Skip to content
Home » தோழர்கள் #2 – முதல் கம்யூனிஸ்ட்

தோழர்கள் #2 – முதல் கம்யூனிஸ்ட்

ம. சிங்காரவேலர்

ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுவதுதான் என்றாலும் கடந்த 1 மே 2022 அன்று தமிழகத்தில் அனுசரிக்கப்பட்ட மே தினத்துக்கு முன்னெப்போதும் இல்லாத ஒரு தனிச் சிறப்புண்டு. இந்தியாவிலேயே சென்னையில்தான் முதல் முறையாக மே தினம் அனுசரிக்கப்பட்டது. அந்நிகழ்வின் நூற்றாண்டு விழாவைத்தான் தமிழகம் கொண்டாடி முடித்திருக்கிறது. 1923ஆம் ஆண்டு சென்னையில் கொடியேற்றி, சிறப்புரையாற்றி முதல் மே தின நிகழ்வை முன்னின்று நடத்தியவர் ம. சிங்காரவேலர்.

சிங்காரவேலர் சென்னையைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர். அவர் ஒரு ‘சுதந்திரப் பித்தர்’ என்கிறார் ராஜகோபாலாச்சாரி. சென்னையில் 1860ஆம் ஆண்டு, பிப்ரவரி 18 அன்று ஓரளவு செல்வாக்குள்ள ஒரு மீனவர் கும்பத்தில் பிறந்தார் சிங்காரவேலர். வெங்கடாசல செட்டியார், வள்ளியம்மையார் ஆகியோரின் மூன்றாவது மகன். பெற்றோர் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதால் அப்பெயரைக் குழந்தைக்குச் சூட்டினர். சிங்காரவேலரின் குடும்பத்தினர் பல்லாண்டுகளாக பர்மாவிலிருந்து அரிசியையும், தேக்கு மரத்தையும் கடல் வழியாகக் கொண்டு வந்து இங்கு வாணிபம் செய்து பெரும்பொருள் ஈட்டியிருந்தனர்.

முதலில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், பின்னர் இந்து உயர்நிலைப் பள்ளியிலும் படித்து, மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டத்தையும், சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டத்தையும் பெற்றார் சிங்காரவேலர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். புகழ்பெற்ற வழக்கறிஞர்களிடம் பலரிடமிருந்து பாராட்டுகள் பெற்றார். நியாயமான வழக்குகளை மட்டுமே எடுத்துக்கொண்டு வாதாடுவார். சில சமயம் நீதிமன்றத்துக்குப் போகும் முன்பே இரு தரப்பினரோடும் பேசி, சமாதானம் செய்து வைத்துவிடுவார்.

இக்காலத்தில் ஆங்கிலேயரைப் போல் உடை அணிவதிலும் ஆடம்பரமாக வாழ்வதிலும் விருப்பம் கொண்டவராக இருந்தார். சைவப் பின்னணி கொண்ட வீடு என்றாலும் சிங்காரவேலருக்கு பௌத்தத்தில்தான் ஈடுபாடு இருந்தது.

வீட்டிலேயே மகாபோதி சங்கம் என்றொரு சங்கத்தை உருவாக்கினார். அங்கு ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை பௌத்தக் கொள்கைகள் விளக்கப்பட்டன. மூடநம்பிக்கைக்கும் சாதி வேற்றுமைக்கும் எதிராகவும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

சிங்காரவேலரின் கூட்டங்களில் அயோத்திதாசர், லட்சுமி நரசு நாயுடு போன்ற பலர் பங்கேற்றுள்ளனர். திரு.வி. கல்யாணசுந்தரம் ஓரிரு முறை அக்கூட்டங்களில் கலந்துகொண்டு தன் சக மாணவர்களோடு சேர்ந்து குழப்பம் விளைவித்திருக்கிறார். ஒருமுறை டார்வின் கொள்கையை சிங்காரவேலர் விளக்கியதைக் கேட்டது முதல் மனமாற்றம் அடைந்து ஒரு மாணவராக மாறிவிட்டார் திருவிக.

சிங்காரவேலர் விரிவாக வாசிக்கும் வழக்கம் கொண்டவர். ஒரு பக்கம் மார்க்சிய நூல்கள் பயின்றதோடு மற்றொரு பக்கம் இந்திய அரசியலையும் உலக அரசியலையும் கூர்ந்து கவனித்து வந்தார். அவர் வீட்டில் 20,000 நூல்கள் கொண்ட சிறந்த நூலகம் இருந்துள்ளது. அதனை பெரும் தலைவர்கள் பயன்படுத்தியுள்ளனர். சிங்காரவேலரைச் செதுக்கியதில் நூல்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டுக்கு, ஜார் ஆட்சியில் ரஷ்ய மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் அவருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் வாழ்விலும் சிந்தனைகளிலும் நிரந்தரமான ஒரு மாற்றத்தையும் உண்டாக்கியது. அதன் தொடர்ச்சியாகவே இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

1917ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யப் புரட்சி உலகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களுக்கும் அவர்களுக்காகப் போராடிக்கொண்டிருந்தவர்களுக்கும் மிகப் பெரும் உந்துதலையும் அளித்தது. சிங்காரவேலரை ஒரு கம்யூனிஸ்டாக மாற்றியது ரஷ்யப் புரட்சிதான்.

முதல் உலகப் போரில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. சென்னை உட்பட அனைத்து இடங்களிலும் பரவலாகக் கிளர்ச்சிகள் வெடித்தன. விலையேற்றத்தைத் தாங்க முடியாத மக்கள் மூர் மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் புகுந்து, சூறையாடினர். சரியான வழிகாட்டுதல் இல்லாமல் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களை அமைதிப்படுத்தவும் அவர்களைச் சரியான திசை நோக்கித் திரட்டவும் 24 ஜூலை 1918 அன்று இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ‘சென்னை தொழிலாளர் சங்கம்’ தோற்றுவிக்கப்பட்டது. சிங்காரவேலர் கள அரசியலுக்குள் நுழைந்தது இந்தப் பின்னணியில்தான்.

1919 ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்தும் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்தும் சென்னையில் மக்களைத் திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தினார் சிங்காரவேலர். காங்கிரஸ் கட்சி அவரைத் தொண்டர் படைத் தளபதியாக நியமித்தது. காங்கிரசில் இருந்தாலும், விடுதலை என்பது எளிய மக்களுக்கானதாக இருக்க வேண்டுமென்று காந்தியை வலியுறுத்தி சிங்காரவேலர் எழுதி வந்த கட்டுரைகளை இந்து பத்திரிகை வெளியிட்டது. பின்னர் அந்தக் கட்டுரைகள் ‘சுயராஜ்யம் யாருக்கு?’ என்ற தலைப்பில் புத்தகமாகவும் வெளிவந்தது.

அரசியல் சிங்காரவேலரை உள்ளிழுத்துக்கொண்டது. தனது வக்கீல் தொழிலைக் கைவிட்டார். காங்கிரசுக்கு ஆதரவாகத் தொழிலாளர்களைத் திரட்டினார். தொழிலாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸைத் திரட்டுவதற்கான முயற்சிகளைத் தொடங்கினார். சிங்கார வேலரின் மேடைப் பேச்சிகளிலும் கட்டுரைகளிலும் தீவீர இடதுசாரிப் பார்வை வெளிப்பட்டது.

பெரம்பூரில் இன்று அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறியிருக்கும் பி அண்ட் சி ஆலை (பங்கிங்காம் & கர்னாடிக் மில்) சுமார் நூறாண்டு வரலாறு கொண்டது. சென்னையின் மிக முக்கியமான தொழிலாளர் மையம் அது. இருந்தும் பிற ஆலைகளில் தரப்படுவதைக் காட்டிலும் குறைவான தினக் கூலியை பின்னி ஆலை தம் ஊழியர்களுக்கு வழங்கி வந்தது. கூலியை உயர்த்தக் கோரி தொழிலாளர்கள் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலனில்லாத நிலையில் 1920ஆம் ஆண்டு வேலைநிறுத்தப் போராட்டடத்தைத் தொடர்ந்தனர். அதிகாரத்தின் துணை கொண்டு இந்தப் போராட்டத்தை எதிர்கொண்டது ஆலை நிர்வாகம்.

காவலர்கள் உள்ளே நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் பாபுராவ், முருகன் ஆகிய இரு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். தமிழகத்தில் பலியான முதல் தொழிலாளர் தியாகிகள் என்று திரு.வி.க அவர்களைக் குறிப்பிடுகிறார். அப்போது நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிங்காரவேலர், தியாகிகளின் பாடையைச் சுமந்து செல்ல முன்வந்தார்.

1921இல் பின்னி ஆலை மூடப்பட்டது. கதவடைப்பு செய்த ஆங்கிலேய முதலாளிகளை எதிர்த்துக் களம் கண்டனர் தொழிலாளர்கள். தொழிலாளர் போராட்டத்தின அவசியத்தை சிங்காரவேலரும் திரு.வி.க.வும் காங்கிரசுக்கு வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 10,000 ரூபாய் நிதி வழங்க முடிவு செய்தது.

தொழிலாளர் போராட்டத்தை மீண்டும் அடக்குமுறை கொண்டு நசுக்கப் பார்த்தது நிர்வாகம். இந்த முறையும் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஏழு தொழிலாளர்கள் இறந்தனர். அந்த இறுதி ஊர்வலக் காட்சியை விவரித்து சிங்காரவேலர் எழுதிய கட்டுரையை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று அழைத்தார் திரு.வி.க.

தொழிலாளர்களின் போராட்டங்கள் குறித்து சிங்காரவேலர் கடிதங்களும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார். போராட்டங்களை மார்க்சிய வழியில் அணுக, ஆராய்ந்து விளக்கங்களும் கொடுத்தார். இந்து, சுதேசமித்திரன், ஸ்வதர்மா போன்ற ஏடுகளில் அவர் எழுத்துகள் வெளிவந்தன.

காங்கிரஸ் தொழிலாளர்கள் பக்கம் உறுதியாக நிற்கவேண்டும் என்றும் அவர்கள் குரலை வலுப்படுத்தவேண்டுமென்றும் சிங்காரவேலர் தொடர்ந்து போராடி வந்தார். ‘அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்’ என்ற பெயரில் எனவே தொழிலாளர்களை ஸ்தாபன ரீதியில் திரட்ட காங்கிரசுக்கு உதவி செய்ய ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. 1922இல் கூடிய கயா காங்கிரஸில் இது நடந்தது. அதில் சிங்காரவேலர் ஓர் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார்.

இதே கயா காங்கிரஸில்தான் சிங்காரவேலர் தன்னை வெளிப்படையாகக் கம்யூனிஸ்டாக அறிவித்துக்கொண்டார். உலகக் கம்யூனிஸ்டுகளின் சார்பில் அந்த காங்கிரசில் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறினார். ‘தலைவர் அவர்களே! இந்தக் கூட்டத்தில் கூடிய தோழர்களே! சக ஊழியர்களே, தொழிலாளர்-விவசாயிகளே‘ என்று தன் உரையைத் தொடங்கினார் சிங்காரவேலர்.

அந்த மாநாட்டில் பூரண விடுதலைக்கான தீர்மானத்தையும் முன்வைத்தார் சிங்காரவேலர். கம்யூனிஸ்ட் அகிலத்தில் இருந்தவரும், லெனினுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டவருமான எம்.என்.ராயுடன் சிங்காரவேலருக்கு நட்பு இருந்தது. முதன்முறையாக எஸ்.ஏ.டாங்கேயும் சிங்காரவேலரும் சந்தித்துக்கொண்டதும் அங்கேதான்.

1 மே 1923 அன்று முதன்முறையாக சென்னையில் மெரீனா கடற்கரையில் மே தினத்தைக் கொண்டாடினார் சிங்காரவேலர். தனிக் கட்சி தொடங்குவதையும் அங்கே அவர் பிரகடனம் செய்தார். தொழிலாளி-விவசாயி கட்சி (லேபர் அண்ட் கிஸான் பார்ட்டி) என்பது அதன் பெயர்.

அக்டோபர் 1923இல் ‘லேபர் கிசான் கெசட்’ என்ற மாதமிருமுறை ஆங்கில ஏட்டையும், வார ஏடாக தொழிலாளன் என்ற தமிழ் ஏட்டையும் வெளியிடுவதாக அறிவித்தார். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அமைவதற்கு சிங்காரவேலர் ஆற்றிய பங்கின் தொடக்கமாக இந்நிகழ்வைக் குறிப்பிடலாம்.

கம்யூனிஸ்டுகள் இந்தியாவிலும் செயல்படத் தொடங்கிவிட்டதைக் கண்ட ஆங்கிலேய அரசு அதை முளையிலேயே கிள்ளி எறியும் முயற்சியில் பல சதி வழக்குகளைத் தொடுத்தது. அதில் ஒன்று கான்பூர் போல்ஷெவிக் சதி வழக்கு. சிங்காரவேலர் மீதும் கான்பூர் சதி வழக்கு பாய்ந்தது. அந்நேரம் அவர் கடுமையாக நோய் வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.

இந்தக் காலகட்டத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு தமிழகத்தில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த மாநாட்டில்தான் பெரியார் ஈ.வெ.ரா, எஸ்.ராமநாதன், சுரேந்திரநாத் ஆர்யா, வி. சக்கரைச்செட்டியார் ஆகியோர் காங்கிரஸிலிருந்து வெளியேறினர். பிராமணரல்லாதோர், தீண்டாதோர் ஆகியோருக்குச் சரியான பிரதிநிதித்துவம் வேண்டுமென்றும், தமது பிரதிநிதிகளைத் தாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வேண்டுமென்றும் அவர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவு இது.

அதன்பின்னர் அவர்கள் தொடங்கிய ‘தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்’ அவர்கள் நடத்தி வந்த பத்திரிகையின் பெயரால் ‘ஜஸ்டிஸ் கட்சி’ என்று அறியப்படலாயிற்று. ஆனால் அவர்களில் சிலர் தேசிய இயக்கத்துக்கு எதிராக இருந்தனர். அதை எதிர்த்து பெரியார் உள்ளிட்ட தேசிய உணர்வுள்ள பிராமணரல்லாதோர் பின்னர் ‘சென்னை மாகாண சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்தனர். இது பின்னர் செயலிழந்தது.

1926இல் உருவான சுயமரியாதை இயக்கத்தின் இதழான குடியரசில் சிங்காரவேலர் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதலானார். அந்தக் கட்டுரைகள் சுயமரியாதை இயக்கத்தினரிடம் கம்யூனிசக் கருத்துகள் பரவ உதவின.

(தொடரும்)

உதவிய நூல்கள்:

* சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு : வாழ்வும் சிந்தனையும், கே. முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியம், பாரதி புத்தகாலயம்
* சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை, பா.வீரமணி, பாரதி புத்தகாலயம்

 

பகிர:
nv-author-image

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *