Skip to content
Home » தோழர்கள் #7 – கொடியேற்றிய கம்யூனிஸ்ட்

தோழர்கள் #7 – கொடியேற்றிய கம்யூனிஸ்ட்

ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்

மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட (23 மார்ச் 1931) அடுத்த ஆண்டு அதே நாளில் பஞ்சாபைச் சேர்ந்த ஹோஷியாபூருக்கு கவர்னர் வருவதாக இருந்தது. ஹோஷியாபூர் காங்கிரஸ் கமிட்டி அந்நாளில் அங்கிருந்த அனைத்து நீதிமன்றங்களிலும் யூனியன் ஜாக்கை இறக்கி மூவர்ணக் கொடியைப் பறக்க விடுவோம் என்று அறிவித்தது. அந்த அறிவிப்பே ஒரு போராட்டத்துக்கான அறைகூவல் போலத்தான் இருந்தது.

இதை பிரிட்டிஷ் அரசும் உணர்ந்திருந்ததால், மூவர்ணக் கொடியைப் பறக்கவிடும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் சுட்டுத் தள்ளுவாம் என்று அறிவித்திருந்தது. இந்த எச்சரிக்கையைக் கண்டதும் காங்கிரஸ் போராட்டத்திலிருந்து பின்வாங்கியது. இதை அறியாத ஒரு சிறுவன் விறுவிறுவென்று காங்கிரஸ் அலுவலகத்துக்குள் நுழைந்து, எப்போது போராட்டம், நானும் அதில் கலந்துகொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கிறான்.

போராட்டம் நடைபெறப்போவதில்லை என்பதை அறிந்ததும் மிகவும் அதிருப்தி அடைந்த சிறுவன் ஏன், எதற்கு என்று அங்கிருந்தவர்களைக் கேள்வி கேட்க, அங்கிருந்த ஒருவர் விளையாட்டாக, ‘ஏன் நீ போய் கொடி ஏற்றித்தான் பாரேன்’ என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். ஆனால் அந்தச் சிறுவன் இதை விளையாட்டாக நினைக்கவில்லை.

தனது பையில் மூவர்ணக் கொடியைச் சுருட்டி எடுத்துக் கொண்டான். நீதிமன்றத்தைச் சென்றடைந்தான். அங்கே சுற்றிக் கொண்டிருந்த துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்ணில் படாமல் மேலே ஏறினான். யூனியன் ஜாக்கை இறக்கி மூவர்ணக் கொடியை ஏற்றும் சமயத்தில் அதைக் கவனித்துவிட்ட காவலர்கள் சுடத் தொடங்கினார்கள்.

இப்போதும் சிறுவன் மிரளவில்லை. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் உள்ளேயிருந்து ஓடி வந்து பார்த்த ஆட்சியர், சிறுவனைப் பார்த்ததும் சுடுவதை நிறுத்தச் சொன்னார். பிரிட்டிஷ் எதிர்ப்பு முழக்கத்தை எழுப்பிய சிறுவன் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டு, அசுத்தமான சப் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.

தான் யாரென்று சொல்ல அவன் மறுத்து விட்டான். மறுநாள் விசாரணையில் அவன் பெயர் என்னவென்று நீதிபதி கேட்க, அந்த 16 வயது சிறுவன், ‘என் பெயர் லண்டன் தோட் சிங்‘ (லண்டனை உடைக்க வந்த சிங்) என்றான். அவனை மன்னிப்புக் கேட்குமாறு நீதிபதி வற்புறுத்த அவன் மறுத்துவிட்டான். தான் மூவர்ணத்தை ஏற்றியது சரியே என்று வாதிட்டதோடு பகத்சிங்கைப் புகழ்ந்தும் பேசினான்.

ஆத்திரமடைந்த நீதிபதி அவனுக்கு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை விதித்தார். ஏளனமாகச் சிரித்த அவன், ‘ஒரு வருடம்தானா?’ என்றான். மேலும் ஆத்திரமடைந்த நீதிபதி நான்காண்டுகள் தண்டனை விதித்தார். ‘நான்காண்டுகள்தானா?’ என்றான் மீண்டும். அந்தக் குற்றத்துக்கு நான்காண்டுகளுக்கு மேல் தண்டனை கொடுக்கச் சட்டத்தில் இடமில்லை என்பது தெரிந்ததும் மகிழ்வுடன் சிறை சென்றான். அந்தச் சிறுவன், ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்.

1916ஆம் ஆண்டு சுர்ஜீத் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவரது பிறந்த தேதி தெரியாததால், பகத் சிங் உயிர்த்தியாகம் செய்த மார்ச் 23ஆம் தேதியைத் தனது பிறந்த தேதியாக எடுத்துக் கொண்டார். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக பஞ்சாப் கொதித்துக் கொண்டிருந்த காலம் அது. சுர்ஜீத் பிறப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு, 1913இல் இந்திய விடுதலைக்காக கனடாவாழ் சீக்கியப் பெருமக்கள் கதார் இயக்கத்தைத் தொடங்கியிருந்தனர்.

கனடாவிலிருந்து இந்தியா வந்திருந்த கதார் இயக்கத்தினர் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் ஊடுருவினர். அவர்கள் புரட்சி செய்யத் திட்டமிருந்ததற்கு முந்தைய நாள் ஒரு துரோகி காட்டிக் கொடுத்துவிட்டான். கைது செய்யப்பட்டவர்களில் 19 வயது கர்தார்சிங் சராபா உள்பட 45 பேர் தூக்கிலிடப்பட்டனர். 306 பேர் நாடு கடத்தப்பட்டனர்.

சுர்ஜீத் பண்டாலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை சுதந்தரப் போராட்டத்தில் இணைந்தவர். அகாலிகளுடனும், கதாரி பாபாக்களுடனும் தொடர்புடையவர். தாயாரும் ஒரு கட்டத்தில் அதில் இணைந்துவிட்டார். சுர்ஜீத்துக்கு 7 வயதானபோது அவரது தந்தை கைது செய்யப்பட்டார். இதை ஏற்காத தாத்தா அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்.

மிக மோசமானது இளமையில் வறுமை. அதை அனுபவித்தவர் சுர்ஜீத். அவர் தாய் தான் செல்லும் கூட்டங்களுக்கெல்லாம் மகனையும் கூட்டிச் சென்றதால் சுர்ஜீத்துக்கு சுதந்திர தாகமும் இளமையிலேயே ஊட்டப்பட்டது. சோவியத்திலிருந்து திரும்பிய சந்தோக் சிங் என்பவர் கீர்த்தி என்ற பத்திரிகையை வெளியிட்டார். அதனுடன் சுர்ஜீத்தின் தந்தை தொடர்பில் இருந்தார். சுர்ஜீத் அந்தப் பத்திரிகையால் கவரப்பட்டார். 15 வயதில் பகத்சிங்கின் நவ்ஜவான் பாரத் சபாவில் இணைந்தார் சுர்ஜீத்.

சுர்ஜீத்தின் முதல் அரசியல் செயல்பாடு 1931இல் தடை செய்யப்பட்ட கர்தாரி தலைவர் கரம் சிங் சீமாவும் பாக் சிங் கனடியனும் பேசிய ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ததாகும். அக்கூட்டம் பெரும் வெற்றி பெற்றது.

மறுநாள் அவரைத் தேடிப் பள்ளிக்கூடத்துக்கே போலீஸ் வந்துவிட்டது. சுர்ஜீத் மன்னிப்புக் கேட்க மறுக்க, அவர் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தாய் அவரை வேறொரு தங்கிப் படிக்கும் பள்ளியில் சேர்த்தார். காசே இல்லாத சூழலில் அவரைப் படிக்க வைப்பது மிகவும் சவாலானதாக இருந்தது.

இச்சூழலில் கொடியேற்றிய ‘குற்றத்துக்காகக்’ கைது செய்யப்பட்ட சுர்ஜீத் தில்லியில் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். அவர் சீர்திருந்துவதாக இல்லை என்பதோடு, அவரது கதையைக் கேட்டு மற்றவர்களும் ஊக்கம் பெற்றனர். மிரண்டு போன அரசு அவரை லாகூரிலுள்ள போர்ஸ்டல் சிறைக்கு மாற்றியது. அங்கு புரட்சியாளர்களைச் சந்தித்து மேலும் ஊக்கம் பெற்றார். 1934இல் இரண்டாண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.

ஜலந்தரில் காங்கிரஸ் கட்சிச் செயலாளராக ஆன சுர்ஜீத் சோவியத்திலிருந்து திரும்பிய சில கம்யூனிஸ்டுகளால் சோஷலிசம் நோக்கி ஈர்க்கப்பட்டார். அவர்களது ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சுர்ஜீத் ஜலந்தரில் ஒரு புத்தகக்கடை திறந்தார். அது புரட்சியாளர்களின் தளமாக மாறியது. ஜலந்தர், ஹோஷியாபூரின் கம்யூனிஸ்டுகளின் மையமாகவும் இருந்தது. அங்கு விடுதலைக்குப் போராட ரத்தத்தால் கையெழுத்திட்டு உறுதியேற்றனர் வீரர்கள். 1938இல் சுர்ஜீத் பஞ்சாபிலிருந்து வெளியேற்றப்பட்டு சஹரன்பூர் சென்றார். அங்கு சிங்காரி என்ற பெயரில் ஒரு மாதப்பத்திரிகை தொடங்கினார்.

நேருவைச் சந்தித்தார். நேரு சுர்ஜீத்திடம் இந்திய மக்கள் செங்கொடிக்குத் தயாராகாததால் கூட்டங்கள் ஏற்பாடு செய்யுமாறும், அதில் தான் பேசுவதாகவும் கூறினார். அப்படியே செய்தார் சுர்ஜீத். ஒருமுறை கூட்டம் நடத்தும் இடங்களை போலீஸ் ஆக்கிரமித்துவிட, சற்றும் அசராத சுர்ஜீத் இரவோடு இரவாகத் தன் வயலில் விதைத்திருந்த சோளக்கதிர்களை அறுத்துவிட்டு அங்கு கூட்டத்தை நடத்தினார்.

1936இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தொடங்கப்பட்டது. கடைசி வரை அதில் பங்கேற்று வழிநடத்தியவர் சுர்ஜீத். விவசாயிகளுக்கு காங்கிரஸ் உதவும் என்ற கனவு பொய்த்ததால் அதிருப்தியடைந்தார் சுர்ஜீத்.

அவரது சிறை வாழ்வு விடுதலைக்கு முன்னும் பின்னும் நீண்ட காலம் இருந்தது. 1935இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தலைமறைவு காலத்தில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் அவர் சேர்ந்தபோது இ.எம்.எஸ். நம்பூதரிபாடும் தின்கர் மேத்தாவும் அதன் செயலாளர்களாக இருந்தனர்.

சுர்ஜீத் மீது வாரண்ட் இருந்தது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் சென்று கூட்டங்களை ஏற்பாடு செய்து கொண்டே இருந்தார். ஒருமுறை அவர் கிராமத்தை போலீஸ் சுற்றி வளைத்துவிட, ஓர் இசைக்கலைஞனைப் போல் வேடமிட்டு தப்பி விட்டார். இன்னொருமுறை மாட்டிக் கொண்டபோது, போலீசால் அவரைச் சரியாக அடையாளம் காண முடியாததால் தப்பிவிட்டார்.

முக்கியமான சாலைகளை போலீஸ் அடைத்துவிடுவதாலும், ரயிலையும் சோதனையிடுவதாலும் சுர்ஜீத் தனது பயணங்களுக்கு வேறொரு உபாயத்தைக் கையாளவேண்டியிருந்தது. லாரி ஓட்டுநர்கள் பலர் அவருக்குப் பழக்கப்பட்டவர்களாக இருந்தனர். ஓட்டுநரின் தலைக்கு மேல் இருக்கும் சிறு அறையில் சுர்ஜீத் நுழைந்து ஒளிந்துகொள்வார். இறுதிவரை யாராலும் அவரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. நெருக்கடி காலத்திலும் இந்த ரகசியப் பயணம் அவருக்குக் கைகொடுத்தது.

இறுதியில் 1939இல் கைதானார். தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார். மலம் கழிக்கக்கூட வெளியே செல்ல அனுமதி இல்லை. ஒரு வாரத்துக்கு ஒரு சட்டித் தண்ணீர் மட்டுமே கொடுக்கப்பட்டது. இருளிலேயே இருந்ததால் அவரது கண்கள் பாதிக்கப்பட்டன.

பிரிட்டிஷ் அரசு கடுமையாக நடந்து கொண்டது. அங்கு ஒருமுறை வந்த ஒரு ஐரிஷ் மருத்துவர் சுர்ஜீத்தைப் பார்த்தே ஆக வேண்டுமென்று அடம் பிடித்துப் பார்த்தவர் அவர் நிலை கண்டு கதிகலங்கிப் போனார். உடனடியாக அவரை வெளியே எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பினார். அப்போது பாதித்த அவர் கண்கள் இறுதிவரை குணமடையவில்லை. அளவில் பெரிய கண்ணாடியை அவர் அணிய வேண்டிய நிலை வந்தது.

மனைவி ப்ரீதம் கவுர் இல்லாமல் சுர்ஜீத்தின் வாழ்க்கை முழுமையடையாது. விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக சிறுவன் சுர்ஜீத் காட்ட, அங்கேயே திருமணம் முடிவாகிவிட்டது. ப்ரீதம் கவுர் வளர்ந்ததும் இருவருக்கும் திருமணம் நடைபெறற்து. எந்த வரதட்சணையும் வாங்க மாட்டேன் என்று சுர்ஜீத் கூறியிருந்தார். ஆனால் அது தெரியாத பெண் வீட்டார் நிறையக் கொடுத்துவிட்டனர். இதை அறிந்த சுர்ஜீத் கடும் ஆத்திரம் கொண்டார். பெற்றதை எல்லாம் திருப்பிக் கொடுத்த பிறகே மணம் செய்தார்.

ஒரு வழியாக மணமுடித்துப் பெண்ணைத் தன் வீட்டுக்குக் கூட்டிச் செல்லக் கிளம்பிய மணமகனை போலீஸ் சுற்றி வளைத்துக் கைது செய்து விட்டது. ஒருவராலும் அவரை மீட்கமுடியவில்லை. இறுதியில் வீட்டுக்குச் செல்ல மட்டும் ஒருமுறை போலீஸ் அனுமதித்தது. மணப்பெண்ணை வீட்டில் விட்டுவிட்டுக் கைதானார் சுர்ஜீத். சிறைக்கு அவரது மனைவியை சகோதரி கூட்டிக் கொண்டு வந்தபோது அவரால் அடையாளம் காணமுடியவில்லை. இவர்தான் உங்கள் மனைவி என்று அவருக்கே சகோதரி அறிமுகம் செய்ய வேண்டியிருந்தது!

(தொடரும்)

பகிர:
nv-author-image

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *