Skip to content
Home » தோழர்கள் #6 – மகிழ்ச்சி என்பது போராட்டமே!

தோழர்கள் #6 – மகிழ்ச்சி என்பது போராட்டமே!

பம்பாய்க்கும் சோவியத்துக்கும் இடையே மேலும் இருமுறை பயணம் செய்து, பல கூட்டங்களில் கலந்துகொண்டு கோமிண்டர்னின் ஆதரவைப் பெற்றார் ஹைதர். எனினும் அவர் இரண்டாவது முறை பம்பாய்க்குத் திரும்பிய போது, மீரட் சதிவழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்ததால், அவரை உடனடியாக சென்னைக்குச் செல்லுமாறு கட்சி அறிவுறுத்தியது. அதற்கு முன் தோழர் சுஹாசினி சென்னைக்குச் சென்று ஒருவரிடம் பேசி ஏற்பாடுகள் செய்துவிட்டு வந்தார்.

ஆனால் ஹைதர் சென்னைக்கு வந்து சேர்ந்தபோது, சுஹாசினி ஏற்பாடு செய்திருந்தவர் ஹைதருக்கு உதவ மறுத்துவிட்டார். இங்கு சாதிப் பிரிவுகள் ஏராளமாக இருக்கிறது எனவும், ஹைதர் திரும்பிச் சென்று விடுவதே நல்லது என்றும் தப்பித்துக்கொண்டார். ஹைதருக்கோ வேறு வழியில்லை. ஒரு சுமாரான அறையை எடுத்துக் கொண்டு அங்கு தங்கினார். அங்கு தங்கியிருந்த மாத்யூ எனும் இளைஞர் பழக்கமானார். அவர் தனது நண்பர்களை ஹைதருக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு மார்க்சியம் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார் ஹைதர். தொடர்ச்சியாக, இளம் தொழிலாளர் சங்கம் என்னொன்றை ஹைதர் உருவாக்கினார்.

ஒருமுறை கடற்கரையில் தற்செயலாக மாணிக்கம் என்பவரைச் சந்தித்தார். அவர் கம்யூனிஸ்ட் பத்திரிகை நடத்தி வந்த தனது சகோதரர் வடிவேலுவிடம் ஹைதரை அழைத்துச் சென்றார். அவரது உதவியுடன் இளம் தொழிலாளர் சங்கத்தை விரிவாக்கினார் ஹைதர்.

மீரட் சதி வழக்கில் தேடப்பட்டவர் என்பதால், ஜெயராமன் உதவியுடன் மாம்பலத்தில் ஒரு வட இந்திய பிராமணராகத் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார் ஹைதர். ஜெயராமனைக் கீழைத்தொழிலாளர் சங்கத்துக்கு அனுப்பிய இடத்தில் அவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்து விட்டார். இதற்கிடையில் போலீஸ் நெருங்கி வருவதை உணர்ந்து அங்கிருந்து தப்பினார் ஹைதர்.

இடையில் ஜெயராமனின் ஆலோசனைப்படி பெங்களூரில் படித்துக் கொண்டிருந்த சுந்தரய்யாவைக் கட்சிக்குள் கொண்டுவர இருவரும் சென்றனர். ஆனால் சுந்தரய்யா பின்னர் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்.

ஹைதரால் பம்பாய்க்கு அனுப்பப்பட்ட மாத்யூ அங்கு கட்சிப்பணி செய்து வந்தார். அங்கு ஹைதர் அனுப்பிய கடிதம் போலீசிடம் சிக்க, சென்னையில் இருப்பது ஹைதர்தான் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.

சென்னையில் ஹைதரின் வீட்டைச் சோதனையிட்டு, அவரையும் மற்ற தோழர்களையும் கைது செய்தது போலீஸ். ஜெயராமனின் சகோதரி ஆவணங்களை எரித்துவிட்டதால் தப்பினார். ஆனால் புருஷோத்தமன் என்பவரது இளம் மனைவி பயந்துவிட்டதால் அவரிடமிருந்த ஆவணங்கள் ஹைதரைக் காட்டிக் கொடுத்துவிட்டன. அவர்மீது மீரட் சதி வழக்கும் இருந்தது.

இந்தத் தகவல் தெரிந்ததும், கட்சித் தலைவர்கள் பி.டி. ரணதிவே, சுஹாசினி ஆகியோர் சென்னை வந்து அவருக்காக வாதாட வக்கீலை ஏற்பாடு செய்தனர். ஹைதர், தன் சாட்சிகளில் ஒருவராக நேதாஜி சுபாஷ் சந்திர போசையும் சேர்த்தார். குழப்பம் விளைவிப்பதே அவரது நோக்கமாக இருந்தது.

இரவும் பகலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த ஹைதர், உண்ணாவிரதத்தில் இருந்தார். சிறைக்குள்ளேயே சுபாஷை விசாரிக்க ஏற்பாடு செய்த நீதிபதியைக் குறுக்குக்கேள்வி கேட்டுத் திணறடித்தார் ஹைதர். அங்கு விசாரணை நடத்தவே முடியாதென்றார். அவரது துணிவைக் கண்டு சுபாஷ் அவரைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார்.

வலுக்கட்டாயமாக ஹைதருக்கு உணவு கொடுக்க முயற்சிக்கப்பட்டது. கடும் சித்ரவதையை அனுபவித்தார் ஹைதர். அவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்த தோழர் பாஷ்யமும் உண்ணாவிரதத்தைத் தொடங்கிவிட்டார். சுபாஷிடம் சூப்பிரண்டண்ட் ஆலோசனை கேட்க, அவர்களுக்கு நல்ல உணவு கொடுக்குமாறும், அவர்களை அரசியல் கைதிகளாக நடத்துமாறும் சுபாஷ் கூறினார். பாஷ்யத்தையும் ஹைதரையும் சேர்த்து வைக்கவும், வாசிக்க பத்திரிகை அளிக்கவும் ஏற்பாடு செய்ய, இருவரும் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.

அதன்பின் ஹைதர் சுபாஷையும் முகுந்தலால் சர்க்காரையும் தினசரி பார்த்து விவாதிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். சோவியத் பற்றி நிறையக் கேள்விகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டார் சுபாஷ். அவர்கள் இருவரும் விவாதித்து எழுதி, முகுந்தலால் சர்க்கார் தட்டச்சு செய்து, கட்டுரைகளை வெளியே கடத்தி அச்சிடத் தொடங்கினர்.

1934இல் விடுதலை அடைந்த ஹைதரை அவருக்கு முன்பே விடுதலை பெற்றுவிட்ட பாஷ்யம் அழைத்துச் சென்று தங்க வைத்தார். ஹைதரையும் பாஷ்யத்தையும் தொடர்ந்து போலீஸ் துரத்த இருவரும் தப்பி ஓடினர். ஒரு கூட்டத்தில் சுந்தரய்யா உள்ளிட்ட பலரைச் சந்தித்தனர். அங்கு ஹைதர் தமது பணி முன்னேறியிருப்பதையும், பி.எஸ்.ஆர். உட்படப் பலரும் இணைந்திருப்பது கண்டும் மகிழ்ந்தார்.

பின்னர் பம்பாய் திரும்பியவரை மீண்டும் நிலைமை சரியில்லை என்று தோழர்கள் மெட்ராசுக்குத் திருப்பி அனுப்பிவிட்டனர். அங்கு கட்சி பலமடைந்து கொண்டிருந்தது. இவ்வாறாகத் தாம் அறியாத ஒரு நிலப்பரப்பில் தெரியாத மொழி பேசிய ஒரு பகுதியில், எந்த ஆதரவுமின்றி நுழைந்த ஹைதர், அங்கு ஒரு முறையான கட்சியை அமைப்பதில் வெற்றி பெற்று விட்டார். அவர் அமைத்ததுதான் இந்தியாவின் தென்பகுதியில் அமைந்த முதல் கிளை.

எனினும் அங்கு தங்குவதில் உடன்பாடு இல்லாத ஹைதர், சுந்தரய்யா உள்பட அனைவரையும் கூட்டினார். அங்கு அவரை பம்பாயில் நடக்கும் மாநாட்டுக்கு அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டது. எனினும், ஹைதர் தான் கைதானால் அந்தக் கூட்டத்துக்கு சுந்தரய்யா செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அவர் நினைத்தது போலவே அவர் கைதாகிவிட்டார்.

அவரைச் சித்ரவதை செய்யும் பொருட்டு தூக்கு மேடைக்குப் பக்கத்தில் கொட்டடியில் ஹைதரை அடைத்தது அரசு. மறுநாள் தூக்கில் தொங்க விடப்படும் கைதிகள்தான் அங்கே பொதுவாக அடைக்கப்படுவர். அவர்களோடு இருந்து, அவர்களது நிலையைக் கண்ட ஹைதர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். தீவிர மன அழுத்தத்துக்கு உள்ளானார். அதைத்தான் அரசும் விரும்பியது.

கட்சியின் முடிவுப்படி பாஷ்யம் அவரைச் சந்திக்க வந்தபோது தனது நிலையை வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார் ஹைதர். ஒரு கட்டத்தில் அவர் அதிகாரிகளைத் தாக்கவும் தொடங்கிவிட்டார். எனவே வேறு வழியின்றி அவரை ராஜமுந்திரி சிறைக்கு மாற்றினார்கள்.

ஹைதரின் நிலைமை மோசமடைந்த செய்தி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட ஹைதர், ஆறு ஆண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டார். அதுவரை விசாரணைக் கைதியாகவே இருந்தார்.

வெளியில் வந்த ஹைதர் முன்பிருந்த வாழ்நிலைக்குத் திரும்பினார். பம்பாயில் மீண்டும் கைது செய்யப்பட்டார். வெளியில் வந்ததும் மீண்டும் தொழிலாளர்களிடையே பணியாற்றத் தொடங்கினார். கட்சிப்பணி ஆற்றினார். 19 பிப்ரவரி 1946 அன்று புகழ்பெற்ற கப்பல்படைப் புரட்சி பம்பாயில் தொடங்கியது. இந்தியச் சுதந்தரப் போராட்டத்தில் அது ஒரு முக்கிய அத்தியாயமாக மாறியது. பிரிட்டிஷ் அரசுக்கோ அது மிகப் பெரிய நெருக்கடியாக வளர்ந்து நின்றது. இனியும் இந்தியாவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சாத்தியமில்லை என்னும் முடிவை நோக்கி பிரிட்டன் நகரத் தொடங்கியது.

தன் கிராமத்துக்குத் திரும்பிச் சென்ற ஹைதர் அங்கு நிலைமை அப்படியே நீடிப்பதைக் கண்டு மனம் வருந்தினார். வறுமையும் கல்லாமையும் மக்களைத் துன்புறுத்திக்கொண்டிருந்தது. அங்கு ஒரு பள்ளியைத் தொடங்க ஹைதர் முடிவெடுத்தார்.

ஹைதர் தொடங்கி பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சுதந்தரம் வந்தது. ஆனால் அதற்கு நாம் மிகப் பெரிய விலையைக் கொடுக்கவேண்டியிருந்தது. உலகை உலுக்கும் வகையில் தேசப் பிரிவினை நிகழ்ந்தது. வகுப்புவாதக் கலவரம் திக்கெங்கும் மூண்டது. பாகிஸ்தான் பகுதியில் இருந்த ஹைதர் தம்மால் முடிந்தவரை பலரைக் காப்பாற்றி இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.

பாகிஸ்தானில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்க முயன்ற ஹைதரை அந்நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. பிரிட்டிஷ் அரசால் பலமுறை கைது செய்யப்பட்ட ஹைதர் இப்போது பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டிருந்தார். 15 மாதங்கள் கழித்து விடுதலை கிடைத்தது. ஹைதருக்கு மட்டும் மீட்சி கிடைக்கவேயில்லை. மீண்டும், மீண்டும் அவர் கைதானார்.

இறுதியில் தனது ஆசைப்படி தனது நிலத்தில், தனது உழைப்பின்மூலம் கிராமத்தில் ஒரு பள்ளியை உருவாக்குவதில் வெற்றி பெற்றார் ஹைதர். அங்கேயே மக்களுக்குச் சேவை செய்து கொண்டு தங்கினார். முதலில் அவர் உருவாக்கியது ஆண்களுக்கான பள்ளியை. அதைத் தொடர்ந்து பெண்களுக்கான பள்ளியையும் அறிவியல் கூடத்தையும் உருவாக்கினார். இந்தப் பள்ளிகள் பின்னால் அரசு அங்கீகாரத்தைப் பெற்றதோடு அரசுப் பள்ளிகளாகவும் மாறின.

மக்களுக்குச் சேவை புரிந்துகொண்டிருந்தபோதே தனது மூச்சையும் அவர் 27 டிசம்பர் 1989 அன்று நிறுத்திக்கொண்டார். இறுதிவரை ஹைதர் திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது முழு வாழ்வையும் அவர் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்துவிட்டார்.

(தொடரும்)

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *