Skip to content
Home » உலகக் கதைகள் #5 – ஒரு கறுப்பு, இஸ்லாமிய, அமெரிக்க அடிமை

உலகக் கதைகள் #5 – ஒரு கறுப்பு, இஸ்லாமிய, அமெரிக்க அடிமை

ஓமர் இபின் சையது

1770-ல், ஆஃப்ரிக்காவின் மேற்குப் பகுதியில் செனெகலில் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர் ஒமர் இபின் சையது. ஃபுலானி பழங்குடியைச் சேர்ந்த கறுப்பர். இஸ்லாமை ஏற்றுக்கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். அமெரிக்காவுக்கு அடிமையாகச் சிறைப்பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர். சிறையில் அரபு மொழியில் தன்னை விடுதலை செய்யும்படி இறைவனிடம் மன்றாடி எழுதியவற்றைப் பார்த்து முதலில் முஹமதியராக இருந்து கிறிஸ்தவத்தைத் தழுவிய ஜெனரல் ஜிம் ஓவன் விடுதலை பெற்றுக் கொடுத்துத் தன் பணியாளாக வைத்துக் கொண்டார். எஜமானர் கிறிஸ்தவத்தைத் தழுவியதும் ஓமர் இபின் சையதுவும் இயேசுவைத் தன் தேவனாக ஏற்றுக்கொண்டார்.

‘ஒரு கறுப்பு, இஸ்லாமிய, அமெரிக்க, அடிமை : ஓமர் இபின் சையதின் சுய சரிதை’ 1831-ல் எழுதப்பட்டது. அமெரிக்க அடிமையால் அரபு மொழியில் எழுதப்பட்ட ஒரே ஒரு ஆவணம் இது.

0

சுயசரிதை

ஓ ஷேக் ஹண்டர்… என் வாழ்க்கை வரலாறை நான் எழுத முடியாது; ஏனென்றால் என் பழங்குடித் தாய்மொழியை மறந்துவிட்டேன். அரபு மொழியையும் மறந்துவிட்டேன். என்னைப் பழிக்கவேண்டாம் சகோதரா… இறைவன் எனக்குக் காட்டியிருக்கும் கருணைக்கும் நன்மைக்கும் நான் மிகுந்த நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

அருளாளரும் கருணை மிகுந்தவருமான அல்லவின் பெயரால் சொல்கிறேன். அல்லாவுக்கு நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே. உலகம் முழுவதையும் அவருடைய சேவைக்கே உருவாக்கினார். மனிதர்களுக்கு பேச்சையும் செயலையும் அவரே வழங்கினார்.

என் வாழ்க்கை வரலாறை எழுதச் சொன்னீர்கள். என் தாய் மொழியையும் அரபு மொழியையும் மறந்துவிட்டேன். இலக்கண சுத்தமாகவோ விதிகளுக்கு உட்பட்டோ எனக்கு எழுதத்தெரியாது. என் சகோதரா, இறைவனின் பெயரால் என்னைப் பொறுத்தருள். என்னைப் பழிக்காதே. பலவீனமான கண்களும் பலவீனமான உடம்பும் கொண்ட எளியவன் நான்.

என் பெயர் ஓமர் இபின் சையது. நான் பிறந்தது இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியான ஃபத் தூர் கிராமத்தில். முஹம்மது சையது எனும் ஷேக், என் சகோதரர், மற்றும் ஷேக் சுலைமான் பெம்பா, ஷேக் கேப்ரியேல் அப்தல் ஆகியோரிடம் 25 வருடங்கள் கல்வி கற்றேன். அதன்பின் வீடு திரும்பினேன். ஊரில் ஆறு வருடங்கள் தங்கியிருந்தேன். ஒரு பெரும் படை எங்கள் கிராமத்தைச் சூழ்ந்துகொண்டது. பலரைக் கொன்று குவித்தது. என்னைச் சிறைப்பிடித்தது. கை, கால்களில் விலங்கு பூட்டி பெருங்கடலுக்குக் கொண்டு சென்றது. கிறிஸ்தவர்களிடம் அடிமையாக விற்றது.

அவர்கள் ஒரு கப்பலில் என்னை ஏற்றி பெருங்கடலில் ஒன்றரை மாதங்கள் பயணம் செய்தபின்னர் சார்ஸ்டன் என்று கிறிஸ்தவ மொழியில் அழைக்கப்பட்ட இடத்துக்குக் கொண்டுசென்றனர். அல்லாவின் மீது துளியும் நம்பிக்கை இல்லாத இறை மறுப்பாளனான ஜான்சன் என்ற சிறிய, மெலிந்த கொடியவனிடம் என்னை விற்றார்கள். இறைவன் மீது துளியும் பயம் இல்லாதவன் அவன்.

மிக மிகச் சிறியவனான நான் அவன் கொடுத்த கடினமான வேலைகளைச் செய்ய முடியாமல் ஜான்சனிடமிருந்து தப்பித்து ஃபையத் இல் (ஃபயத்வில்லே) என்ற இடத்துக்கு ஒரு மாதம் கழித்து சென்று சேர்ந்தேன். அங்கே சில பெரிய வீடுகளை (சர்ச்களை) பார்த்தேன். பிறை நிலா நாளில் ஒரு சர்ச்சுக்கு துவா செய்யச் சென்றேன். என்னைப் பார்த்த ஒரு சிறுவன் ஓடோடித் தன் தந்தையிடம் சென்று, சர்ச்சில் ஒரு கறுப்பனைப் பார்த்தேன் என்று சொன்னான். ஹண்டா (ஹண்டர்?) என்பவரும் இன்னொருவரும் குதிரையில் ஏறி வந்தனர். நான் எங்காவது தப்பி ஓடினால் பாய்ந்து பிடிக்க என்று நிறைய வேட்டை நாய்களையும் கொண்டுவந்திருந்தனர். என்னை அவர்கள் இழுத்துச் சென்றனர். 12 மைல் தொலைவில் இருந்த ஒரு பெரிய வீட்டில் என்னை அடைத்தனர். அதில் இருந்து நான் தப்பிக்க முடியவில்லை. அந்தப் பெரிய வீட்டில் (கிறிஸ்தவ மொழியில் அதை ஜெயில் என்று அழைத்தனர்) 16 பகலும் இரவும் அடைபட்டு இருந்தேன். வெள்ளிக்கிழமையன்று, ஜெயிலர் வந்து கதவைத் திறந்தார். அங்கு நிறைய பேரைப் பார்த்தேன். அத்தனை பேரும் கிறிஸ்தவர்கள். சிலர் என்னை வரச் சொல்லி உத்தரவிட்டனர். போனேன்.

உன் பெயர் என்ன? உமர் அல்லது சைய்யதுவா?

எனக்கு அவர்களுடைய கிறிஸ்தவ மொழி புரியவில்லை. பாப் மம்ஃபோர்ட் (ஃபதேவில்லே இருக்கும் கும்பர்லாந்தின் ஷெரீஃப்) என்பவர் என்னை ஜெயிலில் இருந்து வெளியே அழைத்துச் சென்றார். மம்ஃபோர்டுடன் நான்கு பகல்களும் இரவுகளும் இருந்தேன். மம்ஃபோர்டின் மகள் பெட்ஸியை மணந்த மருமகனான ஜிம் ஓவென், பிளேடன் என்ற இடத்துக்கு அவருடன் நான் வர சம்மதமா என்று கேட்டார். வருகிறேன் என்று சொன்னேன். அதன் பின் அவருடனே இன்றுவரை இருந்துவருகிறேன் (1831-ல் எழுதப்பட்டது).

ஜெனரல் ஓவனிடம் வந்த பின்னர் மிட்சேல் என்பவர் என்னை விலைக்கு வாங்க வந்தார். சார்ல்ஸ்டன் நருக்கு அவருடன் வரத்தயாரா என்று கேட்டார்.

மாட்டேன் மாட்டேன் மாட்டேன் மாட்டேன் மாட்டேன். சார்லஸ்டனுக்கு வர விரும்பவே இல்லை. ஜிம் ஓவனிடமே இருந்துகொள்கிறேன் என்று சொன்னேன்.

வட கரோலினாவின் மக்களே… தென் கரோலினாவின் மக்களே… ஓ அமெரிக்க மக்களே… உங்களிடையே ஜிம் ஓவன், ஜான் ஓவன் போன்ற இரு நல்லவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் நல்லவர்கள். இவர்கள் என்ன உணவைச் சாப்பிடுகிறார்களோ அதையே எனக்கும் சாப்பிடத் தருகின்றனர் (ஜிம் ஓவனின் சமையல்காரரே இவருக்கும் உணவு சமைத்தார். ஒரு நீக்ரோ சிறுவன் அந்த உணவை ஓமருக்குக் கொண்டுவந்து கொடுப்பான்). இவர்கள் அணிவதுபோலவே எனக்கும் உடைகள் அணியத் தருகின்றனர். நமது கடவுள், நமது கர்த்தர்… நமது ரட்சகர்… நமது ஏசு ராஜாவை வணங்க அனுமதிக்கின்றனர். நமது புதிய பைபிளை வாசிக்க அனுமதிக்கின்றனர். எவரொருவர் உலகை வழி நடத்துகிறாரோ… நமது செல்வ வளங்களை பெருக்குகிறாரோ… பேரன்பை எந்தத் தடையுமின்றி நம்மீது ஆசியளிக்கிறாரோ அந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.அவருடைய மகிமையால் என் இதயத்தை பேரொளியை நோக்கித் திறந்துவிட்டேன். மெசையா இயேசு ராஜாவின் சத்திய வழியில் நடக்க ஆரம்பித்துவிட்டேன்.

கிறிஸ்த தேசத்துக்கு வருவதற்கு முன்பாக என் மதம் முஹம்மதுவின் மதமாக இருந்தது. இறைவனின் தூதரான. அவருக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். பொழுது புலர்வதற்குள் நான் மசூதிக்குச் செல்வேன். என் முகம், கைகள், கால்கள் என அனைத்தையும் நன்கு கழுவுவேன். அதிகாலை, பகல், நண்பகல், மாலை, இரவு என ஐந்து நேரங்களும் தொழுதேன். தங்கம், வெள்ளி, விதைகள், கால்நடைகள், ஆடுகள், அரிசி, கோதுமை, பார்லி என ஒவ்வொரு ஆண்டும் சகாத் கொடுத்தேன். காஃபிர்களை எதிர்த்து ஜிஹாத் போர்களில் ஈடுபட்டேன். எல்லா முஸ்லிம்களையும் போலவே மெக்காவுக்குப் புனிதப் பயணங்கள் மேற்கொண்டேன்.

என் தந்தைக்கு ஆறு மகன்கள் ஐந்து மகள்கள். என் அம்மாவுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள். நான் எங்கள் ஊரிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்டுவந்தபோது எனக்கு 37 வயதாகியிருந்தது. இந்த கிறிஸ்தவர்களின் தேசத்தில் நான் 24 வருடங்களாக வாழ்ந்துவருகிறேன்.

வட கரோலினாவின் மக்களே… தென் கரோலினாவின் மக்களே… ஓ அமெரிக்க மக்களே…ஜிம் ஓவனின் முதல் மகனுடைய பெயர் தாமஸ். அவருடைய சகோதரியின் பெயர் மாஸா ஜேன் (மார்த்தா ஜேன்?). அருமையான குடும்பம்.

டாம் ஓவனுக்கும் நெல் ஓவனுக்கும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். முதலாவது மகனின் பெயர் ஜிம். இரண்டாவது மகனின் பெயர் ஜான். மகளின் பெயர் மெலிஸா.

சையது ஜின் ஓவனும் அவருடைய மனைவி பெட்ஸிக்கும் இரண்டு மகன்கள், ஐந்து மகள்கள்.

அவர்களின் பெயர்கள் டாம், ஜான், மெர்ஸி, மரியம், சோபியா, மார்கரெட், எலிஸா. இந்தக் குடும்பம் அருமையானது. ஜான் ஓவனின் மனைவியின் பெயர் லூசி. நல்ல மனைவி. அவருக்கு ஐந்து குழந்தைகள். மூவர் இறந்துவிட்டனர். இருவர் உயிருடன் இருக்கின்றனர்.

வட கரோலினாவின் மக்களே… தென் கரோலினாவின் மக்களே… ஓ அமெரிக்க மக்களே… இப்படியான ஒரு குடும்பம் உங்கள் மத்தியில் இருக்கிறது; இருக்கிறது; இருக்கிறது. இறைவன் மீது இவர்களைப் போல் இவ்வளவு நம்பிக்கை கொண்ட ஒரு அருமையான குடும்பம் இருக்கிறது.

முன்பு நான் புகழ் பெற்ற குர்ரானை விரும்பிப் படித்துவந்தேன். ஜெனரல் ஜிம் ஓவனும் அவருடைய மனைவியும் புனித பைபிள் படிப்பார்கள். எனக்கும் படித்துக் காட்டுவார்கள். கடவுளின் புனித வேதாகமம். நம் இறைவன்… நம் கர்த்தர்… ரம் ராஜா…. நம் வாழ்வில் நடக்கும் அனைத்தையும் உத்தரவிடுபவர் அவரே. செல்வம், வளங்கள் எல்லாம் அவராலேயே. கருணையுடன் அவருடைய பெலத்தினால் செய்கிறார்… கட்டுப்பாடுகள் அற்றுக் கருணை காட்டுகிறார். உங்கள் மனங்களை அவருடைய வேதாகமம் பக்கம் திருப்புங்கள்… அவருடைய நியாயம் பக்கம் திரும்புங்கள். அனைத்து உலகங்களின் அதிபதி அவர். எல்லையற்ற நன்றிகள். அவர் கருணை அளவற்றது… அவருடைய நன்மைகள் எல்லையற்றவை.

மோசஸ் பத்து கட்டளைகளைக் கொடுத்தார்… ரட்சகர், மெசையா இயேசுவோ கருணையையும் அன்பையும் தந்தார்.

நான் முஹமதியராக இருந்தபோது இப்படிப் பிரார்த்தனை செய்தேன் : இறைவனுக்கு நன்றி… அனைத்து உலகங்களின் இறைவன். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி. எங்கள் ரட்சகா உன்னையே வணங்குகிறோம்… உன்னிடமே உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. எங்களில் எவர்கள் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழியில் நடத்துவாயாக. உன் கோபத்துள்ளான யூதர்களின் வழியில் அல்ல; வழிகேடான கிறிஸ்தவர்களின் வழியுமல்ல.

ஆனால், இப்போது நான் இப்படி பிரார்த்தனை செய்கிறேன்…

கர்த்தரே உம்மைத் துதிக்கிறேன்.

இதுபோல் தேவனும் ரட்சகருமான இயேசு என்றெல்லாம் சொல்லி ஸ்தோத்திரம் செய்கிறேன்.

நான் நமது இந்த நாட்டில் மிகுந்த அவசியத்தின் காரணமாக வசித்துவருகிறேன். கெட்டவர்கள் என்னை வன்முறையால் சிறைப்பிடித்தனர். என்னைக் கிறிஸ்தவர்களுக்கு விற்றனர். ஒன்றரை மாத காலம் பெருங்கடலில் பயணம் செய்து கிறிஸ்தவ பூமியில் சார்ல்ஸ்டன் என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தேன். சிறிய, மெலிந்த, கொடூரமான, இறை நம்பிக்கையற்ற, புனித நூல்களை வாசிக்காத, பிரார்த்தனையே செய்யாத ஒருவன் கைகளில் சிக்கினேன். இப்படியான பல குற்றங்கள் செய்த தீயவன் ஒருவனுடன் இருக்கப் பிடிக்காமல் தப்பித்து ஓடினேன்.

ஒரு மாதம் கழித்து கர்த்தர் என்னை ஒரு நல்லவரிடம் கொண்டுவந்து சேர்த்தார். இவர் கர்த்தர் மேல் விசுவாசம் கொண்டவர். நன்மைகள் செய்யக்கூடியவர். அவர் பெயர் ஜிம் ஓவன். அவருடைய சகோதரரின் பெயர் கவர்னரான ஜான் ஓவன். இவர்கள் இருவரும் அற்புதமான மனிதர்கள். நான் இப்போது பால்கன் பகுதியில் வசிக்கிறேன்.

ஜிம் ஓவன் என்னை அடிப்பதே இல்லை. என்னைத் திட்டுவதே இல்லை. நான் பசியால் வாடியதில்லை. என்னை இவர்கள் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதில்லை. கடினமான வேலைகள் இல்லை. நான் மிகவும் மெலிந்த தேகம் கொண்டவன். பலவீனமானவன். என்னால் கடினமான வேலைகள் செய்ய முடியாது. ஜிம் ஓவனுடன் இருக்கும் கடந்த இருபது வருடங்களில் எனக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இல்லை.

(ஓமர் அமெரிக்க உள் நாட்டுப் போர் தொடங்கியதுவரை உயிருடன் இருந்தார். ஜிம் ஓவனின் வீட்டின் பின் பகுதியில் இவருக்கென்று ஒரு தனி தங்குமிடம் தரப்பட்டிருந்தது. இறந்தபின் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்)

0

(A Muslim American Slave: The Life of Omar Ibn Said)

பகிர:
nv-author-image

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *