சங்க இலக்கியங்கள், தமிழகத்திற்கும் கிரேக்க, ரோமாபுரி ஆகிய நாடுகளுக்கும் இருந்த தொடர்புகளை எடுத்துரைக்கும் ஆவணங்கள். இதே காலகட்டத்தில் உருவான கிரேக்க, ரோமன், சுமேரிய இலக்கியங்களில் தமிழகம் பற்றிய விரிவான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. சங்க இலக்கியங்கள் மன்னர்களை மட்டுமின்றி மக்களையும் வாழ்வியலையும் பேசும் களஞ்சியமாகத் திகழ்கின்றன.
தமிழ் நிலத்தின் கடைக்கோடி கிராமத்தில் வசிப்பவனின் உற்பத்தி, உறவுகள், வணிகம் ஆகியவற்றைப் பற்றியும், குடியானவர்களின் பொது உண்மைகள், உளவியல், குடிமக்களின் வலிமை, அவர்களின் அரசியல் அதிகாரம் ஆகியவை பற்றியும் எடுத்துரைக்கிறது. தமிழ் நிலத்தின் ஒட்டு மொத்த அனுபவத்தையும் உள்வாங்கி உருவாக்கப்பட்ட இலக்கியங்களாகவே சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் திகழ்கின்றன.
சங்க இலக்கியங்கள் தமிழ் நிலத்தின் பல்வேறு ஊர்களை அடையாளப்படுத்துகின்றன. சங்க இலக்கியங்கள் மூலம் கிட்டத்தட்ட 300 ஊர்ப்பெயர்களைத் தொல்லியல்துறை மீட்டெடுத்துள்ளது. அவ்வகையில் சங்க இலக்கியத்திலும், தொல்லியல் வரலாற்றிலும் சிறப்பிடம் பெறும் நிலமாக மதுரை நகரம் திகழ்கிறது. மதுரை என்ற சொல் கோயில், வைகை நதி, பாண்டிய அரசு போன்றவற்றை நினைவுபடுத்தினாலும், சிலப்பதிகாரமும் நம் கண்முன்னே சாட்சியாக வந்து செல்கிறது. மதுரையில் பொட்டல் என்னும் பெயரில் பல ஊர்கள் இன்றும் மக்களின் வழக்கு மொழியாய் இருந்து வருகின்றன. காந்தி பொட்டல், செல்லூர்க் களத்துப் பொட்டல், ஆட்டுமந்தைப் பொட்டல் ஆகிய பகுதிகள் இன்று மதுரை நகரின் அடையாளமாக இருப்பதுபோல், கோவலன் பொட்டல் பகுதி மதுரையின் ஆதி அடையாளமாகத் திகழ்கிறது.
‘தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளிகடல் முன்னி யதுபோலும் தீநீர்
வளவரல் வையை வரவு;
வந்து மதுரை மதில்பொரூஉம் வான்மலர்த்தாய்
அந்தண் புனல்வையை யாறெனக் கேட்டு;
மின்னவிர் ஒளியிழை வேயு மோரும்’
வைகை நதியின் சிறப்பினைப் பரிபாடல் சிறப்புடன் பதிகின்றதுபோல, கோவலன் பொட்டல் பகுதி கிட்டத்தட்ட 1800 ஆண்டுகள் மிகப்பழைமையான பகுதியெனத் தொல்லியல் துறை அகழாய்வு மூலம் அறியப்பட்டுள்ளது.
பெருங்கற்காலச்சின்னங்களோடு முதுமையான நகரின் பழம்பெருமையினை ஆவணப்படுத்தும் கோவலன் பொட்டல், இன்றைய மதுரை நகரின் பழங்காநத்தம் பகுதியில் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த புதைகாடாகத் திகழ்ந்ததாகப் பெருங்கற்காலச் சான்றுகளில் காணக்கிடைக்கின்றன.
தமிழ்நாடு அரசின் தமிழகத்தொல்லியல் துறை 1980ஆம் ஆண்டு இப்பகுதியில் அகழாய்வு செய்ய முடிவெடுத்து அதன் வாயிலாக மேற்பரப்பு அகழாய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் சிற்சில சான்றுகள் கிடைக்கப்பெற, அதனைத் தொடர்ந்து அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டன.
இதில் அப்பகுதி முதுமக்கள் தாழிகள் இருக்கும் இடம் என்பது உறுதியானது. மேலும் ஒரு முதுமக்கள் தாழியில் 1800 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மனிதனின் எலும்புக் கூடுகள் கொண்ட முதுமக்கள் தாழியும் மீட்கப்பட்டது.
சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகியின் கணவன் கோவலன் மீது பாண்டிய மன்னனின் பட்டத்தரசி கோப்பெருந்தேவியின் கால் சிலம்பினைத் திருடியதாக வீண் பழி சுமத்தப்படும். இதனைத் தீர விசாரணை செய்யாத பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், கோவலனின் தலையை வெட்ட ஆணையிடுவான். மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்த பொட்டலில் கோவலனின் தலை வெட்டப்பட்டதால், பிற்காலத்தில் அவ்விடம் கோவலன் பொட்டல் என்றாயிற்று என்று கூறப்படுகிறது.
பழங்காலமாக இப்பகுதி இப்பெயரால் அழைக்கப்படுவதும், மக்களின் வாழ்வியல் பெயரோடு இப்பகுதி கலந்திருப்பதால் சிலப்பதிகாரக் காலத்தோடு தொடர்புடையது என்று தொல்லியல் துறையினர் உறுதிப்படுத்துகின்றனர்.
1981இல் தொல்லியல்துறை இப்பகுதியில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள், கறுப்பு சிவப்பு வண்ண மட்பாண்டங்கள், புதிய கற்காலக் கைக்கோடரி, மீன்சின்னம் பொறிக்கப்பட்ட சில செப்புக்காசுகள் கிடைத்தன. இப்பகுதியில் கிடைத்த சங்க காலத்திய செப்புக் காசை இப்பகுதியின் முக்கியமான சான்றாகத் தொல்லியல் துறையினர் குறிப்பிடுகின்றனர்.
2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான ஆதாரமாக இதனைக் கருதலாம் என்று குறிப்பிடுகின்றனர். கோவலனின் தலையைக் கொய்த இடமாகச் சொல்லப்படும் வெட்டுப்பாறையும், வடக்குப் பார்த்த முகமாக இருக்கும் பீடங்கள் மட்டுமே உள்ள கோவலன் கண்ணகிக்கான கோயிலும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை திறந்தவெளியாகவே இருந்தன. இப்போது இவ்விடம் தேவேந்திர குல வேளாளர் குலத்திற்கு உரிமையான மயான இடமெனப் பாதுக்காக்கப்பட்டு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இன்றும் இப்பகுதியை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகள் கோவலன் நகர் என்றே மக்கள் அழைக்கின்றனர். கோவலனின் மரபுவழி வந்தவர்கள் வருடத்தில் சில முறை இப்பகுதிக்கு வந்து வழிபாடாற்றி செல்வதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுவதும் இங்கு பதியத்தக்கது.
கோவலன் பொட்டல் பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் மூன்று அடுக்காகத் தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அகழாய்வு குழிகளின் அடிப்பகுதியில் இரும்புக்கால மண் அடுக்கு கிடைத்துள்ளது. அதற்கு மேலே உள்ள அடுக்கு சங்க காலத்தைச் சேர்ந்த அடுக்கு என்று தொல்லியல் துறையினர் கூறுகின்றனர். அதற்கும் மேலே பாண்டியர் காலச் செப்புக்காசுகள் கிடைத்திருப்பதால் அது இடைக்கால அடுக்கு என அறியப்படுகிறது.
தென் தமிழகத்தில்தான் அதிகமாகத் தாழிகள் காணக் கிடைக்கும் என்பது போல, இந்தப் பகுதிகளில்தான் தாழிகளில் புதைக்கிற பழக்கம் இருந்திருக்கிறது. வடதமிழ்நாட்டிலோ மேற்கிலோ கற்பதுக்கைகளும், கற்திட்டைகளும் மட்டுமே காணப்படுகின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் கற்பதுக்கைகளைத்தான் அதிக வயதுள்ளதாகக் கூறிவந்தனர். ஆனால் சமீப கால ஆய்வுகளுக்குப் பிறகு தாழிகளில் புதைக்கப்படுகிற பழக்கம்தான் தொன்மையானது என்பதை ஏற்றுக் கொள்ளும் வழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது.
கற்பதுக்கைகளை நான்கு காலகட்டமாக ஆய்கின்றனர். பள்ளம் தோண்டி கற்களை அடுக்கி, அதற்குள் புதைத்து, கற்களால் மூடுவது பழைய வழக்கம். அதன்பிறகு மேல் பரப்பில் கற்களை அடுக்கி புதைத்து, அதன்மேல் கற்களைக் கொண்டு மூடுவது கற்திட்டை முறை. நெடுங்கற்கள் என்று பெரிய அளவிளான கற்களை நடுவது மூன்றாம் கட்டமாகவும், அதிலிருந்து சிறிய கற்களை நடுகற்களாக நடுவதுமாகக் காலத்தில் மாற்றம் அடைந்து வந்துள்ளன.
இவ்வாறு கி.மு.1300இல் இருந்து சங்க காலத்தின் இறுதிக் காலமான கி.மு.5ஆம் நூற்றாண்டு வரை இந்தப் பெருங்கற்காலச் சின்னங்கள் மாறிவந்துள்ளன என்று தொல்லியல் அறிஞர் திரு.சாந்தலிங்கம் கூறுகிறார்.
‘உரியது ஒன்று உரைமின் உறு படையீர் என
கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கூடு அறுந்தது
புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்துயர் கூரக்
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்துஎன்’
என்ற பாடலின் சிலப்பதிகாரம் கொலைக் களக்காதை வரிகள் கொண்டு, மக்களால் பல நூறு ஆண்டுகளாக இப்பகுதி கோவலன் பொட்டல் என அறியப்படுகிறது.
சிலப்பதிகாரக் காலத்திலேயே நாளங்காடி, அல்லங்காடி எனப் பல சிறப்புகளுடன் விளங்கிய மதுரை மூதூர் நகரம் பல இலக்கியங்களிலும் புகழப்படும் நகரமாகத் திகழ்கிறது. வைகை ஆற்றின் பல பகுதிகளை இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தினால் மேலும் பல வரலாற்றுச் சிறப்புகளை நாம் மீட்டெடுக்கலாம்.
(தொடரும்)