Skip to content
Home » உலகக் கதைகள் #9 – வால்டேரின் ‘ழான் கலாஸின் மரணம் : சில குறிப்புகள்’

உலகக் கதைகள் #9 – வால்டேரின் ‘ழான் கலாஸின் மரணம் : சில குறிப்புகள்’

உலகக் கதைகள்

ழான் கலாஸ், 68 வயது. டல்லெளஸ் பகுதியில் 40 வருடங்களுக்கு மேலாக வணிகத்தில் ஈடுபட்டுவந்தார். அவரைத் தெரிந்தவர்கள் எல்லாம் அவர் ஒரு நல்ல குடும்பத் தலைவர், அன்பான தந்தை என்றே சொல்வார்கள். அவர் ஒரு ப்ராட்டஸ்டண்ட். அவருடைய மனைவி, குழந்தைகள் எல்லாரும் ப்ராட்டஸ்டண்ட்களே; ஒரே ஒரு மகனைத் தவிர. அவன் ப்ராட்டஸ்டண்ட் மதத்தை விட்டு விலகி கத்தோலிக்கராகியிருந்தான். அவன் அப்பா அவனுக்கு அதற்கான அனுமதி தந்திருந்தார். அவனுக்கு கொஞ்சம் உதவித்தொகையும் கொடுத்து வந்தார்.

சமூகத்தின் பிணைப்பைச் சிதைக்கும் மத வெறியிலிருந்து அவர் ரொம்பவே விலகிவிட்டிருந்தார். தன் மகன் லூயி கலாஸ் மதம் மாறியதை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். முப்பது வருடங்களாக அவர்களுடைய வீட்டில் ஒரு தீவிர கத்தோலிக்க நம்பிக்கை கொண்ட பெண்மணிதான் பணிப் பெண்ணாக இருந்தார். அவர்தான் இவருடைய குழந்தைகளை எல்லாம் பராமரித்தும் வந்திருந்தார்.

ழான் கலாஸின் இன்னொரு மகனின் பெயர் மார்க் ஆண்டனி. அவன் கல்வி அறிவு பெற்றவன். கொஞ்சம் பதற்றமும், மந்த குணமும், கொஞ்சம் முரட்டுத்தனமும் கொண்டவன். இளைஞனான அவன் வணிகத்தில் ஈடுபட விரும்பியிருக்கவில்லை (அதற்கான திறமை இருந்திருக்கவும் இல்லை). சட்டத்துறையில் ஈடுபடவும் விரும்பியிருக்கவில்லை (அவன் ஒரு கத்தோலிக்கர் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள் எதுவும் இருந்திருக்கவும் இல்லை. அது இருந்தால்தான் வழக்கறிஞராக ஆக முடியும். கத்தோலிக்கம் கோலோச்சும் ஃப்ரான்ஸ் பகுதியில் ப்ராட்டஸ்டன்ட்களுக்கு அந்த உரிமை கிடையாது.).

வாழ்க்கை வெறுத்துப் போய் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருந்தான். அதைத் தன் நண்பனிடம் சொல்லவும் செய்திருந்தான். தற்கொலை பற்றி எழுதப்பட்ட அனைத்தையும் அவன் படித்திருந்தான். அதனால் அவனுடைய தற்கொலை எண்ணம் மேலும் உறுதியடைந்திருந்தது.

ஒரு நாள் சூதாட்டத்தில் கையில் இருந்த பணம் முழுவதையும் இழந்தவன், அன்றைக்கே தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தான். அவனுடைய மற்றும் குடும்ப நண்பனான லாவைஸி (19 வயது இளைஞன்) முந்தின நாள்தான் போர்டாக்ஸிலிருந்து இவர்களுடைய வீட்டுக்கு வந்திருந்தான். ரொம்பவும் நல்லவன்; ப்ராட்டஸ்டண்ட் மத சம்பிரதாயங்களில் மரியாதை கொண்டவன். டல்லெளஸ் பகுதியில் புகழ் பெற்ற வழக்கறிஞரின் மகனும் கூட. கலாஸ், அவருடைய மனைவி, மூத்த மகன் மார்க் ஆண்டனி, இரண்டாவது மகன் பியரி ஆகியோருடன் விருந்து உண்டான். அது முடிந்ததும் தனது அறைக்குச் சென்றுவிட்டான்.

மார்க் ஆண்டனி எங்கோ சென்றான். இளைஞன் லாவைஸி அந்தக் குடும்பத்திடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்படும் முன் பியரியுடன் கீழ்த்தளத்துக்குச் சென்றான். அவர்களுடைய வீட்டின் கீழ்த்தளத்தில்தான் அவர்களுடைய கடை இருந்தது. கடையில் மார்க் ஆண்டனியின் உயிரற்ற உடல் கதவில் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தான்.

ஆண்டனியின் கோட் அருகில் இருந்த மேஜையில் இருந்தது. தூக்கில் தொங்கியவனின் சட்டை பெரிதாக கசங்கியிருக்கவே இல்லை. தலைமுடி நன்கு வாரப்பட்டிருந்தது. அவன் உடம்பில் எந்தவொரு காயமோ வன்முறையின் தடயமோ எதுவுமே இல்லை!

அவனுடைய அம்மாவும் அப்பாவும் அடைந்த வேதனையையும் வலியையும் விவரிக்க விரும்பவில்லை. அவர்கள் உரத்த குரலில் அழுததை அக்கம் பக்கத்து வீட்டினர் கேட்டிருக்கிறார்கள். லாவைஸியும் பியரியும் உடனே அலறி அடித்துக்கொண்டு மருத்துவரையும் காவலரையும் அழைத்து வந்தனர். அவர்கள் இதையெல்லாம் செய்த போது அம்மாவும் அப்பாவும் கதறிக் கதறி அழுதுகொண்டிருந்தனர்.

டல்லெளஸில் இருந்த அனைவரும் அங்கு கூடிவிட்டனர். அவர்கள் எல்லாரும் மூட நம்பிக்கை கொண்டவர்கள். உணர்ச்சிவசப்பட்டுச் செயல்படக்கூடியவர்கள். தமது மத நம்பிக்கையைப் பின்பற்றாதவர்களை அரக்கர்களாகக் கருதி வெறுக்கக்கூடியவர்கள்.

இந்த டல்லெளஸில்தான் மூன்றாம் ஹென்றியின் மரணத்துக்கு கர்த்தருக்கு மிகப் பெரிய நன்றி, வெகு ஆர்ப்பாட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. நான்காம் ஹென்றியை முதலில் யார் அங்கீகரித்து ஏற்கிறார்களோ அவனுடைய குரல்வளையை அறுத்தெறிவேன் என்று மக்கள் சபதம் எடுத்துக்கொண்ட இடமும்கூட.

இந்த ஊரில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் நாலாயிரம் புறச் சமயத்தினரை ( இந்த இடத்தில் ப்ராட்டஸ்டன்ட்கள் என்று அர்த்தம்) கொன்று குவித்த நாளை இப்போதும் வருடந்தோறும் பெரிய ஊர்வலத்துடன் பட்டாசுகள் வெடித்துக் கோலாகலமாகக் கொண்டாடிவருகிறார்கள். அரசு இதைப் பலமுறை தடை செய்திருக்கிறது. ஆனால், டல்லெளசியர்கள் இந்த விழாவை வசந்தகாலத் திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்துவருகிறார்கள்.

(யாரோ தன் மகனைக் கத்தியால் குத்திவிட்டதாக ழான் கலாஸ் முதலில் சொல்லியிருந்தார். அன்றைய ஃப்ரான்ஸில் தற்கொலை செய்துகொண்டால் மிகப் பெரிய பாவமாக, ஆண்டவருக்கு எதிரான செயலாகப் பார்க்கப்பட்டது. தற்கொலை செய்துகொண்டவர்களின் உடலை நிர்வாணப்படுத்தி கால்களைக் கட்டி தெருத்தெருவாக விலங்கை இழுத்துச் செல்வதுபோல் இழுத்துச் சென்று புதைப்பார்கள்.

தன் மகனுக்கு இந்த அவமானம் வரவேண்டாம் என்பதால்தான் ழான் கலாஸும் அவருடைய குடும்பத்தினரும் தற்கொலை என்பதைச் சொல்லவில்லை. யாரோ கடைக்குள் நுழைந்து மகனைக் குத்திக் கொன்றதாகச் சொன்னார்கள். ஆனால் மருத்துவர் பரிசோதித்துப் பார்த்து கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். ஒன்று இவராகவே தூக்கில் தொங்கியிருக்கவேண்டும்; அல்லது யாரேனும் கை கால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டியிருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதுவே ழான் கலாஸ் குடும்பத்தின் மீது சந்தேகம் எழக் காரணமாக ஆகிவிட்டது).

கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவன், ழான் கலாஸ்தான் தன் மகன் மார்க் ஆண்டனியைத் தூக்கில் கட்டித் தொங்கவிட்டுக் கொன்றுவிட்டார் என்று கத்தினான். அடுத்த நொடியே அனைவரும் அதையே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். மார்க் ஆண்டனி மறுநாள் காலையில் கத்தோலிக்கராக மாறத் தீர்மானித்திருந்தான். கத்தோலிக்கர்கள் மீதான வெறுப்பினால் லாவைஸியும் கலாஸ் குடும்பத்தினரும் ஆண்டனியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார்கள் என்று இன்னொருவன் புதியதாகச் சேர்த்துச் சொன்னான். அதுவே உண்மை என்று அனைவரும் நம்பினர்.

ஒருவன் மத நம்பிக்கையை மாற்றிக்கொள்ள முயன்றால் (கத்தோலிக்கத்துக்கு மாற விரும்பினால்) ப்ராட்டஸ்டண்ட் பெற்றோர் அவனைக் கொன்றுவிடுவார் என்று ஒட்டு மொத்த ஊரும் நம்பியது.

உணர்ச்சியைத் தூண்டிவிடப்பட்டால் அதன் பின் நிறுத்தவே முடியாது. ஒரு புது கதை கட்டப்பட்டது: அந்த ஊரைச் சேர்ந்த ப்ராட்டஸ்டன்ட்கள் எல்லாரும் முந்தின நாள் ஒரு கூட்டம் நடத்தியிருக்கிறார்களாம். அனைவரும் ஒருமனதாக யார் அவனைத் தூக்கில் தொங்கவிடுவது என்பதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம். இளைஞன் லாவோஸ்தான் அது. அவனுக்கு செய்தி அனுப்பப்பட்டு போர்டாக்ஸில் இருந்து உடனே புறப்பட்டு வந்திருக்கிறான். அவன், ழான் கலாஸ், அவருடைய மனைவி, மகன் பியரி அனைவரும் தமது நண்பன், மகன், சகோதரனான மார்க் ஆண்டனியைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கிறார்கள். அதன் பின் தூக்கில் மாட்டியிருக்கிறார்கள்.

ஊரில் பரவிய வதந்தியின் வேகத்தையும் தீவிரத்தையும் பார்த்த தலைமை நீதிபதி சியர் டேவிட், விரைந்து தீர்ப்பு வழங்கிய பெருமையைத் தட்டிச் செல்ல விரும்பினார். சட்ட திட்டங்களுக்குப் பொருந்தாத ஒன்றைச் செய்தார். கலாஸ் குடும்பத்தினர், அவர்களுடைய கத்தோலிக்க பணிப்பெண், லாவைஸி அனைவரையும் சிறையில் அடைத்தார்.

இந்த மரணம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதுவுமே கொடூரமாக இருந்தது: மார்க் ஆண்டனி ஒரு தியாகி என்று அது சொன்னது.

அவன் தற்கொலை செய்திருந்தால் அவனுடைய உடம்பை நிர்வாணமாக தெருத்தெருவாக இழுத்துச் சென்றிருப்பார்கள். ஆனால் இப்போது அவனுடைய உடல் செயிண்ட் ஸ்டீஃபன் சர்ச்சில் தியாகிக்கான மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது, பாதிரியின் எதிர்ப்பையும் மீறி.

அந்த ஊரில் வெள்ளை, நீலம், சாம்பல், கறுப்பு என நான்கு கிறிஸ்தவ சகோதர சேவைக் குழுக்கள் இருந்தன. அதன் உறுப்பினர்கள் முக்காடு, கண்ணுக்கு மட்டும் இரண்டு துவாரங்கள் கொண்ட துணி முகமூடி அணிந்திருப்பார்கள். அந்த பிரந்தியத்தின் கவர்னர் ட்யூக் ஃபிட்ஸ்ஜேம்ஸையும் இந்த விழாவுக்கு அழைத்தனர். ஆனால் அவர் வரமறுத்துவிட்டார்.

மார்க் ஆண்டனி கலாஸுக்கு ஒரு தியாகியின் நல்லடக்கத்தைத் தந்தனர். எந்த சர்ச்சும் இந்த அளவுக்கு விமர்சையாக ஒரு தியாகியின் நல்லடக்கத்தைக் கொண்டாடியிருக்கமுடியாது.

இந்த விழாவில் ஒரு பயங்கரமான விஷயமும் நடந்தது. ஒரு பிரமாண்ட எலும்புக்கூடு ஒன்றையும் ஊர்வலத்தில் கொண்டுவந்திருந்தனர். அதன் கை, கால் முட்டுகள் நகர முடியும்படி இருந்தன. மார்க் ஆண்டனியின் உருவம் போல் அது கருதப்பட்டது. அதன் ஒருகையில் ஓலையும் இன்னொரு கையில் ஒரு மாபெரும் புனித வசனத்தை எழுதப் போவதுபோல் பேனாவும் இருந்தது. உண்மையில் அது அவனுடைய தந்தையின் மரண தண்டனையைத்தான் எழுதியது.

யாரும் அந்த மரணத்தை தற்கொலை என்று கருதவில்லை. புனிதரின் தியாகமாகவே மதித்தனர். அனைவரும் அவனை ஒரு புனிதராக மதிக்கத் தொடங்கினர்.

சிலர் அவனை வணங்கி வேண்டிக் கொண்டனர்.

சிலர் அவனுடைய கல்லறையில் சென்று பிரார்த்தனை செய்தனர்.

சிலர் அவனிடம் அற்புதங்கள் நிகழ்த்தச் சொல்லி வேண்டி நின்றனர்.

சிலர் பல்வேறு அற்புதங்களை அவன் செய்ததாகச் சொல்ல ஆரம்பித்தனர்.

ஒரு பாதிரியார், புனித நினைவுச் சின்னமாக அவனுடைய பல்லைத் தோண்டி எடுத்துக் கொண்டார். ஒரு அதி விசுவாசியான காது கேளாத பெண், மணி ஓசைகளை கேட்க ஆரம்பித்ததாகச் சொன்னார். பக்கவாதம் தாக்கிய ஒரு பாதிரி குணமடைந்தர். இந்த அற்புதங்களின் பட்டியல் அதிகாரபூர்வ முறையில் பதிவு செய்துகொள்ளப்பட்டன. இந்தப் புதிய புனிதரின் கல்லறையில் அற்புதங்களை எதிர்பார்த்து பல நாட்கள் பிரார்த்தனை செய்த ஒருவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக என்னிடம் ஒருவர் வாக்குமூலம் தந்திருக்கிறார்.
ழான் கலாஸுக்கு மரண தண்டனை தந்தே தீரவேண்டும் என்று வெள்ளை சேவைக் குழுவைச் சேர்ந்த மாஜிஸ்டிரேட்கள் சிலர் சொன்னார்கள்.

4000 ப்ராட்டஸ்டன்ட்களைக் கொன்று குவித்ததன் நினைவாகக் கொண்டாடப்படும் அந்த விசித்திரமான வருடாந்தர விழாவின் தாக்கம் இந்த மரண தண்டனைக்கு முக்கிய காரணமாக இருந்தது. வருடம் 1762 என்பது அந்த நிகழ்வின் இரு நூறாம் ஆண்டு நினைவு விழாவேறு. ஊர் முழுவதும் விழாக் கோலம் பூண்டது.

மக்களின் கற்பனை மேலும் தறிக் கெட்டு ஓடியது. இந்த விழாவின் சிறப்பு அம்சமாக ழான் கலாஸ் குடும்பத்தை பலி கொடுப்பது அமையும் என்று வெளிப்படையாகவே பேசினர். கர்த்தர்தான் தமது புனித மதத்தின் கொண்டாட்டத்துக்காக இந்த பாவிகளைப் பலியிட அனுப்பியிருப்பதாகச் சொன்னார்கள்.

இது போன்ற மற்றும் இதைவிட பயங்கரமான கற்பனை வசனங்களைப் பலர் கேட்டனர். பலர் சொன்னார்கள். அதுவும் நம்முடைய இந்த நவீன காலத்தில்! நமது தத்துவங்கள், விஞ்ஞானங்கள் எவ்வளவோ வளர்ந்திருக்கும் நிலையிலும் இது நடந்தது. நமது மத நம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள் மேம்படுவதற்கு நாம் ஏராளமாக எழுதிவரும் இந்த நாளில் இது நடந்தது. மத வெறி என்பது இன்றைய காலத்தின் பகுத்தறிவின் வெற்றியைப் பார்த்து உள்ளுக்குள் மிகுந்த கோபத்துடன் கொதித்துக் கொண்டிருந்திருக்கிறது.

13 நீதிபதிகள் பல மணி நேரம் விசாரணை செய்து தீர்ப்பு எழுதினார்கள். அந்தக் குடும்பத்துக்கு எதிராக ஒரு சாட்சியோ தடயமோ இருந்திருக்கவில்லை. எப்படி இருக்கமுடியும்? ஆனால், மதம் கொடுத்த மயக்கம் அந்த சாட்சியின் இடத்தை எடுத்துக்கொண்டது.

ழான் கலாஸையும் அவருடைய மகனையும் லாவைஸியையும் தூக்கில் போடவேண்டும் என்று ஆறு நீதிபதிகள் ஆரம்பத்தில் இருந்தே தீவிர முனைப்புடன் இருந்தனர். பிற கொஞ்சம் மிதமான ஏழு நீதிபதிகள், விசாரணை செய்து தீர்ப்பு வழங்கலாம் என்று சொன்னார்கள். வழக்கு விசாரணை சோர்வூட்டும் வகையில் நீண்டுகொண்டே சென்றது.

ஒரு நீதிபதிக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்பாவிகள்; இப்படி ஒரு கொடூரம் அவர்களால் செய்யப்பட்டிருக்காது என்று தோன்றியது. அவர்களுக்கு ஆதரவாக கடுமையாக வாதாடினார். காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக மனிதாபிமானத்தை அழுத்தமாக முன்வைத்தார். இந்த துரதிஷ்டமானவர்களின் ரத்தத்தைக் குடிக்கத் துடித்துக் கொண்டிருந்த அந்த ஊரின் ஒவ்வொரு வீட்டிலும் கலாஸ் குடும்பத்தின் குரலாக அவர் ஒலித்தார்.

கோபக்காரராக அறியப்பட்டிருந்த இன்னொரு நீதிபதி கலாஸ் குடும்பத்துக்கு எதிராக டவுனில் சென்று பேசினார். முந்தைய நீதிபதி சென்று தன் வாதங்களைச் சொல்லவேண்டிவந்தது. கூட்டம் பெரும் ஆரவாரத்துடன் கூக்குரலிட ஆரம்பிக்கவே தமது உயிரைக் கையில் பிடித்தபடி அங்கிருந்து தப்பிக்கவேண்டிவந்தது.

கலாஸ் குடும்பத்துக்கு ஆதரவாக இருந்த நீதிபதி தொடர்ந்து தன் தரப்பை கண்ணியமாக முன்வைத்துவந்தார். மற்றவர்கள் மரணச் சக்கரத்தில் கட்டி இழுத்து வந்து தூக்கு தண்டனை கொடுக்கத் தீர்மானித்தனர். இறுதியில் அந்த நல்ல நீதிபதியும் அதற்கு சம்மதிக்கவேண்டிவந்தது. ஏனென்றால் 13 நீதிபதிகளில் எட்டு பேர் தூக்கு தண்டனை தரவேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தனர். முதலில் எதிர்த்த ஏழு பேரில் ஒருவர் கடும் விவாதங்களுக்குப் பின்னர் தூக்கு தண்டனை தர சம்மதித்திருந்தார்.

தன் குடும்பத்தில் ஒருவரையே கொன்ற குற்றத்துக்கு ஒருவருக்கு மிகவும் கொடூரமான மரண தண்டனை விதிப்பதாக இருந்தால் அனைத்து ஜூரிகளும் ஒருமனதாக அந்தத் தீர்ப்பை வழங்கவேண்டும். அதுதொடர்பான சாட்சிகள் , தடயங்கள் எல்லாம் எந்தவொரு சந்தேகத்துக்கும் இடமின்றி அவர்தான் குற்றவாளி என்பதை நிரூபிப்பதாக இருக்கவேண்டும். சிறிய சந்தேகம் இருந்தாலும் மரண தண்டனை வழங்க வேண்டிய நீதிபதிக்கு தயக்கத்தை உருவாக்கிவிடும்.

நமது தர்க்கங்களிலும் சட்ட திட்டங்களிலும் இருக்கும் போதாமைகள் நமக்கு தினமும் தெரியத்தான் செய்கின்றன. ஒரே ஒரு வாக்கு அதிகமாக இருந்த நிலையிலும் ஒரு தந்தையை சிலுவையில் அறைந்து வண்டி சக்கரத்தில் பூட்டி, எலும்புகளை முறித்து, தீவைத்துக் கொன்றதை என்னவென்று சொல்ல? பழங்கால ஏதென்ஸ் நகரில் கூட பெரும்பான்மை வாக்குகள் ஐம்பதுக்கு மேல் அதிகம் இருக்கவேண்டும். அப்போதுதான் மரண தண்டனை வழங்க முடியும். கிரேக்கர்கள் நம்மைவிட புத்திசாலித்தனத்துடனும் மனிதாபிமானத்துடனும் இருந்திருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

68 வயதான ழான் கலாஸ் முதுமையால் பலவீனமானவர். கைகளில் போதிய வலு இருந்திருக்காது. அவர் 28 வயதே ஆன பலம் வாய்ந்த இளைஞன் ஒருவனைக் கழுத்தை நெரித்துக் கொல்லவும் தூக்கில் தொங்கவிடவும் முடிந்திருக்குமா? அப்படியானால் அவருக்கு அவருடைய மனைவி, இன்னொரு மகன், இளைஞன் லாவைஸி, பணிப்பெண் எல்லாருமே உதவி செய்திருப்பார்கள். அந்த சம்பவம் நடந்த அன்று மாலையில் இவர்கள் அனைவரும் அங்குதான் இருந்திருக்கிறார்கள்.

இந்த யூகமும் அபத்தமானதுதான். அந்தப் பணிப் பெண் ஒரு தீவிர கத்தோலிக்கர். தான் வளர்த்த இளைஞனைக் கொல்ல அதுவும் தனது கத்தோலிக்க மதத்தைத் தழுவியதற்காக கொல்ல முன்வருவாளா?

போர்டாக்ஸில் இருந்து தன் நண்பனின் கழுத்தை நெரித்துக் கொல்வதற்காக லாவைஸி இவ்வளவு விரைந்து வந்திருப்பானா? நண்பன் கத்தோலிக்கத்துக்கு மாறவிருப்பது அவனுக்குத் தெரிந்திருக்கவே செய்யாது.

ஒரு தாய் எப்படித் தன் அன்பு மகனைக் கழுத்தை நெரித்துக் கொல்ல உதவி செய்திருப்பாள்? இவர்கள் அனைவரையும் விட பலமான மார்க் ஆண்டனியை எந்தவொரு போராட்டமும், வன்முறையும், உடல் காயமும், கூக்குரலும் இல்லாமல் கொன்றிருக்கமுடியுமா? கூச்சல் போட்டிருந்தால் அக்கம் பக்கத்தினருக்குக் கேட்டிருக்குமே. அடி அடியென அடிக்காமல், காயங்களே இல்லாமல் கொன்றிருக்க முடியுமா? ஆடைகள் துளியும் கிழியாமல் இதையெல்லாம் செய்திருக்கமுடியுமா?

ஒரு கொலை செய்யப்பட்டிருந்தால் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்குமே குற்றத்தில் சம பங்கு உண்டு. இவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் கூட அங்கிருந்து எங்கும் சென்றிருக்கவில்லை. இவர்கள் அனைவருமே குற்றவாளி என்று நிச்சயம் சொல்லமுடியாது. அதுபோலவே வயதான அப்பா மட்டுமே குற்றம் செய்திருப்பார் என்றும் சொல்லமுடியாது. இருந்தும் அவருக்கு மட்டுமே மரணச் சக்கரத்தில் கட்டிப் போட்டு கொல்லும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

அதற்குச் சொல்லப்பட்ட காரணமும் பிற விஷயங்களைப்போல் நம்ப முடியாததாகவே இருந்தது. ழான் கலாஸுக்கு மரண தண்டனை தந்தே தீரவேண்டும் என்று தீர்மானித்திருந்த நீதிபதிகள் ஒரு விசித்திரமான காரணத்தைச் சொல்லி அனைவரையும் சம்மதிக்க வைத்திருந்தனர். அதாவது, ழான் கலாஸை அனைத்து வகையான சித்ரவதைக்கும் உட்படுத்தவேண்டும். வயதானவர் என்பதால் வலி தாங்காமல், யாரெல்லாம் சேர்ந்து கொன்றார்கள் என்பதை ஒப்புக்கொண்டுவிடுவார் என்று சொல்லி சித்ரவதைக்கு உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணைகள் முடிந்ததும் தண்டனை ஊர் மக்கள் முன்னால் பெரும் கொண்டாட்டம் போல் நடத்தப்பட்டது.

முதலில் ழான் கலாஸின் கைகள் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டன. ஒரு கப்பியில் மாட்டிய கயிறைக் கொண்டு அவருடைய கைகள் மேலே இழுக்கப்பட்டன. அதேநேரம் கால்களில் மிகப் பெரிய கல் கட்டப்பட்டு கீழே இழுக்கவைத்தனர். அவருடைய உடம்பு இதனால் மிக மோசமாக இழுபட்டு வலி உயிர் போனது.

ஆனால் கலாஸ் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

அதன் பின் இரண்டு குச்சிகளைக் கொண்டு ழான் கலாஸின் வாயைத் திறந்து வைத்தனர். அதன் பின் குடம் குடமாகத் தண்ணீரை வாயில் கொட்டினர். அதன் பின் அவருடைய வாயில் துணியை அடைத்தனர். மூக்கை ஒருவர் கையால் இறுக மூடிக் கொண்டு துணியில் நீரை குழல் வழியாக ஊற்றினர். மூச்சு முட்டியவர் தண்ணீரை முழுங்கினார். வலியில் துடித்தார்.

இப்போதும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

மூன்றாவது சித்ரவதை ஆரம்பமானது. இதில் தெரு வழியாக ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு பெருக்கல் குறி போன்ற சிலுவையில் கட்டிப்போடப்பட்டார். ஒருவன் இரும்புக் கழியை வைத்து கலாஸின் எலும்புகளை ஒவ்வொன்றாக உடைத்தான். முதலில் தோள்பட்டை, கை முட்டிகளை உடைத்தான். அதன் பின் கால் முட்டி, கணுக்கால் எலும்புகளை முறித்தான். எலும்புகள் முறிக்கப்பட்ட ழான் கலாஸை ஒரு வட்ட வடிவ மரணச் சக்கரத்தில் முகம் வானத்தைப் பார்க்கும்படியாகக் கட்டினர். இரண்டு மணி நேரம் அப்படியே இருக்கவைத்தனர்.

கத்தோலிக்கத்துக்கு மாறவோ கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளவோ மறுத்துவிட்டார்.

நான் அப்பாவி. அப்பாவியாகவே இறப்பேன் என்று முனகினார்.

அதன் பின் அவருடைய கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு உடம்பைத் தீயில் போட்டு எரித்தனர்.

மற்ற யாரும் குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ளவில்லையென்பதால் கலாஸின் மனைவி, மகன் பியரி, லாவைஸி, கத்தோலிக்கப் பணிப் பெண் ஆகியோரை விடுதலை செய்யவேண்டிவந்தது. ஆனால், குற்றம் நடந்த இடத்தில் இருந்த இவர்களை விடுவித்தால் ழான் கலாஸுக்குக் கொடுத்த மரண தண்டனை தவறு என்று ஆகிவிடும். அவரும் குற்றமற்றவர் என்று ஆகிவிடும். எனவே பியரி கலாஸை நாடு கடத்தத் தீர்மானித்தனர். அங்கு நடந்த பிற எல்லா அபத்தமான செயல்களைப் போலவே இதுவும் மேலும் அபத்தமாகவே இருந்தது.

பியரி அந்த கொலைக்குக் காரணமில்லை. அப்பாவியும் இல்லை. கொலையில் அவனுக்கும் பங்கு உண்டென்றால் தந்தையைப் போலவே அவனுடைய எலும்புகளையும் உடைத்து மரண தண்டனை நிறைவேற்றியிருக்கவேண்டும். அப்பாவி என்றால் நாடு கடத்தியிருக்கக்கூடாது. ஆனால் தந்தைக்கு செய்த சித்ரவதைகளினாலும் குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ளாமல் இறந்ததையும் பார்த்து கொஞ்சம் மனம் கலங்கியிருந்த நீதிபதிகள் மகனைக் கொல்லாமல் விடுவதன் மூலம் அவனுக்கு கருணை காட்டியதாகவே நினைத்துக் கொண்டனர்.

அவனை நாடு கடத்துவதென்பது மிகச் சிறிய அநீதிதான். மிகப் பெரிய ஒன்றை அவர்கள் ஏற்கெனவே செய்துமுடித்துவிட்டனர்.

கத்தோலிக்கத்துக்கு மாறாவிட்டால் தந்தையைப் போலவே சித்ரவதையை அனுபவிக்க நேரும் என்று பியரி கலாஸை மிரட்டினார்கள். ஒரு டொமினிக்க பாதிரியார் வந்து தன்னைச் சிறைச்சாலையில் சந்தித்து ப்ராட்டஸ்டண்ட் மதத்தைக் கைவிடாவிட்டால் இதேபோல் மரணத்தைச் சந்திக்க நேரும் என்று மிரட்டினார் என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்தார்.

நாட்டை விட்டு வெளியேறும்போது பியரியை மதம் மாற்றுவதில் கை தேர்ந்த ஒரு பாதிரி போய்ப் பார்த்தார். அவர் அவனை டல்லவுஸ் தேவாலயத்துக்கு இழுத்துச் சென்றார். அங்கு கத்தோலிக்க சடங்குகள் அனைத்தையும் செய்யும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார். தந்தை பணிய மறுத்ததற்குக் கொடுக்கவேண்டிய விலை. மதம் பழி வாங்கப்பட்டது.

ழான் கலாஸின் பெண் குழந்தைகளை அம்மாவிடமிருந்து பிரித்து கத்தோலிக்க கான்வெண்டில் அடைத்துப்போட்டார்கள். கணவனின் ரத்தம் அவளை மூழ்கடித்திருந்தது. மூத்த மகன் அவளுடைய மடியில் இறந்துவிட்டிருந்தான். இரண்டாவது மகனை நாடு கடத்திவிட்டார்கள். மகள்களைப் பிரித்துவிட்டனர். அனைத்து சொத்தையும் பறிமுதல் செய்துவிட்டனர். அவள் இந்த உலகில் மிகவும் தனித்துவிடப்பட்டிருந்தாள். அடுத்த வேளை உணவுக்கு வழியில்லை.

அவளுடைய வேதனை நினைவுகளே அவளைக் கொன்றுவிடும்போலிருந்தது. சிலர் அவளுடைய வேதனைகளையெல்லாம் அலசிப் பார்த்துவிட்டு, மனம் வருந்தினார்கள். திருமதி கலாஸை இந்த இக்கட்டுகளில் இருந்து மீண்டு வரும்படி உற்சாகப்படுத்தினார்கள். கத்தோலிக்கக் கர்த்தரின் முன்னால் சென்று நீதி கேட்கும்படிச் சொன்னார்கள். அவளால் அதைத் தாங்க முடியவில்லை.

ஆங்கிலேயரான அவள் ஃப்ரான்ஸுக்கு சிறு வயதில் இடம் பெயர்ந்திருந்தாள். பாரிஸ் என்ற பெயரைக் கேட்டாலே பயந்து நடுங்கினாள். டல்லெளஸைவிட தலைநகரம் இன்னும் கொடூரமாக காட்டுமிராண்டித்தனமாக இருக்கும் என்று பயந்தாள். எனினும் இந்த ஊரில் இருந்தால் கணவனுக்கு நேர்ந்தவை தொடர்பான நினைவுகள் அவளை அழித்துவிடும் என்பதால் கிட்டத்தட்ட நடைபிணமாக பாரிஸுக்குச் சென்று சேர்ந்தாள். அங்கு அவளுக்கு வரவேற்பு கிடைத்தது. உதவி கிடைத்தது. ஆனந்தக் கண்ணீரும் கிடைத்தது.

பாரிஸில் எத்தனை பெரிய மத வெறியைவிடவும் பகுத்தறிவு வலிமையாக இருந்தது. பிராந்தியங்களில் எப்போதும் மத வெறியே வெல்லும்.

புகழ் பெற்ற வழக்கறிஞர் எம். தெ ப்யூமாண்ட், திருமதி கலாஸின் வழக்கை உடனே எடுத்துக் கொண்டார். வேறு 15 வழக்கறிஞர்களும் கையெழுத்திட்டு ஒரு அறிக்கை வெளியிட்டனர் செய்தனர். எம் லோஸ்யூ, ழான் கலாஸ் குடும்பம் சார்பில் ஒரு மனு எழுதி சமர்ப்பித்தார். எம்.மேரியர் சட்ட விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தார். இந்த மூன்று வழக்கறிஞர்களின் பெரு முயற்சியினால் பாரிஸில் மட்டுமல்ல; ஐரோப்பா முழுவதுமே திருமதி கலாஸின் துரதிஷ்டமான நிலையைக் கண்டு வருந்தியது. நீதி கிடைக்க முயற்சி எடுத்தது. தலைமை நீதி மன்றத்தில் தீர்ப்பு வரும் முன்பே மக்கள் மத்தியில் கலாஸ் குடும்பத்துக்கு சாதகமான தீர்ப்பு வந்துவிட்டது.

அரசாங்கம் இந்த வழக்கை கூடுதல் அக்கறையுடன் பரிசீலித்தது. திருமதி கலாஸின் பெண் குழந்தைகளை அம்மாவுடன் சேர்த்தனர். துக்கக் கறுப்பு உடையுடன் கண்களில் கண்ணீர் பெருக இருந்த தாயும் மகள்களும் நீதிமன்ற வளாகத்தில் கட்டி அணைத்துக் கொண்டதைப் பார்த்து நீதிபதிகளின் கண்களும் கண்ணீர் சிந்தின.

பிரச்னை அதோடு முடிந்துவிடவில்லை. மதம் சம்பந்தப்பட்ட விஷயம். பலரும் இந்த கலாஸ் குடும்பத்தை மரணச் சக்கரத்தில் ஏற்றி எலும்புகளை முறித்துக் கொன்றுவிடுவதே நல்லது; டல்லெளஸைச் சேர்ந்த நீதிபதிகள் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்வதைவிட இவர்களை பலி கொடுப்பதே நல்லது என்று சில விசுவாசிகள் முழக்கமிட்டனர்.

‘கலாஸ்களைவிட நீதிபதிகள் அதிகம் இருக்கிறர்கள்’ என்றனர். அதாவது நீதிபதிகளின் கண்ணியத்தைக் காப்பாற்ற கலாஸ் குடும்பத்தினரைக் கைகழுவ வேண்டும் என்று சொன்னார்கள்.

போப் தவறு செய்ய வாய்ப்பே இல்லை; அவருடைய கார்டினல்கள் நினைத்தாலும் அவரை தவறு செய்யவைக்க முடியாது என்று ஃப்ரான்ஸ் மக்கள் நம்பினர். அதுபோலவே டல்லெளஸின் எட்டு நீதிபதிகளும் தவறு செய்யவே முடியாது என்று சொன்னார்கள். ஐரோப்பாவின் மற்ற மக்கள் பகுத்தறிவுடன் நடந்துகொண்டனர்.

இங்கு நடந்தது என்ன..?

ஒன்று, டல்லெளஸின் நீதிபதிகள் மக்களின் கொந்தளிப்பைப் பார்த்து அவர்களும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டனர். ஒரு அப்பாவி தந்தையை மரணச் சக்கரத்தில் பூட்டி சித்ரவதை செய்து கொன்றுவிட்டனர். உலகில் எங்குமே இதுபோல் நடந்ததில்லை.

அல்லது ஒரு ப்ராட்ட்ஸ்டண்ட் தந்தையும் தாயும் அவர்களுடைய மூத்த மகனின் கழுத்தை அவன் கத்தோலிக்க மத பிரிவைப் பின்பற்ற விரும்பியதால், நெரித்துக் கொன்றுவிட்டிருக்கிறார்கள். இன்னொரு மகனும் நண்பனும் அதற்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்.

இந்த இரண்டுமே புனிதமான கிறிஸ்தவ மதத்தை என்னவிதமான கொடூரமான குற்றத்துக்கு துணையாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

நாம் இங்கு கேட்கவேண்டிய கேள்வி : மதம் என்பது இப்படி காட்டுமிராண்டித்தனமாகத்தான் வெளிப்படவேண்டுமா… கருணையுடன் வெளிப்படவேண்டுமா?

0

Short account of Jean Calas’s Death by Voltaire

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *