Skip to content
Home » தமிழகத் தொல்லியல் வரலாறு #8 – பேரூர் என்னும் காஞ்சியம் பெருந்துறை

தமிழகத் தொல்லியல் வரலாறு #8 – பேரூர் என்னும் காஞ்சியம் பெருந்துறை

‘பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை
மேவரு சுற்றமொடு உண்டு இனிது நுகரும்
தீம்புனல் ஆயம் ஆடும்
‘காஞ்சியம் பெருந்துறை’ மணலினும் பலவே!’

நொய்யல் நதியைச் சங்க இலக்கியங்கள் காஞ்சி மாநதி என்று பதிவு செய்கின்றன. காஞ்சியம் பெருந்துறை என்பது இன்றைய பேரூர் நகரம் என்று சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து உறுதி செய்கின்றது. பல நூற்றாண்டுகள் கடந்து நால்வர் பெருமக்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள் இராசகேசரிப் பெருவழியாக, கரூர், திருமுருகன் பூண்டி, அவினாசி தலங்களை அடைந்து பேரூர் வந்தடைந்து, பேரூர் இறைவனை ,

‘மீ கொங்கில்
அணி காஞ்சி வாய்ப்
பேரூர்ப் பெருமானைப்
புலியூர் சிற்றம்பலத்தே
பெற்றாம் அன்றே’

என்று பேரூர் நகரையும், இன்று நொய்யல் என்று அழைக்கப்படும் ஆற்றினையும் குறிப்பிட்டுள்ளார். காலப்போக்கில், வரலாற்று மாற்றத்தால் சங்க இலக்கியம், பக்தி இலக்கியங்களில் குறிப்பிடப்படும் காஞ்சி நதி பிற்காலத்தில் நொய்யல் என்று அழைக்கப்படுகின்றது. அவ்வகையில் ஆறுகள் கொண்டே ஊர்கள் உருவானது என்பது நம் பண்பாட்டின் அடையாளத்தை இன்றும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. நொய்யல் நதியின் கரையில் ஊர் அமைந்து மக்களின் பெரும் வாழ்விடமாக இன்றைய பேரூர் அன்றைய காலத்தில் இருந்தது என்பது இலக்கிய, வரலாற்றுச் சான்றுகளின் வாயிலாக நாம் உணர முடிகின்றது. நொய்யல் நதி சுமார் 170 கி.மீ பயணித்து கரூர் அருகே காவிரியில் கலக்கின்றது. நொய்யல் நதி குறித்தும், பேரூர் குறித்தும் நமது இலக்கியங்கள் பல இடங்களில் பதிவு செய்துள்ளன. ‘அணி காஞ்சி வாய்ப் பேரூர்’ சிற்ப வளத்திலும் இலக்கிய வளத்திலும் வரலாற்றுச் சான்று வளத்திலும் அன்றைய காலத்தில் திருப்பேரூர் என்று அழைக்கப்பட்ட இன்றைய பேரூர் சிறப்புடன் விளங்கியதை நாம் அறிய முடிகின்றது.

பண்டைய காலத்தில் வணிகச் சாத்துகளின் பாதையாக அதாவது இராசகேசரிப் பெருவழிப் பாதைகளில் குறிப்பிடத்தகுந்த ஊராக இன்றைய பேரூர் திகழ்ந்தது என்பது இலக்கியம் மற்றும் தொல்லியல் அகழாய்வுகள் மூலமாக நமக்குக் கிடைக்கின்றது. தமிழகத்தின் அகழாய்வுகள் பெரும்பாலும் புதை காடுகளிலேயே நடத்தப்பட்ட நிலையில், மக்களின் பெரும் வாழ்விடமாகக் கருதப்படும் கோயமுத்தூரின் பேரூரில் 1970 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் திருநீற்றுமேடு என்னும் இடத்திலும், பேரூர் ஆதீனத்திற்குச் சொந்தமான தோப்பிலும் முறையாக அகழாய்வு நடத்தப்பட்டது.

பண்டைய தமிழ் நிலத்தில் ஆடு மாடுகளை மேய்ச்சல் பகுதிகளுக்கு ஓட்டிச் சென்று பட்டி அமைத்துத் தங்கியிருந்து மேய்ப்பர். மாட்டின் சாணங்களை ஓரிடத்தில் குவித்து வைத்து அவர்கள் இடம்பெயரும்போது அந்தச் சாணங்களைத் தீ வைத்துக் கொளுத்தி விடுவர். அதன் காரணமாக பேரூரில் திருநீற்று மேடு அமைந்திருக்கலாம். பேரூர் இறைவன் பெயரும் ‘பட்டி நாயகன்’ என்பது இங்கு வரலாற்றுக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடிகிறது. மேலும் பேரூர் நகரைச் சுற்றி பட்டி என்னும் பெயரில் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கக்கூடிய ஊர்களின் பெயர்களும் இங்கு அமையப்பெற்றுள்ளன. மன்னன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி என்னும் முறைமையில் பேரூரிலும் சங்க காலம் முதல் பிற்காலம் வரை சமயப் பூசல்கள் அதாவது சைவ, வைணவ முறைமைகள் இருந்துள்ளன. பேரூர் நகரில் அல்லது அருகில் பெரிய வைணவ ஆலயம் இருந்துள்ளது என்பதும் பாண்டியர்கள் எழுப்பித்த கோயில்கள் என்பதும் வரலாற்றுச் சான்றுகள் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.

‘பூஞ்சோலை அணிபிறவிற்
காஞ்சி வாய்ப் பேரூர் புக்குத்
திருமாலுக்குக்குன்றமன்னதோர் கோயிலாக்கியும்’

என்னும் சீவரமங்கலச் செப்பேட்டு வரிகளின் மூலமாகவும் இப்பகுதியில் பெரிய வைணவத் திருக்கோயில் இருந்தமைக்கானச் சான்றுகளும் கிடைக்கப்பெறுகின்றன.

தமிழக அகழாய்வுகளின் மூலமாகவே சங்க இலக்கியத்தின் 375 ஊர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. அதுபோலவே சங்க இலக்கியத்தில் பதிற்றுப்பத்து நூலில் குறிப்பிடப்படும் பேரூர் சங்க இலக்கிய ஊராக இருந்தமையை பேரூர் அகழாய்வு முடிவுகள் நமக்குக் காட்டுகின்றன.

தமிழக நில அமைப்புகளின் வாயிலாகப் பேரூர் மருத நிலமாக அடையாளம் காட்டப்படுகின்றது. தமிழர்கள் மேய்ச்சல் தொழிலோடு வேளாண் பணியையும் செம்மையாகச் செய்தார்கள் என்ற குறிப்புகளும், வணிகம் மற்றும் மக்களின் பெரும் வாழ்வியல் கூட்டம் வசித்தமைக்கான சான்றுகளும் பேரூர் அகழாய்வுகளில் கிடைக்கப்பெறுகின்றது. வீடுகள் அமைத்து பல பொருள்களை உபயோகித்து நல்வாழ்வு வாழ்ந்தமைக்கான பல சான்றுகள் பேரூரில் நமக்குக் கிடைக்கின்றது. இதற்கு பதிற்றுப்பத்தில் ‘பேரெழில் வாழ்க்கை’ என்ற கூற்றும் நாம் கவனத்தில் எடுத்தல் வேண்டும்.

சேரர்களின் முத்திரை மற்றும் கட்டட எச்சங்கள் பேரூரின் அகழாய்வுகளில் கிடைக்கப்பெறுகின்றன. 3300 ஆண்டுகள் பழமையான களிமண் தகடு ஒன்றை அகழாய்வாளர்கள் பேரூர் ஆதீனத்தின் இடத்தில் கண்டெடுத்தனர். தாமிரபரணி நதிக்கரை, வைகை நதிக்கரை, காவிரி நதிக்கரை போலவே பண்டைய காலத்தில் நொய்யல் நதிக்கரை (காஞ்சி மாநதி) நாகரீகமும் சிறந்தோங்கி இருந்திருக்கின்றன என்பதை அகழாய்வு முடிவுகள் நமக்குக் காட்டுகின்றன. சங்க கால ஊர்களான கரூர், பேரூர், பூம்புகார், அழகன்குளம், மாங்குளம், மாங்குடி, கொடுமணல், கொற்கை, வசவ சமுத்திரம் போன்ற ஊர்களின் வரலாற்றுச் சான்றுகள் தமிழர்களின் காலத்தை இன்னும் முன்னோக்கிக் கொண்டு செல்கின்றன.

தொல்லியலில் ஐராவதம் மகாதேவன் அவர்கள் செய்த பெரும் பிழைகளில் ஒன்றாக அசோகர் பிராமி எழுத்தில் இருந்துதான் தமிழ் பிராமி எழுத்துகள் தோன்றியிருக்க வேண்டும் என்று கூறியதையே இன்றைய நிலையிலும் பல ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். ஆனால் தமிழ் பிராமி எழுத்துக்கள் அதற்கு முன்னரே அகழாய்வுகள் வாயிலாகக் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. பேரூரிலும் அத்தகைய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

பேரூர் அகழாய்வில் தாய்த்தெய்வ வழிபாடு மற்றும் தெய்வச் சிலைகள் கிடைக்கப்பெறுகின்றன. இதனைக்கொண்டு ஆராய்ந்த அகழாய்வாளர்கள் திரு. பூங்குன்றன் அவர்கள், இப்பகுதி பெரும் குடியிருப்புகள் கொண்டு மக்கள் வாழ்ந்த சான்றுகள் கிடைக்கப்பெறுகின்றன என்றும், சங்க காலம் மற்றும் பெருங்கற்காலச் சான்றுகள் மிகுதியாகப் பேரூரில் கிடைக்கப்பெறுகின்றன என்றும் குறிப்பிடுகிறார்.

கொங்கு நாடு இரும்பு மற்றும் உலோகங்கள் அதிகமாகக் கிடைக்கும் பகுதியாக அடையாளம் காட்டப்படுகின்றன. அவ்வகையில் பேரூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இரும்புப் பொருள்கள் மக்களின் வாழ்வியல் பொருள்களாக இருந்தமைக்கான கூறுகள் கிடைக்கப்பெறுகின்றன. மேலும் பேரூர் அகழாய்வுகளில் கிடைத்த பொருள்களில் துளையிடப்பட்ட கருவிகள், அணிகலன்கள் மிகுதியாகக் கிடைக்கப் பெற்றன. இன வரையறை மற்றும் குடிகளின் அமைப்பால் பொன் அணியும் வழக்கம் தமிழகத்தில் மிகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவில் சாம்பல் மேடுகள் ஆய்வாளர்களின் கவனத்திற்கு இன்றும் உரியவையாகத் திகழ்கின்றன. அவ்வகையில் பேரூர் திருநீற்று மேடு தமிழக அகழாய்வில் முக்கிய இடம்பெறுகின்றன. மக்கள் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் ஆயுதங்களின் மூலம் அகழாய்வுத்துறையினர் வகுத்த காலப்பகுப்பில் பெருங்கற்காலப் பண்பாடு மூன்றாவது காலமாக வரையறை செய்யப்படுகின்றது.

தமிழகத்தில் பல இடங்களில் பெருங்கற்காலப் பண்பாடு அகழாய்வுகளின் வாயிலாகக் கண்டெடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் நொய்யல் நதி உற்பத்தி ஆகி மலைகளைக் கடந்து, ஆறுகளைக் கடந்து, ஊர்களைக் கடந்து பெரிய வாழ்விடத்தைச் சந்திக்கும் ஊராகப் பேரூர் இன்றும் திகழ்கின்றது. பழங்காலத்தில் இறந்தவர்களின் உடலை இயற்கைக்குப் படைக்கும் வழக்கத்தில் இருந்து பின்னர் வரும் காலத்தில் அதாவது பெருங்கற்படைப் பண்பாட்டுக் காலத்தில் சின்னங்கள் உருவாக்கிப் புதைக்கும் நிலை உருவாகி இருக்கின்றது. அந்தச் சான்றுகள் பேரூரின் அகழாய்வுகளில் கிடைக்கப்பெறுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை பெருங்கற்படைச் சின்னங்களாக, கற்திட்டைகள், தாழிகள், ஈமப்பேழைகள்,, குத்துக்கல், நெடுங்கல், கல்வட்டம், இரட்டைக் கல் வரிசை ஆகியவை கிடைக்கப்பெறுகின்றன. மேலே கூறிய பெருங்கற்காலச் சான்றுகள் அனைத்தும் நொய்யல் வழித்தடத்தில் மிகுதியாகக் கிடைக்கப்பெறுகின்றன. பேரூர் நகரைச் சுற்றி ஆங்காங்கே பெருங்கற்படைச் சின்னங்கள், கல் பதுக்கை, நெடுங்கல் கிடைக்கின்றன.

பேரூரில் கிடைத்த காசுகளில் ரோமானியக் காசுகளும், அரச முத்திரைகளையும், மதச் சின்னங்களையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால் இன்னும் பல சான்றுகள் நமக்குக் கிடைக்கப்பெறலாம். பேரூரில் கிடைக்கப் பெற்ற பாண்டியர் வீடு என்று அழைக்கப்படும் கற்பதுக்கைகள் மாண்டவர் வீடு, பாண்டவர் வீடு, பாண்டியர் வீடு என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சான்றாகும்.

பேரூர் நகரைச் சுற்றி மலையடிவாரம், ஆறுகள், சிற்றோடைகள் போன்ற இடங்களில் மக்கள் பண்டைய காலத்தில் வசித்துள்ளனர் என்பதும் பண்டைய காலத்தில் தம் தேவைக்கான உற்பத்தியாக இருந்த பொருள்கள் பிற்காலத்தில் பண்டமாற்றுக்கான உற்பத்தியாக மாறி நாகரீக காலங்கள் உருவாகத்தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவ்வகையில் பேரூர் அகழாய்வுக்குழிகளில் சேரர் முத்திரைகளும், பேரூர் நகரைச் சுற்றி பாண்டிய அரச முத்திரைகளும் பேரூர் குளத்தின் மதகில் பாண்டிய முத்திரைகளும், சோழர்களின் சான்றுகளும் பிற்காலத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இதனைக்கொண்டு பேரூர் பெரும் போர்களைச் சந்தித்து அடிக்கடி பேரரசுகள் மாறி ஆட்சி செலுத்தி உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நொய்யல் நதியின் வெள்ளப்பெருக்கு அல்லது வேறு காரணங்களால் கொடுமணல் அழிந்திருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் பேரூர் நகரம் வாழ்வியல் நகரமாகவும்,சங்க மற்றும் பெருங்கற்கால நகரமாகவும் இருந்து வருகின்றது.

பேரூர் நொய்யல் நதி பற்றியும் அதன் இடையில் தேவி சிறை என்னும் அணை பற்றியும் பேரூர்க் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது. மேலும் அக்கல்வெட்டில் தேவி சிறை அணையால் கோளூர் அணைக்கு எவ்விதப் பாதிப்பும் இருக்கக் கூடாது என்ற அரச கட்டளை பற்றியும் பேரூர்க் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. அதாவது பேரூர் ஊரார்க்கும், புகழிடங் கொடுத்த சோழ நல்லூர் மங்கலத்துக்கும் இவ்வொப்பந்தம் என்றும் சோழ நல்லூர் புதிதாக உருவாக்கப்பட்ட ஊர் என்பதும் கல்வெட்டுச் செய்திகள் மூலம் நாம் அறிய முடிகின்றது.

சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் என்னும் முப்பெரும் வேந்தர்களும் பேரூர் நாட்டை ஆண்டுள்ளனர் என்பதும் முதலாம் இராசராசன், பாண்டிய அரசர்களும், பின்னர் வந்த அரசுகளும் இந்நகரை ஆண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்பாட்டு நிலையில் இரண்டு காலங்களை உள்ளடக்கிய அதாவது பெருங்கற்படைக் காலம், சங்க காலப் பொருள்களை அகழாய்வுகள் மூலம் கண்டெடுத்தனர். பேரூர் நகரை இன்னும் முழுமையாக ஆய்தல் வேண்டும். நகரமயமாதலில் பேரூர் நகரம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. வரலாற்றை மீண்டும் ஆராய்ந்தால் இன்றைய கோவை நகரின் வேர் நகராகத் திகழும் பேரூர் குறித்த பல வரலாறுகள் மீண்டு வரும் என்று நம்புவோம்.

(தொடரும்)

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *