பழங்குடியினரைப் பிரித்து ஒதுக்கி வைத்தால் தேச ஒற்றுமையின் அஸ்திவாரமே ஆடிப் போய்விடும் என்று திரு.தாக்கர் பயப்படுகிறார். எனக்கு இது தீவிரமான செய்தியாகத் தெரியவில்லை. பழங்குடி மக்களை நிரந்தரமாகத் தனிமைப்படுத்த வேண்டும் என்று யாரும் சொல்லவில்லையே!
திரு. தாக்கர் போல பிரச்சினைகளை கையாளும் அலுவலகப் பணியாளர்கள் வாய்க்கும் வரை, மானுடவியல் அறிஞர்கள் சொல்வதுபோல நாம் இந்த விஷயத்தைப் பொறுமையாகக் கையாளவேண்டும். கலாசாரம் மாறுபடுவதை மெல்லமாக எடுத்துச் சொல்லி, காலத்திற்கு ஏற்றபடி அவர்களை வளர்த்தெடுத்து, நாகரிக உலகத்தோடு தொடர்பு ஏற்படுத்த வேண்டும்.
ஒரு புதிய வகையான சிறுபான்மை அமைப்பை நிறுவுவதற்குச் சாத்தியமில்லை என்றாலும், காங்கிரஸுக்கு விரோதமாகச் செயல்படும் படிப்பறிவுப் பெற்ற கோண்டு இன மக்களும், ஓரான் இன மக்களும் இதைச் செய்ய ஆர்வமாக உள்ளனர்.
என்னைக் கேட்டால், சென்சஸ் கணக்கெடுப்பில் பழங்குடியின மக்களை இந்து மதத்திற்குள் வகைப்படுத்த வேண்டும் என்று சொல்வேன். பல விதங்களில் தனித்துவமாக இருந்தாலும், பழங்குடி மக்கள் இந்து மதக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
உண்மையில் அவர்களுடைய தனித்துவமான குணநலன்கள் எல்லாம் புற உலகத் தாக்கத்தால் நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது. தங்கள் வாழ்வின் தனித்துவமான கலாசாரத்தையும் பழக்க வழக்கங்களையும் இழந்துவிட்டனர். ஆகவே, பெரும் சமூகத்தோடு பழங்குடி மக்களைத் தாமதமின்றி ஒன்றிணைக்க வேண்டும் என்ற திரு.தாக்கரின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
திரு. தாக்கரும், அவரது நண்பர்களும் கண்டுகொள்ளாத ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன். மிகத் தீவிரமான பிரச்னை ஒன்றில் பழங்குடி மக்கள் இன்று சிக்கித் தவிக்கிறார்கள். 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள், இன்னும் ஆள் நடமாட்டமில்லாத அடர்ந்த மலைப் பகுதியில் வசிக்கிறார்கள். ஓரிடத்தில் நிலையாக இல்லாமல், இடம் மாற்றுச் சாகுபடியில் ஈடுபடுகிறார்கள். வேட்டையாடுதல், கிழங்கு அகழ்தல் என்று தங்கள் கலாசாரத்தையும் மதத்தையும் அமைப்பையும் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆனால் சோகம் என்னவென்றால், பழங்குடியினரின் இந்தப் பண்டைய முறையைத் திரு.தாக்கர் அவர்கள் சீர்குலைக்கப் பார்க்கிறார். இது உளவியல் ரீதியில் அவர்களை விரக்தி அடையவைத்து, பொருளாதாரச் சுரண்டலுக்கு வழிவகுக்கும். ‘தி பைகா’ என்ற நூலில் நான் இதை விரிவாகப் பேசியிருப்பதால், மீண்டும் அதைத் திரும்பச் சொல்லாமல் தவிர்க்கிறேன்.
இடம் மாற்றுச் சாகுபடியைப் பின்பற்றக் கூடாது என்று தடைசெய்வதால், நரக வேதனைப்படும் பைகா பழங்குடியின மக்களை நான் பார்த்திருக்கிறேன். திரு. தாக்கர் இதைச் சோம்பல் அடர்ந்த பயிர் சாகுபடிமுறை என்று குற்றம் சாட்டுகிறார். ஆனால் அவர் ‘மரியாக்கள்’ பற்றிக் கிரிக்சன் எழுதிய புத்தகத்தை வாசித்தாலோ, ‘பைகா’ இன மக்கள் பற்றி நான் எழுதிய புத்தகத்தை வாசித்தாலோ தன் குற்றச்சாட்டில் இருந்து பின்வாங்கிவிடுவார்.
ஏழைகளைச் சோம்பேறி என்று குற்றம்சாட்டுவது ஆங்கிலேயச் சமூகத்தின் மேல்தட்டுப் புத்தி. எரிபுனச் சாகுபடி ஓர் அசம்பாவித வழக்கமென்று திரு. தாக்கர் கருதுகிறார். மேலும் இந்தத் தீய வழக்கத்தால் போதுமான விளைச்சல் இருக்காது என்பது அவரது நம்பிக்கை.
ஆனால் வேறெந்த சாகுபடி முறைகளைக் காட்டிலும் எரிபுனச் சாகுபடியில்தான் தரமான பயிர்கள் வளர்வதைப் பழங்குடியினர் காண்கின்றனர். அவர்கள் வசிக்கும் மலைப் பிரதேசங்களில் இதைத் தவிர்த்து வேறெந்த வகைச் சாகுபடியும் கைக்கொடுக்காது.
முதலாளிகளின் பெரும் இலாபத்திற்காகப் பாதுகாக்கப்பட வேண்டிய காட்டின் வளத்தை நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட அளவேனும் இந்தச் சாகுபடி முறை சேதப்படுத்தும். ஆனால் போர் காலத்தின்போது காட்டிலிருந்து மரத் துண்டுகள் வெட்டப்படுவது பற்றித் திரு. தாக்கருக்கு தெரியாதா? தொழில் மையமாதலின் பெரிய பெரிய மர ஆலைகளை விடவா, பழங்குடியினரின் சின்னச் சின்னக் கோடாரிகள் சேதம் ஏற்படுத்தப் போகின்றன?
நாகா, சவாரா பழங்குடியின மக்களின் மாடிப் பயிர் சாகுபடி முறை நேர்த்தியானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே முறையை இந்தியா முழுக்க உள்ள பழங்குடியின மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது.
‘எரிபுனச் சாகுபடி பழங்குடியின மக்களின் மத நம்பிக்கைச் சார்ந்தது என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று திரு. தாக்கர் சொல்கிறார். இதை அறிவியல் ரீதியான சிந்தனை என்று சொல்லக் கூடாது. திரு. தாக்கர் ஓர் இந்துவாக இருப்பதால் கலப்பை, மாடுகள் ஆகியவற்றின் மீது எல்லை மீறிய அன்பு வைத்திருக்கிறார். ஆகையால் அவருக்கு இடம் மாற்றுச் சாகுபடியில் ஆர்வமில்லாமல் போகலாம். எனவே சிலரின் மதச் சடங்காக இருக்கும் இந்த வழிமுறை அவருக்கு எரிச்சலூட்டுகிறது. அதை ஏற்க மறுக்கிறார்.
இதைப் போலவே, ‘கூட்டுப் பிரார்த்தனை கிறிஸ்தவ நம்பிக்கை என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்றும், பக்ரீத் விருந்து இஸ்லாத்தின் மதச் சடங்கு என்பதில் உடன்பாடு இல்லை’ என்று சொல்லும் அளவுக்கு அவர் முன்னேறலாம்.
ஆனால் இந்தச் சாகுபடி முறை சில பழங்குடி மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கையாக இருக்கிறது என்று நான் அவருக்கு உறுதியளிக்கிறேன். நீங்கள் இந்த முறையைப் பின்பற்றக் கூடாது என்று அவர்களைத் தடைசெய்தால், அபசகுணமாக ஏதோ நேர்ந்துவிட்டதென்றும், தெய்வக் குத்தம் என்றும் நொந்துகொண்டு கடவுளைத் திருப்திப்படுத்த முயற்சிப்பார்கள்.
எளிய மக்களின் நம்பிக்கைக்கும் வழிபாட்டிற்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். அதுதான் மதச்சார்பின்மைக்கான அறிகுறி. பழங்குடியினரின் மனித உரிமைகள் பறிக்கப்பட வேண்டும் என்று ஒரிசாவில் உள்ள காங்கிரஸ் ஆதரவிலான திரு. தாக்கர் கமிட்டி பரிந்துரைப்பது ஒரு சோகமான விஷயம். ஏகாதிபத்திய அதிகாரிகள் ஒருபோதும் ‘அடக்குமுறை’யைப் பரிந்துரைக்கவில்லை.
பழங்குடியினர் எப்போதும் ‘ஒருவித விரக்தியிலும் அறியாமையிலும்’ வாழ்வதாக திரு. தாக்கர் கருதுகிறார். அவர் கடைசியாகப் பழங்குடியின கிராமத்தில் நீண்ட பொழுதைச் செலவு செய்து குறைந்தது சில வருடங்கள் இருக்கும். நான் இந்தக் கட்டுரையைப் பஸ்டாரின் காட்டுப் பகுதியில் உட்கார்ந்து எழுதுகிறேன்.
இவர்களைப் போன்ற சந்தோஷமான மனிதர்களோடு நான் ஒருபோதும் இருந்ததில்லை. இன்றைய நாகரிக உலகின் வன்முறை விஷேசங்கள், இலஞ்ச இலாவண்யம் பற்றித் துளியும் அறியாமல் மரம், பறவை, விலங்கு, மலை, காடு, வானம், இயற்கை என்று வாழ்வின் ஒவ்வொரு அங்கம் பற்றியும் தெரிந்து வைத்திருக்கும் மனிதர்களை மிக அரிதாகவே காண்கிறேன்.
இவர்கள் வாழ்க்கையில் ஏற்றம் உண்டாக்குவேன் என்று தற்பெருமையோடு நடந்து கொள்ள மாட்டேன். வாழ்வின் அரிதான பல விஷயங்களை இவர்கள்தான் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆட்சியாளர்களும் மானுடவியல் அறிஞர்களும் பழங்குடி மக்களை மிருகக்காட்சி சாலையில் வைக்க விரும்புவதற்கு அரசின் கொள்கை ஒரு காரணமாக இருக்கலாம். தேசியப் பணியாளர்களும் காங்கிரஸ் உறுப்பினர்களும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தனிமைப்படுத்தலால், திரு. தாக்கர் அவர்களே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். நானும் இதற்கு விதிவிலக்கல்ல.
மண்ட்லா மாவட்டத்தில் நான் முதன்முதலில் குடியேற முயன்றபோது, அம்மாவட்ட துணை ஆணையர், என்னை ஊரைவிட்டு வெளியே செல்ல ஆணையிட்டார். போலீசார்களும் என் மண் குடிசையைப் பலமுறை சோதனையிட்டார்கள். பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து என்னை நாடு கடத்த விண்ணப்பம் போட்டார்கள்.
இந்திய அலுவலகம் எனது பாஸ்போர்ட்டை முடக்கி, நான் இந்தியாவில் இருப்பதையே தடை செய்ய முயன்றது. நானும் என் நண்பர்களும் ஆண்டுக் கணக்கில் போலீஸ் சித்திரவதைகளுக்கு ஆட்பட்டு, வனச்சரக அலுவலர்களால் துன்புறுத்தப்பட்டோம். இந்தத் தொந்தரவுகளால் என் உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு, எங்கள் வேலையும் கெட்டது. ஆகையால் திரு. தாக்கரின் கருத்துக்கு நான் அனுதாபம் கொள்கிறேன்.
தேசியப் பணியார்களை பழங்குடி மக்களோடு ஒன்று கலந்து உறவாட தடை விதிக்கும் அதே அரசாங்கம், கிறிஸ்தவ ஊழியம் செய்வதற்குச் சமயப் பிரசாரகர்களை மட்டும் உள்ளே அனுமதிப்பது மிருகத்தனமானது என்பதில் தாக்கரும் நானும் ஒருமனதாக இருக்கிறோம். ஆனால் இதற்கு மானுடவியல் அறிஞர்களை திரு. தாக்கர் குறைசொல்ல முடியாது.
கிறிஸ்தவ சமயப் பிரசாரக் குழுக்கள் மீது யாரும் இங்கு தீவிரமான விமர்சனம் வைக்கவில்லை. அசாமில் நடக்கும் பாப்டிஸ்ட் இயக்கம் பற்றித் திரு. ஜே.பி. மில்ஸ் கடுமையாகப் பேசியிருக்கிறார். டாக்டர் ஹூடனும் நீண்ட காலமாக இதைச் சொல்லி வருகிறார். பழங்குடியின கிராமத்தில் சமயப் பிரசாரக் குழுக்களை அனுமதிக்கக்கூடாது என்று நானும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறேன்.
திரு. தாக்கர் இதை அறிந்திருக்க வேண்டும். மேலும் தேசியப் பணியார்களை வெளியே துரத்திவிட்டு, வெளிநாட்டு சமயப் பிரசாரக் குழுக்கள் உள்ளே நுழைவதற்கு மானுடவியல் அறிஞர்கள்தான் காரணம் என்று அவர் கருதுவதில் கொஞ்சமும் நியாயம் இல்லை.
திரு. தாக்கர் தனது உரைக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட துணைநூல் பட்டியல் ஒன்றை வழங்குகிறார். அது டாக்டர் கர்வேயால் தயாரிக்கப்பட்டது. பொதுவாக ஒரு எழுத்தாளர், தனது நூலின் இறுதியில், தான் எழுதிய ஆய்வுரைக்கு மதிப்புக் கூட்டும் விதமாக துணைநூல் பட்டியல் அமைப்பார். ஆனால் இந்த விஷயத்தில் தாக்கரின் துணைநூல் பட்டியல் அவர் சார்ந்த நிலைக்கு மறுப்பாக அமைகிறது.
காட்டுத்தனமான இந்தியப் பழங்குடி மக்கள், நாகரிக உலகோடு திடீரெனத் தொடர்பு உண்டாக்க முயன்றால் அதில் ஏற்படும் அபாயங்கள் குறித்து விளக்கும் வலிமையான ஆதாரங்கள் இருக்கின்றன. கணிசமான இந்தியர்களும் ஐரோப்பியர்களும் இதை ஒப்புக் கொள்கின்றனர்.
மக்களை மிருகக்காட்சி சாலையில் அடைத்து வைக்க விரும்புவதில் இருந்து இது பலமடங்கு வித்தியாசமானது. அவர்களுக்கு நாகரிக உலகின் சகல வசதிகளையும் தரமறுத்து ஏய்த்துப் பிழைப்பதைக் காட்டிலும் வேறானது.
அவர்கள் சந்திக்கும் நாகரிக உலகின் பிரதிநிதிகள் எல்லோரும் இடத்தைப் பிடுங்கும் நிலக்கிழார்களாகவும், ஏமாற்றிப் பிழைப்பவர்களாகவும், வஞ்சக வியாபாரம் செய்பவர்களாகவும், போலி வக்கீலாகவும், மோசமான தண்டல்காரனாகவும் இருக்கிறார்கள். இவர்களிடம் பேசிப் பழகுவதால் மனச் சிதைவு ஏற்பட்டு, தார்மீக அறத்திலிருந்து தடுமாறும் அப்பாவி மக்களுக்கு எந்தவொரு பழி பாவங்களும் ஏற்படாதிருக்க வேண்டும் என்கிற அற்ப ஆசைதான் இது.
மானுடவியல் அறிஞர்கள் மனித நாகரிகம் பற்றி வெட்கப்படுவதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், திரு. தாக்கர் குறிப்பிட்டுள்ளார். இல்லையென்றால் ஏன் அவர்கள் பழங்குடி மக்களுக்கு நாகரிகம் பயிற்றுவிக்க மறுப்புத் தெரிவிக்கவேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்.
நமது நவீன நாகரிகத்தைப் பற்றிப் பெருமிதம் கொள்ளும் மிகச் சிலரில் திரு. தாக்கரும் ஒருவராக இருக்க வேண்டும் என்று நான் கற்பனை செய்கிறேன். தாக்கரும் அவரது நண்பர்களும் பழங்குடியின மக்களுக்கு அறிமுகம் செய்ய விரும்பும் நாகரிகத்தைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம்.
தற்போது இந்திய சேவகர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக அவர் பொறுப்பு வகிக்கிறார். நாக்பூரில் செயல்பட்டுவரும் ‘தி கிட்டாவாடா’ என்ற புகழ்பெற்ற நாளிதழின் வெளியீட்டுக்கு ஏறக்குறைய இவர்கள்தான் பொறுப்பு. நாம் இப்போது அந்த நாளிதழ் பற்றிக் கவனம் செலுத்துவோம். தாக்கர் குறிப்பிடும் ‘நாகரிகம்’ பற்றி இங்கு புரிந்துகொள்ளலாம்.
நாளிதழைத் திறந்து மனித குலத்தின் உட்பிரிவுகளைப் பாருங்கள். ஒருவரையொருவர் வெட்டிச் சாய்ப்பதைப் படியுங்கள். மனிதனின் நாசகர அழிவு நோக்கி அறிவியல் உலகம் நகர்கிறது. வானூர்தி, பீரங்கி, துப்பாக்கிகள் எல்லாம் வெற்றிக் களியாட்டம் ஆடுகின்றன. உங்கள் எதிராளியைக் கொலை செய்வதே மனித வாழ்க்கையின் மிகச் சிறந்த சாதனையாகப் பார்க்கப்படுகிறது. நூற்றுக்கணக்கில் அவர்களைக் கொன்றுப் புதைத்தால் மாலையும் மரியாதையும் வழங்கப்படுகிறது.
நகராட்சிகளின் பித்தலாட்டங்களும், மாவட்ட மன்றங்களின் ஊழல் வழக்கும், மாற்றுச் சமூகத்தின் மீது விரோத தாக்குதல்களும், நகரில் நடக்கும் கலவரமும் கொள்ளையும், பத்தி மாறிப் பத்தி ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்திருந்திருக்கிறது. நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்படும் விபசாரம், பாலியல் வன்கொடுமை, திருட்டு, கொலை வழக்கு ஆகியவற்றின் எண்ணிக்கையைப் பாருங்கள்.
அரசியல்வாதிகளின் பயனற்ற வாதங்களை மீள ஒருமுறை வாசியுங்கள். கற்பனைக்கு எட்டாத குறுகிய கால ஆதாயங்களையும், அற்ப மனிதர்கள் காரணமற்ற சண்டைகளையும் படியுங்கள். இப்போது விளம்பரங்களுக்கான நேரம். இங்குதான் நாகரிகம் அதன் உச்சத்தில் இருக்கிறது!
(தொடரும்)
_________
‘Do We Really Want to Keep them in a Zoo?’ – Verrier Elwin