Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #12 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #2

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #12 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #2

ஒரு யானையைச் சுடுதல்

குறைந்தபட்சம் இரண்டாயிரம் பேர் இருப்பார்கள். சாலையின் இருமருங்கையும் மக்கள் கூட்டம் அடைத்துக் கொண்டு நின்றது. பொலிவான ஆடைகள் அணிந்து மகிழ்ச்சியும் ஆரவாரமும் ததும்பி, சாகப்போகும் யானையைக் காண ஆவலோடு காத்திருந்தனர். மாயாஜாலம் செய்யும் மந்திரவாதியைப்போல் என்னை இறுக்கமாகப் பார்த்தனர். அவர்களுக்கு என்னைப் பிடிக்காவிட்டாலும், என் கையிலிருக்கும் மந்திரத் துப்பாக்கி ஒன்றே என்னை ரசிக்க போதுமானதாக இருந்தது.

நான் இந்த யானையைச் சுட வேண்டுமே எனத் திடீரென உரைத்தது. அங்கிருந்தவர்கள் அதைத்தான் எதிர்ப்பார்த்தார்கள். நான் அதைச் சுட்டு வீழ்த்த வேண்டும். இரண்டாயிரம் பேரின் ஒட்டுமொத்த ஆசையும் என்னை வலிந்து தள்ளுவதாக உணர்ந்தேன். அந்தத் தருணத்தில்தான் கிழக்கின் வெள்ளையர்கள் கையிலேந்தியிருக்கும் துப்பாக்கியின் வெற்றுத்தன்மையையும் அதன் கையாலாகாதனத்தையும் புரிந்துகொண்டேன்.

ஆயுதங்கள் ஏதுமற்ற உள்ளூர் மக்களுக்கு முன் துப்பாக்கி ஏந்திய வெள்ளைக்காரனாக, ஒரு தலைவனுக்கே உரிய மிடுக்கோடு நான் நின்றுகொண்டிருந்தேன். ஆனால், உண்மையில் எனக்குப் பின்னாலிருக்கும் மக்கள் கூட்டத்தின் ஆட்டுவிப்புக்கு ஆடும் பொம்மலாட்ட பொம்மை நான். ஒரு வெள்ளைக்காரன் கொடுங்கோலனாக மாறும்போது அவனது சுதந்திரம் பறிபோகிறது என நான் தெளிவாகப் புரிந்து கொண்டேன்.

அவன் ஒரு வெற்று மனிதனாக, போலியாக வாழத் தொடங்குகிறான். அவனிடம் எதிர்பார்க்கப்படுவதும் அதுதான். உள்ளூர் மக்கள் மகிழும்படி அவன் நடந்துகொள்ள வேண்டும். சிக்கல் ஏற்படும் போதெல்லாம் அவர்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும். தானாக ஒரு முகமூடி அணிந்துகொண்டு, அதற்கேற்ற முகத்தையும் வார்த்துக் கொள்கிறான்.

நான் அப்போது யானையைச் சுட வேண்டியிருந்தது. துப்பாக்கி கொண்டுவரச் சொல்லி ஆள் அனுப்பியபோது, நான் அதைக் கொல்வதில் மும்முரமாக இருந்தேன். ஒரு சாஹிப், தன்னளவில் சாஹிப்போல நடந்துகொள்ள வேண்டும். தன் இயல்பை அறிந்து திட்டவட்டமாகச் செயலாற்ற வேண்டும்.

கையில் துப்பாக்கியுடன் இத்தனைத் தூரம் முன்னேறி, இரண்டாயிரம் பேரைக் கண்ணசைவில் அழைத்து வந்து, ஏதும் செய்யாமல் பலகீனமாகப் பின்வாங்குவது துளியும் சாத்தியமில்லாத காரியம். அப்படிச் செய்தால், உள்ளூர் மக்கள் என்னை ஏளனமாகச் சிரிப்பார்கள். நான் உட்பட, கிழக்கின் ஒவ்வொரு வெள்ளையரும் சிரிப்புக்கு இடம் தராத வாழ்வைத்தான் எதிர்பார்த்தோம்.

ஆனால், எனக்கு யானையைக் கொல்ல விருப்பம் இல்லை. புற்களைக் கொத்தாக வளைத்து இழுத்து, இலாவகமாக முட்டியில் அடித்து உணவு உண்ணும் அந்த யானையைப் பார்த்தேன். அதைச் சுடுவது ஒரு கொடும்பாதாகச் செயல் எனத் தோன்றியது. அந்தப் பிராயத்தில் மிருகவேட்டையில் எனக்கு வெறுப்புத் தோன்றவில்லை என்றாலும் நான் ஒரு யானையைக்கூட சுட்டதில்லை‌. அதற்கு விரும்பியதும் கிடையாது. (பெரிய மிருகங்களை வேட்டையாடுவது ஒரு மோசமான செயல் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.)

அதைத்தாண்டி யானையின் சொந்தக்காரரிடம் இதற்கு ஒப்புதல் வாங்க வேண்டும். உயிரோடு இருந்தால், குறைந்தது நூறு பவுண்ட் தேறும். இறந்துவிட்டால் அதன் தந்தம் மதிப்பிற்கு ஐந்து பவுண்ட் வந்தாலே ஆச்சரியம். ஆனால், நான் விரைந்து முடிவெடுக்க வேண்டும். அங்கிருந்த அனுபவம் வாய்ந்த சில பர்மியர்களிடம் யானையின் நடவடிக்கை குறித்து விசாரித்தேன். அவர்கள் எல்லோரும் சொல்லிவைத்தார்போல் ஒன்றையே சொன்னார்கள்: அதைத் தனியாக விட்டுவிட்டால், ஒரு தீங்கும் இல்லை. ஆனால், நெருங்கிச் சென்றால் தாக்க முயல்கிறது.

நான் என்ன செய்யவேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தது. யானைக்கு இருபத்தைந்து அடி தூரம் அருகில் சென்று, அது எப்படி நடந்துகொள்கிறது என்று பார்க்கப் போகிறேன். ஒருவேளை தாக்க முயன்றால், நான் சுட்டு வீழ்த்தலாம்; சாந்தமாக இருந்தால் யானைப் பாகன் வரும்வரை அமைதியாகக் காத்திருக்கலாம்.

ஆனால், நான் அப்படி எதுவும் செய்யப்போவதில்லை என்று எனக்குத் தெரியும். துப்பாக்கிச் சுடுவதில் நான் படு மோசம். தரையில் சேறு தங்கி, பொதபொதவென இருந்தது. அதில் ஒருவர் கால் வைத்தால் உள்ளே மூழ்கி விடுவார். ஒருவேளை யானை தாக்கி நான் அதைத் தவறவிட்டால், சாலையுருளை வண்டிபோல் என்மேல் ஏறி சக்கையாக்கி விடும்.

ஆனால், இப்போதும் என் உயிரைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என்னை வெறித்துப் பார்க்கும் ஊர் கூட்டத்தைப் பற்றிதான் என் சிந்தனை முழுக்க விரவியுள்ளது. அந்த நேரத்தில் தனியாக இருந்திருந்தால் நான் ஒருவேளை பயப்படுவேன். ஆனால் இப்போது கூட்டத்தோடு இருப்பதால் எனக்குப் பயமில்லை. உள்ளூர் மக்கள் முன்பு வெள்ளைக்காரன் பயப்படக்கூடாது‌. ஆகையால் நானும் பயப்படவில்லை.

இம்மிப் பிசகினாலும், மலையில் இளித்தபடி இறந்துகிடந்த இந்தியனைப்போல், நான் இறந்துகிடப்பதையும் சுற்றியுள்ள இரண்டாயிரம் பர்மியர்கள் கூடிநின்று வேடிக்கைப் பார்ப்பார்கள் என்ற எண்ணம் என் மனத்தில் ஆழமாக உறைந்தது. அப்படி நடந்தால் நிச்சயம் சிலர் கைகொட்டிச் சிரிப்பார்கள். அதற்கு இடம்கொடுக்கவே கூடாது.

இதற்கு ஒரே ஒரு மாற்றுவழிதான் இருந்தது. துப்பாக்கியில் தோட்டாக்களைச் சொருகி யானையைக் குறிபார்க்கச் சாலையில் இறங்கி வந்தேன். கூட்டம் அமைதியானது. நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அரங்கின் திரைச்சீலை மேலெழும்புகையில் ஏற்படும் பரவசம் அவர்கள் முகத்தில் தெரிந்தது. திருப்திப் பெருங்குரல் ஒவ்வொரு தொண்டையிலும் எதிரொலித்தது. வேடிக்கைப் பார்க்கும் குதூகலத்தில் ஆவலோடு இருந்தார்கள்.

அந்த ரைஃபிள் ஒரு ஜெர்மானியத் தயாரிப்பு. குறிபார்க்கும் கருவிகள் கச்சிதமாக இருந்தன. யானையைச் சுடும் ஒருவர் அதன் ஒரு காது துவாரத்தில் இருந்து மற்றொரு காது துவாரத்துக்குச் செல்லும் கற்பனையான கம்பியைக் குறிபார்த்துச் சுடுவார் என்று அப்போது எனக்குத் தெரியாது. எனவே யானை பக்கவாட்டில் இருந்தால், நான் அதன் காது துவாரங்களைக் குறிவைத்திருக்க வேண்டும். அதன் மூளை இங்குதான் எங்காவது இருக்க வேண்டும் என்று அதற்குச் சில அங்குலங்கள் முன் துப்பாக்கியில் குறிவைத்தேன்.

துப்பாக்கியின் பொறியை அழுத்தினேன். எனக்கு எவ்வித வெடிப்புச் சத்தமும் கேட்கவில்லை, அதிர்ச்சியடையவில்லை. பொதுவாகத் துப்பாக்கி இயக்குபவருக்கு இவையெல்லாம் நேர்வதில்லை. ஆனால் கூட்டத்தில் இருந்து காட்டுத்தனமான அலறல் சத்தம் எழுந்தது. துப்பாக்கியில் இருந்து தோட்டோ வெளியேறிய அந்த இமைப் பொழுதில் யானைக்கு நிச்சயம் அசம்பாவிதம் ஏற்படும் என ஒருவர் ஊகித்திருக்கலாம்.

யானை, சற்றும் கலக்கமடையாமல் அப்படியே நின்றது. திடீரென அதன் உடம்பின் ஒவ்வொரு அங்கங்களும் அசைந்தன. பலமாகத் தாக்கப்பட்டு, மூப்பினால் சுருண்டு விழுந்ததுபோலத் தெரிந்தது. தோட்டாவின் தீவிரத்தன்மையால் செயல்படமுடியாமல் பயந்துபோய் முடங்கியது. இறுதியாக, ஐந்து நொடிகளுக்குப் பிறகு (அது எனக்கு நெடுநேரமாகத் தோன்றியது) தன் முழங்கால்களை ஆட்டியது. அதன் வாய் தளர்ந்துபோய், முதுமைப் பீடித்ததுபோல் தெரிந்தது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அது இந்தப் பூமியில் வாழ்ந்துவருகிறது எனப் பார்ப்பவர்கள் கற்பனை செய்திருப்பார்கள். மீண்டும் அதே இடத்தில் சுட்டேன். இந்தமுறை அது விழவில்லை. ஆனால், பலமின்றி மெதுவாக நிமிர்ந்து எழ முயன்றது. கால்கள் துவண்டுபோய், தலை குனிந்து நின்றது. மூன்றாவது முறையாகச் சுட்டேன். இம்முறை அதைக் கொல்ல வேண்டும் என்ற முனைப்பில் அந்தத் தோட்டா பாய்ந்தது.

யானையின் முழு அவதியும் அதன் உடலை உலுக்கியெடுத்தது. அதன் கால்களில் இருந்து வலிமையின் கடைசிச் சொட்டு உறிஞ்சப்படுவதை நான் கண்டேன். ஆனால் இந்தச் சரிவிலிருந்து மீண்டும் அது எழுந்து வருவதுபோல் தோன்றியது. அதன் பின்னங்கால்கள் இடறி விழுவதைப் பார்க்கையில் பெரிய கோபுரம் சரிந்து விழுவது போன்றும், பெரிய பாறை தகர்ந்து விழுவது போன்றும் இருந்தது. அதன் துதிக்கை மரம்போல வான் நோக்கி உயர்ந்தது. முதல் முறையாக அந்த யானை பிளிறியது. இயல்பு நிலைக்குத் திரும்பி, அதன் வயிற்றை நான் வீழ்ந்து கிடந்த நிலம் நோக்கிப் பலமாக அசைத்துச் சுருண்டது.

நான் எழுந்துகொண்டேன். பர்மியர்கள் என்னைத் தாண்டி சேற்றுக்கு அப்பால் விரைந்து ஓடினார்கள். யானை நிச்சயம் எழுந்திருக்காது என்பது கண்கூடாகத் தெரிந்தது. ஆனால் அது சாகவில்லை. நீண்ட சத்தத்தோடு மூச்சுத் திணறி சிரமத்துடன் சுவாசித்துக் கொண்டிருந்தது. அதன் மலை போன்ற வயிறு வலியால் மேலும் கீழும் துடித்தது. அகன்ற வாயின் வழியாக அதன் இளஞ்சிவப்பு நிறத் தொண்டையை தூரத்தில் இருந்து பார்த்தேன்.

யானை இறந்துபோகும் என்று நான் வெகுநேரம் காத்திருந்தேன். ஆனால் அதன் மூச்சுக்காற்று வலிமை இழப்பதாகத் தெரியவில்லை. இறுதியாக அதன் இதயம் இருந்த பகுதி என்று நான் ஊகித்த இடத்தில் இரண்டு முறை சுட்டேன். ரெட் வெல்வெட்போல அதன் அடர்ந்த இரத்தம் பீய்ச்சிக் கொண்டு வந்தது. அப்போதும் அது சாகவில்லை. இரண்டு குண்டடிப்பட்டும் அதன் உடம்பு சற்றும் அசையவில்லை. சிரமத்தோடு மூச்சுவிடப் போராடிக் கொண்டிருந்தது.

தோட்டாக்களால் கூட மாய்க்க முடியாத ஏதோவொரு உலகில் அணுஅணுவாகச் சித்திரவதைப்பட்டு அந்த யானை இறந்துகொண்டிருந்தது. அதன் அச்சமூட்டும் சத்தத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என நினைத்தேன். இறப்பதற்கும் தெம்பின்றி, பிழைப்பதற்கும் தெம்பின்றி அசையமுடியாமல் அகோரச் சத்தமிடம் பெரும் மிருகத்தைப் பார்க்க பயங்கரமாக இருந்தது. எனது சிறிய ரைஃபிளால் அதன் இதயத்திலும் தொண்டையிலும் மாறி மாறிச் சுட்டேன். ஒரு முன்னேற்றமும் இல்லை. கடிகார முள்ளைப்போல திணறித் திணறி மூச்சு விட்டது.

இறுதியில் என்னால் நிற்க முடியாமல் அங்கிருந்து சென்று விட்டேன். அரை மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு அது இறந்ததாகச் சொன்னார்கள். நான் புறப்படுவதற்கு முன்பே கொடாரியும் வாலியுமாக பர்மன்கள் தயாராகிவிட்டார்கள். மதியத்திற்குள் அதன் உடலை எலும்பு வேறு, சக்கை வேறாக அங்கம் அங்கமாய் பிரித்து எடுத்ததாக எனக்குச் சொல்லப்பட்டது.

அதற்குப்பின் யானையைச் சுட்டது பற்றி எண்ணிலடங்காப் பேச்சுக்கள் தொடர்ந்தன. அதன் உரிமையாளர் பயங்கரமாகக் கோபப்பட்டார். ஆனால், ஒரு இந்தியரால் என்ன செய்துவிட முடியும்? நானும் சட்டப்படி சரியாகத்தான் நடந்திருக்கிறேன். முதலாளிக்கு அடங்காத வெறி பிடித்த நாயை அடித்துக் கொல்வதுபோல், மதம் பிடித்த யானையைக் கொல்வதே மிகச் சரி‌.

ஐரோப்பியர்களிடம் இது பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தன. முதியவர் ஒருவர் நான் செய்ததே சரியென வாதிட்டார். கூலியாளை கொன்றதற்குப் பலியாக விலை மதிப்புள்ள யானையைக் கொன்றது இளைஞன் ஒருவனுக்குச் சரியெனப் படவில்லை. எந்தவொரு கொரிங்கிக் (Coringhee) கூலியாளைக் காட்டிலும் யானையின் உயிர் விலை மதிப்புடையது.

ஆனால், அந்தக் கூலியாள் இறந்துபோனதில் எனக்கு மகிழ்ச்சிதான். இல்லையென்றால் யானையைக் கொன்றதற்கு எவ்வித காரணியும் சட்டப்பூர்வமாக போதுமானதாக இருக்காது. நான் ஒரு முட்டாள் இல்லை என்பதை விளக்குவதற்காகத்தான் அந்த யானையைக் கொலை செய்தேன் என்று யாருக்காவது தெரிந்துவிடுமோ என நான் அடிக்கடி யோசிக்கிறேன்.

0

_________
‘Shooting an Elephant’ –  George Orwell

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *