Skip to content
Home » தமிழகத் தொல்லியல் வரலாறு #31 – மோளப்பாளையம் (மேற்குத் தமிழ்நாட்டின் புதிய தடயம்)

தமிழகத் தொல்லியல் வரலாறு #31 – மோளப்பாளையம் (மேற்குத் தமிழ்நாட்டின் புதிய தடயம்)

தென்னக நதிகளின் தாய்மடியாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பல்லாயிரக்கணக்கான உயிரிகளின் உயிர்க்கோள மையமாகத் திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்துப் பல்வேறு இலக்கியங்கள், பல்வேறு காலங்களில், பல பதிவுகளைக் கொண்டுள்ளன.

‘மந்தியும் அறியா மரம்பயில் அடுக்கம்’ என்று மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் பற்றிச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.

தமிழர்கள் நிலவியலாகத் தங்கள் பண்பாட்டை அமைத்துச் சிறந்த வாழ்வியல் அமைப்பைக் கொண்டுள்ளனர். அவ்வகையில் குறிஞ்சி, மருத நில அமைப்பின் அருகில் மலைகளை அரண்போலக் கொண்டு விளங்கும் ஊர்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்படுகின்றன. அவ்வாறு காணப்படும் ஊர்கள் வரலாற்றோடும் பண்பாட்டோடும் சிறந்த அடையாளமாக விளங்கி வருகின்றன.

தமிழகத்தின் கொங்கு மண்டலம் என்றழைக்கப்படும் கோயமுத்தூருக்கு மேற்கே போளுவாம்பட்டி, கோட்டைக்காடு, வெள்ளிமலைப்பட்டினம் போன்ற ஊர்களில் தொல்லியல் சான்றுகளைத் தமிழகத் தொல்லியல் துறை கண்டறிந்து ஆவணப்படுத்தி வந்துள்ளது. ரோமானிய நாட்டின் நாணயங்கள் பலவும் நொய்யல் நதியின் படுகைகளில் கிடைத்ததைத் தொல்லியல் அகழாய்வுகள் பறைசாற்றுகின்றன.

காலப் பழைமையும், வரலாற்றுச் சிறப்பும், இலக்கியச் செழுமையும் கொண்ட நொய்யலாற்றுப் பள்ளத்தாக்கில் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள பூலுவப்பட்டி மோளப்பாளையத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் புதியகற்காலச் சான்றுகளைக் கண்டுபிடித்து ஆவணமாக்கி தமிழகத் தொல்லியல் வரலாற்றில் முக்கியத் தடயத்தைப் பதிவு செய்துள்ளது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அகழாய்வுகளில் மோளப்பாளையம் கி.மு.1600-1400 ஆண்டுகளுக்கிடையே வாழ்ந்த புதியகற்கால மக்களின் தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தத் தொல்லியல் இடம் குறித்துப் தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினரால் 2021இல் அகழப்பட்டது. அந்த மேற்பரப்பு ஆய்வினை மையமாகக் கொண்டு மீண்டும் 2024 ஜூன்-ஜூலை மாதங்களில் இங்கு வாழ்ந்த தொடக்க நிலைப் பண்பாடுகளைப் புரிந்துகொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் வீ.செல்வகுமார் தலைமையில் மோளப்பாளையம் அகழாய்வு நடைபெற்றதில் பல சான்றாதாரங்கள் வெளிக்கொணரப்பட்டன. மோளப்பாளையம் அகழாய்வில் மூன்று மனித எலும்புக்கூடுகளும், அதிகமான அளவில் விலங்கு எலும்புகளும், கடல் கிளிஞ்சில், அம்மிக் கற்கள், அரவைக் கற்கள், கல் உருண்டைகள், தானிய விதைகள், கற்கோடரிகள், புதிய கற்காலப் பானைகள், கடற் சங்கில் செய்யப்பட்ட மணிகள், சேமிப்புக் குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக முனைவர் செல்வக்குமார் ஆய்வு குறித்த செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரக் கிராமப் பகுதியில் கண்டறியப்பட்ட அகழாய்வில் 3இல் இருந்து 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள், நடுத்தர வயதுப் பெண் ஒருவரின் எலும்புகள் எனத் தக்காணக் கல்லூரியின் மானுடவியல் அறிஞர் வீணா முஷ்ரீப் திரிபாதி மனித எலும்புகளை ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.

மோளப்பாளையம் அகழாய்வில் கிடைத்த மாடுகளின் எலும்புகள், ஆடுகளின் எலும்புகள், காட்டு விலங்கு எலும்புகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பகுதி மேய்ச்சல் நில அமைப்போடு திகழ்ந்ததைக் கண்டறிந்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கேரளப் பல்கலைக்கழகத்தின் முனைவர் ஜி.எஸ். அபயனின் ஆய்வின் மூலம் இந்த எலும்புகள் அடையாளப்படுத்தப்பட்டன.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அகழாய்வில் இந்தப்பகுதியில் வெண்சங்கு, உருளைச் சங்கு போன்றவற்றால் செய்யப்பட்ட மணிகளைக் கண்டறிந்து அவற்றைப் புனே தக்காணக் கல்லூரியின் முனைவர் ஆர்த்தி தேஷ்பாண்டே முகர்ஜியின் பார்வைக்கு அடையாளப்படுத்தினர். இதையடுத்து அவரும் இந்தச் சங்குகளை நன்னீர் சிப்பியில் கலை நயத்துடன் செய்யப்பட்ட ஒரு மீன் வடிவப் பதக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தச் சங்குகள் இம்மக்களின் அழகியலையும் வாழ்வியலையும் உணர்த்துவதாகக் கூறியுள்ளார்.

வேட்டைச் சமூகமாக வாழ்ந்த மக்கள் வேளாண் குடி மக்களாக நாகரீக வாழ்வு வாழ்ந்த வரலாறு அகழாய்வுகளின் வழி வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் பொருந்தல் அகழாய்வில் திணைத் தாவரங்கள் கண்டறியப்பட்டு, அதன் சிறப்பை பீட்டா அனலிட்டிக்கல் ஆய்வு மையத்தின் மூலம் தமிழகத் தொல்லியல் துறை பதிவு செய்தது. அதுபோலவே மோளப்பாளையம் அகழாய்விலும் தாவரச் சான்றுகள் கரிந்த விதைகளாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொள்ளு, உளுந்து, பச்சைப்பயறு, அவரைப் போன்ற தாவரங்களின் விதைகள் கண்டுபிடிக்கப்பட்டு, தக்காணக் கல்லூரியின் பேராசிரியர் சதீஷ் நாயக் மூலம் காலக்கணிப்பை அடையாளப்படுத்தினர்.

அவ்வகையில் மோளப்பாளையம் தொல்லியல் இடத்தின் காலம் இரண்டு கரியமிலக் காலக்கணிப்பின் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலக்கணிப்பு அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிடிக் ஆய்வகத்தில் பெறப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மோளப்பாளயம் அகழாய்வில் வாழ்விடச் சான்றுகள் தரையிலிருந்து 80 முதல் 140 செ.மீ. வரை கிடைத்துள்ளதாக முனைவர் செல்வக்குமார் குறிப்பிடுகிறார். மோளப்பாளையம் பகுதியில் வாழ்ந்த புதியகற்கால மக்கள், பல குழிகளைத் தோண்டி அவற்றைச் சேமிப்புக் கிடங்குகளாகவும் பிற செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவருகின்றது.

இக்குழிகளில் கரிந்த விதைகள், எலும்புகள், கற்கருவிகள், பானை ஓடுகள் ஆகியவை மிகுதியாகக் கிடைக்கப்பெற்றதாக முனைவர் செல்வக்குமார் அவர்கள் தமது கருத்தைப் பகிர்ந்தார்.

இந்தப் பகுதியின் மிக முக்கியத் தடயமாக அகழாய்வுக்குழிகளில் மூன்று மெருகேற்றப்பட்ட கற்கோடரிகள் கண்டுபிடிக்கப்பட்டது திகழ்கின்றன.

மோளப்பாளையம் அகழாய்வில் மனித ஈமச்சின்னம், பானை ஓடுகள், வளர்ப்பு, காட்டு விலங்குகளின் எலும்புகள், மான் கொம்புகள், கல் உருண்டைகள், அரவைக் கற்கள், கடற் கிளிஞ்சிலால் செய்யப்பட்ட மணிகள், பதக்கங்கள், சுடுமண் பொருள்கள், மெருகேற்றப்பட்ட கருப்பு, சிவப்பு பானை வகைகள், குவார்ட்ஸ் கற்களால் செய்யப்பட்ட பிளேடுகள், பிறைச் சந்திரன் வடிவ நுண்கற்கருவிகள், கரிந்த சுடுமண் கட்டிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மோளப்பாளையம் பகுதிகளில் மக்கள் வேளாண்மையும், ஆடுமாடுகள் வளர்த்தும் வாழ்ந்து வந்துள்ளனர் என்பது இதன் வழியாகப் புலனாகிறது.

மோளப்பாளையத்தின் புதிய கற்காலத் தொல்லியல் இடத்தைச் சுற்றி மேற்குத் தொடர்ச்சி மலைகள் அரண்போல அமைந்துள்ளன. நொய்யல் ஆற்றிலிருந்து தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் மாடுகளின் பட்டிகளை அமைக்கவும், வேளாண்மை செய்யவும் பொருத்தமான இடமாக இருந்தமைக்கான அடையாளங்களை வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த இடத்தின் சுற்றுச்சூழல் வளத்தின் காரணமாகப் புதியகற்கால மக்கள் இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதும் அகழாய்வின் வழி அறியமுடிகின்றது.

தமிழ் நாட்டில் பல தொல்லியல் இடங்கள் மெருகேற்றப்பட்ட கோடரியை வெளிப்படுத்தியிருந்தாலும் அவை அனைத்தும் புதியகற்கால இடங்களாக இருக்காது என்பதும் ஆய்வாளர்களின் கூற்று. பானை ஓடுகள், எலும்புகள் உள்ளிட்ட வாழ்விடச் சான்றுகள் இருந்தால் மட்டுமே புதியகற்கால இடங்களைத் தெளிவாக அடையாளப்படுத்த இயலும். அவ்வகையில் மோளப்பாளையம் அகழாய்வின் வழி மேற்குத் தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தெளிவான புதியகற்காலச் சான்றுகள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு முன்பாகத் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் இந்திய அரசு தொல்லியல் துறை சார்பில் பையம்பள்ளியிலும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் பூதிநத்தம் சென்னானூர் போன்ற இடங்களிலும், சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் வலசை, செட்டிமேடு போன்ற இடங்களிலும் புதிய கற்காலச் சான்றுகளைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தி உள்ளனர்.

தென்னிந்தியாவில் புதியகற்காலச் சான்றுகள் கர்நாடகா, ஆந்திரா, வடதமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் மட்டுமே தெளிவாகக் கிடைத்துள்ளன. மேற்குத் தமிழ்நாட்டின் மோளப்பாளையம் அகழாய்வு தென்னிந்திய புதியகற்கால மக்களின் வாழ்வியல் முறைகளை வெளிப்படுத்தியுள்ளதோடு இந்த அகழாய்வின் வழி நீர்வளமுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை அடுத்துள்ள பகுதிகளில் புதியகற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது புலனாகிறது.

புதியகற்காலம் கி.மு.3000 – கி.மு.1200க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. மோளப்பாளையத்தில் கிடைத்த சான்றுகள் இப்பண்பாட்டின் இறுதிக் காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும் என்று முனைவர் செல்வக்குமார் குறிப்பிடுகிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளும், தென்மேற்குப் பருவமழையின் சாரலும், நொய்யல் சிறுவாணி தண்ணீரும் கோவை நகரை இன்று வளப்படுத்துவதுபோல அக்காலத்தில் சுமார் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் மோளப்பாளையத்தில் வாழ்ந்த புதிய கற்கால மக்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கியுள்ளன. மோளப்பாளையம் தொல்லியல் இடத்தின் முக்கியமான கண்டுபிடிப்பு இங்கு கிடைத்த கடற்படுபொருள்களான சங்கு மணிகளாகும். இவை 3600 ஆண்டுகளுக்கு முன்னர் குறிஞ்சி நிலம் மட்டுமல்லாமல் நெய்தல் நிலவமைப்பும், முல்லை நிலவமைப்பும் உருவாகி இவ்விரு நிலங்களுக்கிடையே பரிமாற்றம் நடந்திருந்திருந்தது என்பதை நமக்குக் காட்டுகின்றன.

இந்திய அரசின் தொல்லியல் துறையின் அனுமதியுடன் நடத்தப்பட்ட இந்த அகழாய்விற்குத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நிதி வழங்கி ஆய்வு சிறக்கத் துணை நின்றதாகவும், மோளப்பாளையத்தில் கிடைத்த தொல்பொருள்கள் மேலும் ஆய்வு செய்யப்பட்டுவருவதாகவும் தஞ்சைப் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருவள்ளுவன் குறிப்பிடுகிறார்.

யாக்கை தொல்லியல் அமைப்பின் குமரவேல் மூலமே இந்த இடம் பற்றித் தெரியவந்து நாமும் இப்பகுதிக்குக் களப்பயணம் சென்று தரவுகளைச் சேகரித்தோம். மோளப்பாளையம் அகழாய்வு மேற்கு மண்டலத் தமிழகத்தின் முக்கியமான தரவுத் தடமாகத் திகழ கோயமுத்தூர் தொல்லியல் ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் இப்பகுதி குறித்த தரவுகளை வெளிப்படுத்திட வேண்டும்.

கொடுமணல் குறித்த தொல்சான்றுகளைத் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத் தொல்லியல் துறையே வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியதுபோல, மோளப்பாளையம் குறித்த தொல்சான்றுகளும் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தால் வெளியுலகு அறிய அடையாளப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

பகிர:
பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *