மிரட்டலான உருவம். கம்பீரமான குரல். இருக்கும் இடத்தில் அனைவரையும் கட்டிப் போட்டு விடும் ஆளுமை. இதுதான் பாப்பா உமாநாத் என்ற பெண் சிங்கம்.
பாப்பாவின் இயற்பெயர் தனலட்சுமி. அவர் காரைக்காலுக்கு அருகே கோவில்பத்து என்ற ஊரில் பிறந்தார். அவரது அம்மா, இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டவர். பாப்பாவுக்கு இரண்டு வயதாகும் போதே அப்பா இறந்துவிட்டார். அப்போது அம்மாவுக்கு சுமார் 26 வயது மட்டுமே இருக்கும். அவரது அப்பாவின் முதல் தாரத்தின் வீட்டினர் அனைவரும் சேர்ந்து, அவர் சொத்தில் பங்கு கேட்பார் என்ற பயத்தில் பாப்பாவின் அம்மாவை வீட்டை விட்டுத் துரத்திவிட்டனர். அது ஒன்றும் பெரிய சொத்தும் இல்லை. ஒரு சிறிய வீடுதான்.
தெருவில் நின்ற லட்சுமி, பாப்பா, அவரது அண்னன், அக்கா ஆகிய மூன்று குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றார். அவருக்கு இருந்தது ஒரே கதிதான். அவரது அண்ணன் திருச்சி பொன்மலையில் ஒரு பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு சென்றால் பிழைக்க எதாவது வழி கிடைக்கும் என்று நினைத்தார். கையிலோ காசு இல்லை. ரயிலில் போக காசு இருக்கவேண்டும், டிக்கெட் எடுக்கவேண்டும் என்பதுகூட அறியாதவராக இருந்தார் லஷ்மி. தன்னிடம் கம்மல் மட்டும்தான் இருக்கிறது, அதை வேண்டுமானால் கழற்றித் தருகிறேன் என்ற லஷ்மியைக் கண்டு மனமிறங்கிய டிக்கெட் பரிசோதகர், அவரைப் பயணம் செய்ய அனுமதித்துவிட்டார்.
பொன்மலை வந்து இறங்கிய லஷ்மிக்கு, ஏராளமான ப்ளாக்குகள் இருந்த ரயில்வே காலனியில் எங்கு சென்று அண்ணனைத் தேடுவது என்று தெரியவில்லை. உடன் சிறு குழந்தைகள் வேறு. அங்கு எதேச்சையாக ரயில் ஏற வந்த ஒரு தொழிலாளி அவரது அண்ணனின் நண்பர். அவர் இவர்களைப் பார்த்துவிட்டார். அவரே அவர்களை அழைத்துச் சென்று அண்ணனிடம் விட்டுவிட்டார்.
அண்ணனை நம்பி மட்டுமே இருந்தால், அவரும் ஒருவர் சம்பளத்தில் என்ன செய்யமுடியும் என்று யோசித்த லஷ்மி, செயலில் இறங்கினார். அவரே முறுக்கு, தட்டை, அப்பளம் என்று தயாரித்து விற்கத் தொடங்கினார். தானே சம்பாதித்துத் தனது செலவைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற லட்சியம் அவருக்கு இருந்தது. அது மட்டுமின்றித் தனது அண்ணனுக்குத் திருமணமும் செய்து வைத்து, பாப்பாவைப் படிக்கவும் வைத்தார் லஷ்மி.
எப்போதும் திரைப்படங்களில் பார்ப்பது போல் வந்த பெண் லஷ்மியைத் தனது கணவனின் சம்பாத்தியத்தையெல்லாம் எடுத்து சாப்பிட்டு விட்டதாக ஏச, மீண்டும் தனது மகளைக் கூட்டிக் கொண்டு தெருவில் இறங்கினார் லஷ்மி. எங்கு போவது, என்ன செய்வது?
அடுத்த வீட்டில் பெண்ணை விட்டுவிட்டு, பொன்மலை தொழிலாளர் சங்கத்துக்குச் சென்றார் அவர். அங்கு தொழிலாளர்களிடம் சென்று தன் நிலையை எடுத்துச் சொன்னார். அங்கு ஒரு தொழிலாளிக்குச் சொந்தமாக இருந்த பொன்மலை சங்கத்திடலில் ஒரு குடிசை போட்டுக் கொள்ளச் சொல்லித் தொழிலாளர்கள் அவரிடம் கூறினர். ஓரிரண்டு நாள் பட்டினி வேறு. ஆனால் தொழிலாளர்கள் உதவிக்கு வந்தனர். அவர்களில் கல்யாணசுந்தரம், பரமசிவம் என்ற தொழிலாளர்கள் லஷ்மியிடம் வந்து அவரை இட்லி, சாப்பாடு செய்து தருமாறும், சங்கத்துக்கு வரும் தொழிலாளர்களை அங்கு உண்ண தாம் அனுப்புவதாகவும் கூறினார். லஷ்மி மீண்டும் வேலையில் இறங்கினார். அவரது ‘ஓட்டலில்’ கூட்டம் நிரம்பியது. வயிற்றுக்கு சாப்பாடு கிடைத்தது.
பாப்பாவின் அண்ணன் பத்தாவது பெயிலானதும், பாப்பாவின் படிப்பும் தடைபட்டது. மூன்றாவது பாரமுடன் அவரது படிப்பு நின்று போனது. அடுத்த வருடம் அவரைப் பள்ளி செல்லுமாறு கூறினாலும், அவருடன் படித்தவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டதால், பாப்பா செல்ல விரும்பவில்லை. வீட்டிலேயே தன் அம்மாவுக்கு உதவி செய்வது என்று தங்கி விட்டார்.
அப்போதுதான் சங்கம் என்ற உணர்வு பாப்பாவுக்கு ஏற்பட்டது. சங்கம் அவருக்கு ஒரு தாய்வீடு போன்ற பாதுகாப்பைக் கொடுத்தது. தோழமை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுத்தது.
இவை பாப்பாவின் வார்த்தைகள். ‘அதனுடைய செயல்பாடு இதெல்லாம் பாத்த பிறகு… நமக்கொரு கஷ்டப்படக் கூடியவங்களுக்காக வேலை செய்யுறாங்க.. அதுக்கு அந்த யூனியன், அப்படின்னு பாக்கும்போது நம்முடைய வருமை, கஷ்டம் … அப்ப அவங்க தோழமை உணர்வோடு நமக்கு செஞ்ச உதவிகள், அப்பதான் எங்கம்மா சொன்னாங்க நீ ஆயிரம் இருந்தாலும்…ஒரு தடவ ஜொரமா இருக்கும்போது எங்கம்மா, உங்கள ரெண்டு மூணு பேத்தையும் கொண்டுபோய் காவிரி ஆத்துல தள்ளிட்டு நானும் விழுந்திர்றேன், அப்புறம் உங்களுக்கு சொந்தகாரங்க யாரும் செய்யமாட்டாங்க அப்படின்னு சொல்லிட்டு இருந்தவங்க… நான் இல்லாட்டி போனாலும் நீங்க வாழ முடியும். நமக்கு சங்கம் இருக்கு. கட்சி இருக்கு. அப்ப, அவங்க வந்து நிச்சயமாக பாதுகாப்பாங்க. அப்ப, நீங்க தைரியமா இருங்க. நமக்கு சொந்த பந்தம் பாசத்தவிட, சங்கம், கட்சி அந்த பாசந்தான் நமக்கு என்னைக்கும் இருக்கும்ன்னு சொன்னாங்க.’
லஷ்மியம்மா பள்ளிக்கூடம் போனதில்லை, படித்ததில்லை. அனுபவமே அவருக்குக் கற்றுக் கொடுத்தது. அவர் தனது அனுபவப் பாடத்தைத் தம் குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டார்.
பல சமயங்களில் இட்லி மாவு அரைக்கக்கூடக் காசு இருக்காது. லஷ்மியோ யாரிடமும் கை நீட்டாத வைராக்கியம் படைத்தவர். தமது தாயின் நிலையைக் கண்டு பலமுறை அழுதிருக்கிறார் பாப்பா. எப்படியோ சங்கத்தைச் சேர்ந்தவர்களிடம் கடன் வாங்கி இரவோடு இரவாக மாவரைத்து, காலையில் சட்னி, சாம்பாருடன் இட்லி தயாராகிவிடும். தொழிலாளிகளிடமோ காசு இருக்காது. ஆனால் பாப்பா விடமாட்டார். சத்தம் போட்டு வாங்கி விடுவார். அவருக்கு கல்யாணசுந்தரம், அனந்தன் நம்பியார் போன்ற தலைவர்கள் ஆதரவு.
ரயில்வே காரேஜில் செயல்பட்டு வந்த சங்கத்தில் நடக்கும் மாநாடுகளுக்கெல்லாம் சாப்பாடு போடுவார் லஷ்மி. தண்ணீர் வைப்பது பாப்பாவின் வேலை. அப்போது இருந்த தன் அம்மாவை, மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ உடன் ஒப்பிடுகிறார் பாப்பா. கல்வியறிவற்ற தாய் தன் கூடையில் ஜார் அரசுக்கெதிராகப் பிரசுரங்களைக் கொண்டு சென்றது போல் தன் அம்மா இருந்ததாக நினைவுகூர்ந்தார் பாப்பா.
தலைவர்கள் தலைமறைவாக இருந்த காலத்தில் கூரியராகவும் செயல்பட்டிருக்கிறார் லஷ்மி. போலீஸ் வீட்டுக்குள் வந்து லத்தியால் முதுகில் அடித்தபோதும், சற்றும் கலங்காமல் இருந்தவர், ஸ்டேஷன் போகும்போது கடிதத்தை வாயில் போட்டு விழுங்கி வட்டார். எதுவும் கிடைக்கவில்லை. கட்சியைப் பாதுகாப்பதில் தொண்டர்களின் உணர்வு இதுதான்.
எதுவும் அறியாமல் இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சி என்றால் என்ன என்பதை அறிந்திருந்த லஷ்மி, அதில் உறுப்பினராகிவிட்டார்.
பாலர் சங்கத்தில் பாப்பா இருந்தபோது, பொங்கலுக்கு வீடு வீடாக அரிசி வாங்கி அதைக் கட்சி நிதிக்காகக் கொடுப்பார். 1943இல் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது நிறைய வசூல் செய்து மருந்துகள், துணிமணிகள் என அனுப்பி வைத்தது பாலர் சங்கம். ஊர்க் குழந்தை அழுதால்கூடத் தாங்காத லஷ்மி, சமாதானப்படுத்தி, மிட்டய் கொடுத்து அனுப்பி வைப்பார். அவ்வளவு மனிதாபிமானம்.
பாப்பாவுக்கு சிறு வயதிலேயே நாடகம், பாட்டில் ஆர்வம் இருந்தது. சின்னச்சின்ன நாடகங்கள் எழுதி, அதை புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் ரயில்வே ஒர்க்கர் மைதானத்தில் நடத்துவார். அதில் தொழிலாளர்கள் படும் வேதனை இருக்கும். முதல் தேதியிலேயே வாங்கிய சம்பளம் காணாமல் போய்விடும். அதைப் பார்த்து சிலர் அழுது விடுவார்கள். அத்துடன் ரயில்வே நிர்வாகிகளின் ஊழலைக்கூட வெளிப்படுத்தி விடுவார். ரயில்வே நிர்வாகம் அவரது நாடகங்களுக்கு ஒருமுறை தடை விதித்தது என்றால் பாருங்கள்.
சிறு வயதிலேயே பாப்பாவுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. லஷ்மி அவரது அப்பாவுக்குப் படையல் போடும்போது கூட, அதைப் பார்த்து வேடிக்கை செய்வார் பாப்பா.
அனந்தன் நம்பியார் தலைமையில் குடும்ப வன்முறையைத் தடுக்க ஒரு குழு இருந்தது. அந்தப் பிரசனைகளைக் களையத் தானே போவேன் என்று அடம் பிடிப்பார் பாப்பா. நம்பியார் உனக்கு வயது போதாது என்றாலும் கேட்க மாட்டார். சில இடங்களில் அவர் சரி செய்தும் இருந்தார். சில சமயங்களில் பிரிவினையும் வரும். இருந்தாலும் தனது அனுபவக் குறைவால் பிரச்சனையை முழுதாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் பின்னால் பாப்பா ஒப்புக் கொண்டார்.
இந்த அனுபவங்களெல்லாம் பின்னால் அவரது அரசியல் வாழ்க்கைக்கும், மாதர் சங்க வாழ்க்கைக்கும் ஆதாரமாக இருந்தன என்று கூறலாம்.
(தொடரும்)