Skip to content
Home » உலகக் கதைகள் #3 – ஜான் ஹென்ரிக் கிளார்க்கின் ‘வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவும் கறுப்பர் சிறுவனும்’

உலகக் கதைகள் #3 – ஜான் ஹென்ரிக் கிளார்க்கின் ‘வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவும் கறுப்பர் சிறுவனும்’

வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவும் கறுப்பர் சிறுவனும்

சிறுவன் ராண்டாஃப் ஜான்சன், தன் அம்மா வேலைக்காரியாக இருந்த அந்தப் பெரிய வீட்டிலிருந்து வெளியே வந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அவனுடைய அம்மா அவனைக் கட்டியணைத்து, அவன் வாழ்வில் முதல் முறையாக கால் டாலர் நாணயத்தை கொடுத்திருந்தார். ‘அன்பு மகனே… போ. போய் கிறிஸ்மஸ் பரிசுப் பொருள் வாங்கிக் கொள். அப்பாவுக்கு, குட்டிப் பாப்பாவுக்கு, அத்தை லில்லுக்கு ஏதேனும் வாங்கிக் கொள். மிச்சம் இருந்தால் அம்மாவுக்கும் ஏதாவது வாங்கிக் கொண்டுவா மகனே’ என்று ஆசையாகச் சொல்லி அனுப்பியிருந்தார்.

சிறுவன் அவனுக்குக் கிடைத்திருக்கும் இந்த ‘தங்கக் காசை’ எப்படியெல்லாம் செலவழிக்கவேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தான். ஒரு அணாவில் (நிக்கில்) அப்பாவுக்கு. இன்னொரு நிக்கிலில் குட்டிப்பாப்பாவுக்கு… இன்னொரு நிக்கிலில் அத்தை லில்லுக்கு. எஞ்சும் பத்து சென்ட்கள் முழுவதும் அம்மாவுக்கான பரிசுப் பொருளுக்குச் செலவிடவேண்டும். ‘எதையெடுத்தாலும் பத்து சென்ட்’ கடையில் இருந்து அழகிய, வசீகரம் மிகுந்த முத்து மாலை வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான் சிறுவன்.

சந்தையை நோக்கி விரைந்து ஓடினான். டிசம்பர் பாதிதான் முடிந்திருந்தது. தெற்கத்திய சூரியன் சிறுவனின் கறுப்பு முகத்தில் வேர்வை முத்துக்களை பெருகச் செய்திருந்தது. அவன் மிக மிக மகிழ்ச்சியாக இருந்தான். விட்டு விடுதலையாகி வானில் பறந்து செல்வது போல் உணர்ந்தான். லூசியானாவிலேயே மிக அதிக மகிழ்ச்சியில் இருக்கும் சிறுவன் இந்த ராண்டாஃப் ஜான்சன் தான் என்று அனைவரும் பார்க்க முடியும் படியாக அவன் பறந்து செல்வதுபோல் உணர்ந்தான்.

சந்தைப் பகுதியின் வெளி விளிம்பில் நகரின் ஏழை வெள்ளைக்காரர்கள் குடியிருப்பு இருந்தது. அதை அடைந்ததும் சிறுவன் வேகத்தைக் குறைத்தான். அவன் வேகமாக ஓடினால், எதையோ திருடிக் கொண்டு செல்வதாக அந்த வெள்ளையர்களில் யாரேனும் ஒருவர் இவனைத் திட்டக்கூடும். மிகவும் மெதுவாக நடந்து சென்றால், எதையோ திருடுவதற்குத் திட்டமிட்டு அப்படிச் செய்வதாகத் திட்டக்கூடும். எனவே ஓடவும் செய்யாமல் மெதுவாக நடக்கவும் செய்யாமல் பயந்து நடுங்கியபடியே அந்தப் பகுதியைக் கடந்து சென்றான். கிறிஸ்மஸ் பரிசுப் பொருளை வாங்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி சட்டென்று அடங்கிப் போயிருந்தது.

அட்டை சிம்னியின் அருகில் மாசு படிந்த உடை அணிந்து சிறிய மணியை அடித்துக் கொண்டிருந்த சாண்டா க்ளாஸைக் (கிறிஸ்மஸ் தாத்தாவைக்) கடந்துசென்றான். அந்தப் பருமனான கிறிஸ்மஸ் தாத்தா அவனைப் பார்த்து பஞ்சு மீசை அசையச் சிரித்தார். சிறுவன் சில வாரங்களுக்கு முன் பெரிய மளிகைக் கடையில் உண்மையான கிறிஸ்மஸ் தாத்தாவைப் பார்த்திருக்கிறான். அவரிடம் தனக்குத் தேவையான அனைத்தையும் தரும்படிக் கேட்டுமிருக்கிறான். இங்கு இருக்கும் இந்தத் தாத்தா அந்த கிறிஸ்மஸ் தாத்தாவின் உதவியாளர்களில் ஒருவராக இருக்கக்கூடும். இங்கு நின்று நேரத்தைக் கழிக்க அவனுக்குச் சிறிதும் விருப்பமில்லை.

தெருவில் திரியும் சில வெள்ளைச் சிறுவர்கள் சற்று தொலைவில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். ஒரு பழக்கடைக்கு முன்னால் அந்தக் கும்பல் நின்றுகொண்டிருந்தது. அநேகமாக அவர்கள் அங்கு ஆப்பிள் திருடத்தான் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று ராண்டால்ஃபுக்கு உறுதியாகத் தெரியும். வெள்ளை நிற அழுக்குத் தடுப்பு உடை (ஏப்ரன்) அணிந்திருந்த கடைக்காரர் வேகமாக வெளியே வந்ததும் கல்லெறிந்ததும் சிதறி ஓடும் பறவைக் கூட்டம் போல் வெள்ளைச் சிறுவர்கள் எல்லா திசைகளிலும் ஓடினர். சில நூறு அடிகள் தொலைவுக்குச் சென்று அனைவரும் மீண்டும் ஒன்று கூடினர்.

அந்தக் கும்பலின் தலைவனின் பார்வை தன்மேல் விழுவதைப் பார்த்ததும் ராண்டால்ஃபுக்கு பயம் ஏற்பட ஆரம்பித்தது. வேகமாக நடந்துகொண்டிருந்தவன், எச்சரிக்கையுடன் மெள்ள நடக்க ஆரம்பித்தான். இந்த அழுக்கடைந்த வெள்ளைச் சிறுவர்களுடனான மோதலைத் தவிர்க்கும் பொருட்டு, சாலையைக் கடந்து மறு பக்கம் செல்ல முயற்சி செய்தான்.

அவன் அங்கு நின்றதைப் பார்த்ததும் வெள்ளை கும்பல் தலைவன், ஏய்… இங்க வாடா… என்று உரத்த குரலில் உத்தரவிட்டான்.

ராண்டால்ஃபின் பயம் அதிகரித்தது. உடம்பில் ஒவ்வொரு நரம்பும் பதறத் தொடங்கியது. அங்கிருந்து ஓடித் தப்பிக்க முயற்சி செய்வதற்குள் சுற்றி வளைத்திருந்த வெள்ளை கும்பல் அவனை நடைபாதையில் உந்தித்தள்ளியது. அவர்களைத் தள்ளிவிட்டு ஓடித் தப்பிக்க முயன்ற போதெல்லாம் சிவந்த தலைமுடியுடன் இருந்த ஒருவன் தொடர்ந்து ராண்டால்ஃபைத் தள்ளிக் கொண்டு சென்றான்.

தன்னைச் சூழ்ந்துகொண்டவர்களைப் பார்த்து பேச்சுமூச்சற்று ஒடுங்கினான். நடைபாதையில் இருந்த வயதானவர்கள், நடந்து செல்பவர்கள் எல்லாருமே இந்த வேடிக்கையை ரசிக்கத்தொடங்கியிருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தான். சற்று தள்ளி மணி அடித்தபடி இருக்கும் கிறிஸ்மஸ் தாத்தாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்த்தான். கிறிஸ்மஸ் தாத்தாவும் அந்த வேடிக்கையை ரசிப்பது தெரிந்ததும் குழம்பிப் போய் நின்றான்.

இந்த வெள்ளை கும்பலாகப் பார்த்துப் போகவிட்டால் ஒழியத் தன்னால் எங்கும் தப்பிக்க முடியாது என்பது புரிந்தது. நடுங்கியபடியே அவர்கள் மத்தியில் நின்றுகொண்டிருந்தான். உதடுகள் கோணின. பற்கள் நடுங்கின. வியர்வை வடிந்த கறுப்பு முகம் இப்போது வாடிக் காணப்பட்டது. நிலைகுலைந்து என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பி நின்றான்.

செம்பட்டைத் தலையன்தான் அவர்களின் தலைவன் என்பது நன்கு புரிந்தது. அவனுடை உடல் மொழியில் தெரிந்த திமிர்த்தனம் மற்றவர்களிடமிருந்து அவனைத் தனித்துக் காட்டியது. முழு வெறுப்பும் வெளிப்படும் குரலில், ஏய் கறுப்பு நாயே (நிகர்)… எங்கடா போற? இந்த ஏரியாவுக்குள்ள கறுப்பன்களை நாங்க அனுமதிக்கறதில்லைங்கறது தெரியாதா உனக்கு? என்றான்.

அவன் எதிர்பார்த்த கண்டிப்பு அந்தக் குரலில் வெளிப்படவில்லை. மோசமான நாடக நடிப்பு போல் அது இருந்தது.

‘எதையெடுத்தாலும் பத்து செண்ட்’ கடைக்கு கிறிஸ்மஸ் பரிசு வாங்கப் போறேன்’ என்று கறுப்பர் இனச் சிறுவன் மென்று முழுங்கியபடிச் சொன்னான்.

கும்பலில் இருந்தவர்களை ஏக்கத்துடன் பார்த்தான். யாராவது ஒரு நட்பார்ந்த முகமாவது தென்படுமா என்று தவித்தான். ஆனால் முழுவதுமாக சிறைப்படுத்தப்பட்டது தெரிந்தது. அவனைச் சுற்றியிருந்த வெறுப்பின் சுவர் மேலும் மேலும் வலிமையடைந்தது. அவன் பயந்து நடுங்குவது அங்கு இருந்த அனைவருக்கும் மிகுந்த வேடிக்கையை, மகிழ்ச்சியைத் தந்தது. யாருக்கும் எந்தவொரு தீங்கும் இழைக்காத கறுப்பர் இனச் சிறுவனைப் பார்த்து கேலியும் வெறுப்புமாகச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

சிறுவன் அழத் தொடங்கினான்: ‘என்னை விட்ருங்க. நான் ஒண்ணுமே செய்யலை’.

வெள்ளை கும்பலில் ஒருவன் சொன்னான்: பாவம்… விட்ருங்கப்பா…

அவன் சொன்னதை மேலும் சிரித்து ஓரங்கட்டினர். செம்பட்டைத் தலையன் சிறுவனின் கையைப் பிடித்தான். ‘இந்த கறுப்பன் கடைக்குப் போறேன்னு சொன்னான்ல. அப்படின்னா அவன் கிட்ட நிறைய பணம் இருக்கணும். எவ்வளவு வெச்சிருக்கான்னு பார்ப்போமா?’

சிறுவன் தன் கைகளை பாக்கெட்டுக்குள் விட்டு நாணயத்தை இறுகப்பற்றிக் கொண்டான். அவன் மீது பரிதாபம் கொண்டு உதவும் பெரியவர் ஒருவரின் முகத்தை மீண்டும் தேடினான். சிறிது நேரத்துக்கு முன் அவன் கடந்து வந்த கிறிஸ்மஸ் தாத்தா மட்டுமே அந்தத் தெருவில் நின்றுகொண்டிருந்தார். இங்கு நடப்பதைப் பார்த்ததும் தன் பருத்த உடம்பைத் தூக்கிக் கொண்டு மந்த புத்தி கொண்டவனைப் போல் மெள்ள நடந்து வந்தார்.

சிறுவன் சிறைப்பட்டிருந்த கும்பலுக்கு நடுவில் நுழைந்தவர் செம்பட்டைத் தலையனை சற்று ஒதுங்கி நிற்கச் சொன்னார். வெண்ணிற மீசையை ஆட்டுவித்தபடியே, நிலைமையைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்தார்.

‘உன் பேரு என்னடா கறுப்பு நாயே (நிகர்)’.

சிறுவன் மென்று முழுங்கினான். மேலும் பயந்தான் என்று சொல்வதைவிட அதிர்ச்சியில் உறைந்தான். அவன் இதுவரையில் ஒரு கிறிஸ்மஸ் தாத்தா இப்படியாகப் பேசுவார் என்று எதிர்பார்த்திருக்கவேயில்லை.

சிவப்பு உடை அணிந்திருந்த கிறிஸ்மஸ் தாத்தாவின் இறுக்கமான முகத்தில் அலட்சியப் புன்னகை தோன்றியது.

ராண்டால்ஃப் என்று சிறுவன் தயங்கித் தயங்கிச் சொன்னான்.

ராண்டால்ஃபா… கிறிஸ்மஸ் தாத்தாவின் குரலில் ஏளனம். ‘கறுப்பு நாய்கள் அந்தப் பெயரை வெச்சுக்கக்கூடாதே. அந்தப் பேருக்கும் கறுப்பன்களுக்கும் சம்பந்தமே கிடையாதே’.

தனது முரட்டுக் கைகளை சிறுவன் தோளில் அழுத்தியபடியே, ‘இனிமே உன் பேரு…ஜிம். சரியா?’

அதைக் கேட்டதும் கும்பல் உரக்கச் சிரித்தது. உலகின் பிற சப்தங்கள் எல்லாம் அதில் அடங்கிப் போனது. சுற்றியிருந்தவர்கள் எல்லாம் கிறிஸ்மஸ் தாத்தாவையும் கறுப்புச் சிறுவனையும் நன்கு பார்க்க மேலும் நெருங்கி வந்து சுற்றி நின்றனர். அவர்களுடைய ஏளனப் பார்வைக்கு முன் அந்தச் சிறுவன் மேலும் மேலும் சிறுத்துக் கொண்டு போனதுபோல் இருந்தது. கறுப்பு முகத்தில் வியர்வைத்துளிகளுடன் கண்ணீர்த்துளிகளும் கலந்து பெருகின. உடம்பு மரத்துப் போனதுபோல் ஆனது.

‘தாத்தா, நான் போலாமா?’ சிறுவன் மன்றாடினான். அவனுடைய மெலிந்த குரல் யார் காதிலும் விழவே இல்லை. ’நேரா பத்து செண்ட் கடைக்குப் போன்னு எங்க அம்மா சொல்லி அனுப்பியிருந்தாங்க. நான் யாருக்கும் எந்த தொந்தரவும் தரலை’.

‘நீ இப்ப அழறதை நிறுத்தலைன்னா உன்னை விண்ணுலகத்துல இருக்கற செயிண்ட் பீட்டர் கிட்ட அனுப்பிடுவோம்’ பருத்த கிறிஸ்மஸ் தாத்தா கோபத்துடனும் எரிச்சலுடனும் பேசினார். அவருடைய குரல் புதிய நிறத்தை அவர் முகத்தில் படியச் செய்தது. ஏதோ தவறாகச் சொன்னதாக நினைத்தவர், ‘நாங்க அவர் கிட்ட அனுப்பிடுவோம்னு பயப்படாத. அப்பறம் செயிண்ட் பீட்டர் கறுப்பு நாய்கிட்ட அன்பா இருப்பாருன்னும் நினைச்சிடாத’.

கும்பலில் இருந்த சிறுவர்கள் கெக்கெலி கொட்டிச் சிரித்தனர். சிரிப்பு மெள்ள அடங்கியதும் செம்பட்டைத்தலையன் கறுப்பர் இனச்சிறுவனை நெருங்கினான். பின்னர் கூட்டத்தினரை ஒருமுறை நன்கு முழுமையாகப் பார்த்தான். பொறுமை இழந்திருந்த கும்பல் கூக்குரலிட்டது.

‘கும்பலாகக் கூடிக் கொல்வோம் இவனை; கட்டித் தொங்கவிடுவோம்’ என்று ஒரு இளைஞன் உற்சாகத்துடன் கூச்சலிட்டான்.

ஆமாம்… சாகும் வரை கும்பலாகக் கூடிக் கொல்வோம் என்று இன்னொருவன் மேலும் உரத்த குரலில் மேலும் உற்சாகத்துடன் கத்தினான்.

அந்த வார்த்தைகளுக்கு மந்திர வலிமை இருந்ததுபோல் கூட்டத்தினர் அனைவரையும் அது கூக்குரலிட வைத்தது. கேலி, ஏளனக் கிண்டல், வசைச் சொற்கள் என எல்லாம் ஒருங்கே எழுந்தன.

‘கும்பல் கொலை செய்வோம்’ என்ற வார்த்தைகள் இப்போது ஒரு பாடலாக மாறி கிறிஸ்மஸ் மாதக் காற்றில் அலை அலையாகப் பரவி, சந்தையின் கொண்டாட்ட சப்தங்களோடு கலந்தது

‘நான் போய் கயிறு எடுத்துட்டு வர்றேன். கொஞ்சம் நில்லுங்க… உடனே எடுத்துட்டு வர்றேன்’ என்று ஒரு செம்பட்டைத் தலையன் கூட்டத்தினரை விலகியபடியே ஓடினான்.

கூட்டத்தினர் மேல் ஒருவித மயான அமைதி கவிந்தது. அவர்கள், கிறிஸ்மஸ் தாத்தாவையும் கறுப்பர் இனச் சிறுவனையும் அடுத்து என்ன என்பதுபோல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘சட்டைப் பாக்கெட்ல என்ன வெச்சிருக்க’ என்று கேட்டார் கிறிஸ்மஸ் தாத்தா.

நடுங்கிக் கொண்டிருந்த சிறுவன் பாக்கெட்டில் இருந்து கைகளைச் சட்டென்று வெளியே எடுத்து பின் பக்கம் கட்டிக் கொண்டான். வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தா, அவன் கையை மடக்கிப் பிடித்து மூடிய கைகளை வலிந்து திறந்தார். கால் டாலர் இருப்பதைப் பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது.

அட… கால் டாலர்… சொல் கறுப்பு நாயே இந்தப் பணத்தை எங்க இருந்து திருடின?

நான் திருடலை. எங்க அம்மா கொடுத்தாங்க.

அம்மா கொடுத்தாங்களா..? கிறிஸ்மஸ் தாத்தா உரத்த குரலில் சிரித்தார். அந்த நாணயத்தைப் பிடுங்கி தன் சிவப்பு நிற உடைக்குள் போட்டுக்கொண்டார். வெள்ளையர்களெல்லாம் பட்டினி கிடக்கும்போது கறுப்பு நாய்கள் கிட்டயெல்லாம் காசு பணம் இருக்கக்கூடாது. இந்தப் பணம் என் கிட்ட இருக்கட்டும்.

கறுப்பர் இனச்சிறுவனின் முகம் மேலும் கறுத்தது. அவனுடைய உதடுகள் பிரிந்தன. அழுகை வெடித்துக் கிளம்பியது. சுற்றியிருந்த கும்பலைப் பார்க்க முடியாமல் பார்வை மங்கத் தொடங்கியது. அவனைச் சுற்றி எங்கு பார்த்தாலும் வெள்ளைத் தோல் மனிதர்கள். அவர்கள் அனைவரும் வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவின் பின்னால் அணிதிரண்டிருந்தனர். அழுக்கடைந்த, வறுமையில் வாடும் வெள்ளைச் சிறுவர்களின் முகங்கள் புன்னகையில் மின்னின. கந்தலாடை அணிந்திருந்த மனிதர்கள் தமது கறைபடிந்த பற்களைக் காட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தனர். அழுக்கடைந்த முகத்துக்கு ஒருநாளும் சாயம் பூசியிராத முகங்களைக் கொண்ட பெண்கள் தமது கந்தலான உடைகளை அணிந்தபடி இங்குமங்கும் நடந்துகொண்டிருந்தனர்.

சிவப்பு உடை அணிந்திருந்த கிறிஸ்மஸ் தாத்தா சட்டென்று சிறுவனின் கையைப் பிடித்தார். கறுப்பர் இனச்சிறுவனை உற்றுப் பார்த்தார். அவர் பார்வையில் புதிய உணர்ச்சி தென்பட்டது. ‘சகோதரர்களே… இவன் கட்டித் தொங்க விடற அளவுக்கு பெரியவன் இல்லை. அதுவும் போக இப்ப கிறிஸ்மஸ் காலம். இன்னும் நமக்கு இந்தப் பருவத்துல நேரம் இருக்கு. இன்னும் பனி பெய்ய ஆரம்பிக்கலை. இப்ப இந்த கறுப்பு நாயைக் கட்டித் தொங்கவிட்டா இந்த பகுதி முழுவதும் நாறிடும்’.

கூட்டத்தினர் மத்தியில் இருந்து ஏமாற்றமும் வருத்தமும் நிறைந்த முனகல்கள் எழுந்தன. சிலர் சிரித்தனர். மற்றவர்கள் கிறிஸ்மஸ் தாத்தா சொன்னதை விரும்பவில்லை. எதிர்க்குரல் கொடுத்தனர். எனினும் செம்பட்டைத் தலையன் கயிறை எடுத்துக் கொண்டு வந்த போது, ‘வாருங்கள் கும்பல் கொலை செய்வோம்’ என்ற பாடலின் சுருதி குறைந்துவிட்டிருந்தது. கிறிஸ்மஸ் தாத்தாவிடம் கயிறைக் கொடுத்தான். அதை அவர் அவனிடமே திருப்பிக் கொடுத்தார்.

‘மகனே… இவனைக் கொல்லவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறோம். ரொம்பவும் சின்னப் பையனாக இருக்கிறான். கும்பலாகக் கட்டித் தொங்கவிடும் அளவுக்குப் பழுக்கவில்லை. இன்னும் கொஞ்ச காலம் இவன் வாழ்ந்துகொள்ளட்டும். எங்கே போய்விடப் போகிறான். பின்னர் கும்பல் கொலை செய்யலாம்’.

செம்பட்டைத் தலையனுக்குக் கோபம் வந்தது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கயிறை ஆசையாகக் கொண்டுவந்திருகிறேன். அதை நினைத்துப் பார்த்தீர்களா? என்று சொல்லியபடியே கறுப்பர் இனச் சிறுவனை அடிக்கக் கையை ஓங்கினான். சிறுவன் மிக அதிகமாக பயந்து ஒடுங்கினான். கிறிஸ்மஸ் தாத்தா இடையில் வந்து செம்பட்டைத் தலையனைத் தடுத்தார்.

‘ஒரு நிமிடம் நில்லு பையா’ என்றவர் தன் சிவப்பு நிற சட்டைப் பையில் இருந்து கால் டாலர் நாணயத்தை எடுத்து செம்பட்டைத் தலையனிடம் கொடுத்தார்.

அந்த வெள்ளைச் சிறுவனின் முகம் மலர்ந்தது. மின்னும் நணயத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தான். தன் கைகளில் ஏந்தியவன் அதை அப்படியே கூட்டத்தினர் நன்கு பார்க்கும்படியாக உயர்த்திப் பிடித்து, ‘கிறிஸ்மஸ் தாத்தா இருப்பது உண்மையே. அவர் நாம் கேட்கும் பரிசுகளைக் கொண்டுவந்துதருவது நிஜமே’ என்று உரக்க கோஷமிட்டான்.

கூட்டம் மனம்விட்டு பெரும் குரலில் சிரித்து ரசித்தது.

நடப்பது எதையும் தாங்க முடியாமல் நிலை குலைந்த கறுப்பர் இனச்சிறுவன் என்ன செய்ய என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான். அவன் கையில் இருந்த ‘தங்கக் காசை’ வெள்ளையர்கள் பறித்துக் கொண்டுவிட்டனர். அவனால் எதுவும் செய்ய முடியாது. கிறிஸ்மஸ் தாத்தா பற்றி என்ன சொல்ல என்றே அவனுக்குத் தெரியவில்லை. எதைப் பற்றியும் என்ன சொல்ல என்றே அவனுக்குத் தெரியவில்லை.

கூட்டம் கொஞ்சம் கலைவது போலிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் இங்கிருந்து தப்பிக்க வழி பிறந்துவிடும். கிடைத்த முதல் இடைவெளியினூடாகப் பாய்ந்து தப்பித்து ஓடினான். ஆளை விட்டால் போதும் என்று ஒவ்வொரு காலடியும் நன்றி தெரிவித்தபடி தட்டுத்தடுமாறி பாய்ந்து ஓடினான். சிறிது நேரத்துக்கு முன் சிறகு விரித்து வானில் பறந்து கொண்டிருந்த கறுப்புச் சிறுவன். வெள்ளையர்களால் முறிக்கப்பட்ட சிறகுகள் வானில் இருந்து அவன் மேல் விழுந்துகொண்டே இருப்பதுபோலிருந்தது.

இந்த வேடிக்கையை ஆரம்பித்து வைத்த செம்பட்டைத் தலையன் ஒரு கல்லை எடுத்து, தப்பி ஓடும் சிறுவன் மேல் எறிந்தான். நல்ல வேலையாக அவன் மேல் படவில்லை. பிற சிறுவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்: ஓடு கறுப்பு நாயே ஓடு…

கிறிஸ்மஸ் தாத்தா தன் முகமூடியைச் சரிசெய்துகொண்டார்.

வெள்ளைக் கும்பலின் கேலியும் கிண்டலும் கறுப்பர் இனச்சிறுவனை கண்ணுக்குத் தெரியாத விசையுடன் உந்தித் தள்ளின. நடைபாதை ஓரமாக நின்று கொண்டிருந்த வெள்ளையர் கூட்டம் சிறுவன் சிறு புள்ளியாகத் தேய்ந்து மறைவதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

சிறுவனுடைய கால்கள் தளரத் தொடங்கின. சோர்ந்துபோய் மெதுவாக தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

உடைந்து போனவன், தன் காலியான கைகளைத் திறந்து பார்த்தான். அம்மா கொடுத்த நாணயம் மனதில் மின்னிக் கொண்டிருந்தது. வலது கையில் இப்போதும் அது இருப்பதாக நினைத்துக் கொண்டு, இறுக மூடிக் கொண்டான். ஆனால், அது மேலும் வலியை அதிகரித்தது.

சிறிது நேரத்தில் மெள்ள அவனுடைய மனதில் இருந்து பயமும் சோகமும் விலகின. இப்போது அவன் அவனுடைய ஆட்களின் அண்மையில் வந்துவிட்டான். அவனுக்குத் தெரிந்தவர்கள் மத்தியில் வந்துவிட்டான். மனதில் தைரியமும் ஆசுவாசமும் வந்தன. அங்கிருந்தவர்கள் அவனைப் பார்த்து புன்முறுவல் செய்தனர். சூரியன் அவன் கண்ணீரைக் காயவைத்திருந்தான்.

தனக்கு நேர்ந்த துயரத்தை அம்மாவைத் தவிர வேறு யாரிடமும் சொல்லக்கூடாதென்று முடிவு செய்தான். அவளுக்கு மட்டுமே அது புரியும். இன்னொரு டாலர் கொடுத்து பிடித்ததை வாங்கிக் கொள்ளச் சொல்லக்கூடும். ஆனால், கிறிஸ்மஸ் தாத்தாவின் கோர உருவம் பற்றி என்ன சொல்வாள்? அவளிடம் அதுபற்றிக் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்தான்.

யாராலும், தாய்மார்களால் கூட விளக்கிச் சொல்ல முடியாத சில விஷயங்கள் உலகில் இருக்கத்தானே செய்கின்றன.

0

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *