தோழர் மக்கினேனி பசவ புன்னையா அடிப்படையில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். வீரஞ்செறிந்த தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் தளபதிகளில் ஒருவர். இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முக்கியமான கோட்பாட்டாளர்களில் ஒருவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய ‘நவரத்னங்கள்’ என்று போற்றப்பட்ட தலைவர்களில் ஒருவர்.
பசவபுன்னையா 1914ஆம் வருடம் குண்டூர் மாவட்டம், ராப்பள்ளி அருகே துர்பு பாலம் என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது குடும்பம் வசதிமிக்க விவசாயக் குடும்பம். அவரது ஊரான குண்டூரில் நீண்ட காலத்துக்கு முன்பே ஜமீந்தாரி முறை ஒழிக்கப்பட்டு ரயத்துவாரி முறை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. எனவே குண்டூர் மாவட்டம் முழுவதிலுமே ஒரு பெரிய ஜமீந்தார்கூட இல்லை என்பது தனிச்சிறப்பு.
அவரது மாவட்டம் சுதந்திரப் போரில் மிகத் தீவீரமாகப் பங்கேற்ற ஒன்று. 1921ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஆந்திரம் முழுவதிலிருந்து 3000 பேர் சிறையேகினர் என்றால் அதில் 1500 பேர் குண்டூரைச் சேர்ந்தவர்கள். இந்தச் சூழலில்தான் பசவபுன்னையா பிறந்தார்.
சிறுவனாக இருந்த பசவபுன்னையா இந்தப் போராட்டங்களால் கவரப்பட்டார். பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு 15 வயது. கிராமங்களில் நடந்த மது ஒழிப்பு இயக்கம், பகத்சிங் மரணம், காந்திய இயக்கத்தில் ஏற்பட்ட பல வளர்ச்சிப் போக்குக்களெல்லாம் அவரை மிகவும் ஈர்த்தன.
பசவபுன்னையா தமது சொந்த தாலுகாவிலேயே மெட்ரிகுலேஷன் வரை பயின்றார். பிறகு இண்டர்மீடியட் படிப்பை மச்சிலிப்பட்டினம் நோபிள் கல்லூரியிலும், பட்டப்படிப்பை ஆந்திர கிருத்தவக் கல்லூரியிலும் பயின்றார்.
அவர் மாணவராக இருந்த காலத்தில் சில உள்ளூர் மாணவர் சங்கங்கள் இருந்தன என்றாலும் பெரிதாகச் செயல்பாடு எதுவுமில்லை. அப்போதுதான் அகில இந்திய அளவில் மாணவர் சங்கம் அமைக்கப்பட்டு அது ஆந்திராவுக்கும் வந்தது. 1937 மே மாதத்தில் குண்டூர் மாவட்டம் கோத்தப்பட்டினத்தில் பசவபுன்னையா உள்ளிட்ட மாணவர்கள் ஓர் அரசியல் பள்ளியை நடத்தினர். எனினும், ஆளுநரின் தலையீட்டால் அது 15 நாட்களுக்குப் பின் தடை செய்யப்பட்டது. எனவே மாணவர் சம்மேளனத்தை அமைப்பது என்ற முடிவை மாணவர்கள் எடுத்து பொறுப்பை பசவபுன்னையாவிடம் ஒப்படைத்தனர்.
ஒரு பெரிய மாணவர் மாநாடும் கூட்டப்பட்டது. 1934இலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகி இருந்ததால் இதெல்லாம் சாத்தியப்பட்டது எனத் தமது நினைவலைகளில் பசவபுன்னையா குறிப்பிடுகிறார். இந்த மாநாட்டில் ஏராளமான மாணவ, மாணவியர் அழைக்கப்பட்டனர். சோஷலிஸ்டுகள் முதல் கம்யூனிஸ்டுகள் வரை அங்கு உரையாற்றினர்.
1934இல் நடைபெற்ற ஒரு காங்கிரஸ் சோஷலிஸ்ட் மாநாட்டில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளரான மசானி பேசினார். அங்கிருந்த பசவபுன்னையா அவரை எதிர்த்துக் கேள்வியெழுப்பினார். அந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்த இ.எம்.எஸ். அவரது கேள்விகளால் ஈர்க்கப்பட்டார். அவர் கம்யூனிஸ்ட் ஆவதற்கு அதுவும் ஒரு காரணமானது.
அக்காலகட்டத்தில்தான் அவருக்கு சுந்தரய்யாவுடன் தொடர்பு ஏற்பட்டது. சுந்தரய்யா ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என்பதுடன் ஆந்திரத்தில் கட்சியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் பசவபுன்னையா நிகழ்ந்திய உரையாடல்கள் அவர்மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
குண்டூரில் அவர் தலைமையில் ஒரு அரசு அலுவலகம் முன்பாக நடந்த மாணவர் மறியல் போராட்டத்தில் அவர் அமைப்பாளர் என்பதால் அவர் மறியலில் கலந்து கொள்ளவில்லை. அப்போது போலீஸ் மூர்க்கத்தனமாக மாணவர்களின் நெஞ்சில் ஏறி மிதித்து அலுவலகத்துக்குள் சென்றது. மாணவர்களின் தியாக உணர்வு கண்டு கண்ணீர் சிந்தினார் பசவபுன்னையா.
1937 முதல் 39 வரை அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் ஆந்திரச் செயலாளராக இருந்தார். இயக்கம் முழு வீச்சில் செயல்பட்டது. மாணவர்களைத் திரட்டுவது, கோரிக்கைகள் சமர்ப்பிப்பது, ஆர்ப்பாட்டம் செய்வது, வேலைநிறுத்தம் செய்வது என அவர்களது செயல்பாடுகள் நீண்டன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் அதில் உறுப்பினர்களாக இருந்தனர்.
1938இல் மிகுந்த எதிர்ப்புக்கிடையே ஆரம்பகால கம்யூனிஸ்டுகளில் ஒருவரான எல்.பி.கங்காதரராவின் சகோதரி ஜகதாம்பாளை மணந்தார் பசவபுன்னையா. கங்காதரராவ் ஆதரித்தாலும், அவரது தந்தை முதலில் மிகுந்த எதிர்ப்பைத் தெரிவித்தார். பின்னர்தான் சமாதானமானார்.
இக்காலத்தில் பசவபுன்னையா ஓர் ஓட்டலைத் திறந்தார். அவரது இளகிய மனது காரணமாக பெரும் நஷ்டம் ஏற்பட்டது. வேறு வழியின்றி அதை மூடிவிட்டார் அவர். அரசியலும் தொழிலும் சேர்ந்து போக முடியாது என்று அவர் பின்னால் வேடிக்கையாகக் கூறுவார். இன்று அரசியலே தொழிலாகிவிட்டதைக் கண்டால் என்ன சொல்வாரோ!
1940ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் குண்டூர் மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1935-40 காலத்தில் அவருடைய படிப்பு வெறும் அரசியலோடு நின்று விடாமல் தெலுங்கு இலக்கியத்திலும் ஈடுபட்டிருந்தது. அதேபோல் அப்போது கிடைத்த மார்க்சியப் புத்தகங்களையும் ஆழமாகப் படித்தார்.
1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் வெடித்தபோது கம்யூனிஸ்ட் கட்சி போருக்கு எதிராக நின்றது. எனவே கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கியது ஆங்கிலேய அரசு. ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் நாடெங்கும் கைதாயினர். பசவபுன்னையா தலைமறைவாகி விட்டார். 1942 வரை இந்தத் தலைமறைவு வாழ்க்கை நீடித்தது. அதன்பிறகு ஆங்கிலேய அரசு கட்சி மீதான தடையை நீக்கியதும்தான் 1942இல் அவர்கள் வெளியே வந்தனர்.
தலைமறைவில் அவர் தமது மாவட்டத்துக்குள் சுருக்கப்பட்டார். மாவட்டத்துக்குள்ளேயே சில வார்டுகளில் அவரும் தோழர்களும் பதுங்கியிருந்தனர். கட்சியை ஒற்றுமையாக வைத்திருப்பது, மற்ற அமைப்புகளைக் கட்டுக்கோப்பாக செயல்பட வைப்பது, தொடர்பில் இருப்பது எனப் பல வேலைகளில் அவரது தலைமையில் மற்றவர்கள் ஈடுபட்டனர். இந்தக் காலத்தில் ராணுவத்துக்குள்ளும் ஊடுருவ அவர்கள் திட்டமிட்டனர். அதில் சில தொடர்புகள் அவர்களுக்குக் கிடைத்தன. அந்தத் தொடர்புகள் பின்னர் 1946 பிப்ரவரியில் பம்பாயில் புகழ்பெற்ற கப்பல்படைப் புரட்சியில் மிகவும் உதவிகரமாக இருந்தன.
1942இல் வெளியே வந்த பசவபுன்னையா விவசாய சங்கத்தில் தீவீரமாக ஈடுபட்டார். முன்னர் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருந்த விவசாயிகள் மத்தியில் விவசாய சங்கத்தைக் கொண்டு சேர்த்து அவர்களை அணிதிரட்டத் தொடங்கியது விவசாய சங்கம். விவசாயிகளிடையே போர்க்குணம் வளரத் தொடங்கியது.
1942 முதல் 1947 வரை கட்சி பகிரங்கமாகச் செயல்பட முடிந்தது. முதன்முறையாக மார்க்சியப் புத்தகங்களை அச்சிட்டு மக்களிடம் கொண்டு செல்ல முடிந்தது. ஏராளமானோருக்குக் கம்யூனிச சிந்தனையை ஏற்படுத்த கட்சி இக்காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டது.
1945க்குப் பின் ஐதராபாத் நிஜாமுக்கு எதிராகப் போராட வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டது. ஆயுதப் போராட்டம் உட்பட அனைத்து வகைப் போராட்டங்களிலும் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஈடுபட்டனர். ஆயுதமேந்திய கொரில்லா போர்முறை 1946இல் தொடங்கியது. நிஜாமின் படைகள் நவீன ஆயுதங்களுடன் இறங்க, இவர்களோ பர்மார் என்ற மருந்து கிட்டிக்கப்பட்ட மட்டமான துப்பாக்கிகள், கற்களுடன் போரில் இறங்கினர்.
இந்தியா விடுதலை பெற்றபிறகு இந்திய இராணுவம் அவர்களுக்கு எதிராக உள்ளே நுழைந்தது. அந்த சமயத்தில் பல தெலுங்கான பகுதிகளைக் கைப்பற்றித் தனி ஆட்சியே நடத்தியது கட்சி. உழுபவர்களுக்கு நிலத்தைப் பிரித்துக் கொடுத்தது. அவர்களுக்கு மரியாதையையும் உரிமையையும் பெற்றுக் கொடுத்தது. இந்திய ராணுவத்துக்கு எதிராக துப்பாக்கி ஏந்திப் பெண்கள் உட்பட வீரத்துடன் போரிட்டனர். மக்களோடு மக்களாகத் தலைவர்களும் இருந்து போரில் ஈடுபட்டனர்.
வாரங்கல், நலகொண்டா, கம்மம், கரீம் நகரில் ஒரு பகுதி, ஐதராபாத்தில் ஒரு பகுதி என்று சுமார் ஒரு கோடி மக்கள் அதில் இருந்தனர். சுமார் 4000 பேர் இரு தரப்பிலும் உயிரிழந்தனர். இறுதியில் கைப்பற்றப்பட்ட நிலத்தை விவசாயிகளிடமே கொடுத்துவிட்டு, ராணுவத்தை வாபஸ் பெற்றால் போராட்டத்தைக் கைவிடுவதாக கட்சி அறிவித்தது. அதை அரசு ஏற்றதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனினும் சில உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்தாமல் அரசு கைவிட்டது. அந்தப் போராட்டத்திற்கு வழிகாட்டிய தலைவர்களில் ஒருவராக பசவபுன்னையா திகழ்ந்தார்.
1948இல் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் இருவேறு நிலைப்பாடுகள் மோதின. காங்கிரசுடன் அனுசரித்துப் போக வேண்டுமென்ற பி.சி.ஜோஷியின் நிலைபாடு ஒன்று. அதை எதிர்த்து மத்தியக்குழுவில் போராடிய ரணதிவேயின் நிலைபாடு மற்றொன்று. மக்கள் சுதந்திரத்தை உண்மையானதென்று ஏற்றார்கள். ஆனால் இது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டுமே. மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பிட்டது. ஆனால் அது எடுத்த வழிமுறை தவறாகிவிட்டது. கட்சி தடை செய்யப்பட்டது. பல தலைவர்கள் கைது செய்யப்பட, பலர் தலைமறைவாயினர்.
1948இல் கட்சி எடுத்த நிலைபாட்டுக்கெதிராக 1950இல் கூடிய மத்தியக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. அப்போது பசவபுன்னையா அரசியல் தலைமைக் குழுவுக்குத் தேவு செய்யப்பட்டார்.
ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதன் திட்டம் முக்கியமானது. நீண்ட காலத் திட்டம், நடைமுறை உத்தி ஆகியவை வகுக்கப்பட்டால்தான் கட்சி செயல்பட முடியும். இந்த விஷயத்தில்தான் கட்சிக்குள் கடும் போராட்டம் நிகழ்ந்தது. எனவே கட்சியின் புதிய பொதுச்செயலாளர் ராஜேஸ்வரராவ், பசவபுன்னையா, அஜய் கோஷ் மற்றும் டாங்கே உள்ளிட்ட ஒரு குழு சோவியத்துக்குச் சென்று ஸ்டாலினின் வழிகாட்டுதலைப் பெறுவதென்று முடிவெடுக்கப்பட்டது.
ஒரு மாபெரும் தலைவர் சொல்வதைத் தாம் கேட்க வேண்டியதிருக்கும் என அஞ்சியவர்களின் நினைப்பை மாற்றி அவர்களிடம் சகஜமாக உரையாடினார் ஸ்டாலின். அவர் வழிகாட்டலில் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது. அவர் கூறியதை ஏற்பதும் நிராகரிப்பதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உரிமை என்று அவர் கூறினார். அதன்படி சில ஆலோசனைகள் ஏற்கப்பட்டன, சில நிராகரிக்கப்பட்டன. அதன் பிறகு இந்தியா திரும்பிய குழு கல்கத்தாவில் ரகசியமாக மத்தியக் குழுவைக் கூட்டி ஒரு திட்டத்தை நிறைவேற்றியது.
1952இல் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற போது ஆந்திராவில் கம்யூனிஸ்டுகள் 17 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 42 சட்டமன்றத் தொகுதிகளிலும் வென்றனர். பசவபுன்னையா 1952 ஏப்ரலில் சென்னை சட்டமன்றத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966 வரை அப்பொறுப்பில் நீடித்திருந்தார் பசவபுன்னையா.
(தொடரும்)