கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப் . . . .
பாடல் சான்ற நெய்த னெடுவழி
மணிநீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய
பனிநீர்ப் படுவின் பட்டினம் படரி
னோங்குநிலை யட்டகந் துயுன்மடிந் தன்ன
வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற்
கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோண்
மதியேக் கறூஉம் மாசறு திருமுகத்து
நுதிவே னோக்கி னுளைமக ளரித்த….
சங்க இலக்கியக் காலத்தில் எயிற்பட்டினம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மரக்காணம், பெரிப்ளூஸ் என்ற கிரேக்க நூலில் சோபட்டினம் என்று குறிக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பை வெளிக்காட்டுகிறது. அதே நூலில் அழகான பட்டினம் என்றும் இந்த ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பையும் தொன்மையையும் வெளிப்படுத்தும் துறைமுக நகரமாக விளங்கிய இந்த ஊர், ஆழிப்பேரலை காரணமாக அழிந்துபோனதாகச் சான்றுகள் கிடைக்க, அதன்பிறகு இராஜராஜசோழன் இப்பகுதியை மீள் உருவாக்கம் செய்து பூமிசுவரர் கோயிலைக் கட்டுவித்தார் எனச் சான்றுகள் பகிர்கின்றன. அதாவது தஞ்சைப் பெரிய கோவில் கட்டுமானத்திற்கு 15 ஆண்டுகளுக்கு முன்னரே இக்கோயிலை இராஜராஜசோழன் கட்டினார் என்று சான்றுகள் நமக்குக் கிடைக்கப்பெறுகின்றன.
சங்க காலத்திற்கு முன்னரே மிகச்சிறப்பு பெற்ற ஊராகத் திகழ்ந்த எயிற்பட்டினம் நகரை ஒய்மா நாட்டு நல்லியக்கோடன் ஆட்சி செலுத்தினான் என்ற குறிப்புகள் இவ்வூரின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன.
பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு மையம் ஒரிசா பாலுவும் இப்பகுதியை ஆய்ந்து, சங்க இலக்கிய ஊரான எயிற்பட்டினம்தான் இன்றைய மரக்காணம் என்று உறுதிப்படுத்தினார்.
மரக்காணம் கடல் சுவரை ஆய்வு செய்த ஒரிசா பாலு, சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்துவாரம் வரையிலும், அடுத்த பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரையும் செல்கிறது என்று குறிப்பிடுகிறார். மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் இப்பகுதியில் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராகவோ, கடல் நீர் தடுப்புச்சுவராகவோ இருந்திருக்கலாம் என்று ஒரிசா பாலு அவர்களும் தொல்லியல் துறையினரும் குறிப்பிடுகின்றனர்.
நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரை வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும், அங்கு சுவையான சுட்ட மீனும், பழம்பேடும் கிடைத்ததாகவும் சங்க இலக்கியக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.
சிறந்த துறைமுக நகரமாக விளங்கிய எயிற்பட்டினத்திற்குக் கிரேக்கர்களும் சீனர்களும் வணிகத்தின் பொருட்டுக் கப்பல்களில் வருகைதந்தனர் என்ற குறிப்பும் காணக்கிடைக்கின்றன. மரக்கலங்கள் வந்து சென்ற இடமாகவும், மரக்கலங்கள் உருவாக்கப்பெற்ற ஊராகவும் இன்றைய மரக்காணம் எனும் எயிற்பட்டினம் திகழ்ந்தது.
எயிற்பட்டினம் நகரில் இன்றும் காணப்படும் பூமிசுவரர் கோயிலில் இராஜராஜசோழன், இராசேந்திரச் சோழன், குலோத்துங்கச் சோழன், நாயக்க அரசர்களின் கல்வெட்டுகள் ஆகியவை காணக்கிடைக்கின்றன. சோழர்கள் ஆட்சிக்காலம் வரை இப்பகுதி எயிற்பட்டினம் என்றே அழைக்கப்பட்டன என்பதும், விஜயநகர ஆட்சிக்காலத்தில்தான் இப்பகுதி மரக்காணம் என்று அழைக்கப்பட்டன என்ற குறிப்புகளும் கல்வெட்டுகள் வாயிலாலகக் கிடைக்கின்றன.
எயிற்பட்டினத்தில் அதிகமான மணல்மேடுகள் காணப்படுவதை வைத்து இப்பகுதி குறைந்த காலமே துறைமுகமாக விளங்கியிருக்கலாம் என்று ஒரிசா பாலு குறிப்பிட்டுள்ளார்.
சங்க இலக்கிய ஊராக விளங்கும் இன்றைய மரக்காணம் பற்றிய தொல் சிறப்பை மேலும் அறியத் தமிழ்நாடு தொல்லியல் துறையினர் 2005 தொடங்கி 2006 வரை அகழாய்வு நடத்த முடிவு செய்தனர். மரக்காணம் பகுதியில் ஐந்து அகழாய்வுக் குழிகள் அமைக்கத் திட்டமிட்டு அதன்படி அகழாய்வு நடத்தப்பட்டது.
அகழாய்வுக்குழிகளில் சிவப்பு நிற மண்பாண்டங்களும், பீங்கான் பொருட்களும் கண்டெடுக்கப்பட, அதனைத்தொடர்ந்து மற்ற பகுதிகளில் நடத்திய அகழாய்வு மூலம் 51 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் 12 நாணயங்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 27 சுடுமண் பொருட்களில் கெண்டிப் பகுதிகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன என்று தொல்லியல் துறையினர் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடுகின்றனர்.
மரக்காணம் அகழாய்வில் குழி எண் 3, 5 ஆகியவற்றிலேயே அதிகமான தொல்பொருட்கள் கிடைக்க, குழி எண் 4இல் ஒரு தொல்பொருள்கூடக் கிடைக்கவில்லை என்பதையும் தொல்லியல் துறையினர் பதிகின்றனர். இங்கு கிடைக்கப்பெற்ற நாணயங்கள் சோழ சிற்றரசர்கள், விஜயநகரம், ஆங்கிலேயர் காலத்தியவை ஆகும்.
இங்கு கிடைக்கப்பெற்ற நாணயம் ஒன்று ஈழநாட்டைச் சார்ந்தவை என்றும், அப்போது அப்பகுதி சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தமையையும் தொல்லியல் ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. மரக்காணம் அகழாய்வு அறிக்கை மூலம் இப்பகுதியில் 11ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய சான்றுகளே கிடைக்கின்றன என்று தமிழகத் தொல்லியல் துறையினர் குறிப்பிடுகின்றனர்.
மரக்காணம் அகழாய்வு மீண்டும் பல புதிர்களை அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது. பண்டைய எயிற்பட்டினம் கடலில் மூழ்கிவிட்டதா என்ற கேள்விகளுக்கு 2005-2006ஆம் ஆண்டின் அகழாய்வு விடை பகிரவில்லை. எதிர்காலத்தில் எயிற்பட்டினத்தின் சிறப்பை நாம் அறிய மீண்டும் இப்பகுதிகளின் தொன்மை வரலாற்றை மீட்க வேண்டியதன் அவசியம் மிக முதன்மையானது.
(தொடரும்)