ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ உயர் மணற் சேர்ப்ப
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே
என்று இன்றைய தரங்கம்பாடியைச் சங்க இலக்கியத்தின் நற்றிணையிலும்,
பொறையாறு என்றழைத்த சான்றும்
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான்,
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப்
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை
என்று அகநானூற்றிலும், பெரியன் என்னும் பெயரை உடைய அரசன் அரசாட்சி செய்த சான்று இலக்கியச் சான்றுகளாக நமக்குக் கிடைக்கின்றன. சங்க இலக்கியக் காலத்திலேயே இன்றைய தரங்கம்பாடி சிறந்த கடல் துறைமுகமாக விளங்கியிருப்பதை நாம் அறிய முடிகிறது.
அடிக்கடி இப்பகுதியில் கடலால் மக்கள் வாழ்விடங்கள் பாதித்தமையால், பொறையாறு பகுதிக்கு மக்கள் வாழ்விடங்களை அமைக்கத் தலைப்பட்டனர் என்பதையும் அறிய முடிகின்றது.
குலசேகரப் பாண்டியன் எனும் அரசன் இவ்வூரில் கோயில் உண்டாக்கினான் என்பதைக் கோயில் கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. பொறையாறு என்றழைக்கப்பட்ட பகுதி சடங்கம்பாடி என்றழைக்கப்பட்டது என்று தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சடங்கன் என்பது சிவபெருமானின் பெயர் என்றும், பாடி என்பது நகரைக் குறிக்கும் சொல் என்பதையும் கொண்டு இந்த ஊரின் காரணப் பெயரை நாம் அறியலாம்.
ஐந்தாம் நூற்றாண்டு வரை சிறந்த நகராக விளங்கிய தரங்கம்பாடி, பிற்காலத்தில் கடல் சீற்றங்கள் காரணமாக அழியத் தொடங்கியிருத்தலை 1306ஆம் ஆண்டு கோயில் கட்டுமானம் நமக்கு எடுத்துரைக்கிறது. குலசேகரப்பாண்டியன் எடுப்பித்த கோயிலின் மூலவர் கட்டுமானம் கொண்ட எஞ்சிய பகுதி மட்டுமே இன்று மிஞ்சியிருத்தலைக் கொண்டு அதனை அறியமுடிகிறது.
15ஆம் நூற்றாண்டில் வணிகத்தின் பொருட்டு வந்த போர்த்துகீசியர்கள் தரங்கம்பாடியை வணிகத்துறைமுகமாகப் பயன்படுத்தினர் என்பதை இன்றைய தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அகழ்வைப்பகச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. தஞ்சைப் பகுதியை ஆட்சி செய்த இரகுநாத நாயக்க அரசரின் அனுமதியின் பேரில் ‘ஓவ் கிட்டி’ என்னும் பெயரை உடைய கப்பல்படைத் தலைவர் கடற்கரைக்கு அருகில் மிகப்பிரமாண்டமான டேனிஷ் கோட்டையை 1620இல் கட்டினார் என்ற குறிப்புகள் கிடைக்கின்றன.
1616ஆம் ஆண்டு டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட, தஞ்சை அரசருக்கும், டென்மார்க் அரசருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் பனை ஓலை வடிவில் பொன் ஓலையில் எழுதப்பட்டது. இந்த ஒப்பந்த ஓலை இன்றும் கோபன் கேகனில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன் நகல் டேனிஷ் கோட்டையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
1845ஆம் ஆண்டு வரை தரங்கம்பாடி பகுதியில் டேனிஷ் கோட்டையைத் தலைமை இடமாகக் கொண்டு போர்த்துகீசியர்கள் வணிகமும் அரசாட்சியும் நடத்தி வந்தனர். ஆங்கிலேயர்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் நிகராக போர்த்துகீசியர்களால் போட்டியிட முடியாத நிலையில், ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் கோட்டையை ஆங்கிலேயர்களுக்கு விற்றுவிட்டனர். இதையடுத்து 1947ஆம் ஆண்டு வரை தரங்கம்பாடி ஆங்கிலேயர்கள் வசமிருந்தன என்பதை வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் டேனிஷ் கோட்டையில் நீதிமன்றமும், அரசு அலுவலகங்களும் செயல்பட்டன. 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறை டேனிஷ் கோட்டையை வரலாற்றுச் சின்னமாக அறிவித்தவுடன், கோட்டையும் அகழ்வைப்பகமும் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
2001ஆம் ஆண்டு தமிழகத் தொல்லியல் துறையினர் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை அகழாய்வு செய்ய முடிவெடுத்தனர். இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோட்டை மதில் சுவரின் ஒரு பகுதி, கோட்டையின் உள்ளே உள்ள மைதானப் பகுதி ஆகிய இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டன. 2001ஆம் ஆண்டு மழையினால் டேனிஷ் கோட்டை மதில் சுவர் இடிந்து விழ அந்தப்பகுதியையும் தொல்லியல் துறையினர் அகழாய்வுக்கு உட்படுத்தினர். மதில் சுவர் கட்டுமானத்திலும், பிற இடங்களில் கட்டப்பட்டுள்ள சுவர்களிலும் உள்ள செங்கல்கள் தரமான வகையில் கட்டப்பட்டிருப்பதைத் தொல்லியல் துறையினர் வெளிப்படுத்தினர்.
கோட்டையின் நடு மைதானம் பகுதியில் மூன்று இடங்களில் தொல்லியல் துறையினர் குழிகள் அமைத்து அகழாய்வு மேற்கொண்டதில், மைதானத்தின் சில பகுதிகள் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மண் கொட்டி மூடப்பட்டு இருப்பதையும் தொல்லியல் அகழாய்வு அறிக்கையில் வெளிப்படுத்தினர்.
கோட்டையைச் சுற்றிலும் அகழி இருந்தமையை டென்மார்க் பேராசிரியர் நீல்ஸ் என்பவர் வெளிப்படுத்த, அதனைத் தொடர்ந்து தமிழகத் தொல்லியல் துறை, மத்தியத் தொல்லியல் துறை ஆகியவற்றின் அனுமதியுடன் அகழிப் பகுதி அகழாய்வு செய்யப்பட்டது. அகழியைக் கடந்து கோட்டைக்குள் செல்லச் செங்கல் மேடைகளும், அகழியில் கல் மேடைகளை இணைக்க மரப்பாலமும் இருந்தமை அகழாய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
போர்த்துகீசியர்கள் உருவாக்கிய அகழியை ஆங்கிலேயர்கள் பிற்காலத்தில் மண்கொண்டு மூடி, வாகனங்கள் செல்லும் வழியை ஏற்படுத்தினர் என்பதைத் தொல்லியல் துறையினர் வெளிக்கொணர்ந்தனர்.
தரங்கம்பாடி அகழாய்வில் டென்மார்க் நாட்டின் அரச சின்னமான கடல்கன்னி சுதைச்சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. கோட்டையின் இரு மருங்கிலும் வரவேற்புபோல இந்தச் சுதைச்சிற்பங்கள் அகழியின் தொடக்கத்தில் அமைக்கப்பட்டிருந்ததை அகழாய்வு மூலம் கண்டெடுத்தனர். தரங்கம்பாடி அகழாய்வில் பண்டைய சங்க காலப் பானைகள் முதல் டேனிஷ்காலப் பானைகள் வரை பல பொருட்கள் கிடைத்தமையைத் தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது. கோட்டையின் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நிலையில் ஒரு கிலோ எடையில் குண்டுகள் சிலவும் நீளமான ஆணிகளும் கண்டெடுக்கப்பட்டன.
இன்றைய டேனிஷ் அகழ் வைப்பகத்தில் சுமார் 500 காசுகள் சேகரிக்கப்பட்டு, காட்சிப்படுத்தி உள்ளனர். தரங்கம்பாடியின் வடக்குப் பகுதியில் ஒழுகைமங்கலம் என்னும் ஊரில் நாணயங்கள் அச்சிடும் சாலை ஒன்றை டென்மார்க் நாட்டு அரசினர் சார்பில் ஏற்படுத்தி இருந்தனர். நாணயங்கள் அச்சிடும் சாலையை நம் நாட்டு அரசர்கள் அக்க சாலை என்ற பெயரில் அழைப்பர்.
டேனிஷ் அகழ் வைப்பகத்தில் இருந்த ஒரு கடித நகலைப் பற்றியும் இங்கு அவசியம் பதிவு செய்ய வேண்டும். அதாவது மராட்டிய அரசர்கள் ஆயிரம் துப்பாக்கிகளையும், 5000 ரூபாய் வராகனும் கடனாகக் கொடுத்து உதவுமாறு டேனிஷ் கோட்டை அரசுக்குக் கடிதம் எழுதியதைக் கொண்டு டேனிஷ் கோட்டையினர் மிகச்சிறந்த படை பலத்துடன் இருந்திருக்கின்றனர் என்பது புலனாகிறது. இந்தக் கடித நகலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 1620 முதல் 1845 வரை 52 டென்மார்க் ஆளுநர்கள் இந்தப்பகுதியை அரசாட்சி செய்துள்ளனர் என்ற பட்டியலும் இங்கு குறிப்பிடத்தக்கது.

1706ஆம் ஆண்டு சமயப்பணியின் பொருட்டு தரங்கம்பாடி வந்த சிகன்பால்கு, சில ஆண்டுகளில் தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார். சீகன்பால்கு சேகரித்த தமிழ் நூல்களு, பிற பொருட்களும் ஹாலே பல்கலைக்கழகத்தில் உள்ள வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 40,000 சொற்கள் கொண்ட தமிழ் அகராதியையும் சீகன்பால்கு வெளியிட்டார். 1711ஆம் ஆண்டு கிறித்தவச் சமயத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிப்பெயர்த்தமைக்காக டேனிஷ் ஆளுநர் சீகன் பால்கைச் சிறையில் அடைத்தார். சீகன்பால்கு சிறையில் அடைக்கப்பட்ட இடத்தைச் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வண்ணம் தொல்லியல் துறையினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
சீகன்பால்கு முதன்முதலில் 1713ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரத்தைத் தரங்கம்பாடி வரவைத்து நூல்களை அச்சிட்டார். தமிழ் மொழியில் நூல் வடிவங்களுக்கு முன்னோடி சீகன் பால்கு என்பது இன்றைய தலைமுறையினர் அறியாத ஒன்று. சீகன் பால்கு முயற்சிக்குப் பிறகே தமிழ் மொழியில் பல நூல்கள் அச்சு வடிவம் பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் குறிப்புகள் அனைத்தும் தரங்கம்பாடிக் காப்பகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழிக்கு முதலில் அச்சு இயந்திரம் உருவாக்கியவராக சீகன்பால்கு தற்காலத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறார். இன்றைய கல்வி நிறுவனங்கள் இளைய தலைமுறையினரிடம் இதனை எடுத்துச் சொல்ல வேண்டியது மிக அவசியமானதாகும்.
குலசேகரப்பாண்டியன் கட்டுவித்த மாசிலாமணி திருக்கோவிலின் அமைப்பு டென்மார்க் நாட்டின் ஆவணக் காப்பகத்தில் இன்றும் பாதுகாத்து வருகின்றனர். அதனை நோக்கும்போது பெரிய அளவிலான கோயிலாக இந்தக் கோயில் இருந்திருக்கின்றது என்பதும் ஆய்வுகளின் வழி அறிய முடிகின்றது. கோயிலின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்த நிலையில், கோயிலின் ஒரு கல்வெட்டு மட்டும் கடலில் இருந்து மீட்கப்பட்டு டேனிஷ் காப்பகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடியை முக்கிய வணிக நகராகக் கொண்டு 250 ஆண்டுகளும், ஆங்கிலயர்கள் 100 ஆண்டுகளும் அரசாட்சி நடத்தினர். இந்தக் காலகட்டத்தில் போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கட்டடங்கள், கலைப்பொருட்கள், டேனிஷ்கால ஆயுதங்கள், சோழர்காலக் கற்சிற்பங்கள், சங்ககால முதுமக்கள் தாழி, பீரங்கிகள், கோட்டையில் கிடைத்த பல அரிய பொருட்கள் ஆகியவை அகழ் வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
டென்மார்க் நாட்டினர் அவர்கள் சார்ந்த கலைப்பொருட்களை மிக அழகிய முறையில் பல வருடங்களாக 1845க்குப் பிறகு பாதுகாத்து வருவதும், நம் நாட்டில் கலைப் பொருட்கள் பராமரிப்பின்றி இருப்பதும் இங்கு சுட்டத்தக்கது. தொல்லியல் துறையினர் மிக அழகிய முறையில் டேனிஷ் கோட்டையைப் பராமரித்து வருவது பாராட்டத்தக்கது. நம் நாட்டின் வரலாற்றை இலக்கியங்களில் தொடங்கி வெளிநாட்டுக் குறிப்புகள், கல்வெட்டுகள், அகழாய்வுகள் மூலம் தமிழகத் தொல்லியல் துறை மீட்டு வருவது நம் வரலாற்றைக் காட்சிப்படுத்தும் பெரும்பணிகளில் முக்கியமானதாகும்.
(தொடரும்)