Skip to content
Home » உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #1

உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #1

குழந்தைகள் கவனத்தில் கொள்ளவேண்டியவை – பாகம் 1

(பெற்றோரின் கவனத்துக்கு: வரும் செவ்வாயன்று வதை முகாம் நினைவு நாள் அனுசரிக்கப் போகிறோம். 4-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள் முழுவதும் வதைமுகாம் படுகொலைகள், துயரங்கள் தொடர்பான திரைப்படங்கள், விரிவுரைகள் நடக்கும். பெரும்பாலானவை மிகவும் கொடூரமான காட்சிகளையும் தகவல்களையும் கொண்டதாக இருக்கும். மிகுந்த வேதனையைத் தரும். உங்கள் குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதம் எனில் இந்த அனுமதிக் கடிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்து அனுப்பவும். நன்றி – பள்ளி நிர்வாகம்)

நள்ளிரவில் நாஜிக்கள் வந்து என்னை வதைமுகாமுக்கு இழுத்துச் செல்ல வந்தால், கீழ்க்காணும் பொருட்களை எடுத்து செல்லத் திட்டமிட்டிருக்கிறேன். கொஞ்சம் உணவு, எனக்கான உதவித்தொகை, படுக்கை, வாக்மன் பாடல்கருவி, டூத் பிரஷ், சமையலறைக் கத்தி, நன்சாகூ சங்கிலிச் சிலம்பம், நிஞ்சா நட்சத்திரங்கள், டார்ச் லைட், நகைச்சுவைக் கதைகள்

வதை முகாம் என்றால் பூலோக நரகம்…. கிறிஸ்தல்நாச் அதாவது உடைந்த கண்ணாடிகளின் இரவு.

நவம்பர் 10, 1938 அன்று நாஜிக்கள் யூதர்களின் கடையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். வழிபாட்டு மையங்களை எரித்தனர். அதனால்தான் அந்த நாள் உடைந்த கண்ணடிகளின் இரவு என்று அழைக்கப்படுகிறது.

நீங்கள் வசிக்கும் பகுதியில் உடைந்த கண்ணாடிகளின் இரவு எங்காவது வந்தால், தப்பி ஓடிவிடுங்கள்.

ஹாலோகாஸ்ட் என்ற திரைப்படத்தில், வைஸஸ் குடும்பத்தினர், உடைந்த கண்ணாடிகளின் இரவு வந்த பின்னரும் அங்கிருந்து புறப்படாமல் நீண்ட நாட்கள் காத்திருந்தனர். அதன் பின் அனைவரும் கொல்லப்பட்டனர். அவர்களுடைய மகன் ரூடி மட்டுமே உயிர் பிழைத்தான். இன்னொரு பையன் கார்ல் வைஸை புக்கன்வால்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

புக்கன்வால்ட் என்பது ஜெர்மனியில் இருந்த மிகப் பெரிய வதைமுகாம்களில் ஒன்று. 1937-ல் இயங்க ஆரம்பித்தது.

மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தால், ஜெர்மனியர்கள் என்ன செய்தர்கள் என்பதை உங்களுக்கு கேட்க விருப்பமில்லையென்றால், வானொலியை அணைத்துவிட்டுச் சென்றுவிடுங்கள். ஏனென்றால் நான் இப்போது புக்கன்வால்ட் பற்றிச் சொல்லப் போகிறேன்.

-சி.பி.எஸ். நியூஸ், ஏழாண்டுகள் கழித்து 1945-ல்

கார்ல் வைஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜேம்ஸ் வுட்ஸ். ‘ரெய்ட் ஆன் எண்டெபி’ திரைப்படத்தில் இஸ்ரேலிய விமானப்படை விமானியாகவும் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவருடைய பெயர் கேப்டன் சாமி பெர்க்.

அந்தப் படத்தில் ஜான் சாக்ஸனும் விமானியாக நடித்திருந்தார். கராத்தேயில் கறுப்பு பெல்ட் வாங்கிய அவர் ‘என்ட்டர் தி டிராகன்’ படத்திலும் நடித்திருந்தார்.

அடுத்த் தடவை  ‘உடைந்த கண்ணாடிகளின் இரவு’ வந்தால் நான் தீனாவை என்னுடன் அழைத்துக்கொண்டு போய்விடுவேன். அவளுடைய பெற்றோர் போகவேண்டம் என்று சொல்வார்கள். ஆனால், நாங்கள் உயிர் வாழ்வேண்டுமென்றால் உடனே புறப்பட்டாகவேண்டும். ஒரு நொடி கூடத் தாமதிக்கக் கூடாது. நெடுஞ்சாலைக்கு ஓடிச் சென்று வழியில் வரும் ஏதாவது ஒரு வண்டிக்குக் கை காட்டி ஏறி உயிர் தப்பித்தாகவேண்டும். நெடுஞ்சாலை அருகில் தான் செல்கிறது. கெவினின் அம்மா எங்களைத் தன் வாகனத்தில் அழைத்துச் செல்லக்கூடும்.

நாங்கள் அநேகமாக ஃப்ளோரிடாவுக்குச் செல்வோம். மியாமியில் ஃபவுன்டென்ப்ளூ ஹோட்டலில் தங்கிக் கொள்வோம். ஒவ்வொரு ஜனவரி மாதமும் தீனா அங்கு தன் குடும்பத்துடன் சென்று வருவது வழக்கம். அங்கே ஒரு டென்னிஸ் பந்து மைதானமும் நீச்சல் குளமும் இருக்கிறது.

நியூயர்க்கிலிருந்து ஃப்ளோரிடா 1330 மைல் தொலைவில் இருக்கிறது. தெற்கு ஐ-95 என்ற நெடுஞ்சாலைக்கு முதலில் செல்லவேண்டும். அங்கிருந்து மியாமிக்கு ஒரே நேரான நீண்ட நெடுஞ்சாலையில் செல்லவேண்டும்.

கெவின் யூதர் அல்ல. கோடையில் நாங்கள் ஒன்றாக சைக்கிள் ஓட்டுவோம். அவனுடைய அம்மா யூத வெறுப்பு கொண்ட கெட்டவர் என்று அம்மா சொல்லியிருக்கிறார்.

1934-ல் நியூ யார்க் டைம்ஸில் ‘யூதர்களை நாஜிக்கள் படுகொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற செய்தி நம்பவே முடியாத வதந்தி, கட்டுக்கதை என்று வருணித்திருந்தது’.

நாஜிக்கள் எப்போதும் முன் வாசல் கதவின் வழியாகத்தான் நுழைவார்கள். கதவை ஓங்கித் தட்டுவார்கள். ‘ஷ்னெல்’ என்று கத்துவார்கள். அதற்கு ஜெர்மன் மொழியில் ‘சீக்கிரம்’ என்று அர்த்தம். அதன் பின் அவர்களில் ஒருவன் பூட்ஸ் காலினால் கதவை ஓங்கி உதைப்பான். நாஜிக்கள் எப்போதும் பளபளவென மின்னும் பூட்ஸ்களையே அணிவார்கள்.

ஜெர்மன் வார்த்தை – அர்த்தம்
அசுடங் – அட்டென்ஷன்
ஃப்யூரர் – தலைவர்
ட்யூட்ச்லாந்து – ஜெர்மனி
ஜூடென் – யூதர்
வெர்போடென் – தடைசெய்யப்பட்டவை
ஹூர் – வேசி
ஷ்வெய்ன்ஹண்ட் பன்றி
ப்ராயுன் – பெண்
கிண்டர் – குழந்தை

ரோமானியர்களால் ரப்பி அகிவா சித்ரவதை செய்து கொல்லப்பட்டபோது, அவர் சிரித்தபடி மகிழ்ச்சியுடன், அவர் எந்த வலியையும் உணராதவராக, ஒரே இறைவனை முழு மனதுடனும் ஆன்மா லயித்து முழு வலிமையுடன் பிரார்த்தனைசெய்து கொண்டிருப்பதை அவருடைய சீடர்கள் பார்த்தார்கள். ‘எந்த வலியையும் உணராமல் மகிழ்ச்சியுடன் பிரார்த்தனை செய்ய உங்களால் எப்படி முடிகிறது’ என்று கேட்டனர். ரப்பி அகிவா சொன்னார்: எனது முழு வாழ்க்கையையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நாஜிக்கள் நுழையும்போது எங்கே இருக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில், முன் வாசல் தவிர என் வீட்டில் இருந்து மூன்று வழிகளில் வெளியேற முடியும்.

1. பின் வாசல். அதன் வழியாகச் சென்றால் புழக்கடைக்குச் சென்றுவிடலாம்.
2. வீட்டின் உள்ளறையில் ஒரு கதவு இருக்கிறது. அது பக்கவாட்டு, மரப்பலைகளால் ஆன முற்றத்துக்கு செல்லும்.
3. தீ பிடித்தால் தப்பிக்க என்று ஒரு ஏணிப்படி, என் படுக்கையறை ஜன்னலுக்கு அருகில் இருக்கிறது.
(என் படுக்கையறை ஜன்னல் வீட்டின் முன் பக்கத்தைப் பார்த்தபடி இருக்கிறது. எனவே நாஜிக்கள் அனைவரும் வீட்டுக்குள் வந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே அதன் வழியாக இறங்கித் தப்பிச் செல்ல முயற்சி செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த ஏணி வழி நீங்கள் இறங்கித் தப்பிப்பதை அவர்கள் எளிதில் பார்த்துவிடுவார்கள்.

என் வீட்டில் ஒளிந்துகொள்ள முகவும் வசதியான இடங்கள்: வீட்டில் ஹாலின் மூலையில் இருக்கும் உயரமான லினென் அலமாரியின் மேலே, சலவைக்கான துணிகள் போடப்பட்டிருக்கும் அலமாரியில் (துணிகளுக்குள் நன்றாக உங்கள் உடம்பைப் புதைக்குக் கொண்டுவிடவேண்டும்), மேலே இருக்கும் பரணில், பெரிய பெரிய மரப்பெட்டிகளின் பின்னால், பாதாள அறையில் இருக்கும் சோஃபாவுக்குப் பின்னால் (நீங்கள் குட்டியாக இருந்தால்).

ஆன்னா ஃப்ராங் வீட்டுப் பரணில் இரண்டு வருடங்கள் ஒளிந்திருந்தாள்.

கொஞ்சம் கூடுதல் உணவு எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.

வீட்டின் பின்பக்கம் இருக்கும் மர வீட்டினுள்ளும் ஒளிந்துகொள்ளலாம் நாஜிக்கள் ஒவ்வொரு மர வீட்டையும் சோதித்துப் பார்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

ஷூ கால்களுடன் மரத்தின் மீது ஏறுவது மிகவும் சிரமமாகவே இருக்கும்.

நிஞ்சாக்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துகொள்ளமுடியும்.

எவையெல்லாம் பயனுள்ளவையோ அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொள்ளுங்கள் – ப்ரூஸ் லி.

ஒருவேளை கெவின் என்னையும் தீனாவையும் தன் வீட்டுப் பரணில் ஒளிந்துகொள்ள அனுமதிப்பான் என்று நினைக்கிறேன்.

அன்னா வைஸ்தான் ஹாலோகாஸ்ட் படத்தில் வைஸ் தம்பதியின் மகள். 16 வயது. இங்காவின் வீட்டில் ஒரு ரகசிய அறையில் அவளுடைய அம்மாவுடன் ஒளிந்துகொண்டிருந்தாள். இங்கா அன்னாவின் அண்ணனான கார்ல் வைஸின் மனைவி. கார்ல் வைஸை புக்கன்வால்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ஒரு நாள் அன்னாவுக்கு அவளுடைய அம்மாவின் மீது கோபம் வந்தது. ஜெர்மனியை விட்டுத் தப்பிச் செல்ல வாய்ப்பு வந்தபோது அதைத் தவற விட்டதற்காக அம்மா மீது கோபம். அம்மாவைத் திட்டியபடியே கோபத்தில் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாள். அதன் பின் நாஜிக்கள் அவளைச் சிறைப்பிடித்துக் கற்பழித்தனர்.

‘என்ட்டர் தி டிராகன்’ படத்தில் ப்ரூஸ்லியின் தங்கையைச் சில குண்டர்கள் கற்பழிக்க முயற்சி செய்வார்கள். எனவே அவள் அவர்கள் கையில் சிக்காமல் தற்கொலை செய்துகொண்டுவிடுவாள். ஹான் என்பவன் தான் தங்கை மீதான தாக்குதலுக்குக் காரணம் என்பது ப்ரூஸ் லிக்கு தெரியவரும். ஹானைக் கொன்றுவிட்டு அவனுடைய படையை அடித்து விரட்டுவார் ப்ரூஸ்லி.

அன்னா வைஸ் சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. 1944 வாக்கில் யுனைட்டட் ஸ்டேட்ஸில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. ஜெர்மானியர்கள் அச்சுறுத்தக்கூடியவர்கள் என்று 6% பேரும், ஜப்பானியர்கள் அச்சுறுத்தக்கூடியவர்கள் என்று 9% பேரும், யூதர்கள் அச்சுறுத்தக்கூடியவர்கள் என்று 24% பேரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

உங்கள் வீட்டில் இருக்கும் கீழ்கண்ட பொருட்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தலாம்: பேனாக்கள், பென்சில்கள், கத்தரிக்கோல், கையடக்கமான அரம், ஸ்க்ரூ டிரைவர்கள், பேஸ்பால் மட்டை, நாஜிகளின் கண்ணில் தூவ உப்பு, கத்திகள், முள் கரண்டிகள், சுத்தியல், பல் குத்தும் குச்சிகள், கண்ணைக் கூச வைக்கும் டார்ச், கழற்றி எரியும்படியான பல்புகள், டூத் பிரஷின் கடினமான பக்கம், கூர்மையான முள் கொண்ட சீப்புகள், ஐஸ் கட்டி கரண்டி, கோடரி, பார்பெக்யூ திரவம், அதை பீய்ச்சி அடித்து நெருப்பு பற்றி வைக்கலாம். மண்வெட்டி, பிகாஸ், களை கொத்தி, ஆணிகள், ஸ்க்ரூக்ள், ரேஸர் பிளேடுகள், தையல் ஊசிகள், சேஃடி பின்கள், கோணூசிகள்.

யூதர்கள் 1290-ல் இங்கிலாந்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

1306-ல் ஃபிரான்ஸிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
1349-ல் ஹங்கேரியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
1394-ல் மீண்டும் ஃப்ரான்ஸில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
1421-ல் ஆஸ்த்ரியாவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
1445-ல் லிதுவேனியாவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
1492-ல் ஸ்பெய்னிலிந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
1497-ல் போர்ச்சுகல்லில் இருந்தும் 1744-ல் மொரோவியாவிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டனர்.

சில பால் பாயிண்ட் பேனாக்களில் உள்ள இங்க் கேட்ரிஜ்கள் மாற்ற முடியும்படியாக இருக்கும். அந்த கேட்ரிஜை வெளியே எடுத்து அதற்குள் தையல் ஊசியைச் செருகி நிஞ்சா ஊதுகுழல் துப்பாக்கிபோல் ஆக்கி குறிபார்த்துத் தாக்கலாம்.

ரப்பி ப்ரையர் ஹாலோகாஸ்ட் ஏன் நடந்தது என்பது ஒரு காரணம் சொல்கிறார்: யூதர்கள் தாங்கள் வாழும் ஊரில் இருப்பவர்களுடன் கலந்துவிட்டதுதான் காரணம்.

அதனால்தான் எகிப்தில் யூதக் கடவுள் யூதர்களை அடிமையாக்கினார்.

ரோமானியர்களால் யூதர்களின் புனித ஆலயம் இடிக்கப்பட்டதற்கும் அதுவே காரணம்.

சாலமன் மன்னர் முதல் யூதப் புனித கோவிலைக் கட்டினார். பாபிலோனியர்கள் அதை இடித்துவிட்டு, எல்லா யூதர்களையும் விரட்டியடித்தனர். 70 ஆண்டுகள் கழித்து, இரண்டாவது கோவில் கட்டப்பட்டது. ரோமானியர்கள் அதை இடித்து யூதர்களை விரட்டியடித்தனர்.

மூன்றாவது ஆலயம் என்று ஒன்று இல்லை.

ஊரில் இருப்பவர்களுடன் கலந்துவிடுவது என்றால் யூதர்கள் தமது அடையாளத்தை இழந்துபோவது என்று அர்த்தம், வுடி ஆலனைப் போல.

என் அம்மா வுடி ஆலன், தன்னையே வெறுக்கும் யூதர் என்று சொல்வார்.

யூதர்கள் இந்த உலகில் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர் துளியும் விண்ணுலகில் அடுத்த ஆலயம் கட்டப்பட உதவுவதாக புனித நூலான தால்முத் சொல்கிறது.

சீனாவில் கராத்தே கற்றுத் தரப்படும் இடத்துக்கு ஷாவ்லின் டெம்பிள் என்று பெயர். ‘சைனீஸ் கனெக்ஷன்’ என்ற திரைப்படத்தில், ப்ரூஸ் லீ தான் கராத்தே படித்த பள்ளிக்குச் சொல்வார். அங்கு அவருடைய ஆசான் கொல்லப்பட்டிருப்பார். ஜப்பானியர்கள்தான் கொன்றதாகத் தெரியவந்ததும் அவர்களுடைய பள்ளிக்குச் சென்று அவர்களை அடிப்பார். அந்தக் கொலைக்கு சம்பந்தம் இல்லாதவர்களையும் அடித்துக் கொல்லுவார். ஒரு ரஷ்ய வீரனுடன் சண்டையிடும் காட்சி மிகவும் அருமையாக இருக்கும். அதுபோல் ‘சீனர்களும் நாய்களும் உள்ளே வரக்கூடாது’ என்ற ஜப்பானிய அறிவிப்புப் பலகையை உடைத்து நொறுக்கும் காட்சியும் பிரமாதமாக இருக்கும்.

ப்ரூஸ் லியின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது, ’கேம் ஆஃப் டெத்’. அதில் கரீம் அப்துல் ஜாஃபர் என்பவருடன் ப்ரூஸ் லி சண்டை போடுவார்.

கரீம் அப்துல் ஜாஃபர் ஒரு முஸ்லீம்.

யூதர்கள் எல்லாம் நாய்க்குப் பிறந்தவர்கள் மற்றும் பன்றிக்குப் பிறந்தவர்கள் என்று முஸ்லிம்கள் சொல்வார்கள்.

(தொடரும்)

0

Holocaust Tips for Kids (Beware of God) by Auslander Shalom

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *