Skip to content
Home » தமிழும் அறிவியலும் #3 – காலமற்ற வெளியும் சந்திரசேகர் வரையறையும்

தமிழும் அறிவியலும் #3 – காலமற்ற வெளியும் சந்திரசேகர் வரையறையும்

S. Chandrasekhar

காலமற்ற வெளியை என்னவென்று குறிப்பிடுவது? அப்படியானதொரு வெளியில், அறிவியல் அடிப்படைக் கோட்பாடுகள் முற்றிலும் செயலிழந்து போய்விடுவதால், அதை மனிதனால் உருவகப்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இன்றைய வானியற்பியல் அறிஞர்கள் (Astrophysics) பரந்து விரிந்து செல்லும் இந்தப் பிரபஞ்ச பயணத்தில் பின்னோக்கிச் சென்று, அண்டவெளி ஒரு சிறு குமிழியாகச் சுருங்கி இருந்த காலத்தை 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரென கணிக்கிறார்கள். அந்த ஆதி நொடியின் ட்ரில்லியனில், ட்ரில்லியனில், ட்ரில்லியனில், மில்லியனில் ஒரு பின்னமான (10^-43) தருணம்வரை என்ன நிகழ்ந்திருக்கும் என நமது இயற்பியல் விதிகள் கொண்டு கணிக்க முடிகிறது. மிகப் பெரும் கொதிநிலையும், பருப்பொருள் அடர்த்தியும் கொண்ட அந்தச் சிறு கணு, இப்படியாகப் பீரிட்டு வெடித்து இத்தகைய பிரபஞ்ச வடிவம் எடுத்து பிரும்மாண்டமாக வியாபித்து வந்திருக்கிறது என்றாலும், அந்த அதி துல்லிய பின்னக் கணத்துக்கு முன்னாலான நிலையில், அந்த உயர் கொதிநிலையில், நமது பிரபஞ்சத்தின் ஆதாரச் சக்திகளான புவியீர்ப்பு விசை, மின்காந்தச் சக்தி, வலுமிகு அணுக்கரு விசை, வலுகுறை அணுக்கரு விசை ஆகிய நான்கும் ஒன்றிணைந்த மாறுபட்ட வடிவில் இருந்ததால், நமது அனைத்து இயற்பியல் அடிப்படைகளும் அங்கே தோற்றுப் போகின்றன. அறிவியலின் காலம் அந்தச் சூன்ய வெளியில் உறைந்து நின்று போகிறது.

இந்த அடிப்படை சக்திகளில், வலு குறைந்த சக்தியான புவியீர்ப்பு விசை பற்றிய நமது முறையான புரிதலில் தொடங்கியதுதான், அண்டவெளியின் காலத்தை இவ்வளவு துல்லியமாகப் பின்ன நொடிவரைச் சென்று கணக்கிடும் அறிவியல்.

17ஆம் நூற்றாண்டில், ஐசக் நியூட்டன் இயற்கையின் தத்துவங்களின் கணிதக் கோட்பாடுகள் (Philosophiae Naturalis Principia Mathematica) எனத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டதன் மூலம், பூமியின் புவியீர்ப்பு விசை என்பது இந்தப் பிரபஞ்சவியலின் அடிப்படை விசையாக, அண்டவெளி எங்கும் சீராக இயங்குகிறது என்பதை அறிவியல் உலகுக்கு அறிவித்தார். அதுவரை வானியல் என்பது, சற்று மிதமிஞ்சிய கற்பனைக் கோட்பாடுகளுடன் பழக்கத்தில் இருந்தது. நியூட்டனும் கேம்ப்ரிட்ஜ், ட்ரினிடி கல்லூரியில் சேர்ந்தபோது பல துறைகளைப் பற்றியும் அறிமுகம் செய்து கொள்ளும் ஆர்வத்தில், கோள்கள், நட்சத்திரங்களின் சஞ்சாரங்களைக் கொண்டு பூமியில் பலாபலன்கள் உரைக்கும் Judicial Astrology எனும் சொல்லப்படும் ஜோதிடப் படிப்பிலும் ஆர்வம் செலுத்தினார். ஆனால் வெகு சீக்கிரமே, அந்தப் பாடங்களில் இருந்த வடிவவியல் குறிப்புகளின் போதாமை, அவருடைய அறிவியல் மனதைக் கணிதத்தின்பால் இட்டுச் சென்றது. அவருடைய கோட்பாடுகள் அண்டவெளியை அறிந்து கொள்வதில் மானுட இனத்துக்குப் பல புதிய கதவுகளைத் திறந்துவிட்டன.

18ஆம் நூற்றாண்டில் வில்லியம் ஹர்ஷல் (William Herschel) என்கிற ஐரோப்பிய வானவியல் ஆராய்ச்சியாளர், அவரே சொந்தமாக உருவாக்கிய பெரும் தூரநோக்கியில் (Telescope), மிதுன நட்சத்திர மண்டலத்தின் ஊடே தெரிந்த, புதிய விண்பொருளை, ஒரு புதிய கோள் என வகைப்படுத்தி, கிரேக்க தொன்மத்தில் வானத்தின் முதல் அதிபதியான, டைட்டன்களின் தந்தையாக அறியப்பட்ட யுரேனஸ்ஸின் பெயரை அக்கோளுக்குச் சூட்டினார். அதுவரை, சூரிய குடும்பத்தில் பூமியையும் சேர்த்து ஐந்து கோள்களை மட்டுமே அறிந்து வைத்திருந்த மனிதனுக்கு அது புதிய அறிமுகம். யுரேனஸின் சுற்றுப் பாதையை அவதானித்த அறிவியலாளர்கள், நியூட்டனின் பிரபஞ்சளாவியப் புவியீர்ப்பு விசை கொண்டு, இன்னொரு கோளின் சுற்றுப்பாதையைக் கணித்தார்கள். அந்தக் கணிப்பை மெய்ப்பிக்கும் வகையில் நெப்ட்யூன் கோளும் கண்டுபிடிக்கப்பட்டது.

உர்பென் லெவேரியே (Urbain Le Verrier), ஜான் ஆடம்ஸ் (John Adams) போன்றோர் கணிதக் கோட்பாடுகள் வழியே புதிய கோளை அடையாளப்படுத்த, யோஹான் கெய்ல் (Johann Galle) அதைத் தூரநோக்கியின் வழியே ஊர்ஜிதப்படுத்தினார். நீல நிறக் கோள் என்பதால், ரோமானிய கடல் கடவுளான நெப்ட்யூன் பெயரை அக்கோளுக்கும் வைத்தனர்.

சூரியக் குடும்ப விரிவாக்கத்தை அடுத்து மிகப் பெரும் தாவலாக வானியற்பியல் துறையில் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அதில் முக்கியமானது சென்ற நூற்றாண்டில் அமெரிக்க வானியல் ஆய்வாளரான எட்வின் ஹப்பிள் கண்டுபிடித்த, பால்வீதி மண்டலத்தின் அண்டை வீடான ஆன்டிரமீடா அண்டம் (Andromeda Galaxy). நூறு கோடிகளுக்கும் அதிகமான சூரியக் குடும்பத்தை உள்ளடக்கிய, நூறு கோடிகளுக்கும் அதிகமான அண்டங்களைக் கொண்ட, நம் கற்பனைக்கு அப்பாலான இந்தப் பேரகண்ட பிரபஞ்ச வெளியைக் கணிதக் கோட்பாடுகள் கொண்டு நம் அறிவியலாளர்கள் துல்லியமாக அளந்து காட்டினார்கள். அந்தப் பேரறிஞர் கூட்டத்தில், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் சந்திரசேகர் என்கிற தமிழர். அந்தப் பெருமையோடு, அவருடைய இருபதாவது வயதில் நிகழ்த்திய கண்டுபிடிப்புக்கு, எழுபத்தி மூன்றாவது வயதில் நோபல் பரிசு அளிக்கப்பட்ட சோகமும் சேர்ந்ததுதான் ‘சந்திராவின் வரையறை’. வெண் குறுநட்சத்திரங்கள் (White dwarf stars) அப்படியே நிலைத்திருக்கத் தேவையான திண்ம (Mass) அளவை வரையறுத்ததுதான் ‘நட்சத்திர அமைப்பியலில்’ சந்திரசேகர் நிகழ்த்திய மகத்தான கண்டுபிடிப்பு. சந்திரசேகர் வரையறையைக் கடந்த குறும் நட்சத்திரங்கள், தனது திண்ம மிகுதியால் உண்டாகும் குலைவினால் கருந்துளையாக மாறிவிடும் வாய்ப்புகள் உண்டு.

ஏனோ, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அன்றைய புகழ்பெற்ற அறிவியலாளரான எடிங்க்டன், தொடர்ந்து சந்திரசேகரின் கண்டுபிடிப்பைக் கேலி செய்துகொண்டே இருந்தார். சந்திரசேகரின் ஆராய்ச்சி படிப்பின் தொடக்கத்தில் இருந்தே எடிங்க்டன் அவருடன் நல்ல பரிச்சயத்தில் இருந்தவர். 1935இல், ராயல் அஸ்ட்ரனாமிக்கல் சொசைட்டியில், சந்திரசேகரின் ஆய்வை வாசிக்க ஏற்பாடுகளை ஒருங்கமைத்துக் கொடுத்தவரும் எடிங்க்டன்தான். அந்தக் கூட்டம் தொடங்கும் முன்னர், சந்திரசேகரிடம் நட்புடன் பேசியபடி, அவருடைய நீண்ட ஆய்வுத்தாளை முழுவதுமாக வாசிக்க அதிகப்படியான நேரம் ஒதுக்கியிருப்பதாக எல்லாம் உற்சாகமாக பேசியவர், சந்திரசேகரின் வாசிப்பிற்கு பின்னர் நிகழ்த்திய தனது உரையில், ‘கோமாளித்தனமானது’ என்று மட்டையடியாக அடித்துப் பேசிவிட்டார். எடிங்க்டனின் புகழ்ப் பளுவால் சந்திரசேகரின் கண்டுபிடிப்பை வெளிப்படையாக பல அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது. வெகு காலதாமதமாக அவருக்கான நோபல் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இத்தனைக்கும் சந்திரசேகரின் சித்தப்பாதான், இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியரான சி.வி.ராமன். சந்திரசேகரின் வரையறை மீதான எடிங்க்டன் கிரகணம் விலக அரை நூற்றாண்டு காலம் பிடித்தது என்பது, சந்திரசேகரின் வாழ்நாள் துயரம். அண்டவியல் புதிர்களைக் கூட கணிதக் கோட்பாடுகள் கொண்டு கட்டவிழ்த்து விடலாம். மனித மனங்களின் இருண்ட புதிர்களுக்கு விடை தேடுவது முற்றிலும் இயலாத ஒன்று.

சந்திரசேகரும் சரி, அவருடைய வரையறையின் ஆதாரமான, பிரபஞ்சளவிலான புவியீர்ப்பு விசைக் கோட்பாடுகளை உருவாக்கிய நியூட்டனும் சரி, அண்டவியலைத் தங்களுடைய அறிவியல் மனம் கொண்டு மட்டுமே அளவிட்டார்கள். சந்திரசேகரன் அதைப் பற்றி தன்னுடைய சுயசரிதையில் பிரதானமாகக் குறிப்பிட்டிருந்தார். நியூட்டனுடனைய சித்தாந்த சாய்வுகள், அவருடைய பிற்காலத்தில் பலவகையில் ஆய்வு செய்யப்பட்டிருந்தன.

‘புவியீர்ப்பு விசை, கோள்களின் சஞ்சாரங்களை நமக்கு விளக்கலாம். ஆனால், யார் அந்தக் கோள்களை அப்படியான விசைக்கு உட்படுத்தினார்கள் என்பதை விளக்க முடியாது’ என்று தத்துவார்த்தமாகக் குறிப்பிடுகிறார் நியூட்டன். இன்றைய வானியற்பியல் துறை, பெருவெடிப்பு நிகழ்ந்த அந்தப் பின்ன நொடிக்கு முன்பான, குறும் குமிழியென, அப்பாலுக்கு அப்பால் முற்றி நின்ற சிறு கணுவென, அறியப்படுகின்ற அந்தப் பிரபஞ்சப்புதிரை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கின்றது. அறிவியல் கோட்பாடுகளின் புலப்படாததொரு பரிமாணத்திற்கான கதவு ஒன்று அங்கே திறப்பதற்காக அதிர்ந்தபடி இருக்கிறது.

0

பகிர:
nv-author-image

ஸ்ரீதர் நாராயணன்

இலக்கியச் சிற்றிதழ்களில் நேர்காணல், நூல் விமர்சனம் என முன்னோடி எழுத்தாளர்களுக்கான சிறப்பிதழ்களை ஒருங்கிணைத்து, பங்காற்றியிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்களில் ஈர்ப்பு கொண்டவர். படிமங்களற்ற கவிதை வடிவம் கொண்டு வாழ்க்கையின் சித்திரங்களைக் காட்சிப்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. தொடர்புக்கு : vnsridhar@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *