நமது வரலாற்றுக்கு அடிப்படையான சான்றுகளை அகழாய்வுகள் வாயிலாகத் தொல்லியல் துறை மீட்டெடுத்து வருகின்றது. பண்டைய கால இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் நமது நிலப்பரப்பின் பண்டைய வரலாற்றை வெளிக்கொணர உதவுகின்றன.
கள்ளக்குறிச்சியில், தோன்றி கடலூர் பகுதியில் கடலில் கலக்கும் கெடிலம் ஆறு வரலாற்றுக் காலத்துக்கும் அப்பாற்றபட்ட தொன்மை உடையதாகும்.
பண்டைய தமிழ் இலக்கியப் பாடல்களில் பல ஊர்கள் இடம்பெற்று இருக்கின்றன. அதுபோல ஆறுகளும் இடம்பெற்று நம் தொன்மைக்கு வளம் சேர்க்கின்றன. தேவார மூவரில் வயதால் மூத்தவரான திருநாவுக்கரசர், திருவதிகை தலத்தின் மீது பாடிய பாடல்களில் எண்பத்தாறு இடங்களில் கெடிளம் ஆறு பற்றிக் குறிப்பிடுகிறார்.
‘அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே’
‘ஆறெல்லாம் திரையார் ஒண்புனல் பாய் கெடிலக்கரை’
என்று பல இடங்களில் கெடில ஆற்றின் சிறப்பைப் பாடுகிறார்.
அதுபோல சுந்தரரின் தேவாரம், சேக்கிழாரின் பெரியபுராணம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்ற பல இலக்கியங்களிலும் கெடில நதியின் சிறப்பு போற்றப்படுகிறது.
காவிரி பாயும் நாட்டைக் காவிரி நாடு என்று வழங்குவதுபோல கெடில நதி பாயும் பகுதியைக் கெடில நாடு என்று வழங்கும் மரபை அப்பர் சுவாமிகள் என்றழைக்கப்படும் திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார்.
ஒரே பகுதியில் தோன்றி அந்தப்பகுதியிலேயே கடலில் கலக்கிறது கெடில ஆறு. அந்தப்பகுதியில் அரசாண்ட அரசுகள் சேர, சோழ, பாண்டிய அரசுகளுடன் இணக்கப் போக்கையும், தேவைப்படின் போரினையும் மேற்கொண்டனர் என்ற சான்றுகள் இலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கின்றன.
படை வீரம், கொடை வீரம் இரண்டிலும் கெடில அரசுகள் பேரரசுகளுக்கு உதவின என்பதைச் சிறுபாணாற்றுப்படை,
‘காரிக் குதிரைக் காரியோடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரி’
என்னும் பாடல் வழி அறிய முடிகின்றது.
கெடில ஆற்றின் கரையில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்கள் இருந்தமையை இலக்கியங்கள் போற்றுகின்றன. அவ்வகையில் கெடில ஆற்றின் கரையில் சிறப்பு மிகு இருந்த சேந்த மங்கலம் தலைநகராகத் திகழ்ந்திருந்தது என்று அறிய முடிகின்றது.
சேந்த மங்கலம் ஊரின் சிறப்பை வெளிக்கொணரும் பொருட்டு தமிழகத் தொல்லியல் துறை இவ்வூரில் அகழாய்வு நடத்த முடிவுசெய்தது. சேந்தமங்கலம் மத்தியகாலத் தொல்லியல் தளமாகும். இங்கு 1992-93, 1994-95 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வு நடைபெற்றது. இதன்மூலம் சோழர் ஆட்சிக் காலத்தில் தொண்டைமண்டலத்தில் திருமுனைப்பாடியின் ஒரு பகுதியாக சேந்தமங்கலம் இருந்திருக்கிறது என்பதைப் பல்வேறு சான்றுகளின் வாயிலாக உணர முடிகின்றது. பழங்காலத்தில் திருமுனைப்பாடி நாடு, நடுநாடு, சேதி நாடு, சனதாத நாடு எனும் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது.
கால மாற்றத்தில் பல்வேறு அரசர்கள் இப்பகுதியை அரசாண்டனர் என்பதையும், பல்லவர்கள், சம்புவராயர்கள், காடவராயர்கள் எனப் பிரிந்து தனக்கென தனித்தனிச் சிற்றரசுகளை உருவாக்கினர் என்பதையும் வரலாற்றுச் சான்றுகளின் மூலம் அறிய முடிகின்றது.
சம்புவராயர்கள் திருவண்ணாமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனர். காடவராயர்கள் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர். இவர்கள் தங்களைப் பிற்காலப் பல்லவர்கள் என்றும் அழைத்துக்கொண்டனர். இவர்கள் சோழர்களின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு சிற்றரசுகளாக ஆட்சி புரிந்துவந்தனர்.
காடவ மன்னன் மணவாளப்பெருமான் கி.பி.1195இல் சேந்தமங்கலத்தைத் தலைநகராகத் தோற்றுவித்தான் என்று அவனது 5ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவன் இவரது மகன் கோப்பெருஞ்சிங்கன் காடவராயன். கோப்பெருஞ்சிங்க காடவராயனைப் பற்றி வரலாற்று ஆசிரியர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது.
வரலாற்று ஆசிரியர் வேங்கட சுப்பையைர் கூற்றுப்படி காடவ மன்னர் கோப்பெருஞ்சிங்கன் இருவரென்றும், அவர்கள் முறையே முதலாம் கோப்பெருஞ்சிங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் என்கிறார். ‘சோழர் வரலாறு’ என்ற நூலை எழுதிய வரலாற்றாசிரியர் கூற்றுப்படி கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1229 முதல் 1278 வரை ஆட்சிபுரிந்தான் எனக் கூறுகிறார். இக்கருத்தைக் கொண்டு கோப்பெருஞ்சிங்கன் ஒருவனாக இருக்கக்கூடும் என்று அறிய முடிகிறது.
சேந்தமங்கலத்தில் 1995, 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்த சான்றுகளின் மூலம் மணவாளப்பெருமான் என்ற காடவராயனுக்குப் பிறகு அவனது மகன் ஆட்சிக்கு வந்தான் என்பது உறுதியாகிறது.
தமிழகத் தொல்லியல் துறை சார்பில் சேந்தமங்கலம் ஊரில் குயவனோடை என்ற இடத்தில் அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டன. இந்தக் குழிகளின் மூலம் ஓடுகள், செங்கற்கள், வட்டச்சில்லுகள், சுடுமண் குழாய்கள் ஆகியவற்றைத் தமிழகத்தொல்லியல் துறையினர் வெளிக்கொணர்ந்தனர். மேலும் அதிக அளவில் கருப்பு-சிவப்பு, பழுப்பு, ரெளலட் ஓடுகள் கிடைக்கப்பெற்றன.
அகழாய்வில் முக்கிய விடயமாக முதலாம் இராசராசன் காலத்திய காசுகளும் கண்டெடுக்கப்பட்டன. வரலாற்றுக் காலத்துக்கு முன்னரே மக்கள் இவ்விடங்களில் வாழ்ந்தனர் என்ற குறிப்புகளும் கிடைக்கப்பெறுகின்றன. சேந்த மங்கலத்தில் அரண்மனைகளும் கோட்டைகளும் கட்டி காடவ அரசர்கள் அரசாண்டனர் என்று வரலாற்றுக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.
சேந்த மங்கலத்தில் இரண்டு காலகட்டமாக 14 அகழாய்வுக் குழிகள் வாயிலாக அகழாய்வு மேற்கொண்டதில், அங்கிருந்த கட்டட கட்டுமானங்கள், கங்கை கொண்ட சோழபுரத்தின் அரண்மனை அமைப்புடன் இரட்டைக் கட்டுமானச் சுவர்கள் அமைப்பிலேயே கட்டப்பட்டு இருப்பதைத் தொல்லியல் துறையினர் உறுதி செய்தனர். இவ்வாறான கட்டட அமைப்பு முறையில் நீண்ட காலத்திற்குக் கட்டடம் நிலைத்து நிற்கும் என்பதை உணர முடிகிறது.
சேந்த மங்கலத்தில் கிடைக்கப்பெற்ற பாவை பொம்மைகளின் மூலம் 12ஆம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பகுதியில் கெடில நதி பகுதியில் சுடுமண் கலை மிகச்சிறப்புப் பெற்று விளங்கியதை அறிய முடிகிறது. கோட்டை மேடு, குயவனோடை போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் வழி நம் வரலாற்றின் மீட்சியைத் தொல்லியல் துறையினர் வெளிக்கொணர்ந்தனர்.
கெடில நதி பகுதிகள், சேந்தமங்கலம் உள்ளிட்ட சில பகுதிகள் வரலாற்றுக் காலம் தொட்டு 15ஆம் நூற்றாண்டு வரை மிகச்சிறப்புடன் விளங்கியமையும், அப்பகுதியினர் அயல் நாட்டு வணிகத் தொடர்புகளையும் கொண்டிருந்தன என்றும் உணர முடிகிறது.
(தொடரும்)