இந்தியாவெங்கும் வெடித்த சுதந்திரப் போராட்டம் பொன்மலையிலும் பரவி இருந்தது. பாப்பா உள்ளிட்ட சிறுவர், சிறுமிகள் ஊர்வலம் போனார்கள். அன்றைய மக்களின் கோஷமான காங்கிரஸ், லீக், கம்யூனிஸ்ட் ஐக்கியம் ஜிந்தாபாத் என்பதை வீதிகளின் முச்சந்தியில் பாப்பா எழுதி வைத்தார். அதனால் காவலர்களின் தடியடிக்கும் ஆளானார்.
அந்தக் காலத்தில்தான் மதுரையின் கே.பி.ஜானகியம்மா பொன்மலைக்கு ஊர் கடத்தப்பட்டிருந்தார். அங்கு ஒரு கண்டிப்பான டீச்சரைப் போல் இருந்த அம்மா குழந்தைகளுக்குப் பாடல்கள் கற்றுத் தந்தார். பாப்பாவும் அவரிடம் படித்தார். அப்போது பாப்பாவுக்குப் பன்னிரண்டு வயதுதான்.
நாடெங்கும் ஒத்துழையாமை இயக்கம் நடந்தபோது பொன்மலையிலும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, வேனில் அழைத்துச் செல்லப்படும்போது, பாப்பா தன்னையும் கைது செய்யச்சொல்லிப் பின்னாலேயே ஓடினார். அவரது தொல்லை தாளாமல் அவரையும் வேனில் தூக்கிப் போட்டனர். ஆனால் நீதிபதி சிறைக்கு அனுப்ப மறுத்து விட்டார். அது பாப்பாவுக்கு ஏமாற்றமளித்தது.
1945இல் கைத்தறித் தொழிலாளியான சிங்காரவேலுவின் வீட்டில் பறந்த செங்கொடியை இறக்குமாறு காங்கிரஸ் குண்டர்கள் மிரட்டியபோது, அவர் மறுத்ததால் அடித்துக் கொல்லப்பட்டார். பெரும் வேலைநிறுத்தம் வெடித்தது. தடை செய்யப்பட்ட ஊர்வலத்தில் காவலர்கள் கடும் தாக்குதல் தொடுத்துப் பலரை காயப்படுத்தினர். சிங்காரவேலுவின் தியாகமும், தொழிலாளர்களின் நெஞ்சுரமும் இளம் வயதுப் பாப்பாவின் மனதில் நங்கூரம் பாய்ச்சி நின்றன.
பொன்மலையில் தொழிலாளர்கள் 1946இல் பெரும் வேலைநிறுத்தம் நடத்தினர். அதில் அவர்கள் வீட்டுப் பெண்களும் பங்கேற்றனர். கருங்காலிகளை வீட்டுப் பெண்களே கைவிட்டனர். மாதர் சங்கம் தன் திறமையைக் காட்டியது.
ஆத்திரமடைந்த ரயில்வே நிர்வாகம் போலிசைக் கொண்டு தாக்குதலில் இறங்கியது. இங்கும் ஒரு சிறு ஜாலியன் வாலாபாக் நிகழ்ந்தது. காம்பவுண்ட் மேலிருந்து காவலர்கள் சுடவும், அதில் ஐந்து தொழிலாளர்கள் குண்டடிப்பட்டு உயிரிழந்தனர். இதை நேரில் கண்ட பாப்பா மனம் வெதும்பி அழுதார். போலீசை எதிர்கொள்ளப் பெண்கள் சுடுநீருடனும், மிளகாய்ப்பொடியுடனும் தயாராக இருந்தனர். எனினும் ஓரிரு நாளில் நிலைமை சீரடைந்தது. இவ்வாறு தட்சிண் ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் சரித்திரம் ரத்தத்தால் எழுதப்பட்டது.
1945இல் பாப்பா மிகவும் விரும்பிய ஒன்று கைகூடியது. அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. எப்போது எனக்கு சிவப்புக் கார்டு கொடுப்பீர்கள் என்று அவர் தலைவர்களை அரித்துக் கொண்டே இருந்தார். அது கிடைத்ததும் மிகவும் மகிழ்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் உருக்குப் போன்ற கட்டுப்பாட்டுக்குத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டார்.
எனினும் அவர் வெளியில் சென்று கட்சிப் பணிகளில் ஈடுபடுவதை ஆணாதிக்கச் சமுதாயம் விரும்பவில்லை. அவரை அவமதிக்கத் தொடங்கியது. ஆனால் லஷ்மியம்மா அவருக்கு ஆறுதல் கூறி தைரியப்படுத்தினார். அதிலிருந்து ஆணாதிக்கச் சமுதாயத்தை ஒழித்து மார்க்சிய-லெனினியப் பாதையில் பெண்ணுரிமைக்கான போராட்டத்தை உயர்த்திப் பிடிக்க அவர் உறுதி பூண்டார்.
1947இல் இந்தியா விடுதலை பெற்றது. 1948இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டுத் தலைவர்கள் வேட்டையாடப்பட்டனர். இரவு பன்னிரண்டு மணிக்கு பாப்பா வீட்டுக்குள் போலீஸ் நுழைந்தது. தைரியாமாக எதிர்கொண்ட பாப்பா அவர்களை இழுத்தடித்து, கேலி செய்து நோகடித்தார். வீட்டில் எதுவும் கிடைக்காத போலீஸ் அவசர அவசரமாக நடையைக் கட்டியது.
இந்நிலையில் சென்னையில் தலைமறைவு மையங்களை அமைத்துச் செயல்பட கட்சி முடிவெடுத்தது. லஷ்மியம்மாவையும், பாப்பாவையும் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பி.ராமமூர்த்தி அப்பா போலவும், லஷ்மி அம்மா போலவும், வந்து சென்ற தோழர்கள் பையன்கள் போலவும், பாப்பா பெண் போலவும் செயல்படத் தொடங்கினர். பாப்பாதான் கடைகளுக்குச் சென்று பொருள் வாங்கி வரும் வேலை செய்வார். சர்க்குலர்கள் பிரதி எடுத்து மாவட்டக் குழுக்களுக்கு அனுப்புவது அவர் வேலை. கடினமான வேலையை சிரமப்பட்டுக் கற்றுக் கொண்டார். அடித்தல் திருத்தல் இல்லாமல் அழகாக எழுதுவார் பாப்பா. லஷ்மி அம்மா தோழர்களை அன்புடன் பார்த்துக் கொண்டார். பி.ராமமூர்த்தி பாப்பாவுக்குப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்து குருவாகவே திகழ்ந்தார்.
இந்த சமயத்தில்தான் படித்துக் கொண்டிருந்த உமாநாத் அதை விட்டுவிட்டு கட்சிப் பணிக்காகச் சென்னைக்கு வந்து சேர்ந்தார். பாப்பாவை அப்போதுதான் சந்தித்த உமாநாத், காதலில் விழுந்தார். பாப்பாவும் அவரை விரும்பினார். கட்சியில் இருப்பவர்கள் ஒன்று சேர்ந்தால் எதிர்காலத்தில் செயல்படுவது எளிதாக இருக்கும் என்றும் இருவரும் நினைத்தனர். இருவரின் திருமணத்தை தலைமறைவு வாழ்க்கை முடிந்ததும் நடத்தலாம் என்று தோழர் கல்யாணசுந்தரம் முடிவெடுத்தார்.
1950இல் திடீரென தலைமறைவு மையம் போலீசால் முற்றுகையிடப்பட்டது. தோழர் உமாநாத் சுவர் ஏறிக் குதித்துத் தப்பிக்க முயல, காலில் அடிபட்டுப் பிடிபட்டார். உமாநாத்தும் தோழர் பாண்டியனும் கடும் தாக்குதலுக்கு ஆளாயினர். லஷ்மி துரிதமாகச் செயல்பட்டு பிரசுரங்களைத் தீயில் இட்டுப் பொசுக்கிவிட்டார். மீதத்தை விழுங்கிவிட்டார். பி.ஆர். எங்கிருக்கிறார் என்று அவர்களை சித்ரவதை செய்தது போலீஸ். மிரட்டலுக்கு பாப்பா அசைந்து கொடுக்கவில்லை. அனைவரும் சைதாப்பேட்டை சப் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
மெதுவாக லஷ்மி, பாப்பாவிடம் எதையும் சொல்லவில்லையே எனக் கேட்க, பாப்பாவுக்கு அழுகை வந்துவிட்டது. அவர் எதுவும் சொல்லவில்லை என்பது தெரிந்ததும்தான் லஷ்மி சமாதானமானார்.
ஜெயிலில் அவர்கள்மீது கடும் தாக்குதல் நடந்தது. மலம் கழித்த சட்டிகளை எடுத்துக் கொண்டு செல்ல நிர்ப்பந்தித்தார்கள். பாப்பா மறுத்து ஒருமுறை சட்டியை அவர்கள் மீதே தூக்கியெறிந்தார். விளைவு கடும் தாக்குதல்.
அவர்கள் பயனெட்டால் பாப்பாவின் நீண்ட முடியில் குத்த, முடி துண்டானது. பாப்பாவை தரையில் தரதரவென இழுத்து வர ரத்தம் பிசுபிசுத்தது. எந்த மருத்துவ உதவியும் இல்லை. கடும் சிரமப்பட்டார் பாப்பா. கழிப்பறைக்குக் கூட கைவிலங்கோடுதான் அழைத்துச் சென்றனர். கம்யூனிஸ்டுகள்மீது அவ்வளவு பயம்.
இத்தகைய சித்ரவதைகளை எதிர்த்து உண்ணாவிரதத்தைத் தொடங்கினர் கம்யூனிஸ்டுகள். அவர்களை வலுக்கட்டாயமாக சாப்பிட வைக்க முயன்ற போலீஸ் தோல்வியுற்றது. இரண்டு அறை தாண்டியிருந்த லஷ்மியம்மாவின் உடல்நிலை குன்றத் தொடங்கியது. பாப்பாவின் காதுகளும் அடைத்துக் கொண்டன. அவர்களது உறுதி கண்டு போலீசே நடுங்கியது.
22 நாட்களை உண்ணாவிரதம் கடந்தபோது, லஷ்மியம்மா வீரமரணம் எய்தினார். அவசரமாக ஓடிக்கொண்டிருந்த பெண் வார்டர் பாப்பாவிடம், ‘உங்க அம்மா இறந்துட்டாங்க’ என்றார். பாப்பா நிலைகுலைந்து போனார். கடைசியாக தன் அம்மாவின் உடலைப் பார்க்கத் துடித்தார் பாப்பா. கல்நெஞ்சக்காரர்களோ அவரிடம், ‘நீ கட்சியிலிருந்து விலகுவதாக எழுதிக் கொடுத்தால் அவரது உடலைப் பார்க்கலாம். இதுதான் அரசின் ஆணை’ என்றார் வார்டர். பாப்பா எரிமலையாய்க் குமுறினார். பாப்பாவின் முன் லட்சியம் பெரிதா இல்லை, பாசம் பெரிதா என்ற பெரும் கேள்வி எழுந்தது.
பாப்பா முடிவெடுத்தார். ‘போனவர் போய் விட்டார். நான் என் லட்சியத்தைக் கைவிட மாட்டேன்’ என்றார். அவரது கண்முன்னே ஒரு மூட்டையாக அவரது அம்மாவின் உடலைக் கொண்டு சென்றனர் பாவிகள். கதறினார் பாப்பா. கடைசிவரை அவர்கள் அம்மாவின் உடலை என்ன செய்தார்கள் என்பது அவருக்குத் தெரியாது. அவரது வாழ்க்கையில் ஒரு பெரும் வடுவாகவே அது நிலைத்து விட்டது. செங்கொடி போர்த்தித் தன் உடலை அடக்கம் செய்ய வேண்டுமென்ற லஷ்மியம்மாவின் விருப்பமும் நிறைவேறவில்லை.
நாட்டிலேயே சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த முதல் பெண்மணி லஷ்மியம்மா என்ற பெண்மணிதான்.
உமாநாத் தன் காலில் பட்ட காயத்துக்குக் போட்டிருந்த பேண்டேஜ் துணியை கிழித்துத் தன் விரலிலிருந்து ரத்தத்தை எடுத்து அதில் ஆறுதல் கடிதம் எழுதிப் பாப்பாவுக்கு அனுப்பினார். ‘அம்மாவின் வீரமரணம் எங்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது!”
பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியையும் தொழிற்சங்கத்தையும் தடை செய்தது தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அனைவரும் விடுதலையாயினர்.
தலைமறைவாக இருந்த தோழர் ஏ. பாலசுப்ரமணியம் பாப்பாவை மாறுவேடத்தில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவரது மனத்திடத்தைப் பாராட்டினார். தொழிற்சங்கப் பணியில் கடும் நிதி சிரமத்துக்கிடையில் இறங்கினார் பாப்பா. பொன்மலையில் வேலையைத் தொடர கட்சி பணித்தது.
தனியாக பொன்மலை திரும்பிய பாப்பா வேதனையுடன் வந்தார். அவரது வீட்டை போலீஸ் சூரையாடியிருந்தது. தொழிலாளர்கள் அவரைப் பாசத்துடன் வரவேற்றனர். சங்கத்தின் தொழிலரசு பத்திரிகையின் உதவி ஆசிரியராக சிறு வயதிலேயே செயல்படத் தொடங்கினார் பாப்பா. அது ரயில்வே நிர்வாகத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது.
பாப்பா – உமாநாத் திருமணத்தை பொன்மலையில் நடத்தத் திட்டமிட்டது கட்சி. சிறுவயதிலிருந்தே பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர் பாப்பா. அவரை அழைக்க பாப்பா சென்றார். பெரியார் அவரிடம் யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று கேட்டது மட்டுமின்றி அவர் எந்த சாதி என்று கேட்டார். கோபமடைந்த பாப்பா பதிலளிக்கவில்லை. மீண்டும் அவர் கேட்க, வேறு வழியின்றி சாதியைச் சொன்னார். பெரியார், ‘போயும் போயும் ஒரு பாப்பானையா கல்யாணம் செய்து கொள்வது, இதை நீ செய்யலாமா?’ என்று கேட்டார்.
தன் கோபத்தை அடக்கிக் கொண்ட பாப்பா அவரிடம் தெளிவாகக் கூறினார். ‘அவர் ஒரு கம்யூனிஸ்ட். அய்யா கவலைப்பட வேண்டாம். ‘தமிழச்சிக்கு’ எந்த ஆபத்தும் வராது. திருமணத்துக்கு அவசியம் வர வேண்டும்’ என்றார்.
பெரியார் சங்கடப்பட்டுப் போனார். ‘கல்யாணத்துக்கு அழைக்க வந்த உன்னைப் புண்படுத்திவிட்டேன். வருத்தப்படாதே அம்மா. பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர் என்பதால் உமாநாத் மீது எந்த வெறுப்பும் கிடையாது. நிச்சயம் வருகிறேன்’ என்றார்.
பெண் வீட்டின் சார்பில் கலந்து கொள்வதாகக் கூறி வாழ்த்துரை வழங்கினார். அவரது பெருந்தன்மையை பாப்பா நேரில் கண்டார். புகழ்பெற்ற தொழிற்சங்கத் தலைவர் சர்க்கரைச் செட்டியார் முன் திருமணம் நடைபெற்றது.
சாதி இல்லை, சகுனம் இல்லை, தாலி இல்லை, சடங்குகள் இல்லை, சாதகம் இல்லை, ஏன் கல்யாணச் சாப்பாடே இல்லை. முழுமையான சீர்திருத்தத் திருமணம். 1952இலேயே சாதித்துக் காட்டினர் பாப்பாவும், உமாநாத்தும்.
(தொடரும்)