‘வேள்வி தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட
வைகுறு மீனின் பைபய தோன்றும்
நீர்பெயற்று எல்லை போகி பால் கேழ்
வால் உளை புரவியொடு வட வளம் தரூஉ
நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா…’
(பெரும்பாணாற்றுப்படை)
மேற்காணும் சங்க இலக்கியப் பாடல் குறிப்பிடும் நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்தில் கப்பல் வரிசையாக வந்து நிற்க, பொருட்களும் வரிசையாக இறக்கப்பட்டன. இதனை அங்கே காவல் புரியும் அரச வீரர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தனர் என்று பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.
கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களில் மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், வசவசமுத்திரம், அரிக்கமேடு போன்ற பல சிறப்பு வாய்ந்த துறைமுகங்கள் செழிப்பாக இயங்கின என்பதை இலக்கியங்களும் வரலாறும் நமக்குத் தெரிவிக்கின்றன.
காலப்பழமையால் நாம் ஆராய்ந்தால் ‘நீர்ப்பெயற்று’ என்ற துறைமுகம் வசவசமுத்திரம் பகுதியையே குறிக்கின்றன என்பது திண்ணம்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்பெறும் தொல்காப்பியம் ‘கலத்திற் சேரல்’ என்று கடல் பயணத்தைக் குறிக்கிறது.
‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன்’
என்பது புறநானூற்றுப் பாடல், ‘அலைகடல் நடுவுள் பல கலம்’ செலுத்தியவர்கள் தமிழர்கள் என்று குறிப்பிடுகிறது.
சங்க இலக்கியங்களில் வெளிநாட்டினர் பற்றிய குறிப்பு பல இடங்களில் உள்ளது. அண்மைக் காலம்வரை வெளிநாட்டில் சங்ககாலத் தமிழர் பற்றிய சான்றேதும் கிடைக்காமலிருந்தது. ஆனால், சமீபத்தில் கிழக்கு நாடுகளிலும், மேற்கு நாடுகளிலும் சங்ககாலப் பழந்தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பல கிடைத்திருக்கின்றன.
எகிப்து நாட்டில் செங்கடற்கரையில் உள்ள தொன்மையான நகரம் குவாசிர் அல்காதிம். அங்கு அமெரிக்கத் தொல்லியல் நிபுணர்கள் நடத்திய அகழாய்வில் பழந்தமிழ் எழுத்தில் ‘கண்ணன்’, ‘சாத்தன்’ என்று எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
எகிப்து நாட்டில் பெறனிகே என்ற இடத்தில் பழந்தமிழில் ‘கொறபூமான்’ என்று எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது.
தாய்லாந்து நாட்டில் கிளாங்தோம் என்ற இடத்தில் சோழருடைய புலி அடையாளம் பொறிக்கப்பட்ட முத்திரை கிடைத்துள்ளது.
தாய்லாந்து நாட்டில் குவான் லுக் பாப் என்ற இடத்தில் பொன் மாற்றுக் காணும் உரைகல் ‘பெரும்பத்தன் கல்’ எனும் எழுத்துப் பொறிப்புடன் கிடைத்துள்ளது.
பண்டைய காலம் முதலாகவே தமிழர்கள் கடல் வாணிகத்தில் சிறந்தும், பல நாடுகளுடன் வாணிகத் தொடர்பும் கொண்டிருந்தனர் என்பதை நாம் அறிய பல துறைமுக அகழாய்வுகள் நமக்கு உதவுகின்றன. அவ்வகையில் தமிழகத் தொல்லியல்துறை சார்பில் 1970ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அகழாய்வில் யவனர் தொடர்புக்குரிய அம்பொரா, ரெளலட் மண்பானைகள் கிடைத்துள்ளமை பெரும்பாணாற்றுப்படை இலக்கியக் குறிப்புகளுக்கு வலுசேர்ப்பவையாக அமைக்கின்றன.
மாமல்லபுரம் அருகே வசவசமுத்திரமும் சதுரங்கப்பட்டினமும் புகழ்பெற்ற பண்டைய ஊர்களாகத் திகழ்ந்திருக்கின்றன என்பது மேலும் இந்தப் பகுதியின் சிறப்பைக் குறிப்பிடுகின்றன.
வசவசமுத்திரம் அருகே வயலூரில் பல்லவ அரசனின் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட, அதில் பல்லவ அரசர்களின் பெயர்ப்பட்டியல் இராச சிம்மன் வரை குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் வசவசமுத்திரம் வயலூரின் ஒரு பகுதியாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருத முடிகிறது. பிற்காலத்திலேயே வசவசமுத்திரம் தனி ஊராகத் திகழ்ந்திருக்கலாம் என்று தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
வசவசமுத்திரம் அகழாய்வில் அயல்நாட்டு மண் கலன்கள், உறைகிணறு அமைப்புகள், கல் மணிகள் ஆகியவை கிடைக்கப்பெற்றன. உறைகிணறு, வாய்க்கால் போன்ற அமைப்புகள் காணப்படுவதால் அரிக்கமேடு போன்றே இங்கும் நெசவுத் தொழில் சிறந்து விளங்கியிருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் குறிப்பிடுகின்றனர்.
வசவசமுத்திரம் பகுதியில் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வணிகக் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம் என்பது இதன்மூலம் அறிய முடிகின்றது. முதலாம் இராஜ இராஜனின் ஆட்சிக்காலத்தில் வசவசமுத்திரம் ஜனநாத நல்லூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது என்பதை இராஜராஜனின் ஜனநாதன் என்ற பட்டம் மூலமாகவும் அறியலாம் .
கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் பலவும் சங்க காலத்தில் செழிப்போடு திகழ்ந்திருக்கின்றன என்பது தொல்லியல் அகழாய்வுகள் வாயிலாக வெளிக்கொணரப்பட்டுள்ளன.
(தொடரும்)