Skip to content
Home » தமிழும் அறிவியலும் #1 – சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென

தமிழும் அறிவியலும் #1 – சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென

தமிழும் அறிவியலும்

மனித இனத்தின் மிகத் தொன்மையான இலக்கிய வெளிப்பாடு எனக் குகை ஓவியங்களைச் சொல்வார்கள். இந்தோனேசியாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட, கல்தோன்றி மண்தோன்றா தொல் பழங்காலத்தைச் சேர்ந்த குகை வளாகம் 45,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணக்கிடுகிறார்கள். பெரும்பாலும் மிருகங்களின் ஓவியங்கள், அவற்றை வேட்டையாடும் படங்கள் என்றிருக்கும் இந்தக் குகைச் சுவர்களில், வான்வெளி பற்றிய பல பதிவுகளும் காணக்கிடைக்கின்றன. நட்சத்திர மண்டலங்களைப் பற்றிய ஓவியங்கள், காலக்கணக்குகள், வால்வெள்ளி (Comet) வீச்சு போன்றவை இந்தக் குகை ஓவியங்களில் பதிவாகியிருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அப்படிப் பார்த்தால், மனித இனம் ஊன்றிப் படித்த முதல் புத்தகம் விண்வெளியாக இருக்கவேண்டும். விண்வெளியின் மாற்றங்களுடன் தங்கள் காலக்கணக்கை இயல்பாகப் பொருத்திக் கொண்டு, அதன் வழியே வணிகம், பண்பாடு, வாழ்வியல் முறை என ஒரு பெரும் தொடர்ச்சியை உருவாக்கியிருக்கிறோம். பொதுவாக வானியலை அணுகும்போது, அறிவியல் வரையறையைக் கடந்து, கற்பனை வெளிக்குள் புகுந்து, கோள்களின் சஞ்சாரங்களுக்கு ராசிபலன், பரிகாரப் பலன் என வேறொரு தளத்தில் சிலர் பாய்ந்துவிடுவார்கள். அந்தக் கற்பனைக் கட்டங்களும், அதன் வழியே உரைக்கப்படும் பலாபலன்களும் நம்பிக்கை சார்ந்தவையே தவிர அறிவியல் பிரமாணத்திற்கு உட்பட்டவை அல்ல.

சுமேரியர்கள், மாயன்கள், பாபிலோனியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், இந்தியர்கள், அரேபியர்கள் எனப் பலரும் வானியல் கொண்டு காலக்கணக்கைப் பலவகையில் உருவாக்கியிருக்கிறார்கள். மூன்று கணக்குகளின் அடிப்படையில் இந்தக் காலக்கணக்கை நாம் புரிந்துகொள்ளலாம்.

பூமியின் தற்சுழற்சி : சூரிய ஒளி தோன்றி மறைவதைக் கொண்டு நாள் கணக்கை உருவாக்கினர். க்ளியான்தஸ், அரிஸ்டார்கஸ், புளுடார்க் போன்ற கிரேக்க அறிஞர்கள் சூரியனை மையப்படுத்தி பூமி சுற்றி வருவதையும், அதன் தற்சுழற்சியினால் பகல், இரவு தோன்றி மறைவதையும் ஓரளவு கணித்திருந்தாலும், 16ஆம் நூற்றாண்டு சமயம் கோபர்நிகஸ் எனும் ஜெர்மானியர், இதை அறிவியல் உலகில் நிரூபணம் செய்கிறார். இந்திய பாரம்பரியத்திலும் ஆர்யபட்டர் போன்றவர்கள் ஞாயிறு-மையக் கோட்பாட்டை முன்வைத்திருக்கின்றனர். பூமியின் அனைத்து ஜீவராசிகளும், இந்தப் பகல் இரவின் சுழற்சியைக் கொண்டு தங்கள் அன்றாட வாழ்க்கையை இயற்கையாக அமைத்துக் கொண்டிருக்கின்றன. அதுவே மனித இனத்திற்கும் முதன்மையான காலக்கணக்காக அமைந்தது.

நிலவுப்பாதை : பகல் வேளைகள் நாள்தோறும் அதிக மாறுபாடுகள் கொண்டில்லாதபோது, இரவு வேளைகள் தினமும் மாறும் ஒளியைக் கொண்டிருந்ததை மனிதன் கணக்கிட்டதன் பலனாக, நிலவுப் பாதையைக் கண்டுபிடித்தான். ஒவ்வொரு நாளும் வானில் மாறும் பிறை வடிவத்துடன், முழுநிலவிலிருந்து கருநிலவும், கருநிலவிலிருந்து முழுநிலவும் உருமாறுவதைக் கொண்டு சந்திரமானம் (Lunar Calendar) உருவாகியது.

சூரியப் பாதை : பருவநிலை மாற்றங்கள், நீண்டு தேயும் பகல்-இரவு நேரங்கள், அவற்றின் குறிப்பிடத்தக்க ஒழுங்குமுறைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து அவதானித்ததில் உருவானது சூரியப் பாதைக் கணக்கு. பகலில் வானை நிறைத்துக் கொண்டு ஒளிரும் சூரியனையும், இரவில் வானில் தோன்றும் நட்சத்திர மண்டங்களையும் இணைத்து இந்தச் சூரியப் பாதை உருவாகியது. விண்வெளியில் சூரியன் தோன்றும் இடம் நாளடைவில் மாறிக் கொண்டே வருவதை, அந்த உதயபாதையினூடே தோன்றி மறையும் நட்சத்திர மண்டலங்களைக் (12 ராசி மண்டலங்கள்) கொண்டு கணக்கிட்டனர். இன்றைய தூரநோக்கிகள், அண்டவெளி ஆராய்ச்சி மையங்கள், நம் கற்பனைக்கும் எட்டாத பிரபஞ்ச பிம்பத்தை நமக்கு உருவாக்கித் தருகின்றன. ஆனால், குகையில் உறைந்து வாழ்ந்த ஆதி முன்னோர்களால் கூட விண்வெளியைக் கண்டு தங்கள் காலக்கிரமத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்ததுதான் மனித இனம் பெற்ற வரம்.

நாள், மாதம், ஆண்டு என்று ஏதோ ஒரு கணக்கை உருவாக்கிக் கொண்டார்கள் என்றாலும், இத்தகைய காலக்கணக்கிற்கான சீர்மையும் சுழற்சியும் அனைத்து இனத்தினரிடமும் அமைந்திருக்கவில்லை. மனிதனின் அலகுகளுக்கும், இயற்கையின் காலக்கிரமத்திற்கும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.

பூமியில் உண்டாகும் பருவநிலை மாற்றங்களை சூரிய பாதை கொண்டு பகுத்தால், நான்கு பருவங்களைக் கண்டறியலாம். பூமியின் பார்வையிலிருந்து ஞாயிறு உதிக்கும் இடம் வடமுனையிலோ, தென்முனையிலோ அமையும்போது அதை Solstice எனக் குறிப்பிடுவர். சூரியப் பாதை வடக்கு நோக்கித் திரும்பும்போது, பூமியில் பகல் வேளை குறுகியும் இரவு வேளை நீண்டும் இருக்க, அது குளிர்காலத்திற்கான தொடக்கமாகவும் அமைகிறது. அதேபோல், பகல் வேளையும், இரவு வேளையும் சமமாக இருக்கும் சமயம் சூரியப் பாதை பூமத்திய ரேகைக்கு நேரே அமைகிறது. குளிர்காலம் முடிந்து வசந்த பருவம் தொடங்குவதைக் குறிக்கின்ற காலம் இது.

குளிர்காலக் கதிர்திருப்பம் (Winter Solstice) டிசம்பர் 22இல் நிகழ்கிறது. பகல்-இரவு சமமான பொழுதுகளாக நிகழ்வதை இந்து காலக்கணக்கில் ‘விஷுவதி’ எனக் குறிப்பிடுகிறோம். இந்த வசந்தகால சமநாள் (Vernal Equinox) மார்ச் 21இல் நிகழ்கிறது. அடுத்து, பகல்வேளை நீண்டும் இரவுவேளை குறுகியும் காணப்படும் வேனிற்காலக் கதிர்த் திருப்பம் (Summer Solstice). இது ஜூன் 21இல் நிகழ்கிறது. மீண்டும் பகலும் இரவும் சமவேளையாகத் தோன்றும் கூதிர் காலத்தின் Autumn Solstice செப் 23இல் நிகழ்கிறது .

இந்தப் பருவநிலை மாற்றங்களைக் கொண்டு ஓர் ஆண்டு சுழற்சியை கணக்கிடுவதுதான் இந்தியப் பெருநிலத்தின் பல்வேறு காலக்கணக்குகள். தெலுங்கர்களும் கன்னடியர்களும் வசந்தத்தை வரவேற்று, புத்தாண்டுக் கணக்கைத் தொடங்க Vernal Equinoxக்கு அடுத்து வரும் முழுநிலவை முதன்மையாகக் கொள்கின்றனர். ஆனால் நிலவுப் பாதையில் ஒரு மாதத்திற்கு 30 நாட்களுக்கு அரைநாள்போல குறைவதால், அந்த இழப்பை ஈடுசெய்ய 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை யுகாதி / உகாதி பண்டிகை ஏப்ரல் மாதத்திற்கு மாறிவிடும். இது luni-solar காலக்கணக்கு எனலாம். ஞாயிறும் திங்களும் இணைந்த சஞ்சாரக் கணக்கு.

ஆனால் தமிழ் ஆண்டுப் பிறப்பு சற்றுத் தள்ளி ஏப்ரல் 14இல் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதற்கு ஒரு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. சூரிய, சந்திர பாதையை, அவற்றின் பின்புலத்தில் இருக்கும் நட்சத்திர மண்டலங்களின் இருப்பை ஒட்டி Sidereal சுழற்சியைக் கொண்டு கணக்கிடப்படுவதால் இந்த மாற்றம். Equinoxகளும், Solsticeகளும் பருவநிலை மாற்றங்களைக் கணிக்க உதவினால், தமிழர் பின்பற்றும் காலக்கணக்கு, ஞாயிறு, திங்கள், பிற நட்சத்திர மண்டலங்கள் என வானுலகின் பலவற்றின் நகர்தலைப் பிணைத்து உருவாகியது. பூமியின் பார்வையிலிருந்து ஞாயிறு ஏரிஸ் (மேஷ) நட்சத்திர மண்டலத்தின் முன்னால் கடப்பதும், சந்திரமானத்தின்படி, விர்ஜினிஸ் (கன்னி) நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் ஸ்பைகா (சித்திரை) நட்சத்திரத்தினை ஒட்டி முழுநிலவு தோன்றுவதையும் சேர்த்து ஓர் ஆண்டுகணக்கைத் தொடங்குகின்றோம்.

மேலும், சற்றே ஒசிந்தது போலிருக்கும் பூமியின் அச்சு, குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாறுவதால், இந்த Equinoxகள் பின் தள்ளிப் போய்விட்டன என்பர். Equinox மார்ச் 21ஆம் தேதி நிகழ்ந்தாலும், அன்றைய பகலும் இரவும் நிகரான வேளைகளாகப் பூமி முழுவதுமாக இருப்பதில்லை. பூமத்திய ரேகைக்கு நேர் மேலே சூரியன் கடப்பதால், பூமத்திய ரேகைக்கு 5 பாகைகள் வடக்கோ தெற்கோ இருக்கும் பிரதேசங்களில், இந்த பகல்-இரவு சமமாக நிகழ்வது வேறு நாட்களில்தான். இதை Equilux என வானியலில் குறிப்பிடுகிறார்கள். பூமத்திய ரேகைக்கு வடக்கே 5 பாகையில் இருக்கும் பகுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி, பகலும் இரவும் சமப் பொழுதுகளாகத் தோன்றுகிறது. அதேபோல், தெற்கே ஐந்து பாகையில் இருக்கும் பகுதிகளில் ஏப்ரல் 14இல் இந்தச் சமப் பொழுது நாள் வருகிறது. பூமியின் அச்சு வேறு ஒரு கோணத்தில் இருந்த காலத்தில் உருவான காலக்கணக்கை, இந்தக் காலக்கணக்காகக் கொள்ளலாம். நம்முடைய இன்றைய வாணிப, வாழ்வியல் முறைகள் உலக அளவில் பொதுமைப்படுத்தப்பட்ட காலக்கணக்கோடு இயைந்து பயணப்பட்டாலும், இந்தத் தொல்கணக்குகள் நம்முடைய வானியல் பரிணாம மாற்றத்தை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன.

சிலப்பதிகாரம் ‘இந்திரவிழா எடுத்த காதையில், அமரர்களோடு நின்று போர் செய்தமைக்காக சோழமன்னன் முசுகுந்தனைப் பாராட்டி, அமரர்கோன் காவேரிபட்டினத்தைக் காக்க, ஒரு பூதத்தை அனுப்பி வைத்தான் என்கிறது. நாடும் நிலமும் அரசர்களும் மக்களும் மாறிக் கொண்டிருந்தாலும், நம் பண்பாட்டுச் செழுமை, காவல் பூதமாக நம் அடையாளங்களைக் காலத்தில் பாதுகாத்து நிற்கிறது.

0

பகிர:
ஸ்ரீதர் நாராயணன்

ஸ்ரீதர் நாராயணன்

இலக்கியச் சிற்றிதழ்களில் நேர்காணல், நூல் விமர்சனம் என முன்னோடி எழுத்தாளர்களுக்கான சிறப்பிதழ்களை ஒருங்கிணைத்து, பங்காற்றியிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்களில் ஈர்ப்பு கொண்டவர். படிமங்களற்ற கவிதை வடிவம் கொண்டு வாழ்க்கையின் சித்திரங்களைக் காட்சிப்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. தொடர்புக்கு : vnsridhar@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *