Skip to content
Home » தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்

தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்

‘மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்தியற்கை’

என்ற புறநானூற்று வரிகளுக்கு ஏற்ப தமிழர்கள் தங்களின் வாழ்வியலை இயற்கை சூழ்ந்த, இயற்கைக் காரணிகளால் அமைத்துக்கொண்டனர்.

‘அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்
விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
வெப் புடைய அரண் கடந்து,
துப்புறுவர் புறம்பெற் றிசினே:
புறம் பொற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினி யும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே!
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே.
என ஆங்கு,
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.’

என்று தாமிரபரணி பாய்ந்தோடும் நகரின் அமைப்பு குறித்துப் புறநானூறு பாடல் பதிகிறது.

தமிழ் மொழி தோன்றிய காலத்தே தோன்றிய நதியாகத் தாமிரபரணி குறிப்பிடப்படுவதில் இருந்து அதன் காலப்பெருமை நமக்குப் புலனாகிறது.

உலகெங்கும் பல நகரங்கள் அகழாய்வு மூலம் மீட்கப்பட்டு அதன் வரலாறுகளும் வெளிக்கொணரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உலகில் பல இடங்களில் பலமுறை அகழாய்வு செய்யப்பட்ட இடங்களில் ஆதிச்சநல்லூர் மிக முக்கியமான இடமாகத் திகழ்கிறது.

1876 முதல் 1878ஆம் ஆண்டு வரை இந்தியாவில் தென் இந்தியப் பஞ்சம் நிலவியதாக பிரிட்டிஷ் வரலாறு பதிவு செய்கிறது. மக்கள் உணவில்லாமல் கடுமையான பாதிப்புகளில் இருந்தபோது பிரிட்டிஷ் அரசு பல நிலைகளில் பஞ்சத்தைத் தவிர்க்கப் பெருமுயற்சிகள் எடுத்ததாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

1876ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சியராகத் திகழ்ந்த ஸ்டூவர்ட் என்பவர் இரயில் பாதைகள் அமைப்பது தொடர்பாக ஆதிச்சநல்லூர் பகுதியில் ஆய்வு செய்தபோது சில முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட, அதனைத் தொடர்ந்து ஜாகோர் என்பவர் ஆதிச்சநல்லூரில் முதன்முதலாக அகழாய்வுகள் நடத்தினார் எனத் தொல்லியல் அகழாய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. ஸ்டூவர்டும் ஜாகோரும் இணைந்து நடத்திய அகழாய்வில் பல பொருட்களைக் கண்டெடுத்து பெர்லினுக்கு அனுப்பியதாகப் பிரிட்டன் ஆவணக் காப்பகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

பிரிட்டிஷ் ஆட்சியில் இரண்டாம் முறையாக ஆதிச்சநல்லூர் ஆவணப்படுத்தப்பட அலெக்சாண்டர் ரியோ என்பவர் காரணமாகத் திகழ்ந்தார். பிரித்தானிய இந்தியாவில் தென்பகுதியின் முதல் தொல்லியல் அதிகாரியாகப் பதவி வகித்தார். 1892ஆம் ஆண்டு தென்னிந்தியப் பகுதியின் கண்காணிப்பாளர் பதவி பெற்றுத் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ள வழிவகுத்தார். அதன்படி 1899ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் சிறிய அளவில் குழிகள் வெட்டி அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டார். மறுபடியும் பிரித்தானிய அரசின் அனுமதியைப் பெற்று 1903ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு அப்பகுதியின் வரலாற்றுப் பெருமைகளை வெளிக்கொணர்ந்தார்.

அலெக்சாண்டர் ரியோ தனது ஆய்வுகளை ’Catalogue of the prehistoric antiquities from Adichanallur and Perumbair’ என்ற பெயரில் புத்தகமாகவும் எழுதினார். பானைகள் மட்டுமல்லாது உலோகங்களால் செய்யப்பட்ட ஏராளமான கருவிகள், ஆபரணங்கள், ஆயுதங்கள், பாத்திரங்கள் போன்றவையும் கிடைத்தன என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொரு வகையான உலோகப் பொருட்களிலும் ஏராளமான வடிவங்களும் நுட்பங்களும் காணப்பட்டதால் உலோகத்தினை உருக்கிப் பயன்படுத்தும் கலையில் தமிழர்கள் மிகவும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்று அலெக்சாண்டர் ரியா தமது நூலில் பதிவு செய்கிறார்.

தமிழகத்தின் மிகப்பெரிய பெருங்கற்கால இடங்களில் முதன்மையானதாக ஆதிச்சநல்லூர் திகழ்கிறது. இந்தியாவில் சுமார் 100 ஏக்கருக்கும் மேலே இறந்தவர்களைப் புதைக்கும் இடம் தற்போது வரை கண்டறியப்படவில்லை என்பதும் இவ்வளவு பரந்த ஆதிச்சநல்லூர் பற்றி இன்னும் பல செய்திகள் வெளிக்கொண்டு வரப்படவில்லை என்பதும் இங்குப் பதியவேண்டியதாகும்.

அலெக்சாண்டர் ரியோ தாமிரபரணி நதிக்கரை முழுவதும் ஆய்வு செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க 35க்கும் மேற்பட்ட இடங்களை அடையாளப்படுத்தினார். ஆதிச்சநல்லூர் அருகில் கொங்காரயக்குறிச்சி எனுமிடம் மக்களின் வாழ்வியல் இடமாகத் திகழ்ந்ததைக் கொண்டு அதன் அருகில் ஆதிச்சநல்லூரில் மக்களைப் புதைக்கும் இடமாக இருந்திருக்கலாம் என்பதை அலெக்சாண்டர் ரியோ ஆவணப்படுத்தினார். அந்த வகையில் பண்டைய காலத்தில் ஆதிச்சநல்லூர் மிகப்பரந்த வணிகத் தளமாகத் திகழ்ந்திருக்கலாம் என்பதை ஐயத்துடன் அறிய முடிகிறது. 1903, 1904 ஆகிய ஆண்டுகளில் அலெக்சாண்டர் ரியோ நடத்திய அகழாய்வுகளில், பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுத் தற்போதும் அந்தப் பொருட்கள் எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

1904ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் அலெக்சாண்டர் ரியோ ஆதிச்சநல்லூரில் ஆய்வுகள் நடத்தி அகழாய்வு மூலம் பல வரலாற்றுத் தடங்களை மீட்டுக் கொண்டுவந்தார். ஆதிச்சநல்லூரின் பெரும்பாலான பகுதிகளை ஆய்ந்து பல ஈமத்தாழிகளைத் திறந்து அவற்றை அகழாய்வுக்கு உட்படுத்தினார் என்பதைத் தொல்லியல் துறையினர் பதிவு செய்கின்றனர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த 630 வகையான பொருட்களை அலெக்சாண்டர் ரியோ ஆவணப்படுத்தியுள்ளார். அவற்றில் பல பொருட்கள் தற்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்திலும், பாளையங்கோட்டை அருங்காட்சியகத்திலும் இருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடவேண்டியதாகும்.

அலெக்சாண்டர் ரியோ நடத்திய அகழாய்வுகளில் ஆதிச்சநல்லூர் இறந்த மக்களைப் புதைக்கும் இடம் என்றே அறிக்கை குறிப்புகளில் இடம்பெற, இதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு, அதாவது அலெக்சாண்டர் ரியோவின் ஆய்வுக்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியத் தொல்லியல் துறை மூலம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டது. அதன்படி திரு.சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வு நடத்தப்பட்டது.

மிகப்பெரிய அளவில் சுமார் 170க்கும் மேற்பட்ட ஈமச் சின்னங்களை இந்தியத் தொல்லியல் துறை மூலம் அகழாய்வு செய்யப்பட்டதில் கருப்பு சிவப்பு பானைகள் பல கண்டெடுக்கப்பட்டன.

மேலும் அவற்றில் பல உருவங்கள் பொறிக்கப்பட்ட பானைகளும் கண்டெடுக்கப்பட்டன. ஒரு சில பானைகளில் பெண்கள், விலங்குகளின் உருவங்களும் கண்டெடுக்கப்பட்டன.

பண்டைய காலத்திய தங்கத்திலான நெற்றிப் பட்டம் ஒன்றையும் சத்தியமூர்த்தி தலைமையிலான குழுவினர் கண்டறிந்தனர். வாள், இரும்புப் பொருட்கள் பலவும் கண்டறியப்பட்டதாக அகழாய்வு அறிக்கை மூலம் குறிப்பிடுகின்றனர்.

2004ஆம் ஆண்டு அகழாய்வில் சில பானைகளில் ஆண் பெண் இருவரும் சேர்ந்த நிலையில் புதைக்கப்பட்ட பானைகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் ஒருசிலவற்றில் தாய், சேய் உருவங்கள் சேர்த்துப் புதைக்கப்பட்ட பானைகளும் கண்டெடுக்கப்பட்டன என்று தொல்லியல் துறையினர் குறிப்பிடுகின்றனர்.

சங்க இலக்கியத்தின் புறநானூற்றுப் பாடலில்,

‘கலம்செய் கோவே கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே’

என்று மேற்காணும் பாடல் குறிப்பிடும் செய்தியில் சிறிய வண்டிச் சக்கரத்தில் சிக்கி உயிர்விட்ட வெண்ணிறப் பல்லி வண்டி போகும் திசையெங்கும் பயணிப்பதைப்போல, கலம் செய்யும் குயவனே, இந்தத் தலைவன் இல்லாமல் என்னால் இந்த உலகில் வாழ இயலாது. ஆதலால் எம்மையும் தலைவனுடன் சேர்த்துப் புதைக்கும் அளவுக்குப் பெரிய பானையைச் செய்யுமாறு பானை செய்யும் குயவனுக்குக் கோரிக்கை வைப்பதாக ஐயூர் முடவனார் என்னும் புலவர் ஒரு பெண்ணின் ஏக்கத்தைப் பாடலாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் ஆண் பெண் இருவரும் சேர்ந்து புதைக்கப்பட்ட பெரிய அளவிலான பானைகள் கிடைக்கப்பெற்றது சங்க இலக்கிய வாழ்வியலை நம் கண் முன்னே காட்சிப்படுத்துகின்றது.

இந்தியாவில் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கலை வடிவம் உடைய அகழாய்வுப் பொருட்கள் ஒருசிலவை மட்டுமே கிடைக்கின்றன என்றும், அவற்றுள் சில பொருட்கள் ஆதிச்சநல்லூரில் கிடைக்கின்றன என்றும் தொல்லியலாளர் சத்தியமூர்த்தி குறிப்பிடுகிறார்.

பிரிட்டிஷ் காலத்தில் நடத்தப்பட்ட அகழாய்விலும், இந்தியத் தொல்லியல் துறை அகழாய்விலும் பல காதணிகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று குறிப்பிடும் தொல்லியலாளர்கள், மக்களின் ஈமத்தாழிகளை மிக முறையான வகையில் புதைக்கும் வழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை அறிய முடிகின்றது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு மூலம் இந்த இடத்தின் காலத்தைக் கணிக்கும் பொருட்டு அமெரிக்காவின் பீடா அனலிட்டிகல் ஆய்வகத்திற்கு மாதிரிப் பொருட்களை அனுப்பினர். அந்த ஆய்வுகளின் முடிவில் அவை கி.மு. 645 முதல் கி.மு. 850 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்தவையாக இருக்கலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சில காரணங்களால் சத்தியமூர்த்தி அவர்கள் ஆதிச்சநல்லூரின் ஆய்வறிக்கையினை எழுதவில்லை என்று குறிப்பிடுகிறார்.

1904ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரியோ ஆய்விலும், 2004ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி ஆய்விலும் பல இரும்புப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. வேளாண்மை சார்ந்த கருவிகள் பல கண்டெடுக்கப்பட்டன என்று தொல்லியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒரு சில மண்பானைகளில் மக்களின் பயன்பாட்டுப் பொருட்கள், சேர்த்துப் புதைக்கப்பட்ட தானியப் பொருட்களையும் தொல்லியல் துறையினர் கண்டெடுத்தனர். தாய்த்தெய்வ வழிபாடு முறை ஆதிச்சநல்லூர் பகுதியில் வழக்கத்தில் இருந்திருக்கலாம் என்பதை மெய்ப்பிக்கும் பொருட்டு தாய்த்தெய்வக் குறியீடுகள் கொண்ட பானைகளையும் கண்டெடுத்தனர்.

அலெக்சாண்டர் ரியோ, இந்தியத் தொல்லியல் துறையினர், தமிழகத் தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வுகளில் கட்டட அமைப்புகள் எதுவும் கண்டறிய முடியவில்லை என்பதும், மக்களின் வாழ்விடங்கள் குறித்த ஐயம் நூறாண்டுகளைக் கடந்தும் விடை காணா முடியாத மர்மமாக நீடிப்பதைக் குறிப்பிடுகின்றனர்.

ஆதிச்சநல்லூர், இரும்புக்காலம், பெருங்கற்காலத்தின் தொடக்க நிலை நாகரீகம் கொண்ட வாழ்விடப் பகுதியாக இருந்திருக்கலாம் என்று ஆய்வுகள் உறுதியாகத் தெரிவிக்கின்றன. ஆதிச்சநல்லூர் சுமார் 100 ஏக்கருக்கும் மேலே பல்லாயிரக்கணக்கில் ஈமத்தாழிகளைக் கொண்டு மிகப்பெரிய ஈமக்காடாகத் திகழ்ந்ததைத் தொல்லியல் ஆய்வுகள் மெய்ப்பித்து வருகின்றன.

இந்தியத் தொல்லியல் துறையைத் தொடர்ந்து தமிழகத் தொல்லியல் துறை 2020ஆம் ஆண்டு மே மாதம் சில குறிப்பிட்ட பகுதிகளில் ஆய்வுகளைத் தொடங்கியது. இந்தியத் தொல்லியல் துறையினர் சில குறிப்பிட்ட பகுதிகளை ஆய்வு செய்ய அனுமதி வழங்காமையால் வெளிப்பகுதிகளில் மட்டுமே தமிழகத் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் ஓர் இடத்தில் சமையல் கலங்கள் கண்டறியப்பட்து. இருப்பினும் ஆதிச்சநல்லூர் பகுதி மக்களின் வாழ்விடங்களைக் கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

ஆண்டுகள் கடந்தும் பல அறியப்படாத தரவுகளை வெளிப்படுத்தும் ஆவணக்களஞ்சியமாக ஆதிச்சநல்லூர் திகழ்ந்து வருகின்றது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றை மேம்படுத்தும் ஆதிச்சநல்லூர், ஆங்கிலேயர்களே வியந்து பார்த்த அதிசய இடமாகவும், மர்மங்கள் விலகாத பகுதியாகவும் திகழ்ந்து வருகின்றது.

(தொடரும்)

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *