Skip to content
Home » தோழர்கள் #4 – பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு

தோழர்கள் #4 – பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு

தாதா அமீர் ஹைதர்கான்

இந்திய நாட்டின் சுதந்தரத்துக்காகவும், மக்கள் சரிசமமாக வாழ்ந்து சுதந்தரத்தை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவும் ஏராளமானோர் தமது இனம், மதம், மொழி கடந்து போராடியிருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் தாதா அமீர் ஹைதர்கான்.

ஒரு நபர், முன்பின் அறியாத மண்ணில், தெரியாத மொழி பேசும் இடத்தில், ஒட்டுமொத்தமாக வேறு பண்பாடு நிலவும் இடத்தில் வந்து கம்யூனிஸ்ட் கட்சியை முறையாக நிறுவினார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அமீர் ஹைதர்கான் அவ்வாறு முறையான கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த இடம் தென்னிந்தியா.

ஹைதர் பிறந்த இடம் இன்று பாகிஸ்தானில் இருக்கிறது. காஷ்மீரைக் கடந்து, இயற்கை வளம் சூழ்ந்த மலைப்பாங்கான ஓரிடம் மீர்பூர். ஜீலம் நதி அங்குதான் ஓடுகிறது. தனது இளம் வயதிலேயே அதில் மூழ்கி விளையாடுவார் ஹைதர். மிதக்கும் கட்டைகளைப் பற்றிக் கொண்டு நீண்ட தூரம் சென்றுவிட்டுத் திரும்புவார். மலைமீது அமர்ந்து நீலவானத்தை, நதியைப் பார்த்துக் கனவில் மூழ்குவார்.

ஐந்து வயதில் தனது தந்தையை இழந்துவிட்டார். தாய்க்கு மறுமணம் செய்து வைக்கப்பட்டது. தந்தையின் பாசத்தை அனுபவித்த அதே ஹைதர் மாற்றாந்தந்தையின் கொடுமைக்கு ஆளானார். பலமுறை வீட்டிலிருந்து தப்ப முயன்று, தோற்றார். அவருக்குக் கல்வி பயில வேண்டுமென்ற ஆழமான எண்ணம் இருந்தது. மாற்றாந்தந்தை அவரை ஒரு பள்ளியில் சேர்த்தார். ஆனால் அங்கும் ஆசிரியரின் கொடுமைக்கு ஆளானார் ஹைதர்.

பள்ளியிலிருந்து வெளியேறியவரை ஒரு மசூதியில் சேர்த்துவிட்டு அங்கேயே கல்வி கற்றுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதிலிருந்து வெளியேறியவர் ஒவ்வொரு மசூதியாக ஓடினார். மசூதிகளில் தங்கியிருக்கும்போது ஊர் மக்களிடம் இருந்துதான் தினமும் உணவு பெற்று உண்ணமுடியும். படிக்க வேண்டுமென்ற ஆவல் இருந்ததால் அவர் தயங்கவில்லை.

ஒருமுறை தனது மூத்த சகோதரர் வசித்து வந்த பெஷாவர் ராணுவ மையத்துக்குத் தனியாக போய் சேர்ந்துவிட்டார். அங்கிருந்து அழைத்துவ வந்து வீட்டில் விட்டுவிட்டார்கள். ஹைதருக்கு பேவலில் இருந்த அரசாங்கப் பள்ளியில் படிக்க வேண்டுமென்று ஆசை. அங்குமிங்கும் ஓடி கடைசியில் அந்தப் பள்ளிக்கே வந்து சேர்ந்தார். அங்கிருந்த பிராமண ஆசிரியர் முன்ஷி அவர் மீது பரிவு கொண்டு பள்ளியில் சேர்த்துக்கொண்டார். ஹைதர் ஒரு பாழடைந்த மசூதியில் இரவு படுத்துத் தூங்கிவிட்டுக் காலையில் பள்ளிக்கு வருவார். முன்ஷி அவரைத் தனது வீட்டுத் தாழ்வாரத்தில் தங்க வைத்துப் பார்த்துக் கொண்டார்.

வீட்டு வேலையையும் பள்ளி சுத்தம் செய்யும் வேலையையும் சேர்த்துப் பார்த்தார் ஹைதர். முன்ஷியின் மனைவி அவர்மீது மிகுந்த அன்பு செலுத்தினார். ஹைதருக்கு எப்போதும் கல்வி மட்டுமே குறி என்று சிரிப்பார் முன்ஷி. வகுப்பிலேயே முதலாவதாக இருந்தார் ஹைதர். ஒருமுறை முன்ஷி உடல்நலமின்றி இருந்தபோது அவர் மனைவி ஊரில் இல்லை. தண்ணீர், தண்ணீர் என்று அரற்றிய முன்ஷிக்குத் தண்ணீர் கொடுக்க ஹைதர் வீட்டுக்குள் நுழைந்து விட, கொதித்துப் போனார் பிராமணியத்தில் மூழ்கியிருந்த முன்ஷி. கடுமையாக ஹைதரைத் திட்டி விட, புண்பட்டுப் போன ஹைதர் அங்கிருந்தும் வெளியேறிவிட்டார்.

அங்கிருந்து திருட்டு ரயில் ஏறிய ஹைதர் நான்கு நாள் பயணத்தில் டிக்கெட் பரிசோதகர்களை ஏமாற்றிவிட்டு யாரோ அளித்த உணவை உண்டு, ஒரு வழியாக கல்கத்தா சென்றடைந்தார். அந்தப் பெரும் நகரத்திலும் எப்படியோ தனது அண்ணன் ஷேர் அலி இருந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டார். அன்புடன் அணைத்துக் கொண்ட அண்ணனிடம் தாம் திரும்பக் கிராமத்துக்குப் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

ஷேர் அலியோ கஞ்சா, அபின், பெண்கள் என்று மோசமான வியாபாரத்தில் இருந்தார். ஹைதரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒருமுறை ஷேர் அலி மாட்டிக் கொண்டு மூன்று மாதம் சிறையில் கழிக்க வேண்டியிருந்தது. வெளியே வந்ததும் ஹைதரைக் கிராமத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார். கல்கத்தாவில் தனது அண்ணனைப் பார்த்து அவர் கற்றுக்கொண்ட பாடம் இதுதான். மோசமான வியாபாரங்களில் நாடு, இனம் என்ற பேதமெல்லாம் கிடையாது.

கிராமத்தில் ஹைதரால் நீண்டகாலம் இருக்க முடியவில்லை. அவரது அக்கா நூரிடம் நெகிழ்ச்சியுடன் விடைபெற்றுக் கிளம்பி விட்டார். ராணுவத்தில் சேர முயன்றார். சிறுவன் என்பதால் முடியவில்லை. எனினும் கையில் கிடைத்த பைசாவை வைத்துக்கொண்டு அப்போது ஷேர் அலி இருந்த பம்பாய்க்குச் சென்றார். ஒரு கப்பலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஷேர் அலியால் செலவைத் தாங்க முடியவில்லை. எனவே மீண்டும் சிறுவனை கிராமத்துக்கு அனுப்ப முயல, தப்பிய ஹைதர் ஒரு கப்பலில் வண்ணம் சுரண்டும் வேலையில் சேர்ந்து கடுமையான சூழலில் கஷ்டப்பட்டார். எனினும் உடனிருந்த சிறுவனின் உதவியால் சமாளித்துக் கொண்டு வேலை செய்து வந்தார். நூற்றுக் கணக்கான சிறுவர்கள் கடும் சிரமத்துக்கு இடையில் எந்தப் பாதுகாப்புமின்றி கப்பலில் வேலை செய்து வந்தனர்.

ஒரு சாரங்கியின் உதவியுடன் வேறொரு கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார் ஹைதர். அது போர் முனையில் வேலை செய்த கப்பல். அங்கு நேரடியாக சிப்பாய்களுடன் பழக முடிந்தது. பிரிட்டிஷ் கப்பலின் முதலாளிக்குப் போரில் வெல்லும் நம்பிக்கை இல்லை. எனவே அக்கப்பல் ஓராண்டுக்கு முதல் உலகப்போரின் போது பஸ்ராவிலேயே நங்கூரமிட்டிருந்தது. பிறகு பம்பாய் திரும்பியது. முதலில் வீடு செல்லலாம் என்று நினைத்தவர் பிறகு இன்னொரு கப்பல் பயணம் மேற்கொண்டார். பணம் சேர்ந்தது. கோட், சூட் அணிந்துகொண்டார்.

மீண்டும் கப்பல் பயணங்கள் தொடங்கின. சாரங்கி மிகவும் கொடுமைக்காரன். எனவே மாலுமிகள் அவனுக்குத் திட்டமிட்டு வேட்டு வைத்தனர். சரியாகக் கப்பல் கிளம்ப வேண்டிய நேரத்தில் அவனை வம்புக்கிழுத்து வேலைநிறுத்தம் செய்தனர். தலைமையேற்றவர் 15 வயது ஹைதர். கொடுமைக்கார சாரங்கியை வெற்றிகரமாக அகற்றிவிட்டு இன்னொருவரை நியமித்தனர். பயணம் தொடர்ந்தது.

இன்னொரு கப்பலில் நடுக்கடலில் மாலுமிகளுக்குக் குடிதண்ணீர் மறுக்கப்பட மீண்டும் வேலைநிறுத்தம். மீண்டும் வெற்றி. ஹைதரின் தலைமைப் பண்பு மற்றவர்களுக்கு இவ்வாறு வெளிப்பட்டது. ஒருமுறை நியூ யார்க்கில் இருந்தபோது, கூலி மிகவும் குறைவு என்று கப்பலிலிருந்து வெளியேறினார். பின்னர் முதன்முறையாக அங்கு ஒரு தொழிற்சங்க உறுப்பினரானார் ஹைதர். அது 1918ஆம் ஆண்டு.

நியூயார்க்கிலிருந்து சென்ற இன்னொரு கப்பலில் பயணிக்கையில் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அனைவரும் மகிழ்ந்தனர். அப்போது அங்கிருந்த ஐரிஷ் அதிகாரியான ஜோசப் மில்கின், ‘எங்கள் போர் முடிந்துவிட்டது. ஆனால் உங்கள் போர் தொடர்கிறது. நீங்கள் சுதந்திரம் பெறும்வரை உங்கள் அடிமைத்தனம் தொடரும். ஆங்கிலம் கற்றுக்கொள். மற்றவர்களுடன் பழகு’ என்று ஹைதருக்கு அறிவுரை கூறினார்.

ஜோசப் அயர்லாந்து விடுதலைப் போரில் பங்கேற்றவர். பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியே அவர்கள் நாடுகளை அடிமைப்படுத்துவதற்குக் காரணமென்று விளக்கினார். கூர்ந்துகேட்ட ஹைதர், தனது நாட்டின் சுதந்தரத்துக்குப் பாடுபடுவேன் என உறுதியேற்றார்.

நியூ யார்க்கில் ஜோசப் அவரை இந்தியர் உணவகத்துக்கு அழைத்துச் சென்று அனைவரிடமும் அறிமுகம் செய்தார். அங்கு சீக்கியர்களின் கதார் கட்சியினரைச் சந்தித்த ஹைதர் அவர்களுடன் நெருங்கிப் பழகி அக்கட்சியின் உறுப்பினரானார். இந்திய விடுதலையின் நண்பர்கள் என்ற பிரிட்டிஷ் எதிர்ப்பு தீவீரவாதக் குழுவைத் தொடங்கிய மேடம் ஸ்மெட்லியுடனும் தொடர்பு ஏற்பட்டது. பிறகு கதார் கட்சியில் பிரேம்சிங்கின் வழிகாட்டலின்படி சீனா சென்ற கப்பல்களில் பயணித்த ஹைதர் அங்கெல்லாம் இருந்த இந்தியர்களுடன், குறிப்பாகச் சீக்கியர்களுடன் பழகி, தீவீரவாதப் பிரசுரங்களை விநியோகித்தார்.

ஷாங்காயில் இருந்த ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட் தந்திரமாகப் பேசி அவரைப் பற்றித் தெரிந்து கொண்டு விட்டான். உடனே ஷாங்காய் பிரிட்டிஷ் போலீஸ் எச்சரிக்கையடைந்து கப்பலுக்கு வந்து ஹைதரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது. ஆனால் உடனிருந்த மாலுமி சாதுரியமாக அவரிடம் இருந்த கைத்துப்பாக்கியையும், பிரசுரங்களையும் ஹைதரின் கண் அசைப்பில் புரிந்து கொண்டு கடலில் தூக்கியெறிந்து விட்டதால் எதுவும் சிக்கவில்லை.

அமெரிக்கக் கப்பலில் இருக்கும் ஹைதரை பிரிட்டிஷ் எப்படிக் கைது செய்ய முடியுமென்று அமெரிக்க தூதர் பிரிட்டிஷ் அரசிடம் எகிற, வேறு வழியின்றி ஹைதரை விடுவித்தது பிரிட்டன். கப்பல் சுற்றிச் சுற்றி லண்டனுக்கும் சென்றது. அங்கு இறங்கி அனைவருடனும் லண்டனையும் சுற்றிப் பார்த்துவிட்டு நியூ யார்க் திரும்பினார் ஹைதர். அங்கு குடல்வால் அழற்சியேற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் கப்பல் வேலையிலிருந்து வெளியேறினார்.

அப்போது மூன்றரை ஆண்டுகள் அமெரிக்காவில் கழித்திருந்த ஹைதர் தொழிற்சங்கத்தின் உதவியுடன் அமெரிக்கக் குடியுரிமை பெற்றுவிட்டார். அமெரிக்கக் குடிமகனாக மாறிவிட்ட ஹைதர் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனார்?

(தொடரும்)

ஆதாரம்: அமீர் ஹைதர்கான், காவியம் படைத்த கம்யூனிஸ்ட், டாக்டர் அயூப் மிர்சா, தமிழில் கி. ரமேஷ், பாரதி புத்தகாலயம் வெளியீடு.

 

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *