வளர்ந்த பிறகு நான் ஓர் எழுத்தாளன் ஆவேன் என்று மிகச் சிறு வயதிலிருந்தே, ஒருவேளை ஐந்தாறு வயதிலேயே எனக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லலாம். பதினேழு வயதிலிருந்து இருபத்தி நான்கு வயதுவரை எழுத்தாளராகும் எண்ணத்தை எப்படியாவது கைவிட வேண்டுமென்று தீவிரமாக முயற்சித்தேன். என் சுயத்தைக் சீர்குலைக்கிறேன் என்ற பிரக்ஞை தோன்றியது. ஆனால் கூடிய விரைவில் எப்படியாவது புத்தகங்கள் எழுத வேண்டும் என்றுதான் அவ்வாறு செய்தேன்.
எங்கள் வீட்டில் மூன்று குழந்தைகள். நான்தான் நடுப்பிள்ளை. எனக்கு முன்னும் பின்னும் தலா ஐந்து வருட இடைவெளியுடன் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். எட்டு வயதுவரை என் தந்தையும் மிக அரிதாகவே என்னைப் பார்க்க வருவார். இதனாலும் இன்னபிற காரணத்தாலும் தனிமையிலே நாட்களைக் கழித்து, கூடாத பழக்கங்களை எல்லாம் கற்றுக்கொண்டேன். என் பள்ளிபருவ நாட்களும் அத்தனை மகிழ்ச்சிகரமாய் இல்லை.
தனித்துவிடப்பட்ட குழந்தை என்னவெல்லாம் செய்யுமோ அதைபோல் கதைகள் உருவாக்கினேன், கற்பனை கதாப்பாத்திரங்களுடன் தனிமையில் உரையாடினேன். ஒடுக்கப்பட்டோரும் தனித்துவிடப்பட்டோரும்தான் என் இலக்கியப் பிரதியின் மையமாக இருக்கவேண்டும் என்று சிறு வயதிலேயே என் இலக்கியக் கொள்கையை வகுத்துக் கொண்டேன்.
விரும்பத்தகாத உண்மைகளை எதிர்கொள்ளும் ஆற்றலும், வார்த்தைகளை உருவாக்கும் பக்குவமும் எனக்கு நன்றாக வாய்த்திருந்தது. இதை வைத்துக் கொண்டு ஏகாந்த உலகம் ஒன்றை உருவாக்கி, நிஜத்தில் ஏற்படும் தோல்விகளுக்கு எல்லாம் என் தனிப்பட்ட உலகில் ஆறுதல் தேடிக்கொண்டேன். ஆனாலும் இத்தனை காத்திரமாக நான் எழுதியவை – என் குழந்தைப் பிராயம் முழுக்க எழுதியவை வெறும் அரை டஜன் பக்கங்கள்தான் வரும்.
நான்கு அல்லது ஐந்து வயதில் என் முதல் கவிதையை எழுதினேன் . நான் சொல்வதைக் கேட்டு அப்படியே என் அம்மா அதை எழுத்தில் பதித்தார். அது புலி பற்றிய ஒரு கவிதை. ‘நாற்காலி போல் பற்கள் கொண்ட புலி’ என்ற சொற்றொடரைத் தவிர அந்தக் கவிதைப் பற்றி வேறெதுவும் நினைவில் இல்லை. அதுவும் வில்லியம் பிளேக்கின் ‘டைகர் டைகர்’ கவிதையில் இருந்து சுவீகரித்து கொண்ட சொற்றொடர். 1914-18 காலக்கட்டத்தில் உலகப் போர் வெடித்தபோது, தேசபக்தி கவிதையொன்று எழுதினேன். அப்போது எனக்கு 11 வயது. அந்தக் கவிதை உள்ளூர் செய்தித்தாளில் அச்சேறியது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிச்சனேர் இறந்ததை ஒட்டி மற்றொரு கவிதை எழுதினேன். நாட்கள் செல்லச் செல்ல, ‘இயற்கைப் பற்றிய கவிதைகளை’ முற்றுப்பெறாத வடிவில் முழு மோசமாக எழுதித் தள்ளினேன். அவை பெரும்பாலும் ஜார்ஜியன் பாணியில் இருந்தன. இரண்டொருமுறை சிறுகதை எழுதக்கூட முயற்சித்தேன். ஆனால் அதுவும் படுமோசமான தோல்வி. சொல்லிக் கொள்ளும்படி அந்நாட்களில் நான் காகிதத்தில் தீட்டமுயன்ற தீவிரமான எழுத்து வேலைகள் இவைதான்.
இருந்தாலும் அந்தக் காலகட்டம் முழுக்க இலக்கியச் செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டேன். நான் பரவசம் அடையாத படைப்பாக இருந்தாலும், விரைந்து எளிதாக முடிக்கும்படியான எழுத்துப்பணிகளை தொடக்கத்தில் கைக்கொண்டு இருந்தேன். வீட்டுப் பாடங்களைத் தாண்டி, விஷேச வசனங்களும் சித்திர வடிவிலான கவிதைகளும் என்னால் இன்றும் நம்புமுடியாத வேகத்தில் எழுதிமுடித்தேன். என் பதினான்கு வயதில், அரிஸ்டோஃபேன்ஸ் பாணியைப் பின்பற்றி இயைபு நாடகம் ஒன்று எழுதினேன். அதற்கு அடுத்தவாரமே பள்ளி இதழ்களைச் செப்பனிடும் பணி தேடிவந்தது.
நீங்கள் கற்பனைச் செய்வதைக் காட்டிலும் மிக மோசமான படைப்புகள் தாங்கிய இதழ் அது. இருந்தாலும் இப்போதிருக்கும் மலிவான பத்திரிகைகளைச் சகித்துக் கொள்ளும் சிரத்தையைவிட குறைவான ஆற்றலைத்தான் அந்த இதழ்கள் எதிர்பார்த்தன. இதையொட்டி பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விசித்திரமான இலக்கியப் பயிற்சியை மேற்கொண்டு வந்தேன். என்னைப் பற்றித் தொடர்ச்சியான ‘கதை’ அமைப்பொன்றை மனத்தில் பதியமிட்டு சேகரம் செய்திருந்தேன். கிட்டத்தட்ட நாட்குறிப்பு மாதிரி. இது குழந்தைகளும் பதின்வயதினரும் மேற்கொள்ளும் பொதுவான வழக்கமென்று நம்புகிறேன்.
மிகச் சிறு வயதில் நான் என்னை ராபின் ஹூட் போல் கற்பனை செய்துகொண்டு, திகிலூட்டும் சாகசப் பயணத்தில் கதாநாயகன் காட்சியமைத்து கதைகள் உருவாக்கினேன். சுயத்தை முன்னிறுத்தும் இம்மாதிரி கதைகள் விரைவில் நின்று போயின. அன்றாடம் செய்வது குறித்தும், பார்ப்பது குறித்துமான வர்ணனைகளாக அந்தக் கதைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறின.
‘அவன் கதவைத் திறந்து அறைக்குள் நுழைந்தான். சூரியனின் மஞ்சள் கதிர்கள் மெலிதான மஸ்லின் திரைகளுக்குள் ஊடுருவி, மேஜை மேல் வந்து ஒய்யாரமாய் உட்கார்ந்து கொண்டது. அதற்கருகில் வத்திப்பட்டி ஒன்று பாதி திறந்த நிலையில் மை ஜாடிக்குப் பின்புறமாக ஒளிந்துகொண்டிருந்தது. அவன் தன் வலது கையை பாக்கெட்டில் நுழைத்தபடி சாளரம் நோக்கி நடையெடுத்து வைத்தான். வீதியில் ஒரு ஆமையோட்டு நிறத்திலான பூனை காற்றில் பறக்கும் காய்ந்த இலையை துரத்திக் கொண்டு ஓடியது’, என்றெல்லாம் அடிக்கடி என் மனத்தில் ஏதோவொன்று தோன்றிக் கொண்டிருக்கும். இப்படியாக பல வரிகளை அசைபோட்டிருக்கிறேன்.
இலக்கியத்தில் இருந்து நான் ஒதுங்கிய ஆண்டுகளில்தான் இந்தப் பழக்கம் என்னை விட்டொழிந்தது. அதாவது இருபத்தைந்து வயதுவரை நான் இதற்கு ஆட்பட்டிருந்தேன். நான் சரியான வார்த்தைகளைத் தேட வேண்டும். இருந்தாலும் இந்த வார்த்தை வேட்டை என் சொந்த விருப்பத்தைத் தாண்டி ஒருவித நிர்பந்தத்தின் பெயரால் விதிக்கப்பட்டிருப்பதாய் தோன்றியது. நிச்சயமாக அந்தக் ‘கதை’ நான் வெவ்வேறு காலகட்டங்களில் ரசித்த ஒவ்வொரு எழுத்தாளரின் பாணியையும் உள்ளடக்கியதாய் இருக்க வேண்டும். ஆனால் நினைவிருக்கும்வரை ஒரே மாதிரி துல்லியமான வர்ணனைக் குணங்களைத்தான் அந்தக் கதைகள் பின்பற்றுகின்றன.
என் பதினாறாம் வயதில் வெற்று வார்த்தைகள் ஏற்படுத்தும் குதூகலத்தைத் திடுமென கண்டுபிடித்தேன். வார்த்தைகள் ஒன்றுகூடி ஏற்படுத்தும் ஒலியின் இன்பம் அலாதியானது. ‘இழந்த சொர்க்கம்’ நூலில் வரும்,
So hee with difficulty and labour hard
Moved on: with difficulty and labour hee.
என்ற வரிகள் இப்போது என்னைப் பெரிதாய் ஈர்க்கவில்லை என்றாலும் அப்போது முதுகுத்தண்டில் ஆழ வேரூன்றியது போல் சிலிர்த்துப் போனேன். அவன் என்பதற்கு He என்று சொல்லாமல் Hee என்று வலிந்து எழுதுவதில் எத்தனைக் கொண்டாட்டம் இருக்கிறது! காட்சியை விவரிக்க வேண்டியதன் அவசியம் பற்றி எனக்கு முன்பே தெரியும். ஆகவே நான் எந்த மாதிரியான புத்தகங்கள் எழுத விரும்பினேன் என்பது தெளிவாகியது.
அதிகம் புனையப்படாமல் இயற்கையான பின்னணியில் துன்பியல் குடிகொள்ளும் எண்ணிலடங்காத அவலப் புதினங்கள் எழுத விரும்பினேன். அதில் வர்ணனை நிறைத்து, உருவகம் உதிர்த்து, அதீத வார்த்தை ஜாலங்களைக் கொட்டி, இளைத்து, வெறுமனே வார்த்தையின் ஒலிநயத்திற்காகவே சில பத்திகளை செலவு செய்ய எத்தனித்தேன். என் முதல் நாவல் ‘பர்மிய நாட்கள்’ கூட ஒருவகையில் அப்படிப்பட்ட புத்தகம்தான். முன்னரே திட்டமிட்டிருந்தாலும் எனது முப்பதாவது வயதில் இந்நூல் வெளியானது.
நான் ஏன் இவ்வளவு பின்னணி விவரங்களை அடுக்குகிறேன் என்றால், ஓர் எழுத்தாளரின் இளமைக் காலத்தைக் கொஞ்சமும் தெரிந்து கொள்ளாமல் அவர் எழுத்தின் நோக்கத்தை துளியும் புரிந்துகொள்ள முடியாது என்பது என் கொள்கை. அவர் வாழும் காலத்தைப் பொறுத்தே, அவர் எழுத்தின் கருப்பொருளில் தெளிவு கிடைக்கும். குறைந்தபட்சம் இது நாம் வாழும் கொந்தளிப்பான, புரட்சிகர காலங்களிலாவது பொருந்தும். ஆனால் ஓர் எழுத்தாளர் எழுதத் தொடங்கும் முன்பே, ஓர் உணர்ச்சி மனப்பான்மைக்கு ஆட்பட்டிருப்பார். அவரே நினைத்தாலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது.
தன் சுபாவத்தை ஒழுங்குபடுத்தி, பக்குவம் பெறாத நிலையிலும் விபரீத மனநிலையிலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது ஓர் எழுத்தாளருக்கான அடிப்படை வேலை என்பதில் சந்தேகம் வேண்டாம். ஒருவேளை அதிலிருந்து அவர் தப்பிக்க நினைத்தால், எழுதுவதற்கான உந்துசக்தியை அவர் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார் என்று பொருள்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தவிர்த்து, ஓர் எழுத்தாளர் உரைநடை எழுதுவதற்கு நான்கு மகத்தான நோக்கங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் நோக்கங்களின் அளவைகள் மாறுபடும். சமயத்தில் ஒரே எழுத்தாளர் கூட அவர் வாழும் சூழலுக்கேற்ப, நோக்கங்களின் விகிதாச்சாரத்தை மாற்றிக் கொள்கிறார். இனி அந்த நோக்கங்களைப் பார்ப்போம்.
(தொடரும்)
________
‘Why I Write’ – George Orwell