Skip to content
Home » தோழர்கள் #33 – காம்ரேட் லஷ்மி

தோழர்கள் #33 – காம்ரேட் லஷ்மி

காம்ரேட் லஷ்மி

டிசம்பர் மாதத்தில் மருத்துவமனையிலிருந்து போர்முனைக்குச் செல்லுமாறு ஆணை கிடைக்க, படைகள் நகரத் தொடங்கின. வழியெல்லாம் விமான குண்டு வீச்சுகளை சமாளித்துக் கொண்டே சென்றனர் படைகள். அவர்கள் வந்து ஓய்வெடுத்த இடத்தையும் விமானப்படை விடவில்லை. எனவே கடும் காயமடைந்தவர்களை விட்டுவிட்டு மற்றவர்கள் ரங்கூன் செல்ல முடிவானது.

பிரிட்டிஷ் படை விரைவாக மண்டலே நோக்கி வந்து கொண்டிருப்பதாக நேதாஜிக்குச் செய்தி கிடைத்திருந்தது. லஷ்மி உள்ளிட்டோரைப் பத்திரமாக ரங்கூனுக்கு அனுப்ப அங்கு வந்த எல்லாப்பா விமான குண்டுவீச்சில் படுகாயமடைந்தார். வேறு வழியின்றி அவரை அங்கு ஓர் உதவியாளருடன் விட்டுவிட்டு லஷ்மியும் மற்றோரும் கிளம்பினர். ஆனால் தவறாக எதிர் முகாமின் பர்மாவுக்குள் நுழைந்துவிட்டனர். அங்கு சில ஜப்பானிய வீரர்கள் அவர்களைப் பிடித்துத் தவறாகப் புரிந்துகொண்டு கிட்டத்தட்ட கொன்றிருப்பார்கள். ஆனால் ஓர் இளம் ஜப்பானிய அதிகாரி லஷ்மியை அடையாளம் கண்டுகொண்டதால் கடைசி நிமிடத்தில் தப்பித்தனர்.

மேலும் முன்னேறிச் சென்றபோது, பிரிட்டிஷ் படையின் கெரில்லா படையிடம் சிறைப்பட்டுவிட்டனர். எல்லப்பா இறந்துபோயிருந்தார். பிரிட்டிஷ் கெரில்லா படை அவர்களை மரியாதையுடன் நடத்தியது. நடைப் பயணமாகவே அவர்களை முகாமுக்கு நடத்திச் சென்றது. முதலில் டூங்கூவுக்கும் பிறகு பெகுவுக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஜூலை 6 அன்று அவர்கள் ரங்கூனை அடைய, மற்ற போர் வீரர்களிடமிருந்து லஷ்மியைப் பிரித்துவிட்டனர். அவர்கள் போர்க்கைதிகளாக்கப்பட்டனர்.

அங்கு லஷ்மி அவரது குடும்ப நண்பராக இருந்த யூ டுன் நோயி வீட்டைத் தேடி அடைந்தார். அங்கிருந்து தான் பாதுகாப்பாக இருப்பதாக கர்னல் பிரேம் செகாலுக்கு செய்தி அனுப்பினார். ஒரே நாளில் இன்னொரு வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட லஷ்மி விசாரணை செய்யப்பட்டார். ஐஎன்.ஏ என்பது விளையாட்டல்ல, நேதாஜி பற்றுறுதி உள்ளவர், படையில் இருந்தவர்களும், குறிப்பாக ஜான்சி ராணி லஷ்மி படையில் இருந்தவர்களும் தேசப்பற்றுடனேயே அதில் இருந்தனர் என்பதையும் பிரிட்டிஷார் புரிந்துகொண்டனர். எந்தத் தண்டனையையும் ஏற்போம் என்று பெண்கள் உறுதியுடன் கூறியது லஷ்மியைப் பெருமிதம் கொள்ளச் செய்தது.

பின்னர் டாக்டர் தீனாநாத் என்பவரின் வீட்டுக்குச் செல்ல லஷ்மி அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து நேதாஜியின் கடைசி நாட்கள் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொண்டார் லஷ்மி. அவரது மறைவுச் செய்தி அவரே உருவாக்கிய வதந்தியாகவே இருக்க வேண்டுமென்று அனைவரும் விரும்பினர். பல ஆண்டுகளுக்கு அவ்வாறே நம்பினார் லஷ்மி.

இதற்கிடையில் அங்கு வந்த இந்திய ராணுவ அதிகாரிகளில் ஒருவரான கர்னல் திம்மையா, நள்ளிரவு 2 மணிக்கு லஷ்மியை வந்து சந்தித்தார். அங்கு சாதாரண உடையில் காவலிருந்த பர்மிய காவலர்கள் ஸ்தம்பித்துப் போனார்கள். ஏனென்றால் அவர் ஒரு ஆபத்தான பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளரைச் சந்திக்கிறார்.

அவரைச் சந்திக்க வந்த பல பத்திரிகையாளர்கள், ராணுவ அதிகாரிகள் மூலமாக ஐ.என்.ஏ.வின் உண்மையான வரலாற்றை எழுதி லஷ்மியால் வெளியிட முடிந்தது. அது ஜெய்ஹிந்த் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது.

மிகுந்த பிரயாசைப்பட்டு லஷ்மி ஒரு மருத்துவமனையில் வேலை செய்ய அனுமதி பெற்றார். தனது செலவுகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்க அவர் விரும்பவில்லை.

இடைக்கால அரசு அமைத்த அக்டோபர் 1ஆம் தேதியின் ஆண்டு விழாவைக் கொண்டாட முடிவெடுத்தனர். கிழிந்து போன ராணுவ உடைகளுடன் வீரர்கள் இடிந்த கட்டடத்தின் முன்னால் கூடினர். லஷ்மி கொடியேற்றியபோது, அவர்களது உறுதி சற்றும் தேயவில்லை என்பது தெரிந்தது. இந்த விஷயம் தெரிந்ததும், லஷ்மியை உடனே அங்கிருந்து வெளியேற்றி காலாவுக்கு அழைத்துச் சென்று வீட்டுச் சிறையில் வைத்தது அரசு. அங்கும் பல ராணுவத்தினர் அவரை வந்து சந்திப்பது வழக்கமாக இருந்தது. இறுதியில் 1946, மார்ச் 4 அன்று அவர் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டம் டம் விமானநிலையத்தில் இறங்கியதும் அவர் விடுவிக்கப்பட்டார்.

கல்கத்தாவில் இருந்த தன் சகோதரர் சுவாமிநாதன் வீட்டுக்கு ஒரு டாக்சியில் சென்றபோது, அவர் ஜான்சிராணி லஷ்மிபாயா என்று கேட்டிருக்கிறார் டிரைவர். இல்லை, தான் அந்தப் படையின் தளபதி என்று பதிலளித்ததும், சிலிர்த்துப் போன டிரைவர், ஐ.என்.ஏ.வின் போராட்டம் எப்படி இந்தியாவையே உலுக்கியது என்று கொட்டித் தீர்த்தார். அவர்கள் இப்போது இந்தியாவின் கதாநாயகர்கள், கதாநாயகிகள். அவரிடம் பணம் வாங்க மறுத்துவிட்டு, எப்போது வேண்டுமானாலும் தம்மை அழைக்குமாறு கூறிச் சென்றார் டிரைவர்.

அங்கோ யாருமில்லை. முந்தைய வாரமே லஷ்மி வருவார் என்று எதிர்பார்த்திருந்த குடும்பத்தினர் அவர் வராததும், வெளியூர் சென்றுவிட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர் வந்திருப்பதை அறிந்த நேதாஜியின் மருமகன் அங்கு ஓடிவந்து அவரை நேதாஜியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இரவு முழுவதும் நேதாஜியுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் லஷ்மி.

கல்கத்தாவில் அவர் வந்தது தெரியாதிருந்தது. ஆனால் அவர் அங்கிருந்து தில்லி வந்தபோது, பெரும்கூட்டம் அவரை வரவேற்கக் காத்திருந்தது. அந்த இளைஞர்களைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டார் லஷ்மி. அவரது அன்னையும், கேப்டன் செகாலும் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அவரது அனுபவங்களைக் கேட்டு நிருபர்களும் மக்களும் அவரை மொய்த்துக் கொண்டே இருந்தனர். ஓய்வே கிடைக்கவில்லை.

காந்தியைச் சந்திக்க லஷ்மி மறுத்துவிட்டார். ஏனென்றால் எதிர்காலத்தில் எந்த வன்முறையும் செய்ய மாட்டேன் என்ற உறுதிமொழியை காந்தி எதிர்பார்த்தார். காந்தியின் அகிம்சையை லஷ்மியால் ஏற்கமுடியவில்லை. லஷ்மியின் இந்த நிலைப்பாட்டை அன்றைய அரசியல் சூழலைக் கணக்கில் கொண்டு புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

எனினும் லஷ்மி கம்யூனிஸ்ட் கட்சியுடனும் இருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி அப்போது நேதாஜியை பாசிசத்துக்கு நெருக்கமானவர் என்ற தவறான எண்ணத்தில் இருந்தது. விடுதலையை விரும்பும் ஒரு சாதாரணக் குடிமகளாகவே தன்னைக் கருதினார் லஷ்மி. ஆனால் சரியான தலைமையைக் காண முடியாததால் விரக்தியடைந்து விரைவில் மெட்ராசுக்குச் சென்றார்.

ஐ.என்.ஏ.வில் பணிபுரிந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த தமிழர்களையும், மலையாளிகளையும் இங்கு மறுகுடியமர்த்தும் வேலை அவருக்கு இருந்தது. அவர்கள் நேராகக் கப்பலில் இருந்து இறங்கி காங்கிரஸ் அலுவலகத்துக்குச் சென்று தங்குமிடமும் உணவும் கோரினர். ஐ.என்.ஏ. நிவாரணக் குழுவின் செயலாளரானார் லஷ்மி. பெருந்தலைவர் காமராஜர் பெருமளவில் உதவியாக இருந்தார். பணம் திரட்டவும், தங்கும் இடம் கொடுக்கவும் உதவினார் அவர்.

நிலைமை ஓரளவு சீரடைந்ததும் தன் பாட்டியைச் சந்திக்கக் கேரளா சென்றார் லஷ்மி. அங்கு காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு ஐ.என்.ஏ. குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பிறகு நிவாரண நிதியும் திரட்டினார்.

தில்லி திரும்பியபோது நாடு பிரியும் நிலையில் இருந்தது. ஐ.என்.ஏ. வீரர்கள் காங்கிரஸ் மீது ஏமாற்றம் கொண்டிருந்தனர். பிரேம் செகால் தில்லியில் ஐ.என்.ஏ நிவாரணக் குழுவுக்குப் பொறுப்பேற்றிருந்தார். பிறகு கான்பூரில் அவருக்கு ஜவுளி மில்லில் வேலை கொடுத்தார் ஜே.பி.ஸ்ரீவத்ஸ்வா. அங்கு சென்று சேர்ந்தார் செகால். லஷ்மியுடன் அவர் 1946இல் திருமணம் செய்ததும், இருவரும் அங்கு குடியேறினர்.

1947இல் ஐ.என்.ஏ மாநாடு தில்லியில் நடந்தது. நாடு முழுவதும் வகுப்புவாத மோதல் வெடித்திருந்தது. முஸ்லிம் வீரர்கள் நேருவின் ஆலோசனையைக் கோர, அவர் அங்கேயே குடியேறி, தமது தேசத்துக்குப் பணிபுரியுமாறு கூறினார். ஆனால் ஜெனரல் ஷா நவாஸ்கான் மட்டும் அதை மறுத்து இந்தியாவில் குடியேறினார்.

அடுத்து கான்பூரில் நடந்த மாநாட்டில் ஐ.என்.ஏ.வின் அடையாளத்தை அப்படியே காக்க வேண்டும் என லஷ்மி போராட, காங்கிரசிடம் பல சாதகங்களைப் பெற்றவர்கள் அவரைத் துரோகி என்று முத்திரை குத்திவிட்டனர். பிரிந்த தேசத்திலிருந்து முஸ்லிம் வீரர்கள் கலந்து கொள்ள முடியாததால் அவர்களையும் ஜின்னாவின் கைக்கூலிகள் என்று முத்திரை குத்தி விட்டனர். ஐ.என்.ஏ.வின் முடிவாகவே அது அமைந்துவிட்டது.

அதன் பிறகு எந்த அரசியலிலும் இல்லாமல் கான்பூரில் குடியேறினார் லஷ்மி. எனினும் முற்போக்காளர்கள், ஐ.என்.ஏ வீரர்களுக்கு அவர்களது வீட்டுக் கதவுகள் திறந்தே இருந்தன. கான்பூர் அரசு மருத்துவமனையில் தன்னாலராகப் பணிபுரியக் கோரிக்கை வைத்தார் லஷ்மி. ஆனால் விஜயலட்சுமி பண்டிட் அப்படி எந்த வாய்ப்பும் இல்லை என்று நிராகரித்ததால், தானே ஒரு மருத்துவமனை தொடங்கினார் லஷ்மி. கான்பூரில் பிரிவினை காரணமாக வந்து குவிந்த அகதிகளுக்கு மருத்துவ உதவி செய்தார். பிரிவினையின் காரணமாக நிகழ்ந்த கோரக் காட்சிகளையும் அவர் துன்பத்துடன் காண நேர்ந்தது.

கட்டணம் மிகவும் குறைவாக இருந்ததால் அவரது மருத்துவமனை எப்போதுமே நிறைந்தே இருந்தது. சுதந்திரம் கிடைத்தாலும் அதன் பலனை மிகச்சிலரே அனுபவித்ததைக் கண்டார் லஷ்மி. அப்படியே தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்று உணர்ந்தார்.

அதனால் அவர் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபட முயன்றார். எனினும் கம்யூனிஸ்ட் கட்சி ஐ.என்.ஏவைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் தவிர்த்தே வந்தது.

லஷ்மியின் முதல் மகள் சுபாஷினி வளர்ந்து மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு மார்க்சிய சிந்தனையால் கவரப்பட்டு ஒரு கம்யூனிஸ்டாக நாடு திரும்பினார் சுபாஷினி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவும் விரும்பினார். அங்கு சிஐடியூவில் பணிபுரியத் தொடங்கினார். லஷ்மி கான்பூரில் கம்யூனிஸ்ட் தொழிலாளர்களுக்காகவே மருத்துவமனை தொடங்கினார். விரைவில் அவரைத் தம்மில் ஒருவராகவே மதிக்கத் தொடங்கிவிட்டனர் கட்சியினர்.

1971இல் பங்களாதேஷ் போர் வெடித்தது. மேற்கு வங்கத்தில் பணியாற்ற வங்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். விரைவில் ஜோதிபாசுவே அவரை நேரில் அழைத்தார். தாம் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த நிவாரணப் பொருட்களுடன் கல்கத்தா சென்றார் லஷ்மி. அங்கு அகதிகளுக்குச் சேவை செய்யத் தொடங்கினார். எல்லையில் பல வாரங்கள் பணி செய்தார்.

பின்பு கல்கத்தா திரும்பியவரை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சந்தித்து நேதாஜி பற்றியும் ஐ.என்.ஏ. பற்றியும் கேள்விகள் கேட்டுத் தமது சந்தேகங்களைத் தெளிவுப்படுத்திக் கொண்டனர். கான்பூரில் கட்சியில் சேர அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் அவர் மறைவாகவே இருந்தது, நெருக்கடி நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

1977இல் பம்பாயில் போட்டியிட்ட அகல்யா ரங்னேகருக்குப் பிரசாரம் செய்யச் சென்றார் லஷ்மி. ஜனசங்கத்தின் வகுப்புவாதப் பின்னணி தெரிந்ததால் அவர்களுடன் சேர்ந்து பணிபுரிவது அவர்களுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. ஆட்சி வந்ததும் அவர்களது முகமூடி கிழிந்துவிட்டது.

இந்நிலையில் பெண்களுக்கான அமைப்பாக அகில இந்திய மாதர் சங்கத்தை அமைக்க கட்சி முடிவெடுத்தது. பெண்களைச் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்க்க இது தேவையாக இருந்தது. அவர்களைச் சுரண்டலில் இருந்து விடுவிப்பது தேவையாக இருந்தது. எனவே 1980இல் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. சென்னையில் நடந்த அதன் அமைப்பு மாநாட்டில் அதன் முதல் ஐந்து துணைத்தலைவர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார் லஷ்மி.

1990இல் ஜப்பான் அரசின் அழைப்பை ஏற்று அங்கு நேதாஜியின் நினைவு தின அனுசரிப்பில் கலந்து கொள்ளச் சென்றனர் லஷ்மியும் செகாலும். வரும் வழியில் சிங்கப்பூரில் சிறிது காலம் தங்கினார் லஷ்மி. பழைய நினைவுகள் கிளர்ந்தன. தன் படையில் இருந்த பலரையும் சந்தித்தார். அவரது ஜான்சி ராணி படை இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என்றாலும், அவரைக் குடியரசுத் தேர்தலில் தோற்கடித்து நாம் நமது ‘நன்றியை’ வெளிக்காட்டியிருக்கிறோம்!

இறுதிவரை சாதாரண மக்களுக்காகவே கான்பூரில் இருந்து பணிபுரிந்த கேப்டன் லஷ்மி செகால் ஜூலை 23, 2012 அன்று அழியாத நினைவுகளை நம்மிடம் விட்டுவிட்டு மறைந்தார்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *