Skip to content
Home » தமிழகத் தொல்லியல் வரலாறு #12 – திருத்தங்கல்

தமிழகத் தொல்லியல் வரலாறு #12 – திருத்தங்கல்

திருத்தங்கல்

‘செங்கோல் தென்னவன் திருந்துதொழில் மறையவர்
தங்காலென்பது ஊரே; அவ்வூர்ப்
பாசிலைப் பொதுளிய போதி மன்றத்து’– (கட்டுரை காதை-74-76)

என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும் தங்காலென்பது இன்றைய சிவகாசி அருகில் இருக்கும் திருத்தங்கல் என்னும் ஊராகும்.

சிலப்பதிகாரத்தின் இன்னொரு இடத்தில்,

‘தடம்புனற் கழனித் தங்கால்’

என்று திருத்தங்கல் பற்றி இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். பண்டைய காலத்தின் புகழ்பெற்ற பயணியாக விளங்கிய ‘டாலமி’ என்பவர் தம்முடைய பயணக்குறிப்பில் ‘தங்கலா’ என்று திருத்தங்கலைச் சுட்டுகிறார். ‘கண்ணகி சரித்திரம்’ என்ற நூலை எழுதிய செல்வக்கேசவராய முதலியார் அவர்கள் இன்றைய திருத்தங்கலே பண்டைய தங்கால் என்று உறுதிபடக்கூறுகிறார்.

பண்டைய காலம் முதல் சங்க காலம், பக்தி இயக்கக் காலம் தாண்டியும் இன்றைய திருத்தங்கல் புகழ்பெற்ற ஊராகத் திகழ்ந்துள்ளது என்பது பல இலக்கியச்சான்றுகளின் வழி நம்மால் அறிய முடிகிறது.

சிலப்பதிகாரத்தின் பல வரிகள் நம் தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை ஆதாரங்களுடன் உணர்த்துகின்றது என்னும் அடிப்படையிலும் ஆராய்ந்தோமெனில் தங்கால் என்னும் பெயரில் அமைந்த இன்றையத் திருத்தங்கல் மிகச்சிறந்த நகரமாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

காடுகளில் வாழ்ந்த மனிதன் கழனிகள் அமைத்தான் என்னும் கூற்றிலிருந்து வரலாறு திருப்புமுனையை அடைகிறது. அவ்வகையில் தமிழகத்தின் தொன்மையான வரலாற்றில் கற்காலம், நுண்கற்காலம், புதிய கற்காலம் ஆகிய நிலையில் பெருங்கற்காலப் பண்பாடு தோன்றுகிறது. இந்தத் தொடர் நிலையே தமிழர் பண்பாடு என்னும் தனித்த மெய்யியல் தோன்றக் காரணமாகின்றது.

திருத்தங்கல் அகழாய்வில் நுண்கற்காலமும் புதிய கற்காலமும் பெருங்கற்காலமும் மிகச்சிறப்புடன் வழக்கில் இருந்துள்ளன என்பதைத் தமிழகத் தொல்லியல் துறை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. திருத்தங்கல் பற்றி ‘ஸ்ரீபாண்டி நாட்டு மதுரோதய வளநாட்டு கருநிலக்குடி நாட்டுத் தேவதான பிரம்மதேயம் திருத்தங்கால்’ என்று 12-ஆம் நூற்றாண்டு ஸ்ரீவல்லபபாண்டியனின் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

திருத்தங்கல் பிரம்மதேய ஊராகத் திகழ்ந்தது என்பதற்குண்டான சான்றுகள் பல நிலைகளில் கிடைக்கப் பெறுகின்றது. வைணவ நடைமுறைகளில் 108 திவ்விய தேச வழிபாடு மிகப்புகழ்பெற்ற ஒன்றாகும். அவ்வகையில் திருத்தங்கல் ஊரில் ‘திருநின்ற நாராயணப் பெருமாள்’ கோவில் 100வது திவ்வியதேசமாகப் போற்றப்படுகின்றது. மேலும் சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகையில் இந்த ஊர் குறிப்பிடப் படுகின்றது. தங்கால் முடக்கொல்லனார் என்னும் புலவர் பற்றிய குறிப்புகளும் இதனோடு ஒன்றுபடுகிறது.

நாடோடி மக்களாக வாழத்தலைப்பட்ட பண்டைய தமிழர்கள் இனக்குழு நிலையில் குடிகளாக வாழ்ந்தனர். அவ்வாறான நிலையில் அரசு முறைகளுக்கு முன்பாக இனக்குழு முறையில் தங்களைத் தாங்களே ஆண்டு கொண்டனர். காலப்போக்கில் அதிகாரமிக்க இனக்குழு அரச நிலையாக மாறி ஆட்சி அதிகாரம் செலுத்தத் தொடங்கினர். பண்டைய காலத்தில் மக்கள் பல இனக்குழுக்களாக வாழ்ந்தனர் என்பதும், பலவிதமான சடங்கு முறைகளைக் கொண்டிருந்தனர் என்பதும் தமிழகத்தின் அகழாய்வுகள் மூலம் நமக்குக் கிடைக்கப் பெறுகின்றது. நம் நாட்டின் பெருமைகள் நமது மண்ணிலேயே கிடைத்து வந்த நிலையில், பிற வெளிநாடுகளில் இதுவரை சங்ககாலத் தமிழகச் சான்றுகள் பெரும்பாலும் கிடைக்கப்பெறாமல் இருந்தன. அண்மையில் மேற்கு நாடுகளிலும், கிழக்கு நாடுகளிலும் சங்ககாலச் சான்றுகள் பல கிடைத்துள்ளன. எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையில் உள்ள ‘குவாசிர் அல் காதிம்’ என்னும் ஊரில் அமெரிக்க நாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் கண்ணன், சாத்தன் என்ற சங்ககாலத் தமிழி எழுத்துப் பொறிப்புக்கள் கிடைத்துள்ளன.

எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் லெய்டன் பல்கலைக்கழகத்தார் நடத்திய அகழ்வாராய்ச்சியில் ‘கொற்ற பூமான்’ என்ற சங்ககாலத் தமிழி எழுத்துக்கள் பொறித்த மதுச்சாடி கிடைத்துள்ளது. இவையிரண்டும் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துப் பொறிப்புக்கள் ஆகும். பல சிறப்புகளை உடைய தமிழகத்தின் பல பகுதிகள் இன்றைய நிலையில் தொல்லியல் துறையால் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வெளிக்கொணரப்பட்டு வருகின்றன.

ஆக, இவ்வளவு சிறப்புகள் உடைய திருத்தங்கலில் அகழாய்வுச் சான்றுகள் தென்பட மேற்பரப்பு ஆய்வுகள் 1994 ஆம் ஆண்டு நடத்தப்படுகின்றது. அதன்வாயிலாகத் திருத்தங்கலில் அகழாய்வுக் களம் உறுதிசெய்யப்பட்டு 1994-95 ஆம் ஆண்டு திரு. நடன.காசிநாதன் என்பவர் தலைமையில் தமிழகத் தொல்லியல் துறையினர் அகழாய்வுகள் குழிகள் அமைக்கத் தொடங்கினர்.

தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வுகளில் திருத்தங்கல் பகுதியில் கிண்ணங்கள், பானைகள், பதார்த்தக் கிண்ணங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. ஶ்ரீவத்சம் என்னும் பெயருடைய களிமண்ணால் ஆன தொல்பொருள் ஒன்றும் கிடைக்கப்பெற்றன. அருகக் கடவுளுக்கும் பெருமாளுக்கும் ‘திருமறுமார்பன்’ என்னும் சிறப்புப் பெயர் உண்டு. சிலப்பதிகாரக் காலகட்டத்தில் திருத்தங்கலில் ‘போதி மன்றம்’ என்னும் சொல்லும், திவ்விய தேசங்களில் ஒன்றான திருநின்ற நாராயணப் பெருமாள் கோயிலும் இவ்விடத்தில் இருப்பதால் ஶ்ரீவத்சம் என்னும் பெயர் குறித்த தொல்பொருள் நமக்கு முக்கியமான சான்றாகத் திகழ்கின்றது.

திருத்தங்கலில் சுடுமண் காதணிகளும் கிடைக்கப்பெற்றதை நாம் நன்கு உற்றுநோக்கினால், செழிப்பான நாகரீகம் உடைய மாந்தர்கள் வாழ்ந்த பகுதியாக இப்பகுதி திகழ்ந்திருக்கும் என்பது புலனாகிறது. சங்க இலக்கியங்களில் மலைபடுகடாம் மற்றும் புறநானூறு ஆகிய நூல்களில் புல் வேய்ந்த குடிசைகள் உள்ள பகுதி என்ற குறிப்புகள் வருவதும் மக்கள் நாகரீக வாழ்வு வாழ்ந்தமையும் குறிப்பிடப்படுகிறது. அவ்வகையில் பல இலக்கியங்களில் தாங்கல் என்னும் திருத்தங்கல் ஊர் பற்றிக் குறிப்புகள் கல்வெட்டுகள் கிடைக்கப் பெறுவதைக் கொண்டு தமிழகத் தொல்லியல் துறை மறுபடியும் திருத்தங்கலில் ஆய்வு மேற்கொண்டு தமிழகத் தொன்மையை நிறுவ வேண்டும்.

(தொடரும்)

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *