைக் கருதிக் கொண்டு, விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கான நிதியைத் தாம் திரட்டி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ரவீந்திரர் இலங்கைக்குப் பயணப்பட்ட நேரத்தில்தான் இந்திய தேசிய காங்கிரசை முன்னுதாரணமாகக் கொண்டு இலங்கையின் முன்னணி அரசியல் செயல்பாட்டாளர்கள் சிலோன் தேசிய காங்கிரஸ் என்ற ஓர் அமைப்பினை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருந்தனர். ஏற்கனவே ரவீந்திரர் தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்ற பெயரைப் பெற்றவராக இப்பகுதியில் அறிமுகமாகியிருந்தார். எனினும் கல்கத்தா பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் அறிஞரும் முன்னணி அரசியல்வாதியுமான டாக்டர் ஆர்தர் டி சில்வாவின் அழைப்பின்பேரில் இலங்கைக்கு வரும் ரவீந்திரரை வரவேற்க அனைவரும் பேதமின்றி ஒன்றுதிரண்டனர்.
இந்தப் பயணத்தின்போது கொழும்பு நகரில் மூன்று கூட்டங்களில் ரவீந்திரர் உரை நிகழ்த்தினார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ‘விஸ்வபாரதியின் உதாரணம்’ என்ற தலைப்பிலும், ஒய் எம் சி ஏ அரங்கில் நடைபெற்ற இரண்டு கூட்டங்களில் ‘இந்தியாவின் வனப்பகுதிப் பல்கலைக்கழகங்கள்’ மற்றும் ‘எனது வாழ்க்கைப் பணியின் வளர்ச்சிப்பாதை’ ஆகிய தலைப்புகளிலும் உரையாற்றினார்.
இந்த மூன்று கூட்டங்களுக்குமே சிலோன் தேசிய காங்கிரசின் முதல் தலைவரான சர். பொன்னம்பலம் அருணாசலம் தலைமை வகித்தார்.
அடுத்து தென் இலங்கையின் முக்கிய நகரமான காலேயில் ஆல்காட் அரங்கில் அவர் உரையாற்றினார். இங்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள வரலாற்று ரீதியான உறவுகளை நினைவூட்டி, அதற்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு நுவரெலியாவிற்குச் சென்று ஐந்து நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டார்.
அங்கிருந்து கப்பலில் கேரளாவிற்குப் பயணப்பட்ட ரவீந்திரர் திருவிதாங்கூர் மகாராஜா ஸ்ரீமூலம் திருநாளின் அழைப்பின்பேரில் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். ரவீந்திரரின் இந்த வருகை குறித்து அறிந்த பிரம்ம சமாஜத்தின் கேரளப் பிரிவைச் சேர்ந்த சுவாமி சிவப்பிரசாத் அவரது பயணத் திட்டத்தில் சிவகிரியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவரது தூண்டுதலின் பேரில் நாராயண குருவின் நெருங்கிய சீடரான டாக்டர் பி. பால்பு, ரவீந்திரர் சிவகிரி மடத்திற்கு வருகைதந்து கேரள மாநிலத்தில் சமூகச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துவரும் நாராயண குருவுடன் உரையாட வேண்டும் என்று முறைப்படி கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளுக்கிணங்க, 1922 நவம்பர் 15 அன்று மாலை 4 மணிக்கு நாராயண குருவைச் சந்திக்க சிவகிரி வருவதாக ஒரு தந்தியின் மூலம் ரவீந்திரர் பதிலளித்தார்.
இந்தப் பயணத்தின்போது ரவீந்திரரின் மகன் ரதீந்திரநாத், மருமகள் பிரதிமா தேவி, தீனபந்து ஆண்ட்ரூஸ் ஆகியோரும் உடனிருந்தனர். ரவீந்திரர் திருவனந்தபுரத்திலிருந்து அட்டிங்கல் நகரத்தை வந்தடைந்தபோது, அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் அமரவைத்து, அணிகலன்கள் பூண்ட யானைகள் புடைசூழ, கேரள மாநிலத்தின் பாரம்பரிய இசைக்கருவிகளின் இன்னிசையோடு, சிவகிரி மடத்திற்கு ஊர்வலமாக அவர் அழைத்து வரப்பட்டார்.
சிவகிரி மடத்தில் ரவீந்திரரையும் அவரது குழுவினரையும் புகழ்பெற்ற மலையாள கவிஞரான குமரன் ஆசான், டாக்டர் பால்பு, சுவாமி சிவப்பிரசாத் ஆகியோர் வரவேற்றனர். நாராயண குரு தான் தங்கியிருக்கும் வைதீக மாடத்தில் தியானத்தை முடித்துவிட்டு வெளியே வந்து ரவீந்திரரை முறைப்படி வரவேற்றார்.
‘வணக்கத்திற்குரிய முனிவரே!’ என்று அவரை விளித்த ரவீந்திரர், பின்னர் வராந்தாவில் அமர்ந்தபடி அவருடன் ஆங்கிலத்தில் உரையாடினார். கல்கத்தாவில் கல்வி கற்றிருந்த கவிஞர் குமரன் ஆசான் ரவீந்திரருடன் வந்திருந்த மற்றவர்களுக்கு சிவகிரி மடத்தின் செயல்பாடுகள் குறித்து வங்காளியில் விளக்கிக் கூறினார்.
‘வாழ்க்கையின் எல்லைக்கே விரட்டப்பட்ட மக்களை மேம்படுத்த எண்ணற்ற செயல்களை நீங்கள் செய்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் உண்டு. உங்களை நேரில் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. (சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு) சுவாமி விவேகானந்தர் தன் கேரளப் பயணத்தின்போது எதிர்கொண்ட கொடுமையான சாதிய பழக்கங்களைக் கண்டு, உங்கள் கேரளத்தை ‘பைத்தியக்காரர்களின் புகலிடம்’ என்று கூறியிருந்தார். சாதியத்திற்கும் பழமைவாதத்திற்கும் எதிரான உங்கள் நற்செயல்களின் மூலம் அதை கடவுள் வசிக்கும் இடமாக மாற்றியிருக்கிறீர்கள். இந்தியாவின் மற்ற பகுதியினரும் பின்பற்றத்தக்க ஒரு முன்மாதிரியாக நீங்கள் திகழ்கிறீர்கள்!” என்று ரவீந்திரர் நாராயண குருவிடம் குறிப்பிட்டார். மேலும் சாந்திநிகேதனுக்கு வருகை தருமாறும் அவருக்கு அழைப்பு விடுத்தார்.
நாராயண குருவை ரவீந்திரர் சந்தித்த செய்தி நாளிதழ்களில் வெளியானதும், அதுவரை குடத்திலிட்ட விளக்காக அந்தப் பகுதியில் மட்டுமே அறியப்பட்டிருந்த நாராயண குருவின் மீதும், அவரது சாதிய எதிர்ப்பு நடவடிக்கைகளின் மீதும் நாடு முழுவதிலும் பெரும் கவனத்தை ஈர்த்து, தேசிய அளவில் அவரது புகழை பரவச் செய்யவும் இந்தச் சந்திப்பு வழிவகுத்தது.
மனித குலத்தின் மேம்பாட்டிற்குப் பங்களிக்கும் கடமையை மேற்கொண்டுள்ள ஒவ்வொருவருமே, சாதி, மதம், இனம் என்ற குறுகிய விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, கல்வியிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்பதைத் தங்களது பொறுப்பாகக் கருதிச் செயல்பட்டவர்கள்தான் ரவீந்திரரும் நாராயண குருவும். காலனிய ஆட்சியில் தங்களை முன்னேற்றிக் கொண்டு உடலுழைப்பு தேவைப்படாத வேலைகளைப் பெறுவதற்கான ஒரு வழியாக கல்வியைக் கருதாமல், மனிதர்களின் தனித்திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான வழியாகவே இவர்கள் இருவரும் கல்வியை கருதினர். இயற்கையைப் பாதுகாப்பது என்பது இவர்களின் கல்வி முறையின் கூர்நோக்காக இருந்தது. மனிதகுலத்தின் இருப்பே இயற்கையான சுற்றுச்சூழலை பாதுகாப்பதில்தான் அடங்கியிருக்கிறது; அதனை அழிப்பது மனித இனத்தின் அழிவிற்கே கொண்டு செல்லும் என்றும் அவர்கள் வலுவாக வாதிட்டு வந்தனர்.
எனினும் நாராயண குரு, ரவீந்திரர் ஆகிய இருவரும் உருவாக்கிய கல்வி முறை முற்றிலும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக இருந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். நாராயண குருவின் கல்வி முறை வேதங்கள், உபநிடதங்கள் போன்ற அடிப்படையிலேயே மதரீதியான, ஆன்மீக ரீதியான எழுத்துக்களைக் கற்பிப்பதில் கவனம் செலுத்தி வந்தது. இதற்கு முற்றிலும் மாறாக, மிகச் சிறு வயதிலேயே அனைத்து வகையான மனிதர்களோடும், அதன்வழி மேற்குலகின் அறிவார்ந்த விஷயங்களோடும் அறிமுகமாகியிருந்த ரவீந்திரர், மேற்குலகின், உள்நாட்டின் அறிவுச் செல்வங்களை உள்ளடக்கியதொரு கல்வி முறையை உருவாக்கி செயல்படுத்தி வந்தார். அவரது மாணவர்கள் இந்தியாவின் பாரம்பரிய எழுத்துக்களோடு கூடவே, மேற்குலகின் எழுத்துக்களையும் அறிந்துகொள்ளும்படியான கல்வி முறையாக அது அமைந்திருந்தது.
அவ்வகையில் கவிஞரும் செயல்பாட்டாளருமான ரவீந்திரரும், துறவியும் செயல்பாட்டாளருமான நாராயண குருவும் சந்தித்துக் கொண்டதென்பது சாதாரணமான ஒன்றல்ல. இந்திய மனங்களின் மீது மேற்கத்திய சிந்தனைகள் மேலாதிக்கம் செலுத்திவந்த தருணத்தில், இந்திய தேசியம் என்ற உணர்வின் வரலாற்றில் இரண்டு மகத்தான சிந்தனையாளர்களின் இணைப்பாகவும் அது இருந்தது.
பிளவுபடாத வங்கத்தில் ரவீந்திரர் எதைச் செய்து கொண்டிருந்தாரோ, அதற்குத் தொலைதூரத்தில் இருந்த, மன்னராட்சி நிலவிய திருவிதாங்கூர் பகுதியில் நாராயண குரு தனக்கேயுரிய வகையில் அதைச் செயல்படுத்தி வந்தார். மனிதகுலத்தின் நலனை மட்டுமே கருதிய, சமூக – கலாச்சார உணர்வு கொண்டவர்களாக இவர்கள் இருவருமே இருந்தனர். காலனியாட்சிக்குத் துதிபாடிக் கொண்டிருந்தவர்களின் மனதில் பீடித்திருந்த அடிமைப்புத்திக்கு முற்றிலும் மாறான வகையில், உள்நாட்டு அறிவு வளத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தும் ஒரு காலத்தை, தங்கள் செயல்பாடுகளால் முன்னிறுத்தியவர்களாகவும் இவர்கள் இருந்தனர்.
அந்நிய ஆட்சியின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வை ஊட்டுவதில் இந்த இருவரின் சிந்தனைகளும் ஒன்றுதிரண்டன என்பதில்தான் இவர்களது சந்திப்பின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது. நாராயண குருவின் முன்முயற்சியின் விளைவாக தீவிரமானதொரு சமூக- கலாசார மாற்றத்தை அன்றைய கேரளப் பகுதி கண்டதெனில், மனித குலத்தின் நலனுக்கான பற்றுறுதியை மக்களிடையே, மாணவர்களிடையே வளர்த்தெடுக்கும் பணியில் ரவீந்திரரின் பங்கு மகத்தானது என்றே கூற வேண்டும். அதற்கான சாட்சியாக விஸ்வபாரதியும் ஸ்ரீநிகேதனும் திகழ்ந்தன.
நாராயண குருவுடனான இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, கொல்லத்தில் பி.ஆர். ராமானுஜம் என்ற தொழிலதிபரைச் சந்தித்தார். அவர் சாந்திநிகேதனில் ஒரு வேதியியல் பரிசோதனை மையத்தை உருவாக்குவதற்குத் தேவையான சோதனைக் கருவிகளோடு, வேதியியல் தொடர்பான 200 நூற்தொகுதிகளையும் ரவீந்திரருக்குப் பரிசாக வழங்கினார். பின்பு ஆலப்புழையில் எலெக்ட்ரிக் தியேட்டரில் நாகரீகத்தின் பிரச்சனைகள் குறித்து உரையாற்றினார். இத்தருணத்தில் அவருக்கு ரூ. 1200 நன்கொடை வழங்கப்பட்டது. ஆல்வாய், எர்ணாகுளம் ஆகிய நகரங்களிலும் அவருக்கு வரவேற்பும் விஸ்வபாரதிக்கான நன்கொடையும் வழங்கப்பட்டது.
அங்கிருந்து மதராஸ் சென்ற அவர் மீண்டும் ஒருமுறை அன்னி பெசண்ட்டைச் சந்தித்து விட்டு பம்பாய் புறப்பட்டார். அங்கு பல்வேறு பார்ஸி அமைப்புகளும் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜொராஷ்ட்ரத்தின் நெறிமுறைகள் குறித்து உரையாற்றினார். சில்வெய்ன் லெவிக்குப் பிறகு விஸ்வபாரதியில் வருகைதரு பேராசிரியராக பணியேற்கவிருந்த செக்கோஸ்லோவாகியாவைச் சேர்ந்த கீழைத்தேய அறிஞரான மோரிஸ் விண்டர்மிட்ஸ் இத்தருணத்தில்தான் பம்பாயில் வந்திறங்கியிருந்தார். அவர் மீதமிருந்த பயணத்தின்போது ரவீந்திரருடன் இணைந்து கொண்டார்.
வங்கத்திற்குத் திரும்பும் வழியில், அகமதாபாத் அருகேயிருந்த காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு ரவீந்திரர் மீண்டும் சென்றார். அப்போது காந்தி சிறையில் இருந்தார். ஆசிரமவாசிகள் மத்தியில் தியாகம் என்பதன் உண்மையான பொருள் பற்றி அவர் உரையாற்றியதோடு, காந்தியின் ஆளுமையை அது எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதையும் எடுத்துக் கூறினார்.
டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் சாந்திநிகேதன் திரும்பிய ரவீந்திரர் பழைய மாணவர்களைச் சந்தித்து உரையாடினார். இத்தருணத்தில் பிரெஞ்சு அறிஞர் ரொமெய்ன் ரோலண்ட், ஒரு கடிதம் மூலம் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எமில் ரோனிகர் என்ற பதிப்பாளர் ஒரு சர்வதேச பதிப்பகத்தை தொடங்கியுள்ளதைத் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் எழுதிய ரவீந்திரர், தனது கோரா நாவல் மற்றும் வெளிநாடுகளிலிருந்து எழுதிய கடிதங்கள் ஆகிய இரண்டு நூல்களை உலக நூலகம் என்ற பெயருடைய அந்தப் பதிப்பகம் ஜெர்மன், ப்ரெஞ்சு மொழிகளில் வெளியிடுவதற்கான தனது அனுமதியை வழங்குவதாகத் தெரிவித்திருந்தார்.
(தொடரும்)
நல்ல தரவுகள் கொண்ட கட்டுரை. வாசித்து மகிழ்ந்தேன். வரலாறு அறிந்தேன்