‘மருந்தவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம்
செருந்தி செம்பொன்மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே’.
என்று பக்தி இலக்கியங்களில் பெரும் சிறப்புடன் போற்றப்பட்ட திருநெல்வேலியைச் சங்க இலக்கியங்களும் போற்றுகின்றன.
நீர் வளமும், நில வளமும் சிறந்து விளங்கியமையால் பாண்டிய அரசர்கள் திருநெல்வேலி நகரைத் தலைநகராகக் கொண்டு அரசாட்சி புரிந்தனர் என்று இலக்கிய, வரலாற்றுச் சான்றுகள் பகிர்கின்றன.
மகாபாரதம், சங்க இலக்கியம், அசோகர் கல்வெட்டு எனப் பலவகைகளிலும் பாண்டிய அரசர்களைப் பற்றிய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர்களின் அரச வம்சம் நீடித்து அரசாட்சி புரிந்துள்ளனர்.
முற்காலப் பாண்டியர்களின் சிறப்பையும் கலைச்சான்றுகளையும் எடுத்துக்கூறும் இடமாக இராஜாக்கள் மங்கலம் எனுமிடம் திகழ்வதாகத் தொல்லியல் அறிஞர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் எடுத்துரைக்கின்றனர்.
இரணிய மகாராஜாவின் அரண்மனை இருந்த பகுதி என்று பொதுமக்களால் அழைக்கப்பட்ட இராஜாக்கள் மங்கலம் பகுதியில் கோயில் கட்டுமான அமைப்பும், முற்காலப் பாண்டியர்களின் கலை அம்சம் பொருந்திய பல சிலைகளும் மேற்பரப்பு அகழாய்வுகளில் கிடைத்தன.
1979, 1986ஆம் ஆண்டுகளில் மேற்பரப்பு அகழாய்வுகளில் 20க்கும் மேற்பட்ட சிலைகள் தனித்த கலை அமைப்பு உடையதாகக் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சிலைகள் வைணவக் கோயில் அமைப்புச் சிலைகளாக இருந்தன என்றும், எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும் தொல்லியல் அலுவலர் முனைவர் செந்தில் செல்வக்குமரன் அவர்கள் குறிப்பிடுகிறார்.
எட்டாம் நூற்றாண்டு தொடங்கி பாண்டியர், சோழர்களின் மாறுதலுக்குட்பட்ட ஆட்சிமுறை இப்பகுதிகளில் திகழ, இராஜாக்கள் மங்கலம் ஊரில் முற்காலத்திய பாண்டியர்களின் கலைப்பாணி கொண்ட சிலைகள் பல கிடைக்கப்பெற்றன. அவையும் இங்குப் பதியப்பட வேண்டியதாகும்.
இராஜாக்கள் மங்கலம் பகுதி மேற்பரப்பு அகழாய்வுகளைக் கொண்டு இப்பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளத் தமிழகத் தொல்லியல் துறை முடிவு செய்து அகழாய்வுக் குழிகள் அமைக்கத் தொடங்கினர்.
வரலாற்றுக் காலகட்டங்களின் அடித்தள அமைப்பு முறையைப் பொருந்தி இப்பகுதிகளில் செம்பராங்கற்களைக் கொண்டு அடித்தளம் அமைப்பு முறை இருந்ததைத் தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர்.
கருங்கல் உருண்டை அமைப்பும், ஆற்று மணலும் கலந்த அடிப்பகுதியாக இவை அமைந்திருந்ததைப் பதிவு செய்கின்றனர்.
தாமரை மலரின் மொட்டுப் பகுதி ஒன்றும், யாளி அமைப்பும், பல உடைந்த கற்சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டன.
1 மீட்டர் அளவுடைய வடிவில் கலை அம்சம் பொருந்திய அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட, அதனைப்போலப் பீடம், முற்றுப்பெறாத சிலைகள், ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்களின் சிலை அமைப்புகள் எனப் பலவற்றைத் தொல்லியல் துறையினர் அகழாய்வுக் குழிகள் வாயிலாகக் கண்டறிந்தனர்.
இராஜாக்கள் மங்கலம் கோயில் கட்டுமானத்தில் காணப்படும் கருவறையைத் தொடர்ந்த கட்டத்தில் பிதுக்கமும் (Projection), அதனைத் தொடர்ந்து உட்புறம் எடுத்துக்கட்டுதல் போன்ற அமைப்பும் இங்கும் காணப்படுகிறது. சுண்ணாம்புச் சாந்து கல்லின் மேல் பகுதியில் பரவப்பட்டுள்ளது.
இராஜாக்கள் மங்கலம் பகுதியில் தொல்லியல் துறை 2009, 2010ஆம் ஆண்டுகளில் நடத்திய அகழாய்வில் கருங்கல்லால் ஆன சுவர் ஒன்று 60 செ.மீ. ஆழத்தில் அடித்தளத்தில் தொடங்கி தெற்குப்பகுதியிலிருந்து வடக்குப்பகுதி நோக்கிச் சென்று, பின்னர் 1.48 மீட்டர் நீளத்தில் மீண்டும் கிழக்கில் திரும்பிச் செல்லும் முறைமையிலான அமைப்பைக் கண்டறிந்தனர். கோயில் அல்லது அரண்மனையின் முகப்புப் பகுதியாக இவை இருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் தங்களது அறிக்கையில் வெளிப்படுத்தி உள்ளனர்.
வடக்குப்பகுதியில் உள்ள அடித்தளம் தெற்கு நோக்கிச் செல்கிறது. இது கல்பீடத்தின் உட்பகுதியில் மணலையும் கரடுமுரடான கருங்கற்களையும் கொண்டு அமைக்கப்பட்ட அடித்தளமாகும். இங்கு கிடைத்துள்ள 6 அடி உயரமுடைய அம்மன் சிலை ஸ்ரீதேவியாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இராஜாக்கள் மங்கலம் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் பலவற்றுள் அவற்றின் பெயர்கள் கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சிலைகள் உள்ள இவ்விடத்தில் இரணிய மகாராஜாவின் அரண்மனை இருந்ததாகச் செவி வழிச் செய்தி உண்டு. இராஜாக்கள் மங்கலம் ஊர் நம்பி ஆற்றின் வடகரையிலும், அகழாய்வு செய்யும் இடத்திலிருந்து 3 மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த ஊரின் வடக்குப்பகுதியில் ஒரு மண்மேடு காணப்படுகின்றது. இதன்கிழக்குப் பகுதியில் சிவன் கோயில் ஒன்று காணப்படுகின்றது. இக்கோயிலின் அருகில் வரலாற்றுச் சிறப்புமிக்கக் காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள் அதிக அளவில் காணப்படுகின்றன என்று அகழாய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர். இராஜாக்கள் மங்கலம் பகுதியில் கோயில் விதானம் வரை கருங்கல்லில் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலின் அமைப்பினைக் கொண்டு பார்க்கும்போது பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் கட்டப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளதாக அகழாய்வுத்துறையினர் தெரிவிக்கின்றனர். இராஜாக்கள் மங்கலம் அருகில் உள்ள தளபதி சமுத்திரம் என்ற ஊரிலுள்ள கல்வெட்டில் ‘நாட்டாற்றுப்போக்கில் இராசாக்கள் மங்கலம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு எல்லைக்கல் ஒன்றும் காணப்படுகின்றது. இக்கல்லில் மேல் பகுதியில் சக்கரமும். அதன் கீழ்ப்பகுதியில் சிவலிங்கமும் செதுக்கப்பட்டுள்ளன. மண்மேட்டில் வரலாற்றுக்கால மட்கலன்களும், சந்தனக்கல் போன்றவையும் காணப்படுகின்றன.
இராஜாக்கள் மங்கலம் மிகப்பெரிய வழிபாட்டு நிலை உடைய கோயிலாகவோ அல்லது கோயிலுக்குச் சிற்பங்கள் செய்யும் இடமாகவோ திகழ்ந்திருக்கலாம் என்று தொல்லியல் குழுவினர் தெரிவிக்கின்றனர். கழுகுமலை வெட்டுவான் திருக்கோயிலும் இதே அமைப்பு முறையில் இருப்பதாகவும் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவை என்றும் குறிப்பிடுகின்றனர். முற்காலப் பாண்டியர் கலைத்திறமையை வெளிக்காட்டும் அமைப்பு இங்குப் பெருமளவில் காணக்கிடைக்கிறது. இராஜாக்கள் மங்கலம் பகுதி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் பலவற்றைத் திருமலை நாயக்கர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர்.
வரலாற்றின் மீது புதிய வெளிச்சத்தைப் படரவிட்ட இராஜாக்கள் மங்கலம் அகழாய்வு புதிய கலைப்பாணியை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
(தொடரும்)