Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #6 – ஜோரா நீல் ஹர்ஸ்டன் – ஒரு கலப்பின பெண்ணாக நான் எப்படி உணர்கிறேன்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #6 – ஜோரா நீல் ஹர்ஸ்டன் – ஒரு கலப்பின பெண்ணாக நான் எப்படி உணர்கிறேன்

ஒரு கலப்பின பெண்ணாக நான் எப்படி உணர்கிறேன்

நான் ஒரு கலப்பினத்தவள். ஆனால் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் உள்ள நீக்ரோக்களில் என் ஒருத்திக்கு மட்டுமே, என் அம்மா வழித் தாத்தா இந்திய மூதாதைய தொடர்பு இல்லாதவர். இதைத் தாண்டி சூழ்நிலையின் தீவிரத்தை மட்டுப்படுத்தும் எந்தவொரு காரணியும் எனக்கு இல்லை.

நான் கலப்பின பெண் என்று தெரிந்த முதல்நாள் இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. பதிமூன்று வயதுவரை புளோரிடா மாகாணத்தில் உள்ள சிறிய நீக்ரோ நகரமான ஈடன்வில்லில் வசித்து வந்தேன். அது, கலப்பின மக்களுக்கான பிரத்தியேக நகரம். ஆர்லாண்டோவில் இருந்தும்; ஆர்லாண்டோ நோக்கியும் செல்கிற வெள்ளையர்கள் எங்கள் நகரத்தைக் கடக்கும்போது நான் அவர்களைப் பார்த்திருக்கிறேன்.

அழுக்குப் படிந்த குதிரைகளின் மேல் சவாரி செய்வார்கள். சுற்றுலா வரும் வட மாகாணத்து வெள்ளையர்கள், மணல்படிந்த எங்கள் கிராமத்து சாலைகளில் வாகனம் ஓட்டிச் செல்வார்கள். தெற்கின் மக்கள் பற்றி எங்கள் நகரத்தார் நன்கு அறிந்திருந்தனர். அவர்கள் கடந்துபோகையில் கிசுகிசுப்பு நிகழ்வதுண்டு. ஆனால் வடவர் பொறுத்தவரை விஷயம் வேறுமாதிரி இருந்தது.

கூச்சம் மிகுந்த கிராமத்தார், திரைக்குப் பின்னால் இருந்து அவர்களை எச்சரிக்கையுடன் ஏறிட்டுப் பார்ப்பார்கள். துணிச்சல் மிகுந்தவர்கள் மட்டும் வாசல்வரை வருவார்கள். சுற்றுலாப்பயணிகள் ஊரை விட்டுச் செல்லும்போது அவர்களைப் போலவே இவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒட்டுமொத்த நகரமும் வாசற்பகுதியைச் சவாலான இடமாக நினைக்கையில், நான் அதை பால்கனி இருக்கையாகக் கருதினேன். வாயிற் கம்பம் மேல் ஏறி அமர்வது எனக்கு மிகப் பிடித்தமாக இருந்தது. அரங்கேற்றம் நிகழ்த்தும் மேடை நடிகர்கள் வந்துசெல்லும் பாதை அது. நான் அந்த நிகழ்ச்சிகளை கண்டு திளைத்துப் போனேன். ஆனால் அதை நடிகர்கள் இனங்கண்டால் பொருட்படுத்த மாட்டேன்.

கடந்து செல்பவர்களிடம் நான் பேச முயற்சிப்பேன். அவர்களைப் பார்த்து கையசைப்பேன். பதிலுக்கு அவர்கள் முகம் மலர்ந்து கையசைத்தால், ‘ஹலோ. நல்லா இருக்கீங்க-னு நெனைக்கிறேன். எங்க போறீங்க?’ என்று கேட்பேன். பொதுவாக அவர்கள் தங்கள் வாகனத்தையோ, குதிரையையோ மெல்லமாக நிறுத்தி, விநோதமாக கொஞ்சம் நேரம் உரையாடுவார்கள்.

அதற்குப்பின் எங்கள் தொலைதூர புளோரிடாவில் சொல்வதுபோல் அவர்களைப் பின்தொடர்ந்து கொஞ்சம் தூரம் செல்வேன். இந்நேரத்தில் என் குடும்ப உறுப்பினர்கள் யாராவது என்னைப் பார்க்கும்படி வாசலுக்கு வந்தால் எங்கள் பேச்சுவார்த்தை முரட்டுத்தனமாக முடிவுக்கு வரும். ஆனால் அப்படியிருந்தும், ‘எங்கள் மாகாணம் உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்று சொல்லும் முதல் புளோரிடியன் நானாகத்தான் இருந்தேன். மியாமி வர்த்தகச் சபை இதைக் கருத்தில் கொள்ளும் என நம்புகிறேன்.

இந்தக் காலக்கட்டத்தில் வெள்ளையர்களுக்கும் கலப்பினத்தவருக்கும் இடையிலான வேறுபாட்டை இரண்டொரு அம்சங்களில் புரிந்துகொண்டேன். அவர்கள் இங்குக் குடியேற மாட்டார்கள்; ஆனால் எங்கள் நகரத்தைக் கடந்து செல்வார்கள்.

நான் பேசுவதை விரும்பிக் கேட்டனர். பாடச் சொல்லி ரசித்தனர். பார்ஸி-மி-லா நடனம் ஆடச் சொல்லி மகிழ்ந்தனர். இதற்கெல்லாம் பெருந்தன்மையோடு வெள்ளியை அள்ளி பரிசாகத் தந்தனர். ஆனால் இது எனக்கு அந்நியமாக இருந்தது. அவர்கள் இலஞ்சம் கொடுப்பதை நிறுத்த வேண்டுமென்று நான் தொடர்ந்து பேசிக்கொண்டும் பாடிக் கொண்டும் இருந்ததை அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை.

நான் இப்படிச் செய்வதற்கு எங்கள் ஊரிலுள்ள கலப்பினத்தவர்கள் ஒருபோதும் பணம் கொடுத்ததுக் கிடையாது. எந்தன் எல்லாவித மகிழ்ச்சிகரப் போக்குகளையும் கண்டித்தார்கள். இருந்தாலும் நான் அவர்களின் ஜோராவாகவே இருந்தேன். அருகிலுள்ள ஹோட்டல்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் எல்லோருக்குமான ஜோராவாகவே நீடித்தேன்.

ஆனால் பதிமூன்று வயதாக இருக்கும்போது எங்கள் குடும்பத்தில் ஓர் மாற்றம் நிகழ்ந்தது. ஜாக்சன்வில்லில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்திற்கு என்னை அனுப்பிவைத்தார்கள். ஓலியாண்டர் மலர்களும் ஜோராவும் நிறைந்த ஈடன்வில் நகரத்தை விட்டு வெளியேறினேன்.
ஜாக்சன்வில் நதிக்கரையில் படகிலிருந்து இறங்கியபோது, நான் மொத்தமாக உடைந்துபோய் விட்டேன். நகர மாற்றத்தால் நான் அவதிப்படுவது தெரிந்தது. இனி நான் ஆரஞ்ச் கவுண்ட்டியைச் சார்ந்த ஜோராவாக இருக்க முடியாது. நான் இப்போது அடர்நிறமேறிய சிறுமி என்பதைச் சில வழிகளில் உறுதியாகத் தெரிந்துகொண்டேன்.

இதயப்பூர்வமாகவும் கண்ணாடியிலும் நான் இப்போது அழுத்தித் தேய்த்து அழிக்க முடியாத, ஓடி ஒளிந்தாலும் மறையாத பழுப்பு நிறத்தைப் பூசிக் கொண்டிருப்பது தெரிகிறது.

ஆனால் நான் அடர்நிறப் பெண்ணாக இருப்பது துன்பகரமான செய்தி அல்ல. எனது ஆன்மா துன்ப மூட்டைகளைச் சுமந்துகொண்டிருக்கவில்லை; என் விழிகளுக்குப் பின்னால் சோகச் செய்திகளைப் பதுக்கி வைக்கவில்லை. நான் அவற்றைப் பொருட்டாக மதிப்பதும் கிடையாது.

இயற்கை நமக்கு கீழான வாழ்க்கையை வழங்கிவிட்டது, அதை நினைத்துப் புலம்புவதே நம் சொச்ச வாழ்க்கையின் மிச்சம் என்று, தேம்பித் தேம்பி அழுகும் நீக்ரோக்களின் வாழ்க்கையை நான் வெறுக்கிறேன். குழப்பமூட்டும் சண்டைகள் நிறைந்த வாழ்க்கையின் ஊடாக பார்க்கும்போது நிறமியின் அளவு குறைபட்டிருக்கும் நபர்கள்தான் வலிமையான வாழ்க்கையைக் கைக்கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால் நான் உலகத்திடம் மன்றாடி புலம்பமாட்டேன். சிப்பி வெட்டும் கத்தியை கூராக்குவதில் நான் மும்முரமாக இருக்கிறேன்.

எப்போதும் என் முழங்கை மேல் அமர்ந்துகொண்டு, ‘நீ ஒரு அடிமையின் பேத்தி’ என யாரோ ஒருவர் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அது எனக்கு சோர்வூட்டவில்லை. அடிமைத்தனம் அறுபது வருடங்களாக இருந்து வருகிறது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, நோயாளி இப்போது ஆரோக்கியமாக இருக்கிறார், உங்களுக்கு நன்றி.

அடிமைகளுக்கு மத்தியில், என்னையொரு அமெரிக்கன் என்று அடையாளப்படுத்திய பயங்கரமான போராட்டத்தில், ‘தயாராக இரு’ என்று சொன்னார்கள். அதன் புனரமைப்புக் கட்டத்தில் ‘கெட், செட்’ என்று ஆயத்தப்படுத்தினார்கள். எனக்கு முந்தைய தலைமுறை ‘கோ’ என்று சொல்லிக் காற்றில் பறக்க உந்தித் தள்ளியது. எனவே என்னால் பயணத்தை நிறுத்தி திரும்பிப் பார்த்து அழுது வடிக்க முடியாது.

நாகரிகத்தை அடிமைத்தனத்தின் விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன். அதைத் தேர்வு செய்யும் உரிமை எனக்குக் கிடையாது. இது ஒரு முரட்டுத்தனமான சாகசம்‌. என் முன்னோர்கள் இதற்கான பதிலீட்டைச் செலுத்திவிட்டார்கள். இதைக்காட்டிலும் உலகில் உள்ள எவருக்கும் பெருமை கொள்வதற்கான வேறு வாய்ப்புகள் அமையுமா? தோற்றுப் போனால் என்ன, வெல்வதற்கு நமக்கு ஓர் உலகம் இருக்கிறது!

நான் மேற்கொள்ளும் எந்தவொரு செயலுக்கும் இரு மடங்கு வாழ்த்துச் செய்திகளோ‌ இரு மடங்கு வசைச் சொற்களோ வந்து குவியும் என்பதை யோசித்துப் பார்க்கவே பரபரப்பாக இருக்கிறது. அழுவதா சிரிப்பதா என்று குழம்பித் தவிக்கும் பார்வையாளர்களுக்கு முன்னால் தேசிய அளவிலான மேடையொன்றில் மைய இருக்கையில் அமரப்போவதை எண்ணிப் பார்த்தால் குதூகலம் பிறக்கிறது.

என் வெள்ளைக்கார அண்டை வீட்டார்களின் நிலைமையை நினைத்தால் இன்னும் கவலையாக இருக்கும். எந்தவொரு ‘பழுப்புநிற’ மனிதரும் உணவு உண்ண உட்காரும்போது என் பின்னால் வந்து இருக்கையை இழுப்பதில்லை. இரவில் தூங்கும்போது எந்தவொரு ‘கறுப்புப்’ பூச்சாண்டியும் என் மேல் கால் போட்டுத் தள்ளுவதில்லை. மற்றொருவரின் உடைமையைப் பறித்து விளையாடுவதில் கிடைக்கும் சுவராஸ்யம் தன் சொந்த உடைமைகளை வைத்து விளையாடும்போது தோன்றாது.

நான் கலப்பினத்தவள் என்ற எண்ணம் எப்போதும் உதிர்ப்பதில்லை. ஹெகிராவுக்கு முந்தி, ஈடன்வில் நகரில் வசித்த உணர்வற்ற ஜோராவின் நிலைக்கு இப்போதும் நான் அடிக்கடி செல்வதுண்டு. என்னை நீங்கள் தெளிவான வெள்ளையர் கூட்டத்தின் முன்னால் தூக்கி எறியும்போதுதான், நான் கலப்பினத்தவள் என்ற பிரக்ஞை தோன்றுகிறது.‌

பர்னார்ட்டில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை உதாரணமாகச் சொல்கிறேன். ஹட்சன் நதியின் நீர்நிலைக்குப் பின்னால் நான் என்னுடைய இனத்தைப் பற்றி யோசித்து கலக்கமுற்றேன். ஆயிரக்கணக்கான வெள்ளையர்களுக்கு முன்னால் நானொரு இருண்டுபோன பாறையாக மிதக்கவும் நீந்தவும் மாறி மாறி மூச்சுப்பிடித்தேன். தண்ணீரால் நான் மூழ்கடிக்கப்பட்டாலும் மேலெழம்பும் கடல் அலைகள் என்னை அடிக்கடி வெளிக்காட்டின.

சிலநேரங்களில் இது மற்றொரு வகையில் நிகழ்வதுண்டு. ஒரு வெள்ளைக்காரன் எங்கள் மத்தியில் உட்காருகிறான் என்றால் அந்த வித்தியாசம் கூர்மையாகத் தாக்குகிறது. உதாரணமாக, ‘தி நியூ வேர்ல்டு’ என்கிற இசைக்கூடத்திற்கு நானொரு வெள்ளைக்காரனோடு குளிரூட்டப்பட்ட அடித்தளத்தில் உட்கார்ந்திருக்கும்போது நிறம் பற்றிய எண்ணம் வலுவாக என்னை இம்சை செய்தது.

எங்கள் இருவருக்கும் இடையிலான மிகச் சொற்பான பொது விஷயங்கள் பற்றி நாங்கள் உரையாடத் தொடங்கினோம். ஆனால் எதிர்பாராத விதமாக ஜாஸ் பாடகர்கள் தங்கள் வேலையைத் தொடங்கினார்கள். சுற்றி வளைத்துப் பேசி நேரத்தைப் போக்காமல், நேரடியாக இசையில் குதித்தார்கள். மார்புக்கூட்டைச் சுருக்கி இழுத்து, இதயத்தை இரண்டாகப் பிளந்து இசையில் போதை ஏத்தி சுருதியின் வேகத்தை கூட்டினார்கள். இசைக் கச்சேரி பேரரவம் பூண்டது.

தன் பின்னங்கால்களில் ஏறி நின்று, காட்டுத்தனமான‌ சீற்றத்துடன் தொனி பறக்க பாடி, கூரிய நகங்களால் கீறிக் கிழித்தெறிந்து தனக்கு அப்பால் உள்ள காட்டுப் பகுதியை அடையும் முயற்சியிலான பாடல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்கள். நான் அவர்களின் பழைய பாணியைப் பின்பற்றி சென்றேன். அவர்களின் கொண்டாட்ட உணர்வில் முழுமனதோடு கலந்துகொண்டேன்‌.

உள்ளுக்குள் காட்டுத்தனமாக ஆடினேன்; மனதிற்குள் கத்தினேன். உற்சாகத்தில் உளறினேன். அசாகை ஈட்டியை தலைக்குமேல் வைத்து ஆட்டினேன். நான் அதை மிக வேகமாக வீசி எறிகிறேன் யோ…வ்! நான் காட்டில் இருக்கிறேன். ஆகையால் காட்டு வாழ்க்கையை வாழ்கிறேன். எனது முகத்தில் மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்திலான மையும், உடலில் நீல நிறத்திலான மையும் பூசியிருக்கிறார்கள்.

போர் முரசுபோல் எனது நாடித்துடிப்பு பலமாக இடிக்கிறது. நான் எதையாவது வெட்ட வேண்டும். யாருக்காவது வலி உண்டாக்க வேண்டும். யாராவது சாக வேண்டும். யாரென்று தெரியவில்லை. திடீரென அந்த இசைக் குறிப்பு நின்றுவிடுகிறது. பாடகர்கள் தன் உதட்டைத் துடைத்து, விரல்களுக்கு ஓய்வு கொடுக்கிறார்கள். இயல்புணர்ந்த பின்னர் நாகரீக வேடம் புனைந்த தற்கால நிகழ்வுலகிற்கு மெல்லமாக தவிழ்ந்து வருகிறேன். இறுதியாகப் பேசிய விஷயத்தை மனதில் அசைப்போட்டு வெள்ளைக்கார நண்பர் எங்கேயென்று பார்த்தால், அசைவில்லாமல் சிகரெட் பிடித்தபடி மௌனமாக உட்கார்ந்திருக்கிறார்.

மேஜை மீது விரல்களால் இசைச் சொடுக்கி, ‘இங்கு நன்றாகப் பாடுகிறார்கள்’ என்று மெச்சினார்.

இசை. என்னை உலுக்கியெடுத்த ஊதா, சிகப்பு நிற உணர்ச்சிகளுக்கு இவர் துளியும் ஆட்படவில்லை. நான் உணர்ந்தவற்றை இவர் வெறுமனே கேட்டிருக்கிறார்.‌ இவருக்கும் எனக்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. சமுத்திரங்கள், கண்டங்கள் தாண்டி வெகு தூரத்தில் இருக்கும் இவரைக் கண்கள் சுருக்கிப் பார்க்கிறேன். தன் வெள்ளை நிறத்தைக் காட்டிலும் இதில் இவர் பழுப்பாக இருக்கிறார். நான் நிறம் கூடியிருக்கிறேன்.

சில நேரங்களில் எனக்கென்று இனம் கிடையாது. நான் நான்தான். எனது தொப்பியை குறிப்பிட்ட கோணத்தில் அணிந்துகொண்டு ஹார்லெம் நகரின் ஏழாவது வீதியில் பொழுதுபோக்காக நடந்துபோகையில், நாற்பத்தி இரண்டாவது வீதியில் உள்ள நூலகத்தின் முன் அமைந்திருக்கும் சிங்கங்களைப் போல மூர்க்கமாக உணர்கிறேன்.

என் உணர்வுகளைப் பொறுத்தவரை, பவுல் மிச் வீதியில் இருக்கும் பெக்கி ஹாப்கின்ஸ் ஜாய்ஸின் அழகான உடையும் கம்பீரமான வாகனமும் பிரபுத்துவப் போக்கை வெளிப்படுத்தும் விதமான முழங்கால் அசைவுகளும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. வேற்றுலக ஜோரா உருவெடுக்கிறாள். எனக்கென்று நேரமும் இனமும் கிடையாது. மணிகளின் சாரம் பூண்ட அகில உலகப் பெண்மணி நான்.

அமெரிக்க பிரஜை என்பதற்கோ கலப்பின பெண் என்பதற்கோ நான் தனித்தனியாக உணர்ச்சி வயப்படுவதில்லை. எனது தேசத்தின்பால் உண்மை இருக்கிறதோ, இல்லையோ. மாபெரும் எல்லைக்குள் உழன்றுத் திரியும் பெரிய மனிதப் பிறவிகளில் நானும் ஒரு துளி என்பது மட்டும் உண்மை.

சில நேரங்களில் என்னைப் பாகுபடுத்திப் பார்க்கிறார்கள். ஆனால் இது எனக்கு எரிச்சலூட்டவில்லை. மாறாக நான் வியப்படைகிறேன். நான் அவர்களோடு இருப்பதன் இன்பத்தை எப்படி அவர்களால் மறுக்க முடியும்? அது எனக்கும் அப்பாற்பட்டது.

பல்பொருட்களால் நிரப்பப்பட்ட பழுப்பு நிற பையை சுவற்றில் சாய்த்து வைத்ததுபோல் நான் என்னை உணர்கிறேன். அதைச்சுற்றி வெள்ளை, சிகப்பு, மஞ்சள் நிறத்திலான வேறு சில பைகளும் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பைகளில் இருப்பதை வெளியே கொட்டினால் சிறிய அளவிலான வெவ்வேறு வித்தியாசமான பொருட்களைக் காணலாம். விலைமதிப்பற்ற, ஒப்பில்லாத பொருட்கள் பல கிடைக்கும்.

உயர் தரத்திலான வைரம், தீர்ந்துபோன நூற்கண்டு, உடைந்த கண்ணாடிச் செதில்கள், நீட்டமான கம்பிகள், நீண்ட காலத்திற்கு முன்பே விரிசல் விடத் தொடங்கிய ஒரு கதவின் சாவி, துருப்பிடித்த கத்தி, பழைய ஷூ, வளைந்துபோன ஆணி, நறுமணம் மீதமிருக்கும் ஒன்றிரண்டு காய்ந்த பூக்கள்.

உங்கள் கையில் இப்போது பழுப்பு நிறப் பை ஒன்று இருக்கிறது. பையில் இருந்ததைப் போல் ஒரு குவியல் ஒன்று தரையில் இப்போது சீரற்று பரவலாக கிடக்கிறது. பையில் இருந்ததை எல்லாம் ஒரே குவியலாக ஒன்றுசேர்த்து கொட்டலாம்.

எந்தெந்தப் பையில் எவையெவை இருந்தன என்று முடிந்தவரை மாற்றாமல் அப்படியே மீண்டும் நிரப்புங்கள். ஒன்றிரண்டு கண்ணாடிச் செதில்கள் மாறினால் தவறில்லை. ஆனால் ஒட்டுமொத்த பைகளையும் நிரப்பிய நபர், இதே முறையில்தான் இருக்க வேண்டும் என்று முதன்முதலில் ஏதேனும் முடிவு செய்தாரா, யாருக்குத் தெரியும்?

0

_________

‘How it feels to be colored me’ – Zora Neale Hurston

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *