(தமிழகத்தின் மிகப்பழமையான சங்க காலத்திய கல்வெட்டுகள்)
வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு இன்றைய நவீன காலம் வரை வரலாற்றிலும் இலக்கியத்திலும் தவிர்க்க இயலாத பகுதியாக மதுரை திகழ்கிறது. பண்டைய இந்தியாவில் துறவிகள் பெரும்வழிகளில் நடந்து இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் கடந்துசென்றனர்.
சமணத் துறவிகளே இந்தியா முழுமைக்கும் பயணம் மேற்கொண்டனர் என்ற குறிப்புகள் இந்தியாவின் பல இடங்களில் காணக்கிடைக்கின்றன. இந்தியாவின் வட பகுதிகளில் இருந்து வருகை புரிந்த சமணத் துறவிகள், மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் தங்கி, தங்களின் சமயத்தையும் மக்களுக்குத் தேவையான அறங்களையும் ஆற்றி வந்தனர்.
சைவ, வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்களின் ஆளுகைகளை அரசமைப்புகள் மூலமும் ஆட்சி அதிகாரத்தின் மூலமும் வலுவாக மக்களிடம் திணிக்க, சமணமோ மென்மையான முறையில் தம் மதத்தை வளர்த்தது. அமைதியான குடிமைச் சமூக அமைப்பு முறையே வணிகத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்ற நோக்கில் பெரும் வணிகக் குழுக்களும் சமணத்தைக் காலப்போக்கில் ஆதரிக்கத் தொடங்கின. அவ்வாறு வளர்ந்த சமணம், தென்னிந்தியாவில் குலதெய்வ, சிறுதெய்வ அமைப்பு முறையில் பெரும் மாறுதலை ஏற்படுத்த முயன்றும் வலுவிழந்தே காணப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான மன்னர்கள் சமணத்தை ஆதரிக்கவே செய்தனர்.
சமய முரண் காரணமாக சமணம் பல இடங்களில் கருத்தியலால் முடக்கப்பட்டது. தென்னிந்தியாவில் விஜயநகர அரசர்கள் சைவ, வைணவத்தைப் போற்றினாலும் சமணத்தை ஒடுக்கும் பணிகளில் ஈடுபடாமல் மறைமுக ஆதரவை வழங்கியே வந்தனர். இன்றைய இந்தியாவில் சமணத்தைப் பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் பெரும் வணிகக் குழுக்களாகவே உள்ளனர் என்பதும் நாம் அறிய வேண்டியது. பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை வணிகர்களின் ஆதரவு பெற்ற சமயமாக இந்தியாவில் திகழும் சமணம், தமிழகத்திலும் பல இடங்களில் பரவலாகக் கால் ஊன்றியது.
மதுரையைச் சுற்றி சமணத் துறவிகள் பல இடங்களில் தங்கிய சான்றுகள் இன்றும் கிடைக்கப்பெறுகின்றன. அந்த வகையில் மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் சமணச் சான்றுகள் அடங்கிய பகுதியாக மாங்குளம் திகழ்கிறது.
1882ஆம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி இராபர்ட் சீவல் என்பவர் தமது களப்பயணத்தில் மாங்குளம் பகுதியின் தொல்சான்றுகளைக் கண்டறிந்தார். அதன் பின்னர் 1906ஆம் ஆண்டு பிரான்சிஸ் என்பவரும், சுப்பிரமணியர் என்பவரும் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர் என்ற தகவல் தமிழகத் தொல்லியல் குறிப்பேடுகளில் கிடைக்கப்பெறுகின்றன. 1909ஆம் ஆண்டு வெங்கையா என்பவர் இப்பகுதிகளின் கல்வெட்டுகளை வாசித்துப் பதிவு செய்துள்ளார். 1965ஆம் ஆண்டு ஐராவதம் மகாதேவன் இப்பகுதியினை ஆராய்ந்து தமிழி எழுத்துகளே என்பதை உறுதி செய்தார். இந்த மலையில் காணப்படும் ஐந்து குகைகளில், நான்கு குகைகளில் ஆறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தமிழகத்தின் சங்க காலத்திய கல்வெட்டுகளில் மாங்குளம் கல்வெட்டு மிக முக்கியமான கல்வெட்டு என்று தொல்லியல் துறையும், பிற ஆய்வாளர்களும் இப்பகுதியின் பழமையைப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற பழமையான தமிழி எழுத்துகளில் மாங்குளம் பகுதியில் கிடைத்த பாறைக் குகை எழுத்துகளே மிகப் பழமையானது. இதைக் கருத்தில் கொண்டு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் பட்டியலில் இதனைச் சேர்த்துள்ளனர்.
சமணத்துறவிகள் பண்டைய காலம் முதலாகவே மக்களின் வாழ்விடங்களில் வாழாமல் ஊருக்கு வெளியிலேயே தங்கள் வாழ்விடத்தை அமைத்துக்கொண்டனர். அந்த வகையில் மாங்குளம் பகுதியில் சமணத் துறவிகள் வாழ்ந்தனரா என்பதை அறியும் பொருட்டு தமிழகத் தொல்லியல் துறை 2005-06ஆம் ஆண்டு மாங்குளம், மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் அகழாய்வு மேற்கொண்டனர். மீனாட்சிபுரத்தில் நிலப்பகுதியில் இரண்டு அகழாய்வுக் குழிகளும், குன்றுகள் பகுதியில் இரண்டு குழிகளும் அமைத்து அகழாய்வு மேற்கொண்டனர்.
‘கணிய் நந்தா ஆஸிரிய்இ குவ் அன்கே தம்மம் இத்தாஅ நெடுஞ்செழியன் பணஅன் கடல்அன் வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்’
கணிய் நந்தா சிரியன் என்பவருக்கு அமைத்துக் கொடுத்த பள்ளி என்பது இதன் பொருள்.
சங்க காலப் பாண்டிய அரசன் சமணத் துறவிகளுக்குக் கல் படுகைகளை உருவாக்கி அளித்தான் என்ற செய்திகள் கல்வெட்டுகளில் கிடைக்கின்றன.
2007ஆம் ஆண்டு சமண சமயத்தின் பிரார்த்தனைக் கூடத்தின் இடிந்த பகுதிகளைத் தொல்லியல் ஆய்வுகள் மூலம் கண்டறிந்தனர்.
மாங்குளம் பகுதியில் சங்க காலத்தைச் சேர்ந்த சில கட்டடப் பகுதிகள் தொல்லியல் ஆய்வுகளால் வெளிப்படுத்தப்பட்டன.
கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையிலும், அகழாய்வுச் சான்றுகளின்படியும் மாங்குளம் கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று தொல்லியல் துறையினர் தங்களது ஆய்வுகளில் குறிப்பிடுகின்றனர்.
அரசர்களும், பெரும் வணிகக் குழுக்களும் சமணத்துறவிகளுக்குப் பள்ளிகள் அமைத்துத் தந்தனர் என்ற குறிப்புகள் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன. சங்க காலம் முதலாகவே தமிழகத்தில் சமணம் இப்பகுதிகளில் நன்கு செழுமையாக இருந்தது எனவும், சமணத் துறவிகள் இப்பகுதிகளில் குழுவாக வாழ்ந்துள்ளனர் என்பதும் அறியக்கிடைக்கின்றது.
‘வெள்அறை நிகமத்தோர் கொட்டியோர்’
நிகமம் என்ற பிராகிருதச் சொல் வணிகக் குழுவினைக் குறிக்கும். இந்தப் பாறையைக் கொட்டிக் கொடுத்தவர் வெள் அறை என்னும் ஊரிலுள்ள வணிகக் குழுக்கள் என்ற செய்தி இந்தக் கல்வெட்டு மூலம் தெரிய வருகின்றது. நிகமம் என்று அழைக்கப்பட்ட வணிகக்குழுக்கள் தமிழகத்தில் இருந்து அறச்செயல்கள் செய்தமை இதன்மூலம் தெரியவருகின்றது. ‘காவிதி’ போன்ற பட்டங்கள் வணிகர்களுக்கு அன்றைய காலத்தில் வழங்கப்பட்டமையும் அறியமுடிகிறது. பாண்டிய நாட்டில் சமணத்திற்கு அரச ஆதரவு இருந்துள்ளமையினையும், வணிகர்களும் பொதுமக்களும் சமண சமயத்தைப் பலவாறாக முன்வந்து ஆதரித்தனர் என்பதும் மாங்குளம் என்னும் தொல்லியல் தடத்தின் வாயிலாக அறிய முடிகின்றது.
பெரும் கோயில்களை உருவாக்கிய சைவ, வைணவ சமயங்கள் மக்கள் குழு சமூகங்களின் முன்னேற்றத்திற்கு எவ்வித மாற்றத்தையும் உருவாக்கவில்லை. மக்கள் குழுக்களின் சிறு தெய்வங்களையும் இணைத்து சைவ, வைணவ சமயங்கள் பெற்ற எழுச்சியால் சமணம் பெரும்பான்மை ஆதரவை இழந்தாலும் இன்றும் இந்தியாவில் தமது அறப்பள்ளிகள் வாயிலாக பெரும்பணிகளைப் புரிவதும், சங்க காலத்திலேயே இச்சமயம் செழிப்புடன் இருந்தமையும் மாங்குளம் அகழாய்வுகள் வாயிலாக வெளிப்படுகின்றது.
(தொடரும்)