தமிழகத்தை ஆண்ட சோழப் பேரரசும், கர்நாடகப் பகுதியை ஆண்ட ஹோய்சாளப் பேரரசும், பத்தாம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதிகளில் வலிமை வாய்ந்த பேரரசாக விளங்கின. சோழ அரசு உருவாகி பத்தாம் நூற்றாண்டில் எழுச்சி வாய்ந்த அரசாக உருவெடுத்தது. அதுபோல ஹோய்சாளப் பேரரசும் பத்தாம் நூற்றாண்டில் பெரும்பாலான பகுதிகளை ஆட்சி செய்தது. சோழப் பேரரசும், ஹோய்சாள அரசுகளும் பதினான்காம் நூற்றாண்டு வரை தென்னிந்தியா முழுவதும் ஆட்சி செய்த பின்னர் வீழ்ச்சி அடையத் தொடங்கின.
ஹளபேடு பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த போசளர்கள் என்று அழைக்கப்படும் ஹோய்சாளர்கள், சாளுக்கியர்களை வீழ்த்தி காவிரிப் படுகை முழுவதும் தங்களின் ஆட்சியை விரிவுபடுத்தினர். ஹோய்சாளர்கள் தங்களின் ஆட்சியில் சைவம், வைணவம், சமணம் போன்ற மதங்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.
ஹோய்சாளர்கள் வேசரப் பாணியை வைத்து தங்களுக்கெனப் புதிய கட்டடக்கலையை அறிமுகப்படுத்தினர். அதனை ஹோய்சாள பாணி என்று வரலாற்றில் பதிவு செய்தனர். கர்நாடகா பகுதிகளில் ஆட்சி செய்த ஹோய்சாளர்கள் சோழர்களின் சிறந்த நட்பினையும் பெற்று இருந்தனர். சில நேரங்களில் சோழ அரசுக்கும், ஹோய்சாள அரசுக்கும் இடையே போர்கள்கூட நடைபெற்றுள்ளது.
வரலாற்றில் தலைக்காடு என்னும் இடம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறியப்படுகிறது. ஹோய்சாளர்கள் முதன்முதலில் சோழர்கள் மீது படையெடுத்து தலைக்காட்டை வென்று தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக மாற்றினார்கள். இந்த நிலை பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் மாறியது. அதாவது சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெரும் அரசனாக உருவெடுத்து சோழ நாட்டைத் தாக்கினான். 1219இல் மூன்றாம் இராஜராஜ சோழனை வென்று, மீண்டும் தனது ஆளுகைக்குட்பட்ட பகுதியாகச் சோழ நாட்டை மாற்றி, அரசை மூன்றாம் இராஜராஜனிடமே வழங்கினான்.
பின்னர் மீண்டும் 1231இல் மூன்றாம் இராஜராஜ சோழனை கைது செய்து சேந்தமங்கலம் கோட்டையில் சிறை வைத்தான். இதனை அறிந்த ஹோய்சாளர்கள் பெரும் படையுடன் வந்து பாண்டியர்களை வீழ்த்தி மூன்றாம் இராஜராஜ சோழனிடம் சோழ ஆட்சியை ஒப்படைக்க, சோழர்களுக்கும் ஹோய்சாளர்களுக்கும் நட்பு மலர்கிறது. இதன்பின்னர் காவிரிப்படுகை பகுதியில் கண்ணனூர் என்ற பகுதியில் தங்களது துணை நகரம் அமைத்து நிலையான ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது.
கண்ணனூர் என்பது இன்றைய சமயபுரம் ஆகும். ஹோய்சாளர்களின் முதன்மை வழிபாட்டுக் கடவுகளாக சமயபுரம் அம்மன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1231இல் தொடங்கி 1296 வரை சோழப்பகுதியை ஹோய்சாளர்கள் ஆட்சி செய்தனர். அதன்பின்னர் சுல்தானியர்களிடம் தங்களது ஆட்சியை இழக்க நேரிட்டாலும் ஹோய்சாள பாணி அரசும், கட்டடக் கலையும் வரலாற்றில் தனித்த இடம் வகிக்கின்றன.
கண்ணனூர் முக்கியமான தலைநகராக விளங்கிய நிலையில், பல சான்றுகளைத் தொல்லியல் மூலம் அறிய வேண்டிய அவசியத்தின் அடிப்படையில் 1982ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கண்ணனூர் பகுதியில் அகழாய்வு மேற்கொண்டது.
கண்ணனூர் அருகே புள்ளம்பாடி எனுமிடத்தில் அகழாய்வு குழிகள் அமைக்கப்பட்டு தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அகழாய்வில் நீரோடும் குழாய் அமைப்புகள் வெளிக்கொணரப்பட்டது. கல் வாய்க்கால் என்று பதிவு செய்து தொல்லியல் துறையினர் இதனை ஆவணப்படுத்தியுள்ளனர்.
இப்பகுதியில் செங்கல் கட்டுமானம் ஒன்றும் தமிழ்நாடு தொல்லியல் துறையால் அடையாளப்படுத்தப்பட்டது.
மூன்று இடங்களில் அகழாய்வு குழிகள் அமைத்து ஆய்வு மேற்கொண்டதில் சீனப் பொருட்களைத் தொல்லியல் துறையினர் கண்டெடுத்தனர். சோழ நாட்டின் வணிகச் சாத்துகள் என்றழைக்கப்படும் வணிகக்குழுக்கள், அன்றைய காலத்தில் பல அயல்நாட்டினரோடு வணிகம் மேற்கொண்டிருந்தனர் என்பதை இங்குக் கிடைத்த பொருட்களின் வழி அறிய முடிந்தது. முதலாம் இராசேந்திர சோழன் காலம்தொட்டே சோழ வணிகர்கள் சீன நாட்டுடன் வணிக உறவு மேற்கொண்டிருந்தனர் என்ற குறிப்புகள் சோழர்கள் என்ற நூலில் நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுவதும் இங்கு உற்று நோக்கத்தக்கது.
தமிழகத்தில் பெரும்பாலும் கிடைக்கக்கூடிய கருப்பு, சிவப்புப் பானையோடுகளையும் கண்ணனூர் பகுதியில் கண்டெடுத்தனர். சுடுமண் மணிகள் என்று அழைக்கப்படும் ஆபரணங்கள் சிலவற்றையும் அகழாய்வில் தொல்லியலாளர்கள் கண்டெடுத்தனர்.
கட்டட மேற்பரப்பு பகுதி ஆணிகள், உடைந்த பல கத்திகளையும் இப்பகுதியில் தொல்லியல் துறையினர் வெளிக்கொணர்ந்தனர். இடைக்காலத்தைச் சேர்ந்த கூரை ஓடுகள், செங்கல் கட்டுமானம் கொண்டு அமைப்பு போன்றவையும் தொல்லியல் துறையால் அடையாளப்படுத்தப்பட்டன.
கி.பி. 11ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலான பொருட்கள் எனத் தொல்லியல் துறையினர் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடுகின்றனர்.
சோழர்களுக்குப் போரில் உதவ வந்த ஹோய்சாளர்களின் வீரநரசிம்மன் படைகள் காவிரிப்படுகையில் நிலைப்படையாகத் தங்க வேண்டிய சூழல் ஏற்பட, வீர சோமேஸ்வரன் என்ற ஹோய்சாள அரசன் இன்றைய சமயபுரம் என்றழைக்கப்படும் கண்ணனூரில் கோட்டை கொத்தளங்கள் கட்டி, தலைநகராக மாற்றி அரசாட்சி புரிந்தான் என்று வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் கண்ணனூர் என்றழைக்கப்படும் சமயபுரம் அருகில் போசலீச்சுவரம் என்ற சிவாலயத்தை வீர சோமேசுவரன் அமைத்ததையும், அக்கோயில் இன்றும் வழிபாட்டு நிலையில் இருப்பதையும் தொல்லியல் ஆய்வுகளின் வழியாகவும், கல்வெட்டுச் சான்றுகளின் வாயிலாகவும் அறிய முடிகின்றது. ஊர் மக்கள் இன்றும் இக்கோயிலை போஜிஸ்வரர் கோயில் என்றே அழைக்கின்றனர். கோயிலின் முகப்புக் கல்வெட்டில் கண்ணனூர் போசலீச்சுவரம் என்ற சொற்கள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இக்கோயில் ஹோய்சாளப் பாணியும், சோழப் பாணியும் கலந்து கட்டப்பட்ட கோயில் என்று குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிடுகிறார்.
ஹோய்சாளர்கள் தமிழகத்தில் பெருப்பாலான கோயில்களுக்குத் திருப்பணி கோயில் கட்டுமானங்கள் செய்து நல்லாட்சி புரிந்த நிலையில், 1296ஆம் சுல்தானியர்களிடம் ஆட்சியை இழக்க நேர்ந்தது. பிற்காலத்தில் கண்ணனூர் என்னும் பெயர் மாறி சமயபுரம் என்ற பெயரே நிலைத்து விட்டது என்று வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
இலக்கியத்தில் ‘புலிகடிமால்’ என்று அழைக்கப்படும் ஹோய்சாளர்கள் பற்றிய குறிப்பு, தமிழக வரலாற்றில் பரவலாகப் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. தமிழகத் தொல்லியல் ஆய்வுகளின் வழியாகவும், சோழ வரலாறுகளின் வாயிலாகவும் அடையாளப்படுத்தப்பட்ட ஹோய்சாளர்கள் பற்றிய குறிப்புகள் மேலும் வெளிக்கொணரப்பட வேண்டும்.
(தொடரும்)