Skip to content
Home » தமிழகத் தொல்லியல் வரலாறு #28 – கீழடி

தமிழகத் தொல்லியல் வரலாறு #28 – கீழடி

வையை அன்ன வழக்குடை வாயில்
வகை பெற எழுந்து வானம் மூழ்கி,
சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல்
யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்,

என்று வைகை ஆற்றின் சிறப்பினைச் சங்க இலக்கியம் போற்றுகின்றது.

உலகம் முழுமையும் மனித நாகரீகம் ஆற்றங்கரைகளில் தோன்றிச் செழிப்படைந்தன என்று சான்றுகள் மெய்ப்பித்து வருகின்றன. Indus Valley எனும் நாகரீகத்தை உலக அளவில் கொண்டாடி, சிந்து சமவெளியை இந்திய வரலாறு போற்றுகிறது. ஆனால் சிந்து சமவெளி காலத்துக்கு முன்பாகவே பெரும் நாகரீகத்துடன், வாழ்வியல் கூறுகளுடன், நகரமைப்புகளுடன் பெரும் சிறப்புடன் வாழ்ந்த மக்களைக் குறித்து சங்க இலக்கியங்கள் போற்றி உள்ளன. ஆனால் சிந்துவெளிக்குக் கிடைத்த முக்கியத்துவம் கீழடிக்கோ தமிழகத்தின் பிற தொல்லியல் இடங்களுக்கோ கிடைக்கப்பெறவில்லை.

திரு.அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களின் பணியின் காரணமாகவும், ஊடகங்கள், மக்களின் ஆர்வம் காரணமாகவும் ‘கீழடி தமிழகத்தின் தாய்மடி’ எனும் பெருமை தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் தொல்லியல் குறித்த ஆர்வம் மேலோங்கி வருகின்றது. தமிழகத்தில் கீழடி அகழாய்வுக்குப் பிறகுதான் தமிழகக் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களை அகழாய்வு இடங்களுக்குக் களப்பயணம் அழைத்துச் செல்லும் நடைமுறையும் உருவானது.

நமது முன்னோர்களின் பழமையைத் தேடி ஆவணப்படுத்தும் பணியில் தமிழகத் தொல்லியல் துறையும், இந்தியத் தொல்லியல் துறையும் பல ஆற்று வெளி நாகரீகங்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அவ்வகையில் வைகையும், அதன் கிளை ஆறான சுருளியும் சுருளி மலையிலிருந்து சின்னமனூர் மதுரை வழியாக நகரைத் தொட்டுப் பிற்காலத்திய நகரங்களான மானாமதுரை, திருப்புவனம், பரமக்குடி வழியாக இராமநாதபுரம் கண்மாய் சென்று அழகன்குளம் என்னுமிடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. வைகை ஆற்றின் நீர்வளத்தால் மதுரை நகரம் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் சிறப்புற்று அயல்நாட்டுத் தொடர்புகளுடன் தனித்தோங்கியது .

பண்டைய காலம் முதல் தற்காலம் வரை சிறந்தோங்கிய மதுரையின் தொன்மையை ஆவணப்படுத்தும் முயற்சி பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. அவ்வகையில் 1950ஆம் ஆண்டு மத்தியத் தொல்லியல் துறையின் தென்பகுதி கண்காணிப்பாளர் திரு. இராமன், மதுரையைச் சுற்றியுள்ள பெரும்பாலான இடங்களுக்குச் சென்று பல தொல்லியல் சான்றுகளை அடையாளப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து 2005ஆம் ஆண்டின் இறுதியில் முனைவர் இராஜன் குழுவினர் நடத்திய ஆய்வில் புலிமான்கோம்பை போன்ற இடங்களில் தொன்மைச் சின்னங்கள் பல கண்டறியப்பட்டன.

தமிழகத் தொல்லியல் துறை 1987ஆம் ஆண்டு மதுரையின் உத்தமபாளையம் ஊரில் இரும்பு ஆலை பகுதி அகழாய்வு மூலம் வெளிக்கொணரப்பட்டது. வரலாற்று ஆய்வாளர்களின் தொடர் கோரிக்கை காரணமாக இந்தியத் தொல்லியல் துறை வைகை நதியின் 290க்கும் மேற்பட்ட ஊர்களில் கள ஆய்வும், மேற்பரப்பு ஆய்வும் மேற்கொண்டனர். 290க்கும் மேற்பட்ட ஊர்களில் நடத்தப்பட்ட மேற்பரப்பு ஆய்வில் பெருங்கற்காலத்தியத் தாழிகள், வாழ்விடப்பகுதிகள், நடுகற்கள் ஆகியன ஆவணப்படுத்தப்பட்டன.

பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிக்காலத்தில் அலெக்சாண்டர் ரியா என்பவரும், இராபர்ட் புரூஸ்பட் என்பவரும் இணைந்து மதுரையின் தொன்மை அடையாளங்கள் சிலவற்றை வெளிக்கொணர்ந்தனர்.

இலக்கியங்களில் மட்டுமே ஆவணமாகத் திகழும் மதுரையின் சிறப்பை மத்தியத் தொல்லியல் துறை, தமிழகத்தொல்லியல் துறையின் டி.கல்லுப்பட்டி, அழகன்குளம், கோவலன்பொட்டல் மாங்குளம் ஆகிய இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகள் வழி பல சிறப்புகளை நாம் அறிய முடிந்தது. சங்க இலக்கியக் காலத்தில் மதுரையின் சிறப்புகளாகச் சொல்லப்பட்டிருக்கும் பல சான்றுகள் தொல்லியல் மூலம் வெளிக்கொணரப்பட்டன.

மதுரை வைகை ஆற்றின் பெரும் சிறப்புகளை அழகன்குளம் அகழாய்வு வெளிப்படுத்தினாலும், மதுரையை ஒட்டி அமைந்திருக்கும் பிற இடங்களில் இந்தச் சான்றுகள் கிடைக்கப்பெறலாம் என்னும் முனைப்பில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள, வைகை ஆற்றின் கரையில் 1.5 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கீழடி வெளிச்சத்திற்கு வந்தது. கீழடி, மதுரை நகரிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. 2014ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை மூன்று கட்ட அகழாய்வை 2017 வரை தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து 2018, 2019ஆம் ஆண்டுகளில் தமிழகத் தொல்லியல் துறை அடுத்தடுத்த ஆய்வுகளை மேற்கொண்டது.

தென்னந்தோப்புகள் சூழ இருக்கும் கீழடி பகுதியில் குறிப்பிட்ட பரப்பளவில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியத் தொல்லியல் துறை நடத்திய மூன்று கட்ட அகழாய்வில் பல பொருட்கள், சான்றுகள் வெளிக்கொணரப்பட்டு தமிழக வரலாற்றை ஆதாரத்துடன் நிறுவியது. கீழடியில் அகழாய்வு செய்த அமர்நாத் இராமகிருஷ்ணன் பல சான்றுகளை ஆவணப்படுத்தினார்.

கீழடி நாகரீகத்தில் மூன்று வகையான பண்பாட்டுக் காலங்கள் நிலவியிருக்கலாம் என்று தொல்லியல் அறிக்கை குறிப்பிடுகிறது. கி.மு 8 முதல் கி.மு 5 வரையிலான காலத்தில் மட்கக் கூடிய பொருட்களால் கட்டுமானங்கள் கட்டப்பட்டிருந்தன. இக்காலகட்ட மண் இடுக்குகளில் இரும்புப் பொருட்கள், கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள், கிறுக்கல் பானை ஓடுகள் அகழாய்வில் கண்டறியப்பட்டன. இடைக்கற்காலக் கருவிகள் பலவும் கண்டறியப்பட்டன.

கீழடி 2வது காலகட்டம் என்பதை கிமு 5 முதல் கிமு 1ஆம் நூற்றாண்டு வரை என்று குறிப்பிடும் அமர்நாத் இராமகிருஷ்ணன், இந்தக் காலத்தில் கீழடி பெரும் வளர்ச்சி அடைந்திருந்திருக்கலாம் என்பதற்குச் செங்கல் கட்டுமானங்கள், இரட்டைச் சுவர் உலைகள் ஆகியவற்றைச் சான்றாகக் கூறலாம் என்கிறார். சுடுமண் உறைக் கிணறுகள், சுடுமண் குழாய்கள் ஆகியவையும் இந்தப் பகுதியில் கண்டறியப்பட்டன. இவற்றின் அடிப்படையில் கீழடி நகரப் பண்புகளைக் கொண்ட முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும் என்பது தொல்லியல் துறையின் முக்கிய அறிக்கையாக இடம்பெறுகின்றது.

கீழடி அகழாய்வில் அடையாளப்படுத்தப்பட்ட விலங்குகளின் எலும்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதில், மாடுகளின் எலும்புகள் வெள்ளாடு ஆகியன இனங்காணப்பட்டுள்ளன. கீழடி நாகரீக மக்கள் வேளாண்மைச் சமூகமாக வாழ்ந்துள்ளனர் என்பதும் நகரிய வாழ்வாதாரமும் திகழ்ந்துள்ளன என்பதை அன்றைய காலகட்டக் கட்டுமானங்கள் உறுதிப்படுத்துகின்றன.

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட ஓடுகளில் கிடைக்கப்பெற்ற எழுத்துரு முக்கியக் கவனம் பெறுகின்றது. ஏனெனில் இந்தியாவில் கிடைக்கப்பெற்ற வரிவடிவங்களில் மிகப்பழமையானதாகச் சிந்து சமவெளி நாகரீகமே அடையாளப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ் பிராமி எழுத்தும், அதன் காலமும் கடந்த சில வருடங்களாக பேசுபொருளாக மாறி உள்ளது. கீழடி அகழாய்வில் தமிழ் எழுத்துப்பொறிப்புக் கொண்ட 50க்கும் மேற்பட்ட பானை ஓடுகள் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அகழாய்வில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

பானைப் பொறிப்புகளில் ஆதன், குவிரன் என்னும் எழுத்துருவும், சிதைந்த எழுத்துகள் கொண்ட பொறிப்புகளும் கண்டறியப்பட்டன. கா. இராஜன் அவர்கள் கூற்றுப்படி, கீழடி எழுத்துப்பொறிப்பு தமிழ்பிராமி காலத்துக்கும் முற்பட்டவை என்று இராஜன் அவர்களும் அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களும் உறுதிபடக் கூறுகின்றனர்.

பண்டைய காலத்தில் பானை வனையும்போது எழுதுவது, அதாவது, பானை ஈரமாக உள்ளபோதே எழுதும் வழக்கம் இருந்திருக்கின்றது. அவ்வகையில் கீழடி பகுதியில் பானைகள் உலர்ந்த பின்னரும் எழுதிய பல பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றன. இந்தியத் தொல்லியல் துறை, தமிழகத் தொல்லியல் துறை ஆகியன தனித்தனியே செய்த அகழாய்வில் பல வியக்கத்தக்கச் சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன. அதாவது கீழடி பகுதியில் வாழ்ந்த மக்கள் உயர்ந்த நாகரீக வாழ்வு, நகரிய வாழ்வு, கல்வி ஆகியவற்றைப் பெற்று வாழ்ந்துள்ளனர் என்பது இந்த ஆய்வுகளின் வழி புலனாகிறது.

இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட முதல் மூன்று ஆய்வுகள் வழியாகவும், தமிழகத்தொல்லியல் துறை மேற்கண்ட அடுத்தடுத்த அகழாய்வுகள் வாயிலாகவும் நெசவுப் பொருட்கள் சாயத்தொழில் கட்டுமானங்கள் ஆகியன வெளிக்கொணரப்பட்டுள்ளன. நூல்களை நூற்கப் பயன்படும் தக்களி பெருமளவில் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இதனைக் கொண்டு இந்தப்பகுதிகளில் நெசவு ஆலைகள் சிறந்து விளங்கியிருக்கலாம் என்பது தொல்லியலாளர்களின் அசைக்க முடியாத கூற்றாகிறது.

கீழடி அகழாய்வில் தங்க ஆபரணங்கள், மணிகள், கண்ணாடி மணிகள், சுடு மண் ஆபரணங்கள், சங்குப் பொருட்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் வட இந்திய மாநிலங்களில் பரவலாகக் கிடைக்கப்பெறும் சூது பவளம் போன்ற பொருட்கள் பெருமளவில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு ஆய்ந்தால் கீழடி வணிகத்தில் அன்றைய காலத்தில் மிகச்சிறந்து விளங்கியிருக்கலாம் என்பது தொல்லியல் அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன.

கீழடி அகழாய்வில் அறுநூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், அணிகலன்கள், காதணிகள், இரும்பு, தங்கம் போன்ற பொருட்கள் 13 மனித உருவங்கள் கொண்ட சுடுமண், சில விலங்கு சுடுமண் உருவங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை மூலம் தெரிய வருகின்றது.

இந்தியாவில் கி.மு. 6ஆம் நூற்றாண்டுகளில் சிந்து, கங்கை ஆறுகளின் பகுதிகளில் நகர உருவாக்கம் தோன்றி விட்டதாகவும், மற்றப் பகுதிகளில் இந்த நகர உருவாக்கம் உருவாகவில்லை என்ற கருதுகோளைக் கீழடி அகழாய்வு உடைத்துள்ளது. ஏனெனில் கீழடி பொருட்களின் பகுப்பாய்வு மூலம் அதே காலகட்டத்தில் தமிழகத்திலும் சிறந்த வாழ்வியல் முறையும், நகர வாழ்வும் இருந்துள்ளதைக் கீழடி, கொடுமணல் ஆய்வுகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

இந்திய அகழாய்வுகளில் பழைய கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் எனப் பல வகையாகப் பண்பாட்டுக் காலங்கள் கணக்கிடப்படுகின்றன. புதிய கற்காலத்தில் காடுகளிலிருந்து மனிதன் ஆற்றங் கரைகளில் குடியேற்றங்கள் அமைத்தான் என்பது தெளிவு. அவ்வகையில் புதிய கற்காலத்தில் வைகை ஆற்றின் ஊர்கள் மிகச்சிறந்த வாழ்வியலையும், எழுத்தறிவு மேன்மையையும் கொண்டிருந்தன என்பதும் நிரூபிக்கப்படுகிறது. கீழடி பொருட்களின் பகுப்பாய்வு முடிவுகள் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்பதைத் துல்லியமாகக் கணக்கிடுகிறது.

அயல்நாடுகளுடன் கீழடி மக்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை இங்குக் கிடைக்கும் பொருட்கள் உறுதி செய்கின்றன.

பழந்தமிழர்களின் இலக்கியங்கள் வாழ்வியல் இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன. பழந்தமிழர்களின் வாழ்வியல் முறைகள் கற்பனை கலக்காத உண்மையை வெளிப்படுத்துபவை என்று தமிழ் நிலத்தின் தொல்லியல் சான்றுகள் நிருபித்து வருகின்றன. சங்க காலத்தில் அயல் நாட்டினர் அனைவரையும் யவனர் என்றழைக்கும் வழக்கம் இருந்தாலும், ரோமானியர்களே தமிழ்நாட்டோடு வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் என்பது இலக்கியச் சான்றுகளின் வாயிலாகவும் தொல்லியல் சான்றுகளின் வாயிலாகவும் கிடைக்கப்பெறுகின்றது.

மூன்று பண்பாட்டுக் காலங்களைக் கொண்டிருக்கும் கீழடி, பத்தாம் நூற்றாண்டு வரை மிகச்சிறந்து விளங்கியிருக்கலாம் என்றும், பின்னர் அரசியல், நகரமாற்றங்களின் காரணமாக கீழடி மக்களின் வசிப்பிட மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்திய அளவில் சிந்து சமவெளி அகழாய்வே மிகப்பழமையானது என்னும் ஆய்வறிக்கை நம்பப்பட்டு படிக்கப்பட்டு வந்தது. ஆனால் கீழடி ஆய்வறிக்கை மூலம் மிகப் பழமையான நாகரீக வாழ்வு தமிழகத்தில் இருந்துள்ளது நிரூபணமாகிறது. அதே காலகட்டத்தில் தமிழகத்தின் பிற இடங்களிலும் தொன்மையான வளமான நாகரீகம் திகழ்ந்திருக்கும் என்பது புலனாகிறது.

கீழடியில் 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு பழந்தமிழ் மக்களின் வாழ்வு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. கீழடிப் பகுதி அகழாய்வுகளில் சங்ககால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலான தரவுகள் கிடைத்திருக்கின்றன. நகரம் சார்ந்த வாழ்க்கையை நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளதற்கான சாட்சியமாகக் கீழடி அகழாய்வுக் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன. தொழிற்கூடங்கள், சாயப்பட்டறைகள், பல செங்கல் தொழிற்சாலைகள் ஆகியன அடங்கிய மேம்படுத்தப்பட்ட நகரமாகக் கீழடி இருந்துள்ளதைக் காண முடிகிறது. 10க்கும் மேற்பட்ட சங்ககாலக் கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஒன்பதாம் கட்ட அகழாய்வில் எட்டுக் குழிகள் அமைக்கப்பட்டு 183 பொருட்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்பதாம் கட்ட அகழாய்வில் 18 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன என்று தொல்லியல் துறையினர் கூறுகின்றனர்.

கீழடி அகழாய்வின் மூலம் இதுவரை ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கீழடி அகழ் வைப்பகத்தில் இந்தப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு மக்களின் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இந்தியத் தொல்லியல் துறை மூன்று கட்ட அகழாய்வை நடத்தியபோது அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையேற்றுப் பல வரலாறுகளை வெளிக்கொணர்ந்தார். அப்போது இந்திய அரசு அவரை இடமாற்றம் செய்தது. மூன்று கட்ட அகழாய்வோடு இந்தியத் தொல்லியல் துறை தமது ஆய்வை நிறுத்திக்கொள்ள, தமிழ்நாடு அரசு மீதமுள்ள பகுதிகளில் அகழாய்வைத் தொடர்வதும் பல்வேறு அரசியல் வெளிப்பாடுகளாக இருந்தாலும் நம் மண்ணின் மீட்சியை வெளிக்கொணர்ந்த இடமாக கீழடி திகழ்கிறது.

Indus Valley – சிந்து சமவெளி நாகரிகத்திற்கு நிகரான காலப்பழமையும், வரலாற்றுச் சிறப்பும் கொண்ட கீழடி ஒவ்வொரு ஆய்விலும் ஒரு வரலாற்றை வெளிப்படுத்தி வருகின்றது. அரசியலைக் கடந்து மண்ணின் தன்மையை இந்திய அரசு ஆவணப்படுத்தி உலக அளவில் சிந்து சமவெளியைக் கொண்டு சென்றதுபோல கீழடி நாகரீகத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கோரிக்கை. தமிழர்களின் பண்பாட்டையும் நாகரீகத்தையும் கீழடி மூலம் வெளி மாநிலத்தார், வெளிநாட்டார் அறிந்து போற்றுகின்றனர். நம் மண்ணின் பெருமை நம் பெருமை. கீழடி வைகை நதிக்கு மட்டுமல்ல, வையகம் போற்றும் தமிழுக்கும் சிறப்புச் சேர்க்கும்.

‘கோடு போழ் கடைநரும், திருமணி குயினரும்,
சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும்,
பொன் உரை காண்மரும், கலிங்கம் பகர்நரும்,
வம்பு நிறை முடிநரும், செம்பு நிறை கொண்மரும்,
பூவும் புகையும் ஆயும் மாக்களும்,
எவ்வகைச் செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடித்
தெண் திரை அவிர் அறல் கடுப்ப, ஒண்பல்
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்துச்
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ,
நால்வேறு தெருவினும் கால் உற நிற்றர,

என்ற சங்க இலக்கியப் பாடல் வரிகளின் மூலம் பல்வேறு தொழில்களும், சிறப்பு மிகு வாழ்வும் மதுரையில் இருந்துள்ளன என்ற இலக்கியச் சான்றுகள் கீழடியில் அகழாய்வாக, வரலாறாக வெளிவந்துள்ளதைக் கண்டு மகிழ்வோம்.

(தொடரும்)

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *