சென்னையை வந்தடைந்த உமாநாத்துக்குக் காத்திருந்தது தலைமறைவுப் பணி! சென்னையில் பெரம்பூரிலும் தி.நகரிலும் இரண்டு தலைமறைவு மையங்கள். உமாநாத்துக்குப் பிரசுரங்களை வெளியில் எடுத்துக் கொண்டு போய் சைக்ளோஸ்டைல் தயார் செய்யும் பணி. மிக இயல்பான ஒன்றாகத் தோன்றினாலும் அன்றைய காலத்தில் மிகவும் சாகசமான பணி அது.
எப்படியோ மோப்பம் பிடித்த போலீஸ் மையத்தை முற்றுகையிட்டுப் பிடித்துவிட்டது. உமாநாத்தும் கைது செய்யப்பட்டார். பி.ஆர்., உமாநாத் உள்ளிட்ட ஏழு பேர் மீது சென்னை சதிவழக்குத் தொடுக்கப்பட்டது. அதற்குத் தூக்குத் தண்டனைகூட வழங்க முடியும். சிறையில் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே இருந்த காங்கிரஸ்காரர்களுக்கு பி.ஆரும், உமாநாத்தும் கம்யூனிசக் கல்வி புகட்டத் தொடங்கினர்.
வழக்கு நடந்தபோது ஏழு பேரும் அதைப் பயன்படுத்திக் கட்சிப் பிரசாரமே செய்துவிட்டனர். எனினும் அனைவரும் தண்டிக்கப்பட்டனர். உமாநாத்துக்கு இரண்டரை ஆண்டு சிறை.
அவர்கள் முதலில் ஆந்திர மாநிலம் அலிப்பூர் சிறையிலும் பிறகு அனைத்து கம்யூனிஸ்டுகளும் பெல்லாரி சிறையிலும் அடைக்கப்பட்டனர். கடுமையான உழைப்பு, அரசியல் விவாதம் என நாட்கள் சென்றன. பின்னர் அங்கிருந்த உமாநாத்தும், கேரள தோழர்களுடன் கண்ணூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் கம்யூனிஸ்டுகள் விடுதலை செய்யப்பட்டனர். வெளியே வந்த உமாநாத் கட்சிப் பணியைத் தொடங்கிய தமிழ்நாட்டிலேயே தனது பணியைத் தொடர விருப்பத்தைத் தெரிவிக்க, கட்சி அதை ஏற்றது.
ஒருபுறம் வெள்ளையனே வெளியேறு என்ற கோஷத்தில் நாடு முழங்க, கம்யூனிஸ்டுகளோ பாசிச எதிர்ப்புப் போருக்கு ஆதரவு என்ற நிலையை எடுத்ததால் கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த உணர்வுக்கிடையே தமது நிலையை எடுத்துரைப்பதில் உமாநாத் கடுமையாகப் பங்காற்றினார்.
ஒரு கட்டத்தில் மனம் உடைந்து சோர்ந்து போனார். எனவே கட்சி அவரைத் தொழிற்சங்கப் பணியில் இறக்க முடிவெடுத்து கோவைக்கு அனுப்பியது. பணம் கிடையாது, அரைப் பட்டினி, படுக்கப் பாய் கூடப் பிரச்சனை. மத்திய தர ஊழியர்கள் வரும்போது அவருக்கு மகிழ்ச்சி. வடையும் டீயும் வாங்கித் தருவார்கள். தொழிலாளர்களோ தம் பையில் இருக்கும் காசைக் கூடத் துடைத்து அவருக்குப் பசியாற்ற முனைவார்கள். இந்த வர்க்கப் பாசம் உமாநாத்தைப் புல்லரிக்கச் செய்தது.
தோழர்கள் கண்ணாகுட்டி, கே.கிருஷ்ணன் போன்றவர்கள் ஆலை நேரம் முடியும்போது உமாநாத்துடன் சென்று சாதுரியமாகப் பேசி தொழிலாளர்களைத் திரட்ட, உமாநாத் அவர்க்ளிடையே தொழிற்சங்கம் என்றால் என்ன என்று விளக்குவார். தமிழ் அறியாத உமாநாத் சுயகல்வி மூலம் அதைத் தொழிலாளர்களிடமே கற்றார். அவர்களது கடுமையான முயற்சியில் கோவையில் பல தொழிற்சங்கங்கள் உருவாயின. இவ்வாறாக உமாநாத் கோவையில் ‘வர்க்க ஞானஸ்நானம்’ பெற்றார்.
ஒரு தொழிற்சாலையில் சங்கம் அமைக்கப்பட்டால் அங்கு சென்று அங்கு இயந்திரங்கள் செயல்படும் முறை, உற்பத்தியின் அளவு, நிறுவனத்தின் வரவு, செலவு, ஸ்டாண்டிங் ஆர்டர் உட்பட அனைத்தையும் அறிந்து கொள்வார். எனவே பேச்சுவார்த்தைக்குச் செல்லும்போது, நிர்வாகத்தால் அவரது கேள்விகளுக்கு பதில் சொல்வது கடினமாக இருக்கும். எனவே நிர்வாகங்கள் அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தன. நீதிமன்றங்களுக்குக்கூட அவர் சென்று வாதாடுவதுண்டு.
மேலும் தொழிலாளர்களிடையே மோதல் போக்குகளில் நேரடியாகத் தலையிடுவார். வன்முறை நிகழாத வண்ணம் தம்மையே முன்னிறுத்திக் கொண்டு தடுப்பார். இவையெல்லாம் அவரது உருக்குப் போன்ற உறுதிக்கு உதாரணங்கள். அதேபோல் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் மீது நிர்வாகங்கள் ரவுடிகளை ஏவினால் அதையும் எதிர்த்து நிற்பார்.
இங்கு ஓர் ஆச்சரியமூட்டும் பதிவு. கம்யூனிஸ்டுகள் யார் என்பதை இங்கு காண முடியும். கோவையில் தொழிற்சங்கப் பணியில் இருந்தபோது ஒருநாள் அங்கு நான்கு வெள்ளைக்காரச் சிப்பாய்கள் மிடுக்காக நின்று தலைவர்களுக்கு சல்யூட் அடித்தனர். திகைத்துப் போன உமாநாத் உள்ளிட்ட தலைவர்கள் நாகரிகம் கருதி அவர்களுடன் கைகுலுக்கினர். அவர்கள் தம்மைக் கம்யூனிஸ்டுகள் என்று அறிமுகம் செய்து கொண்டு அரசியல் விவாதித்தனர். பின்னர் அடிக்கடி அங்கு ரகசியமாக வந்து சென்றனர். பிரிட்டிஷ் ராணுவத்துக்குத் தெரிந்தால் அவர்கள் கதி அதோகதி. எனினும் அவர்கள் தளரவில்லை. ஒருநாள் டவுன்ஹாலில் பி.ஆர். பேசிய ஒரு கூட்டத்தில் அவர்கள் மேலே ஏறிப் பேச விருப்பம் தெரிவித்தனர். அனுமதி கிடைத்ததும் இந்தியவை பிரிட்டிஷ் ஒடுக்குவதை எதிர்த்தும், இந்திய விடுதலைக்கு ஆதரவாகவும் ஆவேசமாக உரையாற்றினர். முகாமுக்குத் திரும்பிய பிறகு அவர்களுக்குக் கடும் தண்டனை கிடைத்தது என்பதை விளக்க வேண்டியதில்லை.
கோவையில் அச்சமயம் பிளேக் நோய் பரவியது. எலிகளை ஒழிக்கும் பணியில் மக்களுடன், தொழிலாளர்களுடன் உமாநாத்தும் ரமணியும் பிற தோழர்களும் நேரடியாகக் களமிறங்கினர். இது மக்களுக்கு உத்வேகமூட்டியது. ஒரு தலைவன் என்றால் மக்களுடன் ஒன்றிவிட வேண்டுமென்று நிரூபித்துக் காட்டினர் உமாநாத் உள்ளிட்ட தலைவர்கள்.
ஸ்டேன்ஸ் மில் போராட்டம். ஜாக்கிரதையாக இருக்குமாறு உமாநாத்தும் ரமணியும் எச்சரித்தும், தொழிலாளர்களுக்கும் போலீசுக்கும் மோதல் மூண்டுவிட்டது. போலீஸ் தலைவர்களைத் தேடத் தொடங்க, உமாநாத் தப்பித்து ஓடினார். ஓரிடத்தில் மாட்டிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டபோது, பர்தா அணிந்த ஒரு முஸ்லிம் பெண் அவரை விரைவாகக் கையைப் பிடித்து இழுத்துத் தன் வீட்டுக்குள் தள்ளிவிட்டார். வெளியே போலீஸ் வந்து கேட்டபோது யாரும் வரவில்லை என்று கூறிவிட்டார். உமாநாத்திடம், ‘நீங்கள் எங்கள் தலைவர். உங்களைக் காப்பது எங்கள் கடமை’ என்றார். வர்க்க உணர்வுக்கு முன் பிரிவினைகள் வேலை செய்யாது என்பதற்கு இது உதாரணம்.
எனினும் இறுதியில் உமாநாத் மாட்டிக்கொண்டார். தலைவர்கள் உள்ளே இருந்ததால் வெளியே தொழிலாளர்கள்மீது தாக்குதல் கடுமையாக அதிகரித்தது. மற்ற தோழர்களின் உதவியோடு கவனமாகவும், தந்திரமாகவும் திட்டமிட்டு, உமாநாத்தும், தோழர் கண்ணாகுட்டியும் தப்பிவிட்டனர்.
தப்பிய உமாநாத் தன் தாயைப் பார்க்கும் ஆவலோடு தம் ஊரை நோக்கி நடந்தே சென்றார். உச்சி முகர்ந்த தாய் அவருக்கு உணவளித்து அவரை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். தலைமறைவு மையத்துக்குத் திரும்பினார் உமாநாத். அடிக்கடி கடிதம் எழுதித் தன் மருமகன் மூலமாகக் கொடுத்து அனுப்புவது அவர் வழக்கம். ஒருநாள் கடிதத்துடன் சென்றபோது மருமகன் சொன்னார், ‘மாமா, பாட்டி நம்மைவிட்டுச் சென்று விட்டாள்.’ உமாநாத்திடம் அழுவதற்கும் கண்ணீர் இல்லை.
கொங்கணியைத் தன் தாய்மொழியாகக் கொண்ட உமாநாத்துக்குத் தமிழ் சிக்கலாகவே இருந்தது. அவருகுக் கைகொடுத்தவர் தோழர் பூபதி. அதேபோல் அவரைத் தொழிலாளர் தலைவனாகப் புடம் போட்டு உருவாக்கியவர் தோழர் ரமணி.
உமாநாத்மீது கொலை வழக்கு உட்படப் பல வழக்குகள் இருந்ததால் அவரை பம்பாயில் அகில இந்திய மையத்துக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. அங்கு கட்சியின் ஆங்கில ஏட்டில் அவருக்கு வேலை கொடுக்கப்பட்டது. ஜோஷி அணியும், பி.டி.ரணதிவே அணியும் எனக் கட்சி பிளவுபட்டு நின்ற காலம் அது. இந்நிலையில் கல்கத்தாவில் கூடிய மாநாடு தெலங்கானா புரட்சி வழியில் செல்ல முடிவெடுத்துவிட்டது. கடுமையான தாக்குதல் கட்சிமீது காங்கிரஸ் ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்போது உமாநாத் தமிழ்நாட்டில் தேவைப்பட்டதால், தமிழ்நாடு கட்சி அவரை மீண்டும் வரவழைத்துக் கொண்டது.
முதலில் கோவைக்கும், அங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அங்கிருந்து திருச்சிக்கும் சென்றார். கல்யாணசுந்தரத்துக்குத் துணையாகச் செயல்பட்டார் உமாநாத். இங்கும் தலைமறைவு வாழ்க்கைதான். நாட்டு நிலைமை மோசமாகிவிட்டதால் வேலைநிறுத்தங்களுக்குத் தயாராகுமாறு கட்சி அறைகூவல் விடுக்க, உமாநாத் பணியில் இறங்கினார். அதன் ஒரு பகுதியாகப் பொன்மலையில் நடந்த தோழர் அனந்தன் நம்பியார் தலைமையிலான ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் கடும் தாக்குதல் தொடுக்கப்பட நான்கு தோழர்கள் தியாகிகளாயினர். நம்பியார் உட்பட50 பேர் கைது.
உமாநாத்தும் கல்யாணசுந்தரமும் திட்டமிட்டுத் தொழிலாளர் பேரணியில் இறுதியில் பொன்மலை போலீஸ் ஸ்டேஷன்மீது குண்டு வீச வைத்துவிட்டனர். போலீஸ் தீவீர வேட்டையில் இறங்க, தப்பித்தனர் உமாநாத்தும் கல்யாணசுந்தரமும். அங்கு தோழர் பெரியசாமி என்பவர் போலீஸ் தாக்குதலையும் தாங்கிக் கொண்டு தலைவர்களைத் தப்புவித்தார்.
இடையில் சென்னை மையத்துக்கு வருமாறு உமாநாத்துக்குக் கட்சி கட்டளையிட, பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு மாறுவேடத்தில் தப்பிக் கஷ்டப்பட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார். பல்லாவரம் தலைமறைவு மையத்துக்கு அனுப்பப்பட்டார்.
அங்குதான் முதன்முதலில் பாப்பாவை உமாநாத் சந்தித்தார். இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர் என்றாலும் சந்தித்ததில்லை. பகல் முழுவதும் தயாரிப்புப் பணி. இரவில் தயாரித்ததை வெளியில் அனுப்புவது. மிகவும் சாகசமான வேலை. உமாநாத்துக்காகப் பதைபதைப்புடன் காத்திருப்பார் அன்னை லட்சுமி. உமாநாத்துக்குத் தமிழில் இருந்த குறைந்த அறிவால் முழுதும் பிழையாக இருக்கும். திருத்தும் வேலை பாப்பாவுக்கு. இந்தப் பணியின்போது கேள்விகளால் உமாநாத்தைத் துளைத்தெடுப்பார் பாப்பா. இப்படியே அவர்களது நெருக்கம் அதிகமானது. இருவருக்குமிடையில் காதல் மலரத் தொடங்கியது. உமாநாத் பாப்பாவைப் போன்ற பெண்ணையே திருமணம் செய்வது என்று கற்பனை செய்திருந்தார். அது நனவாகத் தொடங்கியது. ‘காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு’தான் அடுத்தது. ‘சம்மதம்’ என்று பாப்பாவிடமிருந்து பதில்.
அதற்கடுத்தநாள் மையத்தை போலீஸ் படை வளைத்துவிட்டது. மாடியிலிருந்து குதித்துத் தப்ப முயன்றார் உமாநாத். கால் அடிபட்டு வீங்கிவிட்டது, நகர முடியவில்லை. கடுமையாகத் தாக்கி இழுத்துக் கொண்டு போய் பல்லாவரம் லாக்கப்பில் தள்ளியது. உடனிருந்த அன்னை லட்சுமி, பாப்பா, சுப்ரமணியம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அந்த வீட்டை அவர்களுக்குக் கொடுத்திருந்த ஏ.ஜி.அலுவலக ஊழியர் ஆளவந்தாரும் வீடு திரும்பியதும் கைதானார். இரவில் திரும்பிய கல்யாணசுந்தரமும் கைதானார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ரெய்டில் கிடைத்த அவர்களது காதல் கடிதமும் நீதிமன்ற சதி வழக்கில் ஆவணமாகச் சேர்க்கப்பட்டது. இவர்கள் இருவரும் அடுத்த ஐம்பதாண்டுகளுக்கும் மேல் தமிழ்நாட்டின் அரசியலைக் கலக்கப் போகிறார்கள் என்று அன்றே காங்கிரஸ் அரசுக்குத் தெரிந்திருந்தது போல!
இந்தச் சிறையில் அடைக்கப்படும்போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அவரை மத்திய சிறையில் அடைக்க போலீஸ் முற்பட அதை எதிர்த்துக் கூச்சலிட்டார் அவர். தம்மையும் பிற தோழர்களுடன் சைதாப்பேட்டை சிறையில்தான் அடைக்க வேண்டுமென்று கத்தினார். வேறு வழியின்றி அவரையும் அங்கு கொண்டு சென்றது போலீஸ்.
மலச்சட்டியை எடுக்க வேண்டுமென்பது போன்ற கொடுமையான சித்ரவதைகளை எதிர்த்துத் தோழர்கள் கடும் போராட்டத்தில் இறங்கினர். இக்கொடுமையை எதிர்த்துத் தோழர்கள் உண்ணாவிரதத்தில் இறங்கினர். சில நாட்களுக்குப் பின் அவர்களை மத்திய சிறைக்குக் கொண்டு சென்றாலும் தனித்தனிக் கொட்டடிகளில் அடைத்தனர். பாப்பாவும் அன்னை லட்சுமியும் கூடப் பெண்கள் பிரிவில் தனித்தனிக் கொட்டடிகளில் இருந்தனர்.
அங்குதான் அன்னை லட்சுமி உண்ணாவிரதம் தொடங்கிய 24ஆவது நாள் உயிர்துறந்தார். சாதாரணத் சமையல் தொழிலாளியாகத் தொடங்கி, கம்யூனிஸ்டாக மாறி, செங்கதிராய் மறைந்தார் அன்னை லட்சுமி.
(தொடரும்)