ஒரு செல்வச் சீமானின் மகன். தானே துவைத்த வேட்டி சட்டை அணிந்து காலம் முழுவதும் ஒரு மஞ்சள் பையுடன் தொழிலாளர் மத்தியில் வலம் வந்த பெருமகன் தோழர் கே.டி.கே.தங்கமணி.
தனது கடைசிக் காலத்தைக்கூட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் ஒரு சிறு அறையில் கழித்து மறைந்தார். ஒரு வட்டச் செயலாளர்கூட பத்து உயர்ரகக் கார்களில் வலம் வரும் இக்காலத்தில் இந்த மனிதனின் பெருவாழ்வு அசாத்தியமானது.
கே.டி.கே பிறந்தது மதுரை மாவட்டத்திலுள்ள (இப்போது விருதுநகர்) திருமங்கலம். அவரது தந்தை கூழைய நாடார் மிகப்பெரிய செல்வந்தர். நாம் இப்போது தினசரி வாழ்வில் புழங்கும் சர்க்கரை அந்தக் காலத்தில் இங்கு உற்பத்தி செய்யப்படவில்லை. ஜாவா என்ற தீவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதை ஒட்டுமொத்தமாக இறக்குமதி செய்த ஒரே ஏஜெண்ட் கூழைய நாடார் என்றால் அவரது செல்வம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் அவர் மற்ற செல்வந்தர்களைப் போல் அல்லாமல் தனது வருமானத்தில் ஒரு பகுதியை அறச்செயல்களுக்கென்று ஒதுக்கி வைத்தவர். தந்தை பெரியார் குடும்பத்துடனும் இவர்களுக்கு வணிகத் தொடர்பும் குடும்ப ரீதியான நட்பும் இருந்துள்ளது.
திருமங்கலத்திலேயே எட்டாம் வகுப்பு வரை படித்தவரை மேற்கொண்டு பள்ளியில் சேர்க்க மதுரை வரை சென்றிருக்கிறார்கள். வகுப்பில் முதல் மாணவராகவே திகழ்ந்திருக்கிறார் கே.டி.கே.
அவரது குடும்பமும் தேசிய இயக்கத்துக்கு நெருக்கமானதுதான். அவர் சிறுவனாக இருந்தபோது மகாத்மா காந்தியின் காலடியிலேயே அமர்ந்து அவரது பேச்சைக் கேட்டிருக்கிறார். கூட்டம் முடிந்தபோது, சுதந்திரப் போராட்ட நிதியாக அவரது அன்னை தனது தங்க நகைகள் அனைத்தையும் கழற்றிக் கொடுத்திருக்கிறார். இவையெல்லாம் சிறுவனின் மனதில் ஆழமாகப் பதிந்தன.
அவர் எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவுடன் அருகிலுள்ள சாத்தான்குடிக்கு பெரியார் வந்தபோது, தனது அண்ணனுக்குப் பிடிக்காவிட்டாலும், அவரது கூட்டத்துக்குப் போய்விட்டார் தங்கமணி. அதேபோல் ஈரோட்டில் நடந்த சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாவது மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
அடுத்ததாக மதுரைக் கல்லூரியில் இண்டர்மீடியேட் படித்தார் தங்கமணி. அப்போது நடந்த தேர்வில் அமெரிக்கன் கல்லூரியில் 5 பேரும், மதுரைக் கல்லூரியில் 3 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களில் முதல் இடத்தைப் பிடித்தார் தங்கமணி.
அடுத்ததாகக் கணிதத்தில் பி.ஏ.ஆனர்ஸ் படிப்பைத் திருச்சியில் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தொடர்ந்தார் கே.டி.கே. இக்காலத்தில் அவரது தந்தை மறைந்துவிட்டார். கே.டி.கே அப்போதே தேசிய இயக்கத்தில் ஈடுபடத் தொடங்கியிருந்தார். நேஷனல் கல்லூரி வளாகத்துக்கு 1934இல் காந்தி வந்தபோது அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு தண்டனை பெற்றார். இதையெல்லாம் கருத்தில் கொண்ட அவரது அண்ணன் அவரை வணிகத்தில் ஈடுபடுத்த முடிவு செய்தார்.
ஆனால் தங்கமணியோ தனது மேற்படிப்பை லண்டனில் சென்று தொடர ஆசைப்பட்டார். வீட்டில் மூன்றுநாள் உண்ணாவிரதப் போர். மனம் வெதும்பிய அன்னை தலையிட்டு நிபந்தனையுடன் அனுமதி கொடுத்தார். படிப்பு முடியும் வரை அரசியல் கூடாது, திருமணம் கூடாது. ஏற்றுக்கொண்டார் கே.டி.கே. பின்னாளில் இந்தியாவின் நிதியமைச்சரான ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் அறிமுகக் கடிதத்துடன் பம்பாய் சென்று லண்டனுக்குக் கப்பல் ஏறினார். நான்காண்டுகள் மிடில் டெம்பிளில் சட்டம் பயின்றார்.
அவருடன் பல தேசியத் தலைவர்களும் பயின்றனர். பூபேஷ்குப்தா, ஜோதிபாசு, இந்திரஜித் குப்தா, இந்திராகாந்தி, பெரோஸ் காந்தி, ஏ.கே.சென், என்.கே.கிருஷ்ணன், பார்வதி கிருஷ்ணன், மோகன் குமாரமங்கலம் என அந்தப் பட்டியில் மிகவும் நீண்டது. 1940இல் பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார் கே.டி.கே.
தினத்தந்தி பத்திரிகையைப் பிற்காலத்தில் தொடங்கிய சி.பா.ஆதித்தனார் கே.டி.கேயைத் தம்முடன் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றார். அவரது வாதத்திறமையைப் பார்த்த சி.பா.ஆதித்தனாரின் மாமனார் தனது இரண்டாவது மகளை கே.டி.கேவுக்கு மணமுடித்துக் கொடுத்தார். அப்போதே நாவிதத் தொழில் செய்து வந்த அய்யாறு தலைமையில் சீர்திருத்தத் திருமணம் நடத்தினார்கள் என்பது சிறப்பு அல்லவா?
பின்னர் ஜப்பான் சிங்கப்பூரைக் கைப்பற்றி விடுமென்ற அச்சத்தில் பலரும் தாய்நாடு திரும்ப, கே.டி.கேவும் திரும்பித் தனது மாமனாரின் சொந்த ஊரான மணச்சைக்குச் சென்றார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் நாடே கொதித்துக் கொண்டிருந்தது. தலைவர்களெல்லாம் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், மக்கள் தன்னிச்சையாகக் களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் தீர்மானித்ததுதான் போராட்டம், வழிமுறை எல்லாம். அந்த இயக்கத்தின் முதல் போராட்டம் தமிழகத்தில்தான் நடந்தது என்பது சரித்திரம். அதை அறிய சின்ன அண்ணாமலையின் சுயசரிதையைப் படிக்க வேண்டும். அவரை மக்கள் சிறையிலிருந்து விடுவித்தனர்.
திருவாடனையில் பொங்கியெழுந்த மக்கள் கூட்டத்தை போலீஸ் கண்மூடித்தனமாகச் சுட்டு 49 பேரைப் பலி கொண்டது. போராளி சிவஞானத் தேவரைப் பிடித்து மரத்தில் கட்டி சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிப் போனவரைச் சுட்டதாகக் கதை விட்டது. இதை அறிந்த கே.டி.கே தாமே அங்கு சென்றார். சிறையில் இருந்த சிவஞானத்தின் தம்பி ஆறுமுகத்தைச் சந்தித்துப் பேசிவிட்டுத் தாமே அந்த வழக்கை எடுத்துக்கொண்டு ஆஜரானார் அவர். பொது வாழ்வில் அவரது நுழைவு தொடங்கியது.
மதுரைக்குச் சென்று தனது வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கிய கே.டி.கே அங்கு ஒரு கலாசாரக் கழகத்தை நிறுவினார். பல தலைவர்களை அழைத்துப் பேச வைத்தார். சோவியத் யூனியனுக்கு ஆதரவாக மகாகவி ரவீந்திரநாத் தாகூர் ஒரு நல்லெண்ண அமைப்பைத் தோற்றுவித்தபோது அதன் மதுரை கிளைத்தலைவராகப் பொறுப்பேற்றார் கே.டி.கே.
உலக யுத்தம் தொடர்பான கண்காட்சியை மதுரை புதுமண்டபத்தில் ஏற்பாடு செய்து நடத்தும் பொறுப்பை ஏற்றார் கே.டி.கே. அவருக்கு உதவி செய்ய சோவியத் நண்பர்கள் குழுவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க மதுரை வந்து அவருடன் தங்கினார். திரு.வி.க ஒரு மாபெரும் தொழிற்சங்கத் தலைவரும் ஆவார்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட திரு.வி.க. சென்னையில் நடைபெற்று வரும் தொழிற்சங்கப் போராட்டங்கள் குறித்துக் கே.டி.கே.வுக்கு விரிவாக விளக்கி, கே.டி.கே.வைப் பொதுவாழ்வுக்கு வரவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அவ்வளவுதான். பொதுவாழ்வில் அவரது நுழைவு முழுமை பெற்று விட்டது.
மதுரையில் 51 மணி நேரம் நடந்த அந்தக் கண்காட்சியை 60 ஆயிரம் பேர் கண்டனர். நன்கொடையாக 1500 ரூபாய் சேர்ந்தது. 1000 ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்றன. அவ்வளவு சிறப்பாக கே.டி.கே, அப்துல் வகாப் உள்ளிட்டவர்கள் அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.
1936ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டான சிங்காரவேலரை சுயமரியாதை இயக்க மாநாட்டில் சந்தித்தார் கே.டி.கே. குனிந்து வணங்கியவரை, ‘ஏ தமிழா! குனியாதே! நிமிர்ந்து நின்று சலாம் வை’ என்று அதிரும் குரலில் சிங்காரவேலர் முழங்கினார். அவருக்குத் தொழிற்சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தச் செல்லும்போது முதலாளிகளின் பித்தலாட்டச் சொற்களுக்கு இரையாகிவிடக்கூடாது என்றும் சொல்லிக் கொடுத்தார் சிங்காரவேலர். கடைசிவரை அதைக் கடைப்பிடித்தார் கே.டி.கே.
1943ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியை தமிழகமெங்கும் அமைத்துச் செயல்படுவது என்று மாநிலத் தலைவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி பல மாவட்டங்களிலும் மாவட்டக் கிளைகள் உருவாயின. இக்காலத்தில்தான் கே.டி.கேவும் தம்மை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
மதுரையில் டி.வி.எஸ். நிறுவனம் பெயர் பெற்ற ஒன்று. அதன் தொழிலாளர்கள் கே.டி.கே.வை சந்தித்துத் தமது தலைவராக வேண்டுமெனக் கேட்டனர். அவருக்குத் தொழிற்சங்கம் பற்றித் தெரியா விட்டாலும் ஒரு வழக்கறிஞர் தலைவராக வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தவும், கே.டி.கே. ஒப்புக் கொண்டார். ஆனால் பெயருக்கு இருக்க முடியுமா? வேலைநிறுத்தம் வந்தபோது, அதில் தீவிரமாக ஈடுபட்டு மறியலுக்குத் தலைமையேற்றுச் சிறை ஏகினார். தொடங்கியது தியாக வாழ்க்கை.
தொழிற்சங்கம் மேலும் அவரை உள்ளே இழுத்தது. 1945ஆம் ஆண்டில் ஏ.ஐ.டி.யூ.சியின் மாநாடு மதுரையில் கூடியது. அதன் வரவேற்புக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தினார்.
1946ஆம் ஆண்டில் ஒரு சுவையான நிகழ்வு. தமது சொந்த வேலையாக சிங்கப்பூர் சென்ற கே.டி.கே கட்சி கொடுத்த அறிமுகக் கடிதத்தை அங்கிருந்த கட்சியிடம் கொடுத்தார். அவரைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஒரு மாபெரும் போராளியிடம் அறிமுகம் செய்கின்றனர். நீண்ட நேரம் அவருடன் உரையாடி மகிழ்ந்தார் கே.டி.கே. அந்தத் தலைவர் யார் தெரியுமா?
வியட்னாமின் தலைவரும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி ஓட ஓட விரட்டியவருமான ஹோ சி மின். பின்னர் கே.டி.கே. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தியா வந்த ஹோவிடம் நேரு இவரை அறிமுகப்படுத்த, அவரோ, நாங்கள் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் நிறைய உரையாடி இருக்கிறோம் என்றாராம் அவர்.
0
கம்யூனிஸ்ட் இயக்கமும் தொழிற்சங்க இயக்கமும் வளர்ந்து விடக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்தியாவிலும் தமிழகத்திலும் பிரிட்டிஷ் ஆட்சி பல சதி வழக்குகளைத் தொடுத்து முடக்கப் பார்த்தது. அவற்றையெல்லாம் மீறித்தான் இயக்கம் வளர்ந்தது. அந்தச் சதி வழக்குகளில் முக்கியமான ஒன்று மதுரை சதி வழக்கு.
பி.ராமமூர்த்தி, கே.டி.கே. உள்ளிட்ட பல தோழர்கள் தமது தொழிற்சங்கத்துக்கு எதிரான தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டனர் என்று சதி வழக்குத் தொடுத்து சிறையிலடைத்தது அரசு. பி.ஆர். தமது வாதத் திறமையால் வழக்கை உடைத்தெறிந்தார். 1947 ஆகஸ்ட் 14 அன்று மாலை சிறைச்சாலைக்கு வந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தார் நீதிபதி. ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழத் தலைவர்கள் ஊர்வலமாக வந்து சுதந்திர நாளைக் கொண்டாடினர். ‘தீபாவளியும், சித்திரைத் திருநாளும் சேர்ந்து வந்தது போல் இருந்தது. மக்கள் தெருவில் இறங்கிக் கோலாகலமாகக் கொண்டாடினர்’ என்று கூறி மகிழ்வார் கே.டி.கே.
அடுத்தநாள் மதுரை வந்த கம்யூனிஸ்ட் இயக்கப் பிரபல இசைக்கலைஞர் எம்.பி.சீனிவாசன் தியாக மணவாளன் எழுதிய ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே’ என்ற பாடலுக்கு மெட்டமைத்தார். இந்தப் பாட்டைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் சிந்துதியவர்களில் ஒருவர் கே.டி.கே, இன்னொருவர் சங்கரய்யா.
ஹார்வி மில்லில் வேலைப்பளுவைத் திணிக்க நிர்வாகம் முயன்றது. அந்தத் தாவாவைத் தீர்க்க நடுவர் குழு அமைக்கப்பட்டது. எனினும் தீர்ப்பு ஊழியர்களுக்கு எதிராகச் சென்றுவிட்டது. அதை எதிர்த்து கே.டி.கேவும் ஏ.பாலசுப்ரமணியமும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. கூட்டம் கூட்டமாகக் கூடிய தொழிலாளர்கள் உடல் சோர்ந்த தலைவர்களைப் பார்த்து அழுதனர். கே.டி.கே.வின் அம்மாவும் வந்து பார்த்து அழுதார். வேறு வழியின்றி தொழிலமைச்சர் பக்தவத்சலம் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்த்தார். கே.டி.கேவும் ஏ.பி.யும் இந்த மகத்தான சாதனையைத் தமது உயிரைப் பணயம் வைத்து முடித்து வரலாறு படைத்தனர்.
டி.ஐ.சைக்கிள்ஸ் போராட்டம் நடந்தபோது அனைத்து சங்கங்கள் சார்பில் சென்னையில் பிரம்மாண்டப் பேரணி நடைபெற்றது. ரிசர்வ் வங்கி அருகே கே.டி.கேவையும் பிற தலைவர்களையும் அடித்துத் துவைத்தது போலீஸ்.
உண்ணாவிரதம் என்றால் அப்படி இருக்கும். சிறையில் ஒருமுறை 39 நாள் உண்ணாவிரதம். அதைப் பற்றி தியாகி ஐ.மா.பா. விளக்குகிறார். அடி என்றால் அப்படி ஓர் அடி. எப்படி முயன்றாலும் கலைக்க முடியவில்லை. காவலர்கள் அவரது வாயை வலுக்கட்டாயமாகத் திறந்து கஞ்சியை ஊற்றுவார்கள். அப்போதும் விழுங்காமல் துப்புவார். சட்டையிலும் மார்பிலும் வயிற்றிலும் கஞ்சி கொட்டிக் கிடக்கும். அப்படியே காய்ந்து அப்பியிருக்கும் தாடி. சவரம் கிடையாது. அடையாளமே கண்டுபிடிக்க முடியாது. எப்பேர்ப்பட்ட உறுதி!
மொத்தம் எட்டு வருடம் சிறை வாழ்க்கை. அனைத்தையும் புன்னகையுடன் தாங்கிக் கொண்டவர் கே.டி.கே. சிறிதும் கலங்கியவரில்லை. இன்று எதற்கெல்லாமோ சிறையில் இருந்துவிட்டு தியாகிப் பட்டம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்!
அதேபோல் தமிழ்நாடு என்ற பெயர் பெறுவதற்காகப் பலரும் போராடினர். அந்த வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர் தியாகி சங்கரலிங்கனார். அவர் அந்தக் கோரிக்கையை முன்வைத்து விருதுநகரில் 1956ஆம் ஆண்டு ஜýலை 27ஆம் தேதியன்று காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.
பொறுக்க முடியாத காங்கிரஸ் கட்சி குண்டர்கள் அவரை உண்ணாவிரதப் பந்தலுக்குள் சென்று தாக்கினர். அவரைக் காத்து நின்றவர்கள் கம்யூனிஸ்டுகள். அவரது உயிரைக் காக்குமாறு அவர்கள் காமராஜரிடம் கேட்டுக் கொண்டதை அவர் நிராகரித்துவிட்டார். இறுதியாக 77 நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு அக்டோபர் 13ஆம் தேதியன்று உயிர் நீத்தார். இறப்பதற்கு முன் தமது சடலத்தைக் கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படைக்க வேண்டுமென உயில் எழுதினார். அதன்படி அவரது உடலைப் பெற்று எரியூட்டியவர்கள் கே.டி.கேவும் கே.பி.ஜானகியம்மாவும்தான்.
சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் கூடத் தமது வாதத்திறனை நிரூபித்தவர் கே.டி.கே. அதேபோல் விதிமுறைகளைக் கறாராகக் கடைப்பிடிப்பவர். தேர்தலில் ஒருமுறை கலவரம் ஏற்பட்டு அவர் இருந்த ஒரு சாவடியில் தகராறு மூண்டது. மற்றவர்கள் வெளியே வருவதற்கே அஞ்சிய நிலையில், இவர் நேரடியாகச் சென்றுவிட்டார். கலவரக்காரர்கள் அவரைப் பார்த்ததும் மோதலை நிறுத்தினர்.
1989இல் அவரை எதிர்த்து நின்ற ஒரு ரயில்வே தொழிலாளியை ஆதரிப்பது போல் பேசிவிட்டார் கே.டி.கே. ஏனென்றால் அவர் தோற்றால் அவரது வாழ்வு சிதைந்துவிடும் என்ற சிந்தனைதான். மற்றவர்கள் அவரை வற்புறுத்தி அப்படிப் பேசாமல் இருக்க வைத்தனர்.
பொதுவாக, 5 மணிக்கு பிரசாரம் முடிக்க வேண்டுமென்றால் அப்படியே முடித்து விடுவார். அவரை யாரும் மீற முடியாது.
சிவகாசியில் பட்டாசு வெடித்து மிகப்பெரிய சேதம் ஏற்பட்டபோது அத்தொழிலை முடக்க நேரு நினைத்தார். உடனே நேருவைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.கே விபத்துகள் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டுமே தவிர, அதை முடக்கி விடக்கூடாது என்று எடுத்துரைத்தார். நேருவும் ஒப்புக் கொண்டார். முடங்க இருந்த ஒரு தொழிலைத் தக்க சமயத்தில் காப்பாற்றினார் கே.டி.கே.
அலுமினியம் பவுடர் தொழிற்சாலை தொடங்கப்பட்டபோது அதை சிவகாசிக்கு அருகே அமைக்க முயற்சியெடுத்து சாதித்தவரும் அவரே. நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்திறன் அடங்கிய புத்தகத்தில் அதிகக் கேள்வி கேட்டவர் என்று அவரது பெயர் பதிவாகியுள்ளது.
சட்டமன்றத்தில் அரசைக் கடுமையாக விமர்சித்தாலும், தனிப்பட்ட முறையில் நட்பைப் பேணியவர் கே.டி.கே. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மத்திய அமைச்சர்களோடு வாதாடி மதுரைக்கு விமான நிலையத்தைக் கொண்டு வந்தார். விடுதலைக்குப் பின் முதன்முதலில் கட்டப்பட்ட விமானநிலையம் அதுதான். அதேபோல் தென்மாவட்டத் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான ரயில்வே சரக்கு நிலையத்தை மதுரைக்குக் கொண்டு வந்தவர் கே.டி.கே.தான்.
தூத்துக்குடியில் துறைமுகம் அமைக்க வேண்டுமென்று ஒரு குழு தில்லி சென்றபோது, கே.டி.கே அவர்களை நேருவிடம் அழைத்துச் சென்று பேசித் தீர்வு கண்டார். துறைமுகம் அமைந்தது.
ஒருமுறை நேரு கே.டி.கேவையும் பூபேஷ் குப்தாவையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துள்ளார். ‘இவ்வளவு மென்மையாகப் பேசுகிறீர்களே, எப்படிக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறீர்கள்?’ என்று கேட்டாராம் நேரு. கே.டி.கே தனது தலையிலும் நெற்றிக்குக் குறுக்காகவும் இருந்த தழும்புகளைக் காட்டிச் சொன்னார். ‘உங்கள் அகிம்சை ஆட்சியில் கம்யூனிஸ்டுகள் மீது அடக்குமுறையைப் பிரயோகித்தபோது எனக்குக் கிடைத்த பரிசு. வன்முறையாளர்கள் யார்?’ நேரு வாயடைத்துப் போனார்.
மதுரையில் அரசுப் பெண்கள் கல்லூரி கட்ட முடிவானபோது அதற்கு என்ன பெயர் வைப்பது என்ற கேள்வி எழுந்தது. நாத்திகரான எம்.பி. கே.டி.கே சொன்னார்: மதுரை என்றாலே மீனாட்சிதான். எனவே மீனாட்சி பெயரிலேயே கல்லூரி அமைய வேண்டும்.
1977இல் முதல்வரான எம்.ஜி.ஆர், கே.டி.கேவை அழைத்து தம்மை ஆட்சியில் அமர வைக்கப் போராடிய உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டார். கே.டி.கே. மதுரை சதிவழக்கை சுதந்திரப் போராட்டத்தின் பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டார். உடனே உத்தரவைப் பிறப்பித்தார் எம்.ஜி.ஆர்.
1962இல் சீனப்போர் வெடித்தபோது ஒரே சிறையில் எம்.ஆர்.வி, வி.பி.சி, சங்கரய்யா, கே.டி.கே ஆகியோர் இருந்தனர். அந்த விஷயத்தில் அவர்களுக்கு மாறுபட்ட கருத்து இருந்தது. எனினும் தமது தோழமையை விட்டுக் கொடுக்காமல் அனைவரும் அதைப் பற்றிப் பேசாமல் தவிர்த்தனர். அவர்களது நட்பும் நேசமும் அப்படியானது.
உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் என்று தூண்டியும் கே.டி.கே எழுதவில்லை. அவருடன் பழகியவற்றை வைத்து ஏ.ஐ.டி.யூ.சியின் டி.எம்.மூர்த்தி ஒரு சிறிய புத்தகத்தை எழுதியுள்ளார்.
உடன் இருக்கும் தோழர்களுடன் ரோட்டோரக் கடைகளில் சாப்பிட்டு, கூட்டமான பேருந்தில் பயணம் செய்துகொண்டு, அலுவலத்தில் துண்டை விரித்துப் படுத்து உறங்கி, கடைசிவரை எளிமையாக வாழ்ந்து மறைந்தவர் கே.டி.கே.
(முற்றும்)