இரண்டாவது சட்டமறுப்பு இயக்கத்தையொட்டி காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். அரசு எந்த உடன்பாட்டுக்கும் வரத்தயாராக இல்லை. கல்கத்தாவில் அடுத்த மாநாட்டை நடத்த காங்கிரஸ் முடிவெடுத்தது. ஆனால் அதைத் தடுத்து நிறுத்த அரசு கடும் ஒடுக்குமுறையை ஏவியது.
எனினும் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு பிரபல காங்கிரஸ் தலைவர் சென்குப்தாவின் மனைவி நெல்லி சென்குப்தாவின் தலைமையில் திடீரென எஸ்பிளனேடில் மாநாடு கூடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் பி.ஆர். உட்பட தமிழ்நாட்டிலிருந்து வந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கூடிவிட்டனர்.
அதிர்ந்து போன போலீஸ் சவுக்கால் அடிக்கத் தொடங்கியது. அனைவரும் ஓடித் தப்பிக்க, பி.ஆரால் ஓட முடியவில்லை. அவர் தப்பி ஓடி ஒரு செருப்புக் கடையில் தஞ்சமடையும் வரை கடுமையாக அடிக்கப்பட்டார்.
ஒரு வருடம் தீவீரமாக அரிஜன சேவை சங்கத்தில் செயல்பட்டபின் அதில் அவருக்கு சோர்வேற்பட்டது. பொருளாதார அளவில் அவர்கள் நிலை உயர்ந்தால்தான் அவர்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
இச்சமயத்தில் தீவீரவாத மனோபாவம் கொண்ட சில காங்கிரஸ்காரர்கள் மீது முதல் மெட்ராஸ் சதி வழக்குத் தொடுக்கப்பட்டது. அவர்களைப் பாதுகாக்கும் பணியில் பி.ஆர். இறங்கினார். ஒரு பாதுகாப்புப் குழுவை உருவாக்கினார். அதற்காக வழக்கறிஞர்கள் ஏற்பாடு, நிதி, ஆவணங்களைப் படிப்பது உள்ளிட்ட வேலைகளை அவர் செய்தார். காந்திஜியின் இயக்கம் மூலம் சுதந்திரம் வராது என்ற எண்ணம் அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.
அந்த வழக்கில் ஈடுபட்ட ஒரு சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் டி.எஸ்.வெங்கட்ரமணியுடன் அவருக்குத் தொடர்பேற்பட்டது. அவர் போலீசால் கைப்பற்றப்பட்ட மார்க்சிய நூல்களைப் படித்தவர். அவர் பி.ஆரைப் பார்த்து அவரிடம் சில மார்க்சிய புத்தகங்களைக் கொடுத்து அவற்றைப் படித்துச் சிந்திக்குமாறு கூறினார். அவற்றில் ஈடுபாடு கொண்ட பி.ஆர். மேலும் புத்தகங்களைக் கோரினார். அவர் பி.ஆரை ஒரு நூலகத்துக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார். அங்கிருந்த மார்க்சிய நூல்களைக் கற்கத் தொடங்கினார் பி.ஆர்.
இந்நிலையில் கடும் உழைப்பையும் மீறி வழக்குத் தோற்றதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர். வேறு வேலையில்லாத பி.ஆர். எதாவது வியாபாரத்தில் ஈடுபடலாம் என்று நினைத்தார். திருவல்லிக்கேணியில் ஒரு நெய்க்கடை தொடங்கினார். கடன் கொடுத்தே வியாபாரம் படுத்தது.
அப்போது பி.ஸ்ரீநிவாசராவ் அவரைச் சந்திக்க வருவதுண்டு. அவரும் தன் பங்குக்கு காங்கிரஸ் வேலைகளுக்குக் கல்லாவிலிருந்து காசைத் தூக்கிக் கொண்டு போய் விடுவார். கடை மூடப்பட்டது.
1934இல் ஆந்திர விடுதலைப் போராட்ட வீரர் பி.சுந்தரய்யா மக்களைப் பார்த்து விடுதலைப் போராட்டத்துக்கு வருமாறு உரையாற்றினார் என்று அவர்மீது தேசத்துரோக வழக்குப் போடப்பட்டது. அவருக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கெதிரான அப்பீல் செய்ய பி.ஆருக்குப் பொறுப்புக் கொடுக்கப்பட்டது.
பி.ஆரின் முயற்சியால் ஆறு மாதம் தண்டனையுடன் தப்பினார் சுந்தரய்யா. விடுதலையும் செய்யப்பட்டார். அப்போது ராமமூர்த்தியுடன் அறிமுகமாகி நெருங்கிய நண்பரானார். சுந்தரய்யா ஏற்கெனவே அமீர் ஹைதர்கான் மூலம் கம்யூனிஸ்டாக மாறியவர்.
மே மாதம் பாட்னாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் போது அருகிலேயே நடந்த இன்னொரு மாநாட்டில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி உருவானது. அதில் பி.ஆர்., ஸ்ரீநிவாசராவ், இ.எம்.எஸ். உட்படப் பலரும் இணைந்தனர். அவர்களது திட்டத்துடன் காந்தி கருத்து மாறுபாடு கொண்டிருந்தார். உடனடியாகத் தமிழகத்தில் கிளை உருவாக்க முடியாவிட்டாலும், பி.ஆர்.,ஏ.எஸ்.கே அய்யங்கார் முயற்சியில் சென்னை ராஜதானி தீவீர இளைஞர் கழகம் உருவாக்கப்பட்டது.
1936இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாட்டில் அஜய் கோஷ், இ.எம்.எஸ். போன்றோருடன் அவருக்கு அறிமுகமானது. அஜய் கோஷ் அவருக்கு மார்க்சிய நூல்களைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அங்கு அனைத்து கம்யூனிஸ்ட், சோஷலிஸ்டுகள் இணைய வேண்டுமென்ற மீரட் கோட்பாடு உருவானது. அதன்படி கம்யூனிஸ்டுகள் ஏராளமானோர் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தனர். சென்னையில் அவரும், பி.எஸ்.ஆரும் சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கத் தொடங்கினர்.
சென்னை தொழிலாளர் பாதுகாப்புச் சங்கத்திலும், அச்சுத் தொழிலாளர் சங்கத்திலும் பி.ஆர். வேலை செய்யத் தொடங்கினார். எஸ்.வி.காட்டேவின் வழிகாட்டலில் பி.ஆர். உள்ளிட்ட பலரும் துடிப்புமிக்க தொழிற்சங்கங்களை உருவாக்கத் தொடங்கினர். பிராட்வேயிலிருந்த அவர்களது அலுவலகம் ஸ்ட்ரைக் ஆபீஸ் என்று தொழிலாளர்களால் அன்புடன் அழைக்கப்பட்டது.
அங்கு அப்போது மூவர் இருந்தனர். பி.ஆர்., கே.முருகேசன் போன்றோர் அவ்வப்போது வந்து செல்வர். ஒரு சாப்பாடு நான்கு அணா. அதை வாங்கி மூவர் பகிர்ந்து கொள்வர். நான்காவதாக ஒருவர் வந்து விட்டால் அன்று கஷ்டம்தான். அவ்வளவு கஷ்டப்பட்டுதான் ஸ்ட்ரைக் ஆபீஸ் செயல்பட்டது. அங்கு அடிக்கடி பி.ஆர் அரசியல் வகுப்பெடுத்து வந்தார்.
கோவையில் மில் தொழிலாளர்கள் அதிகக் கூலி கேட்டபோது ஒரு பைசா உயர்த்தினாலும் மில்லை மூட வேண்டியிருக்கும் என்று மிரட்டினார்கள். ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமையாவின் விசாரணைக் குழுவில் வாதாடிய பி.ஆர். அவர்கள் வாதத்தை உடைத்தெறிந்து அதிக சம்பளத்துக்கான பரிந்துரையைப் பெற்றுத் தந்தார். தொழிலாளர்கள் உற்சாகமடைந்தனர்.
ஆனால் மில் முதலாளிகள் ஒப்புக்கொள்ளாததால் ஐ.சி.எஸ் அதிகாரி ஸ்ட்ராட்டி தலைமையில் இன்னொரு விசாரணைக்குழு வந்தது. அதிலும் பி.ஆர். ஆணித்தரமாக வாதிட்டு குறைந்த கூலியை ஏற்க முடியாதென்றார். இதற்குப் பதிலளித்த ஸ்ட்ராட்டி அவரைத் தொழிற்சங்கத்திலிருந்து விலகுமாறு புத்திமதி கூற, வெகுண்டெழுந்து பதிலடி கொடுக்க, ஆடிப்போனார் ஸ்ட்ராட்டி. பிறகு பி.ஆரைச் சமாதானப்படுத்தி, தொழிலாளர்களிடம் பேசிவிட்டே சொல்லுமாறு கூறினார். தனது இறுதித் தீர்ப்பிலும் அதிகக் கூலியைப் பரிந்துரைத்தார். பிற்காலத்தில் அவர் பி.ஆருக்கு நெருங்கிய நண்பராகி விட்டார்.
மதுரை ஹார்வி மில் போராட்டத்திலும் பி.ஆர். திறம்படச் செயல்பட்டார். வேலைநிறுத்தத்தை உடைக்க முதலாளி முயன்றபோது அவர் ராஜாஜியைச் சந்தித்து அதற்குத் தடை பெற்றார். அதுதான் முதலாளிகளுக்கு எதிராக அரசு எடுத்த முதல் நடவடிக்கை.
இதுபோல் பல தொழிலாளர் போராட்டங்களில் வழிகாட்டித் தனது தொழிற்சங்கப் பணியைச் செய்தார் ராமமூர்த்தி.
சென்னையில் கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம் உருவானபோது அதன் தலைவரானார் பி.ஆர். கூலி உயர்வுக்காக அவர்கள் போராடினர். ராஜாஜி அவர்களுக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டார். ‘நாளை விபச்சாரிகள் ஸ்ட்ரைக் நடக்கும்’ என்று வெறுப்புடன் அவர் கூறினார். முதலாளிகள் ஒரு கலவரத்தைத் தூண்ட முயல, தொழிலாளர்கள் அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றிக் கொண்டு ஸ்ட்ரைக் ஆபீஸ் நோக்கி வந்தனர்.
ஆயுதங்களை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்குமாறு பி.ஆர். கொடுத்த தகவல் அவர்களிடம் சேருவதற்கு முன்னரே போலீஸ் அவர்களைக் கைது செய்தது. அவர்களுக்குத் தலைமை தாங்கிக் கொள்ளையடிக்க முயன்றார் என்று கூறி பி.ஆர். கைது செய்யப்பட்டார். ஆனால் போலீசால் வழக்கை நிரூபிக்க முடியாததால் அது நிராகரிக்கப்பட்டது.
1936ஆம் ஆண்டு எஸ்.வி.காட்டே ராமமூர்த்தியைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுக்க, அதை ஏற்றார் பி.ஆர். தமிழகத்தில் எட்டு உறுப்பினர் கொண்ட முதல் கிளை உருவானது.
பல விவாதங்களுக்குப் பிறகு நாடு முழுதும் நடைபெற்ற தேர்தல்களில் மாநில அளவில் பங்கேற்க காங்கிரஸ் முடிவெடுத்தது. சூறாவளி சுற்றுப்பயணம் சென்ற நேருவின் உரையைத் தமிழில் பி.ஆர். மொழிபெயர்த்தார். கீழே இறங்கியவர் உடனே வேறு எப்போதோ பேசியதற்காக தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். பி.ஆர். வழக்கில் தாமே வாதாடி ஜாமீன் பெற்றார்.
இடையில் பெரியாரைச் சந்தித்தபோது பெரியார் சனாதனக் குடும்பத்தில் பிறந்த அவர் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனார் என்றெல்லாம் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். எப்போது திருமணம் என்று கேட்டபோது, வேறு சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் எனும்போது அம்மாவின் மனம் நோக விரும்பவில்லை. எனவே பிறகுதான் திருமணம் என்றபோது பெரியார் மனம் மகிழ்ந்து, ‘தம்பி, நீ செய்த முடிவு நல்ல முடிவு. உன் திருமணம் எப்போது நடந்தாலும் நான் வருவேன்’ என்று வாழ்த்தினார். காங்கிரசை நம்பாதே என்றும் சொல்லி அனுப்பினார்.
சென்னையில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி முடிவின்படி வார இதழாக ஜனசக்தி மலர்ந்தது. ராமமூர்த்தி நிதி திரட்டுவதில் முன் நின்றார். எனினும் மூன்று இதழ்களில் நின்றுவிட்டது. பின்னர் 1938இல் மீண்டும் தொடர்ந்தது. பி.ஆர். அதில் சிறந்த பணியை ஆற்றினார்.
காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் கம்யூனிஸ்டுகளுக்கும் சோஷலிஸ்டுகளுக்கும் நிலைபாட்டில் வேற்றுமை இருந்தது. சோஷலிஸ்டுகளில் பலர் சோவியத் எதிர்ப்பு மனோபாவம் கொண்டிருந்தனர். இது அதிகரித்து 1939இல் வெடித்த இரண்டாவது உலக யுத்தம் அதை நிறைவு செய்தது. கம்யூனிஸ்டுகள் தாமே சுயேச்சையாக மக்கள் கிளர்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினார்கள். நிலைமை முற்றியது.
1940 மார்ச் மாதத்தில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியிலிருந்த கம்யூனிஸ்டுகள் வெளியேற்றப்பட்டனர்.
(தொடரும்)