Skip to content
Home » தோழர்கள் #13 – ‘கட்சிதான் என் வாரிசு’

தோழர்கள் #13 – ‘கட்சிதான் என் வாரிசு’

கட்சிதான் என் வாரிசு

ஷாம்ராவும் கோதாவரியும் மகாராஷ்டிர மாநில கிசான் சபாவை அமைப்பதென்று முடிவெடுத்தனர். விவசாயிகளைத் திரட்டுவதற்காக கோதாவரி மற்ற தொண்டர்களுடன் சேர்ந்து 700 கிராமங்களுக்கு நடந்தே சென்று சுமார் 160 கூட்டங்களில் உரையாற்றினார். 1945 ஜனவரி 7 அன்று டிட்டிவாலாவில் நடந்த மாநாட்டில் 7000 பேர் கூடினர்.

அங்குதான் முதன்முதலாக ஒர்லி பழங்குடியினர் செங்கொடியுடன் இணைந்தனர். விவசாயச் சங்கத் தொண்டர்கள் அவர்களது கிராமத்துக்குச் சென்றிருந்த போது சந்தித்த பிரச்சனைகளை அவர்கள் எடுத்துரைத்தனர். நிலப்பிரபுக்களுக்கு இலவசமாக உழைக்க வேண்டும். சாட்டையடி போன்ற கடும் தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டும். திருமணம் செய்த பெண்ணை முதலில் நிலப்பிரபுவிடம் சில நாள்கள் அனுப்ப வேண்டும், அதன்பிறகுதான் அவள் கணவனிடம் அனுப்பப்படுவாள். அது மட்டுமல்ல, அவன் பெற்ற கடனுக்குப் பெண்ணையும் குடும்பத்தையும் அடிமையாக்கவேண்டும்.

ஒருமுறை தண்டனையாக ஒரு ஓர்லி மனிதரை மாட்டுக்குப் பதில் ஏரில் கட்டி இழுக்க, அவர் அங்கேயே மரணமடைந்தார். இன்னொரு முறை ஓர் ஓர்லியை எரியும் நெருப்பில் தூக்கிப் போட்டுக் கொன்றனர். கேட்க நாதியில்லை. இப்படி எண்ணற்றவர்கள் மனிதாபிமானமற்ற நிலையில் நடத்தப்பட்டனர். அவர்களைச் செங்கொடித் தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைத்தனர்.

மாநாட்டில் பேசிய ஓர் ஒர்லி, தமது நிலையை உடைந்த குரலில் எடுத்துரைக்க, மாநாடே அதிர்ந்துபோனது. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், எதிர்த்துப் போராடுங்கள் என்று மாநாடு உரத்துக் குரல் கொடுத்தது. ஓர்லிக்கள் அங்கிருந்த சில செங்கொடிகளை எடுத்துக் கொண்டு கம்பீரமாக, உறுதியுடன், துணிவுடன் திரும்பினர். மாநாடு கொடுத்த துணிவில் அனைவரும் ஒன்றிணைய நிலப்பிரபுக்கள் நடுநடுங்கினர்.

இந்தப் போராட்டத்தை வழிநடத்தவும், புதிய பழங்குடித் தலைவர்களை உருவாக்கவும், கோதாவரியும், ஷாம்ராவும் களத்தில் இறங்கி வேலை செய்தனர். அது மேலும் மேலும் உத்வேகமூட்டியது. அதிர்ந்த அரசு அவர்களை அந்த மாவட்டத்துக்குள்ளேயே நுழையத் தடை விதித்தது.

எனினும், அதற்குள் பழங்குடித் தலைவர்கள் தமது தலைவியின் வழிகாட்டுதலில் தாமே தலைவர்களாக உருவெடுத்து விட்டனர். அதுதான் தலைமையின் பண்பு. அரசு ராணுவத்தையும் போலீசையும் அனுப்பி ஒடுக்க முயன்றது. அப்போதும் மக்கள் தயங்கவில்லை. அரசும் நிலப்பிரபுக்களும் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையில் இதுவரை 60 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். எனினும் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் அவர்களது உறுதி தொடர்கிறது.

1953இல் ஷாம்ராவும் கோதாவரியும் மீண்டும் அங்கு சென்றனர். ஆயிரக்கணக்கான ஓர்லிக்கள் அவர்களை வரவேற்க மும்பை மகாலக்ஷ்மியில் கூடினர். ஷாம்ராவ் நெகிழ்ந்து போய் அமைதியாய் உட்கார்ந்துவிட்டார். ‘எழுச்சியுடன் கூடியிருக்கும் இந்த மக்கள் முன்னால் நீயும் நானும் எவ்வளவு சிறியவர்கள்!’ இதுதான் அவர்களது எளிமை. எல்லாவற்றுக்கும் நாங்கள்தான் காரணம் என்று மார்தட்டிக்கொள்ளவில்லை.

கோதாவரியும் ஷாம்ராவும் பழங்குடியினருக்குக் கல்வியும், அரசியல் கல்வியும் ஊட்ட கவனம் செலுத்தினர். மார்க்சியத்தைக் கற்றுக் கொடுத்தனர்.

1954 ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 3 வரை தாத்ரா, நாகர்ஹவேலியை போர்ச்சுகீசியர்களிடமிருந்து விடுவிக்க கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை களத்தில் இறங்கியது. இந்தப் போராட்டத்துக்கு கோதாவரியும் ஷாம்ராவும் நேரடியாகத் தலைமை தாங்கினர். அவர்களது அழைப்பில் ஏராளமான ஒர்லிக்களும் விடுதலைப் போரில் பங்கேற்றனர்.

தஹானு மாவட்டத்தில் கிசான் சபாவின் 13வது மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டினர் பருலேகர்கள். அதில் மாபெரும் தலைவர்கள் பங்கேற்றனர். பெரும் பேரணியைக் கண்டு அனைவரும் உற்சாகமடைந்தனர்.

அதன்பிறகு சம்யுக்த மகாராஷ்டிரம் உருவாவதற்காக 1956இலிருந்து 1960 வரை ஒரு பெரும் எழுச்சி நடந்தது. இந்தப் போராட்டத்தில் 1200 பழங்குடி மக்கள் கொடும் சித்ரவதையை அனுபவித்தனர்.

1957இல் ஷாம்ராவ் தாணா மாவட்டத்திலிருந்து லோக்சபாவுக்குத் தேர்வானார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவரது துணிவுமிக்க குரல் அங்கு ஒலித்தது.

1958இல் நிலத்துக்கான போராட்டம் மிகப்பெரிய அளவில் மகாராஷ்டிராவில் நடந்தது. அதில் அண்ணல் அம்பேத்கரின் உண்மையான தொண்டர்கள் நீல வண்ணக் கொடியுடன் ஷாம்ராவ், கோதாவரி, நானா பாடில், ஆர்.பி.மோரே போன்ற செங்கொடித் தலைவர்களின் தலைமையில் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் பலத்தைக் கண்டு அரசு பணிந்துபோனது.

1960இல் பருலேகர்கள் வன நிலங்களை பழங்குடியினருக்கு பட்டா போட்டுத் தர வேண்டுமென்ற கோரிக்கையுடன் களம் கண்டனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயம் செய்யும் பழங்குடியினருக்கு நிலம் சொந்தமில்லை. இன்றுவரை இந்தப் போராட்டம் தொடர்கிறது.

பிறகு நடந்த உட்கட்சிப் பிரச்சனையில் கட்சி இரண்டாகப் பிரிந்தது. பருலேகர்களின் தலைமையில் தாணா மாவட்டக் கட்சி முழுவதும் சிபிஎம் கட்சியைத் தழுவியது.

கட்சி பிரிந்த நிலையில் ஏராளமான தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஷாம்ராவ் மும்பை ஆர்தர் ரோட் சிறையில் 1964 ஆகஸ்ட் 3 அன்று பெரும் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இரட்டைக் குழல் துப்பாக்கியில் ஒரு குழல் நிரந்தரமாக ஓய்வுக்குச் சென்றுவிட்டது. உடைந்து போனார் கோதாவரி.

சிபிஐஎம் பொதுச்செயலாளர் பி.சுந்தரய்யாவும், அவரது மனைவி லீலாவதியும் நேரடியாக மும்பை சென்று கோதாவரியுடன் ஒருவாரம் தங்கியிருந்து, ஆறுதல் கூறினர். மகாராஷ்டிரா கட்சிக்கு அவரது மறைவு ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது.

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், தமது வாழ்க்கையை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பழங்குடியினரின் விடுதலைக்கும் அர்ப்பணித்த ஷாம்ராவும், கோதாவரியும், தமக்குக் குழந்தை தேவையில்லை என்று முடிவெடுத்திருந்தனர்.

அதன் பிறகு ஷாம்ராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோதாவரி சிறையிலிருந்தே ஒர்லி பழங்குடி இனத்தவரின் போராட்டத்தை விளக்கி ‘மனிதர்கள் விழிப்படையும் போது’ என்ற பெரும் காவியத்தை இயற்றினார். அந்தப் புத்தகத்துக்குப் பின்னர் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இன்று படித்தாலும் நெகிழ்ச்சியும் கோபமும் கண்ணீரும் பொங்கும் உன்னதமான படைப்பு அது.

1966 ஏப்ரல் 30 அன்று விடுதலையான கோதாவரி கட்சிப் பணியிலும் கிசான் சபா பணியிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். 25 ஆண்டுகளுக்குச் சோர்வின்றிப் பணியாற்றியவர், வயது மூப்பு காரணமாக 1992இல் சென்னையில் நடந்த 14வது கட்சி மாநாட்டில் பொறுப்புக்களைத் துறந்தார்.

1995இல் தாணா மாவட்டத்தில் சிபிஐஎம்-ன் 15 வது மாநாட்டை ஒட்டி மாபெரும் பேரணி நடைபெற்றது. இது ஒர்லி பழங்குடி மக்கள் போராட்டத்தின் 50வது ஆண்டு நிறைவாகவும் அமைந்தது. 88 வயதான கோதாவரி அதில் தமது பழங்குடி மக்களுடன் பங்கேற்றார். அவருக்கு சிபிஐஎம்மின் பொதுச்செயலாளர் சுர்ஜீத் புகழ்மாலை சூட்டினார்.

பதினைந்தாவது மாநாட்டில் கோதாவரி கலந்து கொள்ளவில்லை. தமது உயிலைத் தயாரித்த கோதாவரி தமக்கும் ஷாம்ராவுக்கும் கட்சிதான் உயிர் என்றும் அதுதான் தமது வாரிசு என்றும் கூறித் தமது சொத்துக்கள் அனைத்தையும் கட்சிக்கு எழுதி வைத்தார். சிபிஐஎம் மட்டுமே உழைக்கும் மக்களை விடுவிக்கும் என்று உறுதியாக எழுதினார்.

1996 அக்டோபர் 8 அன்று அந்த மாபெரும் போராளி மரணத்தைத் தழுவினார். ஐம்பத்தொரு ஆண்டுகளுக்கு முன் எந்த இடத்தில் பழங்குடிப் போராட்டத்தில் ஐந்து பழங்குடியினர் தமது உயிரை ஈந்தனரோ அதே அக்டோபர் 10 அன்று அதே இடத்தில் கோதவரியின் புகழுடல் எரியூட்டப்பட்டது.

அசோக் தாவ்லே உரையாற்றுகிறார்
அசோக் தாவ்லே உரையாற்றுகிறார்

கடந்த வாரம் தாணா மாவட்டம் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் பொருட்டு நடத்திய ஒரு எழுச்சிக் கூட்டத்தின் செய்தியைப் பார்க்க நேர்ந்தது. அதில் தில்லியில் விவசாயிகளின் போராட்டத்தை முன்னின்று ஓராண்டாக நடத்திய தலைவர்களில் ஒருவரான டாக்டர் அசோக் தாவ்லே உரையாற்ற, ஆயிரக்கணக்கான ஒர்லிக்கள் கூடியிருந்தனர். கோதாவரியும் ஷாம்ராவும் போட்ட விதை இன்று விருட்சமாக மாறியிருக்கிறது.

(தொடரும்)

_______
ஆதாரம்:
* மனிதர்கள் விழிப்படையும்போது, கோதாவரி பருலேகர்
* கோதவரி நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை, டாக்டர் அசோக் தாவ்லே
* Red Flag of the Warlis : History of an Ongoing Struggle, Archana Prasad

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *